‘பால்டிமோர் நகரில் நடந்து கொண்டிருந்தேன்.
மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தது.
என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த
ஒருவனைப் பார்த்தேன்.
நானொரு எட்டு வயது சிறுவன்.
அவனும் அது போலவே இருந்தான்.
நான் அவனை நோக்கிச் சிரித்தேன்.
ஆனால் நாக்கை நீட்டி ‘Nigger’ என்றான்.
மே மாதம் முதல் டிசம்பர் வரை
பால்டிமோரைச் சுற்றிப் பார்த்தேன்.
அங்கே நடந்த எல்லாவற்றிலும்
இதுமட்டுமே நினைவில் இருக்கிறது.’
– கவுண்டி கலென் (‘சம்பவம்’)
தென் மாநிலங்களில் இருந்து நிகழ்ந்த பெரும் குடியமர்வைப் பற்றி முந்தைய அத்தியாயம் ஒன்றில் பார்த்தோம். அதனால் பெரு நகரங்களின் முகங்கள் மாறிக் கொண்டிருந்தன என்பதையும் பார்த்தோம். ஆனால் இந்த நகரங்களில் புதிதாகக் கறுப்பின மக்கள் அனுபவித்த சுதந்திரம் எப்படி வெளிப்படுத்தப்பட்டது என்பதை இப்போது பார்க்கலாம்.
முந்தைய அத்தியாயத்தின் இறுதியில் கிளாட் மக்கேயின் கவிதை ஒன்றைப் பார்த்தோம். 1919இல் எழுதப்பட்ட அந்தக் கவிதை, கறுப்பினத்தவர்களிடையே ஏற்பட்டிருந்த புதிய விழிப்புணர்வையும், அவர்கள் தங்களது சுயத்தைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தித்திருந்ததையும் தெரிவித்தது. அந்தப் பரிசோதனையின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியம், இசை என அனைத்து விதங்களிலும் கறுப்பினத்தவரின் படைப்பாற்றல் வெடித்துக் கிளம்பியது.
கறுப்பினத்தவர்கள் வடமாநிலங்களின் பெரு நகரங்களுக்குக் குடிபெயர்ந்த நிலையில், நியூ யார்க் நகரத்துக்கு அதிகமாகக் குடிபெயர்ந்தார்கள். அதிலும் நியூ யார்க்கின் ஒரு பகுதியான ஹார்லெம் என்ற இடத்துக்கு அதிகமாகச் சென்றார்கள். அங்கு மட்டும் ஒன்றே முக்கால் லட்சம் தென் மாநிலக் கறுப்பினத்தவர்கள் அப்போது குடிபெயர்ந்திருந்தார்கள். வெறும் மூன்று சதுர மைல் பரப்பளவில் இருந்த அந்தப் பகுதி, உலக அளவில் மிகவும் அடர்த்தியாகக் கறுப்பினத்தவர்கள் வாழும் பகுதி என அறியப்பட்டது.
கறுப்பினத்தவர்கள் இயக்கமாக இணைவதற்கும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதற்கும் அப்படி அவர்கள் வாழ்ந்த சூழல் உதவியாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் ஹார்லெமில் குடியேறியது அவ்வளவு எளிதானதாக இல்லை. அங்கு நடைபெற்ற குடிபெயர்வுக்கு எதிராக அங்கிருந்த வெள்ளைக் குடும்பங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. ஊடகங்கள் கறுப்பினத்தவர்கள் தங்களது நகரை ஆக்ரமிப்பதாக எழுதின. நில உடமையாளர்கள் கறுப்பினத்தவருக்கு வாடகைக்கு வீடுகள் தர மறுத்தார்கள். ஆனால், பிலிப் பய்டன் என்ற கறுப்பின நில உடமையாளர், ஹார்லெமில் இருந்த பல மாடிக் கட்டடங்களை வாங்கி, அவற்றைக் கறுப்பினக் குடும்பங்களுக்கு வாடகைக்கு அளித்தார். இப்படியே 1917ஆம் வருடத்துக்குள் ஹார்லெம் முழுக்கக் கறுப்பினத்தவர்களின் குடியிருப்பாக மாறியது.
0
ஹார்லெம் மறுமலர்ச்சி இயக்கம் (Harlem Renaissance) 1919இல் இருந்து 1940கள் வரை தொடர்ந்ததாகப் பதிவு செய்யப்படுகிறது. இந்த இயக்கத்தின் பிதாமகர்கள் என்று இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். இருவருமே இந்த இயங்கத்துக்குத் தங்களது எழுத்துக்கள் மூலம் பங்களித்ததால் மட்டுமல்ல, பல கறுப்பினக் கலைஞர்களை அடையாளம் கண்டு உலகுக்கு அறிமுகப்படுத்தியதற்காகவும் இவ்வாறு அறியப்படுகிறார்கள்.
இந்தக் காலகட்டத்துக்கு முன்னரும் கறுப்பினத்தவர்கள் கலை, இலக்கியத்தில் பங்களித்திருந்தாலும் அது மிகவும் குறைவாகவே இருந்தது. இன்னுமொரு பெரிய வித்தியாசம் இந்த இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தாங்கள் கறுப்பினத்தவர்கள் என்பதை உள்ளார்ந்து உணர்ந்து, தங்களது உரிமையைப் போரிட்டாவது பெற்றுவிடுவது என்ற உணர்விலேயே படைப்புகளைச் செதுக்கினார்கள்.
இந்த இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படுவது அலன் லாக் (Alain Locke). அவர் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டமும், தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முதல் கறுப்பின ரோட்ஸ் அறிஞராக இருந்தவர். 1925ஆம் வருடம் அவர் தொகுத்த ‘புதிய நீக்ரோ’ (The New Negro) என்ற புத்தகத்தின் அறிமுகக் கட்டுரையில் அவர் இதை விவரிக்கிறார்.
அந்தக் கட்டுரையில் முதலில் ‘பழைய நீக்ரோ’ என்பது யார் எனச் சொல்லிவிட்டு, ‘புதிய நீக்ரோ’ யார் என்பதை விரிவாகப் பேசுகிறார். அந்த இரு பத்திகளை முழுவதாக வாசிப்பது இந்த இயக்கத்தைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள உதவும்.
‘இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டியது பழைய நீக்ரோ எப்போதும் வரலாற்றுச் சர்ச்சைகளின் மூலமாகவும், ஒழுக்கம் பற்றிய விவாதங்களின் மூலமாகவும் உருவான ஜீவன். சிறிது அப்பாவித்தனமான உணர்வின் மூலமும், வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட பிற்போக்குவாதத்திலும் நிலைக்கும் மனிதனாகவே அவன் இருந்திருக்கிறான். அவன் சூழ்நிலையைச் சார்ந்திருக்க வேண்டியிருந்ததால், தங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருந்த சமூக வேடத்தின் காரணமாக அந்தப் பிம்பத்தைக் கட்டமைப்பதில் தானும் பங்கு கொண்டான். பல தலைமுறைகளாக அமெரிக்காவின் நினைவில் கறுப்பினத்தவர்கள் மனிதர்களாக அல்லாமல் – விவாதம் செய்யவும், கண்டனம் தெரிவிக்கவும், காப்பாற்றவும், ஒடுக்கப்படவும், ‘அவனது இடத்தில் வைக்கவும்’, உதவி செய்யவும் – வேண்டிய சூத்திரமாகவே பார்க்கப்பட்டிருக்கிறார்கள்… சிந்திக்கும் கறுப்பினத்தவர்களும் கூடத் தங்களை ஒரு சமூகப் பிரச்சினையாகவே பார்த்தார்கள். பழைய நீக்ரோவைப் பொறுத்தவரை அவனது சுயத்தை விட, அவனது நிழலே அவனுக்கு உண்மையாக இருந்தது’.
புதிய நீக்ரோ யார்?
‘அமெரிக்கக் கலாசாரத்தின் புதிய ஜனநாயகத்தின் கவனமான சின்னமாகவே புதிய கறுப்பினத்தவர்கள் இருக்கிறார்கள். புதிய சமூகப் புரிந்துணர்வுக்கு அவர்கள் தங்களது பங்கைச் செலுத்துகிறார்கள். ஆனால் கறுப்பினத்தவர்களின் சிந்தனையில் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்த கதவுகளைத் திறக்க, மற்றவர்கள் தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டுமே போதுமானதல்ல. அப்படிச் செய்தால் ஒன்று அவன் கண்டிக்கப்படுவான். அல்லது ஆதரிக்கப்படுவான். எனவே முழுமையான, உண்மையான சுயவெளிப்பாட்டின் தேவை, சமூகப் பாகுபாடுகள் தங்களைச் சிந்தனையின் வழியே பிரிப்பதை அறிந்து கொள்வது, தங்களுடைய சொந்த வாழ்வைக் கட்டியெழுப்ப எதிர் அணுகுமுறையின் தேவையை அறிந்துகொள்வது ஆகியவற்றைச் செய்வதால் மட்டுமே அவர்கள் பெரும் அறிவாளிகள் ‘நிறக்கோட்டின்’ மீது எழுப்பி இருக்கும் ‘வெறுப்பின் சுவற்றை’ மகிழ்வுடன் உடைக்க முடியும்.’ மேலும் ‘இத்தகைய மாற்றம் திடீரென்று தோன்றியதுபோல இருந்தாலும் அது உண்மை இல்லை. இதற்குக் காரணம் புதிய நீக்ரோ இங்கே இல்லாமல் இருந்தான் என்பதால் அல்ல, பழைய நீக்ரோ என்பவன் மனிதனல்ல, அவன் ஒரு கட்டுக்கதை என்பதால்தான்’ என்கிறார்.
தென் மாநிலங்களில் இருந்து பெரிய அளவில் வெளியேறியிருந்த கறுப்பினத்தவர்களின் புதிய தலைமுறை சுதந்திரமான சூழலில் வளர்ந்திருந்தது. அவர்கள் அவர்களுக்கு முந்தைய தலைமுறையின் சிந்தனைத் தடைகளை உடைத்துப் புதிதாக உருவாகிக் கொண்டிருந்த நவீன உலகின் குடிகளாகத் தங்களை அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். அந்த விடுதலை உணர்வின் அடையாளமாகவே அவர்களிடமிருந்து வெளிவந்த படைப்புகளும் இருந்தன.
0
அலன் லாக்கின் ‘புதிய நீக்ரோ’ புத்தகம், 1925இல் படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்த பல நீக்ரோ படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கி இருக்கிறது. அலன் லாக் கதை, கவிதை, நாடகம், தத்துவம், கட்டுரைகள் என அப்போதைய பிரபல படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுப்புகளாகக் கொண்டு வந்ததன் மூலம் அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டினார்.
ஆனால் அவர் மட்டுமே இதைச் செய்யவில்லை. நியூ யார்க் நகரின் பணக்காரர்களில் ஒருவரான வில்லியம் ஹார்மனின் நிறுவனம் கறுப்பினத்தவர்களிடையே இருக்கும் திறமையான சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வருடாவருடம் தங்கப் பதக்கமும், பரிசுப் பணமும் வழங்க ஆரம்பித்தது. 1926ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்ட இந்த விருதின் மூலம் பல கறுப்பினக் கலைஞர்கள் தங்களது படைப்புலகப் பயணத்தைத் தொடர முடிந்தது. வில்லியம் ஹார்மன் வெள்ளையராக இருந்தாலும், ஹார்லெம் இயக்கத்தின் மூலமாகக் கலை, இலக்கியம், இசை, கல்வி, ஆன்மிகம், அறிவியல் எனப் பலதுறைகளிலும் சாதனை புரிந்த இளைஞர்களை உலகுக்குச் சரியான முறையில் அறிமுகப்படுத்தக் காரணமாக இருந்தார்.
ஹார்லெம் இயக்கத்தின் மற்றொரு பிதாமகராகக் கருதப்படுபவர் டபிள்யூ. இ. பி. டு பாய்ஸ். 1919ஆம் வருடம் அவர் ‘இருண்ட நீர் – திரைக்குள் இருந்து கேட்கும் குரல்கள்’ (Darkwater: Voices from Within the Veil) என்ற நூலை வெளியிட்டார். அவரது சுயசரிதையின் முதலாம் பாகமான இந்தப் புத்தகத்தில் டு பாய்ஸ் அமெரிக்கக் கலாசாரத்திலும் ஜனநாயகத்திலும் ஊடுருவி இருக்கும் இனப் பாகுபாடுகளையும், அவை மனிதகுலத்தின் முன்னேற்றத்தை எப்படியெல்லாம் தடுக்கின்றன என்பதையும் விரிவாகப் பேசுகிறார்.
இந்தப் புத்தகம் அமெரிக்க இனப் பாகுபாடு நாட்களின் முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. இன, நிற வேறுபாடுகள் குறித்த அமெரிக்க மக்களின் – குறிப்பாக, வெள்ளையர்களின் – புரிதலை மாற்றியமைக்கக் கூடிய கருத்துக்களைக் கொண்டதாக உள்ளது. அதில், ‘வெள்ளையர்களின் ஆன்மா’ என்ற கட்டுரையில் அவர் வெள்ளையர்கள் கடைபிடிக்கும் கிறிஸ்தவத்துக்கும், அவர்கள் தூக்கிப் பிடிக்கும் நிறவெறிக்கும் இடையில் இருக்கும் தூரத்தைச் சுட்டிக் காட்டுகிறார். டு பாய்சுக்கு மட்டுமே உரித்தான நதி போன்ற உரைநடையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் ஹார்லெம் மறுமலர்ச்சியின் அனைத்து விதமான கலைஞர்களுக்கும் தங்களது ‘கறுப்பு’தன்மை பற்றிய புரிதலை ஏற்படுத்திய புத்தகமாகக் கருதப்படுகிறது.
0
மெட்டா வார்விக் ஃபுல்லர் தன்னுடைய 22ஆம் வயதில் கலைகள்பற்றிக் கற்றுக்கொள்ளப் பாரிஸ் நகருக்குச் சென்றார். அமெரிக்காவில் அவரது நிறத்தின் காரணமாகவும், அவர் பெண் என்பதாலும் சரியான கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எனவேதான் அவர் பாரிஸ் நகருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அங்குதான் அவர் சிற்பம் வடிக்கவும், மற்ற கலை வடிவங்களையும் கற்றுக் கொண்டார்.
1900ஆம் வருடம் பாரிசில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சியில், கறுப்பினத்தவர்களின் கண்காட்சியை வடிவமைக்கும் பொறுப்பு டு பாய்ஸிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் அங்குக் கறுப்பினத்தவர்களின் வாழ்வு குறித்து வைக்கப்படும் பொருட்களை வடிவமைக்கவும், அவற்றைச் சரியான முறையில் நிர்மாணிக்கவும் வேண்டிய பொறுப்பை மெட்டா ஃபுல்லரிடம் கொடுத்தார். அவரது திறமையை உணர்ந்த டு பாய்ஸ், மெட்டாவை வழிநடத்தினார்.
கறுப்பினத்தவர்கள் வாழ்வையும் துயரத்தையும் தன்னுடைய சிலைகளில் கொண்டு வந்த மெட்டாவின் மிகவும் புகழ்பெற்ற படைப்பு ‘எத்தியோப்பியா விழிக்கிறாள்’.

1921இல் நியூ யார்க்கில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றுக்காக டு பாய்ஸ், ஃபுல்லரிடம் சிற்பம் ஒன்றைச் செதுக்கித் தர கோரினார். அதன் விளைவாகவே இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டது. கறுப்பினப் பெண் ஒருத்தி எகிப்தியக் கல்லறை ஒன்றில் இருந்து எழுந்து நிற்கிறாள். அவளது கட்டுக்கள் அவிழ்ந்து கொண்டிருக்கின்றன. நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டிருக்கும் கறுப்பினத்தவர்களைக் குறிப்பதான இந்தச் சிற்பத்தில், கறுப்பினத்தவர்கள் ‘பயமின்றி எதிர்பார்ப்புடன்’ எதிர்காலத்தை நோக்குவதைக் குறிப்பதாகத் தெரிவிக்கிறார்.
ஃபுல்லரின் இந்தச் சிற்பம் ஹார்லெம் மறுமலர்ச்சிக் காலத்தின் கறுப்பின மக்களைச் சரியான முறையில் சித்தரிப்பதாகப் பாராட்டப்பட்டது. மிகவும் அழகான, நளினத்துடன் செதுக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பத்தை அந்தக் காலகட்டத்தின் மிகச் சிறந்த குறியீடாகவே பார்க்கலாம்.
அதுபோல, நாம் முன்பு பார்த்த மேரி டர்னரின் கொலையையும் ஃபுல்லர் தன்னுடைய சிற்பத்தின் மூலம் மௌனக் கண்டனமாகப் பதிவு செய்திருந்தார். 1919ஆம் வருடம் அவர் வடித்த இந்தச் சிற்பம் கறுப்பினத்தவர்களிடையே ஏற்பட்டிருந்த புதிய விழிப்புணர்வை வெளிக்கொணர்ந்து, ஹார்லெம் மறுமலர்ச்சியின் ஆரம்பத்தைக் குறிப்பதாக இருந்தது.
0
ஆனால் ஃபுல்லர் மட்டுமே இந்தக் காலகட்டத்தின் எதிர்பார்ப்புகளைத் தன்னுடைய படைப்பில் கொண்டு வரவில்லை. இன்னமும் பல கலைஞர்களும் அப்படியே செய்து கொண்டிருந்தார்கள்.
ஃபுல்லரின் சிற்பங்கள் ஹார்லெம் மறுமலர்ச்சியின் ஆரம்பம் என்றால், அதன் பின்னாட்களில் ரிச்மண்ட் பார்த்தே தன்னுடைய சிற்பங்களின் மூலமாக அதனை உச்சத்துக்குக் கொண்டு சென்றார். 1930களில் நியூ யார்க் நகரில் இவர் தன்னுடைய சிற்பக்கூடத்தை ஆரம்பித்துப் பல விதங்களில் கறுப்பினத்தவர்களின் உள்ளுணர்வுகளைச் சிலைகளாக வடிவமைத்தார்.

1916ஆம் வருடம் ஜேம்ஸ் வான் டெர் ஸீ, தன்னுடைய வருங்கால மனைவியுடன் சேர்ந்து ஹார்லெம் பகுதியில் ஒரு புகைப்பட ஸ்டூடியோவை ஆரம்பித்தார். ஹார்லெம் மறுமலர்ச்சிக் காலத்தின் மிகச்சிறந்த புகைப்பட நிபுணராகக் கருதப்படும் அவரது புகைப்படங்கள், அந்தக் காலங்களின் சமூக வாழ்வையும், கறுப்பின மக்களின் வாழ்வியலையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது.

1926ஆம் வருடம் ஹார்லெம் வழியாகப் பாரிசுக்குச் சென்று ஓவியம் பயில நினைத்த ஆரோன் டக்ளஸ், அலன் லாக்கின் எழுத்துக்களால் கவரப்பட்டு ஹார்லெமில் தங்கிவிட்டார். அங்கு டு பாய்ஸ் அப்போது பதிப்பித்துக் கொண்டிருந்த ‘தி கிரைசிஸ்’ பத்திரிகையில் படம் வரையும் வேலையில் சேர்ந்து கொண்டார். நவீன ஓவிய உலகில் தன்னுடைய தனித்துவமான ஆப்பிரிக்க-கறுப்பின ஓவியங்களால் அவர் தன்னுடைய கறுப்பின அனுபவங்களை வடித்தார்.
0
கலைஞர்கள் ஒருபக்கம் தங்களது படைப்புகள் மூலம் சாதனைகள் நிகழ்த்திக்கொண்டு இருந்த அதே நேரத்தில் ஹார்லெம் இடைவிடாத அரசியல் நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்தது. பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்த பலரும் தங்களது இளம் பருவத்தை ஹார்லெமிலேயே செதுக்கிக் கொண்டார்கள். மால்கம் எக்சின் இளம் பருவம் ஹார்லெமின் இரவு விடுதிகளிலேயே தொடங்கியது.
ஹார்லெம் மறுமலர்ச்சியின் முக்கியமான அரசியல் பிரமுகர், மார்கஸ் கார்வி (Marcus Garvey). மேற்கிந்தியத் தீவுகளின் ஜமைக்காவில் பிறந்த கார்வி, தன்னுடைய இளம் வயதில் இருந்தே இனவெறியின் கோர முகத்தைப் பார்த்து வளர்ந்தவர். தென்னமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த அவர், கறுப்பினத்தவர்களுக்கு என்று தனியாக ஒரு நாடு இல்லாமல் இருப்பதே அவர்கள் எல்லா இடங்களிலும் தாழ்வாக நினைக்கப்படுவதற்குக் காரணம் என்று எண்ணினார். இதை மாற்ற வேண்டுமென்றால், அவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் கருதினார்.
1914ஆம் வருடம் ஜமைக்காவில் அவர் உலகக் கறுப்பினத்தவர்களின் முன்னேற்ற இயக்கத்தை ஆரம்பித்தார். 1916இல் நியூ யார்க் நகருக்கு வந்த அவர், கறுப்பினத்தவர்களின் நெருக்கம் அதிகமான ஹார்லெம் பகுதியில் அதன் கிளையை நிறுவி, அங்கேயும் தன்னுடைய தேசியக் கொள்கையைப் பிரபலப்படுத்த ஆரம்பித்தார். கறுப்பினத்தவர்கள் தங்களது பூர்வ நிலமான ஆப்பிரிக்காவுடனான உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதும், தனித்தனி நாடுகளாகவும், காலனிகளாகவும் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நாடுகளையும், மக்களையும் ஒன்றிணைத்து, கறுப்பினத்தவருக்கான ஒரு முழு ஆப்பிரிக்க நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே அவரது இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.
ஒருவிதத்தில் ‘கறுப்புத் தேசியம்’ பேசிய முதல் கறுப்பினத் தலைவர் கார்வி என்பதுதான் உண்மை. கார்வி மிகவும் கவர்ச்சிகரமான தலைவராக இருந்ததால், அவரது இயக்கம் வேகமாக வளர்ந்தது. கார்வி தன்னை ‘இடைக்கால ஆப்பிரிக்கக் குடியரசுத் தலைவர்’ என்றும் அறிவித்துக் கொண்டார். கறுப்பினத்தவர்கள் அனைவரும் தங்களது நிலமான ஆப்ரிக்காவுக்குச் சென்று விடுவதே இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பது அவரது கருத்தாக இருந்தது. இதற்காக அவர் கு க்ளக்ஸ் கிளானின் தலைவரைக் கூடச் சந்தித்துப் பேசினார். இது போன்ற காரணங்களால் டு பாய்ஸ், பிலிப் ராண்டல் போன்ற மற்ற கறுப்பின தலைவர்களான அவரது உறவு மிகவும் மோசமாக இருந்தது.
பெரும் நீராவிக் கப்பல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து கொண்டிருந்த அந்த நாட்களில், வெள்ளையர்களின் கப்பல்களில் கறுப்பினத்தவர்கள் மோசமாக நடத்தப்படுவதால், தங்களுக்கு என்று தனியே ஒரு கப்பல் நிறுவனம் வேண்டும் என்று ‘பிளாக் ஸ்டார் லைன்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனக் கப்பல்கள் அமெரிக்காவில் இருந்து ஆப்ரிக்காவுக்குச் செல்லும் என்றும் அறிவித்தார். இந்த நிறுவனம், பல்வேறு தனி நபர்கள், கறுப்பின நிறுவனங்களிடம் பங்குகளை விற்று, கப்பல்களை வாங்கியது. ஆனால் பழைய கப்பல்களான அவை பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பே பழுதடைந்து விட்டன. மூன்று கப்பல்களில் ஒன்று மட்டுமே பயணம் மேற்கொள்ளும் நிலையில் இருந்தது. இதனால் அவர் மேலும் சில கப்பல்களை வாங்க பங்குகளை விற்க முயன்றார்.
ஆனால் அவர் பங்குதாரர்களை ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் என்றும், ரஷ்யப் புரட்சியைப்போல அமெரிக்காவிலும் புரட்சியைக் கொண்டு வர முயல்கிறார் என்றும் அமெரிக்க உளவுத்துறை அவர் மீது குற்றம் சுமத்திக் கைது செய்தது. அவர் இன்னமும் ஜமைக்காக் குடிமகனாக இருந்ததால், 1923இல் அவர் ஹார்லெமில் இருந்து ஜமைக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னரான நாட்களில் அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது.
இன்று, கறுப்புத் தேசியம் பேசிய முக்கியத் தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். கறுப்பினத்தவர்களுக்கு ஒரு புதிய பெருமிதத்தையும், தங்கள் மீதான நம்பிக்கையையும் உருவாக்கியவர் என்றும் கருதப்படுகிறார்.
(தொடரும்)