Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #22 – பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

கறுப்பு அமெரிக்கா #22 – பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

அக்டோபர் 29, 1929. அமெரிக்கப் பங்கு சந்தை வீழ்ந்தது. அதற்கு முன்பிருந்த நான்கு வருடங்களிலேயே இதற்கான சமிஞ்ஞைகள் தெரிந்தாலும், அந்த நாட்களில் குடியரசுத் தலைவராக இருந்த கூலிட்ஜ்ஜூம், 1929ஆம் வருடம் குடியரசுத் தலைவராக இருந்த ஹூவரும் சந்தை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் என்று நம்பினார்கள். அரசாங்கத்துக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை என்று கொள்கை உடையவர்களாக இருந்தார்கள். பங்குச்சந்தையைச் சரி செய்வதற்கு அவர்கள் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. விளைவு, அமெரிக்காவும் உலக நாடுகளும் பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தன.

இது ஹார்லெம் மறுமலர்ச்சி இயக்கத்தை பாதித்தது என்று முன்பே பார்த்தோம்.

இந்தப் பொருளாதாரப் பாதிப்பு அமெரிக்கா முழுவதும் எதிரொலித்தது. 1929ஆம் வருடத்தில் மட்டும் 850 வங்கிகள் வீழ்ந்தன. 1930இல் இந்த எண்ணிக்கை 1300ஆக உயர்ந்தது. 1933 வாக்கில் அமெரிக்கா முழுவதும் பெரிதும் சிறிதுமாக 7000க்கும் மேற்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மூடப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. 25 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் இருந்தார்கள்.

இதோடு நில்லாமல், 1930களின் ஆரம்பத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு அமெரிக்காவின் மத்தியப் பகுதிகளில் பெரும் தூசிப் புயல் வீசியது. இது அமெரிக்காவின் கோதுமைக் களஞ்சியம் என்று கருதப்படும் மாநிலங்கள் முழுவதையும் தரிசு நிலங்களாக மாற்றியது. விவசாயிகள் பிழைக்க வழியில்லாமல் நகரங்களுக்குக் குடிபெயர ஆரம்பித்தனர். அமெரிக்கா முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டது. மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாகத் திரிந்து கொண்டிருந்தார்கள்.

எல்லாப் பேரிடர்களிலும் நடப்பதுபோலவே இதிலும் மற்ற அனைவரையும்விட ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஏற்கெனவே எவ்விதப் பொருளாதாரப் பலமும் இல்லாமல் இருந்தவர்களின் அவர்களுடைய வாழ்க்கை திண்டாட்டமானது.

தென் மாநிலங்களில் கருப்பினத்தவர்களில் வெறும் 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் விவசாயக் கூலிகள். அதேபோல நகரங்களிலும் பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் வீட்டுவேலைகள், குறுகிய காலத் தற்காலிக வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். எனவே அமெரிக்காவில் பொருளாதாரப் பாதிப்பு ஆரம்பமாகி விவசாயம் பாதிக்கப்பட்டவுடன், வாழ்வாதாரத்தை முதலில் இழந்தவர்களும் அவர்களே. அதுபோல தற்காலிக வேலைகளுக்கும் வெள்ளையர்கள் போட்டியாக வந்தவுடன் கருப்பிந்தவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வேலைவாய்ப்பும் பறிபோனது.

தென்மாநில நகரங்களில், கறுப்பினத்தவர்களிடையே 50 சதவிகிதத்துக்கும் மேலாக வேலைவாய்ப்பின்மை நிலவியது. வடமாநிலங்களில் அவர்களது நிலை சிறிது மட்டுமே மேலாக இருந்தது.

0

அமெரிக்க ஜனநாயகத்தின் ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று, பெரும் நெருக்கடியான நேரங்களில், பெரும் தலைவர்களைக் கண்டறிவதுதான். உள்நாட்டுப் போரின்போது லிங்கனின் தலைமையும், அமெரிக்கப் புரட்சியின் பின்னாலான நாட்களில் வாஷிங்டனும், 1812ஆம் வருடம் இங்கிலாந்துடனான போரின் தோல்விக்குப் பின் மன்றோவும் அமெரிக்கா மீண்டும் தன்னுடைய பயணத்தை இன்னமும் உத்வேகத்துடன் தொடர உதவினார்கள். இதில் எந்த ஒரு காலத்திலும் அமெரிக்காவின் ஜனநாயகப் பரிசோதனை முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிடும் வாய்ப்பிருந்தது.

அதுபோலவே 1932ஆம் வருட தேர்தலிலும் நடந்தது. தெற்கில் அடிமைமுறையை வெளிப்படையாக ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், வடமாநிலமான நியூ யார்க்கின் ஆளுநருமான பிராங்கிளின் ரூஸ்வெல்ட் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரூஸ்வெல்ட் குடும்பம் நியூ யார்க் மாநிலத்தின் மிகவும் செல்வம் கொழிக்கும் குடும்பங்களில் ஒன்று. 1932 வரை மிகவும் பிரபலமாக இருந்தவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் இல்லை. அவரது தூரத்து சொந்தமும், குடியரசுத் தலைவராகவும் இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்தான். அவரது பாதையிலேயே பிராங்கிளினும் அரசியலைத் தொடர்ந்தார். 1921ஆம் வருடம் அவரது வாழ்வின் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.

விடுமுறையை வீட்டில் குடும்பத்தோடு செலவழித்துக் கொண்டிருந்த ஒரு நாள், அவரது இடுப்புக்குக் கீழுள்ள பகுதி முற்றிலுமாகச் செயலிழந்தது. அவர் வாழ்வில் நடக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்தார். நிற்பதற்கும் நடப்பதற்கும் பல கிலோ எடையுள்ள இரும்புத் தாங்கிகள் அவரது கால்களில் பொருத்தப்பட்டன. எஞ்சியுள்ள வாழ்நாட்களை அவர் சக்கர நாற்காலியிலேயே கழித்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

சமூகத்தில் ஒரு விதத்தில் ஒதுக்கப்பட்ட ஒருவனாக வாழ்வது என்றால் என்ன என்பதை அவர் அப்போது புரிந்து கொண்டார். ஒரு கறுப்பினத்தவரின் வாழ்வை அவரால் எப்போதும் வாழ முடியாது என்றாலும், அந்த வாழ்வின் கொடுமைகளை அவர் புரிந்து கொள்ள, இந்த நோய்மைக் காலம் உதவியது.

அந்தக் கடுமையான நாட்களின் ஊடேயும், அவர் தன்னுடைய அரசியல் வாழ்வை முடித்துக்கொள்ளத் தயாராக இல்லை. மீண்டும் அப்படியே அரசியலில் ஈடுபட்டு, 1928ஆம் வருடம் நியூ யார்க் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0

1932ஆம் வருடம் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கக் குடியரசுத் தலைவராகவும் ஆனார். அவர் நியூ யார்க் மாநில ஆளுநராக அந்த மாநிலத்தில் நிறைவேற்றியிருந்த திட்டங்கள் அவரை வடமாநில முற்போக்குவாதிகளிடம் பிரபலமாக ஆக்கியிருந்தன. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் தென்மாநில வெள்ளையர்களும் அவரை ஆதரித்தனர். இப்படி இனவெறிப் பிரச்சினையில் இரு துருவங்களில் இருந்த அவரது ஆதரவாளர்கள், அவரது ஆட்சியில் இருபுறமும் அவரை இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.

ரூஸ்வெல்ட் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் தன்னுடைய ‘புதிய ஒப்பந்தம்’ எனும் திட்டங்களை அமல்படுத்தினார். அந்தத் திட்டங்கள் அரசாங்கத்தை முழுமூச்சாக மக்களுக்கு உதவும் வண்ணம் மாற்றியது. அமைச்சரவை முழுவதும் அவருடன் ஒத்த கருத்துள்ளவர்களால் நிரப்பப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் நோக்கம் மக்களுக்கு நன்மை செய்வதற்கே என்பதுதான் ரூஸ்வெல்ட்டின் கொள்கை. அதாவது மக்களை நோக்கிச் செயல்பட்டு, தேவையானவர்களுக்கு அந்த நன்மைகள் சென்று சேர வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

இதன் பொருட்டு அவர் அரசை விரிவாக்கம் செய்தார். பல்வேறு நலத்துறைகள் தோற்றுவிக்கப்பட்டன. ஒவ்வொருத் துறையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டது. அவரது ஆட்சி காலத்தில் மொத்தம் 69 அரசாங்கத் துறைகள் தொடங்கப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், நிகழ்வுகளிலும் அரசின் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

1933ஆம் வருடத்துக்கு முன் கறுப்பினத்தவர்களுக்கு நேரடியாக அரசாங்கத்தின் உதவி என்பதோ, அரசாங்கம் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறது என்பதோ கூட தெரிந்ததில்லை. அவர்கள் அரசின் அதிகார மையங்களை மட்டுமே பார்த்திருந்தார்கள். இப்போது ரூஸ்வெல்ட்டின் ஆட்சியில் முதல் முறையாக ஒரு அரசு தங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதைக் கண்டார்கள்.

‘நமது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது ஏற்கெனவே அதிகமாக வைத்திருப்பவர்கள் இன்னமும் செல்வம் சேர்க்கிறார்கள் என்பதல்ல; ஒன்றும் இல்லாமல் இருப்பவர்களுக்கு நாம் போதுமான உதவி செய்யவில்லை என்பதுதான்’ என்பதைத் தன்னுடைய கொள்கையாகவே அறிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் ரூஸ்வெல்ட்டின் உள்துறை அமைச்சரான ஹரால்ட் இக்ஸ், முதல்முறையாக ஒன்றிய அரசில் கறுப்பினத்தவர்களை அதிக அளவில் வேலைக்கு எடுத்துக் கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டார். இதன் முதல் படியாக அவர் பதவியேற்றவுடனேயே 30 கறுப்பினத்தவர்களை ஒன்றிய அரசின் பல துறைகளிலும் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். இது ரூஸ்வெல்ட்டின் ‘கறுப்பு அமைச்சரவை’ என்று அழைக்கப்பட்டது. இவர்களது நோக்கம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அனைவரையும், குறிப்பாகக் கறுப்பினத்தவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான். இதை அவர்கள் நேரடியாகக் கண்காணிப்பதன் மூலமாக செய்தார்கள்.

1936ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் கறுப்பினத்தவர்கள், தாங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருந்த லிங்கனின் குடியரசுக் கட்சியை முழுமையாக நிராகரித்துவிட்டு, ரூஸ்வெல்ட்டின் ஜனநாயகக் கட்சிக்குத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தார்கள். இப்போது நிறவெறி கொள்கையில் இரண்டு துருவங்கள் மட்டுமல்ல, நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்களும் ரூஸ்வெல்ட்டின் ஆதரவாளர்களானார்கள்.

0

 ரீட்ஸ்வில், ஜார்ஜியா, அக்டோபர் 19, 1935.
மதிப்புக்குரிய பிராங்கிளின் டி. ரூஸ்வெல்ட்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
வாஷிங்டன் டி.சி

அன்புள்ள குடியரசுத் தலைவருக்கு,

மிகவும் துயரத்தில் இருக்கும் எனது மக்களுக்கு உணவு பொருட்களும், மற்ற பொருட்களும் வழங்குமாறு இங்கே பொறுப்பில் இருப்பவர்களிடம் தாங்கள் தயவு செய்து தெரிவிக்க முடியுமா? இதுகுறித்து உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், இங்கே நிவாரணப்பணியில் இருக்கும் அதிகாரிகள், நீங்கள் அனுப்புவதை எல்லாம் அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு புதன் கிழமையும் நிவாரணப் பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், கறுப்பின மக்கள் ஒவ்வொருத்தருக்கும் சில பதப்படுத்தப்பட்ட இறைச்சித் துண்டுகள் மட்டுமே கிடைக்கிறது. வெள்ளையர்களுக்கோ போர்வைகள், புது துணிகள் போன்றவைக் கொடுக்கப்படுகின்றன. உங்கள் நேரத்தை வீணடிக்காமல் ஓர் உதாரணம் மட்டும் சொல்லிவிடுகிறேன். இங்கே நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும், இங்கிருக்கும் வங்கியின் பங்குதாரரான நான்சி ஹென்றிக்ஸ்க்குப் போர்வைகளும், நல்ல உணவும் எப்போதும் கொடுக்கப்படுகிறது. இதுபோல பல உதாரணங்களை நான் காட்ட முடியும்.

குடியரசுத் தலைவரே, எங்களுக்கு உதவுங்கள். ஏனென்றால் நாங்கள் உதவி எதுவும் இன்றி இருக்கிறோம். நீங்கள் குடியரசுத்தலைவர் என்பதும், நல்ல கிறிஸ்துவர் என்பதும் எங்களுக்குத் தெரியும். உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம். நான் என் பெயரைக் கையெழுத்திட முடியாது. என்னை இங்கிருந்து அடித்து, துரத்திவிடுவார்கள்.

———–

தென் மாநிலமான ஜார்ஜியாவில் இருந்து ரூஸ்வெல்டுக்கு வந்த இந்தக் கடிதம், அவரது திட்டங்களில் இருந்த குறைகளைச் சுட்டிக் காட்டுகிறது. அரசு மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பல திட்டங்களைத் தீட்டினாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாநில அதிகாரிகளிடம் இருக்கிறது. அவர்களின் நிறவெறி இந்தத் திட்டங்களின் பயன், தேவைப்படுபவர்களுக்குச் சென்றடைவதில் தடைகளை உண்டாக்கியது.

இதைவிட அதிகமான தடைகள் தென்மாநில அரசியல்வாதிகளிடம் இருந்தே வந்தது. மக்களின் நலத்திட்டங்கள் பலவற்றிலும் கறுப்பினத்தவர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டார்கள். உதாரணமாக, குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில், கறுப்பினத்தவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள். ஆனால் வெளிப்படையாக அப்படிச் சட்டத்தில் எழுதப்படவில்லை. மாறாக, இந்தத் திட்டங்களில் நிலங்களில் வேலை செய்பவர்களும், வீட்டு வேலை செய்பவர்களும் செல்லாது என்று சட்டத்தில் எழுதப்பட்டது. பெரும்பாலும் கறுப்பினத்தவர்களே இத்தகைய வேலைகளில் இருந்ததால், அவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டார்கள். நிறவெறி இப்படியே வேலை செய்தது.

ஆனால் அமெரிக்காவில் நிறவெறியை ஒழிப்பதில் ரூஸ்வெல்டுக்கு இன்னுமொரு வலுவான துணை இருந்தது. அது அவரது மனைவி, எலினோர் ரூஸ்வெல்ட்(Eleanor Roosevelt). எலினோர், பிராங்கிளின் இடையிலான உறவு கிட்டத்தட்ட ஒப்பந்த உறவைப் போன்றது. 1920களில், பிராங்கிளினுக்குக் கால்கள் செயலிழந்த காலத்தில், எலினோர் அவரை மிகுந்த அன்புடன் கவனித்து வந்தார். ஆனால் அந்த நேரத்தில் பிராங்கிளினுக்கு அவரது இளம் காரியதரிசியுடன் உறவிருந்தது தெரிய வந்தது. எலினோரை விவாகரத்துச் செய்வது தன்னுடைய குடியரசுத் தலைவராகும் ஆசையை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் என்பதால், அவர்கள் ஓர் எழுதா உடன்படிக்கைக்கு வந்தனர். இதன்படி பிராங்கிளின் குடியரசுத் தலைவராக எலினோர் உதவ வேண்டும், பதிலுக்கு எலினோரின் மனதுக்கு நெருக்கமான சமூக வேலைகளுக்குப் பிராங்கிளின் உதவ வேண்டும் என்பதுதான் அது. அதிர்ஷ்டவசமாக எலினோரின் கவனம் முழுவதும் பெண்கள் நலனிலும், கறுப்பினத்தவரின் உரிமைகளிலும் இருந்தது.

பிராங்கிளின் ரூஸ்வெல்ட் குடியரசுத் தலைவரான பின்னர், எலினோர் கறுப்பினத்தவர்களின் உரிமைக்கான முதல் அடியாக, வெள்ளையர்கள் கும்பல் கொலைகள் செய்வதைக் குற்றமென கருதும் சட்டத்தை இயற்ற அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். அப்போதைய ‘கறுப்பினத்தவர்களின் முன்னேற்றத்துக்கான தேசிய இயக்கத்தின்’ (NAACP) தலைவரான வால்டர் வைட்டுடன் (Walter White) எலினோர் கைகோர்த்துக் கொண்டார். 1933ஆம் வருடம் மேரிலாண்டில் ஒரு கறுப்பினத்தவர் 3000 வெள்ளையர்களால் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள்) கொலை செய்யப்பட்டார். அதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ரூஸ்வெல்ட்டுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தென் மாநிலங்களில் கும்பல் கொலைகள் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் கிராண்டுக்குப் பின்னர், முதல் முறையாக ரூஸ்வெல்ட் தன்னுடைய வழக்கமான வாராந்திர வானொலி ஒலிபரப்பில் பேசினார்.

‘நம்மிடையே மீண்டும் கிளம்பியிருக்கும் கும்பல் கொலைக்கு எதிரான பேச்சுக்களால் மட்டும் இப்போதைய புதிய தலைமுறை திருப்தி அடைவதில்லை. இந்தக் கொலைகள் ‘நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக’ என்ற விவிலியத்தின் கட்டளைக்கு எதிரான கீழ்ப்படியாமை. கும்பல் கொலைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆதரிப்பவர்கள் எத்தனை உயர்வானவர்களாக இருந்தாலும் தாழ்வானவர்களாக இருந்தாலும் நாங்கள் மன்னிக்கப் போவதில்லை’ என்று பேசினார். இது அப்போதைய அரசியல் சூழலில் கறுப்பினத்தவர்கள் தங்களது உரிமைகளை நோக்கி நடத்திய போராட்டத்தில் முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்பட்டது. பிராங்க்ளினின் இந்தப் பேச்சுக்குப் பின்னர் எலினோரின் அழுத்தமும் இருந்தது.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு கும்பல் கொலைகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தென் மாநிலப் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது. பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அந்தச் சட்ட வரைவை ஆதரித்தாலும், தான் அது குறித்து வெளிப்படையாக பேசுவது, தன்னுடைய புதிய ஒப்பந்தத்தின் மற்ற சட்டங்களைப் பாதிக்கும் என்று வெளிப்படையாக வால்டர் வைட்டிடம் தெரிவித்துவிட்டார்.

ஆனால் எலினோர் அத்தோடு இதை விடவில்லை. மீண்டும் ஒரு முறை 1937ஆம் வருடம் அதே சட்ட வரைவு கொண்டு வரப்பட்டது. அப்போதும் செனட் சபை இதைத் தோற்கடித்தது. அந்தச் சட்டவரைவின் விவாதங்களின்போதும், ஓட்டெடுப்பின் போதும் பல நாட்கள் செனட் சபையின் பார்வையாளர் பகுதியில் எலினோர் அமர்ந்துகொண்டு சட்டத்துக்குத் தன்னுடைய ஆதரவையும், செனட் சபைப் பிரதிநிதிகளுக்குத் தன்னுடைய கண்டனத்தையும் மௌனமாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

எலினோரின் ஆதரவு, கறுப்பினப் பிரதிநிதிகளுக்கும் வெள்ளை மாளிகைக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது குடியரசுத் தலைவரிடம் கருப்பினத்தவர்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக வைக்க முடிந்தது. அவர்களுக்கு ஆதரவாகவும் வெளிப்படையாகவும் பேச அங்கேயே ஒரு குரல் இருந்தது. கறுப்பினத் தலைவர்கள் எந்த நேரமும் நேரடியாக ரூஸ்வெல்ட்டைச் சந்திக்க முடிந்தது.

எலினோர் கறுப்பினத்தவரின் கலாசார, கலை, இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் தன்னுடைய ஆதரவை வெளிப்படையாகக் கொடுத்தார். 1939இல் கறுப்பினக் கலைஞர்களும், சாதாரண கறுப்பின மக்களும் இணைந்து நாட்டில் எதிர்கொள்ளும் நிறவெறியையும் பாகுபாடுகளையும் எடுத்துக் காட்டும் நிகழ்வு ஒன்றை நடத்தினர். இதற்கு எலினோரின் ஆதரவு இருந்தது. அதேபோல கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்ட விவாதங்கள் நடந்த காலத்தில், வாஷிங்டன் நகரில் கும்பல் கொலைகளுக்கு எதிராகக் கறுப்பினத்தவர்களின் ஓவிய, சிற்பக் கண்காட்சியிலும் எலினோர் கலந்து கொண்டார். இவை சிறு, அடையாளக் கண்டனங்களாகத் தெரிந்தாலும், அதுவரை வெள்ளை மாளிகையில் இருந்து கறுப்பினத்தவர்களின் பிரச்னைகளை யாரும் பேசியதே இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மரியோன் ஆண்டர்சனுடன் எலினோர் ரூஸ்வெல்ட்

மரியோன் ஆண்டர்சன்(Marian Anderson) உலகப் புகழ்பெற்ற கறுப்பின ஓபரா பாடகி. அவரது நிகழ்ச்சிகள் 1930களில் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன. அப்போது வாஷிங்டன் நகரில் கான்ஸ்டிடூஷன் அரங்கம் என்ற இடத்தில் அவரது நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுக் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த அரங்கத்தை ‘அமெரிக்க புரட்சியின் மகள்கள்’ என்ற சங்கம் நிர்வகித்து வந்தது. அமெரிக்கப் புரட்சியில் பங்கெடுத்தவர்களின் மகள்கள் வழி பெண்களின் சங்கம் இது. எலினோரும் இந்தச் சங்கத்தில் உறுப்பினர். முழுவதும் வெள்ளையினப் பெண்களை மட்டுமே கொண்ட இந்தச் சங்க நிர்வாகிகள், மரியோனின் கோரிக்கையை நிறத்தைக் காரணம் காட்டி நிராகரித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட எலினோர் ரூஸ்வெல்ட் கோபமும் வருத்தமும் கொண்டார். சங்கத்தில் இருந்து விலகிய அவர், தான் ஏன் விலகினேன் என்று விரிவாக ஒரு பத்தியும் பத்திரிகைகளில் எழுதினார். அது மட்டுமல்லாமல், வாஷிங்டன் நகரில் இருந்த லிங்கன் நினைவிடத்தில், திறந்தவெளியில் மரியோன் ஆண்டர்சனின் பாடல் நிகழ்ச்சியை நடத்தவும் தன் கணவரிடம் அனுமதி வாங்கினார். 75000 பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்வு, மிகவும் வெளிப்படையாக நாட்டில் நிலவி வரும் இன, நிறப்பாகுபாடுகளைச் சுட்டிக் காட்டுவதாக இருந்தது. அதுவும் குடியரசுத் தலைவரின் மனைவியின் முயற்சியால், இது அரசியல் பேசுபொருளாகவும் ஆனது.

எலினோரின் இந்த நடவடிக்கைகள் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டின் காலத்துக்குப் பின்னரும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் கு க்ளக்ஸ் கிளான் அவரது தலைக்கு 50,000 டாலர்கள் விலை நிர்ணயித்தது. ஆனால் எதனாலும் அந்தப் பெண்மணியின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை.

0

‘புதிய ஒப்பந்த’ காலமும், சட்டங்களும் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், எலினோரின் முயற்சிகளால் கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தை மீண்டும் அரசியல் பேசுபொருளாக முன்னுக்குக் கொண்டு வந்தது. அந்தச் சட்டங்கள் இன்னமும் பாகுபாடுகளைக் களையவில்லை என்றாலும், அவர்கள் இன்னமும் பெரிய விலைகளைப் போராட்டத்தில் கொடுக்க வேண்டியிருந்தாலும், ரூஸ்வெல்ட்டின் முதல் எட்டு வருடங்கள், போராட்டத்தை என்ன விதமாக முன்னெடுக்க வேண்டும், அரசியல் அழுத்தங்களையும் ஆதரவையும் எப்படிச் சட்டங்களாக மாற்ற வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுப்பதாக இருந்தது.

இந்த இடத்தில் இருந்து அவர்களது உரிமைப் போராட்டம் அமெரிக்க அரசியலில் தவிர்க்க முடியாததாக மாறியது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *