Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #27 – உடைந்த சிறகுகளுடன் பறக்கக் கற்றுக்கொள்

கறுப்பு அமெரிக்கா #27 – உடைந்த சிறகுகளுடன் பறக்கக் கற்றுக்கொள்

Little Rock Central High School desegregation

பீட்டில்ஸ் பற்றிக் கேள்விப்படாத இசை ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த நான்கு இளைஞர்களும் 1960களில் உலக இளைஞர்களின் ஆதர்சமாக, அவர்களது புது உலகின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். 1968ஆம் வருடம் அவர்கள் தங்களது புதிய பாடல் ஒன்றை வெளியிட்டார்கள். ‘கறுப்புப் பறவை’ (Blackbird) என்ற அந்தப் பாடல் மிகவும் எளிமையான பாடல். கிடாரில் இருந்து எழும்பும் மூன்று சந்தங்களை மட்டுமே வைத்து எழுதப்பட்ட அந்தப் பாடல், 11 வருடங்களுக்கு முன்பு 1957ஆம் வருடம் அர்கன்சாஸ் மாநிலத்தின் லிட்டில் ராக் நகரில் நிகழ்ந்தவற்றை நினைவுகூர்ந்து எழுதப்பட்டது.

‘இரவின் மடியில் பாடும் கறுப்புப் பறவையே,
உடைந்த சிறகுகளை எடுத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும்
பறக்கக் கற்றுக் கொள்.
எழுவதற்கான இந்தக் கணத்திற்காகவே காத்திருந்தாய்’

என்று செல்லும் அந்தப் பாடல், லிட்டில் ராக் போராட்டத்தில் முன் நின்ற ஒன்பது பதின்ம வயது சிறுவர், சிறுமிகளின் போராட்டத்தைச் சொல்கிறது. 1957இல் அந்தப் போராட்டம் நிகழ்ந்தபோது பீட்டில்ஸ் இளைஞர்கள் தங்களது பதின்ம வயதில், இங்கிலாந்தில் இருந்திருப்பார்கள். தங்களைப் போன்ற சிறுவர்களும் சிறுமிகளும் போலீஸையும், கொலை செய்ய அஞ்சாத கும்பல்களையும் எதிர்கொண்டு நின்றது, பெரும் சமுத்திரத்திற்கு மறுபுறம் இருந்த அவர்களையும் பாதித்தது.

0

1954ஆம் வருடம் அமெரிக்க உச்சநீதி மன்றம் கல்வி நிலையங்களில் எவ்வித இன, நிறப்பிரிவினைகளும் இருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பெழுதியிருந்தது. ஆனால் அதை அமுல்படுத்துவதற்கு எந்தவிதமான அவசரத்தையும் தென் மாநிலங்களோ, அமெரிக்க ஒன்றிய அரசாங்கமோ காட்டவில்லை. எனவே அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

1956ஆம் வருடம் பிப்ரவரி மாதம், அதுவரை வெள்ளையர்கள் மட்டுமே படித்து வந்த அலபாமா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக ஆதரின் லூசி என்ற கறுப்பினப் பெண் எந்தச் சத்தமும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அவரது முதல் நாள் வகுப்புகளுக்குப் பின்னர், இரவில் நகரத்தில் பெரும் கலவரம் வெடித்தது. பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதை எதிர்பார்க்காத பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாக லூசியைத் தற்காலிக நீக்கம் செய்தது. அவரது நன்மைக்காகவே இப்படிச் செய்வதாகவும் சொன்னது. ஆனால் லூசி அதை அமைதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நீதியை நிலைநாட்டாமல், கலவரக் கும்பலின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகப் பல்கலைக்கழகத்தைக் குற்றஞ்சாட்டினார். அவர் NAACPயின் உதவியை நாடினார்.

தர்குட் மார்ஷல் என்பவர் அவரது வழக்கை மாநில ஒன்றிய நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்டார். கறுப்பினத்தவர்கள் வெகு வேகமாக மாற்றத்தைக் கொண்டு வர விரும்புவதாகவும், அதன் காரணமாகவே வன்முறை வெடிப்பதாகவும், கறுப்பினத்தவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் பத்திரிகைகள் எழுதின. இதற்கு மார்ஷல், ‘மாற்றத்தை உடனடியாகக் கொண்டு வர முடியாது என்பது உண்மைதான். ஆனால் விடுதலை பிரகடனம் கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன் 1863இல் வெளியிடப்பட்டது. 90 வருடங்கள் என்பது மிகவும் பொறுமையான காலம்தான்’ என்று பதில் கூறினார்.

தீர்ப்பு லூசிக்குச் சாதகமாக வந்தது. உடனே பல்கலைக்கழக நிர்வாகம், லூசி கலவரத்தைத் தூண்டியதாக மற்றொரு காரணத்தைக் காட்டிப் பல்கலைக்கழகத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கியது.

லூசியின் வழக்கும், அதன் பின்னான நிகழ்வுகளும் தென் மாநிலங்களுக்குத் தெளிவான செய்தி ஒன்றைச் சொன்னது. சட்டத்திற்கு எதிராகப் பரவலான வன்முறையை நிகழ்த்தினால், கறுப்பினக் குழந்தைகளை வெள்ளையர்களின் கல்வி நிலையங்களுக்குள் நுழையவிடாமல் செய்து விடலாம் என்பதுதான் அது.

அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தவர், இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கத் தளபதியாக இருந்த ஐசனாவர் (Dwight D. Eisenhower). இவர் கலவரத்தின் பின்னணியில் மாற்றம் மெதுவாகவே வர வேண்டும் என்று பேசியது, ஒன்றிய அரசும் இந்தப் பிரச்சனையில் தலையிடத் தயங்குவதாக அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. இதை விரைவிலேயே சோதித்துப் பார்க்கவும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

0

மற்ற தென் மாநிலங்களை ஒப்பு நோக்கும்போது அர்கன்சாஸ் மிகவும் மிதமான வெறுப்புணர்வைக் (?) கொண்ட மாநிலம். அங்கு ஓரளவிற்கு வெள்ளையர்கள் விட்டுக் கொடுத்திருந்தார்கள். உதாரணமாக, மான்ட்கமரி பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டத்தின் பின்னான நாட்களில், அர்கன்சாஸ் மாநிலத்தில் இருந்த பேருந்துகள் அனைத்திலும் பிரிவினை பார்ப்பது குற்றமாக்கப்பட்டிருந்தது. எந்த விதமான எதிர்ப்பும் அதற்கு ஏற்படவில்லை. அங்கிருந்த பல்கலைக்கழகங்களும் ஏற்கெனவே கறுப்பின மாணவர்களை எந்தப் பிரச்சனையும் இன்றி சேர்த்துக் கொண்டிருந்தன.

லிட்டில் ராக் பள்ளி மாவட்ட நிர்வாகிகள் முதல் கட்டமாக 1957ஆம் கல்வியாண்டில் ஒன்பது கறுப்பின மாணவர்களை லிட்டில் ராக் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தபோது, எதிர்ப்பை எதிர்பார்த்தாலும், அது தானாகவே முடிந்து விடும் என்றும் நினைத்தனர். ஆனாலும் நகரின் கறுப்பினத் தலைவர்கள், நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு சற்றுக் கவனத்துடனே இருக்க விரும்பினார்கள். எனவே அவர்கள் மாநில ஆளுநருக்கும், மற்ற மாநில அரசின் உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து எழுதினார்கள்.

அர்கன்சாஸ் ஆளுநர் ஆர்வல் பாபஸ் வேறு மாதிரியான எண்ணம் கொண்டிருந்தார். முந்தைய தேர்தலில் அவரைக் கறுப்பினத்தவர்கள் பெருவாரியாக ஆதரித்திருந்தார்கள். ஆனால் மாநிலத்தில் அவருக்கு ஆதரவு குறைந்து கொண்டிருந்தது. அவர் மிதவாதி என்றும் தாக்குதல் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எனவே இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ள முடிவு செய்தார்.

செப்டம்பர் 4, 1957ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்கு முந்தைய தின இரவே, லிட்டில் ராக் மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி அர்கன்சாஸ் மாநிலத் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டிருந்தது. புதிதாகச் சேர்ந்திருக்கும் ஒன்பது கறுப்பின மாணவ, மாணவிகளைப் பள்ளிக்குள் நுழைய விடக்கூடாது என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இப்படியாக அவர்கள் பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்கள்.

துணை ராணுவப் படையைக் கொண்டு அமெரிக்க உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்தது, ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்பட்டது. ஆனாலும் குடியரசுத் தலைவர் ஐசனாவர், பாபசை முதலில் எச்சரிக்கவே செய்தார். இரண்டு நாட்களில் மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முயன்று, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பாபஸ் இப்போது துணை ராணுவப்படையை விலக்கிக் கொண்டார். போலீஸ் மட்டுமே காவலுக்கு இருந்தது. பள்ளியைச் சுற்றி பெரும் கும்பல் கூடியிருந்தாலும், அன்று மூன்று மணி நேரம் அவர்கள் பள்ளியில் இருந்தார்கள்.

இப்போது நகரக் காவல்துறையின் துணைத்தலைவர், கூடியிருந்த கும்பலுடன் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. பள்ளிக்கு வரும் ஒன்பது மாணவ, மாணவியரில் ஒருவரைப் பொதுவில் கொலை செய்து தூக்கிலிட்டால், எவரும் வெள்ளையர்களின் பள்ளிக்கு வரத் துணிய மாட்டார்கள் என்ற அந்த உரையாடல் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. செப்டம்பர் 25ஆம் தேதி ஐசனாவர் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தார்.

அன்றிரவே அமெரிக்க ராணுவத்தின் 101வது பிரிவு லிட்டில் ராக்கைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஒன்பது கறுப்பின மாணவர்களுக்கும் தனித்தனியாக இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. மறுநாளே அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

ராணுவப் பாதுகாப்புடன் பள்ளிக்குச் செல்லும் லிட்டில் ராக் மாணவ, மாணவிகள்.

ராணுவப் பாதுகாப்புடன் பள்ளிக்குச் செல்லும் லிட்டில் ராக் மாணவ, மாணவிகள்.

ஆனாலும் பள்ளியின் உள்ளே அந்த மாணவர்கள் தொடர்ந்து கேலியும், அவமானமும் செய்யப்பட்டார்கள். வன்முறை எதுவும் நிகழவில்லை என்றாலும், ஒரு வருடம் முழுவதும் அவர்கள் ராணுவத்தின் பாதுகாப்பிலேயே பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. 1958ஆம் வருடம் மே மாதம் பள்ளிக் கல்வியாண்டு முடிவிற்கு வந்தது.

அர்கன்சாஸ் NAACP தலைவியான டெய்சி பேட்சின் முயற்சியினாலேயே இது சாத்தியமானது. ஆனால், வருடம் முழுவதும் பாதுகாப்பிற்கு ராணுவம் வேண்டியிருந்தது அன்றைய அமெரிக்காவின் நிலையைக் காட்டியது எனலாம்.

ஆனால், ஆளுநர் பாபஸ் இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. நீண்ட நீதிமன்றப் போராட்டத்தை நடத்தினார். நீதிமன்றங்கள் அவரது நிறவெறிக்கு எந்த ஆதரவும் தரவில்லை. எல்லாக் கதவுகளும் மூடியதாக உணர்ந்த அவர், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, நகரில் இருந்த அனைத்து அரசாங்கப் பள்ளிகளையும் மூடினார். இதனால் அடுத்த ஒரு வருட காலம், கறுப்பின மற்றும் வெள்ளை சிறுவர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னரும் அவரது எதிர்ப்புத் தொடர்ந்தது.

0

1960ஆம் வருடம் அமெரிக்க ஒன்றியத்தின் அழுத்தத்தின் காரணமாக லூசியானா மாநிலம் தன்னுடைய பள்ளிகளை இரண்டு இனத்தவருக்கும் பொதுவானதாக ஆக்க முடிவு செய்தது. ஆனால், அனைத்துத் தென்மாநிலங்களைப் போலவே இங்கும் பெருத்த எதிர்ப்பு நிலவியது.

ரூபி பிரிட்ஜெஸ் (Ruby Bridges) அப்போது ஆறு வயது சிறுமி. NAACPயின் உதவியோடும், நீதிமன்ற உத்தரவோடும் அவள் 1960ஆம் வருடம் நவம்பர் மாதம், எல்லாச் சிறுமிகளைப்போல உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பினாள். ஆனால் பள்ளியைச் சுற்றி வெள்ளையர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடியிருந்தார்கள்.

ஆனால் இந்த முறை அவர்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தயாராகவே இருந்தது. அமெரிக்க நீதித்துறையின் ஒரு பகுதியான யுஎஸ் மார்ஷல்ஸ் பிரிவில் இருந்து ரூபியின் பாதுகாப்பிற்குப் பள்ளியில் ஏற்கெனவே காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் துணையுடன் ரூபி பள்ளியில் நுழைந்தார். அடுத்த வினாடி, பள்ளியில் இருந்த மற்ற வெள்ளை மாணவ, மாணவியரின் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் இருந்து கூட்டிச் சென்றுவிட்டனர். சில நாட்களுக்கு ரூபி மட்டுமே பள்ளியின் ஒரே மாணவியாக இருந்தார்.

தினமும் பள்ளியின் வாயிலில் போராட்டம் நடந்தது. அவளது உணவில் விஷம் வைக்கப்படப் போவதாகக் கோஷமிடப்பட்டது. சவப்பெட்டியில் கறுப்பினக் குழந்தைப் பொம்மையுடன் பள்ளியைச் சுற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆனால் மறுநாளே மெத்தடிஸ்ட் வெள்ளை மதபோதகர் லாயிட் போர்மன், தன்னுடைய மகளை, சுற்றியிருந்த கும்பலின் மிரட்டல்களுக்கு இடையே பள்ளியில் கொண்டு வந்து விட்டார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாணவராகத் திரும்பினார்கள்.

ரூபியின் குடும்பம் மிகுந்த விலையைக் கொடுக்க வேண்டியிருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல வெள்ளையர்களிடம் இருந்தும் ஆதரவு வர ஆரம்பித்திருந்தது. இருதரப்பிலும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

0

நிகோலஸ் கியிலன், கியூபாவின் தேசியக் கவி என்றறியப்படுபவர். 1958ஆம் வருடம் லிட்டில் ராக்கில் நடைபெற்ற போராட்டங்களைக் கண்ட அவர், கறுப்பினத்தவருக்கு எதிரான வெறுப்பை, வன்முறையை எதிர்த்து ‘லிட்டில் ராக்’ என்ற கவிதையை எழுதினார்.

“….
அவர்களது வகுப்பறையில்
ஜிம் கிரோதான் ஆசிரியர்.
கும்பல் கொலைகாரர்களின் குழந்தைகள்தான்
சக மாணவர்கள்.
ஒவ்வொரு கறுப்புக் குழந்தையின் மேசையிலும்
ரத்தம் மையாகவும், நெருப்பு எழுதுகோலாகவும் இருக்கிறது.
தெற்கு அப்படித்தான் இருக்கிறது. அவன் மீதான சவுக்கடி நிற்கவேயில்லை.
பாபஸின் உலகில்,
பாபஸின் அழுகிய வானம் இருக்கும் உலகில்
கறுப்புக் குழந்தைகள் வெள்ளையர்களுடன்
பள்ளிக்குச் செல்லக்கூடாது.
அல்லது வீட்டில் இருந்துவிடு.
அல்லது அடிபட்டே சாவதற்குத் தயாராகிவிடு.
அல்லது தெருக்களில் செல்லாதே.
அல்லது எச்சிலாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் செத்துவிடு.
அல்லது வெள்ளைப்பெண்ணைப் பார்த்து விசிலடிக்காதே.
அல்லது இறுதியாக, கண்களைக் கீழே தாழ்த்து,
உடம்பைக் குறுக்கிக் கொள்,
மண்டியிடு,
அதுதான் சுதந்திர உலகம்…”

என்று அந்தக் கவிதை செல்கிறது. மாற்றம் மெதுவாக வந்தாலும், தெற்கின் அந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடுதான் இருந்தது.

0

1958ஆம் வருடம். அக்டோபர் மாதம். வடக்குக் கரோலினாவின் மன்றோ பகுதியில் ஏழு வயதான வெள்ளைச் சிறுமியான சிஸ்ஸி விளையாட்டு மைதானத்தில் 9 வயது தாம்சன் மற்றும் 7 வயது சிம்ப்சன் இருவரையும் பார்த்தாள். அவர்களது வீட்டில் சிறிது காலம் வேலை செய்த பெண்ணின் மகன்தான் தாம்சன். எனவே தனக்குத் தெரிந்த அந்தச் சிறுவனுக்கும், சிம்ப்சனிற்கும் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். அவர்கள் இருவரும் கறுப்பினச் சிறுவர்கள்.

சிஸ்ஸி வீட்டில் சென்று அவளது தாயிடம் இது குறித்துத் தெரிவித்தவுடன், பூகம்பம் வெடித்தது. அவளது பெற்றோர் தங்களுடைய குழந்தை மானபங்கப்படுத்தப் பட்டதாகப் புகார் கொடுத்தனர். இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவலில் வைத்து மூன்றாம் தரக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. அவர்களது தாயார் உட்பட்ட யாருக்கும் அவர்களைப் பார்க்க அனுமதி கொடுக்கப்படவில்லை.

வேகமாக நடத்தப்பட்ட வழக்கில், இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். 21 வயது வரை அவர்கள் அங்கிருந்து வரமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

NAACP சிறந்த வக்கீல்களை வைத்துப் போராடினாலும், மாநில நீதிமன்ற நீதிபதி, சிறுவர்களைப் பார்ப்பதற்குக்கூட அனுமதி தர மறுத்தார். அந்தப் பகுதியில் இயங்கி வந்த கு க்ளக்ஸ் கிளான், அந்தச் சிறுவர்களின் வீடுகளின் முன் சிலுவையை எரித்தது. சிலர் அவர்களது வீடுகளுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அவர்களது தெரு வழியே 7000 வெள்ளை கு க்ளக்ஸ் கிளான் உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.

லண்டன் அப்சர்வர் பத்திரிகை நிருபர் ஒருவருக்குச் சிறுவர்களைப் பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டது. அவர், சிறுவர்களின் தாயாருடன் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு, பத்திரிகையில் இது குறித்து எழுதவே, ஐரோப்பா முழுவதும் இந்த வழக்கிற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ரோம், வியன்னா, பாரிஸ் போன்ற இடங்களில்கூட அமெரிக்கத் தூதரகம் முன் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

உலக அரங்கில் அமெரிக்காவின் பெயர் கெடுகிறது என்ற காரணத்தினால் மட்டுமே – அறத்தின் காரணமாக அல்ல – அமெரிக்க அரசு, வடக்குக் கரோலினா ஆளுநருக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. அவரும் மூன்று மாதத் தண்டனை முடிந்திருந்த நிலையில் சிறுவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கினார்.

இந்த வழக்கு இன்னமும் தெற்கில் பரவலாக இருந்த வெறுப்பின் அளவைக் காட்டியது. ஆனால் அடுத்து வந்த நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் இவற்றை எல்லாம் சாதாரணமாக மாற்றின.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *