‘என்னுடைய பதினான்கு வயதில் நான் அட்லாண்டாவில் இருந்து ஜார்ஜியா மாநிலத்தின் டப்ளினிற்கு, என்னுடைய பிரியமான ஆசிரியை திருமதி. பிராட்லியுடன் சென்றேன். அங்கே ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டிருந்தேன். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றேன். நான் பேசிய தலைப்பு, நகைமுரணாக, ‘கறுப்பினத்தவர்களும், அரசியலமைப்புச் சட்டமும்’ என்பதாகும். கீழ்க்கண்டவாறு பேசினேன்.
‘பெருமளவிலான மக்கள் அறியாமையில் இருக்கும்போது நமது ஜனநாயகம் அறிவொளி நிரம்பியதாக இருக்காது. பத்தில் ஒருவர் போதுமான சத்தில்லாமல், நோயுடன், எந்த நிறப்பாகுபாடும் பார்க்காத, ஜிம் கிரோ சட்டங்களை மதிக்காத கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் வரை நமக்கு ஆரோக்கியமான தேசம் கிடைக்காது. சமூக விரோத மனப்பான்மையிலும் குற்றச்செயல்களிலும் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்ட ஒரு குழு இருக்கும் வரை நம்மால் ஒழுங்குமுறையும், உறுதியும் கொண்ட தேசத்தைக் கட்டமைக்கமுடியாது.
இயேசு கிறிஸ்துவின் முதன்மைப் பாடங்களான சகோதர அன்பையும், பொற்கட்டளையையும் மறந்து விட்டு நம்மால் நல்ல கிறிஸ்துவர்களாக இருக்க முடியாது. நாட்டின் ஓர் இனமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக்கூட வாங்க முடியாமல் இருக்கும்போது நம்மால் தன்னிறைவு அடைந்த தேசத்தை அடையமுடியாது. எனவே வெளிநாடுகளின் தாக்குதல்களில் இருந்து நமது ஜனநாயகத்தைக் காப்பாற்றத் தயாராகும்போது, நமது தேசத்திலும் அனைவருக்கும் சுதந்திரமும், வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இன்று நமது முன்னோர்களின் பதின்மூன்று லட்சம் கறுப்பினச் சகோதர, சகோதரிகள் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை, வெறும் எழுத்துக்களாக இல்லாமல், உண்மையில் அமல்படுத்த வேண்டிப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘சிலருக்குச் சுதந்திரம் நல்லது என்றால், அனைவருக்கும் அது நல்லதுதான்’ என்று அவர்களுடன் நாமும் நம்புகிறோம். தென்மாநிலப் படைகளை நாம் வாள் கொண்டு வென்றுவிடலாம். ஆனால் தென்மாநிலங்களின் வெறுப்பை எப்படி வெல்வது? அந்த உரிமையைக் கறுப்பினத்தவர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் விழிப்புடன் இருந்து, தேவையென்றால் ஆயுதங்களைக் கூடப் பயன்படுத்தி கூட்டாட்சி சுதந்திரத்தின் பேழையை, அதன் எதிரிகளின் துரோகத்தில் இருந்தும், அழிவிலிருந்தும் காப்பார்கள்.’
அன்றிரவு நானும், திருமதி. பிராட்லியும் அட்லாண்டாவிற்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் சில வெள்ளையினப் பயணிகள் பேருந்தில் ஏறினார்கள். பேருந்தின் வெள்ளை ஓட்டுநர் அவர்களுக்கு எங்களது இருக்கைகளைக் கொடுக்கக் கூறினார். நாங்கள் வேகமாக எழவில்லை என்று நினைத்தாரோ, என்னவோ, ஓட்டுநர் எங்களை நோக்கித் தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துவிட்டார். நான் இருக்கையில் இருந்து எழ விரும்பவில்லை என்றாலும், திருமதி. பிராட்லி சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், எனவே இருக்கையில் இருந்து எழ வேண்டும் என்றும் கூறினார். அங்கிருந்து தொண்ணூறு மைல்கள் பேருந்தில் நின்று கொண்டே வந்தோம். அந்த இரவு எனது நினைவில் இருந்து எப்போதும் மறையாது. என் வாழ்வில் நான் மிகவும் கோபமாக இருந்தது அந்த இரவில்தான்.’
0
மார்ட்டின் லூதர் கிங்கின் சுயசரிதையில் இருந்து எடுக்கப்பட்ட இந்தச் சம்பவம், அவர் நம்பிக்கைகளையும், வாழ்க்கை லட்சியங்களிலும் செதுக்கிய முக்கியமான சம்பவங்களில் ஒன்று.
மார்டின் லூதர் கிங் தென் மாநிலமான அட்லாண்டாவில் வாழ்ந்த மைக்கேல் கிங், ஆல்பர்ட்டா கிங் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவர்கள் அவருக்கு மைக்கேல் கிங் எனப் பெயரிட்டனர்.
‘மதத்தில் நான் மிகவும் ஈடுபாடு உடையவனாக இருந்தேன். என் தந்தை ஒரு மதப் போதகர். என் தாத்தாவும் மதப் போதகர், என் பாட்டனும் மதப் போதகர், என்னுடைய ஒரே சகோதரனும் மதப் போதகரே. என் தந்தையின் சகோதரரும் மதப் போதகரே. எனவே எனக்கு வேறு பாதை இல்லை.’
மார்டின் லூதர் கிங்கின் தந்தையரான மைக்கேல் கிங் அட்லாண்டா நகரில் இருந்த எபனேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். பாப்டிஸ்ட் தேவாலயக் கூட்டமைப்பின் சார்பாக அவர் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருந்தார். அப்படியாக ஜெர்மனிக்குச் சென்றிருந்தபோது, சீர்திருத்தச் சபையை நிர்மாணித்தவர்களில் ஒருவரான மார்ட்டின் லூதர் பிறந்து, வாழ்ந்த இடங்களை அவர் பார்க்க நேர்ந்தது. அவரது கருத்துக்களால் கவரப்பட்ட மைக்கேல் கிங், தன்னுடைய பெயரையும், தன்னுடைய மகனுடைய பெயரையும் மார்ட்டின் லூதர் கிங் என்றே மாற்றிக் கொண்டார்.
ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் வளர்ந்த மார்ட்டின் லூதர் கிங் எந்தக் கவலையுமில்லாமல் வளர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அவரது தாயும், பாட்டியும் அவரை மிகவும் செல்லமாகவே வளர்த்தார்கள். அட்லாண்டாவில் கறுப்பினத்தவர்களுக்கு இருந்த சிறந்த பள்ளிகளில் அவரது இளமைப்பருவம் கழிந்தது.
அவர் இந்தக் காலகட்டத்தில் இரண்டு நிகழ்வுகள் தன்னைச் செம்மைப்படுத்தியதாகத் தெரிவிக்கிறார்.
முதலாவது, அவரை வளர்த்த பாட்டியின் மரணம். தன்னை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்த அவரின் மரணம், மார்ட்டின் லூதர் கிங்கின் கடவுள் நம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. நாம் மிகவும் விரும்பும் ஒருவரை வாழ்வில் இருந்து எடுத்துக் கொள்வதான கடவுளின் செயலை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. முழுமையான கிறிஸ்துவக் குடும்பச் சூழலில் வளர்ந்திருந்தாலும், அவர் தனக்குப் பிரியமான பாட்டியின் பிரிவை விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். அவரது தந்தை பல வித விளக்கங்கள் கொடுத்தாலும், அவரது இளமனத்தால் அந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இரண்டாவது, அவர்களது வீட்டிற்கு எதிரே ஒரு வெள்ளையர் சிறு கடை ஒன்றை வைத்திருந்தார். அவரது மகனுக்கும் மார்ட்டின் லூதர் கிங்கின் வயதே இருந்ததால், இருவரும் மூன்று வயது முதல் ஒன்றாகவே விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறு வயதில் அவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில், அவர்கள் தனித்தனிப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதிலிருந்து, அவர்களிடையே இருந்த நட்பில் விரிசல் விழ ஆரம்பித்தது. அந்த வெள்ளை சிறுவனின் தந்தை, அவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடுவதைத் தடை செய்தவுடன், மார்ட்டின் லூதர் கிங் அதைப் புரிந்து கொள்ள முயன்றார்.
அன்றிரவு அவரது தாயும், தந்தையும் அமெரிக்காவில் நிகழும் நிறப்பாகுபாடுகள் குறித்து அவருக்கு விளக்கினார்கள். அதனால் ஏற்படும் பலவிதமான கொடுமைகளையும், தென் மாநிலங்களில் கறுப்பினத்தவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வரும் சட்டங்கள் குறித்தும் விளக்கினார்கள். கிங்கிற்கு மீண்டும் ஒருமுறை தன்னுடைய நம்பிக்கைகள் குறித்த சந்தேகங்கள் மீண்டும் எழுந்தன.
தன்னையும், தன்னுடைய நண்பர்களையும் பிரித்து வைத்து, தன்னை வெறுக்கும் மக்களை எப்படித் தன்னால் நேசத்துடன் அணுக முடியும் என்ற கேள்வி அவரிடம் எழுந்தது.
அட்லாண்டாவில் வெள்ளையர்களின் நிறவெறியை நேரடியாகக் காணும் பல அனுபவங்கள் அவருக்குப் பதின்ம வயதில் நிகழ்ந்தன. அவரது தாயுடன் கடைக்குச் சென்றிருந்தபோது, அவரது கால் தன் மீது பட்டுவிட்டது என்று வெள்ளையினப் பெண் ஒருத்தி கிங்கின் கன்னத்தில் அறைந்து விட்டாள். பதிலுக்குக் குரலைக்கூட உயர்த்த முடியாத நிலையில், மிகுந்த அவமானத்துடன் அவர் திரும்பினார்.
அவரது பள்ளி நகரின் மற்றொரு பாகத்தில் இருந்தது. அதற்குத் தினமும் அவர் பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. அன்றைய ஜிம் கிரோ சட்ட விதிகளின்படி, கறுப்பினத்தவர்கள் பேருந்தின் பின்புறத்தில் மட்டுமே அமர முடியும். அங்கும் வேறு வெள்ளையர்கள் வந்து விட்டால், அவர்களுக்கு எழுந்து வழி விட வேண்டும். தன்னுடைய உடல் பேருந்தின் பின்புறம் சென்றாலும், தன்னுடைய மனம் எப்போதும் பேருந்தின் முன்பாகத்திலேயே இருந்தது என்று எழுதுகிறார். என்றாவது ஒருநாள் தன்னுடைய மனம் இருந்த இடத்திற்கு, தன்னுடைய உடலைக் கொண்டு செல்லும் மனத் தைரியம் தனக்கு வரும் என்று எண்ணியிருந்ததாகவும் எழுதுகிறார்.
பள்ளிப்பருவத்தின் இறுதி வருடத்தில் அவர் வட மாநிலமான கனெக்டிகட்டிற்குச் சென்றிருந்தார். எந்தத் தடையும் இல்லாமல், தன்னால் எந்த உணவகத்திலும் நுழைய முடிந்ததும், பேருந்திலும், ரயிலிலும் எங்கு வேண்டுமென்றாலும் அமர முடிந்ததும் அவருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. நிறப்பாகுபாடற்ற வாழ்வு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமாக அது அவருக்கு இருந்தது. வட மாநிலங்களில் நிலவும் அந்த நிலை தென் மாநிலத்திலும் நிலவாமல் இருப்பதற்கு வெறுப்பைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் அவரால் யோசிக்க முடியவில்லை.
0
தன்னுடைய பதினைந்தாவது வயதில் அவர் அட்லாண்டாவின் மோர்ஹவுஸ் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் படிப்பிற்காகச் சேர்ந்தார். அவரது தந்தையும், தாத்தாவும் அங்கேதான் படித்திருந்தார்கள். அங்கே முதல் வருடங்களில் அவர் தோரோவின் ‘ஒத்துழையாமை பற்றி’ (On the duty of Civil Obedience) என்ற புத்தகத்தை வாசித்தார். அடிமை முறையை மெக்ஸிகோவிற்குப் பரப்ப நடத்தும் போரை எதிர்த்து, வரி கொடாமல் இருந்த தோரோவின் மூலமே அவர் அகிம்சை முறையில் அநீதியான சட்டங்களை எதிர்ப்பது பற்றிய முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டார்.
கல்லூரியின் இறுதி வருடத்தில் அவர் தன் தந்தையைப் பின்பற்றித் தானும் இறையியல் கல்லூரியில் சேர்ந்து, அவரைப் போலவே மதபோதகராக ஆவது என்ற முடிவிற்கு வந்திருந்தார்.
1948ஆம் வருடம் அவர் பென்சில்வேனியா மாநிலத்தில் இருக்கும் கிரோஸர் இறையியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்குதான் அவர் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த நிற, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது எப்படி என்பது பற்றித் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தார்.
போராட்டக் கருத்துக்களை விதைப்பதற்கு அவர் தேவாலயங்களில் பிரசங்கங்களைத் தேர்ந்தெடுத்தார். இதைக் குறித்து அவரே கூறுகிறார். ‘பிரசங்க ஊழியத்தை இரட்டை செயல்முறையாக நான் பார்க்கிறேன். ஒருபுறம், தனி நபர்களின் ஆன்மாவை மாற்ற முயல வேண்டும். அதன் வழியே, அவர்கள் வசிக்கும் சமூகத்தை மாற்றலாம். மறுபுறம், நான் சமூகத்தையும் மாற்ற முயல்வேன். அதன் வழியே தனிப்பட்ட ஆன்மாக்களும் மாற்றத்தை அடையும். எனவே, நான் வேலையின்மை, சேரிகள், பொருளாதாரப் பாதுகாப்பின்மை போன்றவை குறித்தும் தீவிரமாகக் கவனம் கொள்ள வேண்டும். சமூக நற்செய்திகளைச் சொல்வதின் தீவிர ஆதரவாளன் நான்.’
அவரது இந்தக் கருத்து, சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே, தனிநபர்களின் நம்பிக்கைகளிலும் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது. அடுத்த இருபது வருடங்களில் அவர் முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களிலும் அவர் வெள்ளையர்களின் சமூகத்தை நோக்கியே தொடர்ந்து பேசினார்.
1950ஆம் வருடம் அவரது வாழ்வை மாற்றிய இன்னுமொரு நிகழ்வு நடந்தது. அவரது கல்லூரிக்கு அருகில் இருந்த பிலடெல்பியா நகருக்குப் பிரசங்கம் ஒன்றைக் கேட்பதற்காகச் சென்றார். அன்று பிரசங்கியாக இருந்தவர் முனைவர் மெர்டேக்காய் ஜான்சன் (Mordecai Johnson). அப்போதைய கறுப்பின பிரசங்கிகளில் அமெரிக்காவில் சிறந்தவராகக் கருதப்பட்டவர். அவர் அப்போதுதான் இந்தியப் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருந்தார். அவரது அன்றைய பிரசங்கம் அவரது இந்தியப் பயணத்தைப் பற்றியும், மகாத்மா காந்தியின் வாழ்வு மற்றும் போதனைகள் பற்றியதாகும்.
குறிப்பாகக் காந்தியின் அகிம்சா இயக்கம் அவரது கவனத்தை ஈர்த்தது. அந்த இயக்கத்தின் சத்தியாகிரகங்கள், குறிப்பாக உப்புச் சத்தியாகிரகமும், காந்தியின் உண்ணாவிரத முறைகளும் அவருக்குச் சமூகப் போராட்டத்தில் உண்மையையும், அன்பையும் எப்படி ஆயுதங்களாகப் பயன்படுத்துவது என்று தெளிவாகக் கற்றுக் கொடுத்தது. எல்லோரையும் போல அவரும் காந்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அன்றுதான் அவரது போராட்ட முறைகளையும், அதன் பாதையையும் பற்றிக் கேள்விப்படுகிறார்.
கிறிஸ்துவ மதபோதகராகவும் அவர் காந்தியின் செய்தியால் ஈர்க்கப்படுகிறார்.
‘காந்தியை வாசிப்பதற்கு முன், கிறிஸ்துவின் உபதேசங்கள் எல்லாம் தனிப்பட்ட உறவுகளில் மட்டுமே செல்லுபடியாகும் என்று நினைத்திருந்தேன். ‘மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு’ என்பதும், ‘சத்துருக்களைச் சினேகியுங்கள்’ என்பதும் தனிப்பட்ட நபர்கள் தங்களுக்குள் வேறுபாட்டுடன் இருக்கும் இடங்களுக்கே பொருந்தும் என்று நினைத்திருந்தேன்; இனக்குழுக்களும், தேசங்களும் முரண்பட்டு நிற்கும்போது, இன்னமும் யதார்த்தமான அணுகுமுறை தேவை என்று நினைத்திருந்தேன். காந்தியை வாசித்த பின்னரே, என்னுடைய தவறை உணர்ந்தேன்.’
பிரசங்கம் முடிந்தவுடன் காந்தியைப் பற்றி அரை டஜன் புத்தகங்களை வாங்கிச் சென்றதாகக் கிங் தெரிவிக்கிறார். காந்தியின் அறவழியை அவர் கடைசி வரை கைவிடவில்லை. காந்தியும் அகிம்சா போதனையும், கிங்கின் கிறிஸ்துவ அன்பு வழியும் ஒன்றிணையும் மையத்திலேயே போராட்டங்கள் நடைபெற்றன. இதற்காக அவர் கறுப்பினத்தவர்களிடையேயே பலத்த எதிர்ப்பை எதிர் கொண்டார். ஆனாலும் தன்னுடைய வழியை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார்.
கிரோஸர் இறையியல் கல்லூரி மேற்படிப்பை முடித்தவுடன், அவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வைத் தொடர்ந்தார். அங்கேயே அவர் தன்னுடைய வருங்கால மனைவியான கோரட்டாவைச் சந்தித்தார். 1953ஆம் வருடம் அவர்களது திருமணமும் அங்கேயே நடந்தது. 1955ஆம் வருடம் முனைவர் பட்டப்படிப்பை முடித்துப் பட்டமும் பெறுகிறார்.

அதே வருடத்தில் அவர் அலபாமா மாநிலத்தில் இருக்கும் மான்ட்கமரி என்ற நகரில் இருக்கும் டெக்ஸ்டர் அவன்யு பாப்டிஸ்ட் தேவாலயத்தில் போதகராகப் பதவி ஏற்றுக் கொள்கிறார்.
கிங்கின் தந்தை அட்லாண்டா நகர NAACP கிளையில் முக்கியப் பங்கு வகித்தவர். அங்கு NAACP முன்னெடுத்த பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். அவரது வழியில் கிங்கும் மான்ட்கமரி நகரின் NAACP கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். அதன் வழியே தன்னுடைய மக்களுக்கான விடுதலைக்குப் போரிடுவது என்று முடிவு செய்தார். வெகு விரைவிலேயே அந்தப் போராட்டம் அவரைத் தேடி வந்தது.
(தொடரும்)