எம்மெட் டில் (Emmett Till) பதினான்கு வயது சிறுவன். சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவன். அவனது தாயார் மாமி டில் (Mamie Till), தன் மகனைத் தனியாக வளர்த்து வந்தார். அவனது பெற்றோர் சிறு வயதிலேயே மிஸ்ஸிஸிப்பியில் இருந்து வேலை தேடிச் சிகாகோவிற்குக் குடிபெயர்ந்திருந்தனர். அங்கேயே அவன் பள்ளியில் படித்து வந்தான்.
அவர்களுக்கு இன்னமும் மிஸ்ஸிஸிப்பியில் சொந்தக்காரர்கள் இருந்தார்கள். எம்மெட் டில்லின் மாமாவான மோஸ் ரைட் அங்கே வெள்ளையர்களின் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். 1955ஆம் வருடம் சிகாகோ வந்த அவர் எம்மெட்டை மிஸ்ஸிஸிப்பிக்குக் கோடை விடுமுறைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். இப்படியாக எம்மெட் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்திற்குச் சென்றான்.
அவர்கள் வசித்து வந்த மினி என்கிற கிராமம் மிகவும் சிறியதாக நூறுக்கும் சற்று அதிகமானவர்கள் மட்டுமே வசிக்கும் இடம். எம்மெட்டிற்கு அங்கே பல ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருந்தார்கள். மோஸின் வீட்டிற்கு எம்மெட்டைப் போலவே அந்த விடுமுறைக்கு எட்டுச் சிறுவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடினார்கள். பேசி சிரித்தார்கள். எம்மெட்டின் சகோதரர்கள் அனைவரும் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே எம்மெட் அவர்களுக்குச் சிகாகோ நகரின் ஆச்சரியங்களையும், தன்னுடைய பிரதாபங்களையும், எல்லா நகரக் குழந்தைகளையும் போலவே, சொல்லிக் கொண்டிருந்தான்.
இப்படியே நாட்கள் சென்ற நிலையில், அந்தச் சிறுவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் அங்கிருந்த ஒரே ஒரு மளிகைக் கடையின் முன் விளையாடிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். எம்மெட் அவர்களுக்குத் தன்னுடைய வகுப்புப் புகைப்படத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். சிகாகோவில் வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் ஒன்றாகப் படிப்பது அவனது மிஸ்ஸிஸிப்பிச் சகோதரர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் அதே வகுப்பில் வெள்ளைச் சிறுமிகளும் படித்தது இன்னமும் ஆச்சரியத்தைத் தந்தது. எம்மெட், தான் வெள்ளைச் சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடியதையும், அவர்களுடன் வெளியே சென்றதையும் கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தான். தனக்கு வெள்ளைப் பெண்களிடம் பேசுவதற்கு எந்தப் பயமும் இல்லை என்று சொல்லிய அவன், அதை நிரூபிக்கவும் முயன்றான்.
மளிகைக் கடையின் உள்ளே அதன் சொந்தக்காரனின் மனைவி கரோலின் மட்டுமே இருந்தாள். எம்மெட், அவளிடம் பேசிவிட்டு வருவதாகச் சவால் விட்டுவிட்டு உள்ளே சென்றான். அங்கே சில மிட்டாய்களை வாங்கிய அவன், கிளம்பும்போது, அவளிடம் ‘போய்விட்டு வருகிறேன், பேபி’ என்றான். அவன் சரியாக என்ன சொன்னான் என்பதில் மிகுந்த குழப்பம் இருக்கிறது. கரோலின், எம்மெட் தன்னுடைய கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறினாலும், பின்னாளில், தான் பொய் சொன்னதாகவும் ஒப்புக்கொண்டாள்.
எப்படியாக இருந்தாலும், தன்னிடம் எம்மெட் பேசியதை அவள், அவளது கணவன் டாம் பிரையன்ட்டிடம் தெரிவித்தாள். இதனால் ஆத்திரமடைந்த டாம், அவனது சகலையோடு சேர்ந்து, அந்தக் கறுப்பினச் சிறுவனைத் தேட ஆரம்பித்தான். சீக்கிரமே அந்தச் சிறுவன் எம்மெட் டில்தான் என்று தெரிய வந்தது.
அன்றிரவு 2.30 மணிக்கு மோஸ் ரைட்டின் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், எம்மெட்டை இழுத்துக் கொண்டு வெளியேறினார்கள். மூன்று நாட்கள் கழித்து, எம்மெட்டின் உடல் அருகில் இருந்த மிஸ்ஸிஸிப்பி நதியில் கிடைத்தது.
அந்த உடல் இருந்த நிலையில் இருந்து, அவன் வெகுவாகச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறான் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அவனது முகத்தில் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்றும் புரிந்தது. அவன் முகத்தில் பல இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்தன. எம்மெட்டின் உடலை மோஸ் ரைட் சிகாகோவிற்கு அனுப்பி வைத்தார்.
மாமி டில் இதைத் தெற்கில் நடந்த பல கொலைகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எம்மெட்டின் உடலைப் பெற்றுக்கொண்ட மாமி டில், அவனது உடலின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவனது இறுதி சடங்கில், அவனது சவப்பெட்டி திறந்த நிலையில் இருக்கும் என்று அறிவித்தார். ‘அந்தச் சவப்பெட்டியில் இருப்பதை என்னால் எந்த விதத்திலும் விவரிக்க முடியாது. அதை அனைவரும் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்’ என்றார்.
எம்மெட் டில்லின் இறுதிச் சடங்கு சிகாகோ நகரின் கறுப்பின மக்கள் அனைவரையும் வெளியே கொண்டு வந்தது. வடமாநிலங்கள் அனைத்திலும் இறந்து கிடந்த எம்மெட்டின் புகைப்படம் பதிப்பிக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த அனைவரும் தூக்கம் இழந்தனர். வடமாநிலங்கள் முழுவதும் பெரும் எதிர்ப்பலை உருவாகியது.
மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் எம்மெட்டைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் மீதும் வழக்கு தொடரப்பட்டது. மாமி டில் வழக்கு நடந்த அனைத்து நாட்களும் நீதிமன்றத்திற்கு வந்தார். இது அந்த வழக்கை நாடு முழுவதும் பேசப்படும் வழக்காக மாற்றியது. மோஸ் ரைட் முக்கிய சாட்சியாகச் சேர்க்கப்பட்டு, வெள்ளையர்களின் கொலை மிரட்டலுக்குப் பயந்து தலைமறைவானார். ஆனால் வழக்கு நடைபெற்ற நாளன்று, நீதிமன்றத்திற்கு வந்த அவர், டாம் பிரையன்டும் அவரது சகலையும்தான் தன்னுடைய வீட்டிற்கு வந்து எம்மெட்டை அழைத்துச் சென்றவர்கள் என்று அடையாளம் காட்டினார்.
மிஸ்ஸிஸிப்பியில் ஒரு கறுப்பினத்தவர், வெள்ளையரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவது என்பது அதுவரை நிகழ்ந்திராத ஒன்று. மோஸ் ரைட் நீதிமன்றத்தில் எழுந்து, தன் விரல்களால் குற்றவாளிகளைச் சுட்டிக்காட்டிய அந்தக் கணம், கறுப்பினத்தவர்கள் தங்களது பயங்களைத் தாண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக மாறியது. ஆனாலும் குற்றவாளிகளை எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டு நேரடிச் சாட்சியங்கள் இருந்தும் மிஸ்ஸிஸிப்பியின் நீதிமன்றம் அவர்கள் இருவரையும் விடுதலை செய்தது.
பொதுவில் நிகழ்ந்த இந்த அநீதியை மாமி டில்லும் ஏனைய கறுப்பினத்தவர்களும் எதிர்பார்த்தே இருந்தார்கள். நீதிமன்றத்தில் கறுப்பினத்தவர்களின் வார்த்தைக்கு எந்த மதிப்பும் இருக்காது என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது. இந்த முறை என்ன வித்தியாசம் என்றால், நாடு முழுவதும் கவனிக்கப்பட்ட இந்த வழக்கில் வந்த தீர்ப்பு, வடமாநிலங்களில் இருந்தவர்களுக்குத் தெற்கின் நிலையை எடுத்துக் கூறியது. நாடு முழுவதும் இருந்த கறுப்பினத்தவர்களுக்கு தங்களது உரிமைகளுக்குத் தெருக்களில் போராடுவது மட்டுமே தீர்வைக் கொண்டு வரும் என்பதைத் தெளிவாகக் காட்டியது.
வில்லியம் பால்க்னெர் அமெரிக்காவின் முக்கியமான எழுத்தாளர். 1949ஆம் வருடத்திய இலக்கிய நோபல் பரிசுக்குச் சொந்தக்காரர். மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தைச் சேர்ந்த அவர், எம்மெட் டில்லின் கொலையையும், அதன் பின்னான நிகழ்வுகளையும் கண்டு, ‘பயத்தைப் பற்றி’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் பின் வருவதைக் குறிப்பிடுகிறார்.
‘லுக்’ பத்திரிகையில் டில் கொலை பற்றி வந்திருக்கும் செய்திகள் உண்மை என்றால், நாம் புரிந்து கொள்வது: இரண்டு மனிதர்கள், கைகளில் ஆயுதங்களோடு, ஒரு பதினான்கு வயது சிறுவனைக் கடத்திச் சென்று, அவனை மிரட்ட முயல்கின்றனர். ஆனால் அந்தச் சிறுவன் பயப்படவில்லை. கைகளில் ஆயுதமில்லாமல், இருளில், தனியாக இருக்கும் அவனைக் கண்டுதான் இரண்டு மனிதர்களும் பயந்து கொலை செய்கின்றனர்… மிஸ்ஸிஸிப்பியை சேர்ந்த நாம் எதைக் கண்டு பயப்படுகிறோம்?”
0
மிஸ்ஸிஸிப்பியில் சில கறுப்பினத்தவர்கள் எழுந்து நின்றார்கள் என்றால், அடுத்து நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் அலபாமாவில் இன்னும் பலர் எழுந்து நின்றார்கள்.
டிசம்பர் 1, 1955. அலபாமாவின் மான்ட்கமரி பகுதியில் தையல் வேலை செய்து வந்த ரோசா பார்க்ஸ் தன்னுடைய வீட்டிற்குச் செல்லப் பேருந்தில் ஏறினார். வேலையை முடித்துவிட்டு மிகுந்த களைப்புடன் இருந்த அவர், வழக்கம்போல பேருந்தின் பின்புறத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.
அன்று பேருந்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சிறிது தூரத்தில் வெள்ளையர் ஒருவர் ஏறவே, பேருந்து ஓட்டுநர் ரோசாவை எழுந்து இடம் கொடுக்கச் சொன்னார். மிகுந்த களைப்புடன் இருந்த அதனை ரோசா மறுத்துவிட்டார். நான்கு நபர்கள் அமரக் கூடிய அந்த இருக்கையில் ரோசாவுடன் மேலும் மூன்று கருப்பினத்தவர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஓட்டுநரின் பேச்சைக் கேட்டு உடனே எழுந்துவிட்டனர். ஆனால், ரோசா அன்று எழக்கூடாது என்று முடிவு செய்திருந்தார். அவர் ஏன் எழவில்லை என்பதையும் தனது சுயசரிதையில் எழுதுகிறார்.
‘நான் எம்மெட் டில்லை நினைத்துக் கொண்டேன். மிஸ்ஸிஸிப்பியில், ஒரு வெள்ளையினப் பெண்ணை அவமானப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டான். அவனைக் கொன்றவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. என்னால் பின்வாங்க முடியாது.
நான் களைப்புடன் இருந்ததால் இருக்கையை விட்டுக் கொடுக்கவில்லை என்று அனைவரும் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. என்னுடைய உடல் களைப்பாக இல்லை. எல்லா வேலை நாட்களிலும் இருக்கும் அதே அளவு களைப்புடன்தான் இருந்தேன். என்னை வயதான பெண்ணாக நினைத்துக் கொள்கிறார்கள். எனக்கு அப்போது நாற்பத்தி இரண்டு வயதுதான். எனக்கிருந்த களைப்பெல்லாம் உடலால் வந்தது இல்லை, எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுத்து வந்த களைப்பு அது.’
பேருந்தின் ஓட்டுநர் உடனடியாகக் காவலர்களை அழைத்தார். ரோசா பார்க்ஸ் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதியப்பட்டது.
ரோசா தையல் தொழிலாளி மட்டுமல்ல. மான்ட்கமரி NAACP பிரிவின் தலைவரான வில்சனின் காரியதரிசியும்கூட. எனவே, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது உடனடியாக NAACPயில் பேசப்பட்டது. பேருந்தில் இருக்கையை விட்டுக் கொடுக்காமல் கைது செய்யப்பட்டவர்களில் ரோசா முதலாவது நபர் அல்ல. அதற்கு முன்பே பலரும் இது போன்று கைது செய்யப்பட்டு, அபராதமோ, சிறைத் தண்டனையோ கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த முறை NAACP போராட்டம் நடத்தாமல் விட விரும்பவில்லை.
வில்சன், அலபாமா மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஜோ ஆன் ராபின்சனுடன் அடுத்த நடவடிக்கையைப் பற்றி ஆலோசித்தார். பேராசிரியர் ஜோ ஆன் ராபின்சன், மான்ட்கமரியில் ‘பெண்கள் அரசியல் குழு’ ஒன்றை நடத்தி வந்தார். ஏற்கெனவே பல முறை பேருந்து நிறுவனங்களுடன் மோதி, பல முக்கியமான விலக்குகளைப் பெற்றிருந்தார். இந்த முறை ராபின்சனும் போராட வேண்டும் என்றே விரும்பினார். ஒருநாள் அடையாளப் பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே அவரது ஆலோசனையாக இருந்தது. NAACP ஒப்புக்கொள்ளவே, அன்றிரவே ராபின்சன் 35,000 துண்டுப் பிரசுரங்களைத் தனியாகத் தயார் செய்தார்.
டிசம்பர் 4ஆம் தேதி, ரோசா பார்க்சிற்கு 10 டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரோசா மேல்முறையீட்டிற்குப் பதிவு செய்தார். அன்றிரவே 35,000 துண்டுப் பிரசுரங்கள் நகரத்தில் இருந்த கறுப்பினத்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. டிசம்பர் 5ஆம் தேதி புறக்கணிப்புப் போராட்டம் பெரும் வெற்றியை அடைந்தது.
அன்றிரவே அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி முடிவு செய்ய 40-50 கறுப்பினத் தலைவர்கள் ஆலோசனை செய்தார்கள். அதில், புறக்கணிப்பைத் தொடரத் தனியே ‘மான்ட்கமரி அபிவிருத்தி சங்கம்’ என்று ஓர் இயக்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் புறக்கணிப்பை முன்னிருந்து வழி நடத்த ஒரு நபரும் தேர்வு செய்யப்பட்டார். அவர், அப்போதுதான் நகரில் இருந்த டெக்ஸ்டர் அவன்யு பாப்டிஸ்ட் தேவாலயத்திற்குப் புதிதிதாக வந்த போதகர். 26 வயதேயான அந்தப் போதகரின் பெயர் மார்ட்டின் லூதர் கிங். ஆம், கறுப்பினத்தலைவர்கள் மார்ட்டின் லூதர் கிங்கைத்தான் இந்தப் போராட்டத்துக்குத் தலைமைத் தாக்குவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அன்று பேசிய கிங், ‘இந்த நிலத்திற்குச் சொந்தமில்லாத நாம், ஒடுக்கப்படும் மக்களாகிய நாம், இனியும் இந்தச் சிறையின் நீண்ட இருளில் இருக்க விரும்பவில்லை. சுதந்திரமும், நீதியும், சரிசமமான நிலையும் இருக்கும் விடியலைத் தேடியே நமது கைகள் நீள்கின்றன’ என்றார்.
பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது. நகரில் இருந்த கறுப்பின டாக்ஸி ஓட்டுநர்கள், பேருந்துக் கட்டணத்திற்குக் கறுப்பினத்தவர்களைத் தங்களது வண்டியில் கூட்டிச் சென்றார்கள். நகரில் கார் வைத்திருந்த அனைத்துக் கறுப்பினத்தவர்களும், தங்களது வண்டியைச் சமூகத்திற்குக் கொடுத்தார்கள். தினமும் இந்த முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இன்னமும் பலர் 35 கி.மீ வரை நடந்து சென்றார்கள். ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்தச் சமரசமும் எட்டப்படவில்லை.
வெள்ளையினத்தவர்கள் தங்களுக்குள் ‘வெள்ளை குடிமக்கள் குழு’ என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள். அதன் மூலமாக மாநில அரசைக் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். அடுத்த மாதமே கிங்கும் மற்றத் தலைவர்களும், பல காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்கள். கிங்கின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. மற்றவர்கள் மிரட்டப்பட்டார்கள். ஆனால், இவை எதுவும் நகரில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான கறுப்பினத்தவரைப் பின்வாங்க வைக்க முடியவில்லை.
போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு கிடைத்தது. நாடு முழுவதும் இருந்து கறுப்பினத் தேவாலயங்கள் நிதி வழங்கின. தென் மாநிலங்களின் மற்ற நகரங்களிலும் போராட்டம் பரவியது. அடிக்கடித் தேவாலயங்களில் கூட்டங்களை நடத்துவது மூலம் கிங் போராட்டத்தை வழி நடத்தினார்.
போராட்டம் ஆரம்பித்த பத்து நாட்களில், நகரின் முக்கிய பத்திரிகையான மான்ட்கமரி அட்வெர்ட்டிசரின் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்று வந்தது. அதை அந்தப் பத்திரிக்கை பதிப்பித்தது.
‘ஆசிரியருக்கு… மான்ட்கமரியின் கறுப்பினத்தவர்கள் காந்தியிடமிருந்தும், காந்தியை ஈர்த்த நமது தோரோவிடமிருந்தும் பாடம் கற்றுக் கொண்டதுபோலத் தெரிகிறது. ஆனால் அவர்களது பணி காந்தியின் பணியைவிடக் கடினமானது. ஏனென்றால் அவர்கள் இன்னமும் அதிகமான வெறுப்பை எதிர் கொள்கிறார்கள். இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் சட்டப்படியானதா என்பது பற்றிய தலையங்கங்களைப் படிப்பது சுவாரசியமாக இருக்கிறது.
தேநீர் அருந்தும் தேசமாக இருந்த அமெரிக்காவைக் காபியை விரும்பும் தேசமாக மாற்றிய போராட்டத்தை எண்ணிக் கொள்கிறேன். நினைத்துப் பார்த்தால், இந்தத் தேசமே ஒரு புறக்கணிப்புப் போராட்டத்தின் மூலமே உருவாக்கப்பட்டது. நாம் அரசின் அனைத்துச் சேவைகளும் கறுப்பினத்தவருக்கும் சமமான முறையில் கிடைப்பதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டும்.
இது சிறுபான்மையினரின் கருத்தாகத் தெரியலாம். ஆனால் எந்தக் குரலும் எழுப்பாத பல மான்ட்கமரி நகரவாசிகள் என்னுடைய கருத்தை ஒப்புக் கொள்வார்கள்.
ஜூலியட் மோர்கன்.
மான்ட்கமரி.’
ஜூலியட், மான்ட்கமரி நகர நூலகத்தின் நூலகர். வெள்ளையினப் பெண்ணான அவர், புறக்கணிப்புப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து தன்னுடைய குரலைப் பதிவு செய்தார். இதன் காரணமாக அவர் வெள்ளைச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டார். அவரது வீட்டின் முன் கு க்ளக்ஸ் கிளான், சிலுவையை எரித்து எச்சரித்தது. ஆனால் கிங் தன்னுடைய புத்தகத்தில் ஜூலியட்டின் செய்கையைப் பாராட்டினார்.
மான்ட்கமரியில் பேருந்துகளைப் பெரும்பாலும் உபயோகித்துக் கொண்டிருந்தவர்கள், கறுப்பினத்தைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்கள், சிறு கடைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களே. ஒரு கட்டத்தில், இவர்கள் வேலை செய்யும் வீடுகளின் வெள்ளையினப் பெண்கள், தாங்களே தங்களது கார்களில் இவர்களை அழைத்துச் செல்லவும், மீண்டும் மாலை அவர்களது வீடுகளுக்குச் சென்று விடவும் செய்தார்கள். அவர்கள், செல்லும் வழியில் நடந்து சென்று கொண்டிருக்கும் மற்றப் பெண்களையும் தங்களது கார்களில் ஏற்றிக்கொள்ளத் தயங்கவில்லை.
மான்ட்கமரி நகரத்தின் மேயர், வெள்ளையினப் பெண்கள் தலையிடாமல் இருந்தால், புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்று கூட அறிவித்தார். ஆனாலும் பயனில்லை. தங்களது வீடுகளுக்கு வந்து மேயர் வேலை செய்வதாக இருந்தால், தாங்கள் தங்களது பணிப்பெண்களைக் காரில் அழைத்துச் செல்வதை நிறுத்தி விடுவதாக ஒரு பெண் பதில் அளித்தாள்.
எதிர்த்தரப்பில் இத்தகைய மனமாற்றத்தையை கிங்கின் போராட்டம் விரும்பியது. மெதுவாக இருந்தாலும், இந்த மனமாற்றம் வந்தே தீரும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. அத்தகைய மாற்றத்தின் மூலமே வருங்காலத்தில் இரு இனங்களும் இணக்கமாக வாழ முடியும் என்றும் அவர் பேசினார்.
0
பொதுப் போக்குவரத்தில் பிரிவினையைக் கோருவது குறித்த வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, நவம்பர் 1956ஆம் வருடம் தீர்ப்புக் கூறப்பட்டது. அதில், பொதுப் போக்குவரத்தில் பிரிவினையைக் கோரும் சட்டங்கள், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மான்ட்கமரி மட்டுமல்லாது, தென் மாநிலங்கள் அனைத்திலும் பேருந்துகளிலும், மற்ற பொதுப் போக்குவரத்திலும் இனி பிரிவினைப் பார்க்கப்படாது என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து 381 நாட்கள் தொடர்ந்த மான்ட்கமரி புறக்கணிப்புப் போராட்டம் முடிவிற்கு வந்தது. மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க அரசியலில் புதிய நட்சத்திரமாக உதயமானார்.
அதற்குப் பின்னரான நாட்களிலும், பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், பேருந்துகளில் முன்பக்கமாக அமர்ந்து செல்லும் கறுப்பினத்தவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டன. தென் மாநிலங்களில் மீண்டும் கு க்ளக்ஸ் கிளான் பெரிய அளவில் தலையெடுத்தது. அத்துடன் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்தன.
ஆனால் அமெரிக்க அரசியல் சூழல் மாறிக் கொண்டிருந்தது. நவீன உலகில் நிறப்பிரிவினைக்கு இடமில்லை என்ற எண்ணம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் வந்து கொண்டிருந்தது. இந்த மாற்றத்தை முன்னெடுப்பவராக, அதை முன்னோக்கித் தள்ளுபவராக கிங் இருந்தார்.
0
தென் மாநில இன, நிற வெறி வெள்ளையர்கள் இதைக் கண்டே பயந்தார்கள். கறுப்பினத்தவரின் அறப்போராட்டம் தங்களது வெறுப்பை உலகிற்கு முன் வெளிச்சத்தில் காட்டிவிடும் என்பதே அவர்களது பயமாக இருந்தது. இன்னமும் சில வெள்ளையர்களுக்கு, தங்களது இனமே வெறுப்பைக் கொண்டு விவரிக்கப்படுவதாக ஆகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. அவர்கள் தங்களையும் கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளத் தயங்கவில்லை.
(தொடரும்)
படம்: எம்மெட் டில்லுடன், மாமி டில் – Collection of the Smithsonian National Museum of African American History and Culture, Gift of the Mamie Till Mobley family.

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், ‘1877 தாது வருடப் பஞ்சம்.’ தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.