Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

கறுப்பு அமெரிக்கா #24 – கல்வி என்னும் போர்க்களம்

கறுப்பு அமெரிக்கா

டொனால்ட் முர்ரே, மேரிலாண்ட் மாநிலத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர். மிகவும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த அவரது கனவு வக்கீலாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான். மிகவும் எளிய கனவு. தேவையான மதிப்பெண்களைப் பெற்று, சட்டக்கல்லூரியில் சேர்ந்து விட்டால் சாதிக்கக் கூடியதுதான். ஆனால் முர்ரே வசித்து வந்த மேரிலாண்ட் மாநிலம் நிறப்பாகுபாட்டைச் சட்டமாக இயற்றி வைத்திருந்தது. அங்கு இருந்த ஒரே சட்டப் பல்கலைக்கழகமும் வெள்ளையர்கள் மட்டுமே படிப்பதற்கானதாக இருந்தது.

இங்கே அமெரிக்க நீதித்துறையைப் பற்றி ஓர் அறிமுகத்தைப் பார்த்துவிடலாம். அமெரிக்காவின் சட்டங்கள் ஒன்றிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் இயற்றப்படுகின்றன. மாநிலச் சட்டங்கள், அந்தந்த மாநிலங்களில் மட்டும் செல்லுபடியாகும். ஒன்றிய நாடாளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களும், அதில் உச்சநீதிமன்றம் செய்யும் மாற்றங்களும் நாடு முழுமைக்கும் பொதுவானதாகும். சட்டப்படிப்பை முடித்தவர்கள் முதலில் மாநில நீதிமன்றங்களில் பயிற்சி செய்யலாம். பிறகு ஒன்றிய சட்டப்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் ஒன்றிய நீதிமன்றங்களுக்குச் செல்லலாம். எப்படியென்றாலும் முதல் படி மாநில அளவில் இருந்தே தொடங்கப்பட வேண்டும்.

டொனால்ட் முர்ரே கறுப்பினத்தவர்களின் கல்லூரியான அம்ஹர்ஸ்ட் கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த பின்னர், மேற்படிப்புக்காக மேரிலாண்ட் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் அந்தப் பல்கலைக்கழகம் ‘வெள்ளையர்களுக்கு மட்டுமானது’ என்று காரணம் தெரிவித்து, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதையடுத்து முர்ரே, கறுப்பின மாணவர்களின் சங்கம் ஒன்றின் மூலமாக மேரிலாண்ட் கீழ் நீதிமன்றத்தில் தனக்குச் சட்டப் பல்கலைக்கழகத்தில் இடம் கொடுக்க வேண்டி 1935ஆம் வருடம் வழக்குப் பதிவு செய்தார்.

1936ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அவரது வழக்கைப் பால்டிமோர் NAACPயைச் சேர்ந்த இரண்டு இளம் வழக்கறிஞர்கள் எடுத்து வழக்காடத் தயாரானார்கள்.

அதில் ஒருவர் சார்லஸ் ஹாமில்டன். சார்லஸ் ஹாமில்டன் வாஷிங்டன் நகரில் பிறந்தவர். அவரது தந்தையும் வழக்கறிஞர்தான். ஹாமில்டனிற்கு இளம் வயதில் வழக்கறிஞராக எந்த ஆர்வமும் இல்லை. ஆங்கில இலக்கியம் படித்த அவர், ஆங்கில ஆசிரியராகக் கறுப்பினத்தவர்களின் ஹாவர்ட் கல்லூரியில் சேர்ந்தார்.

1917ஆம் வருடம் அமெரிக்கா முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டபோது, அவரும் நாட்டுக்குச் சேவை செய்ய விரும்பி ராணுவத்தில் சேர்ந்துகொண்டு போருக்குச் சென்றார். ஆனால், அங்கு கடைபிடிக்கப்பட்ட நிறப்பாகுபாடு அவருக்கு நியாயமற்றதாக தோன்றியது. மற்ற அமெரிக்கர்கள் கறுப்பின அதிகாரிகளின் மீது காட்டிய வெறுப்பை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இத்தகைய வெறுப்பைக் காட்டும் நாட்டுக்குச் சேவை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கருதிய அவர், போரின் முடிவில் உயிருடன் இருந்தால் வழக்கறிஞராகப் படித்துவிட்டு, கறுப்பினத்தவர்களின் உரிமைக்காகப் போராடுவேன் என்று முடிவு செய்தார்.

தான் நினைத்ததுபோலவே ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்த அவர், அங்கிருந்து ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். 1935ஆம் வருடத்தில் NAACPயில் தன்னை இணைத்துக்கொண்டு, கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக வழக்காடத் தொடங்கினார்

‘ஜிம் கிரோ’ சட்டங்கள் பற்றி முன்பே பார்த்தோம். மாநில அளவிலான சட்டங்களான அவை, தென் மாநிலங்களில் நிறப்பாகுபாட்டை முழுவீச்சில் அமுல்படுத்த ஆதாரமாக இருந்து வந்தன. நாம் முன்னேரே பார்த்த ஹென்றி பிளெஸ்ஸியின் வழக்கில், இந்தச் சட்டங்கள் எந்த விதத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்ததையும் கண்டோம்.

வழக்கறிஞரான சார்லஸ் ஹாமில்டன், இந்தச் சட்டங்களை ஒவ்வொன்றாகச் செல்லாதவையாக அறிவிக்க வைக்க வேண்டும் என்பதையே தன்னுடைய வாழ்வின் லட்சியமாக எடுத்துக் கொண்டார். ஆனால் அவர் இந்தச் சட்டங்கள் செல்லாதவை என்று நேரடியாக வாதிட விரும்பவில்லை. மாறாக, அந்தச் சட்டங்களில் எழுதப்பட்டிருந்த ‘தனியே ஆனால் சமமாக’ என்ற வார்த்தைகளைத் தனக்குச் சாதகமாக்கி வாதாடினார்.

அமெரிக்க அரசியலமைப்பின்படி, எந்த மாநில, ஒன்றிய சட்டமும் வெளிப்படையாக ஒரு இனத்தையோ அல்லது மக்கள் குழுவையோ பிரித்து வைக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே சட்டமாக இருந்தது. எனவே ‘ஜிம் கிரோ’ சட்டங்கள், கறுப்பினத்தவர்களையும், வெள்ளையர்களையும் தனித்தனியே பிரித்து வைத்தாலும், அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தது. இதைத்தான் சார்லஸ் சோதித்துப் பார்க்க விரும்பினார்.

‘நீங்கள் ‘தனியே ஆனால் சமமாக’ இருக்க வேண்டும் என்று பிரிக்க விரும்பினால், அப்படித் தனியே பிரிப்பதற்கு உங்களால் சமாளிக்க முடியாத விலையைக் கொடுக்க வைப்பேன். அதனால் நீங்களே தனியே பிரிப்பதை நிறுத்துவீர்கள்’ என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது.

மேரிலாண்டில் இருந்த முர்ரேயின் வழக்கு ஹாமில்டனுக்கு அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

முர்ரேயின் சார்பாக வாதாடிய ஹாமில்டன், மேரிலாண்டில் கறுப்பினத்தவர்களுக்கு என்று சட்டக்கல்லூரி இல்லை என்பதால் அவர்களுக்குச் சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். எனவே ஒன்று, முர்ரேக்கு மேரிலாண்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் வெள்ளையர்களுடன் சேர்ந்து படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் அல்லது கறுப்பினத்தவர்களுக்குத் தனியே ஒரு சட்டப் பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான் அவரது வாதமாக இருந்தது. இந்த இரண்டில் எது நடந்தாலும் தனக்கு வெற்றிதான் என்று அவர் நினைத்தார்.

அவர் எதிர்பார்த்ததுபோலவே கீழ் நீதிமன்றத்தில் முர்ரேவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. கறுப்பினத்தவர்களுக்குச் சமமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதால் முர்ரேயை மேரிலாண்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேரிலாண்ட் மாநில நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.

சார்லஸ் ஹாமில்டனின் வெற்றிகளில் முதலாவதாக இது அமைந்தது. இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சம வசதிகள் இல்லாத இடங்களில் வரிசையாக வழக்குகள் பதியப்பட்டன.

சார்லஸ் ஹாமில்டன் இந்த வழக்குகளைத் தனியாக வாதிடவில்லை. மாறாக, NAACPயின் சார்பாகத் திறமையான இளம் வழக்கறிஞர்கள் குழு ஒன்றையும் அவர் உருவாக்கி வைத்திருந்தார். அவர்களில் முதன்மையானவர் தர்குட் மார்ஷல்.

தர்குட் மார்ஷல் பால்டிமோரில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே மிகவும் புத்திசாலியாக இருந்த அவர், ஹாவர்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அப்போது அவரது பேராசிரியராக இருந்தவர்தான் சார்லஸ் ஹாமில்டன். அவரது தாக்கத்தால், மார்ஷலும் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் போரிடுவது என்று முடிவு செய்தார்.

0

சார்லஸ் ஹாமில்டனின் அடுத்த இலக்கு, கறுப்பின ஆசிரியர்களின் சம்பளம்.

தென் மாநிலங்களில் இருந்த கறுப்பினத்தவருக்கான பள்ளிகளில் கறுப்பினத்தவர்களே ஆசிரியர்களாக இருந்தார்கள். அரசுப் பள்ளிகள் அனைத்தும் அந்தந்தப் பள்ளி மாவட்டங்களினால் நிர்வகிக்கப்பட்டன. ஆனால், கறுப்பினத்தவர்களின் பள்ளிகளுக்கும், வெள்ளையர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்கும் வசதிகளில் இருந்து அனைத்திலும் பெரிய வேறுபாடுகள் இருந்தன.

இவற்றைக் களைவதற்கு முதல்படியாக, சார்லஸ் ஹாமில்டன் கறுப்பின ஆசிரியர்களுக்கும், வெள்ளை ஆசிரியர்களுக்கும் இடையில் இருந்த சம்பள வேறுபாட்டுப் பிரச்சனையை எடுத்துக்கொண்டார்.

இதற்கு இன்னொரு முக்கியக் காரணம் இருந்தது. கறுப்பினத்தவர்களின் சமூகத்தில், ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. அதிகம் படிப்பறிவில்லாத கருப்பின மக்களின் இடையே, ஆசிரியர்களின் மதிப்பு மிகவும் உயர்வாகப் பார்க்கப்பட்டது. எனவே கறுப்பின ஆசிரியர்களை NAACPயின் பக்கமாக வைத்துக் கொள்வது, கறுப்பின மக்களை ஒன்றுபடுத்துவதற்கு உதவும் என்பதும் ஹாமில்டனின் எண்ணமாக இருந்தது.

மொஜெஸ்கா சிம்கின்ஸ் (Modjeska Simkins) தெற்குக் கரோலினாவின் NAACPயின் காரியதரிசி மட்டுமல்ல. அவர் அங்கு ஆறாம் வகுப்பு ஆசிரியரும் கூட. அவர்தான் ஆசிரியர்களின் சம்பளத்துக்கு இடையேயான பாகுபாட்டை முதன்முதலில் ஹாமில்டனிடம் தெரிவித்தார்.

‘என்னுடைய காசோலையைச் செலுத்துவதற்காக நான் வங்கியில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு மூன்று பேருக்கு முன் ஒரு வெள்ளைப் பெண்மணி பேசிக்கொண்டே நின்றிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து, அவரும் ஆறாம் வகுப்பு ஆசிரியை என்று தெரிந்து கொண்டேன்.

அவருக்குப் பணத்தை எண்ணிக் கொடுக்கும்போதுதான், அவர் என்னை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்குவதை அறிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் ஆறாம் வகுப்பு ஆசிரியைகள். அவளது தோல் வெள்ளை, எனது தோல் கறுப்பு. அது மட்டும்தான் வித்தியாசம். இது பல வருடங்களாகத் தெற்கில் நடந்து கொண்டிருந்தது. என்ன வேலையாக இருந்தாலும், வெள்ளையர்களின் வேலையின் மதிப்பு, கறுப்பினத்தவர்களின் வேலையைவிட அதிகமாக இருப்பதாகக் கருதப்பட்டது’ என்று பாகுபாடு கிம்மின்ஸ் கூறுகிறார்.

சிம்கின்ஸ் உடனடியாகச் சார்லஸ் ஹாமில்டனைத் தொடர்புகொண்டு தொலைபேசியில் பேசினார். அதுபோலவே மேரிலாண்டில் இருந்து ரெவெரென்ட் ஸ்டீபன் ரைட் என்பவரும் அங்கிருக்கும் கறுப்பின ஆசிரியர்களின் சார்பாக NAACPயை அணுகினார்.

1939ஆம் வருடம் சார்லஸ் ஹாமில்டன், மார்ஷல் இருவரும் இணைந்து இந்தச் சம்பளப் பிரச்சனைக்கு எதிராக NAACPயின் சார்பில் வழக்குப் பதிவு செய்தார்கள். மேரிலாண்ட் நீதிமன்றம் ‘தனியே மற்றும் சமமாக’ என்பதன்படி, சம்பளம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீடு செய்ய விரும்பாமல், மேரிலாண்ட் முழுவதும் கறுப்பின ஆசிரியர்களின் சம்பளம், வெள்ளை ஆசிரியர்களின் சம்பளத்தின் அளவை எட்டியது. அடுத்தடுத்து பல மாநிலங்களிலும் இதுபோன்ற வழக்குகள் பதியப்பட்டன. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து பெருமளவில் ஆசிரியர்கள் NAACPயில் இணைந்தார்கள்.

இத்தனைக்கும் NAACPயின் சட்ட உதவி பிரிவில் வேலை செய்து வந்த சார்லஸ் ஹாமில்டன், மார்ஷல், ஆலிவர் ஹில் போன்ற புகழ்ப்பெற்ற வழக்கறிஞர்களுக்கு மிகவும் குறைவான சம்பளமே தரப்பட்டது. அவர்களுக்குப் புகழ் கிடைத்த அளவிற்குப் பணம் கிடைக்கவில்லை. ஆனாலும் தங்கள் இனமக்களின் விடுதலைக்கான விலையாக அதை அவர்கள் கருதினார்கள்.

0

திரு. வண்டர் ஸ்டக்ஸ், சேர்மன்,
டிரஸ்டி போர்டு, பள்ளி மாவட்டம் #26
கிளாராண்டன் கவுண்டி,
டேவிஸ் ஸ்டேஷன், தெற்குக் கரோலினா.

ஐயா,

ஜூன் 27, 1947 அன்று பள்ளி மாவட்டம் #26ல் படிக்கும் என்னுடைய பிள்ளைகளுக்காகவும், மற்ற அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் ஒரு மனு உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதிருந்து உங்களிடமிருந்து அந்த மனு குறித்து எந்தப் பதிலும் இல்லை. அந்த மனுவில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்தப் பள்ளி மாவட்டத்தில் இருக்கும் கறுப்பின குழந்தைகளுக்குப் பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.

பேருந்து வசதி செய்து கொடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்துத் தெரிவிக்கவும்.

தங்கள் உண்மையுள்ள,
லெவி பியர்சன்

மிகவும் எளிமையான இந்தக் கடிதமும் மனுவும்தான் அமெரிக்கக் கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தின் முக்கியமான வழக்கை ஆரம்பித்து வைத்தது.

லெவி பியர்சன் தெற்குக் கரோலினாவின் கிளாராண்டன் கவுண்டியில் ஓரளவுக்கு நிலங்களை வைத்திருந்த விவசாயி. அவரது மூன்று பிள்ளைகளும் கறுப்பினத்தவர்களின் பள்ளியில் படித்து வந்தார்கள். ஆனால் பள்ளி ஊருக்கு வெளியே தொலைவில் இருந்ததால் அவர்கள் தினமும் ஒன்பது மைல்கள் பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டியிருந்தது. சில குழந்தைகள் 16 மைல் (30 கிமீ) தொலைவில் இருந்து எல்லாம் நடந்து வந்தார்கள்.

சிலர் வழியில் இருந்த நதியைப் படகுகளில் கடக்க வேண்டியதாகவும் இருந்தது. பள்ளியிலும் பிள்ளைகளுக்குச் சரியான கழிப்பறை வசதியோ, வகுப்பறைகளோ இல்லை. எனவே லெவி பியர்சன் தானாகவே நிதி திரட்டி பள்ளிக்கு ஒரு பழைய பேருந்தை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அதுவும் பலமுறை பழுதாகவே அவர் பள்ளி மாவட்ட மேற்பார்வையாளருக்கு மனு அனுப்பினார். அங்கிருந்த வெள்ளையர்களுக்கான பள்ளியில் அந்த மாணவர்களுக்காக 30 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனவே தங்களது பள்ளிக்கும் பேருந்துகள் வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.

அவரது கோரிக்கை மறுக்கப்படவே அவர் NAACPயை அணுகினார். பாதிரியார் ஜோசப் டிலைன் என்பவர் அந்தப் பகுதி NAACPயின் தலைவர். அவர் முதலில் இதுகுறித்து வழக்கைப் பதிந்தார். ஆனால் கறுப்பினத்தவர்கள் போதுமான வரிகள் கட்டுவதில்லை என்று காரணம் காட்டி அந்த வழக்கு கீழ் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேல் முறையீட்டில் மாநில நீதிமன்றமும் அதை நிராகரித்தது.

ஆனால் வெள்ளையர்கள் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. லெவி பியர்சனின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். ஜோசப் டிலைன் அவருடைய தேவாலயத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டார். வேறு நகருக்குச் சென்றாலும், அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் வேறு வழியில்லாமல் நியூ யார்க் நகருக்குக் குடிபெயர்ந்து சென்று விட்டார்.

ஆனால் லெவி பியர்சனும், ஜோசப் டிலைனும் தங்களது முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், கறுப்பினத்தவர்களின் பள்ளிக்கும் சமமான வசதிகள் செய்து கொடுக்கும்படியாகத் திரும்பவும் கீழ்நீதிமன்றத்திற்கு வழக்கு அனுப்பப்பட்டது.

இந்த நேரத்தில் பாதிரியார் ஜோசப்பின் யோசனையின் பேரின், தர்குட் மார்ஷல் என்பவர் இந்த வழக்கை சமவசதி கேட்கும் வழக்காக இல்லாமல், தனியே கறுப்பினக் குழந்தைகளைப் பிரித்து வைப்பதை எதிர்க்கும் வழக்காக மாற்றினார். நிறபேதம் காட்டிக் குழந்தைகளைப் பிரித்து வைப்பது, அவர்களது மனநலனையும், உடல்நலனையும் பாதிக்கிறது என்று மன நல மருத்துவர்களைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவையும் தன்னுடைய வழக்கில் முக்கியமான ஆதாரமாகச் சேர்த்துக் கொண்டார்.

NAACP அப்போது வேறு பல மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்களுக்கு எதிரான வழக்குகளை நடத்தி வந்தது. அவை அனைத்தும் இப்படியே மாற்றப்பட்டன. அமெரிக்க உச்ச நீதிமன்றம் இதுபோன்ற ஐந்து வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரித்தது. டொபீகா என்ற இடத்தின் பள்ளி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கின் பெயரில், இந்த ஐந்து வழக்குகளும் ‘பிரவுன்- டொபீகா கல்வித்துறை வழக்குகள்’ என்று அழைக்கப்பட்டன.

‘தனியே ஆனால் சமமாக’ என்பதில், தனியே என்பதே சமமாக என்ற தத்துவத்துக்கு எதிராக இருக்கிறது என்பதே மார்ஷலின் வாதமாக இருந்தது. எப்படி ஒவ்வொரு பள்ளியிலும் இத்தகைய சமநிலையைக் கொண்டு வருவது சாத்தியமில்லாததாக இருக்கிறது என்பதையும் அவர் எடுத்துக் கூறினார்.

1952ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ஆரம்பித்த வழக்கில் வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்களைத் பிரித்து வைப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்று மார்ஷல் வாதிட்டார்.

‘முன்பு அடிமைகளாக இருந்தவர்கள், அதே நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே வெள்ளையர்களின் இந்த உறுதிக்குக் காரணமாக இருக்கிறது. இந்த நேரத்தில், நமது அரசியலமைப்புச் சட்டம் அதற்கு எதிரானது என்பதை இந்த நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்ற அவர் வாதாடினார்.

அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க உச்சநீதிமன்றம், பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் உள்ள அனைத்துவித பிரிவினைகளும் சட்டத்துக்கு எதிரானது என்றும், ‘தனியே ஆனால் சமமாக’ என்பது அகற்றப்பட வேண்டும் என்றும் 1954ஆம் வருடம் தீர்ப்பு வழங்கியது.

இது ஜிம் கிரோ சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கறுப்பினத்தவர்களுக்குக் கிடைத்த மிக முக்கியமான வெற்றி. இந்தத் தீர்ப்பே முன்னோடி தீர்ப்பாக இன்னமும் பல நிறப்பாகுபாடு சட்டங்களை அகற்ற உதவும் என்பதால் இது வாதிட்ட அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

உச்சநீதி மன்றத்தின் முன்னே வெற்றியைக் கொண்டாடும் தர்குட் மார்ஷல் (நடுவில்)

ஆனால் இந்த நீதிமன்றப் போராட்டத்திற்கு வியூகம் வகுத்து, முன்னெடுத்த சார்லஸ் ஹாமில்டன் 1950ஆம் வருடமே இறந்துவிட்டார். ஆனாலும் அவர் இன்றும் ‘ஜிம் கிரோவைக் கொன்றவர்’ என்றே நினைவு கூறப்படுகிறார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு கறுப்பினத்தவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தாலும், மார்ஷல் தாங்கள் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதை அறிந்தே இருந்தார். இன்னமும் பல போராட்டங்கள் நீதிமன்றங்களில் நடக்க வேண்டி இருப்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பு தென் மாநிலங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், அங்கிருக்கும் வெள்ளையர்கள் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதையும் அனைத்துக் கறுப்பினத்தவரும் உணர்ந்தே இருந்தார்கள்.

போராட்டம் நீதிமன்றத்தில் இருந்து களத்துக்கு வந்துவிட்டதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அடுத்ததாக எந்தவிதமான போராட்டம் வெற்றியைத் தரும் என்பதிலும், அடுத்த நடவடிக்கையை எப்படி முன்னெடுப்பது என்பதிலும் அவர்களுக்குக் குழப்பம் இருக்கவே செய்தது. இது அவர்களின் இரண்டாவது அமெரிக்கப் புரட்சி. அந்தப் புரட்சியைத் துருவ நட்சத்திரமாக வழி நடத்தப்போகும் தலைவனைதான் அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தத் தலைவன் யார்?

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *