Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை

கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை

ஆப்ரிக்கன் நற்செய்தி கீதங்கள் (African Gospel Music) என்பவை கறுப்பினத்தவர்கள் தங்களது தேவாலயங்களில் பாடும் பாடல்களாகும். கறுப்பினத்தவர்களின் பெரும்பாலான தேவாலயங்கள் சிறிய ஒற்றை அறையை மட்டுமே கொண்டிருக்கும். ஊருக்கு வெளியே மரத்தால் எழுப்பட்ட சிறிய தேவலங்களில்தான் அவர்கள் வழிபட்டு வந்தார்கள். அவர்கள் அடிமைகளாக இருந்த காலத்தில், தோட்டத்தில் செய்த வேலைகளின் களைப்புத் தீர அவர்களுக்கு இருந்த ஒரே வழி வழிபாட்டுப் பாடல்கள் பாடுவதுதான். வழிபாட்டின் மூலமாகவே அவர்கள் தங்களின் மன அழுத்தத்தையும், வருத்தங்களையும் போக்கிக்கொண்டார்கள்.

கறுப்பினத்தவர்களின் வழிபாடு ஆப்பிரிக்காவில் அவர்கள் தொடர்ந்த வூடூ மதத்தின் முறைகளோடு கலந்ததாக இருந்தது. அதுபோலவே அவர்களது பாடல்களும் மிகவும் உற்சாகமானவையாக, எந்த விதத் தடையும் இல்லாமல் பாடுவதாகவும், தனியாக, எந்தவித இசையும் இல்லாமல் அல்லது மிகவும் குறைவான இசையுடன் இறைஞ்சும் வகைப் பாடல்களாகவே இருந்தன. அடிமைகளாக இருந்தபோதும், அதன் பின்னரும் அவர்கள் தங்களது துயரங்களை வெளிப்படுத்த இதேபோன்ற பாடல்களையே பின்பற்றினார்கள்.

1940களில் இருந்து வேகமடைந்து வந்த உரிமைப் போர் நாட்களிலும் கறுப்பினத்தவர்களுக்குத் தேவாலயங்களும், அதன் பாடல்களுமே துணையாக இருந்தன. கறுப்பினத்தவர்களை இயக்கமாக ஒன்றிணைத்ததில் திருச்சபைகளுக்குப் பெரும் பங்கிருந்தது. அவர்களின் பெரும்பாலான கூட்டங்கள் தேவாலயங்களிலேயே நடைபெற்றன. ஒவ்வொரு கூட்டமும் பாடல்களுடன் ஆரம்பித்து, பாடல்களுடனே முடிவடைந்தது. ஆனால் அந்தப் பாடல்கள் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், போராட்டங்களில் அவை பாடப்படும்போது அவற்றின் மத அடையாளம் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒரே பாடல் பல்வேறு விதங்களில், நாடெங்கும் பாடப்பட்டது. இத்தகைய பாடல்கள் போராளிகளுக்கு உற்சாகத்தைத் தருவதாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தன.

இப்படியான பாடல்கள் பல இருந்தாலும், இந்தப் போராட்டங்களின் தேசியக் கீதம் என்ற பெருமை ஒரு பாடலுக்கு மட்டுமே இருந்தது. ‘இலக்கில் கவனம் வைத்திருங்கள்’ (Keep your eyes on the prize) அல்லது ‘பொறுத்திருங்கள்’ (Hold on) என்ற அந்தப் பாடலை எழுதியது யார் என்று தெரியாது. மற்ற நாட்டுப்புற, நற்செய்திப் பாடல்களைப்போலவே பல வருடங்களாக, பல விதங்களில் பாடப்பட்டு வந்த இந்தப் பாடல், கறுப்பினத்தவர்களின் தேவாலயங்களில் முக்கிய இடம் வகித்தது. 1958ஆம் வருடம், கறுப்பின நற்செய்திப் பாடகியான மகாலியா ஜான்சன், இந்தப் பாடலைத் தன்னுடைய நிகழ்வுகளில் பாடினார். அதே நேரத்தில் ஆங்கில நாட்டுப்புறப் பாடகரான பீட் சீகரும் இதே பாடலின் விவிலியக் குறிப்புக்கள் இல்லாத வடிவத்தைக் கலகப்பாடலாகப் பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார். உரிமைப் போராட்டம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டபோது, இந்தப் பாடலும் மிகவும் பிரபலமானது.

‘நான் செய்த ஒரே தவறு
வெகுகாலம் தனியே இருந்ததுதான்
இலக்கில் கவனம் வைத்திருங்கள், பொறுத்திருங்கள்!
நாம் போராட ஆரம்பித்த நாளே நம்
தவறுகள் சரி செய்யப்பட்டன.
பொறுத்திருங்கள், பொறுத்திருங்கள்,
இலக்கில் கவனம் வைத்திருங்கள், பொறுத்திருங்கள்’

என்று செல்லும் அந்தப் பாடல், உரிமைப் போரின்போது நடந்த ஒவ்வொரு போராட்டத்தின்போதும் அனைவராலும் பாடப்பட்டது. இது மட்டுமல்லாது மேலும் பல பாடல்களும் அவர்களது பேரணிகளிலும் மாநாடுகளிலும் போராட்டங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்தன.

0

ஜேம்ஸ் லாசன்(James Lawson) மெத்தடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்த ஓர் ஊழியர். அவரது குடும்பமே திருச்சபை ஊழியத்தில் இருந்தது. அவர் படித்து முடித்தவுடன் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற மறுத்த காரணத்திற்காக இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தார். அங்கே ‘இனச் சமத்துவத்திற்கான குழு’ (Congress of Racial Equality – CORE) என்ற அமைப்பு ஒன்றிலும் உறுப்பினரானார்.

மகாத்மா காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், இந்தியாவின் நாக்பூர் நகரில் சுவிசேஷ ஊழியராகப் பணியாற்றத் திருச்சபையால் அனுப்பப்பட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் அவர் காந்தியின் சத்தியாகிரக முறைகளைக் கற்றுக் கொண்டார்.

1956இல் அமெரிக்கா திரும்பிய அவர், தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு டென்னிசி மாநிலத்தின் நாஷ்வில் நகரில் அமைந்திருந்த COREஇன் தென்மாநில நிர்வாக மேலாளராகச் சேர்ந்தார். அங்கிருந்த வண்டெர்பெல்ட் பல்கலைக்கழகத்தில் வேலைக்கும் சென்றார். அப்போதுதான் கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டம் வேகமாக நகரத் தொடங்கியிருந்தது. உடனே அவர் அந்தப் போராட்டத்திற்குப் பல்வேறு விதங்களில் தன்னுடைய பங்கை அளிக்க ஆரம்பித்தார்.

ஜேம்ஸ் லாசன் வண்டெர்பெல்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த கறுப்பின மாணவர்களுக்கும், விருப்பமிருந்த வெள்ளையின மாணவர்களுக்கும் காந்தியின் அகிம்சா முறைகளையும், உரிமைப் போராட்டத்தில் சத்தியாகிரக முறைகளைக் கையாள்வது குறித்தும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். வரும் நாட்களில் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த ஜான் லெவிஸ், டயான் நாஷ் போன்றவர்கள் அவரிடம் பயின்றவர்களே.

0

இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உரிமைப் போர் போராட்டங்கள், ஒற்றைத் தலைமையின் கீழோ அல்லது ஒற்றை இயக்கத்தின் மூலமாகவோ முன்னெடுக்கப்படவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் இருந்தவர்களே இவற்றை முன்னெடுத்தார்கள். இவற்றை ஒருங்கிணைக்கவும் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.

மார்ட்டின் லூதர் கிங், திருச்சபைகள் இனவெறிப் பிரச்சினையில் அறம் சார்ந்த நிலையை எடுக்க வேண்டும் என்று எண்ணும் தன்னைப் போன்ற கறுப்பின மதபோதகர்களை ஒன்றிணைத்து தென்மாநிலக் கறுப்பினத் தலைவர்கள் குழு (Southern Negro Leaders Conference – SNLC) ஒன்றை உருவாக்கினார். இது ஒரு ஒருங்கிணைப்புக் குழுவாகவே செயல்பட்டது. வெள்ளையினப் போதகர்களுமும் இந்த இயக்கத்தில் சேர ஆரம்பிக்கவே, இதுவே தென்மாநிலக் கிறிஸ்துவத் தலைவர்கள் குழு (Southern Christian Leaders Conference – SCLC) என்றானது. இந்தக் குழு போராட்டங்களின் திசையைக் குறித்த கொள்கை விளக்கங்களைக் கொடுக்கவும், அறம் சார்ந்த தலைமையைக் கொடுக்கவும் மட்டுமே இயங்கியது.

NAACPயும் தன்னுடைய மாநிலப் பிரிவுகளின் மூலமே போராட்டங்களை நடத்தியது. SNLCயுடன் இணைந்து செயல்பட்டாலும், சில நேரங்களில் வேறுபடவும் அது தயங்கவில்லை. மேலும் NAACPயின் போராட்ட முறைகள் வேறு விதமாக இருந்தன. நீதிமன்றத்தின் மூலமாகச் சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் நீதிமன்றங்களின் செயல்பாடோ மிகவும் மெதுவாக இருந்தது. கறுப்பின இளைஞர்களுக்கு அது போதுமானதாக இல்லை.

கறுப்பின இளைஞர்கள் ஒன்றிய அரசிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமாக மாற்றத்தை வேகமாகக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். அதே நேரத்தில் அவர்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் வெள்ளையர்களை, வன்முறையின் மூலமாக எதிர்ப்பு நிலைக்கு மாற்றவும் விரும்பவில்லை. கறுப்பின இளைஞர்கள் காந்தியின் அகிம்சை முறையைத் தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

இளைஞர்களின் இந்தப் பாதையை SCLC ஆதரித்தது. மார்ட்டின் லூதர் கிங்கும் இந்தப் போராட்டங்களில் தேவைப்படும்போது தன்னை இணைத்துக் கொண்டார். கறுப்பின மாணவர்கள் இந்தப் போராட்டங்களைத் தாங்களாக முடிவு செய்தே முன்னெடுத்தனர்.

எல்லா பேக்கர் (Ella Baker) SCLCஇல் உறுப்பினராக இருந்தவர். SCLCஇல் கிங்கின் ஒற்றைத் தலைமை குறித்து விமர்சனங்களை முன் வைத்தவர். தீவிர உரிமைப் போராட்டப் போராளியான அவர், மாணவர்களின் போராட்டத்தைத் தனக்குரியதாக நினைத்ததில் ஆச்சரியமில்லை. அவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு, அவர் ‘அகிம்சா மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு’ (Student Nonviolent Coordinating Committee – SNCC அல்லது ஸ்னிக்) என்ற ஒன்றையும் நிறுவ உதவினார். மாணவர்கள் எப்போதும் ஒற்றைத் தலைமையை விரும்பக் கூடாது என்றும், அவர்கள் குழுத்தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அந்தக் குழுவின் விதியாக இருந்தது. இதுவே ஜனநாயகப் பூர்வமான செயல்பாட்டிற்கு உதவும் என்பதே அதன் நோக்கம்.

குழுவின் செயல்பாடுகள் யாவருக்கும் எந்தவிதமான ஆபத்தையும் கொண்டு வரும் என்பதால், இத்தகைய குழு மூலமான முடிவெடுத்தலே, அனைவரையும் இறுதி வரை ஈடுபாட்டோடு போரிடச் செய்யும் என்பதை மனதில் கொண்டே இத்தகைய விதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

0

டென்னிசி, தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையிலான எல்லை மாநிலம். எனவே, அங்கு நிறவெறி இருந்தாலும் ஓரளவிற்கு இணக்கமான சூழலே நிலவியது. ஆனாலும், ஜிம் கிரோச் சட்டங்கள் அங்கேயும் முழுவதுமாக அமலில் இருந்தன. ஜிம் லாசனின் மாணவர்கள் இதையே தங்களது முதல் சவாலாக எடுத்துக் கொண்டனர்.

நகரின் வியாபாரப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகளிலும், உணவு விடுதிகளிலும் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் தனித்தனியே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சில அங்காடிகளில் உணவு வழங்கும் வசதி இருந்தாலும், அங்கு வெள்ளையர்கள் மட்டுமே அமர்ந்து உண்ணும் வசதி இருந்தது. கறுப்பினத்தவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவை வாங்கிக் கொண்டு மட்டுமே செல்லலாம் என்ற நிலை இருந்தது. கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என அனைவரிடமும் ஒரே அளவிலாலான பணத்தைப் பெற்றுக் கொண்ட அங்காடிகள், சேவையை மட்டும் இரு வேறு முறைகளில் செய்தன. மாணவர்கள் இதையே முதலில் எதிர்க்க நினைத்தனர்.

பிப்ரவரி 13, 1960. அன்று மதியம் 124 மாணவர்கள் நகரின் மூன்று பெரிய அங்காடிகளுக்குச் சென்றார்கள். இவை மூன்றும் நாடெங்கும் கடைகளை வைத்திருக்கும் பெரும் கடைகள். அங்குச் சென்ற மாணவர்கள், அந்தக் கடைகளின் மதிய உணவு கொடுக்கும் பகுதிகளுக்குச் சென்று அமைதியாக அமர்ந்தார்கள். ஆனால் அங்கே அவர்கள் அமரக்கூடாது என்றும், உணவு வழங்கப்படாது என்றும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கிருந்து நகரவில்லை. முதல் நாள் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

நாஷ்வில் உணவுவிடுதியில் போராட்டத்தில் இருக்கும் மாணவர்கள். (University of Central Oklahoma)

மாணவர்களின் அந்தப் போராட்டத்திற்கு நகரில் இருந்த கறுப்பினத் தேவாலயப் போதகர்கள் அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள். போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்தப் போராட்டம் இரண்டு வாரங்கள் அமைதியாக நடப்பதாகத் தெரிந்தாலும், அருகில் இருந்த மற்ற ஊர்களுக்கும் பரவிக் கொண்டிருந்தது. சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. வெள்ளையர்கள் தங்களது வாழ்க்கை முறை மீது தாக்குதல் நடப்பதாக எண்ணினார்கள்.

இரண்டு வாரங்கள் முடிவில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வியாபாரப் பகுதியில் இருக்கும் பல கடைகளில் தங்களது போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள், தினமும் கடைகளுக்குள் நுழைந்து ஏதேனும் உணவு இருந்தால் தங்களுக்குக் கொடுக்கும்படி அமைதியாகக் கேட்பார்கள். நிர்வாகம் மறுத்தால் அங்கேயே அமைதியாகக் காத்திருப்பார்கள்.

போராட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை லாசன் அவர்களுக்கு வகுத்துக் கொடுத்திருந்தார்.

  1. உங்களை யாரும் திட்டினால், பதிலுக்கு அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ கூடாது.
  2. சத்தமாகச் சிரிக்கக் கூடாது.
  3. அங்கு வந்து செல்பவர்களிடம் பேசக்கூடாது.
  4. உங்களது தலைவர் உத்தரவு கொடுக்கும் வரை, உங்களது இருக்கையில் இருந்து எழுந்திருக்காதீர்கள்.
  5. கடைகளின் வாசல்களையோ, வேறு பாதைகளையோ மறிக்க முயலாதீர்கள்.
  6. எப்போதும் மரியாதையோடும் நட்போடும் இருங்கள்.
  7. நிமிர்ந்து உட்காருங்கள்; எப்போதும் உணவு கொடுக்குமிடத்தைப் பார்த்து இருங்கள்.
  8. எந்த முக்கியமான சம்பவத்தையும் உங்களது தலைவருக்குத் தெரிவியுங்கள்.
  9. உங்களிடம் யாராவது ஏதாவது செய்தி கேட்டால் உங்கள் தலைவரிடம் அனுப்புங்கள்.
  10. கிறிஸ்து, காந்தி, மார்ட்டின் லூதர் கிங்கின் போதனைகளை நினைவில் வைத்திருங்கள். அன்பும், அகிம்சையும் மட்டுமே நமது பாதை.

இந்தப் போராட்டத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி வன்முறை வெடித்தது. அன்று உணவு வழங்குமிடத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் முடிந்தவுடன் வந்து சேர்ந்த காவல்துறை, 81 மாணவர்களைக் கைது செய்து வழக்குப் பதிந்தது.

மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அந்த வன்முறையை எந்த எதிர்வினையும் காட்டாமல் மாணவர்கள் எதிர்கொண்ட விதமும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முழுவதுமாக வெளியிடப் பட்டது. இது போராட்டத்தை நாடு முழுவதும் எடுத்துச் சென்றது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டன. ஆனால் அபராதத்தைக் கட்டுவது தங்களுக்கு எதிரான அரசின் அநீதியையும், அதன் அறமற்ற நடத்தையையும் ஆதரிப்பதாக இருக்கும் என்பதால் மாணவர்கள் அந்த அபராதத்தைக் கட்டப் போவதில்லை என்று அறிவித்தனர். இதனால் அங்கிருந்த அனைவருக்கும் 33 நாட்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த மாணவர்கள் சிறைக்குச் சென்றவுடன் அடுத்த மாணவர் குழு அவர்களது இடத்தை எடுத்துக் கொண்டது. போராட்டம் தொடர்ந்தது. மாணவர்களைத் தூண்டிவிட்டதாக ஜிம் லாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அதே நேரத்தில், நகரில் தங்களுக்குச் சமஉரிமை வழங்காத வியாபாரப் பகுதி கடைகளையும் கறுப்பின மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது. ஏற்கெனவே, மாதக் கணக்கில் போராட்டம் நடந்ததால் வன்முறைக்குப் பயந்து வியாபாரப் பகுதிக்குச் செல்வதை வெள்ளையர்களும், கறுப்பினத்தவர்களும் நிறுத்தியிருந்தார்கள்.

போராட்டம் நடந்து கொண்டிருந்த பெரும் அங்காடிகள் நாடு முழுவதும் கிளைகளை வைத்திருந்தன. வடமாநிலங்களில் இருந்த கிளைகளில் எந்தப் பாரபட்சமும் பார்க்கப்படாமல் இருந்தது அங்கு வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் ஒரே விதமாக நடத்தப்பட்டார்கள். ஆனால் அதே அங்காடிகள் எங்கெல்லாம் வெள்ளையர்களின் எதிர்பிருந்ததோ, குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் அங்கெல்லாம் பிரிவினையை அமுல்படுத்தியிருந்தார்கள்.

லாபத்தை மட்டுமே கருத்தாகக் கொண்டு இயங்கி வந்த இந்த வணிக நிறுவனங்கள், தங்களது லாபம் குறைந்தால் மட்டுமே அடுத்தவர்களின் குரலைக் கேட்கும் என்பது மாணவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனவே நாடு முழுவதும் இருந்த இந்த நிறுவனங்களின் கிளைகளின் முன் போராட்டங்களை அவர்கள் நடத்தினார்கள். தென் மாநிலங்களில் மட்டுமல்லாது, இரட்டை வேடம் போடும் எல்லா இடங்களிலும் இந்த நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.

ஏப்ரல் மாதம், நாஷ்வில் நகரின் மைய வியாபாரப் பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. முக்கியமாக, உயிர்த்தெழும் ஞாயிறு விடுமுறை அன்று வணிகம் முழுவதுமாக நடக்கவே இல்லை. நகர வணிகர்களும் நிர்வாகமும் ரகசியமாகப் போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.

அப்போது மாணவர்களின் வழக்குகளை நகரில் எடுத்து நடத்திக் கொண்டிருந்தவர், அலெக்சாண்டர் லூபி. NAACPயின் வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த அவர், மாணவர்களுக்குப் பெரும்பாலான உதவிகளைச் செய்து வந்தார். உயிர்த்தெழும் ஞாயிறு விடுமுறை முடிந்த அடுத்த வாரம் அவரது வீட்டின் மீது மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவரது வீடு முழுவதுமாகச் சிதைந்தது. அருகில் இருந்த கட்டடங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. மாணவர்களைப் பயமுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அவர்களது உறுதியை அதிகமாக்கவே செய்தது.

அன்று மதியமே கிட்டத்தட்ட 4000 பேர் நகரமன்றத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். எந்த விதப் பாடலோ, சத்தமோ இல்லாமல் நடைபெற்ற அந்தப் பேரணி நகரமன்றப் படிகளில் சென்று முடிவடைந்தது. அங்கு மாணவர் தலைவரான டயான் நாஷ் (Diane Nash), நகரத் தந்தையான பென் வெஸ்ட்டை நேரடியாக எதிர்கொண்டார். அவர், ‘ஒரு மனிதனை அவனது இனத்தைக் காட்டியோ, நிறத்தைக் காட்டியோ பிரிவினை செய்வது அறத்தின் அடிப்படையில் தவறு என்று நீங்கள் நம்புகிறீர்களா?’ என்று நகரத் தந்தையைப் பார்த்துக் கேள்வி எழுப்பவே, அதற்கு நகரத் தந்தை ‘ஆமாம்’ என்று நேரடியாகப் பதிலளித்தார்.

நகரத் தந்தையான பென் வெஸ்டின் இந்தப் பதில் கறுப்பினப் போராட்டத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது, வெள்ளையர்கள் இடையிலும் பிரிவினைச் சட்டங்கள் நியாயமானவை அல்ல என்ற உணர்வு ஏற்பட்டதைக் சுட்டிக் காட்டுவதாகவே இருந்தது. மேலும் அவரது இந்தப் பதில், நகர வணிகர்களைத் தங்களது வியாபார வழிமுறைகளை மீண்டும் அறத்தின் வழியில் பார்க்கச் செய்யவும் அழுத்தம் கொடுத்தது.

மே மாதம் முதல் வாரத்தில், அதாவது போராட்டம் ஆரம்பித்து 3 மாதங்களில் நகர வணிகர்கள் தங்களது நிறுவனங்களில் அனைத்து இனத்தவருக்கும் சமமான சேவையை வழங்குவதாகத் தெரிவித்தார்கள். இதையடுத்துப் போராட்டம் முடிவிற்கு வந்தது.

0

இதுபோன்ற போராட்டங்கள் தெற்குக் கரோலினாவில் இருந்து மிஸ்ஸிஸிப்பி மாநிலம் வரை அனைத்துத் தென் மாநிலங்களிலும் ஒரே காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. அவை, பல்வேறு விதமான முடிவுகளைக் கொடுத்தன. அலபாமாவிலும் மிஸ்ஸிஸிப்பியிலும் மாணவர்கள் மிகுந்த வன்முறையுடன் ஒடுக்கப்பட்டார்கள். மற்ற இடங்களில் ஓரளவிற்கு வெற்றி எட்டப்பட்டது.

இதே காலகட்டத்தில் அட்லாண்டாவில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டங்களில் எந்தச் சமரசமும் எட்டப்படவில்லை. அக்டோபர் மாதம் வரை சென்ற போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங்கும் பங்கு பெற்றார். ஆனால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தச் சம்பவம் நாடெங்கும் இந்தப் போராட்டங்களை விளம்பரப்படுத்தியது.

அந்த வருடக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் கென்னடி நேரடியாகத் தலையிட்டுக் கிங்கை விடுதலை செய்யக் கோரிக்கை வைத்தார். இது கறுப்பினத்தவர்களின் இடையில் கென்னடியின் புகழை அதிகரித்தது. மிகவும் நெருக்கமான அந்தத் தேர்தல் கென்னடியின் வெற்றியை உறுதி செய்தது. அதன் பின்னரும் ஆறு மாதங்கள் அட்லாண்டாவில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பின்னரே வெற்றிக் கிடைத்தது.

இதன்பிறகு தென் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட நகரங்களின் உணவு விடுதிகளில் நிலவி வந்த பிரிவினைகள் முடிவிற்கு வந்தன.

இந்தப் போராட்டங்கள் வெற்றி அடைந்தாலும், மாணவர்கள் போராட்டங்களை மிக வேகமாக நடத்துவதாகவே கறுப்பின மூத்தத் தலைவர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனால் மாணவர்கள் இந்தப் போராட்டத்தின் மூலமாக முக்கியமான படிப்பினை ஒன்றைப் பெற்றுக் கொண்டனர். அது, நாட்டையும் உலகையும் கவனிக்க வைக்கும் முறையில் நடக்கும் போராட்டமே ஒன்றிய அரசின் மீது அழுத்தத்தைக் கொடுத்து அதனைச் செயல்பட வைத்திருக்கிறது என்பதே. அடுத்ததாக நடைபெற்ற போராட்டங்களிலும் அவர்களது செயல்முறை இதற்கு ஏற்றாற் போலவே இருந்தது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *