Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #36 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 1

கறுப்பு அமெரிக்கா #36 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 1

லிண்டன் ஜான்சன்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் பலவித நிறங்களிலும் குணங்களிலும் வருவார்கள். ஜெபர்சன் ஒரு விஞ்ஞானி என்றால், ஆண்ட்ரு ஜாக்சன் வேட்டையாடினார். தியோடர் ரூஸ்வெல்ட் வெள்ளை மாளிகையை ஒரு மிருகக்காட்சி சாலையாக, சிங்கம், கரடிகள் உட்பட மாற்றியிருந்தார். லிண்டன் ஜான்சன் அதே வரிசையில் வந்தவர்.

டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த அவர், இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்து பல சாகசங்கள் செய்தவர். இயற்கையாகவே தலைமைப்பண்பு நிறைந்திருந்த அவர், போரில் இருந்து திரும்பியவுடன் அமெரிக்க அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்தார். 1950களில் அமெரிக்க செனட்டராகவும், செனட்டில் இருக்கும் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். 1960இல் ஜனநாயகக் கட்சியின் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உட்கட்சித் தேர்தலில் கென்னடிக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கென்னடி அவரைத் தன்னுடைய துணைக் குடியரசுத்தலைவராக அறிவித்தார்.

பொதுவாக, இதுவே எல்லாத் தலைவர்களின் வாழ்வின் பயணமாக இருக்கும். மேலே சொன்னவற்றில் சில மாற்றங்கள் இருக்கலாமே அன்றி பெரிதாக வாழ்க்கையின் போக்கில் மாற்றமிருக்காது. இதில் லிண்டன் ஜான்சன் (LBJ) எங்கே வேறுபடுகிறார் என்றால், அவர் தலைவர் மட்டுமல்ல, எவரையும் தன்னுடைய பக்கத்திற்கு மாற்றிவிடும் வன்மை கொண்டவர். அவர் செனட் தலைவராக இருந்தபொழுது, எந்த செனட்டரையும் தனக்குத் தேவையான விதத்தில் வாக்களிக்க வைக்கும் வித்தையைத் தெரிந்துவைத்திருந்தார். இன்று வரை அவரை மிஞ்சும் ஒருவர் இந்த விஷயத்தில் இல்லை என்பதே அமெரிக்க வரலாற்றாய்வாளர்களின் முடிவு.

ஒவ்வொரு செனட்டரின் பலம், பலவீனங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்களுடன் மிகவும் நெருக்கமாக, சங்கடமாக நெளியும் அளவிற்கு நெருக்கமாக நின்று, அவர்களை மிரட்டியோ, கெஞ்சியோ, கையூட்டு கொடுத்தோ தன்னுடைய காரியத்தைச் சாதித்துக்கொள்ளுவார் என்பது ‘ஜான்சன் சிகிச்சை’ என்று அழைக்கப்பட்டது. இதை ஏன் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றால், இனி வரும் அத்தியாயங்களில் ஜான்சன் சிகிச்சை பலருக்கும் கொடுக்கப்பட இருப்பதை முன்னிட்டுத்தான்.

0

பர்மிங்காம் நகரக் குழந்தைகளின் உயிரிழப்புகள் அமெரிக்காவில் – குறிப்பாக, வடமாநில வெள்ளை அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அது செயலாக மாறும் முன்னே கென்னடியின் கொலை நடந்து, அடுத்து நாட்டை ஆளப்போகும் லிண்டன் ஜான்சன் மீது அனைவரின் கவனமும் குவிந்தது.

நவம்பர் 27, 1963இல் அமெரிக்க நாடாளுமன்றங்கள் இரண்டின் ஒருங்கிணைந்த நிகழ்வில் பேசிய ஜான்சன், கென்னடியின் மரணத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்றால், அவர் விரும்பியவாறே புதிய விதிகளுடன் கூடிய அமெரிக்கச் சமஉரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதையே தங்களது முதல் இலக்காகக் கொள்ளவேண்டும் என்று பேசினார். இது பல விதங்களில் அனைவரின் சந்தேகங்களையும் நீக்கியது எனலாம்.

கறுப்பினத்தவர்களைப் பொறுத்தவரை குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரிந்தே இருந்தது. எவ்வளவு விசாரணை நடந்தாலும், கறுப்பினத்தவர்களின் கொலைகளுக்கு வெள்ளையர்கள் தண்டிக்கப்படுவதே இல்லை என்பதை அனைவரும் அறிந்தே இருந்தார்கள். அதேநேரத்தில், இந்த முறை அடுத்து என்ன என்ற கேள்வியும் எழுந்தது. தெருக்களில் போராட்டத்தைத் தொடர்வது அவசியம் என்றாலும், அதைவிட அரசு அதிகாரத்தில் பங்குபெற வேண்டியதும் அவசியம் என்பது அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. போராட்டங்கள் ஓரளவிற்குப் பயனைக் கொடுத்தாலும், அவற்றைத் தக்க வைத்துக்கொள்ள அதிகாரம் தங்களிடம் இருக்க வேண்டியதும் அவசியம் என்பதை மீண்டும் ஒரு முறை அனைவரும் உணர்ந்தார்கள்.

ஆனால், தென்மாநிலங்களில் கறுப்பினத்தவர்களை மிகவும் திட்டமிடலுடன் வெள்ளையர்கள் அதிகாரத்தில் இருந்து தூரத்திலேயே வைத்திருந்தார்கள். முதலாவதாக, அவர்கள் வாக்களிக்கப் பதிவு செய்வதில் இருந்து, வாக்களிக்கும் வரையிலான செயல்முறைகள், திட்டமிட்டுக் கறுப்பினத்தவர்களை வெளியே வைக்கும்படியாக ஏற்படுத்தப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு, வாக்களிக்கப் பதிவு செய்வதற்கு ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். அந்தப் படிவத்தைப் பெறுவதற்கு ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் வாக்காளர் ஒருவர், உங்களுக்கு உறுதிச்சான்று கொடுக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கிராமப்புறங்களில் எந்தக் கறுப்பினத்தவர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே அவர்களால் பதிவு செய்வதற்கான படிவத்தையே பெற இயலாது. அப்படிப் பெற இயலும் இடங்களிலும், படிவத்தை ஏற்றுக்கொள்ள, வாய்மொழித் தேர்வில் தேற வேண்டும். ஒருவர் கறுப்பினத்தவர் என்றால், தேர்வில் முழு அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் சொல்லும்படியாகக் கேள்விகள் இருக்கும். அதையும் தாண்டிவிட்டால், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் முழு விவரங்களும், முகவரி உட்பட, பத்திரிகையில் வெளியிடப்படும். அருகில் இருக்கும் கு க்ளக்ஸ் கிளான் அல்லது அவர்களின் வெள்ளை முதலாளிகள் அடுத்து நடக்கவேண்டியதைப் பார்த்துக்கொள்வார்கள்.

இதனால் கறுப்பினத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களிலும்கூட, அவர்களால் எந்தப் பதவிக்கும் வர முடியாத நிலையே இருந்தது. அவர்களை அப்படியே வைத்திருப்பதில் வெறும் அரசியல் ஆதாயம் மட்டுமல்ல, பெரும் பொருளாதார ஆதாயமும் வெள்ளையர்களுக்கு இருந்தது.

உதாரணமாக, அப்போதைய மிஸ்ஸிஸிப்பி செனட்டரான ஜேம்ஸ் ஈஸ்ட்லான்ட்டை எடுத்துக்கொள்வோம். பெரும் நிறவெறியரான அவர், மாநிலத்தின் பெரும் பருத்தித் தோட்டம் ஒன்றுக்கு முதலாளியும்கூட. அவர் பருத்தி விற்பனையில் 57 சதவிகித லாபம் ஈட்டி வந்தார் (இன்றைய பெருநிறுவனங்கள் கிட்டத்தட்ட 10-12 சதவிகித லாபம் அடைகின்றன). அவரது பருத்தித் தோட்டங்களில் வேலைசெய்த கறுப்பினத்தவர்களை மிகக் குறைந்த கூலியில், மிக அதிக நேரம் வேலை வாங்குவதன் மூலமே அவரால் இந்த லாபத்தை அடைய முடிந்தது. எனவே அவர்கள் அரசியல் அதிகாரத்தை அடைந்து இந்த நிலையை மாற்றாமல் பார்த்துக்கொள்வது அவருக்கு எல்லா விதங்களிலும் தேவையாக இருந்தது.

1950களின் இறுதிப் பகுதியில் இருந்து இந்த நிலையை மாற்றப் போராட்டங்கள் நிகழ்ந்து வந்தன. குறிப்பாக SNCC – ஸ்னிக் (மாணவர்கள் அகிம்சா ஒருங்கிணைப்பு குழு) அப்போதிருந்து மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் தன்னார்வலர்களைக் கொண்டு, கறுப்பினத்தவர்களைப் பதிவு செய்வதற்கும், வாக்களிக்கவும் உதவி செய்துகொண்டிருந்தது. அதற்காக அங்கிருந்த மாணவர்களும், இளைஞர்களும் பலமுறை சிறைக்குச் சென்றிருந்தார்கள்.

ஸ்னிக் தன்னார்வலர் ஒருவர் வாக்காளர்களுக்கு வழிகாட்டுதல்

மக்கள்தொகையில் 42 சதவிகிதக் கறுப்பினத்தவர்கள் இருந்த மிஸ்ஸிஸிப்பியில், வெறும் 6 சதவிகிதத்தவர் மட்டுமே பதிவுசெய்த வாக்காளர்களாக இருந்தார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே ஸ்னிக்கின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் தலைமுறைகளாக வெள்ளையர்களின் மீதான அச்சம் அங்கிருந்த கறுப்பினத்தவர்கள் மத்தியில் நிலவி இருந்தது. அந்த அச்சத்தை மாற்றுவதும் பெரும் சிரமமாக இருந்தது. மிகவும் குறைவான தன்னார்வலர்களே அங்கு இயங்கி வந்ததால், பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதும் அதிகக் காலத்தை எடுக்கும் செயலாகத் தெரிந்தது.

இந்த நிலையில், பர்மிங்காம் நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை, தென் மாநிலக் கறுப்பினத்தவர்களை வாக்களிக்கப் பதிவு செய்ய வைப்பதன் முக்கியத்தை அனைவருக்கும் எடுத்துக்கூறியது. எனவே ஸ்னிக் மட்டுமல்ல, மற்ற போராட்ட இயக்கங்களும் 1964ஆம் வருடம் வாக்காளர் பதிவுக்கான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தன.

அதற்காக, SNCC, CORE, SCLC, NAACP போன்ற இயக்கங்கள் ஒன்றிணைந்து ‘ஒருங்கிணைந்த இயக்கங்களின் குழு’ (Council of Federated Organizations – COFO) ஒன்றை ஆரம்பித்தன. COFOவின் முக்கியப் பொறுப்பு தென்மாநிலங்கள் அனைத்திலும், குறிப்பாக மிஸ்ஸிஸிப்பியில் கறுப்பின வாக்காளர்களைப் பதிவு செய்யும் வேலையை ஆரம்பிப்பதுதான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நோக்கம் இன்னமும் விரிவாக்கப்பட்டது.

0

ஏற்கெனவே ஸ்னிக் மிஸ்ஸிஸிப்பியில் வாக்காளர்களைப் பதிவு செய்ய முயன்றுகொண்டிருந்தது என்று பார்த்தோம். ஸ்னிக் தன்னார்வலர்கள் சில வருடங்களாக அங்கே மிஸ்ஸிஸிப்பியைச் சேர்ந்தவர்களை ஸ்னிக்கில் வேலை செய்ய வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். அதிலும் அவர்களுக்குத் தோல்வியே கிட்டியது. 1962இல் அவர்கள் சில இளைஞர்களை ஸ்னிக்கில் வாக்காளர்களைப் பதிவு செய்ய வைப்பதற்காகச் சேர்த்தார்கள்.

ஆனால், கிரீன்வுட் நகரில் அவர்கள் எடுத்த முயற்சிகளை அங்கிருந்த வெள்ளையர்களும், கு க்ளக்ஸ் கிளானும் வன்முறையினால் எதிர்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களால் நகரில் இருந்த 15000 கறுப்பின வாக்காளர்களில் வெறும் 200 பேரை மட்டுமே அவர்கள் பதிவு செய்வதற்குச் சம்மதிக்க வைக்க முடிந்தது. அவர்களும் பல முறை வாய்மொழித் தேர்வுகளில் தகுதியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

மிஸ்ஸிஸிப்பி அரசும், சில நூறு வாக்காளர்கள் பதிவு செய்ய முயன்றதிற்காக மொத்தக் கறுப்பின மக்களையும் தண்டிக்க ஆரம்பித்தது. ஒன்றிய அரசு ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக மாநிலங்களுக்கு உபரி தானியங்களை மலிவு விலையில் கொடுத்துவந்தது. இது முழுக்கவும் கறுப்பின மக்களையே சென்றடைந்தது. இந்த உபரி தானியங்கள் தேவையில்லை என்று மிஸ்ஸிஸிப்பி மாநிலம் மறுத்துவிட்டது. இதன் மூலமாக 1962ஆம் வருடம் குளிர்காலத்தில் பல ஆயிரக்கணக்கான குடிமக்களைப் பட்டினிபோடவும் வெள்ளை நிறவெறி தயாரானது.

அப்போது ஹாலிவுட் உலகில் பெரும் நகைச்சுவை நடிகராக இருந்தவர் டிக் கிரிகோரி. கறுப்பினத்தைச் சேர்ந்த அவர் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் நிலையைக் கேள்விப்பட்டு, தனியே ஒரு விமானத்தை ஏற்பாடுசெய்து, அதன் மூலமாக அங்கிருந்த மக்களுக்கு உணவு கிடைக்க வழி செய்தார். முதல் முறையாக, மிஸ்ஸிஸிப்பியின் கறுப்பின மக்கள் தாங்கள் இந்தப் போராட்டத்தில் தனியாக இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அதே நேரத்தில், அப்போதைய ஒன்றிய அதிகாரத்தில் இருந்த கென்னடி சகோதரர்கள், இதுகுறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

1963ஆம் வருடம் முழுவதும் நடந்த பல போராட்டங்கள், சிறை, வன்முறை ஆகியவற்றுக்குப் பின்னும் மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் வெறும் 268 வாக்காளர்களை மட்டுமே ஸ்னிக் தன்னார்வலர்களால் பதிவுசெய்ய வைக்க முடிந்தது. எடுக்கப்பட்ட முயற்சிக்கும், பலனிற்கும் எந்தத் தொடர்பில்லாமல் இருந்த இந்த நிலையை 1964இல் மாற்ற வேண்டியே COFO உருவாக்கப்பட்டது. ஆனால் இது முதன்மையாக ஸ்னிக்கின் முன்னெடுப்பாகவே இருந்தது.

0

‘சுதந்திரக் கோடை’ (Freedom Summer) என்றழைக்கப்பட்ட இந்தப் போராட்டம், மூன்று நோக்கங்களைப் பிரதானமாகக் கொண்டது. ஒன்று, அதிகளவில் கறுப்பின வாக்காளர்களைப் பதிவு செய்ய வைப்பது. இரண்டு, விடுமுறையில் பள்ளிகளை நடத்துவது. மூன்றாவது, மிஸ்ஸிஸிப்பி சுதந்திர ஜனநாயகக் கட்சியை (Mississippi Freedom Democratic Party) பலப்படுத்துவது.

மிஸ்ஸிஸிப்பியில் ரூஸ்வெல்ட், கென்னடியின் கட்சியான ஜனநாயகக் கட்சியில் வெள்ளையர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும். கட்சியின் பொறுப்புகள், உட்கட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் வெள்ளையர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த நிலையை மாற்றுவதற்கு எந்தத் தலைவரும் முன்வரவில்லை. மிஸ்ஸிஸிப்பி வெள்ளையர்களின் வாக்கை இழந்துவிடக்கூடும் என்ற பயமே காரணம். எனவே ஸ்னிக் இதை மாற்ற வேண்டியே, வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்களை உள்ளடக்கிய புதிய கட்சியை வேண்டியது. ஆனால் புதிய கட்சியாக அல்லாமல், தாங்களே உண்மையான, அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகக் கட்சி என்பதே ஸ்னிக்கின் நிலைப்பாடு.

அதுபோலவே, மிஸ்ஸிஸிப்பி மாநிலக் கறுப்பினத்தவர்களின் பள்ளிகளில், கறுப்பினத்தவரின் வரலாறோ, இலக்கியங்களோ கற்பிக்கப்படவில்லை. எனவே மாலைப் பள்ளிகளின் மூலமாக இவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்தது.

அமெரிக்கப் பள்ளிகளும், கல்லூரிகளும் செப்டம்பர் முதல் ஏப்ரல், மே வரையிலான பள்ளி ஆண்டைக் கொண்டவை. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களே கோடை விடுமுறை. அந்த மூன்று மாதங்களிலேயே மாணவர்களை ஒன்று திரட்டி, மிஸ்ஸிஸிப்பியில் தன்னார்வலர்களாக மேற்சொன்ன மூன்று நோக்கங்களுக்காக அனுப்ப வேண்டும் என்பதுதான் ஸ்னிக்கின் திட்டம். இதன் மூலமாக மிஸ்ஸிஸிப்பி முழுவதும் போராட்டத்தை முன்னெடுப்பதோடு, உண்மையான மாற்றத்தையும் கொண்டு வரமுடியும் என்பது அவர்களது நோக்கம்.

அமெரிக்கா முழுவதுமாக 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் மிஸ்ஸிஸிப்பிக்குச் செல்வதற்கான தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்கள். இவர்களில் வெள்ளை இளைஞர்களும் அடங்குவர். இவர்களில் பலருக்கும் தென்மாநிலங்களுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதால், இவர்களுக்குச் சரியான பயிற்சியும், மிஸ்ஸிஸிப்பியில் அவர்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளையும் விளக்க, ஓஹியோ மாநிலத்தில் 2 வாரங்கள் முகாம் நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் எவருக்கும் தாங்கள் எதிர்நோக்கப்போகும் வன்முறையின் அளவு சிறிதும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

0

லிண்டன் ஜான்சன் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருந்தாலும் பொது உரிமைச் சட்டம் பிரதிநிதிகள் சபையில் இன்னமும் போராடிக் கொண்டிருந்தது. ஆனால், அங்கே ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்ததால், ஜான்சனால் அங்கே சிறிது எளிதாகச் சட்ட ஒப்புதல் பெற முடிந்தது. ஆனால் செனட் நிலைமை வேறு விதமாக இருந்தது.

அமெரிக்க செனட்டில் 100 உறுப்பினர்கள் இருப்பார்கள். மாநிலத்திற்கு இருவர் என்று ஐம்பது மாநிலங்களுக்கு 100 செனட்டர்கள். சாதாரணமாகச் சட்டம் ஒப்புதல் பெற 51 வாக்குகள் தேவை. ஆனால் பெரும்பான்மை இல்லை என்றாலும் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் இருக்க வைக்க ஏதுவான விதிகள் செனட்டில் இருந்தன. 11 தென்மாநிலங்களின் 22 செனட்டர்கள் இரவு பகலாகச் சட்டத்தின் ஒப்புதலுக்கு வாக்கெடுப்பைத் தடுக்கும் விதமாக, பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு எந்தத் தடையும் இல்லை. அவர்கள் விட்டுக்கொடுத்தால் மட்டுமே சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இதனை எதிர்த்து நாட்டின் பல இடங்களிலும் கறுப்பினத்தவர்கள் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகையின் முன்னும், அமெரிக்க செனட்டின் முன்னும் 24 மணி நேரமும் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

குடியரசுத் தலைவர் ஜான்சன் தன்னுடைய சிகிச்சையை ஆரம்பித்தார். தென் மாநில செனட்டர்கள் எப்படியும் தங்களது நிலையில் இருந்து இறங்க மாட்டார்கள் என்பதை அறிந்திருந்த அவர், நூறாண்டுகளுக்கு மேலான விதி ஒன்றைக் கண்டுபிடித்தார். மூன்றில் இரு பங்கு ஆதரவு இருந்தால், செனட்டர்கள் பேசிக்கொண்டிருப்பதையும் மீறி வாக்கெடுப்பை நடக்கலாம் என்றது அந்த விதி. அதன்படியே, தன்னுடைய கட்சியின் செனட்டர்களுக்கும், குடியரசுக் கட்சியின் செனட்டர்களுக்கும் அவர் தன்னுடைய சிகிச்சையைக் கொடுக்க, 7 மாதங்களுக்குப் பின்னர் ஜூலை, 1964ஆம் வருடம் சட்டம் நிறைவேறியது.

90 ஆண்டுகளுக்கு மேலாகத் தென்மாநிலங்கள் முழுவதும் இருந்த ‘ஜிம் கிரோ’ சட்டங்கள் அனைத்தையும், புதிய பொது உரிமைச் சட்டம் ஒழித்தது. எந்தவிதப் பாகுபாடுகளும், எந்தப் பொது வசதிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் இருக்கக் கூடாது என்றாக்கியது. பொது உரிமை மீறல் வழக்குகளில் ஒன்றிய அரசு தலையிடவும் உரிமை கொடுத்தது. பொது உரிமை சம்பந்தமான சட்டத்தை அமுல்படுத்த ஒரு வாரியத்தையும் நியமித்தது. வெள்ளையர்கள் மட்டுமே பொது உரிமைச் சட்டங்கள் குறித்தான வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் விதித்தது.

பல்வேறு விதங்களில் கறுப்பினத்தவர்களின் பல ஆண்டுகாலக் கோரிக்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுத்தாலும், வாக்குரிமை பற்றிய விதிகளை இந்தச் சட்டம் எதுவும் செய்யவில்லை. தங்களது உரிமைகளுக்கு வெள்ளையர்களிடம் காலம் முழுவதும் கையேந்த முடியாது என்பதால், மிஸ்ஸிஸிப்பியின் ‘சுதந்திரக் கோடை’ போராட்டம் தொடர்ந்தது.

0

மிஸ்ஸிஸிப்பிக்கு வரப்போகும் வடமாநிலத் தன்னார்வலர்களை வரவேற்க, மிஸ்ஸிஸிப்பி மாநில அரசு பெருமளவில் தன்னுடைய காவல்துறையை அதிகரித்தது. மேலும், கலவரத்தைச் சமாளிக்கப் பெரும் வாகனங்கள், பீரங்கிகள்போல முழுவதும் மூடப்பட்ட தாக்குதல் வாகனங்கள், பெருமளவில் துப்பாக்கிகள் என்று தயாரானது.

ஜூன், 1964இல் மிஸ்ஸிஸிப்பிக்கு வடமாநிலங்களில் இருந்து முதல் தன்னார்வலர்கள் வந்து சேர்ந்தார்கள்.

ஜூன் 20ஆம் தேதி, 20 வயதான ஆண்ட்ரு குட்மன் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் பிலடெல்பியா நகருக்கு வந்து சேர்ந்தார். அதற்கு மறுநாள், அங்கு அவருடன் CORE இயக்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சேணி, மைக்கேல் ஸ்வெர்னெர் இருவரும் சேர்ந்து, அருகில் எரிக்கப்பட்டிருந்த கறுப்பினத்தவர்களின் தேவாலயம் ஒன்றைக் காணச் சென்றார்கள். ஆனால் சென்றவர்கள் திரும்பவேயில்லை.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *