‘எனக்கும் உலகுக்கும் இடையே எப்போதும் கேட்கப்படாத கேள்வி ஒன்று இருக்கிறது… பிரச்சினையாக இருப்பது எப்படி இருக்கிறது?… எப்போதும் இரண்டு விதமாக உணர்கிறோம் – அமெரிக்கனாகவும் கறுப்பினத்தவராகவும். இரண்டு ஆன்மாக்கள், இரண்டு சிந்தனைகள், இரண்டு ஒத்துப்போகாத முயற்சிகள், ஒரே கறுப்பு உடலில் இரண்டு போரிடும் கொள்கைகள். அவற்றின் சக்தி ஒன்றே அந்த உடலைச் சிதறிப் போகாமல் வைக்கிறது… அவனால் அமெரிக்காவை ஆப்பிரிக்காவாக மாற்ற முடியாது. ஏனென்றால் உலகுக்கும் ஆப்ரிக்காவுக்கும் அமெரிக்கா கற்றுக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது… அவனால் அவனது கறுப்பு ஆன்மாவை வெள்ளை அமெரிக்கனிசத்துக்காக வெளுக்க வைக்க முடியாது. ஏனென்றால், கறுப்பினத்தவர்களின் ரத்தமும் உலகுக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறது. அவனிடம் இருப்பவர்களால் திட்டப்பட்டு, துப்பப்படாமல், அவனது முகத்தில் வாய்ப்புகளின் கதவுகள் மூடப்படாமல் கறுப்பனாகவும் அமெரிக்கனாகவும் இருக்க மட்டுமே அவன் விரும்புகிறான்.’ – டு பாய்ஸ்.
1895ஆம் வருடம் புக்கர் வாஷிங்டனின் ‘அட்லாண்டா சமரச’ பேச்சைப் பற்றி முன்பே பார்த்தோம். சுருக்கமாக, கறுப்பினத்தவர்கள் அவர்களது வாழ்வை வாழ வேண்டும். வெள்ளையர்கள் அவர்களது வாழ்வை வாழ வேண்டும். கறுப்பினத்தவர்கள் நாட்டின் சட்டங்கள் என்னவோ அவற்றுக்கு உட்பட்டு வாழ்ந்து, சுயதொழில் செய்து பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும், அரசியல் ரீதியாக உரிமைகளைப் பெறுவது குறித்துப் பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்பதுதான் அவரது பேச்சின் சாராம்சம்.
தென் மாநிலங்களின் ‘ஜிம் கிரோ’ சட்டங்களைக் கறுப்பினத்தவர்கள் எதிர்க்கக்கூடாது என்ற தொனியில் இருந்த அந்தப் பேச்சு, கறுப்பினத்தவர்களிடையே உடனடியாக எந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பதும், பொருளாதார ரீதியாக முன்னேறுவதும் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்பது போன்றவை சரியானதாகவே அனைவருக்கும் முதலில் தெரிந்தது. அந்தக் காலகட்டத்தில் கறுப்பினத்தவர்களின் ஒட்டுமொத்தத் தலைவராகப் புக்கர் வாஷிங்டன் கருதப்பட்டார் என்பதால், அவரது பேச்சு, கறுப்பினத்தவர்களின் ஒட்டுமொத்த உணர்வாகவே கருதப்பட்டது.
ஆனால், ஒரு இளைஞர் மட்டும் புக்கர் வாஷிங்டன் கறுப்பினத்தவர்களைத் துரோகித்து விட்டதாகப் பேச ஆரம்பித்தார். வாஷிங்டனின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தாலும், அவர் கறுப்பினத்தவர்களைத் தவறான வழியில் வழிநடத்துவதாக எண்ணினார். எனவே அதை எதிர்த்து எழுத ஆரம்பித்தார்.
0
வில்லியம் எட்வர்ட் பர்க்ஹார்ட் டு பாய்ஸ் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் 1868ஆம் வருடம்ப் பிறந்தவர். அவரது தாய் வீட்டு வேலை செய்து வந்தார். அவரது தந்தை சிறுவயதிலேயே அவரது தாயைக் கை விட்டு விட்டார். மிகுந்த புத்திசாலியான அவருக்குப் பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவரது சிந்தனையைச் சரியான வழியில் திருப்புவதற்கு உதவியது.
வடமாநிலமான மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில், பள்ளிகள் கறுப்பு, வெள்ளை குழந்தைகளுக்குப் பொதுவானவையாகவே இருந்தன. எனவே இரண்டு இன குழந்தைகளும் ஒன்றாகவே வகுப்புகளில் படித்தார்கள். ஒருவிதத்தில் டு பாய்சின் இளவயது அனுபவங்கள் அவருக்குத் தென் மாநிலங்களில் நிலவிய கொடுமையான நிலையைச் சிறிதும் எடுத்துக் காட்டவில்லை எனலாம். ஆனால் வகுப்புகள் ஒன்றாக இருந்தாலும், பாகுபாடுகள் இல்லாமல் இல்லை. நிறவெறி என்பது தென் மாநிலங்களுக்கு மட்டுமே உரித்தானதாக இல்லை.
அவரது அருமையான புத்தகங்களில் ஒன்றான ‘The Souls of Black Folks’ல் அவர் அந்த நிகழ்வை விவரிக்கிறார்.
‘இருந்தாலும் நாமே பிரச்சினையாக இருப்பது ஒரு வினோதமான அனுபவம் – வேறெதுவுமாக இல்லாமல் இருக்கும் ஒருவனுக்குக்கூட அது விசித்திரமானதுதான். எந்தக் கவலையுமில்லாமல் சிறுவனாக இருக்கும் ஆரம்ப நாட்களில் அந்த உண்மை ஒரே நாளில் வெடித்து வெளியே வருகிறது. அந்த நிழல் என்னையும் சூழ்ந்த நாள் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. ஹூசக் குன்றுகளுக்கும், டக்ஹ்கனிக் காடுகளுக்கும் இடையில் இருந்து கடல் வரை வீசும் ஹௌசடோனிக் நதியின் காற்றுச் சுழலும் நியூ இங்கிலாந்தின் குன்றுகளில் நான் சிறுவனாக இருந்த நாட்கள். அங்கிருந்த சிறிய மரத்தால் எழுப்பப்பட்ட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், சிறுமிகளின் மனதில் ஒரு கட்டு, பத்துச் சென்ட் என்ற விலையில் விற்றுக் கொண்டிருந்த அழகான வாழ்த்து அட்டைகளை வாங்கி, ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தது. எல்லாம் மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது. புதிதாகச் சேர்ந்திருந்த உயரமான சிறுமியொருத்தி என்னுடைய அட்டையை – ஒரு பார்வை மட்டுமே பார்த்துவிட்டு – வாங்க மாட்டேன் என்று சொல்லும் வரை. அப்போதுதான் சட்டென்று நான் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கிறேன் என்பது எனக்குத் தோன்றியது; வாழ்விலும், ஏக்கங்களிலும், இதயத்திலும் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அவர்களின் உலகத்தில் இருந்து ஒரு பெரிய திரை என்னை வெளியே நிறுத்தியிருந்தது.’
இந்த நிலையை அவர் ‘இரட்டை தன்னுணர்வு’ என்று விவரிக்கிறார். அவர் வெள்ளையர்களின் உலகில் வாழ்கிறார். ஆனால் வெள்ளையர்களால் அந்த உலகில் இருந்து, அவரது நிறத்தின் காரணமாக, வெளியிலும் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதாவது வெள்ளையர் உலகின் ஒரு பிரச்சினையாகவே கறுப்பினத்தவர்கள் பார்க்கப்படுகிறார்கள் என்று எழுதுகிறார். தான் ஆப்பிரிக்கர் என்றும், அமெரிக்கர் என்றும் உணருவதாகவும், எப்போதும் அமெரிக்க உலகில் வாழும் கறுப்பினத்தவர் என்ற தனித்துவமான அடையாளமான ஆப்பிரிக்க-அமெரிக்கர் என உணருவதில்லை என்றும் கூறுகிறார்.
ஆனால், அவர் இதனால் மனம் சோரவில்லை. அந்தத் தனித்துவ அடையாளத்தைத் தனக்கு மட்டுமின்றி, தன்னுடைய மக்கள் அனைவருக்கும் மீட்டெடுக்க வேண்டும் என்பதையே தன்னுடைய வாழ்வின் லட்சியமாகக் கொண்டார். அவர் வாழ்ந்த சிறிய நகரில் இருந்த கறுப்பினத்தவர்கள், டு பாய்ஸ் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் இருப்பதைக் கண்டு, அவரது படிப்புச் செலவைக் கூட்டாக ஏற்றுக் கொண்டு உதவி செய்தார்கள். முதலில், டென்னிசி மாநிலத்தின் கறுப்பினத்தவர்கள் பல்கலைக்கழகமான பிஸ்க் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கிருந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முதல் கறுப்பினத்தவர் டு பாய்ஸ்தான்.
0
புக்கர் வாஷிங்டன் குறித்தான டு பாய்ஸின் சிந்தனைகள் முதலில் அவர் கறுப்பினத்தவர்களின் தலைவர் என்ற முறையிலேயே இருந்தன. மேலும், புக்கர் வாஷிங்டன் கறுப்பினத்தவர்களைப் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற வேண்டும் என்று சொன்னதை டு பாய்ஸ் ஆமோதிக்கவே செய்தார். புக்கர் வாஷிங்டன் தன் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்துத் தனது புத்தகத்தில் ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். அதில் கறுப்பினத்தவர்களின் தலைவராக அவர் ஆற்றிய செயல்களைப் பாராட்டவும் செய்திருக்கிறார்.
ஆனால், வாஷிங்டன் வெள்ளையர்களின் சட்டங்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறியதை அவர் மறுத்தார். ‘மாற்றம் உடனடியாக வர வேண்டும். அதற்குச் சட்டங்களைதான் மாற்ற வேண்டும் என்றால் அதையும் செய்ய வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் பதிவு செய்ய வேண்டும். டு பாய்ஸ் இந்த நேரத்தில் களப்போராளி அல்ல. 1899ஆம் வருடம் அவர் அட்லாண்டாப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியர். கறுப்பினத்தவர்களின் சமூகவியலைக் குறித்துப் பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருந்தார். அவரது ‘பிலடெல்பியா நீக்ரோ’ என்ற புத்தகம், பிலடெலிபியா நகரில் கறுப்பினத்தவர்கள் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதன் உளவியலைப் பேசியது. அத்துடன் அவர் வருடா வருடம் அட்லாண்டாவில் கறுப்பினத்தவர்களின் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்தான மாநாட்டையும் நடத்தி வந்தார்.
ஆனால், அதே ஆண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம் அவரது வழியை மாற்றியது. அட்லாண்டாவுக்கு அருகில் இருந்த ஓர் இடத்தில், கறுப்பினத்தவர் ஒருவர் அவரது முதலாளியின் மனைவியை வன்புணர்வு செய்துவிட்டதாகக் கூறி, இரண்டாயிரம் வெள்ளையர்களைக் கொண்ட கும்பல் ஒன்று, அவரைப் பொதுவில் சிறிது சிறிதாகச் சித்ரவதை செய்து, உயிருடன் எரித்துக் கொன்றது. அது குறித்து எழுதுவதற்காக, பத்திரிகை ஆசிரியர் ஒருவரைக் காண டு பாய்ஸ் அட்லாண்டாவின் வீதிகளின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு கடையில், இறந்துபோன கறுப்பரின் எரிந்து போன கணுவிரல்கள் (வெள்ளையர்களுக்கு நினைவுப் பரிசாக) விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். பத்திரிகை ஆசிரியரைப் பார்க்காமலேயே திரும்பிய அவர், இப்படியாக எழுதினார்.
‘பிரச்சினையின் காரணம் மக்களின் அறியாமையே என்ற என்னுடைய சிந்தனையை நான் மிகவும் நம்பிவிட்டேன். மக்களிடம் உண்மையை உரக்கச் சொல்வதே அதற்கான தீர்வு என்று நினைத்திருந்தேன். அது தீர்வல்ல. அந்த உண்மையின் பேரில் அவர்களைச் செயல்பட வைப்பதே தீர்வு. இங்கே வன்புணர்வின் காரணமாகக் கொலை நடக்கவில்லை என்று காட்டுவது மட்டுமே போதுமானது அல்ல. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், கறுப்பினத்தவர்களின் பிரச்சினைகளைப் படித்து, மக்களுக்கு முன் உண்மையை வைப்பது மட்டுமே போதுமானது அல்ல. அதைத் தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரமும் செய்யவேண்டும்; ஒன்று தவறென்று தெரிந்தால், அதைச் சரி செய்ய ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.’
அதுவரை எழுத்தின் மூலமாக, உண்மையை மக்கள் முன் பேசுவதன் மூலமாக மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்ற அவரது எண்ணம் மாறியது. தானே முன்னிருந்து செயல்பட வேண்டும் என்ற வேகத்தைக் கொண்டு வந்தது. நயாகரா இயக்கம் உருவானது.
கறுப்பினத்தவர்கள் படிப்பதன் மூலமாகவே தங்களது நிலையை மாற்ற முடியும் என்பது டு பாய்ஸின் கருத்தாக இருந்தது. இதை ஒட்டி ‘திறமையான பத்துச் சதவிகிதம்’ என்ற கருத்தை முன்வைத்தார். அதாவது கறுப்பினத்தவர்களின் நன்கு படித்து, தலைமைப் பண்புடன் இருக்கும் பத்துச் சதவிகிதத்தினர், அவர்களுக்குத் தலைமை தாங்க முன் வரவேண்டும் என்பதுதான் அது. அப்படியே அவர் 1905ஆம் வருடம், அப்போது கறுப்பினத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த இன்னமும் பல போராளிகளுடன் சேர்ந்து கனடாவில், நயாகரா அருவியின் அருகில் ஆலோசனை செய்தார். அதுவே 1906ஆம் வருடம் நயாகரா இயக்கமாக உருவெடுத்தது. வாஷிங்டனின் ‘அட்லாண்டா சமரசத்தை’ தீவிரமாக எதிர்த்த இந்த இயக்கம், புதிய உலகில் பழைய கறுப்பினத்தவர்களுக்கு இடமில்லை என்று அறைகூவல் விடுத்தது.
வாஷிங்டனின் வழிகளுக்கு நேரெதிரானதாக இருந்த நயாகரா இயக்கம், முதலில் இருந்தே பணமுடையினாலும், அப்போது வாஷிங்டனுக்கு இருந்த செல்வாக்கினாலும் மிகுந்த சிரமத்துடன் தன் முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தது.
1906ஆம் வருடம், கறுப்பினத்தவர்கள் தங்களது வேலைகளைத் திருடுகிறார்கள் என்ற குறையோடும், வெள்ளைப் பெண்களைத் தொடர்ந்து வன்புணரவும், அவர்களை அவமானப்படுத்தவும் முயலுகிறார்கள் என்றும் காரணம் காட்டி, அட்லாண்டா நகரில் பெரும் இனக்கலவரம் மூண்டது. ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் ஊதிப் பெருக்கப்பட்ட இந்தக் கலவரத்தில் எத்தனைக் கறுப்பினத்தவர்கள் இறந்தார்கள் என்பது கணக்கில் இல்லை. ஆனால் கறுப்பினத்தவர்களின் கடைகளும் வணிகமும் குறி வைத்துத் தாக்கப்பட்டதில் பொருளாதாரத்தில் சிறிது முன்னேறியிருந்தவர்களும் மீண்டும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
அட்லாண்டாக் கலவரம் வாஷிங்டனின் சமரச முயற்சிகளின் தோல்வியைத் தெளிவாக எடுத்துக் காட்டியது. கறுப்பினத்தவர்கள் சட்டதிட்டங்களை மதித்து, வெள்ளையர்களுக்கு அடங்கி இருந்தாலும் அவர்களை வன்முறையின் மூலம் அடக்குவதில் வெள்ளையர்கள் ஈடுபடுவார்கள் என்பதை டு பாய்ஸ் கலவரத்தைப் பற்றி எழுதிய கட்டுரையில் கூறினார்.
0
நயாகரா இயக்கம் தடுமாற ஆரம்பித்த பின்னர், தன்னுடைய உழைப்பை இணைத்துக் கொள்வதற்குத் தகுந்த இடத்தை டு பாய்ஸ் தேட ஆரம்பித்தார். 1908ஆம் வருடம் லிங்கன் பிறந்த இல்லினாய்ஸ் மாநிலத்தில் இனக்கலவரம் மூண்டது. தென் மாநிலங்களில் நடந்து கொண்டிருந்த கலவரங்கள் வடமாநிலங்களிலும் பரவுவது, கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் கவலையைக் கொடுத்தது. 1909ஆம் வருடம் இதைத் தடுத்து நிறுத்த வேண்டி மாநாடு ஒன்று நடந்தது. அங்கே கறுப்பினத்தவர்களைச் சரிசமானமாக நடத்த விரும்பும் வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் சேர்ந்து ‘கறுப்பினத்தவர்களின் முன்னேற்றத்திற்கான தேசிய இயக்கம்’ (National Association for the Advancement of Colored People – NAACP) தொடங்கினர்.
‘ஜிம் கிரோ’ சட்டங்களைச் சட்டபூர்வமாக எதிர்கொள்வது, பிரசாரம், ஒன்றிய அரசையும், மாநில அரசுகளையும் புதிய சமஉரிமைச் சட்டங்களை இயற்றவும், இருக்கும் சட்டங்களை அமல்படுத்தவும் அழுத்தம் கொடுப்பது என NAACPயின் நடவடிக்கைகள் முழுவதும் வாஷிங்டனின் கருத்துக்களுக்கு எதிரானவையாக இருந்தன. டு பாய்ஸ் அந்த இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
‘நெருக்கடி’ (The Crisis) என்பது NAACPயின் அதிகாரப்பூர்வ ஏடு. டு பாய்ஸ் அதன் ஆசிரியராக ஆனார். அவர் இதுவரை தேடிக் கொண்டிருந்த பத்திரிகையின் குரல் அவருக்குக் கிடைத்துவிட்டது. கறுப்பினத்தவர்களை ‘கும்பல் கொலை’ செய்வதை எல்லாவிதங்களிலும் எதிர்ப்பதைத் தன்னுடைய முழு நேரக் கடமையாகக் கொண்டார்.
0
முதலாம் உலகப்போரின்போது கறுப்பினத்தவர்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதினார். ஆனாலும் கொலைகளுக்கு எதிராக எழுதுவதை அவர் நிறுத்தவில்லை.
டு பாய்ஸ் எழுத்தின் மூலமாகச் சமூகத்தில் மாற்றம் கொண்டு வந்துவிட முடியும் என்று நம்பினார். அப்படியே தொடர்ந்து எழுதினார். அவரது எழுத்து வன்மை இன்னமும் படிப்பதற்கு எளிதாகவும், நதியைப்போல ஓடுவதாகவும் இருக்கிறது. ஆனால் அவரது எழுத்தின் முக்கியத்துவம், அவர் கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைச் சமூகப் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தியது. அதுவரைச் சமூகம் என்பது வெள்ளையர்களைக் குறிப்பதாகவும், கறுப்பினத்தவர்கள் அதனுள்ளே இருக்கும் பிரச்சினையாகவும் பார்க்கப்பட்டார்கள். டு பாய்ஸ், அத்தகைய பார்வையை மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார்.
கறுப்பினத்தவர்களின் போராட்டத்திற்கு ஒரு தத்துவ அடிப்படையைக் கொடுத்ததும் அவரே. நிறப்பாகுபாட்டைச் சமூகப் பிரச்சினையாகக் கட்டமைத்ததன் மூலமாக அவர் வெள்ளையர்களும், கறுப்பினத்தவர்களுடன் கைகோர்த்துப் போராட்டக் களத்தில் நிற்பதற்கான காரணங்களை முதல் முறையாகக் காட்டினார். வெள்ளையர்களின் நிறப் பாகுபாட்டை உலகின் முக்கியமான பிரச்னையாக முன்னிறுத்தியதன் மூலம், வெள்ளையர்கள் தங்களின் நிறத்தை மட்டுமே காரணமாகக் கொண்டு மற்றவர்களை அடிமைப்படுத்துவதை வெளிப்படுத்தினார்.
(தொடரும்)