Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

யுலிசிஸ் கிராண்ட்

2015ஆம் வருடம் தெற்குக் கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் இருக்கும் எமனுவல் ஆப்பிரிக்கன் மெதடிஸ்ட் எபிஸ்கோப்பல் தேவாலயத்தில், வெள்ளை இனவெறியன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆலயத்தின் தலைமைப் பாதிரி உட்பட 9 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் இருக்கும் மாநில கூட்டமைப்பிற்காகப் போரிட்ட வெள்ளை வீரர்களின் சிலைகள், பிரிவினையையும் வெள்ளை இனவெறியையும் குறிக்கும் சின்னங்கள் ஆகியவற்றை அரசாங்க இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற போராட்டம் எழுந்தது.

குறிப்பாக, வாஷிங்டன் நகரில் பிரதிநிதிகள் சபை (US Capitol) வளாகத்தில் இருக்கும் வேட் ஹாம்ப்டனின் சிலை அகற்றப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் பிரதிநிதிகள் சபையினர் சிலையை அகற்ற மறுத்துவிட்டனர். ஐந்தாண்டுகள் நடைபெற்ற இடைவிடாத போராட்டத்திற்குப் பின்னர், 2021ஆம் ஆண்டுப் பிரதிநிதிகள் சபை இந்தச் சிலைகளை அகற்றுவதற்கு ஒப்புதல் கொடுத்தது.

ஆனால், இன்னமும் வேட் ஹாம்ப்டனின் சிலை தெற்குக் கரோலினா மாநில தலைநகரான கொலம்பியாவில் இருக்கும் சட்டப்பேரவை வளாகத்தில் நின்றுகொண்டுதான் இருக்கிறது.

யார் இந்த வேட் ஹாம்ப்டன்?

அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முந்தைய நாட்களில் ஹாம்ப்டன் பெரும் தோட்ட முதலாளியாக இருந்தவர். அவரது தோட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட அடிமைகள் வேலை செய்து வந்தனர். போரின் போது, மாநில கூட்டமைப்பின் குதிரைப்படை தளபதியாகச் சண்டையிட்டார். போருக்குப் பின்னர், 1865இல் இருந்து தெற்கு கரோலினாவின் அரசியலைக் கவனித்து வந்த அவர், வெள்ளையர்கள் திரும்பவும் அரசியல் அதிகாரம் பெறுவதே கறுப்பினத்தவர்களை ‘அவர்களது இடத்தில்’ வைப்பதற்கான வழி என்ற முடிவுக்கு வந்தார்.

1868ஆம் ஆண்டுத் தேர்தலில் இருந்து ஜனநாயகக் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தார். கேகேகேவுக்கு எதிராக ஒன்றிய அரசு கடுமையான சட்டங்களை அமல்படுத்தியபொழுது, அதில் பாதிக்கப்பட்ட வெள்ளை இனவெறியர்களுக்காக வழக்குகளை நடத்தினார். ஆனால், இவற்றை மட்டுமே செய்திருந்தால், அப்போதைய காலகட்டத்தில் இருந்த பல தோட்ட முதலாளிகளில் ஒருவராகவே இருந்திருப்பார்.

வேட் ஹாம்ப்டன்
வேட் ஹாம்ப்டன்

தெற்கு கரோலினாவில் வெள்ளையர் இனவெறி குழுக்கள், துப்பாக்கி மன்றங்கள் என்ற பெயரில் பல இடங்களிலும் தனித்தனியே கூடி வந்தன. இதனால் கேகேகே போன்றதான ஒன்றிணைக்கப்பட்ட இனவெறிக் குழுக்கள் இங்கே பெரிதாக இல்லை. ஆனால், ஜனநாயகக் கட்சி வெற்றிபெற வேண்டுமென்றால் இவற்றை ஒன்றிணைக்க வேண்டும் என்று உணர்ந்த வேட் ஹாம்ப்டன், முயற்சிகள் எடுத்து, இவற்றை ‘சிவப்புச் சட்டைகள்’ (Red Shirts) என்ற வெள்ளை இனவெறிக் குழுவாக ஒன்றிணைத்தார். ஒரு கட்டத்தில் இதில் 20,000க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

இவர்களது முக்கிய வேலையே கறுப்பினத்தவர்களை வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொலை செய்வது போன்றவைதான். அந்தக் குழுவின் முக்கிய விதிமுறைகளில் ஒன்றாகக் கீழ்கண்ட வாக்கியம் இருக்கிறது.

‘ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு கறுப்பரின் வாக்கைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்களை விலைக்கு வாங்கியோ, பயமுறுத்தியோ, வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாமல் தடுத்தோ இதைச் செய்யலாம். வேறேதேனும் வழிகளில் இதைச் செய்ய முடிந்தாலும் செய்யலாம்.’

மேற்கூறிய வாக்கியம் கறுப்பினத்தவர்களைக் கொலைச் செய்வதற்கான நேரடி அறைகூவலாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது. 1876ஆம் வருட தேர்தலுக்கு முன்னர் இந்தக் குழு 150க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களைக் கொன்றிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. அந்தத் தேர்தலில் வேட் ஹாம்ப்டன், தெற்கு கரோலினாவின் ஆளுநராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டார்’. இது வெள்ளையர்களின் வெற்றியாகவும், மீட்சியாகவும் கட்டமைக்கப்பட்டது.

வேட் ஹாம்ப்டனின் கதை, தென் மாநிலங்களில் இதுபோன்றே நிகழ்ந்த பல கதைகளில் ஒன்று. ஒரு விதத்தில் வெள்ளையர்கள் மீண்டும் கறுப்பினத்தவர்களை ‘வென்று’ தங்களது அரசியல் அதிகாரத்தை மீட்டெடுத்ததாக இது பேசப்படுகிறது. கடந்த 50-60 ஆண்டுகளில்தான் இந்தக் கதைகள் உண்மையில் கறுப்பினத்தவர்களை இனப்படுகொலை செய்த கதைகள் என்று உணரப்பட்டு அதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

0

1868ஆம் வருட குடியரசுத் தலைவர் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த யுலிசிஸ் கிராண்ட் வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார். தீவிர அடிமைமுறை ஒழிப்பாளரான அவரது வெற்றி, மறுகட்டமைப்புத் திட்டங்களுக்குப் பெரும் உந்துதலைத் தந்தது. அவரும் தன்னுடைய முழு ஆதரவையும் அத்திட்டங்களுக்குத் தெரிவித்தார்.

3,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவருக்கு, கறுப்பினத்தவர்கள் வாக்கு 4,00,000 கிடைத்திருந்தது. தென் மாநிலங்களில் அதிகரித்து வரும் வன்முறைகளைத் தடுக்கவும், தன்னுடைய முக்கிய விசுவாசிகளாக இருக்கும் கறுப்பினத்தவர்களின் வாக்குகளைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், கிராண்ட் பதினைந்தாவது சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்தார்.

பதவியேற்பதற்கு முன் யுலிசிஸ் கிராண்ட்
பதவியேற்பதற்கு முன் யுலிசிஸ் கிராண்ட் (மார்ச் 4,1873)

இந்தச் சட்டத்திருத்தம் அமெரிக்கக் குடிமக்கள் எவரையும் இனம், நிறத்தின் காரணமாக வாக்குச் செலுத்த விடாமல் செய்வதைக் குற்றமாக்கியது. வெற்றிகரமாக இயற்றப்பட்ட இந்தத் திருத்தம், செனட், பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலோடு, மாநிலங்களின் ஒப்புதலும் பெறப்பட்டு, 1870ம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
இந்தத் திருத்தத்தின் நோக்கம் மிகவும் வெளிப்படையாகவே, கறுப்பினத்தவர்களை வாக்கு செலுத்த விடாமல் தடுப்பவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்குவதுதான்.

இதைத் தொடர்ந்து கிராண்ட், என்போர்ஸ்மென்ட் சட்டங்கள் என இரண்டு சட்டங்களில் கையெழுத்திட்டார். இந்தச் சட்டங்கள் அனைவரும் வாக்களிக்கவும், சான்றாயராக (Jury) இருக்கவும், அனைவருக்கும் சமஉரிமை தரவும் வழி செய்தது. சட்டங்களை மாநிலங்கள் சரியாக அமுல்படுத்தவில்லை என்றால் ஒன்றிய அரசு தலையிடவும் வழி செய்தது.

மூன்றாவதாக இயற்றப்பட்ட கு க்ளக்ஸ் கிளான் சட்டம், வாக்குச் செலுத்துபவர்களைத் தடுப்பவர்களுக்குச் சிறை உள்ளிட்ட பல தண்டனைகளைப் பரிந்துரை செய்தது. இச்சட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கேகேகே குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்று திட்டங்களும் 1871ஆம் வருடத்திய பொது உரிமை சட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. அமெரிக்காவில் சிறுபான்மை மக்களின் உரிமையைப் வெளிப்படையாக ஆதரித்து இயற்றப்பட்ட முதல் சட்டங்கள் இவைதான் எனலாம்.

கிராண்ட் முழுமனதுடன் இந்தச் சட்டங்களை அமுல்படுத்தவில்லை என்றாலும், ராணுவத்திற்குப் போதுமான அதிகாரத்தைக் கொடுத்து, தன்னுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொண்டார். இதுவே போதுமானதாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்காகத் தென் மாநிலங்கள் முழுவதும் வழக்கு நடத்த பணம் சேகரிக்கப்பட்டு, செலவழிக்கப்பட்டது. அரசும் கைது செய்தவர்களுக்குப் போதுமான தண்டனை கிடைக்க உச்சநீதிமன்றம் வரை செல்லவும் தயாராக இருப்பதை, சொல்லில் மட்டுமல்லாமல் செயலிலும் செய்துக் காட்டியது.

எனவே 1870-71ஆம் வருடங்களில் வன்முறை வெகுவாகக் குறைந்தது. கேகேகேயின் பயங்கரவாதச் செயல்களும் ஓரளவு கட்டுக்குள் வந்தன. 1872ஆம் வருடத் தேர்தல், முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வன்முறையோடே நடந்தது. இரண்டாவது முறையாக, கிராண்ட் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் மறுகட்டமைப்புத் திட்டங்களில் விழுந்த விரிசல் இப்போது தெளிவாகத் தெரிந்தது. 1872ஆம் வருடத் தேர்தலில் குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபை, செனட் என இரண்டிலும் உறுப்பினர்களை இழந்தது. கிராண்ட்டின் மறுகட்டமைப்புத் திட்டங்களை எதிர்க்கும் குடியரசுக் கட்சியினர் தங்களைத் தனிக் குழுவாக அமைத்துக் கொண்டு, எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். இவை கிராண்டின் திட்டங்களை மெதுவாக முடக்கத் தொடங்கின.

0

லூசியானா மாநிலத்தில் 1872ஆம் வருடத்திய தேர்தல் வன்முறையோடே நடந்து முடிந்தது. ஆனால் இங்கே யார் வெற்றி பெற்றது என்பதில் குழப்பம் நிலவியது. கிராண்ட்டை எதிர்த்த குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து வாக்களித்தனர். எனவே தேர்தல் ஆணையமும் இரண்டாகப் பிரிந்து, இரண்டு பக்கத்தினரும் வென்றதாக அறிவித்தது. இரண்டு பக்கங்களும் தங்களது அரசை அமைத்து, அதன் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பட்டியலை வெளியிட்டன.

எனவே இந்தத் திரிசங்கு நிலையைத் தீர்த்து வைக்க நீதிமன்றங்களின் துணை நாடப்பட்டது. நீதிமன்றங்கள் ஜனநாயகக் கட்சி வென்றதாகச் சொல்லிவிடவே, குடியரசுக் கட்சியினர் ராணுவத்தை அனுப்பித் தங்களை வென்றதாக அறிவிக்கும்படி கிராண்ட்டிற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இது நிலைமையை மோசமாக்கியது. தங்களது வெற்றியைத் தட்டிப்பறிக்க முயலுவதாகக் கூறி, வெள்ளையர்களின் ஜனநாயகக் கட்சியினர் சிறிய பீரங்கி முதற்கொண்டு ஆயுதங்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர்.

இரண்டு பக்கங்களும் பல கவுன்டிகளுக்கும் தங்களது சார்பில் அதிகாரிகளை நியமித்திருந்தார்கள். அப்படியாக இருந்த கிராண்ட் பாரீஷ் என்ற கவுன்டியில் நிலைமை முற்றியது.

அங்கிருந்த நீதிமன்றத்தில், அந்தக் கவுன்டி குடியரசுக் கட்சி பிரமுகர்களும், அங்கிருந்த கறுப்பினத்தவர்களும் குழுமி இருந்தார்கள். ஜனநாயகக் கட்சியின் வெள்ளையர்கள் நீதிமன்றத்தைக் கைப்பற்ற முயலலாம் என்ற பயத்தில் அவர்கள் நீதிமன்றத்தை சுற்றிக் குழி வெட்டிக் கொண்டிருந்தார்கள். இரவில் சுழற்சி முறையில் நீதிமன்றத்திலேயே தங்கினார்கள்.

நீதிமன்றத்தைக் கைப்பற்ற வெள்ளையர்கள் (பெரும்பாலோர் தென் மாநில கூட்டமைப்பிற்காகப் போரிட்ட வீரர்கள்), ஆயுதங்களையும் ஆட்களையும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கங்கே சிறுசிறு சண்டைகள் நடைபெற்றன. மூன்று வாரங்கள் இப்படியாக நிலைமை நீடித்த பின்னர் ஈஸ்டர் திருநாள் இரவில், சிறு பீரங்கிகளுடன் வெள்ளையர்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள்.

இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில், நீதிமன்றம் எரிந்து தரை மட்டமானது. கட்டிடத்தில் இருந்த 280க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களில் பலரும் தப்பித்து வெளியே வரும் போது பிடிக்கப்பட்டு, பின்னந்தலையில் சுடப்பட்டு இறந்திருந்தார்கள்.

வன்முறையில் இறந்தவர்களின் உடல்களைச் சேகரிக்கும் கறுப்பினக் குடும்பங்கள்.

மறுகட்டமைப்பு நாட்களின் மிக மோசமான வன்முறையான இது ‘கோல்ஃபாக்ஸ் படுகொலைகள்’ (Colfax Massacre) என்றழைக்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றங்களுக்கு முன் நிறுத்தப்பட்டாலும், ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை.

ஒன்றிய அரசு சிறிதும் முன்னெச்செரிக்கையோடு நடந்து கொள்ளவில்லை என்பதோடு, கொலையுண்டவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பது நிலைமை எப்படியாக இருக்கிறது என்பதையும், அரசாங்கத்தின் பலவீனத்தையும் வெளிப்படையாகக் காட்டியது.

0

1873ம் ஆண்டு ஐரோப்பாவில் ஆரம்பித்த பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்காவை அடைய வெகு நேரமாகவில்லை. அமெரிக்க வங்கிகள் ஒவ்வொன்றாக மூட ஆரம்பித்தவுடன் வீழ்ச்சி ஆரம்பித்தது.

அமெரிக்க டாலர் தன்னுடைய மதிப்பை இழந்தது. இப்போதே காகிதப் பணம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. பணவீக்கமும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் நடந்தன.

பொருளாதாரத்தைச் சீர் செய்ய அரசு வரிகளை அதிகரித்தது. ஏற்கனவே போரினால் நலிந்திருந்த சாதாரண மக்களின் நிலை இன்னமும் மோசமானது. ஆனால் கிராண்டின் அரசாங்கம் இந்த நேரத்தில் துரிதமாகச் செயல்படவில்லை. பொருளாதார நலிவு அதுவாகவே சரியாகும் என்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் மக்களிடையே அவநம்பிக்கையை உண்டாக்கியது.

அதையும் விட, கிராண்டின் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதும், ஒருவர் கைது செய்யப்பட்டதும், மேலும் நம்பிக்கையிழக்க வைத்தது. 1876ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியின் கையை விட்டு நழுவியது. தேர்தலில் சந்தித்த மோசமான தோல்வி, மறுகட்டமைப்புத் திட்டங்களில் எதிரொலித்தது.

ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை கொண்டிருந்த பிரதிநிதிகள் சபை, கிராண்ட் அரசின் பல ஊழல்களை வெளியே கொண்டு வந்தது. எவற்றிலும் கிராண்ட் ஈடுபட்டிருக்கவில்லை என்றாலும், அவரது அமைச்சர்கள் பெரும் ஊழல்வாதிகளாக இருந்தது அரசின் செயல்பாட்டையே பாதித்தது.

அரசின் இறுதிச் சாதனையாக 1875இல், 1875 பொது உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. அனைத்து குடிமக்களின் சட்டபூர்வமான உரிமைகளைத் தடுப்பதை இது குற்றமாக்கியது. ஆனால் வெறும் காகிதமாகவே இந்தச் சட்டம் இருந்தது. இதுவே மறுகட்டமைப்பின் கடைசி நடவடிக்கையாக இருந்தது.

அரசின் கவனம் ஊழல் குற்றச்சாட்டுகள், பொருளாதார நலிவு, பணவீக்கம் என்று திரும்பிய வருடங்களில் தென் மாநிலங்களில் வெள்ளை இனவெறி குழுக்களின் பேயாட்டம் திரும்பவும் ஆரம்பித்தது. சட்டங்களை அமுல்படுத்துவதில் இருந்த வேகம் குறைந்துவிட்டது.

1876ஆம் வருடக் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. அதுவரை இறுதிப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த மறுகட்டமைப்புத் திட்டங்களின் சாவுமணியாக அது இருந்தது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *