பிரெடெரிக் ஷட்டில்ஸ்ஒர்த் (Frederick Shuttlesworth), பர்மிங்காம் நகரில் இருக்கும் பெத்தேல் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் போதகர். நகர NAACPயின் தலைவராகவும் இருந்தார். 1956இல் NAACP செயல்படுவதற்கு அலபாமா மாநிலம் தடை விதித்தது. எனவே ஷட்டில்ஸ்ஒர்த், அலபாமா கிறிஸ்துவர்களின் மனித உரிமை இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராக நிறவெறிக்கு எதிராகப் போராடினார்.
ஷட்டில்ஸ்ஒர்த் மிகுந்த தைரியசாலியாகக் கருதப்பட்டார். தனது தைரியம் கடவுளிடம் இருந்து வருகிறது என்றும், ஒன்று நிறவெறி ஒழிக்கப்பட வேண்டும் அல்லது அந்த முயற்சியில் தான் இறந்து விட வேண்டும் என்றும் உறுதியாகக் கூறினார்.
மான்ட்கமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்ற நேரத்தில், ஷட்டில்ஸ்ஒர்த் பர்மிங்காமில் அதற்கு நேரெதிரான போராட்டத்தைத் திட்டமிட்டார். 1956ஆம் வருடம் கிறிஸ்துமஸ் தினத்தின் மறுநாள் நடைபெறவிருந்த அவரது போராட்டத்தில் எல்லாப் பேருந்துகளையும் கறுப்பினத்தவர்களைக் கொண்டு நிரப்பிவிடுவது, பேருந்தில் இருக்கும் அனைத்து இருக்கைகளிலும் கறுப்பினத்தவர்களை உட்கார வைத்து விடுவது என்பதுதான் அவரது திட்டம். ஆனால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்தினம் அவரது வீட்டில் 16 குச்சிகள் டயனமைட் வெடிகுண்டு வெடித்தது. இதில், அவரது வீடு முழுதாக இடிந்து விழுந்தது. காவல்துறை அதிகாரிகளுடன், கு க்ளக்ஸ் கிளான் வெறியர்களும் தங்களது எதிரியின் மரணத்தைக் காண வந்தார்கள்.
அன்று இரவு இடிந்து கிடந்த வீட்டின் நடுவில் இருந்து உடையில் எந்தக் காயமும் இல்லாமல் ஷட்டில்ஸ்ஒர்த் எழுந்து வந்தார். அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் சென்று, ‘உங்கள் கு க்ளக்ஸ் கிளான் தோழர்களிடம் சொல்லுங்கள். இதிலிருந்து கடவுள் என்னைக் காப்பார் என்றால், நான் எங்கும் செல்லப் போவதில்லை. இந்தப் போர் இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்று’ என முழங்கினார்.
பர்மிங்காம் நகரில் வெள்ளையர்களுக்கு மட்டுமே இருந்த பள்ளியில், தன்னுடைய குழந்தைகளைச் சேர்க்க முயன்றார். அங்கே கூடி இருந்த கும்பல் ஒன்று அவரை மயக்கமாகும் வரை அடித்துத் துவைத்தது. அவரது மனைவிக்குக் கத்திக்குத்து நிகழ்ந்தது. அதிலிருந்தும் அவர் குணமாகி வந்தார். அவரது நோக்கமே பர்மிங்காம் கறுப்பினத்தவர்களிடையே கவிந்திருந்த பயம் என்னும் இருளை எப்படியாவது, தன்னையே உதாரணமாகக் கொண்டு விரட்டுவதுதான்.
சுதந்திரப் பயணத்தின்போது பர்மிங்காம் நகரில், அதன் காவல்துறை ஆணையர் ‘புல்’ கானரினால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அப்போது தாக்கப்பட்ட மாணவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஷட்டில்ஸ்ஒர்த்தும் அவரது தேவாலய உறுப்பினர்களும்தான்.
1957இல் மார்ட்டின் லூதர் கிங் தென்மாநிலக் கிறிஸ்துவத் தலைவர்கள் குழுவை (Southern Christian Leaders Conference – SCLC) ஆரம்பித்த போது, ஷட்டில்ஸ்ஒர்த்தும் கிங்கின் முயற்சியில் துணை நின்றவர். அவர் எதிலும் பின்வாங்க மாட்டார் என்பதையும், அவரை எதனாலும் வாங்க வைக்க முடியாது என்பதையும் பர்மிங்காம் நகரில் அடுத்து நிகழ்ந்த போராட்டங்களில் கிடைத்த வெற்றி உரக்கச் சொன்னது.
0
1962ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அல்பனி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து வெளியேறிய மார்டின் லூதர் கிங், அல்பனி போராட்டத்தில் என்னவெல்லாம் சரியாக நடக்கவில்லை, பெரிய அளவில் அகிம்சா போராட்டம் நடத்தும்பொழுது போராட்ட முறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நிகழ வேண்டும் என்றெல்லாம் தன்னுடைய குழுவினருடன் விவாதித்தார். பர்மிங்காம் நகரில் நிலவும் நிறவெறி பிரிவினையையும் வன்முறையையும் எதிர்கொள்ள வருமாறு ஷட்டில்ஸ்ஒர்த் அழைப்பு விடுத்திருந்தார். அதையே தங்களது அடுத்தப் போராட்டக் களமாகக் கொள்ள கிங் முடிவு செய்தார்.
இரவு பகலாகப் போராட்டத்திற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டது. ப்ராஜெக்ட் ‘சி’ (C – Confront – எதிர்கொள்) என்றழைக்கப்பட்ட அந்தப் போராட்டம் மூன்று நோக்கங்களைப் பட்டியலிட்டது.
முதலாவது நோக்கம் நிறவெறியின் முக்கியக் கோட்டையான பர்மிங்காம் நகரிலேயே அதன் முதுகை ஒடிப்பது. அதுவே தென் மாநிலங்கள் அனைத்திலும் நிறவெறிச் சட்டங்களை வலுவிழக்கச் செய்யும்.
இரண்டாவது, தேசம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மக்களை இன ரீதியாகப் பார்க்காமல் கென்னடி அரசாங்கத்தைச் செயல்படச் செய்வது.
மூன்றாவதாக வடக்கில் போதுமான ஆதரவைத் திரட்டி, புதிதாக ஒரு பொது உரிமைச் சட்டத்தை இயற்றச் செய்வதன் மூலம் தேசம் முழுவதும் உள்ள அனைத்து நிறவெறி சட்டங்களையும் ஒழிப்பது.
திட்டம் மிகக் கச்சிதமாக இருந்தது. இந்தமுறை ஒரே அடியில் நிறவெறியை வீழ்த்திவிடுவதுதான்.
1963ஆம் வருடம், பிப்ரவரி மாதம், போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களுக்கு அகிம்சா முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உணவு விடுதிகளிலும், பின்னர் ஊர்வலங்கள் மூலமாகவும் போராடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்பின் ஏப்ரல் மாத உயிர்த்தெழும் ஞாயிறு விடுமுறைக் காலத்தில் வெள்ளையின வணிகர்களைப் புறக்கணிப்பதன் மூலமும், நகரச் சிறைகளை நிரப்புவதும் மூலமும் நகரின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வளவு தெளிவான திட்டங்களைத் தீட்டியிருந்தாலும் தாங்கள் எதிர் கொள்ளப்போவது இன்னொரு லாறி பிரிச்செட் இல்லை என்பதைத் தலைவர்கள் அனைவருக்கும் தெரிந்தே வைந்திருந்தார்கள். ‘புல்’ கானரின் இரும்புக் கரத்தையும், அதன் வன்முறையையும் தாங்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பதும், அனைவரும் சில காலம் சிறையில் இருக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது.
0
1963ஆம் வருடம் அலபாமாவின் ஆளுநராக ஜார்ஜ் வாலஸ் பதவியேற்றிருந்தார். பெரும் பிரிவினைவாதியாகவும், நிறவெறியராகவும் அறியப்பட்ட அவர் 96 சதவிகித வாக்குகளுடன் வெற்றிப் பெற்றிருந்தார். அவர் பங்கேற்ற தேர்தலில் பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டதால் கிடைத்த வெற்றி அது.
இதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற பர்மிங்காம் நகர்மன்றத் தேர்தலிலும் அவரது ஆதரவாளர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். ஆனால், அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்களும் தங்களது வெற்றியை அறிவித்திருந்தனர். எனவே தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனால் எதிர்பாராதவிதமாகத் தீர்ப்பு வரும் வரை ‘புல்’ கானர் முழு அதிகாரத்துடன் இருந்தார்.
ஏப்ரல் 3ஆம் தேதி போராட்டம் ஆரம்பித்தது. 65 கல்லூரி மாணவர்கள் நகர உணவு விடுதிகளுக்குச் சென்று தங்களையும் சமமான முறையில் நடத்த வேண்டும் என்று உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் வியாபாரிகள் எந்த விதத்திலும் வன்முறையை விரும்பவில்லை. எனவே காவல்துறையை அழைப்பதற்குப் பதிலாகக் கடைகளை மூடிவிட்டார்கள். இது வெள்ளையர்களுக்கு இடையிலேயே இரண்டு தரப்புகள் இருப்பதைக் காட்டியது. அதுபோலவே கறுப்பின வணிகர்களும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
உணவு விடுதிகள் மூடப்படவே, நகரச் சபைக்கு ஊர்வலமாகச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அப்படிச் சென்றபோது ‘புல்’ கானரின் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. ஒரு வாரம் கடந்தது. 150 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். போராட்டக்குழு நினைத்தது போலச் சிறை நிரம்பவில்லை. சிறையில் இருந்தவர்களைப் பிணையில் எடுக்க முயன்றாலும், போராட்டக் குழுவின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. எதிர்பார்த்ததுபோலப் பத்திரிகைகளும் தேசிய அளவில் இந்தப் போராட்டத்தில் ஈடுபாடு காட்டவில்லை.
அலபாமா மாநில நீதிமன்றம் நகரில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதித்தது. ஆளுநர் ஜார்ஜ் வாலஸ், பர்மிங்காம் நகரில் மட்டும் சிறைப் பிணையை $300ல் இருந்து $2500ஆக உயர்த்தினார். சிறைக்குச் சென்றவர்களால் பிணை கொடுக்க முடியாமல் அவர்கள் 6 மாதம் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்த நடவடிக்கை என்ன என்ற குழப்பம் போராட்டக்குழுவின் உள்ளே ஏற்பட்டது.
ஏப்ரல் 12ஆம் தேதி, புனித வெள்ளி அன்று நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஊர்வலம் செல்ல கிங் முடிவு செய்தார். சிறைக்குச் சென்றால் பிணையில் எடுப்பதற்கும் பணம் இல்லை என்று புரிந்துகொண்டாலும் நீண்ட காலம் சிறைக்குச் செல்ல அவர் தயாராகி இருந்தார். ‘என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. எங்கிருந்து பணம் வரும் என்றும் தெரியாது. கடவுளின் மீதான நம்பிக்கையிலேயே நான் செயல்பட வேண்டும்’ என்று அன்றைய நிலை குறித்துக் கூறினார்.
புனித வெள்ளி அன்று, கிங் இன்னமும் 50 போராட்டக்காரர்களுடன் ஊர்வலம் சென்றபோது கைது செய்யப்பட்டார். அவருக்குத் தனிமைச் சிறை கொடுக்கப்பட்டது.
பர்மிங்காம் நகரில் நடந்து கொண்டிருந்த போராட்டத்திற்கு நாடெங்கும் சற்றுத் தயக்கமாகவே ஆதரவு தரப்பட்டுக் கொண்டிருந்தது. சரியான நகர மன்றம் இல்லாத நிலையில், கிங் அவசரத்துடன் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் போராட்டத்தை ‘மோசமான நேரத்தில் நடக்கும் போராட்டங்கள்’ என்று விமரிசனம் செய்தது. பர்மிங்காம் நகரப் பத்திரிகைகளும் புதிய நகரச் சபை பதவியேற்கும் வரை கறுப்பினத்தவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று எழுதியது. தலைமைப் பதவி போட்டிக்காகக் கிங் அவசரப்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
தனிமைச் சிறையில் இருந்த கிங், தன்னிடம் இருந்த பத்திரிகை ஓரங்களிலும், துண்டுத் தாள்களிலும் தன்னுடைய பதிலை எழுதினார். ஆறு பக்கங்கள் சென்ற அந்தக் கடிதம் ‘பர்மிங்காம் சிறையில் இருந்து ஒரு கடிதம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில பகுதிகளைக் கொடுப்பது, கிங் எப்படியான மனிதர் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உதவும்.
‘பர்மிங்காம் நகரச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் இந்த நேரத்தில், எங்களது நடவடிக்கையை ‘அறிவில்லாததும் தேவையில்லாததும்’ என்றும் அழைக்கும் உங்களது பத்தியைப் பார்க்க நேர்ந்தது. என்னுடைய வேலையைப் பற்றியோ, சிந்தனையைப் பற்றியோ எழும் விமர்சனங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை… ஆனால் நீங்கள் அனைவரும் உண்மையிலேயே நல்ல மனம் கொண்டவர்கள் என்பதாலும், உங்களது விமர்சனம் உண்மையான அக்கறையுடன் சொல்லப்படுகிறது என்பதாலும் அதற்குப் பொறுமையாகப் பதில் சொல்ல முனைகிறேன்…
எந்த அகிம்சா போராட்டத்திலும் நான்கு நிலைகள் இருக்கின்றன. அநீதி இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்பதற்கான ஆதாரங்களைச் சேகரிப்பது, பேச்சுவார்த்தை, தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்வது, நேரடிச் செயலில் இறங்குவது. பர்மிங்காம் போராட்டத்தில் நாங்கள் இந்த நான்கையும் செயல்படுத்தி இருக்கிறோம்…
உங்கள் அறிக்கையின் ஆதாரமான கருத்து, எங்களுடைய நடவடிக்கைகள் சரியான நேரத்தில் இல்லை என்பதுதான். இன்னமும் சிலர் ‘புதிய நிர்வாகம் பதவியேற்கும் வரை காத்திருக்கலாமே?’ என்கிறார்கள். அவர்களுக்கு நான் கொடுக்கும் ஒரே பதில், பழைய நிர்வாகத்தைப் போலவே புதிய நிர்வாகத்தையும் நாங்கள் வேலை செய்ய வைக்கவே முயலுகிறோம்…
எங்களுடைய வலி மிகுந்த அனுபவத்தில் ஒடுக்குபவர்கள் சுதந்திரத்தைத் தானாகவே கொடுப்பதில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டால் மட்டுமே கிடைக்கும். நிறவெறி நோயால் பாதிக்கப்படாத எவரின் நேரக்கோட்டிலும் இதுவரை நான் ஈடுபட்ட எந்தப் போராட்டமும் சரியான நேரத்தில் நடக்காததாகவே இருக்கிறது. பல வருடங்களாக நான் ‘காத்திருங்கள்’ என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறேன். ஒவ்வொரு கறுப்பினத்தவரின் காதுகளிலும் இந்த வார்த்தை பல முறை சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே ‘காத்திருங்கள்’ என்பது எப்போதும் ‘இல்லை’ என்பதாகவே இருக்கிறது…
கடவுளால் கொடுக்கப்பட்ட, எங்களது அரசியலமைப்புச் சட்ட உரிமைகளுக்காக நாங்கள் முன்னூற்றி நாற்பது ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்… கும்பல்கள் உங்களது தாயையும், தந்தையும் கொலை செய்வதையும், உங்களது சகோதர, சகோதரிகளை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்வதையும் பார்த்திருந்தால், காவல்துறையினர் எங்களது கறுப்பினச் சகோதரர்களை எந்த விளைவும் இன்றி அடிக்கவும், திட்டவும், ஏன் கொல்லவும் கூடச் செய்வதைப் பார்த்திருந்தால், வளமையுடன் வாழ்ந்து வரும் மக்களிடையே உங்களது இருபது மில்லியன் கறுப்புச் சகோதரர்கள் ஏழ்மையில் உழலுவதைப் பார்த்திருந்தால், தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் கேளிக்கை இடங்களுக்கு ஏன் செல்ல முடியாது என்று உங்களது ஆறு வயது மகளுக்கு விளக்க முடியாமல், உங்களது நாக்கு குழறி, திணறி இருந்தால், கறுப்பினத்தவருக்குக் கேளிக்கை பூங்காக்கள் மூடப்பட்டிருக்கிறது என்று சொல்வதைக் கேட்டு அவளது கண்களில் நீர் வழிவதைப் பார்த்திருந்தால், அவளது மனதில் தாழ்வு மனப்பான்மை மெலிதாக உருவாவதை நீங்கள் உணர்ந்திருந்தால், தன்னையுமறியாமல் வெள்ளையர்கள் மீது அவளுக்கு ஒரு கசப்புணர்வு வருவதை நீங்கள் தெரிந்திருந்தால்.. உங்களது மனைவியும், தாயும் எந்த மரியாதையும் இன்றி அழைக்கப்படுவதைக் கேட்டிருந்தால், கறுப்பினத்தவர் என்ற ஒரே காரணத்திற்காகப் பகலும், இரவும் எப்போதும் விரட்டப்பட்டுக் கொண்டே இருந்தால், எப்போதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல், எப்போதும் உள்ளூர பயத்திலும் வருத்தத்திலும் இருந்து, எப்போதும் நீங்கள் ‘யாருமில்லை’ என்ற உணர்வோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தால் – அப்போது காத்திருப்பது ஏன் எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
பொறுமையின் கோப்பை நிரம்பும் நேரமும் ஒன்று இருக்கிறது. அப்போது மனிதர்கள் இதற்கு மேலும் அநீதியின் எல்லையில்லாப் பள்ளத்தில், கவலையுடன் மூழ்குவதற்கு விருப்பமில்லாமல் போகிறார்கள். இப்போது, எங்களது நியாயமான, தவிர்க்க முடியாத பொறுமையின்மையை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்…
சுதந்திரத்தை நோக்கிய கறுப்பினத்தவர்களின் பயணத்தில், அவர்களுக்கு இருக்கும் பெரும் தடங்கல் வெள்ளை குடிமக்கள் குழுக்களோ, கு க்ளக்ஸ் கிளான் வெறியர்களோ அல்ல. மாறாக வெள்ளையின மிதவாதிகள்தான். இவர்கள் நீதியை விட ‘ஒழுங்கை’ அதிகமாக விரும்புகிறார்கள்; நீதியுடன் இருக்கும் அமைதியைவிடப் பதட்டம் இல்லாத நேர்மறை அமைதியை விரும்புகிறார்கள். ‘உங்களுடைய நோக்கம் சரியானது. ஆனால் நீங்கள் போராடுவதை நான் விரும்பவில்லை’ என்கிறார்கள். இன்னொரு மனிதனின் சுதந்திரத்திற்கு இவர்கள் நேரம் குறிக்கிறார்கள். ‘இன்னமும் சரியான நேரத்திற்குக் காத்திருங்கள்’ என்று எப்போதும் கறுப்பினத்தவர்களுக்கு அறிவுரை கூறி, தங்களுடைய கனவுலக நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.’
கிங் எழுதிய மிகவும் காத்திரமான இந்தக் கடிதத்தைப் பதிப்பிக்க எந்தப் பத்திரிகையும் முன்வரவில்லை.
0
கறுப்பின நடிகரும் பாடகருமான ஹென்றி பெலபோன்ட், தன்னுடைய முயற்சியால் சிறையில் இருந்தவர்களுக்கான பிணையைத் திரட்டினார். $50000 இந்த நோக்கத்திற்காகப் போராட்டக் குழுவிற்கு வழங்கினார். இதனால் கிங்கும் மற்றவர்களும் 8 நாட்கள் சிறைக்குப் பின்னர் வெளியே வந்தார்கள். ஆனால் போராட்டம் தொடங்கிவிட்டது. புறக்கணிப்புகள் மறைந்து கொண்டிருந்தன.
பர்மிங்காம் நகரக் கறுப்பினத்தவர்கள் பெரும்பாலும் மிகுந்த ஏழ்மையில் இருந்தார்கள். தினசரி கூலியாக வேலை செய்பவர்களான அவர்கள் சிறைக்குச் சென்றால், அவர்களது குடும்பமும் உணவின்றிப் போகும் நிலை இருந்தது. நிதி நிலைமையும் மோசமாக இருந்ததால், போராட்டக் குழுவால் அனைவருக்கும் தேவையான உதவியைச் செய்ய முடியவில்லை. எனவே, அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவோ, சிறைக்குச் செல்லவோ விருப்பமில்லாமல் இருந்தார்கள்.
எனவே புதிய யுக்தி தேவைப்பட்டது. கிங், டயான் நாஷ் மற்றும் பிற நாஷ்வில் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களும் அவரது அழைப்பை ஏற்று வந்தார்கள். அவர்கள் நகர இளைஞர்களை அகிம்சா முறை போராட்டத்திற்குப் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சிக்குப் பல பதின்ம வயது சிறுவர்களும், சிறுமிகளும்கூட வந்தார்கள். தாங்களும் போராடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
மே 2ஆம் தேதி ஊர்வலம் நடக்க இருப்பதாக கிங் அறிவித்தார். ஆனால் சிறுவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதில் அவருக்குச் சம்மதம் இல்லை. அதிலும் அவர்கள் சிறைக்குச் செல்லும் சாத்தியம் இருப்பதால் அவரால் அதற்கு ஒப்புதல் கொடுக்க முடியவில்லை. ஆனால் சிறுவர், சிறுமிகள் திருச்சபையில் சேர்வதற்கு வயது தடையில்லை என்றால், நீதிக்குச் சாட்சியம் சொல்வதற்கும் அவர்களுக்கு வயது தடையாக இருக்கக்கூடாது என்று வாதம் செய்யப்பட்டது. இறுதியில் கிங் அதனை ஒப்புக் கொண்டார்.
முதல் நாள், மே 2ஆம் தேதி, பர்மிங்காம் நகரில் இருந்த கறுப்பினத்தவருக்கான பள்ளிகளில் இருந்து மாணவர்களும் மாணவிகளும் 16ஆம் தெரு பாப்டிஸ்ட் தேவாலயத்தில் குவிந்தார்கள். 50 பேர்களாக அவர்கள் வெளியே ஊர்வலமாக வந்தார்கள். ‘புல்’ கானரின் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. அடுத்த 50 பேர் வெளியே வந்தார்கள். இப்படியே முதல் நாள் இறுதியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
அன்றிரவு ஷட்டில்ஸ்ஒர்த்தின் பெத்தேல் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் 2000க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் கூடினார்கள். போராட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டிருந்தது.
மறுநாள், மே 3ஆம் தேதி, இன்னுமொரு 1000 மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள், நகரச் சிறைகள் நிரம்பி வழிந்தன. அன்று ‘புல்’ கானர் வன்முறையைக் கையிலெடுத்தார். தீயணைப்பு ஊர்திகள் 16ஆம் தெரு பாப்டிஸ்ட் தேவாலயத்தையும், அதற்கு முன்னிருந்த கெல்லி இன்கிராம் பூங்காவையும் சுற்றி வளைத்தன. மாணவர்களின் மீது நீர் பாய்ச்சப்பட்டது. மாணவர்கள் அதன் வழியே பர்மிங்காம் நகர மையத்தை அடைய முயன்று கொண்டிருந்தனர். நகரமன்றத்தை நோக்கிச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அடுத்ததாக கானர் தன்னுடைய போலீஸ் நாய்களை ஏவினார். அதற்கும் மாணவர்கள் அசரவில்லை. சிறுவர்களும், சிறுமிகளும் போலீஸ் நாய்களை எதிர்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். காவலர்கள் வீழ்ந்து கிடக்கும் பெண்ணை லத்தியால் அடித்தனர். இந்தக் காட்சிகள் அன்றிரவே நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டது. மறுநாள் காலை உலகெங்கும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது.
மறுநாள், மே 4ஆம் தேதியும் முந்தைய தின நடவடிக்கைகள் தொடர்ந்தன. இந்த முறை சிலர் வேறு வழியாகப் பர்மிங்காம் நகர மையப்பகுதியை அடைந்து அங்குத் தங்களது ஊர்வலத்தைத் தொடர்ந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
மே 5ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டங்கள் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் அன்று போராட்டத்திற்கு ஆதரவு தர வந்த எல்லாப் பேக்கர், நடிகர் டிக் கிரிகோரி முதலியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தேவாலயத்தில் இருந்து 2000 கறுப்பினத்தவர்கள் ஊர்வலமாகச் சென்று, ஊரின் நடுவில் வழிபட ஆரம்பித்தார்கள். அவர்கள் மீது நீரைப் பாய்ச்சத் தீயணைப்பு வீரர்கள் தயங்கினார்கள். முதல் முறையாக ‘புல்’ கானர் அவர்கள் வழிபட அனுமதி கொடுத்தார்.
கென்னடி நிர்வாகம் கிங்குடன் சமரசம் பேசி போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வர முயன்றது. ஆனால், கிங்குடன் பேச்சுவார்த்தைக்குப் பர்மிங்காமில் எந்த வெள்ளையரும் தயாராக இல்லை.
மே 6ஆம் தேதி மீண்டும் பெரும் ஊர்வலம். இந்த முறை உலகின் பார்வையைக் கருத்தில் கொண்டு, ‘புல்’ கானர் ஊர்வலம் செல்பவர்கள் அனைவரையும் கைது செய்கிறார். அன்றும் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர். சிறைகளில் இடமில்லை என்பதால் அவர்கள் மைதானங்கள், பூங்காக்கள் என்று அனைத்து இடங்களிலும் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
மே 7ஆம் தேதி, தேவாலயங்களில் இருந்து ஊர்வலம் வரும் என்று காவல்துறை காத்திருக்க, 600 சிறுவர்கள் நகரின் வியாபாரப் பகுதிக்குச் சென்று, அங்கிருக்கும் கடைகளைப் புறக்கணிக்கப் போராட்டம் நடத்தினார்கள். வணிகப் பகுதியில் நீரைக் கொண்டு அல்லது கண்ணீர் புகை கொண்டு தாக்க முடியாததால், காவலர்கள் அவர்களைக் கைது செய்தாலும், எங்கே அடைப்பது என்று தெரியாமல் திணறினர்.
சிறுவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்து 200 பத்திரிகையாளர்கள் பர்மிங்காமில் இருந்து செய்திகளை அனுப்பினார்கள். உலகளவில் ஏற்படும் பாதிப்பை உணர்ந்த கென்னடி நிர்வாகம், வெள்ளையர்களைப் பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்தியது. ஒரு வழியாக மே 7ஆம் தேதி இரவு பேச்சுவார்த்தை தொடங்கியது.
ஆனால், ஆளுநர் ஜார்ஜ் வாலஸ் எந்தச் சமரசத்தையும் தான் எதிர்ப்பதாக அறிவித்துவிட்டார். ‘புல்’ கானர் 16ஆம் தெரு பாப்டிஸ்ட் தேவாலயத்தை மூடிவிட்டு, மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மற்ற தலைவர்களைக் கைது செய்தார். அவர்களுக்குப் பிணைத்தொகையாக $2500 நிர்ணயிக்கப்பட்டது.
இந்த விஷயத்தை அறிந்த பாபி கென்னடி, மே 9ஆம் தேதி கிங்கையும், மற்ற தலைவர்களையும் விடுதலை செய்யப் பிணைத்தொகையை ஏற்பாடு செய்யுமாறு ஹென்றி பெலபோன்ட்டை கேட்டுக் கொண்டார். ஆனால் சிறையில் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளை விடுதலை செய்யாமல், தான் வெளியே வரப் போவதில்லை என்று கிங் அறிவித்துவிட்டார். எனவே ஹென்றி பெலபோன்ட், கென்னடிகளின் துணையுடன் அமெரிக்க இரும்பு, கார் தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களின் உதவியுடன் பெரும் தொகையைச் சேர்த்தார்.
மே 10ஆம் தேதி, பர்மிங்காம் நகரம் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து. 60 நாட்களுக்குள் வியாபார நிறுவனங்களில் பிரிவினைச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவித்தது.
ஷட்டில்ஸ்ஒர்த், ‘பர்மிங்காம் நகரம் அதன் மனசாட்சியுடன் ஒப்பந்தம் செய்துவிட்டது’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தார். ஆனால் கு க்ளக்ஸ் கிளான் வெறியர்கள் இன்னமும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. மறுநாளே அவர்கள் கிங் தங்கியிருந்த விடுதியிலும், நகரில் இருந்த கிங்கின் சகோதரரின் வீட்டிலும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்க வைத்தனர். ஆனால், கிங் அப்போது அங்கில்லை என்பதால் உயிர் பிழைத்தார். இரண்டு நாட்களுக்கு நகரில் கலவரம் நடந்தது.
இருப்பினும் பர்மிங்காம் நகரப் போராட்டத்தின் வெற்றி தென் மாநிலம் முழுவதும் தீயாகப் பரவியது. அடுத்த பத்து வாரங்களில் 758 இடங்களில் போராட்டம் நடந்தது. 15000 பேருக்கு மேல் சிறை சென்றனர்.
அதைவிட முக்கியமாக, இந்தத் தொடர் போராட்டங்கள் கென்னடி சகோதரர்களின் மனசாட்சியை அசைத்துப் பார்த்தது. இந்தப் போராட்டங்களைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக அணுகிக் கொண்டிருந்த அவர்களது நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
(தொடரும்)