1939ஆம் வருடம் ஹிட்லர் போலாந்தை ஆக்ரமித்தான். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஒரு வருடத்திலேயே போர் இங்கிலாந்தை நெருங்கியது. ஜெர்மனியின் அசுர பலத்தைத் தனியாக எதிர்கொள்ள முடியாத இங்கிலாந்து, அமெரிக்காவிடம் பொருளாதார உதவியைக் கேட்டது. கடன்-குத்தகை ஒப்பந்தத்தின் மூலமாக இங்கிலாந்துக்கு உதவ அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அமெரிக்கத் தொழிற்சாலைகள் போர்ப்பணியில் முடுக்கி விடப்பட்டன.
1940களில் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் கார் தொழிற்சாலைகளின் தலைமையிடமாக இருந்தது. பெரும் தொழிற்சாலைகள் மிகுந்த அந்த நகரம், வேலை தேடி வரும் அனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தவறாமல் வழங்கும் நகரமாகவும் இருந்தது.
தெற்கில் இருந்து பெருமளவில் வடக்கிற்கு வந்து கொண்டிருந்த கறுப்பினத்தவருக்கு டெட்ராய்ட் மிகுந்த கவர்ச்சிகரமான நகராக இருந்தது. தொழிற்சாலையில் வேலை, அதனுடன் சமூகத்தில் கிடைக்கும் புதிய இடம் என அனைத்தும் அவர்களை டெட்ராய்ட் நகரை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால், வடக்கில் பெரிய நகரங்களில் இருந்ததுபோல இங்கும் நிறவெறி சத்தமில்லாமல் வேலை செய்துகொண்டிருந்தது.
கறுப்பினத்தவர்களுக்கு இருப்பதிலேயே உடல் உழைப்பு அதிகமாகக் கோரும் வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை என்றில்லாது, உடல் உழைப்பைக் கேட்கும் வேலைகளுக்கு மட்டுமே கறுப்பினத்தவர்கள் சரியானவர்கள் என்ற பார்வை இருந்தது. எனவே பெரும் கார் தொழிற்சாலைகளில், மிகுந்த குறைவான சம்பளத்தைக் கொண்ட, வார்ப்பக (Foundry) வேலைகள் மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே வேறு பகுதிகளில் வேலை செய்த சிலருக்கும் சம்பளம் என்பது வெள்ளையர்களின் சம்பளத்தைவிட மிகவும் குறைவாகவே இருந்தது.
ஆனால் மற்ற இடங்களைவிட டெட்ராய்ட் நகரில் இருந்த அதிக வேலைவாய்ப்பின் மூலம் கறுப்பினத்தவரால் நடுத்தர வர்க்க வாழ்வை எட்ட முடிந்தது. இதுவே அவர்களை இந்த நகரை நோக்கி இழுத்து.
போர் ஆரம்பித்தவுடன், நகரத் தொழிற்சாலைகள் எல்லாம் போர் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டன. கார் தயாரித்த தொழிற்சாலைகள் இப்போது போர் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தன. இதனால் இன்னமும் ஆட்கள் வேலைக்குத் தேவைப்பட்டார்கள். இருந்தாலும், கறுப்பினத்தவர்களைத் தகுதியான வேலைக்கு எடுப்பது மட்டும் அப்போதும் சாத்தியமாகவில்லை.
0
எ. ஃபிலிப் ரண்டால்ஃப், புளோரிடா மாநிலத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு பாதிரியார் என்பதால், ஓரளவுக்கு வசதியான குடும்பம். அவரால் பள்ளிப்படிப்பை முடிக்கவும் முடிந்தது. அப்போது அவர் வாசித்த டு பாய்ஸின் ‘கறுப்பின மக்களின் ஆன்மா’ புத்தகம் அவரைக் கறுப்பினத்தவரின் உரிமைக்காகப் போராடும் திசையை நோக்கித் திருப்பியது. அந்தக் காலகட்டத்தின் பலரைப்போல அவரும் நல்ல வாழ்வை எதிர்பார்த்து வடமாநிலங்களை நோக்கிக் கிளம்பினார்.
நியூ யார்க் நகரில் சோசலிசக் கருத்துக்களால் கவரப்பட்ட அவர், தனது நண்பருடன் சேர்ந்து பத்திரிகை ஒன்றை நடத்த ஆரம்பித்தார். அமெரிக்கச் சோசலிச கட்சியிலும் உறுப்பினரானார். பொருளாதார விடுதலை இல்லாமல் எந்த இனத்துக்கும் விடுதலை இல்லை என்ற அவர், அதை நோக்கித் தன்னின மக்களைத் தொழிலாளர்களாக ஒன்றிணைக்கும் பணியில் இறங்கினார்.
புல்மேன் நிறுவனம் ரயில் வண்டிகளில், பயணிகள் பெட்டிகளைத் தயாரிக்கும் நிறுவனமாகும். அந்த நிறுவனமே பல வண்டிகளை இயக்கவும் செய்தது. அந்த வண்டிகளில் முதல் வகுப்புப் பிரயாணிகளுக்கு என்று தனியாகப் பணியாற்றப் பணியாட்களை நியமித்தது. புல்மேன் நிறுவனத்தில் இவ்விதம் பணியாளாக வேலை செய்வது கறுப்பினத்தவர்கள் இடையே மிகவும் பிரபலமாக இருந்தது. பெரும்பாலும் அவர்களே இந்த வேலையில் இருந்தார்கள். ஆனால் நிறுவனம் அவர்களுக்குச் சரியான வேலை நேரங்களையோ, போதுமான சம்பளத்தையோ உறுதி செய்யவில்லை. நிறவெறி கொண்ட பிரயாணிகளையும் இவர்களே சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே ரண்டோல்ப் இந்தப் பணியாளர்களை ஒன்றிணைக்க ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினார்.
ஆனால் புல்மேன் நிறுவனம் சங்கத்தை அங்கீகரிக்காமல், தடை செய்து வந்தது. பிராங்கிளின் ரூஸ்வெல்ட் குடியரசுத் தலைவரானவுடன், 1934இல் ரயில்வே பணியாளர் சட்டத்தின் மூலம், இவர்களை ஒன்றியச் சட்டங்களின் கீழ் கொண்டு வந்தார். எனவே அந்நிறுவனம் இப்போது சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ரண்டோல்ப் கறுப்பினப் பணியாளர்களுக்கு வார விடுமுறை, அதிகப் பணி நேரத்துக்குச் சம்பளம், மேலும் 2 மில்லியன் டாலர் அளவில் அனைவர்க்கும் சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற்றுத் தந்தார். இதன் மூலமாக அமெரிக்கக் கறுப்பினத்தவரின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் முக்கியமான போராளியாக அவர் அடையாளம் காணப்பட்டார்.
எனவே டெட்ராய்ட் நகரில் வேலைகளில் நிலவும் நிறப்பாகுபாடுகள் அவரது பார்வைக்கு வந்தவுடன், அது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
இந்தியாவில் மகாத்மா காந்தி நடத்தி வந்த ஒத்துழையாமை மற்றும் அகிம்சா போராட்டங்கள் குறித்து அவர் படித்திருந்தார். அது குறித்து மற்ற தலைவர்களுடன் விவாதிக்கவும் செய்திருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு அதுவே சரியான வழி என்று நினைத்தார். எனவே டெட்ராய்ட் நகர நிறப்பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர காந்தியின் வழியைத் தேர்ந்தெடுத்தார்.
அப்போது ‘கறுப்பினத்தவர்களின் முன்னேற்றத்திற்கான தேசிய இயக்கத்திற்கு’ (NAACP) தலைவராக இருந்த வால்டர் வைட்டுடன் இணைந்து, 50,000 கறுப்பினத்தவர்களைத் திரட்டி, வாஷிங்டன் நகரை நோக்கிப் பேரணியாகச் செல்வது என்று திட்டமிட்டார். அந்தப் பேரணி ‘வேலைகளுக்காகவும், உரிமைகளுக்காகவுமான பேரணி’ என்று பெயரிடப்பட்டது.
உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், உள்நாட்டிலும் போராட்டங்கள் நடப்பதைப் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் விரும்பவில்லை. எனவே ரண்டோல்ப்பைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில், ரூஸ்வெல்ட் நேரடியாக என்ன வேண்டும் என்றே கேட்டார்.
குடியரசுத் தலைவரின் ஆணை 8802 வெளியிடப்பட்டது. பாதுகாப்புத்துறை நிறுவனங்களிலும், போர்க்கால உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும், வேலைகளில் இனம், மொழி, நிறம் என எந்தப் பாகுபாடும் பார்க்காமல், அனைவரையும் சமமான முறையில் நடத்தி வேலைகளை வழங்க வேண்டும் என்ற அந்த ஆணை, உரிமைப் போராட்டத்தின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஒன்றிய நிறுவனங்களில், அதிலும் பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் மட்டுமே அமுல்படுத்தப்படப் போகும் இந்த ஆணையை, சில கறுப்பினத் தலைவர்கள் மிகவும் குறுகியதாகப் பார்த்தார்கள்.
1943ஆம் வருடம் டெட்ராய்ட் நகரில் இனக்கலவரம் வெடித்தது. 25 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தின் காரணம், கறுப்பினத்தவர்கள் தங்களது வேலைகளுக்குப் போட்டியாக வருவதாக வெள்ளையர்கள் கருதியதுதான் என்று சொல்லப்பட்டது. ஆனாலும் இந்த முறை கறுப்பினத்தவர்களும் திருப்பித் தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.
ஆணையைச் சரியாக நடைமுறைப்படுத்த ரூஸ்வெல்ட், புதிதாக நியாயமான வேலைவாய்ப்ப்பை உறுதி செய்யும் குழு ஒன்றை நியமித்தார். FEPC (Fair Employment Practices Commission) என்றழைக்கப்பட்ட அந்தக் குழுவின் பணி, பாதுகாப்புத் துறையில் இருந்து வேலை கொடுக்கும் நிறுவனங்கள் தங்களது வேலைகளில், இன, நிறப்பாகுபாடு பார்க்காமல் இருக்கின்றனவா என்று உறுதி செய்வதுதான்.
0
இரண்டாம் உலகப்போரின்போதும் அமெரிக்க ராணுவமும் நிறப்பிறவினையைத் தொடர்ந்தது. கறுப்பினத்தவர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும், அவர்கள் தனிக்குழுவாகவே இருந்தார்கள். வெள்ளையர்களுடன் கலப்பது வெளிப்படையாகத் தடை செய்யப்படவில்லை என்றாலும், அதை யாரும் விரும்பவும் இல்லை.
கறுப்பின வீரர்கள் உலகப்போர் நடந்த எல்லா வருடங்களிலும் ராணுவத்தினால் தனியாகவே நடத்தப்பட்டார்கள். 1944ஆம் வருடம் பல்ஜ் யுத்தத்தில் மட்டுமே 2500 கறுப்பின வீரர்கள், வெள்ளை வீரர்களோடு சேர்ந்து தாக்குதல் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டார்கள்.
கறுப்பினத்தவர்களால் விமானங்களைச் சரியாக இயக்க முடியாது என்ற முடிவில் இருந்த அமெரிக்க விமானப்படை, போரின் ஆரம்பத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கத் தெரிந்த அனைத்து இனத்தினரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. அந்தத் திட்டத்தில் அலபாமாவில் இருக்கும் டூஸ்கிகீ பல்கலைக்கழகத் தளத்தில் பயின்ற பல கறுப்பினத்தவர்கள் விண்ணப்பித்தார்கள். மற்ற அனைவரையும்விடக் கறுப்பினத்தவரைத் தேர்வு செய்ய அதிகத் தகுதிகளும், நிறையத் தேர்வுகளும் கொடுக்கப்பட்டன. அப்படியும் பலர் தேர்வாயினர். இவர்களைத் தனி விமானப்படைக் குழுவாக 1941இல் சேர்த்தாலும், அவர்களுக்குப் போரில் ஈடுபட வாய்ப்பு 1943ஆம் வருடமே கொடுக்கப்பட்டது.
இப்படிப் பல்வேறு பேதங்கள் பார்க்கப்பட்டாலும், தங்களின் ரத்தத்தின் மூலமாக முதல் தரக் குடிமக்களாகக் கருதப்பட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இரண்டாம் உலகப்போரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் போரிட்டார்கள்.
0
பிப்ரவரி 12, 1946ஆம் வருடம். ஐசக் வுடார்ட் அமெரிக்க ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, தன்னுடைய சொந்த ஊரான, தெற்குக் கரோலினாவின் வின்ஸ்போரோவுக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். தனக்கு அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதால், வழியில் எங்காவது நிறுத்துமாறு பேருந்து ஓட்டுனரைக் கேட்டுக் கொண்டார். ஓட்டுநர் மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அடுத்த நிறுத்தமான பேட்ஸ்பர்க் என்ற நகரில் அவர் இறக்கி விடப்பட்டார்.
நிறுத்தத்தில் அவருக்காக இரண்டு காவலர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர் ராணுவத்தில் இருந்து வருகிறாரா என்ற கேள்வி மட்டுமே கேட்கப்பட்டு, ஐசக் அங்கேயே லத்தியால் அடிக்கப்பட்டார். ராணுவ வீரர் என்பதால் அவர் எதிர்த்துப் போரிட முயலவே, அவரது தலையில் துப்பாக்கியால் அடிக்கப்பட்டார். கீழே விழுந்த அவர் மீது நடத்தப்பட்ட மிருகத் தாக்குதலில் அவரது கண்கள் இரண்டும் குருடாயின. மறுநாள் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், தனக்கு நீதி வேண்டி நியூ யார்க் நகரில் NAACP அலுவலகத்தைச் சென்றடைந்தார். அப்போதுதான் அவருக்கு நடந்த அநீதி வெளியில் தெரிய வந்தது.
ஆர்சன் வெல்ஸ் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குநரும் ஆவார். வாராவாரம் வானொலியில் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அவர், வுடார்டின் கதையைக் கேட்டு தொடர்ச்சியாக ஐந்து வாரங்கள் தன்னுடைய நிகழ்ச்சியில் பேசினார். ‘ஒரு கறுப்பினத்தவராக இருக்க என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கிறது? தெற்குக் கரோலினாவில் ஒரு மனிதன் தன்னுடைய கண்களைக் கொடுக்க வேண்டியிருந்தது!’ என்று பேசிய அவர், தன்னுடைய நிகழ்விலேயே அந்தக் காவலர்கள் இருவரையும் பெயரிட்டு, நீதி வேண்டும் என்று கேட்டார்.
இந்த அழுத்தங்களிலேயே அந்தக் காவலர்கள் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்றத்தில், வெள்ளையர்கள் மட்டுமே இருந்த ஜூரி குழு அவர்களை எந்தக் குற்றமும் சாட்டாமல் விடுவித்துவிட்டது.
‘மூன்றரை ஆண்டுகள் என் நாட்டிற்காகச் சேவை செய்து விட்டு நாடு திரும்பினேன். இப்போதாவது நான் மனிதனாக நடத்தப்படுவேன் என்று நினைத்தேன். அது தவறு என்று தெரிகிறது’ என்றார் வுடார்ட். ஆனால் அவரது தியாகத்திற்கு முழுவதும் அர்த்தமில்லாமல் போகவில்லை.
வால்டர் வைட் நடந்த அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவர் ஹாரி ட்ரூமனிடம் தெரிவித்தார். 1947ஆம் வருடம் NAACPயின் வருடாந்திர மாநாட்டில் பேசிய ட்ரூமன்,
‘நான் உங்களிடம் சுதந்திரம் பற்றியும், உரிமைகள் பற்றியும் பேச விரும்புகிறேன். நம்முடைய நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் சுதந்திரத்தையும், சம உரிமையையும் கொடுக்கும் முயற்சியில் ஒரு திருப்புமுனையான இடத்தை வந்தடைந்துவிட்டோம் என்பது என்னுடைய நம்பிக்கை. சமீபத்தில் நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடந்திருக்கும் சம்பவங்கள், எப்போதையும்விட இந்த நேரத்தில் அமெரிக்கர்கள் அனைவரும் உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்வது அவசியம் என்பதை அதிகமாக நமக்கு உணர்த்துகிறது.
நான் அனைத்து அமெரிக்கர்கள் என்று சொல்லும் போது – நான் அனைத்து அமெரிக்கர்களையும் குறிக்கிறேன்’ என்றார்.
பேச்சோடு நின்றுவிடாமல், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க ராணுவத்தில் நிலவி வந்த நிறப்பாகுபாடுகளை உடனடியாக அகற்றி உத்தரவிட்டார். அதோடு புதிதாக ஒரு சம உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஆலோசனைக் குழு ஒன்றையும் அமைத்தார். முதல் முறையாகப் பிரதிநிதிகள் சபையில் சம உரிமைச் சட்டம் ஒன்றை இயற்றும்படி கேட்டுக் கொண்டார். பிரதிநிதிகள் சபை அதை நிராகரித்தது.
0
1946ஆம் வருடம், ஐரீன் மோர்கன் என்ற பெண்மணி, விர்ஜினியாவில் இருந்து மேரிலாண்ட் செல்லும் பேருந்து ஒன்றில், வெள்ளையர் ஒருவருக்குத் தன்னுடைய இருக்கையைத் தர முடியாது என்று மறுத்தார். அதற்காகக் கைது செய்யப்பட்டு, தண்டிக்கவும் செய்யப்பட்டார்.
NAACP இதை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அமெரிக்க உச்சநீதிமன்றம், மாநிலங்களுக்கு இடையே செல்லும் பேருந்தில், இத்தகைய மாநில சட்டங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்தது. ‘ஜிம் கிரோ’ சட்டங்களில் இருந்து ஒரு விலக்கு அளிக்கப்பட்டது. இது ஒரு முக்கியமான முன்னுதாரணமாக இன்னமும் வரும் அத்தியாயங்களில் பார்க்க இருக்கிறோம்.
பெயர்ட் ரஸ்டின் (Bayard Rustin) நல்லிணக்கக் குழு ஒன்றின் காரியதரிசியாக இருந்தார். பிலிப் ரண்டோல்ப்புடன் நெருங்கி வேலை செய்து கொண்டிருந்த அவர், மேலே சொன்ன தீர்ப்பு வந்தவுடன், அதை உறுதி செய்துகொள்ளும் வகையில் பதினாறு வெள்ளை, கறுப்பு நண்பர்களோடு பேருந்து ஒன்றில் தென் மாநிலங்களில் நல்லிணக்கப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகளில் கறுப்பினத்தவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று கண்டறிவதே அவரது நோக்கம்.
இந்த முதல் பயணத்தில், அவர், இன்னமும் மூன்று நண்பர்களோடு வடக்குக் கரோலினாவில் கைது செய்யப்பட்டார். அங்கேயே சிறையில் குத்தகைப் பணியாளராகச் சாலைகளில் வேலை செய்யவும் வைக்கப்பட்டார். தன்னுடைய அனுபவங்களை நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் எழுதினார். அதன் காரணமாக வடக்குக் கரோலினாவில் குத்தகைப் பணியாளர் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
0
பின்னாட்களில் ராபர்ட் கென்னடி, இந்தக் காலகட்டத்தை ‘நம்பிக்கையின் அலைகள்’ என்று அழைத்தார். வரப்போகும் போராட்டங்களின் முன் அறிவிப்பாகவே இந்த வருடங்கள் அமைந்தன.
(தொடரும்)