கென்னத் கிளார்க் ஓர் உளவியலாளர். 1940களில் வெள்ளை/கறுப்புப் பொம்மைகளை வைத்து அவர் குழந்தைகளிடம் நடத்திய பரிசோதனை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் மனதில் நிற வேறுபாடு எப்படி உருவாகிறது, குழந்தைகளை நிறவாரியாகப் பிரிப்பதன் மூலமாக அது எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது என்று ஆராய்ந்த அவர், அவை எப்படிக் கறுப்பினக் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதித்து, அவர்களது உளவியல் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று ஆராய்ந்தார். நிறத்தை வைத்துப் பள்ளிகளைப் பிரிப்பது எப்படிக் கறுப்பினக் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்ற அவரது ஆய்வு முடிவு, 1954இல் கல்வி நிறுவனங்களில் நிறப்பிரிவினையை எதிர்த்த வழக்கில் அமெரிக்க உச்சநீதி மன்றத்தினால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டது.
1963ஆம் வருடம் ஜூன் மாதம் கென்னத் கிளார்க் ‘The Negro and the American Promise’ என்ற ஓர் ஆவணப்படம் எடுத்தார். அன்றைய அமெரிக்கக் கறுப்பின அரசியலில் இரு துருவங்களாக இருந்த தலைவர்களைப் பேட்டி எடுத்தார். அகிம்சா முறையில் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த மார்ட்டின் லூதர் கிங் மற்றும் அதற்கு நேரெதிரான கொள்கைகளைக்கொண்டு, கிங்கை எதிர்த்த மால்கம் எக்ஸ். இது வெறும் பேட்டிகளோடு முடிந்திருந்தால் அது சாதாரண ஆவணப்படமாக இருந்திருக்கும். ஆனால் இரண்டு பேட்டிகளும் முடிந்த பின்னர், கிளார்க்கும், ஜேம்ஸ் பால்ட்வினும் அன்றைய கறுப்பினத்தவர் நிலையை, இந்த இரண்டு தலைவர்களின் கொள்கைகளைக் கொண்டு அலசுவார்கள். அதுவே அந்த ஆவணப்படத்தை இன்னமும் சிறந்த ஒன்றாக ஆக்கியது.
மால்கம் எக்ஸ்சின் பேட்டியில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ள முதலில் அவரது வாழ்வைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லோருடைய கொள்கைகளும் அவர்களது வாழ்வியல் அனுபவங்களின் வழியாகவே – சிறிதாகவோ, பெரிதாகவோ – மாற்றமடைகிறது. மால்கமின் கொள்கைகளும் அப்படியான வழியில் ஏற்படுத்தப்பட்டவைதான்.
0
மால்கம் லிட்டில் 1925இல் ஒமாஹா, நெப்ராஸ்காவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மதபோதகர். தாயார் நிருபராக அங்கிருந்த கறுப்பினத்தவர்கள் பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வந்தார். அவரது தந்தை நகரத்தில் இருந்த கறுப்பினத்தவர்களிடையே அவர்களது உரிமைக்காகப் பேசிக் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே அவர் அங்கிருந்த வெள்ளை நிறவெறியர்களின் கோபத்திற்கு ஆளானார்.
மால்கம் லிட்டிலுக்கு ஆறு வயதாகும்பொழுது அவரது தந்தை விபத்தா அல்லது கொலையா என்று தெரியாத நிலையில் இறந்துபோனார். இளம் வயதில் நடந்த தந்தையின் மரணம், அவரை மிகவும் பாதித்தது. அவர்களது குடும்பத்திற்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வரவே, மால்கமின் தாயார் அங்கிருந்து மிச்சிகன் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தார்.
அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவரது தாய் மனநோய் ஏற்பட்டு, அங்கிருந்த மனநல மருத்துவமனையில் சேர்ந்தார். எனவே மால்கம் தன்னுடைய படிப்பை மிகுந்த சிரமத்திற்கு இடையிலேயே முடிக்க முடிந்தது. சட்டம் படிக்க விருப்பப்பட்ட அவரை, அவரது ஆசிரியர்களே கறுப்பினத்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஆசைகள் இருக்கக் கூடாது என்று தடுத்துவிட்டனர். இதையடுத்து அங்கிருந்து வேலை தேடி பாஸ்டன் நகருக்குச் சென்ற அவரும், அவரது சகோதரியும் அங்கிருந்த இரவு விடுதிகளிலும், மற்ற இடங்களிலும் பல்வேறு வேலைகள் செய்துகொண்டிருந்தனர்.
மால்கம், மிச்சிகனில் இருந்து நியூ யார்க் நகரின் ஹார்லெம் பகுதிக்கு வந்து அங்கிருந்த ரயில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். அங்கிருந்தபொழுதுதான் அவரது வாழ்க்கை தடம் மாறத் தொடங்கியது. அவரால் தன்னுடைய வேலையில் தொடர்ச்சியாக இருக்க முடியவில்லை. எனவே அவர் ஹார்லெமின் இரவு நேரக் குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்தார். முதலில், எண்களை வைத்து விளையாடப்படும் ஒருவிதச் சூதாட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அமெரிக்கச் சர்வதேச வணிகம் அன்றைய தினம் எவ்வளவாக இருக்கும் என்று யோசித்து, அதன் கடைசி மூன்று எண்களை மட்டும் வைத்துச் சூதாட வேண்டும். வென்றால் 600 மடங்கு பணம் கிடைக்கும். இதில் இரண்டு வருடம் நிர்வகித்த அவரால் இதையும் தொடர முடியவில்லை.
அதன்பிறகு அவர் ஹார்லெமின் போதைப்பொருள் சந்தையில் ஈடுபட ஆரம்பித்தார். முன்பே ரயில் நிறுவனங்களில் வேலை செய்திருந்ததால், அவரால் ரயில்களில் தொந்தரவு இல்லாமல் போதைப்பொருள்களை விற்பனை செய்ய முடிந்தது. பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டே, போதைப் பொருள் விற்பனையை மேற்கொண்டார். இந்தக் காலத்தில்தான் அவர் நியூ யார்க் காவல்துறைக்கும், போதைப்பொருள் ஒழிப்புத் துறைக்கும் மிகவும் பரிச்சியமாகிப்போனார். ஒருமுறை துப்பாக்கியால் ரயில் ஊழியர் ஒருவரை மிரட்டிய சண்டையினால், அவரால் அதற்குப் பின்னர் எளிதாக ரயில்களில் பயணம் செய்ய முடியவில்லை. எனவே மீண்டும் ஹார்லெம் திரும்பினார்.
ஹார்லெமில் அவர் பலவித வேலைகளை, பெரும்பாலும் சட்டவிரோதச் செயல்களைச் செய்துகொண்டிருந்தார். ஆனால் அவரது நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அல்லா தன்னைக் கவனித்துக்கொண்டே இருந்தார் என்றும், தன்னை அருகில் அழைத்துக்கொள்ளச் சரியான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்ததாகவும் தன்னுடைய சுயசரிதையில் மால்கம் தெரிவிக்கிறார்.
அடுத்ததாக மால்கம் பல இடங்களில் திருட ஆரம்பித்திருந்தார். அங்கேயே எண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆர்ச்சி என்பவரின் பழக்கம் அவருக்குக் கிடைத்தது. ஹார்லெமின் பெரும் சூதாட்ட முதலாளிகளில் அவரும் ஒருவர். அவர் மால்கமின் மீது தனியே அக்கறை எடுத்துக்கொண்டிருந்தார். மால்கம் புதிதாக ஹார்லெம் பகுதி விபச்சார விடுதிகளுக்கு ஆட்களைக்கொண்டு வந்து சேர்க்கும் வேலையும் செய்ய ஆரம்பித்திருந்தார். இத்தனைக் காலங்களில் அவருக்குப் போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் மால்கம் பாஸ்டனைச் சேர்ந்த சோபியா என்ற வெள்ளைப் பெண்ணிடம் தொடர்பில் இருந்தார். அவளுக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், அவள் மால்கமைத் தன்னுடைய உடல் பசிக்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்தாள். மால்கமிற்கும் அதுகுறித்து எந்த வருத்தமும் இல்லை.
ஒருகட்டத்தில் மேற்கிந்திய ஆர்ச்சி, மால்கம் தன்னை ஏமாற்றிவிட்டதாக மிரட்ட ஆரம்பித்தார். மால்கமின் பல்வேறு திருட்டுகளும், ஏமாற்று வேலைகளும் இப்போது வெளியில் வர ஆரம்பித்தது. அவர் ஹார்லெமில் இருப்பது தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதை உணர ஆரம்பித்தார். எனவே சோபியா மற்றும் இன்னுமொரு நண்பனின் உதவியுடன் பாஸ்டன் நகருக்கு இரவோடு இரவாகத் தப்பி ஓடினார்.
அங்கே சென்றும் அவர் பழைய வாழ்விலிருந்து வெளிவரவில்லை. திரும்பவும் திருட ஆரம்பித்தார். அவரைப் பாஸ்டன் காவல்துறை கைது செய்தது. வழக்கமாகத் திருட்டுக் குற்றங்களுக்கு 2 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும். ஆனால், மால்கமிற்குப் பத்து வருடங்கள் வழங்கப்பட்டது. தான் ஒரு வெள்ளைப் பெண்ணிடம் தொடர்பு கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம் என்று மால்கம் பின்னாளில் எழுதினார்.
பாஸ்டன் நகரின் சிறைச்சாலைக்கு அவர் தன்னுடைய இருபத்தி ஒன்றாம் வயதில் அனுப்பப்பட்டார். அவரது வாழ்வின் திருப்புமுனை நிகழ்வுகள் அங்கேதான் நிகழ்ந்தன. சிறையில் அவர் பிம்பி என்னும் மனிதரைச் சந்தித்தார். மால்கம் திரும்பவும் வாசிக்க ஆரம்பிப்பதற்கு அவர்தான் காரணமாக இருந்தார். பிம்பி மால்கமிற்குப் பல்வேறு நூல்களைப் பரிந்துரை செய்து, அவை குறித்து விவாதிக்கவும் செய்தார். இது மால்கமின் அறிவை விரிவாக்கியது. சிறைக்குச் சென்ற நான்கு வருடங்களில் அவரது குடும்பத்தினர் தாங்கள் இஸ்லாத்திற்கு மாறிவிட்டதாகத் தெரிவித்தனர்.
அப்போது அமெரிக்காவில் ‘இஸ்லாமியத் தேசம்’ (Nation of Islam’) என்னும் குழு, எலிஜா முகமத் என்பவரின் தலைமையில் இஸ்லாத்தைக் கறுப்பின மக்களிடையே பரப்புவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தது. அதன் தாக்கத்தில் மால்கமின் குடும்பத்தினரும் இஸ்லாத்திற்கு மாறி இருந்தனர். மால்கமிற்கும் இஸ்லாம் குறித்தும், ‘இஸ்லாமியத் தேசம்’ இயக்கம் குறித்தும் புத்தகங்களை அனுப்பி வைத்தனர். மால்கமின் மனம் மெதுவாக மதத்தை நோக்கித் திரும்பியது.
ஏழு வருடச் சிறைவாசத்திற்குப் பின்னர் மால்கம் அவரது சகோதரரின் பிணையில் வெளியில் வந்தார். வெளியில் வந்த அந்த நிமிடமே தன்னுடைய நடை, உடை என அனைத்தையும் முற்றிலுமாக மாற்றினார். மது, மாது என்று அனைத்துப் பழக்கங்களையும் விட்டொழித்தார். சிகாகோ நகருக்குச் சென்று எலிஜா முகமதைச் சந்தித்தார். அவரது வாழ்வை இஸ்லாத்திற்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். 1953இல் தன்னுடைய வேலையைவிட்டு விலகி, ‘இஸ்லாமியத் தேச’ கோயில்களில் மதப் போதனை செய்ய ஆரம்பித்தார்.
0
‘இஸ்லாமியத் தேச’ இயக்கம் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், இன, நிறப் பிரச்சினைகளில் மிகவும் வேறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதன் அடிப்படை ‘யாக்கோப்பின் கதை’ என்ற கதையில் இருக்கிறது. அதன்படி, கடவுள் படைத்த முதல் மனிதன் கறுப்பினத்தைச் சேர்ந்தவன். அவர் ஒரு விஞ்ஞானி. அவரது ஆராய்ச்சியின் வழியே அவர் வெள்ளையின மனிதனைப் படைத்தார். வெள்ளையின மனிதனோ ஒரு சாத்தானாக இருந்தான். காலப்போக்கில் அவன் கறுப்பினத்தவரை அடிமைப்படுத்தினான். ஆனால் கறுப்பினத்தவர் விடுதலை பெற்று, கடவுளின் அருளோடு, உலகில் மீண்டும் தங்களது இடத்தைப் பெறப்போகும் நேரம் வந்துவிட்டது. அதற்கு எலிஜா முகமது வழி காட்டுவார். இதுதான் ‘இஸ்லாமியத் தேச’ இயக்கத்தின் அடிப்படை.
எலிஜா முகமது இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், கறுப்பினத்தவர் தனியே இருக்க வேண்டும் என்றார். வெள்ளையர்கள் சாத்தான்கள் என்பதால், அவர்களோடு ஒன்றாக இருப்பது என்பது இயலாத காரியம் என்று போதித்தார். வெள்ளையர்கள் சாத்தான்கள் என்பதில் மால்கமிற்கு எந்த வேறுபாடும் இல்லை. எனவே அவரும் இந்தப் போதனையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொண்டார். இதிலிருந்தே அவரது சித்தாந்தம் தொடங்குகிறது.
மால்கம் எக்சின் சித்தாந்தத்தைக் கறுப்புத் தேசியம் அல்லது கறுப்பினத்தவர் ஆதிக்கம் என்பதாக வகைப்படுத்தலாம். அவர் கறுப்பினத்தவர்களுக்கான தனி இடத்தைத் தேடினார். வெள்ளையர்களுடன் சேர்ந்து – சமமாகவோ அல்லது சமமில்லாமலோ – கறுப்பினத்தவர்களால் வாழ்வது இயலாது என்று நம்பினார். அதையே போதனையும் செய்தார்.
1959இல் வெளி வந்த புத்தகம் ஒன்று ‘கறுப்பு முஸ்லீம்கள்’ மீது வெளிச்சம் பாய்ச்சியது. ‘வெறுப்பு உருவாக்கிய வெறுப்பு’ என்ற கருத்தைச் சொல்லிய அந்தப் புத்தகம், வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் மீது காட்டிய வெறுப்பு, இப்போது அவர்கள் மீதே திரும்புகிறது என்று சொல்லியது. இதுவும், இன்னொரு நிகழ்வும் மால்கம் எக்ஸைத் தேசத்தின் பார்வையில் கொண்டு வந்தது.
நியூ யார்க் நகரில் முஸ்லீம் ஒருவரை, காவல்துறையினர் மிருகத்தனமாக அடித்துவிட, மால்கம் எக்ஸ் தன்னுடைய மசூதியின் மற்ற முஸ்லிம்களுடன் சாலைக்கு வந்து போராடினார். அமைதியாக முடிந்த அந்தப் போராட்டம், மால்கம் எக்ஸைக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. தேசம் முழுவதும் கறுப்பினத்தவர்கள் உரிமைக்காக முன்னின்று போரிட இன்னுமொரு தலைவர் இருக்கிறார் என்பதையும் காட்டியது.
மால்கம் இந்தக் காலகட்டத்தில் தன்னுடைய பத்திரிகை ஒன்றையும் தொடங்கினார். அவரது பிரிவினை வாதமும், கறுப்புத் தேசியக் கொள்கைகளும் அவரை நோக்கி கறுப்பின மக்களை வரவைத்தது. ‘இஸ்லாமியத் தேசம்’ இயக்கம் வேகமாக வளர்ந்தது.
இந்த நேரத்தில் கறுப்பு முஸ்லீம்கள், மால்கம் தலைமையில் பல பத்திரிகைகளைப் பதிப்பித்தனர். மால்கமின் நிகழ்ச்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்த்தன. இயக்கத்தில் பெரும்பாலும் முன்னாள் கைதிகள் இருந்ததால், காவல்துறையின் கண்காணிப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது. இதுவே பல மோதல்களுக்கு வழிவகுத்தது.
ஆனால் மால்கமின் வளர்ச்சி, எலிஜா முகமதுவிற்கு உவப்பானதாக இல்லை. தன்னைவிட அதிகமாக விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். எலிஜா முகமதுவின் நேரடி மேற்பார்வையில் மால்கம் தன்னுடைய செயல்பாடுகளை நடத்தி வந்தாலும், இயக்கத்தைக் கைப்பற்ற முயல்கிறார் என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.
0
சம உரிமைப் போராட்டம், கறுப்பினத்தவர்களையும் வெள்ளையர்களுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று கேட்டுப் போராடுகிறது. இதில் மால்கமிற்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று, சம உரிமை என்பது எட்டவியலாத இலக்கு என்பது அவரது கருத்து. வெள்ளையர்கள் படித்த சில கறுப்பினத்தவர்களை வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஏழை, படிக்காத கறுப்பினத்தவர்களை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
மால்கம் வடக்கிலும் கறுப்பினத்தவர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். வடக்கிலும் கறுப்பினத்தவர்களுக்குச் சரியான வேலை கிடைப்பதில்லை, அவர்கள் தங்குவதற்குச் சரியான இடம் கிடையாது, அவர்களுக்கு அரசாங்கம் உதவுவதில்லை. சமஉரிமைப் போராட்டங்கள் தெற்கில் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன. வடக்கில் இருந்த வெள்ளையர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தாலும், அவர்கள் வடக்கில் கறுப்பினத்தவர்களை அதே நிலையில் வைத்திருப்பதையே விரும்புகிறார்கள் என்று முதல் முறையாக உண்மையை உரக்கப் பேசினார்.
மால்கமின் இரண்டாவது பிரச்சினை, சமஉரிமைப் போராட்டத்தின் அகிம்சா வழிமுறை. மால்கம் எல்லா இடங்களிலும் வெள்ளையர்களுக்கு மற்றொரு கன்னத்தைக் காட்டுவது பைத்தியக்காரத்தனம் என்றார். வெள்ளையர்களுக்குப் பதிலுக்குப் பதில் கொடுப்பதுதான் சரியான வழி என்று வலியுறுத்தினார். வன்முறையை நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், தங்களைத் தனியே பிரித்து விடுவதுதான், அமெரிக்காவின் இன பிரச்சினைகளுக்குத் தீர்வு என்றார்.
மார்ட்டின் லூதர் கிங் எப்படிப்பட்ட பேச்சாளரோ, மால்கம் எக்ஸ் அது போலவே, ஒரு விதத்தில் அவரைவிடவும் மிகவும் திறமையான பேச்சாளர். துப்பாக்கித் தோட்டாக்களைப்போல வேகமாக வார்த்தைகள் வந்து விழும். அவரது பேச்சில் தீப்பொறி பறந்து கொண்டிருக்கும். சிறிது கேலியும், கிண்டலும் கலந்து வந்து விழும் வார்த்தைகளால் கேட்கும் அனைவரையும் அவரால் கட்டிப்போட முடியும். எனவே அவர் நாடு முழுவதும் பேசியபொழுது, கறுப்பின இளைஞர்கள் அவரது வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டனர்.
கறுப்பினத்தவர்களைப் பீடித்திருக்கும் எல்லாவித நோய்களும் அகல வேண்டும் என்றால், முதலில் அவர்கள் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. அதற்கு அவர்கள் ஒரு குழுவாகத் தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்பதும், அது நடக்க வேண்டுமென்றால் அவர்கள் இயக்கமாக ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறினார். இதே நேரத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அங்கே அவர் சந்தித்த பல வெள்ளையர்கள் உண்மையிலேயே கறுப்பினத்தவர்களைச் சமமாக நடத்துவதையும், நிறப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டி உண்மையாக இருப்பதையும் கண்ட அவரது மனம் சிறிது மாறத்தான் செய்தது.
அதேநேரத்தில், எலிஜா முகமதுவுடன் ஆன அவரது உறவு மோசமாகிக் கொண்டே இருந்தது. மால்கமிற்குக் கிடைக்கும் ஆதரவையும், விளம்பரத்தையும் அவராலும், மற்ற ‘இஸ்லாமியத் தேச’ நிர்வாகிகளாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எலிஜா முகமது தன்னுடைய இளம் காரியதரிசிகளுடன் உறவுகொண்டு, பல குழந்தைகளுக்குத் தகப்பனாகியிருக்கும் விவரமும் மால்கமிற்குத் தெரியவந்தது. அதன் உண்மையை ஆராய்ந்து அறிந்த மால்கம், முதலில் எலிஜா முகமதை ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு இடையில் இருந்த உறவு வெகுகாலம் நீடிக்காது என்று தெரிந்தது.
இதேநேரத்தில் மெக்காவிற்குப் பயணம் செய்த மால்கம், அங்கு அல்லாவின் சிறப்பிடத்தில் அனைத்து இன, நிற மக்களும் ஒன்றாக இருப்பதைக் கண்டார். அனைத்து இன, நிற மக்களும் ஒன்றாக வாழ்வது சாத்தியமே என்பதை அங்குப் புரிந்துகொண்டார். அவரது அடிப்படைக் கொள்கை மாறவில்லை என்றாலும், அவரது தீவிர நிலைப்பாடு சற்றுத் தளர்ந்து கொடுத்தது.
0
நாம் திரும்பவும் கென்னத் கிளார்க்கின் ஆவணப்படத்திற்கு வந்துவிடுவோம். அதன் இறுதிப்பகுதியில் பால்ட்வின் அன்றைய நாட்டின் நிலையையும், மால்கம் எக்ஸ் பற்றிய தன்னுடைய கருத்துக்களையும் கூறுகிறார். அந்தப் பகுதியை வாசிப்பது மால்கம் எக்ஸைப் புரிந்துகொள்ள உதவும்.
கென்னத் கிளார்க்: வெள்ளையர்களையும் கறுப்பினத்தவர்களையும் பாதித்திருக்கும் மாணவர்களின் அகிம்சா இயக்கம், இன்று அடையாள நடவடிக்கைகளை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஜேம்ஸ்?
பால்ட்வின்: கென், நான் என்ன நடந்தது என்று நினைக்கிறேன் என்றால், வெள்ளை அமெரிக்கர்கள் நினைப்பதைப்போலக் கறுப்பினத்தவர்கள் ஒன்றும் அமைதியாக, அவர்களுக்கு அடக்கமானவர்கள் இல்லை. அது ஒரு கட்டுக்கதை. நாம் எப்போதும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்கவில்லை. நாம் உயிருடன் இருக்கப் போராடிக்கொண்டிருந்தோம். ஒரு கொடூரமான நிறுவனத்திடம் இருந்து உயிருடன் தப்பிக்க முயன்று கொண்டிருந்தோம்.
இந்த மாணவர்கள் எதை முதலில் நிரூபிக்கிறார்கள் என்றால், கறுப்பினத்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கவில்லை என்பதைத்தான். அவர்கள் அத்தகைய போராளிகளின் பரம்பரையில் வருகிறார்கள். அவர்கள் நிரூபிக்கும் இன்னொரு விஷயம், கறுப்பினத்தவர்கள் மாறவில்லை. ஆனால் நாடு இப்போது போராட்டங்களைத் தவிர்க்கும் இடத்தில் இல்லை என்பதைத்தான் உணர்த்தியிருக்கிறார்கள். முன்பு செய்தது போல… இன்று மதியம் சில சிறுவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவன் 25 வயதிற்குள் மரணம் வரை அனைத்தையும் பார்த்துவிட்டோம் என்றான்.
ஒரு மனிதனால் எவ்வளவு தாங்க முடியும்? 3, 4, 5 வருடங்களாக இந்தத் தேசம் அவர்களை மிகவும் வியந்து, பாராட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் எதற்காகப் போராடுகிறார்களோ அதற்காக ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை.
இப்போது நம் எல்லோருக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவன் தன்னுடைய பொறுமையின் எல்லையைத் தொட்டுவிட மாட்டான் என்று நம்மால், ஏன் யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாத கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். ஒருவன் எவ்வளவு அடிகளைத்தான் தாங்க முடியும், எவ்வளவு அவமானம், எவ்வளவு துயரம், எவ்வளவு உடைக்கப்பட்ட சத்தியங்கள். இயற்கையாகவே மனிதர்கள் அகிம்சைவாதிகள் கிடையாது. இந்த மாணவர்கள், குழந்தைகள், இதற்காக, இந்த ஒழுக்கத்திற்காக, அறம் சார்ந்த ஒழுக்கத்திற்காக, பெரிய விலை கொடுக்கிறார்கள். இன்னமும் அதற்குத் தேவையான முயற்சியும், தைரியமும் இந்தத் தேசத்தினால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. ஏனென்றால், இந்தத் தேசம் கேரி கூப்பரை (நடிகர்) ஆண்மகன் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அவருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை, அவரது பிம்பத்தைத்தான் குறிக்கிறேன்.
கென்னத் கிளார்க்: அவர்கள் முழுமையாக அகிம்சைவாதிகளாக இருக்க முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பால்ட்வின்: ஆமாம், ஆமாம். அத்தோடு, இன்னமும் சில மாணவர்கள், நான் டல்லஹஸீ நகரில் பேசியபொழுது, சில மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்னமும் நிறைய, நிறைய, நிறைய, நிறைய மாணவர்கள் முழுவதும் நம்பிக்கையிழந்து விட்டார்கள். அவர்களை என்னைவிட மால்கம் எக்சினால் எளிதாக மாற்றிவிட முடியும்.
கென்னத் கிளார்க்: என்ன சொல்ல வருகிறீர்கள்?
பால்ட்வின்: மால்கம் அவர்களிடம் அவர்கள் கறுப்பாக இருப்பதற்குப் பெருமைப்பட வேண்டும் என்று சொல்லும்பொழுது, அது சரியான விஷயம்தான். அவர்கள் கேட்க வேண்டியதும் அதுதான். அதற்காக அவர்கள் அவமானப்படத் தேவையில்லை. ஆனால் அவர் என்ன செய்கிறார் என்றால், இதைச் சொல்வதற்காக அவர் உண்மையை அழித்து, புதிதாக ஒரு வரலாற்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘நீ கறுப்பாக இருப்பதால், மற்றவர்களைவிட மேலாக இருக்கிறாய்’ என்கிறார். அது உண்மையல்ல. அதுதான் பிரச்சினையே.
கென்னத் கிளார்க்: இது இளைஞர்களைக் கவரக்கூடிய முறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கறுப்பு முஸ்லிம்கள், கறுப்புத் தேசியத்தைப் பேசி, கறுப்பினத்தவர்களின் இன்றைய நிலையை உபயோகித்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?
பால்ட்வின்: கறுப்பு முஸ்லீம் தலைவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆராயாமல் என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் இன்று நாட்டிலேயே இது ஒன்றுதான் அடிமட்டம் வரை பரவியிருக்கும் அமைப்பு. இதைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, ஆனால் இதுதான் உண்மை. ஏனென்றால்… மால்கம் அல்லது வேறு முஸ்லீம் தலைவர்கள் பேசும்பொழுது, அவர்கள் அனைத்துக் கறுப்பினத்தவர்களின் துயரங்களைத் தங்களது வார்த்தைகளில் வடிக்கிறார்கள். இந்த நாடு இதுவரை மறுத்து வந்த துயரங்கள். அதுதான் எந்தக் கூட்டத்திலும் மால்கமின் பேச்சிற்கு வலு சேர்ப்பது. அவர்களது உண்மையை அவர் உறுதி செய்கிறார். அவை உண்மையிலேயே இருக்கின்றன என்று சொல்கிறார்.
கென்னத் கிளார்க்: இது மார்ட்டின் லூதர் கிங்கின் பேச்சைவிட இன்னமும் வலுவானது என்று சொல்கிறீர்களா, ஜிம்?
பால்ட்வின்: ஆமாம், அது கொடியதாக இருப்பதாலேயே இன்னமும் வலுவானதாக இருக்கிறது. ஏனென்றால், மக்களுக்குத் தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற ஒரு பொய்யான உறுதியைக் கொடுப்பதை மூலம் அவர்களது நம்பிக்கையை அதிகப்படுத்துவது சுலபம். ஆனால் நெருக்கடி நேரத்தில் இது உடைந்துவிடும். நம்முடைய இன்றைய நிலைக்கு இத்தகைய மனநிலையும் ஒரு காரணம்.
பர்மிங்காம் நகரில் ஒரு கறுப்பினப் பெண்ணின் கழுத்தின் மீது கால்களை வைத்து ஐந்து காவலர்கள் மிதித்துக்கொண்டிருந்ததற்கு இதுதான் காரணம். ஏனென்றால், அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில், அவர்கள் வெள்ளையர்களாக இருப்பதாலேயே மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஒரு தார்மீக வெறுமைக்கு இட்டுச் செல்வது தவிர்க்கமுடியாதது. அது வேறெங்கும் இட்டுச் செல்ல முடியாது. என்னுடைய கருத்து என்னவென்றால், முதல் முறையாக நாடு முஸ்லீம் இயக்கத்தைப் பற்றிக் கவலைப்படுகிறது. அது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அது பிரச்சினை இல்லை. பிரச்சினை என்னவென்றால், அத்தகைய இயக்கம் தோன்றவும், தொடரவும் காரணமாக இருப்பவற்றை எப்படி அகற்றுவது என்பதுதான்.
இதைவிடத் தெளிவாக மால்கமின் அரசியலை யாரும் கட்டுடைக்கவில்லை என்று நினைக்கிறேன். பால்ட்வின் கூறியதுபோல மால்கமினால் தெருவில் விபச்சாரத்திற்கு ஆள் சேர்ப்பவனிடமும், பள்ளியில் ஆசிரியராக இருப்பவரிடமும் பேச முடிந்தது. அவர்களைத் தன்பக்கமாக இழுக்க முடிந்தது. ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் பெரும் தலைவராக அடையாளம் காணப்பட முடிந்தது. ஆனால் அவர் பேசிய வெறுப்பரசியல், குறைந்தது கறுப்பினத்தைச் சேர்ந்த மிதவாதிகள் மற்றும் அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் எலிஜா முகமதுவிடம் இருந்து பிரிந்து வந்த மால்கம், தன்னுடைய நம்பிக்கைகளைத் திரும்பவும் சோதித்துப் பார்த்துக்கொண்டார். முழுவதுமாக அவர் தன்னுடைய தேசியத்தையும், வெறுப்பையும் விட்டுவிடவில்லை என்றாலும் அவரிடம் மாற்றம் இருந்தது. வெள்ளையர்களிடம் பேசவும், பழகவும் அவர் மறுக்கவில்லை.
நாம் முன்பே குறிப்பிட்ட பால்ட்வினின் நாடகமான ‘Blues for Mister Charlie’யில் வன்முறை தீர்வாகுமா என்பதை ஆராய்கிறார். அந்த நாடகமே மார்ட்டின் லூதர் கிங்கும், மால்கம் எக்ஸும் தங்களுடைய சித்தாந்தத்தைப் பேசிக் கொள்வதுபோல இருப்பதாகக் கருதப்படுகிறது. பால்ட்வினைப்போலவே, கறுப்பினத்தவர்கள் அந்தக் காலகட்டத்தின் இரண்டு பெரும் தலைவர்களிடையே எந்தப் பக்கம் செல்வது என்ற திகைப்பில் இருந்ததைச் சொல்வதாகவே இந்த நாடகம் புரிந்துகொள்ளப்படுகிறது.
ஆனால் மால்கம் தன்னுடைய கடைசி சில நாட்களில் மார்டினின் பக்கமாகவே நகர ஆரம்பித்தார். இதையும் பால்ட்வின் சாட்சியாகப் பதிவு செய்கிறார்.
‘மிகவும் வேறுபட்ட பின்னணியில் இருந்து வந்த, இரண்டு துருவங்களாக இருந்த இரண்டு மனிதர்கள், மெல்லத் தங்களிடையே இருந்த இடைவெளி மறைந்து அருகருகே வருவதை நான் கண்டேன். அவர்கள் இருவரும் இறந்தபொழுது, அவர்களது நிலைப்பாடுகள் கிட்டத்தட்ட ஒன்றாகியிருந்தது. எனவே மால்கமின் சுமையை மார்ட்டின் ஏற்றுக்கொண்டு, மால்கம் பார்க்க ஆரம்பித்திருந்த தரிசனத்தைத் தானும் கண்டு, அதற்காகத் தன்னுடைய உயிரை விலையாகக் கொடுத்தார் என்றும் சொல்லலாம்.’
0
எலிஜாவிடம் இருந்து பிரிந்த மால்கம் தன்னுடைய மசூதியைத் தனியாகத் தொடங்கினார். ஆனால் அவர் ‘இஸ்லாமியத் தேச’ இயக்கத்தில் இருந்து பிரிந்த உடனேயே அவரது நாட்கள் எண்ணப்பட ஆரம்பித்தன. தன்னுடைய மரணத்திற்கு அந்த இயக்கமே காரணமாக இருக்கும் என்றும் அவர் பலமுறை கூறினார். இறுதியாக, 1965ஆம் வருடம், பிப்ரவரி மாதத்தில் மால்கம் எக்ஸ் அவரது 39வது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
(தொடரும்)