Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #12 – ஜிம் கிரோ சட்டங்கள்

கறுப்பு அமெரிக்கா #12 – ஜிம் கிரோ சட்டங்கள்

Lynching

‘அடிமைகள் சுதந்திரமடைந்தார்கள்; சூரியனின் வெளிச்சத்தில் சிறிது நேரம் நின்றார்கள்; மீண்டும் அடிமைகளாக்கப்பட்டார்கள்’ – டபிள்யூ. இ. பி. டு பாய்ஸ்.

1820களில் நியூயார்க் நகரில் தாமஸ் ரைஸ் என்பவர் முகத்தில் கருப்புச் சாயத்தைப் பூசிக்கொண்டு கறுப்பினத்தவர்களைக் கேலி செய்து நடித்துக் காட்டுவார். அந்தக் கற்பனைக் கதாபாத்திரத்திற்கு அவர் ‘ஜிம் கிரோ’ என்று பெயரிட்டிருந்தார். பின்னாளில் கறுப்பினத்தவர்களைத் ‘தங்களது இடத்தில்’ வைக்க வேண்டி அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டங்களும் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டன.

இந்தச் சட்டங்களின் மூலமாகக் கறுப்பினத்தவர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டார்கள். கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறியும் வன்முறையும் நியாயப்படுத்தப்பட்டன. தேவாலயங்களில் வெள்ளையர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றும், கறுப்பினத்தவர்கள் அவர்களுக்கு வேலை செய்யப் பிறந்தவர்கள் என்றும் போதிக்கப்பட்டது. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களிலும், வேடிக்கைக் கதைகளிலும் கறுப்பினத்தவர்கள் தொடர்ந்து மிருகங்களாகக் காட்சிப் படுத்தப்பட்டார்கள்.

வெள்ளையர்களின் இனவெறியை நியாயப்படுத்த வேண்டி, இந்தச் சட்டங்களுக்குப் பலவிதமான நியாயங்கள் கற்பிக்கப்பட்டன. வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்களைவிட எல்லா விதங்களிலும் அறிவாற்றல், நாகரீகம், நடத்தையில் சிறந்தவர்கள் என்றும், கறுப்பினத்தவர்களும் வெள்ளையர்களும் ஒன்றாக இணைவது அமெரிக்க நாகரீகத்தை அழித்துவிடும் என்றும், கறுப்பு ஆண்கள், வெள்ளைப் பெண்களை வன்புணர்வு செய்யவே முயலுவார்கள் என்றும் கூறப்பட்டன. கறுப்பினத்தவர்கள் முழுமையான மனிதர்கள் அல்ல, கறுப்பினப் பெண்கள் மிகுந்த காமம் கொண்டவர்கள், எனவே அவர்களைச் சமமாக நடத்துவது கலப்பின உறவுகளை அதிகரித்துவிடும் என்று பல காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

இந்தச் சட்டங்கள் வெறுமனே சமூக அமைதியை வேண்டி இயற்றப்பட்டவை மட்டும் அல்ல, கறுப்பினத்தவர்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டவை. அவற்றில் சிலவற்றைக் காண்போம்: கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களுடன் கைகுலுக்கக் கூடாது. வெள்ளைப் பெண்களை நோக்கிக் கையை நீட்டினால்கூட வன்புணர்வுக் குற்றமாகக் கருதப்படும். வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது. கறுப்பினத்தவர்கள் பொது இடங்களில் தங்களது இணையுடன் நெருக்கமாக இருக்கக் கூடாது. பொது இடங்களில், தங்களது மனைவிக்குக்கூட முத்தம் கொடுக்கக் கூடாது. சாலைச் சந்திப்புகளில் வெள்ளை ஓட்டுனர்களுக்கே முன்னுரிமை. கருப்பினத்தவர்கள் வெள்ளையர்களை நோக்கிச் சிரிக்கக்கூடாது, முடி திருத்தக்கூடாது, வெள்ளையர்களின் கல்லறைத் தோட்டத்தில், கறுப்பினத்தவர்களைப் புதைக்கக்கூடாது, ஒரே அறையில் வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் மது அருந்தக்கூடாது, வெள்ளையினப் பெண்களைத் தலை நிமிர்ந்து பார்க்கக் கூடாது. இப்படிப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

இதுபோன்ற சட்டங்களும் விதிமுறைகளும் விடுதலை அடைந்திருந்த கறுப்பினத்தவர்களை மீண்டும் அடிமைகளாக, அதற்கு மிக அருகிலான நிலையில் வைத்திருப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன.

1890இல் லூசியானா மாநிலம் முதல் முறையாகப் பொதுப்போக்குவரத்தில் கறுப்பினத்தவர்களும் வெள்ளையர்களும் ஒன்றாகச் செல்லக்கூடாது என்று சட்டமியற்றியது. மாறாக, வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் தனித்தனி வண்டிகள் இருக்கும் என்றும், அவை சமமான வசதிகளுடன் இருக்கும் என்றும் அந்தச் சட்டம் கூறியது. இதுவே கறுப்பினத்தவர்களைப் பிரித்துத் தனியே வைப்பதற்காக இயற்றப்பட்ட முதல் சட்டம். இந்தச் சட்டம் பொது இடங்களில் கறுப்பினத்தவர்களுக்குப் பாகுபாடு காட்டுவதைச் சட்டபூர்வமாக ஆக்கியது.

இதைத் தொடர்ந்து பல்வேறு விதமான சட்டங்கள் கறுப்பினத்தவர்களைப் பொதுவெளியில் இருந்து பிரித்துத் தனியே வைப்பதை நோக்கமாகக் கொண்டே இயற்றப்பட்டன. ‘Separate but equal’ – ‘தனித்தனியே ஆனால் சமமாக’ என்ற இந்தமுறை, 14ஆம் அரசியல் சட்டத்திருத்தம் வலியுறுத்திய சமத்துவத்தை வெளிப்படையாக நிராகரிக்கக் கொண்டுவரப்பட்ட சட்ட வாக்கியம் மட்டுமே.

உதாரணத்துக்கு அரசாங்கப் பள்ளிகள் வெள்ளைக் குழந்தைகளுக்கும், கறுப்பு குழந்தைகளுக்கும் தனித்தனியாக, ஆனால் ஒரே வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பது இந்தப் பிரிவினைச் சட்டத்தின் விதி. ஆனால், உண்மையில் கறுப்புக் குழந்தைகளின் பள்ளிகள் நிதி ஒதுக்கப்படாமல், நிராதரவாக விடப்பட்டன. இதுவே எல்லாவிதமான பொது வசதிகளிலும் நிலவியது. இதன் மூலமாக இரண்டு இனங்களையும் எல்லா விதங்களிலும் பிரித்து வைப்பது சாத்தியமானது.

0

இன்னொரு விதமான சட்டங்கள் கறுப்பினத்தவர்களை வாக்குச் செலுத்தவிடாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. கறுப்பினத்தவர்கள் முழுவதுமாகக் குடியரசுக் கட்சியின் வாக்காளர்களாக இருந்தார்கள். வெள்ளை ஜனநாயக கட்சியினர் வெற்றிபெற வேண்டுமென்றால், அவர்கள் வாக்களிப்பதைப் பல விதங்களிலும் தடுப்பதுதான் வழியாக இருந்தது.

மறுகட்டமைப்பு நாட்களில் நடந்த தேர்தல்களில் வன்முறை தலைவிரித்தாடியது என்பது நமக்குத் தெரியும். ஆனால், 1877ஆம் வருடத்துக்குப் பின்னான தேர்தல்களும் இப்படியே இருந்தன. முன்பாவது வன்முறையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த ராணுவம் இருந்தது. இப்போது, கறுப்பினத்தவர்களுக்கு வெள்ளையர்கள் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. இருந்தாலும், அவர்களது வாக்குகளை முழுவதுமாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாததால், அவர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதே வெள்ளையர்களுக்கு ஒரே உறுதியான வழியாக இருந்தது.

அதற்காகவும் பல விதமான சட்டங்கள் இயற்றப்பட்டன. இவற்றில் முக்கியமானது படிப்பறிவுச் சோதனைதான் (Literacy test). பல நூற்றாண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, படிப்பறிவுச் சோதனை மூலமாகத்தான் வாக்களிக்கும் உரிமை என்பது எப்படிப்பட்ட மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதுவும் பதில் சொல்ல சொல்ல, கேள்விகள் அதிகரிக்கவே செய்யும். இந்தச் சோதனை வாக்களிப்பதை மறுக்கவே என்பதை நினைவில் கொள்ளுவோம். பல மாநிலங்களிலும் இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது.

இதுபோன்ற இன்னொரு விதி ‘தாத்தா விதி’ என்றழைக்கப்பட்டது. அதாவது உங்களது தாத்தாவுக்கு வாக்கு இருந்தால், உங்களுக்கு விதிகள் தளர்த்தப்படும். விடுதலை அடைந்து ஒரு தலைமுறைக்கூட ஆகாத கறுப்பினத்தவர்களின் எத்தனைத் தாத்தாக்கள் வாக்களிக்கும் தகுதியுடன் இருந்திருப்பார்கள் என்று யோசித்துக் கொள்ளலாம்.

இவை தவிர, வாக்களிப்பதற்குச் சிறு வரி (Poll tax) விதிக்கப்பட்டது. இதனால் ஏழைகளாக, கடனாளிகளாக இருந்த கறுப்பினத்தவர்கள் மட்டுமல்லாது, பல ஏழை வெள்ளையர்களும் கூட வாக்குரிமையை இழந்தார்கள். 1908ஆம் வருடத்துக்குள் அனைத்துத் தென் மாநிலங்களும் இந்த வரியை விதித்தன. மேலும், எல்லாத் தகுதிகளும் இருந்தாலும், வாக்களிக்கப் பதிவு செய்வது மிகவும் கடினமான, குழப்பமான விதிகளுடன் மாற்றப்பட்டது. வெள்ளை அரசு அதிகாரிகள் எந்தக் காரணமும் இல்லாமல், கறுப்பின வாக்காளர்களை நிராகரிக்கும் நிலையும் இருந்தது.

ஜனநாயகக் கட்சியில் வெள்ளையர்கள் மட்டுமே வேட்பாளர்களாக இருக்கலாம் என்ற நிலை இருந்தது. அதனால் வெள்ளையர்கள் மட்டுமே ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தல்களிலும் வாக்களிக்க முடிந்தது. கறுப்பினத்தவர்கள் தேர்தலில் நிற்க வேண்டுமென்றால், ஒரு கட்சி மட்டுமே அவர்களை அனுமதித்தது. ஆனால் பெரும்பாலான இடங்களில் அந்தக் கட்சிக்கு அலுவலகம் கூட இல்லை.

அவற்றையும் தாண்டி வன்முறைகளும், தேர்தல் முறைகேடுகளும் இருந்தன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கறுப்பினத்தவர்கள் வாக்களிப்பது முற்றிலுமாகக் குறையும் வரை வன்முறையும் சிறிதும் குறையவில்லை.

0

Lynching என்ற வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குத் தெரியவில்லை. ‘கும்பல் கொலை’ என்று சொல்லலாம். ‘வன்கொலை’ என்று சொல்லலாம். ஆனால் எந்த வார்த்தையும் இந்த வார்த்தை விவரிக்கும் கொடூரத்தைச் சரியாகக் கடத்தவில்லை என்றே நினைக்கிறேன்.

கும்பல் கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவர் – ரூபின் ஸ்டேசி

1882ஆம் வருடம் முதல் முறையாக அமெரிக்காவில் இந்த வார்த்தை, ஒரு கொலையைப் பதிவு செய்ய உபயோகிக்கப்படுகிறது. அப்போதிருந்து 1968 வரையிலான காலக்கட்டத்தில் (86 வருடங்கள்) 4730 வன்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 4000 பேர் கறுப்பினத்தவர்கள் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள்). மற்றவர்கள், பெரும்பாலும் அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்த மற்ற இனத்தவர்கள். ‘சாதாரண’ கொலைகளில் இருந்து இந்தக் கொலைகள் அனைத்தும், அவற்றின் கொடூரத்தினாலும், மனிதத்தன்மை இன்மையினாலும் மிகவும் வேறுபட்டவை.

தெற்குக் கரோலினாவின் சிறிய நகரங்களில் ஒன்று லேக் சிட்டி. பெரும்பாலும் வெள்ளையர்கள் வசித்த அந்த நகருக்கு 1898இல் தபால்காரராகப் பிரசியர் பேக்கர் வந்து சேர்ந்தார். பேக்கர் ஏற்கெனவே தெற்குக் கரோலினாவின் இன்னொரு பகுதியில் கறுப்பின விவசாயிகள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். வருவாய் துறையில் இருந்த அவரது நண்பர் ஒருவரது முயற்சியால் இரண்டு, மூன்று இடங்களில் தபால்காரராக இருந்தார். அங்கிருந்து மாற்றல் பெற்றே லேக் சிட்டியை வந்தடைந்தார். அங்கிருந்த வெள்ளையர்கள் அவரது வருகையை விரும்பவில்லை. அவர் மீது குற்றஞ்சாட்டி அரசாங்கத்துக்கு மனு மீது மனுவாக எழுதினார்கள். அரசாங்கமும் இரண்டு முறை விசாரணை நடத்தி, அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்லிவிட்டது.

எனவே அங்கிருந்த 300 வெள்ளையர்களும் தீர்ப்பைத் தாங்களே எழுதிவிடுவது என்று முடிவு செய்தனர். என்ன நடந்தது என்பதைப் பேக்கரின் மனைவி லவினியா விவரிக்கிறார்,

‘அன்றிரவு (பிப்ரவரி 22, 1898) 10 மணிக்கு மேல் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டோம். நள்ளிரவு 1 மணிக்கு நான் விழித்துப் பார்த்தபோது, வீடு நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது. நெருப்பு வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. என்னுடைய கணவரை எழுப்பினேன். அவர் வேகமாக எழுந்தார். அப்போது வீட்டை நோக்கிப் பல முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நான் குழந்தையைக் (ஜூலியா) கையில் தூக்கிக் கொண்டு, மற்ற குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, பேக்கரின் பின்னால் சென்றேன். அவர் கதவை நோக்கி சென்றார். கதவைத் திறந்து, தலையை வெளியே நீட்டியவுடன், பல முறை சுடப்பட்டார். முனகிக் கொண்டே பின்னோக்கி நகர்ந்து, வீட்டின் உள்ளே விழுந்தார். அதே நேரத்தில் குழந்தையை வைத்திருந்த என்னுடைய இடது கையிலும் குண்டு பாய்ந்தது. எனவே குழந்தையைத் தூக்க முடியாமல் கீழே விட முனைந்தபோதுதான், குழந்தையும் இறந்துவிட்டிருந்தது தெரிந்தது. அப்படியே சில நிமிடங்கள் கழிந்தவுடன்… மற்றக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்களது பக்கத்து வீட்டுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். அங்கே உயிருடன் சென்றுவிட்டாலும், என்னுடைய ஐந்து குழந்தைகளில் உயிருடன் இருந்த மற்ற குழந்தைகளில் மூவருக்கும், எனக்கும் காயம்பட்டிருந்தது.’

பேக்கரின் கொலை வழக்கில் மூவர் குற்றம்சாட்டப்பட்டு, மூவருமே குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். அரசாங்கம் மேலே வழக்கை நடத்தவும் இல்லை. இது குறித்த சிறிய புத்தகத்தை எழுதியிருக்கும் ட்ரிசிட்டா செஸ்ட்நட், lynching என்பதை இப்படியாக விளக்குகிறார்.

‘ஆப்பிரிக்க அமெரிக்கர்களைச் சித்திரவதை செய்தும், வெட்டியும், எரித்தும், துப்பாக்கியால் சுட்டும், இழுத்துச் சென்றும், தூக்கில் தொங்கவிட்டும் கொல்வது; அவர்கள் வெள்ளைக் கும்பல் ஒன்றால் ஏதேனும் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பார்கள்; அவரது உயிர், சட்டத்தின் பாதுகாப்பு இல்லாமல், எந்தவித கேள்வியும் இன்றி எடுக்கப்பட்டிருக்கும்.’

ஓரளவிற்கு உண்மைக்கு அருகாமையிலான விளக்கம் இது. இதிலும் தூக்கிலடப்பட்டுக் கொல்வதே பிரபலமாக இருந்தது. ஆனால் நாம் நினைப்பதுபோல இந்தக் கொலைகள் மறைவாகவோ, இருளிலோ நடத்தப்படவில்லை.

பெரும்பாலான நேரங்களில் இவை திருவிழாக்கள்போலப் பெரும் கூட்டத்திற்கு நடுவே நடத்திக் காட்டப்பட்டன. காவல், நீதித் துறைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படியான பொதுக் கண்காட்சிகள் சாத்தியமில்லை. கறுப்பினத்தவர்கள் ஏதேனும் தவறு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் வைக்கப்படுவார்கள். கூட்டமாக வரும் வெள்ளையர்கள், காவலர்களை மீறி, சிறையை உடைத்து, கைதியை வெளியே நடத்திச் சென்று, பொது இடத்தில் வைத்து மேலே சொன்ன முறைகளில் ஒன்றில் கொலை செய்வார்கள். பல வன்கொலைகளும் இதுபோன்ற ஒரே முறையில் நடந்திருக்கின்றன. கொலை நடத்தப்படப்போவது முன்பே அறிவிக்கப்பட்டு, 50 மைல் தொலைவில் இருந்தெல்லாம் வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள் எனக் குடும்பத்துடன் கலந்துகொண்டு, தங்களால் முடிந்த குரூரத்தை நிறைவேற்றிக் காட்டிவிட்டுத் திரும்புவார்கள். அன்று கொலை செய்யப்பட்ட மனிதனின், ஏதோ ஒரு பாகத்தை, அதாவது, அவரது விரல்கள், காலணிகள் போன்றவற்றை நினைவுப்பரிசாக எடுத்துச் செல்லப்படுவதும் உண்டு. சில வணிகர்கள் இவற்றை எடுத்துச் சென்று, தங்களது கடைகளில் விற்பதும் நடப்பதுண்டு. (இத்தகைய ஒரு நிகழ்வை டு பாய்ஸ் விவரித்துள்ளார்.)

பெரும்பாலும் வெள்ளைப் பெண்களைக் கறுப்பினத்தவர்கள் சீண்டவோ, வன்புணரவோ, காதலிக்கவோ செய்ததாலே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படும். ஆனால் பேக்கரின் கதை சொல்வது என்னவென்றால், சமூகத்தில் பொருளாதார, அரசியலில் சற்றுத் தலையைத் தூக்கும் கறுப்பினத்தவர்களே பெரும்பாலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். இது எதனால் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

கறுப்பினத்தவர்களை மனிதர்களிலும் தாழ்வானவர்கள் என்று நம்ப வைத்தால் மட்டுமே, இனப்பாகுபாட்டுச் சட்டங்களை நியாயப்படுத்த முடியும். அவர்களும் மற்றவர்களைப் போலச் சட்டத்தை மதித்து, பொருளாதார ரீதியாக முன்னேறி, நாகரீகமாகக் கல்வி கற்க முடியும் என்பது இந்தச் சட்டங்களைக் கேலிக்குரியதாக ஆக்கிவிடும். எனவே அத்தகைய உதாரணங்கள் இல்லாமல், அப்படி இருக்க முயற்சி செய்தால் என்னவாகும் என்பதைக் காட்டவே இந்தக் கொலைகள் தொடர்ச்சியாகத் தேவைப்பட்டன.

இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடந்தாலும், அவற்றை மிகவும் மெதுவாகவே மாற்ற முடிந்தது. 1965ஆம் ஆண்டு வரை இந்தச் சட்டங்கள் தென் மாநிலங்களில் இருந்தன. அவை கொண்டு வந்த வன்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *