Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #37 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 2

கறுப்பு அமெரிக்கா #37 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 2

கறுப்பு அமெரிக்கா

மைக்கேல் ஸ்வெர்னெர் நியூ யார்க் மாநிலத்தில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவராக வேண்டிப் படித்துக்கொண்டிருந்த அவர் தன்னுடைய இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நியூ யார்க் நகரில் இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

1960களில் தென்மாநிலங்களில் நிகழ்ந்துகொண்டிருந்த போராட்டங்கள் பெரும்பாலும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மைக்கேல் ஸ்வெர்னெரும் தன்னுடைய பங்கை அளிக்க முன்வந்தார். நியூ யார்க் நகரில் CORE இயக்கக் கிளையை ஆரம்பித்து, நகரில் கறுப்பினத்தவருக்கு நடக்கும் பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். அந்தக் கிளையின் தலைவராகவும் செயல்பட்டார். கறுப்பினப் போராட்ட இயக்கம் ஒன்றின் முதல் வெள்ளையினத் தலைவர் அவர்தான்.

அதன் மூலமாக CORE இயக்கத்தின் தலைவர்களால் கவனிக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார். இதேநேரத்தில் அவரது காதலியான ரீட்டாவை மணம் செய்தும் கொண்டார். மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் தன்னார்வலர்கள் தேவை அதிகமாக இருப்பதை அறிந்து, தானும் அங்கு செல்ல விரும்பினார். CORE உள்ளிட்ட எந்தப் பொது உரிமைப் போராட்ட இயக்கமும் வெள்ளையர்களை நகரங்களைத் தாண்டி வேறு பகுதிகளுக்கு அனுப்பியதில்லை.

அவர்களுக்குத் தென்மாநிலக் கிராமப் பகுதிகளின் வாழ்வும், அங்கு நிலவும் கடுமையான நிறவெறியும் தெரியாது என்பதும், கிராமப் பகுதி கறுப்பினத்தவர்கள் பொதுவாக வெள்ளையர்களிடம் பேசுவதற்கு அஞ்சுவார்கள் என்பதும் முக்கியக் காரணங்கள். ஆனால் 24 வயதான மைக்கேல் ஸ்வெர்னெர், தனக்கு அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் துணைக்கு இருந்தால் போதும் என்று கூறிவிட்டு, ஜனவரி, 1964இல் மிஸ்ஸிஸிப்பியின் மெரிடியன் என்ற சிறுநகருக்குச் சென்று அங்கு இருக்கும் வாக்காளர்களுடன் வேலை செய்ய ஆரம்பித்தார். அவருக்குத் துணையாக ஜேம்ஸ் சேணி என்னும் அந்தப் பகுதி இளைஞர் துணை இருந்தார்.

21 வயதான ஜேம்ஸ் சேணி, மெரிடியன் நகரைச் சேர்ந்த இளைஞர். பள்ளிப் படிப்பு மட்டுமே படித்திருந்தாலும், அந்தப் பகுதி பொது உரிமைப் போராட்டங்களில் முன்னின்றவர். CORE இயக்கம் அங்கே ‘சுதந்திரக் கோடைக்கான’ முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தபோது, அவர் மைக்கேல் ஸ்வெர்னெருக்கு உதவியாக அங்கே இருந்தார்.

ரீட்டா ஸ்வெர்னெர் ஆசிரியையாக இருந்ததால், அந்தப் பகுதியில் ஒரு மாலைப் பள்ளியை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டார். மைக்கேல் ஸ்வெர்னெர், ஜேம்ஸ் சேணியுடன் சேர்ந்து அதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடி அலைந்துகொண்டிருந்தார். மே மாதக் கடைசியில் அவர்கள் அங்கிருந்த சீயோன் மலை மெத்தடிஸ்ட் தேவாலயத்தை வந்தடைந்தார்கள். அது ஒரு கறுப்பினத்தவர்களின் தேவாலயம். தங்களது பள்ளியை அங்கே தொடங்கலாமா என்று அனுமதி கேட்டார்கள். ரீட்டா ஸ்வெர்னெர் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஓஹியோ சென்றிருந்ததால், ஒரு மாதம் கழித்து அங்கே திரும்ப முடிவு செய்தார்கள்.

மைக்கேல் ஸ்வெர்னெர் அந்தப் பகுதியில் இருந்த கு க்ளக்ஸ் கிளானினால் முக்கிய எதிரியாக அறியப்பட்டிருந்தார். அவர் வெள்ளையினத்தவர்களுக்குத் துரோகம் இழைப்பதாக அவர்கள் ஏற்கெனவே அவரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி இருந்தார்கள். மிஸ்ஸிஸிப்பி மாநில கிளானின் தலைவர், மைக்கேல் ஸ்வெர்னெர் அங்கிருந்து ‘அகற்றப்பட‘ வேண்டியவர் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ஜூன் முதல் வாரத்திலேயே ‘சுதந்திரக் கோடைக்கான’ பயிற்சி முடிந்த முதல் தன்னார்வலர்கள் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தை நோக்கி வர ஆரம்பித்திருந்தார்கள். மைக்கேல் ஸ்வெர்னெரும், ஜேம்ஸ் சேணியும் அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

ஜூன் 16ஆம் தேதி அவர்கள் பார்த்து வைத்திருந்த சீயோன் மலை மெத்தடிஸ்ட் தேவாலயம், கு க்ளக்ஸ் கிளானினால் எரிக்கப்பட்டது. அந்தச் செய்தி கிடைத்தவுடன், அவர்கள், மெரிடியனிற்குப் புதிதாக முந்தைய தினம் வந்திருந்த ஆண்ட்ரு குட்மனையும் அழைத்துக் கொண்டு, சீயோன் மலை தேவாலயத்தை வந்தடைந்தார்கள். அங்கு நடந்ததைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, மீண்டும் மெரிடியன் நகருக்குத் தங்களுடைய காரில் திரும்பினார்கள்.

மெரிடியன் நகரத் துணை ஷெரிப் செசில் ப்ரைஸ், அவர்கள் வேகமாகச் செல்வதாகச் சொல்லிக் காரை நிறுத்தினார். பின்னர் அவர்களைப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைத்தார். பிறகு, தான் மைக்கேல் ஸ்வெர்னெரை கைது செய்து வைத்திருப்பதாகக் கிளானிற்குச் செய்தி அனுப்பினார். ஏனென்றால் அந்தத் துணை ஷெரிப் மெரிடியன் பகுதியின் கு க்ளக்ஸ் கிளான் உறுப்பினர்.

அன்றிரவு 10.30 மணிக்குக் கைது செய்தவர்களை விடுதலை செய்வதாக வெளியே அனுப்பினார். அவர்களும் தங்களது அலுவலகத்துக்குத் திரும்புவதற்காக காரில் ஏறி கிளம்பினர். அவர்களுடைய கார் இருளான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மீண்டும் அவர்கள் துணை ஷெரிப்பால் நிறுத்தப்பட்டனர். அங்கு அவருடன் இன்னமும் 20க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

மைக்கேல் ஸ்வெர்னெரும், ஜேம்ஸ் சேணியும், ஆண்ட்ரு குட்மனும் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டு, அருகில் இருந்த சதுப்பு நிலத்தில் வைத்து கொலை செய்யப்பட்டனர். அவர்கள் மூவரது உடலும் அருகில் இருந்த மணல் அணை ஒன்றின் அடியில் புதைக்கப்பட்டது.

தேவாலயத்தைக் காணச் சென்றவர்கள் ஆறு மணி நேரமாகத் திரும்பவில்லை என்பதால், CORE அலுவலக நிர்வாகிகள் உடனடியாக FBI, ஒன்றியச் சட்டத்துறை என அனைவரையும் தொடர்பு கொண்டார்கள். எவருக்கும் அதில் தலையிட விருப்பமில்லை.

மறுநாள் மூவரும் காணாமல் போனது, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கச் செய்தியாக வந்திருந்தது. குடியரசுத் தலைவர் ஜான்சன் உடனடியாக அந்த வழக்கை விசாரிக்க FBI அதிகாரிகளை அனுப்பி வைத்தார். 150க்கும் மேற்பட்ட FBI அதிகாரிகளும், அருகில் இருந்த அமெரிக்க ராணுவத் தள வீரர்களும், காணாமல்போன மூவரையும் தேட ஆரம்பித்தார்கள். FBI விசாரணைக்கு ‘மிஸ்ஸிஸிப்பி எரிகிறது’ என்று பெயரிட்டது.

0

அதேநேரத்தில் ஜூன் மாதத்தில் நாடெங்கிலும் இருந்து 1000திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டனர். பள்ளிகளை நிறுவுபவர்கள் தனியாகவும், வாக்காளர்களைப் பதிவு செய்பவர்கள் தனியாகவும் வேலை செய்ய ஆரம்பித்தனர். அத்துடன் தனியே ஒரு மருத்துவக் குழுவும் மாநிலம் முழுவதும் உள்ள கறுப்பினத்தவர்களுக்காக முகாம்களை நடத்திக்கொண்டிருந்தது.

மாநிலம் முழுவதும் 41 சுதந்திரப் பள்ளிகள் நிறுவப்பட்டன. அவற்றில் வெள்ளை இளைஞர்களும், கறுப்பின ஆசிரியர்களும் மாணவர்களுக்குத் தங்களது பாடங்களைத் தொடங்கினார்கள். கறுப்பினத்தவர்களின் வரலாறு, கலாசாரம் முதலியவற்றோடு அரசியல் அதிகாரம், பிரெஞ்சு, 1860-75 வரையிலான அமெரிக்க வரலாறு முதலியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. இவை அனைத்தும் அவர்கள் செல்லும் மாநிலப் பள்ளிகளில் தடை செய்யப்பட்ட வகுப்புகள். இதன் மூலமாக அடுத்த தலைமுறைக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாக இருந்தது. சிறுவர், சிறுமிகளுக்குப் புதிதாகப் பலவற்றைக் கற்றுக்கொடுப்பது, அவர்களது வீட்டுப் பெரியவர்களுக்கும் சென்றுசேரும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது.

படிப்பதற்காக 1000 மாணவர்களை எதிர்பார்த்த இடத்தில், 3000 மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். கறுப்பினக் குழந்தைகளுக்கு (பெரியவர்களுக்கும்) நூலகத்திற்குச் செல்வதற்குத் தடை இருந்ததால், நிறையப் புத்தகங்களும் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் மாணவர்கள் நாடகங்கள் நடித்தனர். மாநிலத்திற்கு அனைத்து இனங்களையும் ஒன்றாக நடத்தும் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றையும் எழுதினார்கள். மொத்தத்தில், மாணாக்கர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும், மொத்தச் சமூகத்திற்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பள்ளிகள் வெற்றி அடைந்தன.

ஆனால் இந்த வெற்றி பல இழப்புகளையும் சந்தித்தது. 40 கறுப்பினத் தேவாலயங்கள் வெடிகுண்டு வீசப்படும், நெருப்பு வைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. பல ஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். பல பொய் வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் இயக்கம் எல்லாத் தடைகளையும் மீறி வெற்றி அடைந்தது.

அமெரிக்க வரலாற்றாய்வாளரான ஹோவர்ட் சின் கூறியது இங்கே பொருத்தமாக இருக்கும்;

‘சுதந்திரப் பள்ளிகள் மிஸ்ஸிஸிப்பிக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் ஒரு சவாலை முன்வைத்தன. முதலாவதாக, முழுமையாகச் செயல்படும் பள்ளிகள், அரசின் அதிகாரத்திற்கும், தனியார் நிறுவனங்களின் பணத்திற்கும் வெளியே நிறுவப்பட முடியும் என்பதையும், அப்படியான பள்ளிகள் மற்ற பள்ளிகளின் பாடத்திட்டங்களை விமர்சிப்பதாகவும் இருக்கலாம் என்றும் நிரூபித்தன.

அடுத்து, இந்தப் பள்ளிகள் சமூகத்தில் கல்வியின் பங்கு என்பது குறித்துத் தீவிரமான கேள்விகளை எழுப்பின. தேர்வுகளையும் பட்டங்களையும் தவிர்த்து, ஆசிரியர்கள் ஒரு சமூக நோக்கத்திற்காக மாணவர்களைச் சந்திக்க முடியுமா? கல்வியின் நோக்கம் ஏழ்மை, அநீதி, இனவெறி, வெறுப்பு போன்றவற்றை ஒழிப்பது என்பதாக இருக்க முடியுமா? அத்தகைய தீர்வுகளை நோக்கி தேசியக் கல்வி முயற்சிகளைத் திருப்ப முடியுமா?..’ என்று அவர் எழுதியிருந்தார்.

அவர் சொல்லாததாக மூன்றாவது நோக்கமாக மிஸ்ஸிஸிப்பிச் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சிக்கும் இந்தப் பள்ளிகள் உருவாக்கிய அரசியல் விழிப்பு உதவியாக இருந்தது.

0

மிஸ்ஸிஸிப்பி மாநில ஆளுநர் முதல் மெரிடியன் நகரத் தந்தைவரை அனைவரும், தொலைந்துபோன மூவரையும் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். தங்களது மாநிலத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டி, அவர்கள் தொலைந்துவிட்டதாக நாடகமாடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினர். அவர்கள் தற்போது கியூபா அல்லது கலிபோர்னியாவில் இருக்க வேண்டும் என்றும் கூறினர்.

வெள்ளைக் கும்பலால் கொலை செய்யப்பட்டவர்களை அருகில் இருக்கும் நதியில் எறிந்துவிடுவதே தென் மாநில வெள்ளைப் பாரம்பரியமாக இருந்தது. எனவே முதலில் FBI அதிகாரிகளும், வீரர்களும் அருகில் இருந்த நதியை முழுவதுமாக அலசி தேடினார்கள். ஆனால் தொலைந்த மூவருக்குப் பதிலாக, அதுபோலவே கிளான் வெறியர்கள் கொலை செய்து வீசியிருந்த வேறு எட்டுக் கறுப்பு ஆண்களின் உடல்கள் கிடைத்தன. இன்னமும் எவ்வளவு கொலைகள் மிஸ்ஸிஸிப்பியிலும், மற்ற தென் மாநிலங்களிலும் நடைபெற்றிருக்கும் என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை என்பதே இதன் மூலம் உறுதியானது.

அனைவருக்கும் தொலைந்தவர்களின் நிலை என்னவாக ஆகியிருக்கும் என்று தெரிந்தே இருந்தது. அவர்கள் தொலைந்து ஆறு வாரங்கள் கழித்து, கிளானில் இருந்த தங்களது உளவாளி மூலம் FBI அவர்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தது. அதற்குப் பிறகான நடவடிக்கையில் நகரைச் சேர்ந்த 19 கிளான் வெறியர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். நகர ஷெரிப், துணை ஷெரிப், வணிகர்கள், தொழிலாளிகள் என அனைவரும் இதில் அடக்கம். ஆனால் மாநில நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

முதல்முறையாக, 1964 பொது உரிமைச் சட்டத்தின் கீழ், அவர்களை FBI கைது செய்து, ஒன்றிய நீதிமன்றத்தில் நிறுத்தியது. கொலையுண்ட மூவரின் உரிமைகளைப் பறித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அனைவரும் 6 முதல் 10 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றார்கள். கொலைக்கு அவர்கள் பெற்ற தண்டனை மிகவும் குறைவே.

கொலையுண்ட மூவரும் மிஸ்ஸிஸிப்பியில் ஒன்றாகப் புதைக்கப்பட வேண்டும் என்பதே அந்த வெள்ளை இளைஞர்களின் பெற்றோரின் விருப்பமாக இருந்தது. ஆனால் மிஸ்ஸிஸிப்பிச் சட்டம் இறப்பிலும்கூட கறுப்பினத்தவர்களும் வெள்ளையர்களும் ஒன்றாகப் புதைக்கப்படக்கூடாது என்றே பிரிந்திருந்தது.

இந்த இடத்தில், மைக்கேல் ஸ்வெர்னெரின் மனைவி, ரீட்டா ஸ்வெர்னெரின் கருத்தைப் பதிவுசெய்வது, அன்றைய நிலையைச் சரியாகக் காட்டும்.

‘என் கணவர், மைக்கேல் ஸ்வெர்னரின் மரணம் வீணாகப் போகவில்லை. அவரும், ஆண்ட்ரு குட்மன், இருவரும் கறுப்பினத்தவர்களாக இருந்தால், உலகம் அவர்களது மரணத்தைக் கவனித்திருக்காது. மிஸ்ஸிஸிப்பியில் கறுப்பினத்தவர்கள் கொலை செய்யப்படுவது செய்தி அல்லவே. என் கணவரும், ஆண்ட்ரு குட்மனும் வெள்ளையர்களாக இருந்ததால்தான் தேசிய அளவில் கவனம் கிட்டியது’ என்றார் அவர்.

0

1964ஆம் வருடம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க இருந்தது. அந்த வருடத்தின் ஆரம்பம் முதலே தங்களது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்திக்கொண்டிருந்தன. எல்லா மாநிலங்களிலும் உட்கட்சித் தேர்தல் முடிந்து, அதிக மாநிலங்களை வென்றவர், அந்தக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பெரிய மாநாடு ஒன்றில் அறிவிக்கப்படுவார். அதன் பின்னரே தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். வழக்கமாக நவம்பர் மாதம் இரண்டாம் செவ்வாய் அன்று தேர்தல் நடக்கும் என்பதால், அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளரை ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்து விடுவார்கள்.

மிஸ்ஸிஸிப்பி மாநில ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் வெள்ளையர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதன் முடிவில் மாநாட்டிற்குச் செல்லத் தேர்ந்தெடுக்கப்படும் 72 கட்சிப் பிரதிநிதிகளும் வெள்ளையர்களாகவே இருக்க முடியும். மிஸ்ஸிஸிப்பிச் சுதந்திர ஜனநாயகக் கட்சி இதை மாற்ற விரும்பியது. மேலும், அந்த வருடம் நியூ ஜெர்ஸி மாநில அட்லாண்டிக் சிட்டியில் நடைபெற இருந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டில், வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தாங்களே உண்மையான மிஸ்ஸிஸிப்பிச் ஜனநாயகக் கட்சி என்று இந்தப் பிரச்சினையை எழுப்புவதன் மூலம், தேசிய அளவில் கவனத்திற்குக் கொண்டுவர முடியும் என்பதும் அவர்களது திட்டம்.

சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்க, மார்ட்டின் லூதர் கிங் மிஸ்ஸிஸிப்பி வந்தார். மாநிலம் முழுவதும் கூட்டங்களில் பேசிய அவர், ‘ஒரு கட்சியாவது நிறப்பாகுபாடு பார்க்காமல் இருப்பது அவசியம்’ என்று பேசினார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எத்தனை அவசியம் என்பதை இப்போது அனைவரும் உணர்ந்திருந்தனர்.

எனவே சுதந்திர ஜனநாயகக் கட்சி, மாநிலம் முழுவதும் கறுப்பினத்தவர்களையும் இணைத்துத் தேர்தல்களை நடத்தியது. அதன் முடிவில் 64 கறுப்பினத்தவர்களும், 4 வெள்ளையர்களும் கொண்ட பிரதிநிதிக் குழுவைத் தேர்ந்தெடுத்தது. அவர்கள் பேருந்துகளில் அட்லாண்டிக் சிட்டி நகரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

அந்த வருடத்தின் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக லிண்டன் ஜான்சன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். அவருக்கு எதிர்ப்பு என்பதே இல்லை. எனவே மாநாட்டில் எந்தப் பிரச்சினையும் எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் ஜான்சன் சுதந்திர ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளை உள்ளே அனுமதிக்க விரும்பவில்லை. தேவையில்லாமல் தேசிய அளவில் விவாதிக்கப்படவும், வெள்ளை வாக்காளர்களைப் பகைத்துக்கொள்ளவும் நேரிடும் என்பதே அவரது பயம். எனவே ஜான்சன் சிகிச்சை பலருக்கும் அளிக்கப்பட்டது. பதவிகள், மிரட்டல்கள், அதிகாரம் முதலியவற்றைக் கொண்டு ஜான்சன் அவர்களை அனுமதிக்கவிடாமல் செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்தார்.

ஆனாலும் அங்கீகாரக் குழு, அவர்கள் அனைவரையும் மாநாட்டிற்கு அனுமதிக்க முடியாவிட்டாலும் இருவரை மட்டும் பார்வையாளராக, கட்சியின் விருந்தினராக அனுமதிக்கலாம் என்று சமரசம் பேசியது. இதற்குச் சுதந்திர ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர். அங்கு ஃபானி மே ஹம்மர், தான் வாக்காளராகப் பதிவு செய்ய எடுத்த முயற்சிகளையும், அதனால் எதிர்கொண்ட வன்முறைகளையும் தெரிவித்தது நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. இறுதியில் ஜான்சனின் அரசியல் வென்றது. ஆனால் இது கறுப்பினத்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் மாநாட்டில் இருந்து வெளியேறினார்கள். அதேநேரத்தில் கறுப்பினத்தவர்களுடன் மாநாட்டில் பேசியதால், மிஸ்ஸிஸிப்பிப் பிரதிநிதிகளும் ஜான்சனை எதிர்ப்பதாகத் தெரிவித்து மாநாட்டில் இருந்து வெளியேறினார்கள்.

லிண்டன் ஜான்சன் வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். நவம்பர் மாதத் தேர்தலில் பெரும் வெற்றியும் பெற்றார். அதே நேரத்தில் லிங்கனின் காலத்தில் இருந்து முதல் முறையாக, ஜனநாயகக் கட்சி ஐந்து தென் மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. தென் மாநில வெள்ளையர்கள், ஜான்சன் எதிர்பார்த்ததுபோலவே, ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேற ஆரம்பித்திருந்தார்கள்.

0

மூன்று மாதங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல விதப் போராட்டங்களில், ஆறு பேர் உயிரிழந்திருந்தார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தார்கள். 37 தேவாலயங்களின் மீதும், 30 வீடுகளின் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 17000 கறுப்பினத்தவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய முற்பட்டு, 1600 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, கறுப்பினத்தவர்களுக்குப் பல காலமாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாக்குரிமைப் பிரச்சினை முதன்மைப் பேசுபொருளாக ஆகியிருந்தது. அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்து, அவர்களையும் நாட்டின் சமமான குடிமக்களாக அனுமதிக்க வேண்டும் என்ற குரல் எல்லாப் பக்கங்களிலும் எழுந்துகொண்டிருந்தது.

அந்தப் போராட்டத்தின் முடிவிற்கு இன்னமும் சிறிது காலமே இருந்தது. அதுவும் சில உயிர்ப்பலிகளை வாங்கிய பின்னரே முடிவிற்கு வர இருந்தது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *