Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்புக்குப் பின்னான நாட்களின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், அன்றைய காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக இருந்த திருச்சபைகள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. திருச்சபைகள் கறுப்பினத்தவர்களின் சமூக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் பெரும் பங்காற்றின. அவர்களின் தலைவர்களில் பலரும் திருச்சபைகளில் இருந்தே வந்தார்கள். அவர்களில் சிலரை நாம் பின் வரும் அத்தியாயங்களில் காணப் போகிறோம். எனவே, கறுப்பினத்தவ திருச்சபைகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கறுப்பினத்தவர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் தங்களது மதங்களையும் கொண்டு வந்தார்கள். ஆப்பிரிக்க வூடூ மதமும் இஸ்லாமும் அந்தக் காலத்திலேயே அமேரிக்காவுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அவர்கள் அடிமைகளாக அங்கே வாழ வேண்டி இருந்ததால், அவர்களால் தங்களது மதங்களை வெளிப்படையாகப் பின்பற்ற முடியவில்லை. கறுப்பினத்தவர்கள் ஒன்றாகச் சேரவும், வாத்தியங்களை இசைக்கவும், பிரசங்கங்கள் செய்யவும் தடை இருந்தது. எனவே அவர்களது பூர்வீக மதங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் வெறும் நினைவுகளாக மாறிவிட்டன.

ஆனாலும் அடிமைகளாக இருப்பவர்களுக்குத் தங்களது வாழ்வின் துயரங்களில் இருந்து விடுதலை பெற ஒரு பிடிப்புத் தேவைப்பட்டது. அப்படியாகத்தான் அவர்களது வாழ்வில் கிறிஸ்தவம் நுழைந்தது.

18ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி வரை கறுப்பினத்தவர்கள் இடையே மதம் என்பது நிறுவனமாகவில்லை. அவர்கள் என்ன நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள், எப்படி வழிபாடு நடத்தினார்கள் போன்ற விவரங்கள் மிகச் சொற்பமாகவே கிடைக்கின்றன. அவையும் பெரும்பாலும் கிறிஸ்தவ மதப் போதகர்களின் எழுத்துக்களின் வழியாகவே கிடைக்கின்றன.

அடிமைகளாக வந்த கறுப்பினத்தவர்களை நல்ல கிறிஸ்தவர்களாக மாற்றுவதை இந்த மதப் பிரசங்கிகள் தங்களது கடமையாகக் கருதினார்கள். அதற்காகவே அவர்கள், தோட்ட முதலாளிகளின் அனுமதியுடன் அடிமைகளின் இடையே பிரசங்கம் செய்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்க வந்தவர் அல்லவா? அடிமைகளிடம் அத்தகைய இயேசுவை அவர்கள் அறிமுகப்படுத்தவில்லை.

வேதாகமத்தில் குறிப்பிட்ட பகுதிகளை மறைத்துவிட்டு, இயேசுவை அமைதியான, அதிகாரத்துக்கு அடங்குபவராக, அடிமைகளைக் கீழ்ப்படிய சொல்பவராகவே அறிமுகம் செய்தனர். உதாரணமாக, பழைய ஏற்பாட்டில் இருக்கும் பாபிலோனிய யூதர்களை அடிமைத்தளையில் இருந்து விடுவித்த கடவுள், எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களைப் கடவுளின் உதவியுடன் போராடி விடுவித்த மோசஸின் கதைகள் அவர்களின் வேதாகமத்தில் இருந்து நீக்கப்பட்டன. கறுப்பினத்தவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்ததும், அப்படியே அவர்களை வைத்திருப்பதும் தேவையானதாக இருந்தது.

ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்களுக்கு என்று தனியாகத் திருச்சபைகள் இல்லை. வெள்ளையர்களின் தேவாலயங்களின் பின்புறமோ, ஒதுக்குப்புறமான இடத்திலோ இருந்து அவர்கள் பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டார்கள். பிரசங்கங்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிதலைப் போதிப்பவையாகவும், அடிமை முறையை நியாயப்படுத்துபவையாகவும் இருந்தன. தென் மாநில வெள்ளையர்களின் தேவாலயங்களின் கிறிஸ்தவம் அப்படியாகவே பல காலங்கள் இருந்து வந்தது. வெள்ளையர்களின் திருச்சபைகள் அவர்களின் அதிகாரத்துடனும் பணத்துடனும் பின்னிப் பிணைந்து இருந்தாலும், சில பிரசங்கிகள் உண்மையான கிறிஸ்தவத்தைப் போதிக்கவும் மறக்கவில்லை. ஆனால், இவர்கள் தனியாகப் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து பிரசங்கித்தார்கள்.

அமெரிக்கப் புரட்சி வெற்றிகரமாக முடிந்து, அமெரிக்க மாநிலங்கள் சுதந்திரம் பெற்றுவிட்ட நாட்களில் இதுபோன்ற பல பிரசங்கிகள் உற்சாகத்துடன் தங்களது ஊழியத்தைத் தென் மாநிலங்களில் செய்தார்கள். அப்படியாக டெலெவர் மாநிலத்துக்கு வந்தவர்தான் பிரீபார்ன் காரட்சன்.

காரட்சன், 1775க்குப் பின்னான நாட்களில் ஸ்டுர்கிஸ் என்பவரின் தோட்டத்தில் பிரசங்கம் செய்தார். அடிமைமுறை கிறிஸ்தவத்துக்கு எதிரானது என்றும், அடிமைகள் வைத்திருப்பது பாவம் என்றும் பிரசங்கித்தார். அதை ஏற்றுக் கொண்ட ஸ்டுர்கிஸ், தன்னுடைய அடிமைகள் அவர்களது விலையை உழைப்பாகக் கொடுத்துவிட்டுச் சுதந்திரம் அடையலாம் என்று அறிவித்தார். அப்படியாக அந்தத் தோட்டத்தில் இருந்த ‘ரிச்சர்ட்’ என்ற அடிமை, தன்னுடைய சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டு, தன் பெயரை ரிச்சர்ட் ஆலன் என்று மாற்றி வைத்துக்கொண்டார்.

தன்னுடைய முயற்சியால் விடுதலை பெற்ற ரிச்சர்ட் ஆலன், தன் வாழ்வைக் கிறிஸ்தவத்தைப் பிரசங்கிப்பதில் செலவிட்டார். அப்போது மெத்தடிஸ்ட் சீர்திருத்தச் சபை மட்டுமே கறுப்பினத்தவர்களைப் பிரசங்கிகளாக அனுமதித்தது. 1784ஆம் வருடம் அவர் பிரசங்கிகளுக்கான படிப்பை முடித்து, முதல் கறுப்பின பிரசங்கியாகப் பால்டிமோர் நகரில் பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார்.

சில நாட்களிலேயே பிலடெல்பியா நகருக்குச் சென்ற அவர், அங்கிருந்த மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் பாதிரியாக இருந்தார். அங்கே, கறுப்பினத்தவர்களுக்கு என்று தேவாலயத்தின் வெளியே தனியே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கேயே அவரும் பிரசங்கம் செய்ய வேண்டியிருந்தது. வெள்ளைப் பாதிரிகள் கறுப்பினத்தவர்களைத் தனியே பிரிப்பதை விரும்பாத அவர், தனது நண்பருடன் சேர்ந்து சிறிது இடம் வாங்கி, தனியாக ஒரு தேவாலயத்தை 1787ஆம் ஆண்டு எழுப்பினர். ஆப்ரிக்கன் மெத்தடிஸ்ட் எபிஸ்கோப்பல் (African Methodist Episcopal – AME) திருச்சபை இப்படித்தான் தோன்றியது.

கறுப்பினத் திருச்சபைப் பிரார்த்தனைகள்
கறுப்பினத் திருச்சபைப் பிரார்த்தனைகள்

ஆன்மீகக் காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காகச் சீர்திருத்தச் திருச்சபை பிரிந்தது இதுவே முதல்முறையாகும். ஆப்ரிக்கன் மெத்தடிஸ்ட் எபிஸ்கோப்பல் திருச்சபை, கறுப்பினத்தவர்களுக்கு வேதாகமத்தைப் போதிக்கவும், அவர்களை அடிமை முறையில் இருந்து வெளியேற்றவும் தன்னை அர்பணித்துக்கொண்டது. அடுத்த 44 ஆண்டுகள், ரிச்சர்ட் ஆலன் அடிமை முறை ஒழிப்பிற்காகத் தீவிரமாக வடமாநிலங்களில் பிரசாரம் செய்துவந்தார். திருச்சபையும், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே தென் மாநிலங்களில் அரசாங்க நிலங்கள், உபயோகத்தில் இல்லாத இடங்களில் தன்னுடைய தேவாலயங்களை நிர்மாணித்தது.

இந்தக் காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்கள் இடையே சீர்திருத்தச் சபைகளான பாப்டிஸ்ட், மெத்தடிஸ்ட் சபைகள் பிரசங்கங்கள் செய்து வந்தாலும், மெத்தடிஸ்ட் சபையே அவர்களை முதலில் விடுதலை செய்யவேண்டும், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று பேசியது. இப்படியாகப் பல சபைகளாகப் பிரிந்து செயல்படுவது, கறுப்பினத்தவர்களின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்று 1830ஆம் வருடம் பிலடெல்பியா நகரில் முதல் கறுப்பினத்தவர்கள் மாநாடு நடைபெற்றது.

நாற்பது பிரதிநிதிகள் கலந்துகொண்ட முதலாவது மாநாட்டில் கனடாவில் (அங்கே அடிமைமுறை ஒழிக்கப்பட்டிருந்தது) நிலம் வாங்கி, கறுப்பினத்தவர்கள் அங்கே சென்று விடுவதன் சாத்தியம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், விரைவிலேயே கல்வி, உரிமைகளை மீட்டெடுப்பது என்று விவாதம் மாறியது. மாநாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் பதிப்பிக்கப்பட்டன.

இதுவே கறுப்பினத்தவர்கள் தங்களை முதல் முறையாக ஓர் இயக்கமாக மாற்றிக்கொண்டதன் முதல் படியாகும். இதன் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் பல நகரங்களில் அவர்கள் ஒன்று கூடினார்கள். ஆனால் இவை பெரும்பாலும் வடமாநில நகரங்களாகவே இருந்தன. தென் மாநிலங்களில் சுதந்திரமான கறுப்பினத்தவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாததால் அங்கு எந்த மாநாடும் 1865 வரை நடைபெறவில்லை.

1865ஆம் ஆண்டு, உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து, கறுப்பினத்தவர்கள் அனைவருக்கும் விடுதலை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வருடம் தென் மாநிலங்கள் பலவற்றிலும் கறுப்பினத்தவர்கள் தங்களது மாநாடுகளை நடத்தினார்கள். அவை, கறுப்பினத்தவர்கள் தங்களை ஒரு சமூகமாக ஒன்றிணைக்கவும், தங்களது உரிமைகளுக்காகக் குரல் எழுப்பவும் உதவியாக இருந்தது. இந்த மாநாடுகள் அங்கிருந்த கிறிஸ்தவத் தேவாலயங்களில், பெரும்பாலும் அந்தப் பகுதி பாதிரி, ஆயர் போன்றோரால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இந்த மாநாடுகளில் கறுப்பினத்தவர்களின் உரிமைக் குரலோடு, நிதி சேகரிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் பள்ளிகள், சங்கங்கள் போன்றவையும் நிறுவப்பட்டன. மறுகட்டமைப்புத் திட்டங்கள் நடைபெற்ற 12 வருடங்களில் தென் மாநிலங்களில் புதிதாகப் பல பள்ளிகளும், ஆரம்பச் சுகாதார மையங்களும், பல்கலைக்கழகங்களும் இப்படியாகத்தான் நிறுவப்பட்டன. மறுகட்டமைப்புத் திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் இந்த நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருந்தன.

ஆனால், பிரடெரிக் டக்ளஸ் எதிர்பார்த்ததைப் போன்ற ஒரு தேசம் தழுவிய இயக்கம் அந்த நேரத்தில் உருவாகவில்லை. பல மாநாடுகள் பல நகரங்களில் நடைபெற்றாலும், ஒருங்கிணைந்த இயக்கமாக அது பரிணமிக்கவில்லை. அப்படியான சில முயற்சிகள் நடைபெற்றிருந்தாலும், அவை வெற்றிப் பெறவில்லை. அதுவே இந்த மாநாடுகளின் தோல்வியாகக் கருதப்படுகிறது.

ஆனாலும், மறுகட்டமைப்பு நாட்களில் தென் மாநிலங்கள் எங்கும் தொடங்கப்பட்ட தேவாலயங்களைக் கறுப்பினத்தவர்கள் தங்களது சுதந்திரத்தின் சின்னங்களாகவே பார்த்தார்கள். அவர்களது முழுக் கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனமாக இந்தத் திருச்சபைகள் இருந்தன.

அத்தோடு தேவாலயங்கள் வெறும் தேவாலயங்களாக மட்டுமே இருக்கவில்லை. அவை சமூகக் கூடங்களாக, பள்ளிகளை நடத்தும் நிறுவனங்களாக, அரசியலைப் பேசும் இடங்களாக இருந்தன. இங்கே (மட்டுமே) கறுப்பினத்தவர்கள் எந்தத் தடையும் இன்றி, தங்களது கருத்துக்களைப் பேச முடியும் என்ற நிலை இருந்தது.

தேவாலய போதகர்களும் பாதிரிகளும் கூட அரசியல் பேசுபவர்களாக, அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்களாக இருந்தனர். கறுப்பினத்தவர்களின் திருச்சபைகள் தோன்றிய காரணத்தைப் பார்த்துவிட்டதால், இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. கறுப்பினத்தவர்களிடையே அதிகம் படித்தவர்களாகவும், அவர்களை வழிநடத்துபவர்களாகவும் இவர்களே இருந்தார்கள். மறுகட்டமைப்பு நாட்களில் அரசாங்கத்தில் பதவி வகித்த 2000 கறுப்பினத்தவர்களில், கிட்டத்தட்ட 250 பேர் பாதிரிகள். இவர்களே அரசாங்கப் பள்ளிகள், சுகாதார மையங்கள் முதலியவற்றைத் தென் மாநில கறுப்பினத்தவர் பிரதேசங்களுக்குக் கொண்டு வர காரணமாக இருந்தவர்கள். எனவே அவர்கள் கறுப்பினத்தவர்களின் தலைவர்களாகப் பார்க்கப்பட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

இந்த இடத்தில் அந்த நூற்றாண்டின் இறுதியில் கறுப்பு தேவாலய போதகர்களைப் பற்றி டபிள்யூ. இ.பி.டுபாய்ஸ், இப்படியாக எழுதுகிறார்,

‘அடிமைகளின் மதத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இருந்தன – போதகர், இசை, அவர்களது வெறி. அமெரிக்க மண்ணில் கறுப்பினத்தவர்களால் மேம்படுத்தப்பட்ட ஒரு தனித்துவமான ஆளுமை அவர்களின் மதபோதகர். ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் மக்களுக்கு, அவரே தலைவர், அரசியல்வாதி, பேச்சாளர், மேற்பார்வையாளர், சதியாலோசனைச் செய்பவர், லட்சியவாதி என்று எல்லாமுமாக இருக்கிறார். உள்ளார்ந்த அக்கறையுடன் கூடிய அறிவுக்கூர்மையும், செயல்திறனுடன் கூடிய பக்குவமும் அவருக்கு அந்த முதன்மையான இடத்தைக் கொடுத்து, அதைத் தக்க வைக்கவும் உதவுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் மேற்கிந்திய தீவுகளில் இருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நியூ இங்கிலாந்து, மிஸ்ஸிஸிப்பி நதியின் கீழே இருக்கும் நியூ ஆர்லியன்ஸ், நியூ யார்க் நகரங்கள் வரை இந்தப் போதகர்கள் தங்களது இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப மாறவும் செய்திருக்கிறார்கள்.’

போதகர்களின் இத்தகைய செல்வாக்கு இன்று வரை கறுப்பினத்தவர்களின் வாழ்வில் மாறவில்லை என்றே கூறலாம். 2022இல் ஜார்ஜியா மாநிலத்தின் முதல் கறுப்பினத்தவர் இனச் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபேல் வார்நாக், அங்கிருக்கும் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் மூத்த பாதிரி ஆவார். எனவே கறுப்பினத்தவர்களின் திருச்சபைகள் தொடர்ச்சியாக அவர்களது சமூக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் தலைமை ஏற்று வந்திருப்பது தெரியும்.

இதை டுபாய்சும் அதே கட்டுரையில் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் திருச்சபைகளின் பங்கு எப்படியாக இருந்தது என்பதைக் குறிப்பிடுகிறார்,

‘அமெரிக்க மண்ணில் இன்று கறுப்பினத்தவர்களின் சமூக வாழ்வின் மையமாகவும், அவர்களது குணத்தின் மொத்த வெளிப்பாடாகவும் இருப்பது கறுப்பினத்தவர்களின் தேவாலயங்கள்தான். உதாரணமாக, விர்ஜினியா மாநிலத்தின் ஒரு சிறு நகரில் இருக்கும் தேவாலயத்தை எடுத்துக்கொள்வோம் – ‘பர்ஸ்ட் பாப்டிஸ்ட்’ தேவாலயம் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அமரக் கூடிய, வசதியான செங்கற்கட்டடம். ஜார்ஜியா பைன் மரங்களால் அழகாகக் கட்டப்பட்டு, தரையில் கம்பளம் விரிக்கப்பட்டு, அழகான சிறிய ‘ஆர்கன்’ வேலைப்பாடுகள் செய்யப்பட்டுக் கண்ணாடிச் சன்னல்களுடன் இருக்கிறது. அதற்குக் கீழே பெரிய அறையில் அமர்வதற்கு வசதியாகப் பலகைகள் இருக்கின்றன. இங்கே வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு இந்தக் கட்டடமே ஒருங்கிணைக்கும் இடமாக இருக்கிறது. இங்கே பல சமூக நிறுவனங்கள் கூடுகின்றன. தேவாலய சேவைகள், ஞாயிற்றுக்கிழமை பள்ளி, இரண்டு, மூன்று காப்பீட்டுக் குழுக்கள், மாதர் சங்கங்கள், ரகசிய சங்கங்கள், பல்வேறு விதமான கேளிக்கை, விருந்துகள், உரைகள் போன்றவற்றிற்கான கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இவற்றுடன் ஐந்தாறு வாராந்திர வழிபாட்டுச் சேவைகளும் நடைபெறுகின்றன. இங்கேயே நிதி சேகரிக்கப்பட்டு, இங்கேயே செலவழிக்கப்படுகிறது. வேலையற்றவர்களுக்கு வேலைத் தேடி கொடுப்பது, புதிதாகச் சேர்ந்தவர்களை அறிமுகப்படுத்துவது என்று பலவிதங்களிலும் செய்திகளும், சேவைகளும், இல்லாதவர்களுக்கு உதவியும் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், இந்தப் பகுதியின் சமூக, பொருளாதார, அறிவார்ந்த மையமாகவும், பெரும் சக்திக் கொண்ட மத நிறுவனமாகவும் இருக்கிறது. பயிர்கள் விதைக்கப்பட்ட பின்னர், தீயொழுக்கம், பாவம், ஈடேற்றம், சொர்க்கம், நரகம், நீங்காத தண்டனை எனப் பல தலைப்புகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முறை பிரசங்கிக்கப்படுகிறது; எனவே, இங்கே மதமாற்றம் செய்யாமல் இருக்கும் மனதைரியம் வெகு சிலருக்கே இருக்கிறது. இத்தகைய நிறுவனமயப்பட்ட மதத்தின் வாயிலாக திருச்சபை, தனிமனித அறத்தை எப்போதும் காப்பாற்றுவதாகவும், குடும்ப வாழ்வைச் சீர்படுத்துவதாகவும், எது நல்லது, சரி என்பது போன்ற விஷயங்களில் தேவாலய உறுப்பினர்களுக்குக் கடைசி வார்த்தையாகவும் இருக்கிறது.’

டுபாய்ஸின் இந்தக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கறுப்பினத்தவர்களின் ஆன்மீக வாழ்வைக் குறித்தான சரியான விவரணையாக இருக்கிறது. இதன் மூலம் திருச்சபைகள் புதிதாகச் சுதந்திரமடைந்திருந்த கறுப்பினத்தவர்கள் வாழ்வில் செலுத்திய ஆதிக்கத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும். இந்த ஆதிக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பின் வரும் அத்தியாயங்களில் பல பாதிரிகளைக் கறுப்பினத்தவர்களின் தலைவர்களாகக் காணப் போகிறோம். அவர்களே கறுப்பினத்தவர்களின் சமூக வாழ்வின் பல மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்தவர்கள்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *