Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #15 – பெரும் குடிப்பெயர்வு

கறுப்பு அமெரிக்கா #15 – பெரும் குடிப்பெயர்வு

பெரும் குடிப்பெயர்வு

‘வரலாறு முழுவதும் சுதந்திரத்தை விரும்பிய மனிதர்கள் என்ன செய்தார்களோ, அதையே அவர்களும் செய்தார்கள். அங்கிருந்து வெளியேறினார்கள்’ – இசபெல் வில்கெர்சன்

மார்ச் 2, 1892. மெம்பிஸ் நகரம், டென்னிசி மாநிலம். நகருக்குச் சற்று வெளியே இருந்தது ‘மக்களின் மளிகைக் கடை’. அதன் சொந்தக்காரர் தாமஸ் மோஸ் சில காலங்களுக்கு முன்புதான் கடையைத் திறந்திருந்தார். அந்தப் பகுதியில் ஏற்கெனவே ஒரு மளிகைக் கடை இருந்தாலும், மோசின் கடை சுத்தமாக இருந்ததாலும், அவர் வாடிக்கையாளர்களை நல்ல விதத்தில் நடத்தியதாலும் அவரது வியாபாரம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது.

அந்த நாளின் மதியம், இரண்டு சிறுவர்கள் கடைக்கு வெளியே கோலி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒருவன் கறுப்பு. மற்றொரு சிறுவன் வெள்ளை இனத்தவன். இருவருக்கும் விளையாட்டில் ஏதோ பிணக்கு ஏற்பட்டு, சண்டையிட ஆரம்பித்தார்கள். வெள்ளைச் சிறுவனின் தந்தையும் அங்கே இருந்ததால், அவரும் சேர்ந்து கறுப்பினச் சிறுவனை அடிக்க ஆரம்பித்தார். அப்போது மளிகை கடையில் இருந்த இரண்டு வேலையாட்கள் வெளியில் வந்து, கறுப்பினச் சிறுவனைக் காப்பாற்ற முயன்றார்கள். அவர்கள் இருவரும் கறுப்பினத்தவர்கள். மெதுவாகச் சேர்ந்த கூட்டமும் இப்போது கறுப்பு – வெள்ளை என்று பிரிந்து சண்டையிட ஆரம்பித்தது. அப்போது கடை வேலையாட்களில் ஒருவர், ஒரு வெள்ளை மனிதரின் தலையில் கட்டையால் அடித்துவிட்டார். அன்றைய சண்டை முடிவுக்கு வந்தது.

ஆனால், தலையில் அடிபட்டவர் அங்கிருந்த இன்னொரு மளிகை கடையின் சொந்தக்காரர். ஏற்கெனவே வியாபாரம் குறைந்த கோபத்தில் இருந்த அவர், இந்த முறை பழிவாங்கிவிட முடிவு செய்தார். மறுநாளே காவலர்களுடன் ‘மக்களின் மளிகைக் கடைக்கு’ வந்து மீண்டும் சண்டையை ஆரம்பித்தார். துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. அனைவரின் மீதும் வழக்குப் பதியப்பட்டது.

இதற்குள், கறுப்பினத்தவர்களின் மளிகைக் கடை ஒன்றில் வெள்ளையர்கள் தாக்கப்பட்டதாக நகரில் செய்தி பரவியது. அந்தப் பகுதியில் இருக்கும் கறுப்பினத்தவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று வெள்ளையர்களிடையே பேச்சு ஆரம்பித்தது. மார்ச் 5ஆம் தேதி, மோசின் கடை வேலையாட்களைக் கைது செய்ய ஆறு காவலர்கள் வந்தார்கள். அவர்களுக்கும், கடையில் இருந்த கறுப்பினத்தவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இரண்டு காவலர்கள் குண்டடிபட்டார்கள். தாமஸ் மோஸ் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

சிறைச்சாலைக்கு வெளியே வெள்ளையர்கள் குழும ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு நீதிபதி டுபோஸ் தலைமைத் தாங்கினார். தாமஸ் மோசின் வக்கீல்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று பதிந்த வழக்குகளை எல்லாம் அவரே தள்ளுபடி செய்தார். பெரும் கூட்டமாகக் கூடியவுடன், சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன (அல்லது, திறக்கப்பட்டனவா என்று தெரியவில்லை). தாமஸ் மோஸும் அவரது கடை வேலையாட்கள் இருவரும் வெளியே இழுத்து வரப்பட்டார்கள். பிறகு அங்கிருந்து ஊர்வலமாக ரயில் நிலைய யார்டுக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே அவர்கள் ஒவ்வொருவராகச் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களது விரல்கள் ஒவ்வொன்றாகச் சுட்டுத் தள்ளப்பட்டன. அதன் பின்னர் அவர்களது கண்கள், கால்கள், கழுத்து என்று அவர்களை முழுவதுமாகச் சாகாமல் உயிருடன் வைத்திருக்கும் அளவுக்கு ‘அங்குலம், அங்குலமாக’ சுடப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். இறுதியாகத் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவை அனைத்துக்கும் தலைமை ஏற்று நடத்திய நீதிபதி, அங்கிருந்து 100 வெள்ளையர்களைத் துப்பாக்கிகளுடன் மளிகைக் கடை இருந்த இடத்துக்கு அனுப்பி, அங்கே எந்தக் கறுப்பினத்தவர் தெரிந்தாலும் சுட்டுக் கொல்லும்படியாக உத்தரவிட்டார். அங்கே எத்தனை கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டார்கள், எவ்வளவு பேர் காயமடைந்தார்கள் என்று தெரியவில்லை. அங்கே ஏற்கெனவே மளிகை கடை வைத்திருந்த வெள்ளையர், ‘மக்களின் மளிகைக் கடையை’ எட்டில் ஒரு பங்கு விலைக்கு எடுத்துக் கொண்டார்.

தாமஸ் மோஸ் சித்திரவதைக்கு ஆளானபோது பேசிய சொற்கள் கறுப்பினத்தவர்களிடையே வெகுவாகப் பரவியது.

“என் மக்களை மேற்கு நோக்கி போகச் சொல்லுங்கள் – அவர்களுக்கு இங்கே நீதி கிடைக்காது.”

அமெரிக்க இந்தியர்களுடனான போர் முடிந்து அமெரிக்க மேற்குப் பகுதிகள் அப்போதுதான் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும், மாநிலங்களிலும் நிலம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. வடமாநிலங்களில் நிறவெறி இருந்தாலும், தென் மாநிலங்கள் அளவுக்கு இல்லை. இன்னமும் தங்களைக் கூண்டுக்குள் அடைத்ததுபோல வைத்திருக்கும் தென் மாநிலங்களில் இருப்பதைவிட அங்கு எங்காவது சென்று விடலாம் என்பதுதான் அவரது கடைசி வார்த்தைகளின் அர்த்தம்.

ஐடா வெல்ஸ் அப்போது மெம்பிஸ் நகரில்தான் இருந்தார். தாமஸ் மோஸ் அவரது நண்பர்களில் ஒருவர். அவருக்கு நேர்ந்த அநீதியும், அதே நிலை தங்களில் யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம் என்பதும் அவருக்கு மிகுந்த கோபத்தை அளித்தது. தன்னுடைய ஆசிரியை வேலையை விட்டுவிட்டு அவர் ‘பிரீ ஸ்பீச்’ (Free Speech) என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். தாமஸ் மோசின் கொலைக்குப் பின்னர் எழுதிய தலையங்கத்தில் அவரது இறுதி வார்த்தைகளைப் பதிப்பித்து, கறுப்பினத்தவர்கள் மெம்பிசில் இருந்து வெளியேறி மேற்கே சென்று விடவேண்டும் என்று எழுதினார். கொலைக்கு அடுத்ததான நாட்களில் கிட்டத்தட்ட 6000 கறுப்பினத்தவர்கள் நகரில் இருந்து வெளியேறியதாகத் தெரிகிறது. அப்போதிருந்து ஐடா வெல்ஸ் தொடர்ச்சியாகத் தென் மாநிலங்களில் இருந்து கறுப்பினத்தவர்கள் வெளியேறுவதன் அவசியத்தை எழுத ஆரம்பித்தார். அத்தோடு, வெள்ளையர்கள் இப்படியாகக் கொலை செய்வதை எதிர்த்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

ஐடா வெல்ஸ்
ஐடா வெல்ஸ்

ஆனால், ஐடா வெல்ஸ் மட்டுமே கறுப்பினத்தவர்களை வடக்கிற்கும், மேற்கிற்கும் செல்ல ஊக்குவிக்கவில்லை. பல்வேறு ரயில் நிறுவனங்களில் கறுப்பினத்தவர்கள் பாரம் சுமப்பவர்களாகவும், சுத்தம் செய்பவர்களாகவும் வேலை செய்ததால், அவர்களுக்குப் பல இடங்களுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கிருந்த நிலைமையை அவர்கள் தென் மாநிலங்களுக்குச் செல்லும்போது, அங்கிருந்த கறுப்பினத்தவர்களிடம் தெரிவித்தார்கள். இதுவும் அவர்களுக்குத் தென் மாநிலங்களில் இருந்து வெளியேற ஊக்கத்தைக் கொடுத்தது.

ஆனால், வெளியேறுவது என்பது எளிதாக இல்லை. முதலில், தொலைதூர இடங்களுக்குச் செல்வதற்குப் பணம் தேவைப்பட்டது. கறுப்பினத்தவர்களை ஏற்றிச் செல்லும் வண்டிகள் தேவைப்பட்டன. இவை எல்லாவற்றையும்விட, செல்லும் இடத்தில் அவர்களுக்கு வேலை தேவைப்பட்டது. இவற்றில் எதுவும் எளிதாக இல்லை என்றாலும், மெதுவாக இந்தக் குடிபெயர்வு நடக்க ஆரம்பித்தது.

வடமாநிலங்களில் இருந்த கறுப்பினத்தவர்களும், அவர்களது திருச்சபைகளும் இப்படியாகக் குடிப்பெயர்ந்து வரும் கறுப்பினத்தவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கத் தங்களுக்குள் நிதி வசூல் செய்தனர். சிகாகோ நகரில் இருந்த ஒரே கறுப்பினத்தவர்கள் நாளிதழான ‘சிகாகோ டிபெண்டெர்’ இந்த முயற்சிகளை முன்னெடுத்தது. இப்படியே பல வடமாநில நகரங்களிலும் தனிப்பட்டவர்களும், நிறுவனங்களுமாக உதவி செய்து வந்தன.

இதனாலேயே எழுத்தாளர் இசபெல் வில்கெர்சன் இந்தக் குடிப்பெயர்வை இன்று நாம் பார்க்கும் அகதிகள் நிலையோடு ஒப்பிடுகிறார். சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்டவர்கள் இவர்கள் என்கிறார். மேலும் அவர் சொல்வது: ‘சொந்த நாட்டின் கடைசிக் கோடி வரை அவர்கள் பயணம் செய்தார்கள். சில நேரங்களில் நாட்டின் எல்லைக்கே சென்றார்கள். எனவேதான் இந்தப் பெரும் குடிப்பெயர்வு, பஞ்சம், போர், இனப்படுகொலை போன்றவற்றின் காரணத்தால் அகதிகளாக வெளியேறுவதோடு ஒத்திருக்கிறது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் டார்பர் (Darfur), பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐயர்லாந்து நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படிப் பெரும் தூரத்தைக் கடந்து, நதிகள், கடல்கள், பாலைவனங்களைக் கடந்து, எங்கோ ஓரிடத்தில் அவர்களது வாழ்வு நன்றாக இருக்கும் என்று நம்பி செல்கிறார்களோ அதைப் போலவே இவர்களும் சென்றார்கள்.’

1920ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இந்த முதல் குடிப்பெயர்வில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் தென் மாநிலங்களில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், இதுவும் வெள்ளையர்களுக்கு உவப்பானதாக இல்லை.

கறுப்பினத்தவர்கள் மொத்தமாக வெளியேறுவது வெள்ளையர்களையும் பாதித்தது. முதலாவதாக வணிகம் குறைந்தது. இரண்டாவதாக அவர்களுக்குக் கிடைத்து வந்த மலிவான உழைப்பாளர்கள் திடீரென்று மறைந்துவிட்டதால், லாபம் குறைந்தது. எனவே, கறுப்பினத்தவர்களை வண்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் தாக்குவது ஆரம்பித்தது. அதாவது கறுப்பினத்தவர்கள் அங்கேயே இருந்தாலும் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். வெளியேற முயன்றாலும் அதுவே நடக்க ஆரம்பித்தது. கறுப்பினத்தவர்களின் வாழ்வின் கொடுமை இப்படியாகத்தான் இருந்தது.

ஆனாலும் தொடர்ந்து தென் மாநிலங்களில் இருந்து குடிப்பெயர்வு நடந்து கொண்டுதான் இருந்தது. வடமாநிலங்களின் பெரும் நகரங்களை எல்லாம் அவர்கள் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். சிகாகோ, டெட்ராய்ட், நியூ யார்க், பிட்ஸ்பர்க் முதலிய நகரங்களில் கறுப்பினத்தவர்கள் புதிய வாழ்வை ஆரம்பித்தார்கள். கலிபோர்னியா மாநிலம் மட்டுமல்ல, அலாஸ்கா மாநிலம் வரைகூடக் கறுப்பினத்தவர்கள் குடிபெயர்ந்தார்கள்.

1890களில் கறுப்பினத்தவர்கள் 90 சதவிகிதம் தென் மாநிலங்களில் வாழ்ந்து வந்தார்கள். 1920களில் இது 52 சதவிகிதமாகக் குறைந்தது. இது தென் மாநில முதலாளிகளுக்குச் சிரமத்தைக் கொடுத்தாலும், குடிபெயர்ந்த கறுப்பினத்தவர்களுக்குப் பல வாய்ப்புகளைத் திறந்து விட்டது.

0

புக்கர், வாஷிங்டன் அடிமைகளின் குடும்பத்தில் பிறந்தவர். மறுகட்டமைப்புக் காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கல்லூரி படிப்பை முடித்தார். மிகச் சிறந்த ஆசிரியராகவும், கல்வியாளராகவும் இருந்த அவர், அலபாமா மாநிலத்தில் இருந்த கறுப்பினத்தவர்களின் பல்கலைக்கழகமான டஸ்ககீ பல்கலைக்கழகத்தின் தலைவரானார். 1890களில் இருந்து 1915ம் வருடம் அவர் இறக்கும் வரை கறுப்பினத்தவர்களின் குரலாகவே பார்க்கப்பட்டார். அவர் ஆரம்பித்த தேசிய கறுப்பினத்தவர்கள் வணிகச் சங்கத்தின் மூலமாகப் பல கறுப்பினத்தவர்களையும் வணிகம் செய்ய ஊக்குவித்தார். சொந்தமாகத் தொழில் செய்வதன் மூலமாகவே கறுப்பினத்தவர்கள் முன்னேற முடியும் என்று நம்பினார்.

தியோடர் ரூஸ்வெல்ட் குடியரசுத் தலைவராக இருந்தபோது, அவரை இரவு விருந்துக்கு அழைத்து உபசரித்தது, அவர் கறுப்பினத்தவர்களின் தலைவராகக் கருதப்பட்டதைக் காட்டியது.

1895ஆம் வருடம் பருத்தி பற்றிய உலகளாவிய கருத்தரங்கில் அவரும் தென் மாநிலங்களின் சார்பாகப் பேசினார். அன்றைய பேச்சில் அவர் கறுப்பினத்தவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும் என்றும், அங்கிருக்கும் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போக வேண்டும் என்றும் பேசினார். மேலும், கறுப்பினத்தவர்கள் தொழிற்கல்வியில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், மாறாகச் சமமாக நடத்த வேண்டும், ஒன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசக்கூடாது என்றும் பேசினார்.

‘அட்லாண்டா சமரசம்’ என்று அழைக்கப்படும் அந்தப் பேச்சு, வெள்ளையர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மற்ற கறுப்பினத் தலைவர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் கொடுத்தது. புக்கர் வாஷிங்டனின் பேச்சு அப்போது ஆரம்பித்திருந்த குடிப்பெயர்வை நிறுத்தும் நோக்கத்துடன் கொடுக்கப்பட்டது. அவரும் கறுப்பினத்தவராக இருந்தாலும் தென் மாநிலங்களில் இருந்த கறுப்பினத்தவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளவில்லை என்றே எண்ண வேண்டும்.

0

அநீதியான கொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்த ஐடா வெல்ஸ், தாமஸ் மோசின் கொலை நடந்த இரண்டு மாதங்களில், வெள்ளைப் பெண் ஒருத்தியை வன்புணர்வு செய்ததாக மற்றொரு கறுப்பு இளைஞன் வெள்ளையர்கள் வெறிக்கும்பலால் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராகத் தன்னுடைய பத்திரிகையில் தலையங்கம் எழுதினார். ‘எட்டுக் கறுப்பு இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்’ என்ற தலைப்பில் அவர், ‘வெள்ளையர்களைக் கொன்றதாக மூவரும், வெள்ளைப் பெண்களை வன்புணர்ந்ததாக ஐவரும் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் மாநில வெள்ளை ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களது பெண்களின் ஒழுக்கத்தின் மீது வேறுவிதமான முடிவு எட்டப்பட்டுவிடும்’ என்று எழுதினார். அந்தத் தலையங்கம் பதிப்பிக்கப்பட்ட நாளில், அவர் நியூ யார்க் நகரில் ஒரு கூட்டத்தில் இருந்தார்.

வெள்ளைப் பெண்களின் சம்மதத்துடனேயே கறுப்பினத்தவர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற தொனியில் எழுதப்பட்டிருந்த அந்தத் தலையங்கத்தால், மெம்பிஸ் நகரம் மீண்டும் பற்றி எரிந்தது. ஐடா வெல்ஸைk கொலை செய்ய வந்த வெள்ளையர் கூட்டம், அவரது பத்திரிகை அலுவலகத்தை எரித்து மகிழ்ந்தது. தினமும் மெம்பிஸ் நகர ரயில் நிலையத்தில் ஐடா வெல்ஸின் வருகையை எதிர்பார்த்து ஒரு கூட்டம் காத்திருந்தது.

அப்போது முதல், ஐடா மெம்பிசிற்குத் திரும்பவில்லை. மாறாக அன்று முதல் நடந்து கொண்டிருக்கும் கும்பல் கொலைகளைப் பற்றி ஆய்வு செய்து, அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதைத் தன்னுடைய நோக்கமாகக் கொண்டார். அவற்றின் அநீதியை எடுத்துக் கூறுவதன் மூலம், எப்படியாவது இந்தக் கொலைகளை நிறுத்திவிட முயன்றார்.

0

நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியையான டோனி மோரிசனின் தந்தை, பெரும் குடிப்பெயர்வின்போது ஜார்ஜியா மாநிலத்தில் இருந்து இப்படியாக ஓஹியோ மாநிலத்துக்கு வந்தவர். அங்கிருந்த இரும்பு எக்குத் தொழிற்சாலையில் வேலை செய்தவர். ஜார்ஜியாவில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்களைப் பார்த்ததாலேயே அங்கிருந்து சென்றார் என்றும் கூறியிருக்கிறார்.

டோனி மோரிசன் தன்னுடைய பள்ளி நாட்களில் புத்தகங்களை மிகவும் விரும்பியவர். தன்னுடைய தந்தை ஜார்ஜியாவில் இருந்து வரவில்லை என்றால், தன்னால் எந்த நூலகத்துக்குள்ளும் சென்றிருக்க முடியாது என்று ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார்.

ஆனால், அப்படியாகக் குடிப்பெயர முடியாமல் எத்தனை டோனி மோரிசன்கள் பருத்தித் தோட்டங்களில் தேய்ந்து போனார்களோ!

0

பெஞ்சமின் மான்ட்கமரி அடிமையாகப் பிறந்தவர். மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் இருந்த தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மாநில கூட்டமைப்பின் குடியரசுத் தலைவராக இருந்த ஜெபர்சன் டேவிஸின் சகோதரர் ஜோசப் டேவிஸின் தோட்டம் அது. பெஞ்சமின் பல விதங்களிலும் திறமை வாய்ந்தவராக இருந்தார். அவரையே தோட்ட மேற்பார்வையாளராக டேவிஸ் வைத்திருந்தார். 1862இல் போரின் காரணமாக டேவிஸ் அங்கிருந்து வெளியேறியபோதும், பெஞ்சமினிடம் தோட்டத்தை ஒப்படைத்துவிட்டு சென்றார். போர் முடிந்த பின்னர், நீண்ட காலக் கடனின் பேரில் தோட்டத்தைப் பெஞ்சமினிடமே விற்றுவிட்டார். அடிமையாக இருந்த தோட்டத்தின் முதலாளியாகப் பெஞ்சமின் மாறினார். ஆனால், அவரது நீண்ட நாள் கனவு கறுப்பினத்தவர்களுக்கெனத் தனியே ஒரு நகரை நிர்மாணிக்க வேண்டும் என்பது. அவரது காலத்தில் அது நிறைவேறாமல் இருந்தது.

அவரது மகன் ஐசையா தந்தையின் கனவை நிறைவேற்றினார். மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் பெருமளவில் இடங்களை வாங்கி, அங்கே கறுப்பினத்தவர்களை மட்டும் குடியேற்றினார். மௌன்ட் பயூ (Mound Bayou) என்ற அந்தச் சிறு நகரம் 1887ஆம் ஆண்டு உருவானது. 1890இல் நடந்த மிஸ்ஸிஸிப்பிச் சட்டசாசன மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஐசையா மட்டுமே கறுப்பினத்தவர்.

மௌன்ட் பயூ, தென் மாநிலங்களின் நிறவெறியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெளியேறிக் கொண்டிருந்த கறுப்பினத்தவர்களுக்கு ஒரு புகலிடமாக இருந்தது. கறுப்பினத்தவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்ததால், அங்கு அவர்கள் எந்தப் பயமும் இன்றி, தங்களது தொழில்களைச் செய்து வாழ முடிந்தது.

ஆனால், இதுவும் மிஸ்ஸிஸிப்பி மாநில வெள்ளையர்களின் தயவிலேயே நடந்தது. சட்டசாசன மாநாட்டில் ஐசையா, தன்னுடைய நகரைக் காத்துக்கொள்ள, கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை மறுக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், பின்னாளில் புக்கர் வாஷிங்டன், கறுப்பினத்தவர்கள் தாங்களாகவே வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மௌன்ட் பயூ இருப்பதாகத் தெரிவித்தார்.

0

லாங்ஸ்டன் ஹயூஸ் (Langston Hughes) மிகவும் புகழ்பெற்ற கறுப்பின கவிஞர். அவரது ‘ஒரு வழிப் பயணசீட்டு’ என்ற கவிதையோடு இந்த அத்தியாயத்தை முடிக்கலாம்.

‘வாழ்வைப் பொறுக்கிக்கொண்டு
என் வழியே செல்கிறேன்.
சிகாகோ, டெட்ராய்ட்,
பஃபலோ, ஸ்க்ராண்டன்
எனத் தெற்கைத் தவிர
எங்காவது வடக்கிலும் கிழக்கிலும்
கீழே வைக்கிறேன்.

வாழ்வைப் பொறுக்கிக்கொண்டு
ரயிலில் செல்கிறேன்.
லாஸ் ஏஞ்சல்ஸ், பேக்கர்ஸ்பீல்ட்,
சியாட்டில், ஓக்லாண்ட், சால்ட் லேக்
எனத் தெற்கைத் தவிர
எங்காவது வடக்கிலும் மேற்கிலும்
கீழே வைக்கிறேன்.

ஜிம் கிரோச் சட்டங்கள் எனக்குச்
சலிப்பை தருகின்றன.
கொடூரமான, கோழையான
மக்கள்,
கொலை செய்து ஓடுபவர்கள்,
என்னைக் கண்டு பயப்படுகிறார்கள்.
நான் அவர்களைக் கண்டு பயப்படுகிறேன்.

வாழ்வைப் பொறுக்கிக்கொண்டு
என் வழியே செல்கிறேன்.
ஒருவழி பயணச்சீட்டில்
வடக்கே,
மேற்கே
சென்றே விட்டேன்!’

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *