இந்தத் தொடரை நீங்கள் இதுவரை தொடர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் விவரிக்கப்படும் வன்முறைச் செயல்கள் உங்களது கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். தொடர்ச்சியான இந்த வன்முறைகள் மட்டுமே அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் வாழ்வை நிர்ணயித்ததா என்ற கேள்வி எழாமல் இருக்காது. அமெரிக்கா இன்று ஏன் இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, இந்த வன்முறை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் தவிர்க்க முடியாதது. அமெரிக்காவின் சிறுபான்மையினரின் வரலாறு பெருமளவில் இத்தகைய வன்முறையின் வழி மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டம் இன்னமும் அதிகமான வன்முறையை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டதை இனிதான் பார்க்கப் போகிறோம்.
1917ஆம் ஆண்டு அமெரிக்கா முதலாம் உலகப்போரில் நுழைந்தது. அமெரிக்கப் போர் வீரர்கள் பெருமளவில் ஐரோப்பியப் போர்களங்களுக்குச் சென்றிருந்தார்கள். இது அமெரிக்க மண்ணில் பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. வெள்ளையர்கள் பலரும் போர் வீரர்களாக ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதால், பல்வேறு வேலைகளிலும் தொழில்களிலும் கறுப்பினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தது. இது அவர்கள் தென்மாநிலங்களின் அடக்குமுறையில் இருந்து தப்பி வருவதற்குத் தேவையான ஊக்கத்தைக் கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தென்மாநிலங்களில் இருந்து வடமாநிலங்களின் பெரு நகரங்களுக்குக் குடிபெயர்ந்ததாகத் தெரிகிறது.
இது வடமாநிலப் பெருநகரங்களின் முகத்தை வெகுவாக மாற்றியது. சிகாகோ நகரில் கறுப்பினத்தவரின் எண்ணிக்கை 150 சதவிகிதம் அதிகரித்தது. பிலடெல்பியாவில் 500 சதவிகிதம் அதிகரித்தது. இத்தகைய மாற்றம் வெள்ளையர்களிடையே எத்தகைய உணர்வைக் கொண்டு வந்திருக்கும் என்பதைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. தங்களது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே அவர்கள் இதைப் பார்த்தார்கள்.
போரினால் ஏற்பட்ட இன்னுமொரு பெரிய மாற்றம், கறுப்பின இளைஞர்கள் பெருமளவில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தது. ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது குறித்துக் கறுப்பினத்தவர்களிடையே இன்று வரை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பலரும் இதைத் தங்களது குடியுரிமையை உறுதி செய்யும் வேலையாகக் கருதுகிறார்கள். போரில் நாட்டுக்காகப் போரிடுவதன் மூலம், தங்களது குடியுரிமையையோ, நாட்டுப் பற்றையோ யாரும் கேள்வி கேட்கமுடியாது என்றும், அது தங்களுக்கு அதிக மரியாதையைப் பெற்று தரும் என்பது அவர்களுடைய வாதம்.
இன்னொரு பக்கம், தங்களுக்கு எந்த மரியாதையும் தராத, தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும், எந்தவித நீதியும் தராமல் கொலை செய்யும், தங்கள் இனப் பெண்களைச் சிறிதும் மதிக்காத சமூகத்திற்காகப் போருக்குச் செல்ல வேண்டுமா என்பது மற்றொரு தரப்பினரின் வாதம். இதையும் தாண்டி மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான கறுப்பின வீரர்கள் முதலாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட்டார்கள்.
‘நாங்கள் திரும்புகிறோம்.
போரிலிருந்து திரும்புகிறோம்.
போருக்குத் திரும்புகிறோம்’
என்று ‘கறுப்பினத்தவர்களின் முன்னேற்றத்திற்கான தேசிய இயக்கத்தின்’ (NAACP) அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘தி கிரைசிஸ்’ (The Crisis) W.E.B. டு பாய்ஸ் எழுதினார். மே 1919இல் அவர் எழுதிய ‘போர்வீரர்கள் திரும்புகிறார்கள்’ என்ற கட்டுரை வரப்போகும் நாட்களில் நடக்கப்போவதைத் விவரித்தது. பிரான்சு நாட்டின் குடியரசைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டு வரும் வீரர்கள், தங்களது நாட்டிலேயே வாக்குரிமை இல்லாதவர்களாக, அவமானப் படுத்தப்படுபவர்களாக இருக்கப்போவதை முகத்தில் அடித்ததுபோலக் கூறியது. ஆச்சரியமூட்டும் வகையில் அவர் கூறியதுபோலவே அதற்கடுத்த மாதங்களில் நிகழ்வுகள் நடந்தேறின.
சிவப்புக் கோடையின் முதல் காட்சி, அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் அரங்கேறியது. 1919ஆம் ஆண்டு ஜூலை மாதம், வெள்ளை பெண்மணி ஒருவர் கறுப்பின இளைஞன் ஒருவன் தன்னை மிரட்டியதாகக் காவலர்களிடம் முறையிட்டாள். காவலர்களும் அவனைக் கைது செய்து விசாரித்துவிட்டு, அனுப்பிவிட்டார்கள். ஆனால் அதற்குள் நகருக்குள் பலவிதமான வதந்திகள் பரவிவிட்டன. வெள்ளையர்கள் கும்பலாக நகரின் கறுப்பின மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
‘அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிழலில், வெள்ளை மாளிகையின் வாசற் கதவின் முன் என்னுடைய இனத்தின் ஆண்களும் பெண்களும் பயமுறுத்தப்பட்டு, துரத்தப்பட்டு, வண்டிகளில் இருந்து கீழே இழுக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கொல்லப்படுவது உண்மை என்று எனக்குத் தெரிந்தாலும், அதை உண்மை என்று நம்புவது எனக்குக் கிட்டத்தட்ட முடியாததாக இருக்கிறது’ என்று அமெரிக்கக் கறுப்பினக் கவிஞரும், போராளியுமான ஜேம்ஸ் வெல்டன் ஜான்சன் ‘தி கிரைசிஸ்’ பத்திரிகையில் NAACPயின் சார்பாக வாஷிங்டன் நகரில் விசாரணை செய்ய வந்தபொழுது எழுதினார்.
ஐந்து நாட்கள் தொடர்ந்த இந்தக் கலவரத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஐந்தாம் நாள் அப்போதைய குடியரசுத் தலைவர் வூட்ரோ வில்சன், ராணுவத்தைக் கொண்டு நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஆனால், இது அந்தச் சிவப்புக் கோடையின் ஆரம்பம் மட்டுமே.
வாஷிங்டன் கலவரங்கள் அடக்கப்பட்ட ஒரே வாரத்துக்குள் சிகாகோ நகரம் பற்றி எரிய ஆரம்பித்தது.
அந்த வருடக் கோடை தாங்க முடியாததாக இருந்தது. ஜூலை 27, 1919இல் சிகாகோ நகரமே மிச்சிகன் ஏரியின் கரைகளில் குவிந்திருந்தது. வடமாநில நகரங்களில் கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அங்கும் மெதுவாகப் பிரிவினைச் சட்டங்கள் சட்டபூர்வமாகவோ, வெள்ளையர்கள் கும்பல் மூலமாகவோ செயல்படுத்தப்பட்டன. அப்படியே மிச்சிகன் ஏரியின் கரைகளும் வெள்ளையர்களுக்கு, கறுப்பினத்தவர்களுக்கு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது.
யூஜீன் வில்லியம்ஸ் அன்று கோடையின் கொடுமை தாங்க முடியாமல் ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தான். 17 வயது இளைஞனான அவன், ஏரியில் கறுப்பினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் சிறியதாக மிதவை ஒன்றைச் செய்து நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். ஏரியில் எழுந்த அலைகளினால் உந்தப்பட்டு அவனது மிதவை வெள்ளையர்கள் பகுதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த வெள்ளையர் ஒருவர் அவன் மீது கற்களை வீசினார். தடுமாறி விழுந்த யூஜீன், நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்தான். அதைக் கண்ட கறுப்பினத்தவர்கள் சிலர் அங்கிருந்த காவலரிடம் முறையிட்டனர். அவர் அந்த வெள்ளையரைக் கைது செய்ய மறுத்து விட்டார். இதனால் அங்கேயே வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது.
இந்தச் செய்தி நகர் முழுவதும் பரவவே, பெரும் கலவரம் மூண்டது. போரில் இருந்து திரும்பியிருந்த கறுப்புப் போர் வீரர்கள், தங்களது ஆயுதங்களுடன் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். கறுப்புப் போர்வீரர்கள், நகரில் இருந்த ஆயுதக் கிடங்கு ஒன்றை உடைத்து அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, தங்களைத் தற்காத்துக் கொள்ளவதற்காகக் குழுக்களை உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த இந்தக் கலவரத்தில், கறுப்பினத்தவர்களும் வெள்ளையர்களுமாக 40க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டார்கள். 1000க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. பொருள் சேதம் கணக்கிட முடியாத அளவில் இருந்தது.
கவிஞரான ஜேம்ஸ் வெல்டன் ஜான்சன் ‘சிவப்புக் கோடை’ என்று வர்ணித்திருந்த அந்த வருடத்தின் கோடைக் காலம் இன்னமும் சிவப்பாக மாறிக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் (Knoxville) நகரிலும், செப்டம்பர் மாதம் ஒமாஹா நகரிலும் கலவரம் வெடித்தது. ஆனால் அடுத்து அர்கன்சாஸ் மாநிலத்தில் நடந்தது எல்லாவற்றையும் சாதாரணமானதாக ஆக்கியது.
1917இல் நடந்து முடிந்த ரஷியப் புரட்சிக்கு பின்னர், அமெரிக்காவில் கம்யூனிசமும் சோஷயலிசமும் கெட்ட வார்த்தைகளாக இருந்தன. முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் ஏற்கெனவே தொழிலாளர்கள் ஒன்றாகச் சேருவதற்கு எதிரான பல சட்டங்கள் இருந்தாலும், தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் திட்டங்களும் இருந்தன. ரஷியப் புரட்சியைத் தங்களது வாழ்வுமுறைக்கு எதிரானதாகப் பார்த்த அமெரிக்க மக்களிடையே சோஷலிசம் என்பது கெட்ட வார்த்தையாகவே இருந்தது.
அர்கன்சாஸ் மாநிலத்தில் இருக்கும் எலைன் என்ற கிராமத்தில் இருந்த கறுப்பினத் தோட்ட தொழிலாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்களது வெள்ளை முதலாளிகளிடம் பேச வேண்டி இயக்கமாக ஒன்றிணைய முயன்றனர். இவர்கள் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து, அதன் விளைச்சலை முதலாளிகளுடன் பங்கிட்டுக் கொள்ளும் முறையைப் பின்பற்றி வந்தவர்கள். இந்தப் பங்கீட்டை அதிகப்படுத்த வேண்டியே போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
அப்படியாக அவர்கள் பேசிக் கொண்டிருந்த கூட்டம் ஒன்றில் வெள்ளையர்கள் நுழைந்து தகராறு செய்யவே, நடந்த கைக்கலப்பில் ஒரு வெள்ளையர் இறந்து போனார். தொடர்ந்து வெள்ளையர்கள் குழுக்களாகச் சென்று கறுப்பினத்தவர்களின் இடங்களைத் தாக்கி ஏற்படுத்திய கலவரத்தில் 240 கறுப்பினத்தவர்களுக்கும் மேல் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த அர்கன்சாஸின் ஆளுநர் குழு ஒன்றை நியமித்தார். அது வெள்ளையர்கள் அடங்கிய குழு என்பதால் அவர்கள் கறுப்பினத்தவர்கள் ஒன்றாக இணைந்து சோஷலிசத்துக்கு ஆதரவாக வெள்ளையர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்று அறிக்கை அளித்தது. மேலும் 79 கறுப்பினத்தவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்களில் 12 கறுப்பினத்தவர்களுக்கு மரணத் தண்டனையும், மற்றவர்களுக்கு 21 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
ஆனால், தொடர்ந்து நடந்த கலவரங்களால் ஒன்றிய அளவில் சிறிது மாற்றமும் ஏற்பட்டிருந்தது. எனவே மேல்முறையீட்டில், இவர்கள் அனைவரது தண்டனையும் தள்ளுபடி செய்யப்பட்டது.
1919ஆம் வருடம் கோடைக் காலத்தில் மொத்தம் 22 அமெரிக்க நகரங்களில் பெரிதும், சிறிதுமாகக் கலவரங்கள் ஏற்பட்டன. இவற்றில் பல நூறு பேர் கொல்லப்பட்டார்கள். எண்ணிலடங்காதோர் காயமடைந்து, பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது.
இதற்கு முன் நடந்த கலவரங்களில் இருந்து இந்த வருடம் ஏற்பட்டிருந்த பெரும் மாற்றம், இந்த முறை கறுப்பினத்தவர்கள் தங்களைக் பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களை ஏந்தவும் தயாராக இருந்தார்கள். வாஷிங்டனில், சிகாகோவில் என அனைத்து இடங்களிலும் அவர்கள் திருப்பி அடிக்கத் தயாராக இருந்தார்கள். கறுப்பினத்தவர்களில் படித்தவர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் தங்களது உரிமையை உணர ஆரம்பித்ததன் தொடக்கமாகவே இது பார்க்கப்பட்டது.
அதனால் வெள்ளையர்கள் தங்களது ‘உயர்வை’ நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தேவையான வன்முறையைக் கையில் எடுக்க வேண்டி இருந்தது.
0
1915இல் ‘தி பர்த் ஆப் எ நேசன்’ (The Birth of a Nation) என்ற மௌனப் படம் வெளியானது. அந்தத் திரைப்படம் அமெரிக்காவை வெள்ளையர்களின் பிறப்புரிமையாகவும், கறுப்பினத்தவர்களை மிருகங்களைப் போலவும் சித்தரித்தது. அமெரிக்க உள்நாட்டுப்போரைத் திரையில் முதல் முறையாகக் காட்டிய இந்தப் படம், வரலாற்றைத் திருத்தி எழுதிக் கொண்டிருந்த தென்மாநில வரலாற்றாய்வாளர்களின் முயற்சியைத் திரை மொழியின் மூலமாக அமெரிக்கா முழுவதும் கொண்டு சேர்த்தது. கறுப்பினத்தவர்களை ஒடுக்குவதற்கு வட, தென் மாநில வெள்ளையர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும், அதற்கு ‘கு க்ளக்ஸ் கிளான்’ போன்ற வெள்ளையர்கள் நிறவெறி இயக்கம் தேவை என்றும் தெளிவாகக் கூறியது. வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவருக்காகத் திரையிடப்பட்ட, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம், தென் மாநிலங்களில் மீண்டும் கு க்ளக்ஸ் கிளான் தலையெடுக்க முக்கியக் காரணமாக இருந்தது.
1919ஆம் வருடம் கோடைக் காலத்தில் நடந்த கலவரங்கள், கு க்ளக்ஸ் கிளான் மீண்டும் வலிமையுடன் தென் மாநிலங்கள் முழுவதும் தோன்றுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தந்தன. கறுப்பினத்தவர்களைத் தங்களது வாழ்வுமுறைக்கு எதிரியாகக் கட்டமைத்து, வெள்ளையர்களிடையே பயத்தைத் தோற்றுவித்து, கு க்ளக்ஸ் கிளான் பெரிய அளவில் இயக்கமாக உருவெடுத்தது.
1920களில் பெரும் வளர்ச்சியைக் கண்ட இந்த இயக்கம், 1920களின் மத்தியில் 40 லட்சம் உறுப்பினர்களோடு நாடு முழுவதும் பரவியது. அதன் பரவலோடு அதன் வெறுப்புச் சித்தாந்தமும் பரவியது.
ஓக்லஹோமா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்ட மேற்கு மாநிலங்களில் ஒன்று. அங்குச் சமமான வாய்ப்புகள் இருந்ததால், தங்கள் வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் கறுப்பினத்தவர்களும், வெள்ளையர்களும் அதிக அளவில் குடிபெயர்ந்திருந்தார்கள். ஆனால் அங்கு கு க்ளக்ஸ் கிளானின் சித்தாந்தமும் வளர்ந்து கொண்டிருந்தது. இதனால் 1921ஆம் வருடம் ஒக்லஹோமாவில் 30க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் வெள்ளைக் கும்பல்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
துல்சா, ஓக்லஹோமா மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்று. இங்கே கறுப்பினத்தவர்கள் பெருமளவில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நகரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கிரீன்வுட் பகுதி கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்த பகுதி. நகரின் மிகவும் செல்வம் கொழிக்கும் பகுதியும் அதுதான். பல்வேறு தொழில்களையும் வங்கிகளையும், பல நிதி நிறுவனங்களையும் அங்கே கறுப்பினத்தவர்கள் நடத்தி வந்தார்கள். எல்லாம் ஒரே இரவில் மாறியது.
1921ஆம் வருடம், மே மாதம். ஒரு கறுப்பின இளைஞன் மின்தூக்கியில் வெள்ளைப் பெண் ஒருத்தியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டான். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் கறுப்பினத்தவர்களும் பதிலடி கொடுக்கவே பத்துக்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள்.
அன்றிரவே (மே 31) வெள்ளையர்கள் கும்பலாகக் கிரீன்வுட் பகுதியைத் தாக்கினார்கள். முன்திட்டமிடலுடன், சுற்றி வளைத்து நடைபெற்ற தாக்குதலில் அந்தப் பகுதி முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டது. பகுதியில் இருந்த கறுப்பினத்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். உயிருடன் இருந்தவர்கள் படுகாயமடைந்தார்கள். மறுநாள் விடிந்தபொழுது, 300க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். 800க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். இரண்டு மில்லியன் டாலர்களுக்கு (அப்போதைய மதிப்பில்) மேல் பொருள் சேதம் ஏற்பட்டிருந்தது. நகரில் மிச்சமிருந்த கறுப்பினத்தவர்கள் பலரும் நகரை விட்டு வெளியேறினார்கள். மாநிலத் துணை ராணுவப்படை வந்த பின்னரே வன்முறை கட்டுக்குள் வந்தது.
அமெரிக்காவின் மிகப்பெரும் தீவிரவாதச் செயலாகத் துல்சா நகர வன்முறை பார்க்கப்படுகிறது. கு க்ளக்ஸ் கிளானின் சித்தாந்தமும் வெறுப்புணர்வும் ஏற்கெனவே கறுப்பினத்தவர்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு வெள்ளையர்களிடையே நிலவிய பொறாமையுணர்வை அதிகப்படுத்தியது. இது அவர்களுடைய நிறவெறி, இனவெறி சிந்தனைகளைத் தூண்டி இத்தகைய வன்முறை நிகழ்வைச் சாத்தியமாக்கியது. தென் மாநிலங்களைத் தவிர்த்து மேற்கே நிகழ்ந்த இந்த வன்முறை கறுப்பினத்தவர்கள் மீதான வெறுப்பு தென் மாநிலங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பதையும் காட்டியது.
வழக்கம் போலவே இந்த வன்முறைகள் எல்லாம் கறுப்பினத்தவர்கள் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் தொடர்வதால் ஏற்பட்ட எதிர்வினை என்று ஊடகங்கள் மூலமாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அரசாங்க அறிக்கைகளும் இதே வாதத்தை முன்வைத்துக் கலவரங்களை நியாயப்படுத்தவும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவும் உதவி புரிந்தன.
0
இந்த வன்முறைகள் நிகழ்ந்த நாட்களில், சிகாகோவின் ‘தி லிபேரேட்டர்’ பத்திரிகையில், கறுப்பினக் கவிஞரான கிளாட் மக்கே (Claude McKay) ‘நாம் இறக்க வேண்டுமென்றால்’ என்ற கவிதையைப் பதிப்பித்தார்.
‘நாம் இறக்கவேண்டுமென்றால்,
பைத்தியமான, பட்டினி கிடக்கும் நாய்களால்
சுற்றி வளைக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டும்
வேட்டையாடப்பட்டும் சகதியில் மாட்டிக் கொண்டு சாகும்
பன்றிகளைப்போல இறக்க வேண்டாம்.
நாம் இறக்க வேண்டுமென்றால்,
நமது ரத்தம் வீணாக மண்ணில் சிந்தாமல்
மரியாதையுடன் இறப்போம்.
அப்போது நாம் எதிர்க்கும் மிருகங்களும்
அடங்கும் அல்லது நமது மரணத்தை மதிக்கும்.
நண்பர்களே! நமது எதிரியைச் சந்திக்கத்தான் வேண்டும்.
எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், நம் வீரத்தைக் காட்ட வேண்டும்.
அவர்களது ஆயிரம் அடிகளுக்கு ஒன்றாவது திருப்பித் தரவேண்டும்!
நமது கல்லறைக்குழி நமக்கு முன்னேதான் இருக்கிறது!
வேட்டையாடும் அந்தக் கோழை கும்பல் நாம் செல்லும் வழிகளை அடைத்தாலும்
நாம் மனிதர்களைப் போலப் போரிட்டே சாவோம்!’
இந்தக் கவிதை, அவர்களிடையே ஏற்பட்டிருந்த புதிய உரிமை உணர்வுகளை எடுத்துக் காட்டியது. ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ இயக்கத்தின் முதல் குரலாகவே இந்தக் கவிதை பார்க்கப்படுகிறது.
(தொடரும்)