பெரும்பாலான உரிமைப் போராட்டங்கள் ‘அவர் ரயிலில் ஏறினார்’ என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. காந்தியின் சத்திய சோதனையின் ஆரம்பம், ஒரு சிறிய ரயில் நிலையத்தில் ஆரம்பித்தது. அதுபோலவே கறுப்பினத்தவர்களின் உரிமைக்கான போராட்டமும் ரயில் நிலையத்தில்தான் தொடங்கியது.
அமெரிக்காவின் ஐரோப்பிய நகரம் என்றால் அது நியூ ஆர்லியன்ஸ் நகரம்தான். லூசியானா மாநிலத்தின் தலைநகரான இந்த நகரம் முதலில் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர், ஸ்பெயின் நாட்டின் ஆட்சியின் கீழ் சிறிது காலம் இருந்தது. அதற்குப் பின் தாமஸ் ஜெபர்சன் லூசியானா மாகாணத்தை வாங்கியபோது, அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஆனது. எனவே இந்த நகரில் கறுப்பினத்தவர்கள், ஐரோப்பியர்கள், கிரியோல் எனப்படும் ஐரோப்பிய-கறுப்பின கலப்பினத்தவர்கள், வெள்ளையர்கள் என்று பலவித மக்களும் வாழ்ந்து வந்தனர். அது மட்டுமல்லாது, நியூ ஆர்லியன்ஸ் பெரும் வர்த்தக நகரமும் ஆகும். மெக்ஸிகோ வளைகுடாவின் பெரும் துறைமுகமும் இங்குதான் இருக்கிறது. இந்நகரம் மிஸ்ஸிஸிப்பி நதியின் கழிமுகத்தில் அமைந்திருப்பதால், அமெரிக்க நாட்டின் உட்பகுதிகளில் இருந்து நதி வழிப் போக்குவரத்தில் கொண்டு வரப்படும் பொருட்களின் இறுதி இலக்காகவும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நாட்டின் உட்பகுதிக்குக் கொண்டு செல்லும் பாதையின் ஆரம்பமாகவும் இந்த நகரமே இருந்தது.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, போர் முடிவதற்கு இரண்டு வருடங்கள் முன்பே லூசியானா ஒன்றிய படைகளால் கைப்பற்றப்பட்டுவிட்டது. லிங்கன் லூசியானாவை இரண்டு இனங்களின் ‘பரிசோதனைச் சாலை’ என்று விவரித்தார். லூசியானா மாநிலத்திலேயே முதலில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்கு, அரசியல் அதிகாரம், புதிய சட்டச் சாசனம், இரண்டு இனங்களும் சேர்ந்து இயங்கும் சபைகள் என அனைத்தும் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. எனவே மற்ற தென் மாநிலங்களை விட லூசியானா கறுப்பினத்தவர்களை வேறு விதமாக நடத்தும் என்று நம்பப்பட்டது.
ஆனால், மறுகட்டமைப்பு நாட்கள் முடிவுக்கு வந்தவுடன், லூசியானாவும் தன்னுடைய பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. மெதுவாக வெள்ளையர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், மற்ற தென் மாநிலங்களைப்போல லூசியானாவிலும் நிறவெறி தலைவிரித்து ஆட ஆரம்பித்தது.
அதன் உச்சகட்டமாக 1890ஆம் ஆண்டுத் தனிப் போக்குவரத்துச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அனைத்துப் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து வண்டிகளிலும் வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் தனித்தனியே இடம் ஒதுக்க வேண்டும். ரயில் வண்டிகளில் தனித்தனிப் பெட்டிகள் இருக்கவேண்டும் என்பது போன்ற விதிகள் இருந்தன. ஆனால், தனித்தனியே இடமும் பெட்டிகளும் இருந்தாலும், வசதிகள் இரண்டிலும் சமமான அளவில் இருக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது. இந்தச் சட்டத்தைக் கேலி செய்து வரையப்பட்ட இந்தக் கேலிச்சித்திரம் உண்மையில் நிலை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

சட்டம் அமுலுக்கு வந்தவுடன், கறுப்பினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகள் எந்த வசதியும் இல்லாமல் இருந்தன. உதாரணமாக, அவர்களது சாமான்களை வைப்பதற்கு வெள்ளையர்களின் பெட்டியில் இருப்பதைப்போல மேல் பாகத்தில் வசதி இல்லை. கால்களுக்கிடையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். கழிவறைச் சிறியதாக இருந்தது. பொதுவாக, கறுப்பினத்தவர்களுக்கு அவர்களது தாழ்ந்த நிலையைத் தொடர்ந்து நினைவூட்டும் விதமாகவே இந்தப் பிரிவினைகள் இருந்தன.
0
இந்தச் சூழலில்தான் நாம் இரண்டு கறுப்பின நபர்களைப் பற்றி அறிய இருக்கிறோம்.
ஒருவர் ஹோமர் பிளஸி. இவர், நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசித்து வந்த பல ஆயிரக்கணக்கான கறுப்பினத்தவர்களின் ஒருவர். நகரில் காலணிகள் செய்து, விற்றுக் கொண்டிருந்தார். ஜூன் 7, 1892ஆம் ஆண்டு அவருக்குச் சாதாரண நாளாகத்தான் விடிந்தது. அன்று மாலை 4.15க்குக் கிழக்கு லூசியானாவுக்குச் செல்லும் ரயிலைப் பிடிக்க வேண்டியிருந்ததால், மதியமாக அவர் பிரஸ் தெரு ரயில் நிலையத்தை வந்தடைந்தார். முதலாம் வகுப்புப் பயணசீட்டைப் பெற்றுக் கொண்ட அவர், நிலையத்தின் உள்ளே சென்று ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்று அறிவிப்புப் பலகை வைத்திருந்த பெட்டியில் ஏறி அமர்ந்துவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த பயணச்சீட்டுப் பரிசோதகர், பிளஸியைப் பார்த்து ‘நீ கறுப்பனா?’ என்று கேட்டார். சட்டத்தின்படி, அவர் எல்லோரிடமும் அப்படித்தான் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் கேள்விக்குப் பின்னர் இன்னொரு பிரச்சினையும் இருந்தது. ‘ஒரு சொட்டு விதி’ என்பதுதான் அது.
அதாவது ஒருவரின் மூதாதையர்களில் யாரேனும் ஒருவர் கறுப்பராக இருந்தாலும், அவரைக் கறுப்பினத்தவராகவே கருத வேண்டும் என்பதுதான் அது. பிளஸியின் விஷயத்தில், அவர் எட்டில் ஒரு பங்கு கறுப்பினத்தவர். அதாவது, அவரது தாய், தந்தையின் எட்டுத் தாத்தா, பாட்டிகளில் ஒருவர் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். மூன்று தலைமுறைகளுக்கு முன்பு ஒரு மூதாதையர் கறுப்பினத்தவராக இருந்திருந்தாலும், தோலின் நிறம் மூன்று தலைமுறைகளில் மீண்டும் கிட்டத்தட்ட வெள்ளையை நெருங்கிவிடும். நியூ ஆர்லியன்சில் இத்தகைய கலப்பினத்தவர் அதிகம் என்பதால் பயணசீட்டு பரிசோதகர் ஒவ்வொருவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது.
(இதைப் பகடி செய்து மார்க் ட்வைன் ஒரு கதையை எழுதியிருக்கிறார் – ‘The Tragedy of Pudd’nhead Wilson’)
பிளஸி, ‘ஆம்’ என்று பதில் சொன்னார். உடனே, அவரைப் பரிசோதகர் இறங்க சொல்லவே, பிளஸி மறுத்துவிட்டார். அங்கிருந்த ரயில் நிலையக் காவலர்கள் வந்து அவரை அப்புறப்படுத்தினார்கள். அவர் மீது வழக்கும் பதியப்பட்டது.
ஆனால், பிளசி தனியாளாக எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை. அவருக்குப் பின்னே நியூ ஆர்லியன்ஸ் நகரின் முன்னணி வழக்கறிஞர்களுள் ஒருவரான ஆல்பியன் டௌர்கீயும், இன்னமும் 18 சமூகச் செயற்பாட்டாளர்களும் இருந்தார்கள். அவர்களது நோக்கம், வழக்கை ஒன்றிய உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று பதினான்காவது சட்டத் திருத்தம் சொல்வதால், லூசியானாவின் தனிப்போக்குவரத்துச் சட்டம் செல்லாது என்று நிரூபிப்பதே ஆகும். அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும்பட்சத்தில், அது தென் மாநிலங்கள் அனைத்திலும் இருக்கும் நிறவெறி ‘ஜிம் கிரோ’ சட்டங்களைச் செல்லாதததாக்கிவிடும் என்பது அவர்களது எண்ணம்.
0
இங்கே இன்னுமொரு ரயில் போராட்டத்தையும் பார்த்து விடுவோம். ஐடா வெல்ஸ் என்ற பெண் 1862ஆம் வருடம் ஒரு அடிமைத் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். லிங்கனின் விடுதலைப் பிரகடனத்துக்குப் பின்னர் விடுதலை பெற்றவர்களில் ஒருத்தி. மறுகட்டமைப்பு நாட்களில் வளர்ந்த ஐடா, மிகவும் சுதந்திரமாகச் சிந்திப்பவராகவும், அரசியல் விவகாரங்களில் மிகுந்த உறுதியான கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்தார்.
சிறிது படித்திருந்த அவருக்கு, ஒரு கறுப்பினத்தவர்களுக்கான ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக வேலை கிடைத்தது. ஆனாலும் அவருக்குப் படிப்பில் ஆர்வம் குறையவில்லை. மேலும் படிக்க விரும்பினார். அவரது இளைய சகோதர, சகோதரிகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அவரிடம் இருந்தது. எனவே டென்னிசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் ஆசிரியையாக வேலை கிடைத்தவுடன், அங்கே சென்றார்.
அங்கு அவர் சென்றதற்கான காரணங்களில் முக்கியமானது, மெம்பிஸ் நகரில் இருந்த கறுப்பினத்தவர்களுக்கான லெமோயன்-ஓவன் கல்லூரியும், அருகில் நாஷ்வில்லில் இருந்த பிஸ் கல்லூரியும்தான். பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடும் நாட்களில், ஐடா அந்தக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.
1883ஆம் வருடம் ஒன்றிய உச்சநீதிமன்றம், 1875ஆம் வருடத்திய பொது உரிமைகள் சட்டம் செல்லாது என்று அறிவித்திருந்தது. இனப்பாகுபாடு காட்டுவதைக் குற்றமாக்கிய அந்தச் சட்டம் செல்லாது என்பதால், ரயில் நிறுவனங்கள் தங்களது ரயில்களில் வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் தனித்தனி வசதிகள் செய்து கொடுக்க ஆரம்பித்திருந்தன. சில ரயில்களில் பரிசோதகரின் வார்த்தையே இறுதியாகக் கருதப்பட்டது.
செப்டம்பர் 15, 1883ஆம் வருடம் எப்போதும் போலத் தன்னுடைய பள்ளிக்குச் செல்வதற்காக ஐடா, ரயிலில் ஏறினார். எப்போதும் போல அன்றும் முதல் வகுப்புப் பயணச் சீட்டை எடுத்திருந்தார். அந்த ரயிலில் கறுப்பின பெண்களுக்குத் தனிப் பெட்டி ஒன்று இருந்தாலும், அங்கே வெள்ளையன் ஒருவன் குடித்துவிட்டு கிடந்ததால், ஐடா வெள்ளைப் பெண்களுக்கான பெட்டியில் ஏறிவிட்டார்.
பயணசீட்டுப் பரிசோதகர் ஐடாவை உடனடியாக இறங்க சொல்லவே, ஐடா விளக்க முற்பட்டார். பரிசோதகர் ஐடாவின் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயலவே, ஐடா அவரது கையைக் கடித்துவிட்டார். இன்னமும் இரண்டு பணியாளர்கள் வந்து, ஐடாவைப் பெட்டியில் இருந்து இழுத்துச் சென்று வெளியேற்றினர்.
ஐடாவும் ரயில் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார். கீழ் நீதிமன்றத்தில் அவருக்கு வெற்றிக் கிடைத்தது. நிறுவனம் 500 டாலர் தொகையை ஐடாவிற்குக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பானது. ஆனால், டென்னிசி உயர்நீதிமன்றம் தீர்ப்பை மாற்றியது. ஐடா ஏமாற்றத்திற்கு உள்ளானர்.
தீர்ப்பு வந்த அன்று, அவரது நாட்குறிப்பில் கீழ்க் கண்டவாறு எழுதினார்.
‘என்னுடைய வழக்கின் மூலம் என் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நினைத்தேன். ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. சட்டம் எங்கள் பக்கம் இருக்கிறது என்று முதலில் இருந்து உறுதியாக நம்பினேன். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பினேன். அந்த நம்பிக்கை உடைந்துவிட்டது. மிகவும் வருத்தமாக இருக்கிறேன். என்னால் முடியுமென்றால், என் மக்களை ஒன்றாக அணைத்து, இங்கிருந்து அவர்களுடன் பறந்து சென்றுவிடுவேன். கடவுளே, எங்கள் குறைகள் தீர்க்கப்படாதா? எங்களுக்கு இந்த மண்ணில் நீதி, அமைதி எதுவும் இல்லையா?’
இப்படி கண்ணீர் வடித்த ஜடாவை நாம் மீண்டும் சந்திக்க இருக்கிறோம். முன்னிலும் தீவிரமான போராளியாக. இப்போது மீண்டும் பிளஸிக்குச் செல்லலாம்.

பிளஸியின் வழக்குக் கீழ் நீதிமன்றங்களைக் கடந்து, ஒன்றிய உச்சநீதிமன்றத்தைச் சென்றடைய நான்கு வருடங்கள் ஆனது. உச்சநீதிமன்றம் வழக்கைக் கேட்டு முடித்த பின்னர், தீர்ப்பை வழங்கியது.
அதில், பதினான்காம் சட்டத்திருத்தம் குறிப்பிடுவது அரசியல் சமன்பாட்டைத்தான் , சமூகச் சமன்பாட்டை இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.
அவ்வாறு சொல்வதன்மூலம் சமூகத்தில் கருப்பினத்தவர்கள் சமமாக நடத்தப்படுவது தங்களது கைகளில் இல்லை என்று மொத்தமாகக் கைகழுவியது. சமமான அளவிற்கு வசதிகள் இருந்தால், கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் தனித்தனியே போக்குவரத்தும் பள்ளிகளும், இன்னபிற சேவைகளையும் மாநிலங்கள் செய்வது அவர்களது விருப்பம் என்றும், மாநில உரிமைகளில் தாங்கள் தலையிட முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
எட்டு நீதிபதிகள் கொண்ட குழுவில் ஒருவர் மட்டுமே மாற்றுக் கருத்தை தெரிவித்தார். ‘சட்டம் நிறபேதம் பார்க்க கூடாது’ என்று அவர் எழுதினார். ஆனால் மற்ற 7 நீதிபதிகளும் எதிராக இருந்த நிலையில், பிளஸியைக் குற்றவாளி என்று அறிவித்தது.
பிளஸி தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு, 25 டாலர் அபராதத்தைக் கட்டிவிட்டார். தென் மாநிலங்களின் ‘ஜிம் கிரோ’ சட்டங்களுக்கு ஒன்றிய உச்சநீதி மன்றமும் தன்னுடைய ஆசியை வழங்கிவிட்டது.
ஆனால், கறுப்பினத்தவர்களின் உரிமை போராட்டத்தின் இந்த முதல் அடிகள் அப்படியே நின்றுவிடவில்லை. இதன் பின்னரான நாட்களில் இன்னமும் தீவிரமாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த முதல் அடிகள்தான் அவர்கள் வெற்றியை அடைய வழிக் காட்டியது.
அடுத்த 60க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பல்வேறு விதமான சட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. கறுப்பினத்தவர்கள் – முதலில் தனியாகவும், பின்னர் இணைந்து உருவாக்கிய இயக்கங்களின் துணையுடனும் – நீதிமன்றங்களின் கதவைத் தொடர்ச்சியாகத் தட்டிக் கொண்டே இருந்தார்கள்.
(தொடரும்)