Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #16 – கொத்தடிமைகள்

கறுப்பு அமெரிக்கா #16 – கொத்தடிமைகள்

கடன் கொத்தடிமைகள்

குடியரசுத் தலைவருக்கு.

என்னுடைய சகோதரனுக்கு 14 வயதாகிறது. இங்கே ஒரு கறுப்பினத்தவர் வந்து, அவனை வேலைக்கு அழைத்துச் செல்வதாகவும், நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், மாதம் எனக்கு 5 டாலர்கள் கொடுப்பதாகவும் கூறி அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அவரை நான் பார்க்கவில்லை. அவர் சென்று மக்ரீயிடம் விற்று விட்டார். அவனை 12 மாதங்களாகச் சிறையில் வைத்து வேலை வாங்குகிறார்கள். என்னுடன் அனுப்புமாறு கேட்டுப் பார்த்தேன். அவர்கள் அவனை விடவில்லை. அவனுக்குத் தாயுமில்லை, தந்தையுமில்லை. இருவரும் இறந்து விட்டார்கள்.அவனுக்கு நான் மட்டுமே தோழி – என்னிடமும் அவனைக் கொடுக்க மறுக்கிறார்கள். அவனைச் சங்கிலியில் கட்டி வைக்கும் அளவுக்கு அவன் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே என்னுடைய பாவப்பட்ட சகோதரனைத் திரும்பவும் பெறுவதற்கு நான் உங்களுக்கு எழுதுகிறேன். அவனது பெயர் ஜேம்ஸ் ராபின்சன். அவனைக் கூப்பிட்டு சென்ற மனிதனின் பெயர் டான் கால். அவர்தான் ஜார்ஜியாவில் இருக்கும் வால்டோஸ்டாவில் இருக்கும் மக்ரீயிடம் விற்றது. தயவுசெய்து எனக்குப் பதில் எழுதுங்கள்.

கேர்ரி கின்ஸி

1901ஆம் ஆண்டு. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லி கொலை செய்யப்பட்டார். அவரது துணைக் குடியரசுத் தலைவரான தியோடர் ரூஸ்வெல்ட் குடியரசுத் தலைவரானார். தியோடர் ரூஸ்வெல்ட் புதிய நூற்றாண்டின் புதிய குடியரசுத் தலைவர். முற்போக்குக் கொள்கைகளின் தலைவராகக் கருதப்பட்ட அவர், அனைத்துக் குடிமக்களும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதைத் தன்னுடைய கொள்கையாக அறிவித்தார்.

கேர்ரி கின்ஸியின் கடிதம், தியோடர் ரூல்ஸ்வெல்ட்டுக்கு அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான கடிதங்களில் ஒன்று. தென் மாநிலங்களில் இன்னமும் கறுப்பினத்தவர்கள் வாங்கவும், விற்கவும் செய்யப்படுவதைக் குறித்து எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று. இதற்குக் குடியரசுத் தலைவர் பதில் எழுதவில்லை. இது போன்ற எந்தக் கடிதத்துக்கும் தியோடர் ரூஸ்வெல்ட் பதில் எழுதியதாகத் தெரியவில்லை.

0

1901 ஆண்டின் ஒரு நாள். ஜோனதன் டேவிஸின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் அவரது பெற்றோரின் வீட்டில் இருந்தார். அவருக்கு ஜார்ஜியாவில் சிறிய அளவில் நிலம் இருந்தது. அதில் பருத்தி அறுவடைக்குத் தயாராக இருந்தது. மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமானதாகச் செய்தி வரவே, தன் மனைவியைக் காணக் கிளம்பினார். மனைவியின் பெற்றோரின் வீடு பதினெட்டு மைல் தொலைவில் இருந்தது. மனைவியைக் கடைசியாக ஒரு முறை பார்த்துவிட எண்ணி, ரயிலில் கிளம்பினார்.

அலபாமா மாநிலத்தில் இருக்கும் குட்வாட்டர் என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். வெள்ளையர்களின் பகுதியான அங்கிருந்து அவர் இன்னமும் சில தூரம் நடக்க வேண்டியிருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு இணையாகவே நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே ராபர்ட் பிராங்கிளின் என்ற வெள்ளைக் காவலர் வந்தார். ‘கையில் பணம் வைத்திருக்கிறாயா? எனக்குத் தரவேண்டிய பணத்தை எப்போது தரப் போகிறாய்?’ என்று டேவிஸைக் கேட்டார்.

டேவிஸ் அதற்கு முன் அந்தக் காவலரை பார்த்ததே இல்லை. ஆனாலும் வெள்ளையர்களை மறுத்து பேச முடியாத சூழலில், ‘இல்லை’ என்று பதில் கூறினார். டேவிஸின் கைகளில் விலங்கிடப்பட்டு, அந்தப் பகுதி ‘அமைதி நீதிபதி’யிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அத்துடன் நீதிமன்ற கட்டணங்கள், அபராதம் என வசூலிக்கப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர் அந்தப் பகுதியின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜான் பேஸ் என்பவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். தன்னிடம் 10 மாதங்கள் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் அவரது கைநாட்டு வாங்கப்பட்டது. ஒப்பந்தம், டேவிஸைச் சவுக்கால் அடிக்கவும், பண்ணையில் அடிக்கவும், முதலாளி நினைத்ததுபோல நடத்தவும் அவர் ஒப்புக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. டேவிஸ் வெளியில் வர முடியாத குழியில் விழுந்துவிட்டார்.

‘பியூனேஜ்’ (Peonage) என்றழைக்கப்பட்ட இந்த முறை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் மெக்ஸிக்கோவிலும் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அங்கிருந்த பிரபுக்களும் செல்வந்தர்களும், விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் சிறு தொகைகளைக் கடனாகக் கொடுப்பார்கள். அதற்கு அதிகமான வட்டியை நிர்ணயித்து, அந்தத் தொகையைக் கட்ட முடியாத அளவிற்கு அதிகமாகக் காட்டுவார்கள். கடன் வாங்கியவர்கள் தங்களுக்கு வேலை செய்து கழிக்க வேண்டும், இல்லையென்றால் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று மிரட்டுவார்கள். சட்டமும் அவர்களுக்குத் துணையாக இருந்தது.

ஆனால், அமெரிக்காவில் இந்த முறை குற்றமாகக் கருதப்பட்டது. அமெரிக்கர்கள் மெக்ஸிக்கோவிடம் இருந்து நியூ மெக்ஸிகோ பிரதேசத்தை இணைத்துக் கொள்ளும்போது, இந்த முறையை எதிர்த்துச் சட்டமியற்றியிருந்தார்கள். ஒன்றிய அரசின் சட்டங்களின்படி, இது அமெரிக்கர்களுக்கு எதிரானது.

ஆனால், அடிமை முறையை ஒழிப்பதற்காக இயற்றப்பட்ட 13வது சட்டத் திருத்தத்தில் சிறு பிழை ஒன்று இருந்தது. அதாவது, எவரையும் அவர்களது விருப்புகளுக்கு எதிராக வேலை வாங்கக் கூடாது என்று தெரிவித்த திருத்தம், ஒரு விதிவிலக்கைத் தெரிவித்தது. அதாவது, குற்றங்களுக்குத் தண்டனையாக மட்டுமே அவர்களை அப்படி வேலை வாங்கலாம் என்றது. இதுவே தென் மாநில முதலாளிகளுக்குப் போதுமானதாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெகு வேகமாகத் தொழில் மயமாகிக் கொண்டிருந்த அமெரிக்காவில், வேலை செய்பவர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அடிமை முறையில் சம்பளம் கொடுத்துப் பழகியிராத தென் மாநில முதலாளிகள் அத்தகைய நிலையை மீண்டும் கொண்டு வருவது என்று யோசித்ததன் விளைவுதான், ஜான் டேவிஸின் கதையின் காரணம்.

கேர்ரி கின்ஸியின் கடிதத்தைப் போன்ற கடிதங்களும், கறுப்பினத்தவர்களைக் கடனாளிகளாகக் காட்டிச் சிறையில் அடைத்து வேலை வாங்குவதாகவும் தொடர்ந்து மனுக்கள் ஒன்றிய அரசுக்குச் சென்று கொண்டிருந்தது. எனவே, தியோடர் ரூஸ்வெல்ட் இதை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தார். அவரது நீதித்துறை இத்தகையை மனுக்களை ஆராய்ந்து, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய அரசாங்க வக்கீலான வில்லியம் ரீஸ் என்பவரை நியமித்தது.

வில்லியம் ரீஸ் அலபாமாவில் தன்னுடைய ஆய்வைத் தொடங்கினார். ஒன்றிய அரசாங்கம் தங்களது நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வருகிறது என்று தெரிந்தவுடன், சிலர் தங்களிடம் கொத்தடிமைகளாக இருந்த கறுப்பினத்தவர்களை அவசர, அவசரமாக விடுவித்தனர். 18 மாதங்கள் ஜான் பேசின் பண்ணையில் அடிமையாக வேலை செய்து வந்த ஜான் டேவிஸும் விடுவிக்கப்பட்டார். ஆனால் வில்லியம் ரீஸ் நடத்தி வந்த விசாரணைக் குழுவிடம் ஜான் டேவிஸ் தன்னுடைய கதையைத் தெரிவித்தார்.

பண்ணையில் அனைவரும் சவுக்கால் அடிக்கப்படுவதையும், சிறு கூண்டில் மிருகங்களைப்போல அடைக்கப்பட்டு இருப்பதையும் கூறினார். ஜான் டேவிஸ் மட்டுமல்ல, இன்னமும் பலரும் கொடுத்த வாக்குமூலம் வில்லியம் ரீஸிற்கு நிலைமையின் அவசரத்தை உணர்த்தியது. காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதித்துறையை வலியுறுத்தினார்.

ஜான் பேஸ் மட்டுமல்லாது, இன்னமும் இரண்டு பெரும் முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்தது. அனைவரும் அடிமை முறையைப் பயன்படுத்தியதாகப் பல வருடங்கள் தண்டனையும் வழங்கப்பட்டது.

ரீஸின் விசாரணை, தென் மாநிலங்களில் மிகுந்த ஊழல் புரையோடி இருந்த காவல் துறை, நீதித்துறை, அரசாங்கத்தின் நிலையை வெளியே கொண்டு வந்தது. அந்தப் பகுதியின் விவசாயிகள், முதலாளிகள், நிறுவனங்கள் கறுப்பினத்தவர்களின் உழைப்புத் தேவை எனில் அவர்கள் காவலர்களிடம் தங்களது தேவைகளைத் தெரிவிப்பார்கள். தேவைப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்கள், சிறிய காரணங்களுக்காகவோ, எந்தக் காரணமும் இல்லாமலோ தங்களது வழியில் துரதிர்ஷ்டவசமாக வரும் கறுப்பினத்தவர்களைக் கைது செய்வார்கள். ஒவ்வொரு முதலாளியும் நிறுவனமும் ஒரு ‘அமைதி நீதிபதியை’ தன்னுடைய சார்பாக வைத்திருந்தது. அந்த நீதிபதி உடனடியாக அந்தக் கறுப்பினத்தவருக்கு அபராதமும், சிறைவாசமும் கொடுத்து, தேவைப்படும் தோட்டத்திற்கோ, நிறுவனத்திற்கோ அனுப்பிவிடுவார். இப்படியாகத் தென் மாநிலங்கள் முழுவதும் அரசாங்க ஊழியர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையிலான உறவு பல கறுப்பினத்தவர்களின் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருந்தது.

வில்லியம் ரீஸ், குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது இப்படிக் கறுப்பினத்தவர்களைக் கொத்தடிமைகளாக்குவது நடைபெறுகிறது என்று தெரிவித்து இருந்ததால், ரூஸ்வெல்டின் அரசு, விசாரணையை விரிவுபடுத்துவது அரசியல் ரீதியான தற்கொலையாகிவிடும் என்று நினைத்தது. எனவே விசாரணை நடந்த இடத்தில் மட்டும் விரைவாக வழக்கை நடத்தி முடித்துவிட முயன்றது. அப்படியே வழக்கும் முடிந்தது. ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்ட எவரும் சிறைவாசத்தை அனுபவிக்கவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று மாதங்களில் ரூஸ்வெல்ட், இரண்டு விவசாயிகளைத் தன்னிடமிருந்த அதிகாரத்தைக் கொண்டு மன்னித்துவிட்டார். தீர்ப்பை மேல் முறையீடு செய்து காத்திருந்த ஜான் பேசை 1906ஆம் ஆண்டு மன்னித்து விட்டார். மீண்டும் வெள்ளையர்களின் அரசியல் அதிகாரம் வென்றது.

இந்த வழக்குகளாலும், அவற்றின் தீர்ப்பினாலும் எந்த இடத்திலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. கறுப்பினத்தவர்களைக் கடனின் மூலமாகக் கொத்தடிமையாக்குவது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஒன்றிய அரசு அவ்வப்போது விசாரணைகளை நடத்தினாலும், அவற்றைத் தொடர்ந்து நடத்தி இந்த முறையை ஒழிக்கவேண்டும் என்ற உறுதி எவரிடமும் இல்லை.

1921ஆம் ஆண்டு அலபாமாவின் மற்றொரு பகுதியில், கறுப்பினத்தவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு ஒன்றிய அதிகாரிகள், ஜான் வில்லியம்ஸ் என்பவற்றின் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே மிகவும் மெலிந்தும், வெகுவாகக் கொடுமைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் இருக்கும் கறுப்பினத்தவர்களைப் பார்த்தார்கள். அவர்களிடம் பேச முனைவதற்குள், ஜான் வில்லியம்ஸ் அங்கே வந்து சேர்ந்தார். அவர்கள் எல்லாம் தன்னுடைய தொழிலாளர்கள் என்றும், அனைவரையும் தான் நன்றாகப் பார்த்து வருவதாகவும் தெரிவித்து அவர்களை அங்கிருந்து கூட்டிச் சென்றுவிட்டார்.

ஆனால், வந்தவர்கள் கறுப்பினத்தவர்களிடம் விசாரித்தார்களா என்று தெளிவாகத் தெரியாததால், ஜான் வில்லியம்ஸ் அனைவரையும் ‘இல்லாமல்’ செய்துவிடுவதுதான் தனக்குப் பாதுகாப்பு என்று நினைத்தார். அந்தக் கறுப்பினத்தவர்களின் மேற்பார்வையாளரான மானிங் என்ற கறுப்பினத்தவருடன் சேர்ந்து, அனைவரையும் அன்றிரவே கொன்று விடத் திட்டம் தீட்டினார்.

ஒவ்வொருவராக வெளியே அனுப்பப்பட்டு, விதவிதமாகக் கொலை செய்யப்பட்டனர். பலரும் அருகில் இருந்த நதியில், சங்கிலியால் கட்டப்பட்டுத் தூக்கி எறியப்பட்டனர். மொத்தம் 11 கறுப்பினத்தவர்கள் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதிகாலையில் நதியினோரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், மிதந்து வந்த பிணங்களைக் கண்டு காவலர்களிடம் தெரிவித்து விட்டான். ஜான் வில்லியம்ஸ் (அவரது மேற்பார்வையாளரோடு) கைது செய்யப்பட்டார்.

1921இல் வழக்கின் முடிவில், இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இருவரும் அடுத்தப் பத்து வருடங்களுக்குள் சிறையிலேயே இறந்துவிட்டனர். 11 தென் மாநிலங்களில் 1877ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட முதல் வெள்ளையர் ஜான் வில்லியம்ஸ்தான். இன்னொரு வெள்ளையர் இதே குற்றச்சாட்டிற்காகச் சிறைக்குச் செல்ல 1966ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

0

‘திருமதி. ரூஸ்வெல்ட்,

நான் ஒரு கறுப்பினத் தாய். உங்கள் உதவி வேண்டிக் கடிதம் எழுதுகிறேன்.

வேலையில்லாமல் இருந்ததாலும், என்னையும், அவனது இரண்டு சகோதரர்களையும் காப்பாற்ற வேண்டி இருந்ததாலும், நமது போஸ்ட் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்திற்கு என் பையன் பதில் எழுதினான். அவர்கள் புளோரிடாவில் இருக்கும் கிளேவ்ய்ஸ்டன் என்ற இடத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. அவனால் அங்கிருந்து வெளியேறவும் முடியவில்லை, எங்களுக்கு எழுதவும் முடியவில்லை. நான் இங்கிருக்கும் சில வெள்ளையர்களிடம் பேசியதில், அவர்கள் எல்லா நேரமும் ஆயுதமேந்திய வீரர்களால் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களது வீடுகளுக்கு எழுத விடாமல் கட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிகிறது. என்னுடைய பையனை திரும்பவும் என்னிடம் சேர்க்க உதவுவீர்களா. தயவுசெய்து இந்தக் கடிதத்தைத் திரும்ப அனுப்ப வேண்டாம். நான் உங்களுக்கு எழுதியிருப்பது தெரிந்தால் என் பையனைக் கொன்றுவிடுவார்களோ என்று பயப்படுகிறேன். அவன் பெயர் மரியன் ஹென்றி காஸ்லி. அவனது முகவரி – யூ.எஸ். கரும்பு விளைவிப்பவர்கள் சங்கம், கிளேவ்ய்ஸ்டன், புளோரிடா. திருமதி. ரூஸ்வெல்ட், என் மகனும், அவனுடன் அழைத்துச் செல்லப்பட்ட 48 இளைஞர்களும் ராணுவச் சேவை செய்யத் தகுதியானவர்கள். எனவே அவர்களை ராணுவத்தில் சேர விடாமல் தடுக்க, நாஜிக்கள் செய்யும் சதியாக இருக்கலாம் என்று எனக்குப் பயமாக இருக்கிறது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து, என் மகனைத் திரும்பவும் என்னிடம் அனுப்பி விடுங்கள். எனக்கு இந்த உதவி தேவை.’

1932ஆம் வருடம் அமெரிக்கக் குடியரசுத் தலைவராகப் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மனைவி எலினோர் ரூஸ்வெல்ட் சமூகப் பிரச்சினைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட், அவரது மாமாவான தியோடர் ரூஸ்வெல்ட்டைப்போலவே கறுப்பினத்தவர்களின் நண்பராகப் பார்க்கப்பட்டார். எலினோர் ரூஸ்வெல்ட் கறுப்பினப் பெண்களின் முன்னேற்றத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர்.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கடிதம் எலினோர் ரூஸ்வெல்ட்டிற்கு 1941ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இன்னமும் அங்கே இருக்கும் கொத்தடிமைகள் முறை பற்றித் தொடர்ந்து அமெரிக்க ஒன்றிய அரசாங்கத்திற்கு எழுதிக் கொண்டிருந்த தாய்மார்கள், சகோதரிகள், மனைவிகளின் கடிதத்தில் இருந்து ஒன்று. அமெரிக்கத் தேசிய ஆவணக் காப்பகத்தில் 1900 முதலான நாற்பது வருடங்களில் எழுதப்பட்ட இதுபோன்ற ஆவணங்கள் 30000க்கும் மேலாக இருப்பதாக ஒரு குறிப்புக் கூறுகிறது. இது போன்ற கடிதங்கள் குடியரசுத் தலைவர், அவரது மனைவி, நீதித்துறை, நீதிபதிகள் எனப் பலருக்கும் எழுதப்பட்டன.

1941ஆம் ஆண்டு, பேர்ல் ஹார்பர் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பானின் மீது போரை அறிவித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு உயர்நிலை கூட்டத்தில், ஜப்பான் என்ன விதத்திலெல்லாம் தங்களின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பேசப்பட்டது. அதில் ஒன்றாகக் கறுப்பினத்தவர்களின் மீதான கொடுமைகள் பற்றியும் பேசப்பட்டது. தென் மாநிலங்களில் நிலவி வந்த நிறப்பாகுபாட்டைத் தொடுவது அரசியல் ரீதியான தற்கொலை என்ற வாதம் மீண்டும் வைக்கப்பட்டது. ஆனால், ரூஸ்வெல்ட் ஏதேனும் ஒருவிதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

டிசம்பர் 12, 1941ஆம் வருடம் சுற்றறிக்கை 3591 வெளியிடப்பட்டது. அதில் ஒன்றிய நீதித்துறை கொத்தடிமை முறை குறித்த புகார்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும், அது குறித்த வழக்குகளைத் தீவிரமாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சில மாதங்களிலேயே டெக்சாஸ் மாநிலத்தில் கடனின் காரணமாக ஒரு கறுப்பினத்தவரை அடிமையாக வைத்திருந்த விவசாயி ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இதுவே உண்மையில் அமெரிக்காவில் அடிமை முறை முடிவுக்கு வந்த தினமாகும்.

மேலே குறிப்பிட்ட வயோலா காஸ்லியின் மகனும் தன்னுடைய கொத்தடிமை நிலையில் இருந்து விடுதலை பெற்று, அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார்.

ஆனால், உள்நாட்டுப் போர் முடிந்து 80 வருடங்களுக்குப் பின்னரே கறுப்பினத்தவர்களின் வாழ்வுரிமை சிறிய அளவில் மீட்டெடுக்கப்பட்டது. அவர்கள் இன்னமும் பலவிதங்களில் போராடியே அடுத்த ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *