Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #30 – பின்வாங்கப் போவதில்லை

கறுப்பு அமெரிக்கா #30 – பின்வாங்கப் போவதில்லை

ஜார்ஜியா மாநிலத்தின் அல்பனி நகரம். அதன் காவல்துறை ஆணையரான லாறி பிரிச்சேட்(Laurie Pritchett) சற்று வித்தியாசமான அதிகாரி. அருகில் உள்ள மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களையும், அவரது நகருக்கு அருகிலேயே அட்லாண்டா நகரில் நடந்து வந்த போராட்டங்களையும் கவனித்து வந்த அவருக்கு, தன்னுடைய நகரிலும் போராட்டங்கள் ஆரம்பிக்க வெகு காலமாகாது என்று தெரிந்திருந்தது.

அவரது நகரில் 60 சதவிகிதம் வெள்ளையர்கள் இருந்தார்கள். மற்றவர்கள் கறுப்பினத்தவர்களும், ஏனைய சிறுபான்மை மக்களும். நகரம் முழுவதுமாக வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்கள் பயன்பாட்டிற்கு எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. பேருந்து நிலையங்கள், உணவு விடுதிகள் என எதுவுமே பொதுவில் இல்லை. அதனால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டி நிச்சயம் போராட்டம் நடக்கும் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.

அவர் போராட்டக்காரர்களின் முறைகளைப் படிக்க ஆரம்பித்தார். காந்தியின் சத்தியா கிரக முறைகள், மார்ட்டின் லூதர் கிங்கின் வழிகள், போராட்டக்காரர்கள் எப்படிக் காவல்துறையின் அராஜகங்களைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுகிறார்கள், எதிர்த் தரப்பின் வன்முறையின் மூலம் அவர்களுக்கு விளம்பரம் எப்படிக் கிடைக்கிறது என்பதையெல்லாம் அதுவரை நடந்து முடிந்திருந்த, நடந்து கொண்டிருந்த போராட்டங்களை வாசித்துத் தெரிந்து கொண்டார். இதன்மூலம் அவருக்குப் போராட்டக்காரர்களின் அணுகுமுறை குறித்த ஒட்டுமொத்த பார்வை ஒன்று கிடைத்தது. இந்தப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவேளை தமது ஊரில் போராட்டம் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த திட்டம் ஒன்றைத் தீட்டத் தொடங்கினார்.

வன்முறையையும் பயத்தையும் கொண்டு மக்களை அடக்கி வைத்திருக்கும் ஒருவருக்கு, அகிம்சா முறையைப் பற்றிப் படிப்பது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் லாறி காரியக் கிறுக்கர். அவரது விருப்பம் எப்படிப்பட்டாவது நகர நிறவெறிக் கொள்கைகளை அமுல்படுத்துவது மட்டுமே. அதற்காகவே வெறித்தனமாக வாசித்தார்.

இறுதியாக அவர் வந்தடைந்த புரிதலைக் கொண்டு, திட்டங்களைத் தீட்டி நகரக் காவல்துறைக்குப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். 2-3 வாரங்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அதில், அகிம்சா போராட்டக்காரர்களை எப்படி எதிர்கொள்வது, வன்முறையில்லாமல் அவர்களை எப்படிக் கையாளுவது, எத்தகைய அவமானத்தை எதிர்கொண்டாலும் கோபமின்றிப் போராட்டக்காரர்களை எப்படி வீழ்த்துவது என்றெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்டது. தன்னுடைய திட்டத்திற்காக நாஷ்வில் நகரில் பின்பற்றப்பட்ட ஜிம் லாசனின் பயிற்சி முறைகளையும் அப்படியே எடுத்துக் கொண்டனர். இறுதியாகச் சரியான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரப்போகும் போராட்டத்திற்குக் காவல்துறை தயாராக இருந்தது.

0

‘அகிம்சா மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு’ (Student Nonviolent Coordinating Committee – SNCC அல்லது ஸ்னிக்) கல்லூரி மாணவர்களைப் பெரும்பாலும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு. 1961இன் இறுதியில் அந்த அமைப்பு கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டத்தின் முன்னணியில் நின்றது. புதிய போராட்டங்களை முன்னெடுப்பதிலும், எடுத்த போராட்டங்களை ஒருங்கிணைத்துப் பின்வாங்காமல் போரிடுவதும் அந்தக் குழுவினரின் குணமாக இருந்தது.

அல்பனி நகரில் நடக்க இருந்த போராட்டத்திற்கு ஸ்னிக்கின் பிரதிநிதியாகச் சார்லஸ் செர்ரோட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் ஸ்னிக் நகரில் எங்கெல்லாம் பிரிவினை இருக்கிறதோ, அங்கெல்லாம் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஸ்னிக்கின் வருகைக்கு முன்னர் அல்பனி நகரில் போராட்டங்கள் எதுவும் நிகழவில்லை. அங்கிருந்த கறுப்பினத்தவர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தாலும், தென் மாநிலக் கறுப்பினத்தவர்களுக்குப் பல தலைமுறைகளாக ஊட்டப்பட்டிருந்த பயம் அவர்களை எதுவும் செய்யவிடாமல் வைத்திருந்தது.

நகரம் எழுவர் கொண்ட ஆணையம் ஒன்றினால் ஆளப்பட்டு வந்தது. 1954ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க உச்சநீதி மன்றத்தினால் தொடர்ந்து உறுதி செய்யப்பட்ட சட்டங்கள் எதுவும் நகரில் அமல்படுத்தப்படவில்லை. ஆணையத்தின் பிரிவினைச் சட்டங்கள் மட்டுமே நகரில் செல்லுபடியாகிக் கொண்டிருந்தன.

நவம்பர் 22, 1961 அன்று NAACP மற்றும் ஸ்னிக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் அல்பனிப் பேருந்து நிலையத்தின் ‘வெள்ளையர்கள் மட்டும்’ காத்திருக்கும் அறையில் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் அபராதம் கட்டாமல், சிறையிலேயே இருந்துவிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னமும் 100 மாணவர்கள் பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். அல்பனி நகரில் இருக்கும் புனிதச் சீயோன் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் தினமும் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன.

போராட்டம் நகரம் முழுவதும் பரவியது. நூலகங்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் நடைபெற்றது. சில நேரங்களில் எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றது. எல்லா இடங்களிலும் போராட்டம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

லாறி பிரிச்சேட் கைதுகளுக்குத் தயாராகவே இருந்தார். போராட்டக்காரர்கள் சிறைகளை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டு இருப்பார்கள் என்றறிந்த அவர், அருகில் இருந்த நகரங்கள், கிராமங்கள் என எங்கெல்லாம் சிறைகள் இருந்தனவோ அங்கிருந்த அதிகாரிகளிடம் எல்லாம் பேசி அவற்றைத் தன்னுடைய உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டிருந்தார். எனவே கைதுகள் ஆயிரக் கணக்கில் நிகழ்ந்தாலும், அல்பனிச் சிறைகள் காலியாகவே இருந்தன. இதனால் நகரச் சபைக்கு எந்த அழுத்தமும் ஏற்படவில்லை.

மற்ற இடங்களில் இருந்த சிறைகளில் நிலைமை மோசமாக இருந்தது. 10 கைதிகள் இருக்கக்கூடிய சிறையில் 60-70 போராட்டக்காரர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். போராட்டக்காரர்கள் பெரும்பாலும் மாணவர்கள், நடுத்தர வயதினர், வேலை செய்யும் பெண்கள், பதின்ம வயதுச் சிறுவர்கள் போன்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை. தங்கள் உரிமைக்காகப் போராட வந்தவர்கள். அவர்களது குடும்பங்கள் அவர்களைப் பார்ப்பதற்கோ, பிணையில் எடுக்கவோ வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த கறுப்பினத்தவருக்கு இவை மிகுந்த சிரமத்தைக் கொடுத்தன.

மூன்று வாரங்களிலேயே நிலைமை மோசமாக இருப்பதைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உணர்ந்தது. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வில்லியம் ஆண்டர்சன், போராட்டத்தில் தங்களுக்கு உதவி தேவை என்பதை உணர்ந்தார். தங்களுடைய நகருக்கு வந்து உரையாற்ற வேண்டும் என்று மார்ட்டின் லூதர் கிங்கிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

டிசம்பர் 15ஆம் தேதி கிங் உரையாற்றுவதற்காக அல்பனி வந்தார். அன்றிரவு உரையாற்றுவதைத் தவிர அவருக்கு எந்தத் திட்டமும் இல்லை. ஆனாலும் அங்கிருந்த ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க மறுநாள் அவரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அங்கே கைது செய்யப்பட்டு, பின் பிணையிலும் வெளி வந்தார்.

சென்ற அத்தியாயத்தில், அவருக்கும் ஸ்னிக் அமைப்பின் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் பற்றிச் சொல்லியிருந்தோம். கிங் அல்பனிக்கு வரவும், மற்ற இடங்களுக்குச் செல்லவுமாக இருந்தது அவர்களுக்கு விருப்பமாக இல்லை. கிங் வரும்போதெல்லாம் கூடும் கூட்டம் மற்ற நாட்களில் இருப்பதில்லை. ஸ்னிக் கிங்கினால் கிடைக்கும் விளம்பரத்தை மட்டுமே எதிர்பார்ப்பதாக SCLC குற்றம் சாட்டியது. இருந்தாலும், அல்பனியில் முன்னே நின்றவர்கள் ஸ்னிக் மாணவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

மற்ற இடங்களில் நிகழ்ந்த போராட்டங்களுக்கும், இங்கு நடைபெறும் போராட்டத்திற்கும் வித்தியாசம் இருந்தது. இங்குக் காவல்துறை போராட்டத்தை நசுக்க முயலவில்லை. மாறாக அவர்கள் நகர மன்றம் முன்பாக, எங்கு வேண்டுமென்றாலும் போராட்டம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. எந்த இடத்திலும் வன்முறை கையாளப்படவில்லை. கைதுகள் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அவர்களும் 10-15 மைல்கள் தள்ளியிருக்கும் சிறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

மாதங்கள் கடந்தன. எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் ஜூலை 1962இல் கிங் வந்தார். இந்த முறையும் கைது செய்யப்பட்டார். இந்த முறை பிணையில் வெளி வருவதில்லை என்று முடிவு செய்தார். ஆனால் மூன்று நாட்களில் லாறி பிரிச்செட்டின் வேண்டுகோளின் பேரில் ஒருவர் பிணையைக் கட்டிவிட விடுதலை செய்யப்பட்டார்.

போராட்டம் முடிவின்றி நீண்டது. கிங் அல்பனியில் இருந்து வெளியேறினால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. கிங்கும் வெளியேறினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதன் பின்னரும் ஸ்னிக் போராட்டத்தைத் தொடர்ந்தாலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. கிங்கின் போராட்டங்களில் தோல்வி அடைந்த போராட்டம் இது என்றே சொல்லப்படுகிறது.

‘நான் செய்த தவறு என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை எதிர்த்துப் போராடாமல் பொதுவாக நிறவெறிக்கு எதிராகப் போராட முனைந்ததுதான். எங்கள் போராட்டம் மிகவும் குழப்பத்துடன் இருந்ததால் மக்கள் கடைசியில் வருத்தத்துடனும் கவலையுடனும் வெளியேற வேண்டியிருந்தது’ என்று பின்னாளில் கொடுத்த ஒரு நேர்காணலில் கிங் தெரிவித்தார்.

ஆனால் அந்தப் போராட்டம் அவருக்கு மிகப்பெரிய பாடம் ஒன்றைக் கற்றுத் தந்தது. அது தந்த படிப்பினைகளைக் கொண்டு தனது உரிமைகளை இன்னமும் உறுதியுடன் நிறைவேற்ற முடிவு செய்தார்.

0

போராட்டங்கள் இயக்கங்களாலும் பெருந்தலைவர்களாலும் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எந்த விதியும் இல்லை அல்லவா? அதற்கேற்றாற்போல உரிமைப் போராட்டத்திலும் பல இடங்களில் தனி மனிதர்கள் தங்களது எதிர்ப்புகளை மிகுந்த தைரியத்துடன் பதிவு செய்து கொண்டே இருந்தனர். முன்பே பார்த்த ரோசா பார்க்ஸ் அப்படிப்பட்ட தனி நபர்தான். வேலை செய்த களைப்பில் பேருந்தில் அமர்ந்திருந்தவருக்கு நிதமும் வெறுப்பை எதிர்கொண்ட களைப்பும் சேர்ந்து கொள்ள அந்த நாள் அவர் எழுந்து கொள்ள மறுத்து ஒரு பெரும் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். அது போன்ற இன்னொருவர்தான் ஜேம்ஸ் மெரிடித் (James Meredith).

மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் என்றால் அது அதே மாநிலத்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் இருந்த மிஸ்ஸிஸிப்பிப் பல்கலைக்கழகம்தான். தென் மாநிலங்களில் இருந்த சிறந்த பல்கலைக் கழகமும் அதுவேதான். அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான வில்லியம் ஃபால்க்னர் அங்குதான் 3 வருடங்கள் தபால்காரராக வேலை செய்தார். அவர் அந்த வேலையில் இருந்து விலகியபோது எழுதிய பதவி விலகல் கடிதம் மிகவும் பிரபலமானது.

‘முதலாளித்துவ முறையின்கீழ் நான் வாழும் வரை, என்னுடைய வாழ்வு பணக்காரர்களால் ஏதோ விதத்தில் கட்டுப்படுத்தப்படும் என்பதைத் தெரிந்தே இருக்கிறேன். அதற்காகக் கையில் இரண்டு சென்ட்டுடன் தபால்தலை வாங்க வரும் ஒவ்வொரு அயோக்கியனின் கூவலுக்கும் நான் பதில் சொல்ல முடியாது.

இதுதான் என்னுடைய பதவி விலகல் கடிதம்.’

ஆனால் நமது கதை அவரைப் பற்றியதல்ல.

ஜேம்ஸ் மெரிடித் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், ஒன்பது வருடங்கள் அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தன்னுடைய மாநிலத்திற்குத் திரும்பினார். பின் 1961இல் மிஸ்ஸிஸிப்பி மாநிலத் தலைநகரான ஜாக்சனில் இருந்த கறுப்பினத்தவர்களுக்கான கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார்.

1961இல் மிஸ்ஸிஸிப்பிப் பல்கலைக்கழகம் வெள்ளையர்களுக்கு மட்டுமே அங்குப் படிக்க அனுமதி கொடுத்துக் கொண்டு இருந்தது. அங்குச் சேர்ந்து படிக்க மெரிடித் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. உடனே அவர் NAACPயின் சட்ட உதவிப் பிரிவை நாடி, தனக்காக வழக்காட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தச் சமயத்தில் மிஸ்ஸிஸிப்பியின் ஆளுநராக இருந்தவர் நமக்கு முன்பே அறிமுகமான ராஸ் பார்னெட். அவர் இதற்கு எதிராக நேரடியாகவே ஈடுபடலானார். நிறவெறியைத் தங்களது உரிமையாகப் பார்த்த அவர், சட்டரீதியாக எதிர்த் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார்.

பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மிஸ்ஸிஸிப்பி மாநிலம் தங்களது பல்கலைக்கழகத்தில் எந்தப் பிரிவினையும் இல்லை என்று வழக்காடியது. அதன் ஆளுநர் மாநில உரிமையைக் கென்னடி அரசாங்கம் நசுக்குவதாகவும், தனது மாநிலத்தின் ‘பாரம்பரியத்திற்கு’ எதிரான எதையும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அறைகூவல் விட்டார்.

இருப்பினும் நீதிமன்றம் மெரிடித்தைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆணையிட்டது. இந்த ஆணையை ஒன்றிய அரசு அமல்படுத்தும் என்று பாபி கென்னடியின் நீதித்துறையும் நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தது. ஆனால் இதுவே அடுத்த மோதலுக்கான விதையாக அமைந்தது.

செப்டம்பர் 20, 1962 அன்று பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வந்த ஆளுநர் ராஸ் பார்னெட், ஜேம்ஸ் மெரிடித்தை அனுமதிக்க முடியாது என்று நேரடியாக அவரிடமே தெரிவித்து வெளியே அனுப்பினார். மாநில உரிமைகள் தனக்குச் சட்டரீதியான பாதுகாப்பு தருவதாகவும் பேசினார்.

ஐந்து நாட்கள் கழிந்தன. இந்த முறை ஜேம்ஸ் மெரிடித் ஒன்றிய மார்ஷல்களுடனும், ஒன்றிய நீதித்துறை வக்கீல்களுடனும் ஜாக்சன் நகரில் இருக்கும் பல்கலைக்கழக அலுவலகத்தில் தன்னைப் பதிவு செய்துகொள்ள வந்தார். ஆனால் இங்கும் ஆளுநர் நேரடியாக வந்து, உள்ளே அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பினார். இப்போது ஒன்றிய அரசிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தது.

ஜேம்ஸ் மெரிடித்
ஜேம்ஸ் மெரிடித் ஒன்றிய மார்ஷல்கள் துணையுடன் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். (லைப்ரரி ஆப் காங்கிரஸ்)

கென்னடியே நேரடியாக ஆளுநரைத் தொடர்புகொண்டு பேசினார். ஆனாலும் ஆளுநர் இறங்கிச் செல்லவில்லை. கென்னடியோ தென் மாநிலங்களில் தனக்கு இருக்கும் ஆதரவை இழக்க மனமில்லாமல் எந்தப் பெரிய நடவடிக்கையும் இல்லாமல் நிலைமை அப்படியே இருக்க விட்டுவிட்டார். அடுத்த நான்கு நாட்களுக்குள் கு க்ளக்ஸ் கிளான் மாநிலம் முழுவதும் மற்ற நிறவெறிக் குழுக்களின் வெள்ளையர்களை ஒன்று திரட்டிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாகச் செப்டம்பர் 30ஆம் தேதி கென்னடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். அதன்படி முந்தைய இரவே 500 ஒன்றிய மார்ஷல் காவலர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார். பல்கலைக்கழகத்தில் பெரிய எண்ணிக்கையில் மார்ஷல்கள் திரண்டது அங்கிருந்த வெள்ளை மாணவர்களையும் மற்றவர்களையும் ஆத்திரம் கொள்ள வைத்தது. அவர்கள் ஜேம்ஸ் மெரிட்டை அங்கேதான் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவவே அதுவும் அவர்களின் வெறியை அதிகரித்தது.

அன்றிரவே பல்கலைக்கழகம் போர்களமானது. 3000க்கும் அதிகமான வெள்ளை நிறவெறியர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்த மார்ஷல்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தெரிந்து கொண்ட ஜான் கென்னடி, நடவடிக்கை எடுக்கும்படியாக ஆளுநரைக் கேட்டார். ஆளுநரோ எல்லோரும் அமைதியாக இருக்க அறிக்கை விடுவதாகக் கூறினார். ஆனால் வழக்கம்போல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இத்தகைய சூழலிலும் கென்னடி சகோதரர்கள் இன்னமும் எல்லோருக்கும், குறிப்பாக வெள்ளை நிறவெறியர்களிடமும்கூட நல்லவர்களாக இருக்க முயன்றார்கள். இதனால் நிலைமை அங்குக் கட்டுக்கடங்காமல் சென்றது. இறுதியில், பல்கலைக்கழகத்தில் இருந்த நீதித்துறை அதிகாரிகளின் வேண்டுகோள் விடுக்கவே அதிகாலையில் அங்கே அமெரிக்க ராணுவம் அனுப்பப்பட்டது. கலவரம் அடக்கப்பட்டது. ஆனால் அதற்குள் 2 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். 35 மார்ஷல்கள் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருந்தார்கள். இறுதியாக மெரிடித் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த மூன்று வருடங்களும் மெரிடித், மார்ஷல்கள் துணையுடன்தான் தன்னுடைய படிப்பை முடித்தார். ஒன்றிய அரசை நேரடியாக ஈடுபட வைத்த அவரது போராட்டம், கறுப்பினத்தவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் இன்னுமொரு அடியை எடுத்து வைத்தது.

0

இந்தப் போராட்டங்களும் அப்போது நடந்து கொண்டிருந்த சுதந்திரப் பயணப் போராட்டங்களும் கென்னடி சகோதரர்கள் தங்களது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வைத்தது. 2 வருடங்களுக்குப் பின்னர் அவர்கள் தென் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்தார்கள். இருப்பினும், அவர்களது பாதையை முழுவதுமாகக் கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்ற இன்னுமொரு போராட்டமும் வேண்டியிருந்தது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *