Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #11 – வாடகைக் குற்றவாளிகள்

கறுப்பு அமெரிக்கா #11 – வாடகைக் குற்றவாளிகள்

வாடகைக் குற்றவாளிகள்

23-24 வருடங்களுக்கு முன் வாஷிங்டன் நகரைச் சுற்றிப் பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பன் ஒருவன் வீட்டில் தங்கி, காரில் சுற்றிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கேயோ செல்லும்பொழுது, அவர் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டி, ‘இது கறுப்பினத்தவர்கள் வசிக்கும் இடம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்றான். எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஏன் என வினவினேன். அதற்கு அவன், எப்படிக் கறுப்பினத்தவர்கள் அனைவரும் துப்பாக்கியுடன் போதைப் பொருட்களை விற்றுக் கொண்டிருப்பார்கள் என்று மர்மக்கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான். இதைக் கேட்ட நான், அது எப்படி அனைவரும் குற்றவாளிகளாக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டேன் என்பது மாதிரியான பொதுப்புத்தியின் வெளிப்பாடாகவே எனக்குத் தெரிந்தது. இருந்தாலும், ஒரு இனம் முழுவதையும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்திருப்பது எது என்ற கேள்வியும் எழுந்தது. அந்தக் காரணம் அவர்களது நீண்ட வரலாற்றில் மறைந்திருக்கிறது.

0

1884ஆம் வருடம். அலபாமாவின் யுரேகா நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து அலபாமாக் குற்றவாளிகள் நலன் வாரியத்தின் தலைவரான ரெஜினால்டு டாசனிற்குக் கடிதம் ஒன்று வந்தது. அந்த நிலக்கரி சுரங்கங்களுக்கு அலபாமா மாநில அரசால் வாடகைக்குக் கொடுக்கப்பட்டிருந்த கைதி ஒருவனிடம் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது.

எசேக்கியேல் ஆர்ச்சி என்ற அந்தக் கைதியைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அடிமையாகப் பிறந்த அவர், லிங்கனின் விடுதலைப் பிரகடனத்தால் விடுதலை பெற்று, சிறிது காலம் பல்வேறு வேலைகள் செய்து, 1880களில் என்ன காரணத்தினாலோ கைது செய்யப்பட்டு, அலபாமா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து யுரேகா நிலக்கரிச் சுரங்கங்களுக்கு வேலைக்கு அனுப்பப்பட்டார். அந்தச் சுரங்கத்தில் இருந்த நிலை குறித்தே அவரது கடிதம் எழுதப்பட்டிருந்தது.

ஜன்னல்கள் இல்லாத மர அறைகளில் தாங்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், சரியான கழிவறை வசதி இல்லாமல் தகர வெடிமருந்து கெண்டிகளில் மனிதக்கழிவுகள் கொட்டிக் கிடப்பதாகவும், அது பல நேரங்களில் நிரம்பி தங்களது படுக்கைகளில் வழிவதாகவும் எழுதியிருந்தார். காலை 3 மணிக்கு சங்கிலியால் பிணைக்கப்பட்டு, சுரங்கங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் நாங்கள் இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் எழுதிய வரிகள்,

‘ஒவ்வொரு நாளும் எங்களில் ஒருவர், மனிதர்களின் கடைசி இருப்பிடத்திற்கு – கல்லறைக்கு – கொண்டு செல்லப்பட்டார். ஒவ்வொரு நாளும் நாங்கள் மரணத்தின் முகத்திலேயே விழித்துக் கொண்டிருந்தோம். அதனாலேயே பேசுவதற்கு அஞ்சினோம். நாம் ‘77, ‘79ஆம் வருடங்களுக்குச் சென்று பார்த்தாலும், அந்த வருடங்களிலும் நாங்கள் கொடுமையை அனுபவித்துதான் வந்தோம். எந்த மனிதராலும் சொல்ல முடியாதது அது. விதி கைதிகளைச் சபித்திருக்கிறது. எல்லா இடங்களிலும் எங்களை மரணம் அழைக்கிறது. கோமர் (மேற்பார்வையாளர்) மிகவும் கடுமையான மனிதர். அவரிடம் கைதிகள் தங்களது முதுகில் இருக்கும் சவுக்கடிக் காயங்களைக் காட்டுவார்கள். அவரோ அதில் தோல் மீண்டும் வந்தவுடன், தான் திரும்பவும் அதை உரித்துவிடுவதாகக் கூறுவார்.’

இன்னொரு இடத்தில் அவர், ‘சுரங்க முதலாளி, கைதிகளை 100-160 முறை முட்கள் உள்ள வாரினால் அடித்து, அவர்கள் சவுக்கடிபடவில்லை என்று கூறுவார். தப்பித்துச் செல்பவர்களைத் துரத்திக் கொண்டு ஒரு நாள் செல்வார். மறுநாள் அவர்களது கல்லறைகளைத் தோண்டுவார். அறைக்கு நாங்கள் ஈரமாகச் செல்வோம். படுக்கைக்கு ஈரமாகச் செல்வோம். மறுநாள் காலை ஈரத்துடன் எழுவோம். ஒவ்வொரு காவலாளியும் ‘குழிகளைத் தாண்டும்போது வரிசையாகச் செல்’ என்று கத்தி, அடிக்கவும், மிதிக்கவும் செய்வார்கள்’ என்று கூறுகிறார்.

0

மறுகட்டமைப்புத் திட்டங்கள் முடிவுக்கு வந்து, ராணுவம் தென் மாநிலங்களில் இருந்து முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தென் மாநிலங்களில் மீண்டும் கறுப்பினத்தவர்களைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலைகளை வெள்ளையர்கள் ஆரம்பித்தார்கள்.

வெறும் பனிரெண்டு ஆண்டுகள் மட்டுமே நடந்த மறுகட்டமைப்புத் திட்டங்கள், அவர்களது பொருளாதார நிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. இருந்தாலும், அரசியல் ரீதியாக அவர்களது உரிமைகள் பலவும் நிலைநாட்டப்பட்டன. இந்த உரிமைகளைச் சிறிது சிறிதாக மாற்றுவதே தென்மாநில அரசியல்வாதிகளின் முதற்கட்ட வேலையாக இருந்தது. இந்த இடத்தில் 1880களின் ஆரம்பத்தில் இருந்த பொருளாதாரச் சூழல் குறித்துச் சற்றுப் பார்த்துவிடுவோம்.

அந்த நேரத்தில் பருத்தியின் விலை மீண்டும் ஏறத் தொடங்கியது. தென் மாநிலங்களின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. வெள்ளையர்களின் பருத்தித் தோட்டங்கள் அனைத்தும் மீண்டும் இயங்க ஆரம்பித்திருந்தன. புதிதாகக் கண்டறியப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கங்களும், அவற்றுடன் சேர்ந்த தொழிற்சாலைகளும் தென்மாநிலங்கள் இயந்திரமயமாவதை விரைவாக்கிக் கொண்டிருந்தன. புதிதாகப் பல தொழிற்சாலைகளும், அவை உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டிய துறைமுகங்களும் தோன்றிக் கொண்டிருந்தன. அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் வடமாநில முதலாளிகள் செய்திருந்த முதலீடுகளின் பயன் இப்போது கிடைக்க ஆரம்பித்திருந்தது. பல தென்மாநில தொழிலதிபர்களும் புதிதாகத் தோன்ற ஆரம்பித்திருந்தார்கள்.

இவை அனைத்தும் அதிக உழைப்பைக்கோரும் தொழில்கள். தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் இல்லாத நாட்களில், அவர்களால் கிடைத்த தொழிலாளர்களை முடிந்த அளவிற்கு வேலை வாங்க முடிந்தது. ஆனால், தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதும், அவர்களை வேலை வாங்குவதும் எளிதாக இல்லை. அமெரிக்காவின் தொழிற்புரட்சியைத் தடை செய்வதாக இந்தத் தொழிலாளர் தட்டுப்பாடுகள் இருந்தன.

1840களில் அமெரிக்க மாநில அரசாங்கங்கள் கைதிகளை நிலங்களில் வேலை செய்யவும், மற்ற வேலைகளுக்கு குத்தகைக்குக் கொடுப்பதும் பழக்கமாக இருந்தது. ஆனால் மிகவும் சிறிய அளவிலேயே இது நடந்து வந்தது. மறுகட்டமைப்பு நாட்களில் நிலவிய பெரும் தொழிலாளர் தட்டுப்பாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, அங்கிருந்த ராணுவ அதிகாரிகள் கைதிகளை உபயோகிக்க ஆரம்பித்தனர். சரியான வேலை நேரம், மேற்பார்வை, கைதிகளுக்குப் போதுமான சம்பளம் என இந்த முறை ஓரளவிற்குப் பயனுள்ளதாகவே இருந்தது.

பிறகு, மறுகட்டமைப்புத் திட்டங்கள் முடிந்த நாட்களில் இந்த முறை கிடப்பில் போடப்பட்டது. ஆனால், அப்போது தொழிற்சாலைகளின் தொழிலாளர் தட்டுப்பாடு, தென் மாநில அரசாங்கங்களை மீண்டும் இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்க வைத்தது. ஆனால் இந்த முறை அவர்கள் ஒரே கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்த முடிவு செய்தார்கள்.

கறுப்பினத்தவர்களைப் பல்வேறு விதங்களில் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன. பொது வெளிகளில் கறுப்பினத்தவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, அவர்கள் அணியும் உடைகளைக் கட்டுப்படுத்துவது, பேசும் விதத்தைக் கட்டுப்படுத்துவது என அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் இந்தச் சட்டங்கள் இருந்தன. இவை, சமூகத்தை சட்டம், ஒழுங்கிற்குள் வைத்திருப்பதற்குப் பதிலாக, கறுப்பினத்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று போதிப்பவையாக இருந்தன.

வெள்ளையர்கள் எதிரே வந்தால் இறங்கிச் சாக்கடையில் நின்று கொள்ள வேண்டும், தொப்பி அணியக் கூடாது, வெள்ளையர்களின் கண்களைப் பார்த்துப் பேசக்கூடாது, வேலையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது போன்ற சட்டங்கள் கறுப்பினத்தவர்கள் பொதுவெளியில் புழங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டி எழுதப்பட்டன.

மீண்டும் அரசியல் அதிகாரம் தங்களது கைக்கு வந்த வேகத்தில் வெள்ளையர்கள் இந்தச் சட்டங்களை அமல்படுத்த ஆரம்பித்தவுடன், சிறைச்சாலைகள் நிரம்பின. இது மாநில அரசுகளுக்குப் புதிய தலைவலியைக் கொண்டு வந்தது. இருப்பினும் குற்றவாளிகளைக் குத்தகைக்கு விடுவது என்பது அவர்களுக்குப் புதிய வருவாய் வரும் வழியைக் காட்டியது.

1880களின் ஆரம்பத்தில் அனைத்துத் தென்மாநிலங்களும் உற்சாகமாகக் குற்றவாளிகளைக் குத்தகைக்கு விட ஆரம்பித்தன. இது தென் மாநிலங்களின் தொழிலாளர் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, வெள்ளை முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தங்களது இனவெறிச் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் போதுமான உற்சாகத்தைக் கொடுத்தது.

இந்த முறையில் எல்லாச் சட்டங்களுக்கும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. ‘பன்றி சட்டங்கள்’ என்றழைக்கப்பட்ட சட்டங்கள், சிறு கோழியைத் திருடுவதைக்கூட வருடக்கணக்கில் சிறையில் அடைக்கும் குற்றமாகப் பார்த்தது. அதற்கு முன்பு கால்நடைகள் திருட்டு வழக்குகளில், குற்றவாளிக்கு அபராதம் விதிப்பதே வழக்கமாக இருந்தது. இப்போது ஒரு வருடமோ, பல வருடங்களோ சிறைக்கு அனுப்பப்படலாம் என்ற நிலை. இப்படியே சிறு குற்றங்கள், பெரும் குற்றங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் தண்டனைகள் அதிகப்படுத்தப்பட்டன.

இந்த இடத்தில் இங்கிருந்த நீதிப் பரிபாலன முறையைப் பார்த்துவிடுவோம். நகர, கிராம முக்கியக் காவல் அதிகாரிகள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக இருந்தார்கள். இவர்கள் எப்போதும் வெள்ளையர்கள் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. எல்லா இடங்களிலும் நீதிமன்றங்கள் இருப்பது சாத்தியமில்லை என்பதால், பெரும்பாலான இடங்களில் ‘அமைதி நீதிபதிகள்’ என்று ஊர் பெரியவர்கள் சிலர் நீதி வழங்கும் அதிகாரத்துடன் இருந்தார்கள். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசாலும் நியமிக்கப்பட்டனர். இத்தகைய கீழ்நிலை நீதித்துறைப் பணியாட்கள் அனைவருக்கும் சம்பளம் மிகவும் குறைவாகவும், சரியாகக் கொடுக்கப்படாமலும் இருந்தது. மேலும், சம்மன் வழங்குவது, பிடிவாரண்ட் கொடுப்பது, நீதி வழங்குவது போன்ற வேலைகளுக்கு அவர்களுக்குத் தரகுப் பணம் வழங்கப்பட்டது. எனவே பலரைக் குற்றவாளிகளாக்குவது அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் பயன் தருவதாக இருந்தது.

முதலாளிகளுக்கும் இந்த ஏற்பாடு மிகவும் சரியானதாகத் தெரிந்தது. அடிமை முறையில் கறுப்பினத்தவர்கள் முதலாளிகளின் உடமைகள். அவர்களுக்கு நோயோ, மரணமோ நேர்ந்தால் அது அவர்களது முதலீட்டைப் பாதிக்கும் என்பதால் அவர்களைக் காப்பாற்றுவதில் சிறிதளவாவது கவனம் இருந்தது. ஆனால் குத்தகை முறையில், அவர்கள் கைதிகளை மாதம் 8-12 டாலர் குத்தகையில் எடுத்தனர். அவர்கள் ஊனமானாலோ, மரணமடைந்தாலோ அரசு உடனடியாக இன்னொரு கைதியைக் கொடுத்தது. எனவே வெள்ளையர்களுக்குக் கறுப்பினத்தவர்களின் உயிர் என்பது எந்த விதத்திலும் முக்கியமானதாக இல்லை. சுரங்கங்களில் இறந்தவர்கள் அங்கேயே குழிதோண்டி புதைக்கப்பட்டார்கள். இன்றும் தென் மாநிலங்களில் கும்பலாகப் புதைக்கப்பட்ட இந்தச் சுரங்க தொழிலாளர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவர்களுடைய பெயரோ, இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பது குறித்த விவரங்களோ இல்லை. எத்தனைக் கறுப்பினத்தவர்கள் இங்கே கொல்லப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை. இன்றும் அவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னம் கூட எங்கும் இல்லை.

இங்கே இரண்டு எண்களைக் குறிப்பிடுவது எந்த அளவுக்குக் கறுப்பினத்தவர்களைக் குற்றவாளிகளாகக் கட்டமைப்பது அதிகாரத்துக்கு உகந்ததாக இருந்தது என்பதைக் காட்டும். 1850களில் தென் மாநிலங்களில் 90 சதவிகித குற்றவாளிகள் வெள்ளையர்களாக இருந்தார்கள். 1880களின் மத்தியில் இது நேரெதிராக 85 சதவிகித குற்றவாளிகள் கறுப்பினத்தவர்களாக இருந்தார்கள். 1800களின் ஆரம்பத்தில் தென் மாநிலங்களின் வருவாயில் 10 சதவிகிதமாக இருந்த இந்தக் குத்தகை வருவாய், அடுத்த இருபது வருடங்களில் 70 சதவிகிதமாக உயர்ந்தது.

0

எசேக்கியேல் ஆர்ச்சியின் கடிதத்தைப் போலவே பல கடிதங்களும் எழுதப்படவே, ரெஜினால்டு டாசன் சுரங்கங்களில் கைதிகளின் நிலைக் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணை அறிக்கை இன்றும் வாசிக்கக் கிடைக்கிறது. முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் விஷயங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வாடகைக் குற்றவாளிகளும், மேற்பார்வையாளரும்

விசாரணையின்பொழுது அவர்கள் சுரங்கங்களில் வேலை செய்யும் கைதிகளிடமும் பேசினார்கள். அவர்களில் பலருக்கும் எப்போது அங்கே வந்தோம் என்று நினைவில்லை. எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்ற விவரமும் தெரியவில்லை. சுரங்க மேற்பார்வையாளரிடமோ, அந்தப் பகுதி அரசு நிர்வாகிகளிடமோ எத்தனைக் கைதிகள் அங்கே வேலை செய்கிறார்கள், அவர்களது தண்டனைக் காலம் என்ன போன்ற விவரங்கள் இல்லை. ஒரு முறை அவர்கள் சுரங்கத்திற்குள் சென்றுவிட்டால் கிட்டத்தட்ட பிணமாக மட்டுமே வெளியே வர முடியும். இதை, குத்தகைக் குற்றவாளிகள் முறையைச் சீர்திருத்த வேண்டியதன் முக்கியக் காரணமாக அறிக்கைக் கூறுகிறது.

0

ஆனால், அறிக்கையின் காரணமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. தென் மாநிலங்களில் வெள்ளையர்களின் பொருளாதார, அரசியல் அதிகாரத்தின் முன் கறுப்பினத்தவர்களின் உயிர் வெறும் எண்ணிக்கையாகக் கூட இல்லை.

0

எசேக்கியேல் ஆர்ச்சியின் கதையும், அதன் தொடர்ச்சியான விசாரணைகளும் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் சூழ்ந்த இருளின் ஆரம்பம் மட்டுமே. இந்தக் கதைகளும் அந்த நூற்றாண்டிலேயே முடிந்துவிடவில்லை. ஒரு வழியாக ஒன்றிய, மாநில அரசுகள் இந்த முறையின் அநீதியை உணர்ந்து அதை 1941ஆம் வருடமே தடை செய்தன. முதல் சில வருடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையே தெரியவில்லை என்றால் அதன் பின்னான 50 வருடங்களில் நிகழ்ந்த கொடுமைகளை எப்படி விவரிப்பது?

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கறுப்பினத்தவர்களைக் குற்றவாளிகளாக மட்டுமே எப்படியாகக் கட்டமைத்தார்கள் என்று நான் யோசித்ததாகச் சொல்லியிருந்தேன். அதன் ஆரம்பம் இங்குதான் நிகழ்ந்தது. இன்று வரை இந்த நிலை முழுவதுமாக மாறவில்லை என்பதுதான் இதில் வேதனையான ஒன்று.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *