Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #38 – செல்மா

கறுப்பு அமெரிக்கா #38 – செல்மா

‘நோபல் பரிசின் சாராம்சமான அமைதியையும் சகோதரத்துவத்தையும் இன்னமும் வென்றெடுக்காத இந்த இயக்கத்திற்கு, அயராத போராட்டத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் இந்த இயக்கத்திற்கு, எதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

நீண்ட யோசனைக்குப் பின்னர், அந்த இயக்கத்தின் சார்பில் நான் பெற்றுக்கொள்ளும் இந்த விருது, நமது காலத்தின் முக்கியமான அரசியல் மற்றும் அறம் சார்ந்த கேள்வியான, ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் எதிராக மனிதன் வன்முறையைக் கையாளாமல் எதிர்ப்பைத் தெரிவிப்பது எப்படி என்பதற்கு அகிம்சையே சரியான வழி என்ற பதிலுக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

நாகரிகமும் வன்முறையும் இரண்டு முரணான தத்துவங்கள். இந்திய மக்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கறுப்பினத்தவர்களும் அகிம்சை முறை என்பது வெறுமனே செயல்படாமல் இருப்பது அல்ல, சமூக மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய பெரும் அறச் சக்தி என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இப்போதோ அல்லது வருங்காலத்திலோ, உலக மக்கள் அமைதியுடன், ஒற்றுமையாக வாழ வேண்டிய வழியைக் கண்டுகொள்வார்கள். அன்று இப்போது நம்மைப் பயமுறுத்திக்கொண்டிருக்கும் அழிவின் பாடல், சகோதரத்துவத்தின் சங்கீதமாக மாறும்.

அதை அடைய வேண்டுமென்றால், மனிதர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பழிவாங்குதல், பதிலடி கொடுத்தல், முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுதல் போன்றவற்றை மறுத்து, புதிய வழி ஒன்றைக் கண்டறிய வேண்டும். அத்தகைய வழியின் அடிப்படை அன்பாகவே இருக்கும்.’

1964ஆம் வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு மார்ட்டின் லூதர் கிங்கிற்கு வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட முழுப் பரிசுத்தொகையையும் (இன்றைய மதிப்பில் 20 கோடி ருபாய்) கறுப்பினத்தவர்களுக்காகப் போராடிக் கொண்டிருந்த இயக்கங்களுக்கிடையே பிரித்துக் கொடுத்துவிட்டார்.

நோபல் பரிசு விழா முடிந்து நாடு திரும்பியவுடன் அவர் குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். தங்களது முக்கியக் கோரிக்கையான கறுப்பினத்தவர்கள் அனைவருக்கும், எந்தத் தடையும் இன்றி, வாக்குரிமை வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால் லிண்டன் ஜான்சனிற்கு வேறு பல பிரச்னைகள் இருந்தன. பெரும் வெற்றியைப் பெற்றிருந்த அவர், வரலாற்றில் தன்னுடைய தடத்தை விட்டுச்செல்ல ஆவலாக இருந்தார். ஆனால் கறுப்பினத்தவருக்கு வாக்குரிமையை உறுதிசெய்வதை அவர் அப்படியான ஒன்றாகப் பார்க்கவில்லை.

மாறாக அமெரிக்காவில் வறுமையை முழுவதுமாக ஒழிக்க ‘வறுமையின் மீதான போர்’ என்ற திட்டத்தை முன்வைத்திருந்தார். அதை முன்னெடுத்துச் செல்வதையே தன்னுடைய முதல் கடமையாக வைத்திருந்தார். அந்தப் போரில் தன்னை ஆதரிக்குமாறு கிங்கைக் கேட்டுக்கொண்டார். 1965ஆம் ஆண்டுக்கான முக்கியச் சட்ட முன்வரைவுகளில் கறுப்பினத்தவரின் வாக்குரிமை இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார்.

கிங் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பினாலும், 1965இல் வாக்குரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.

0

செல்மா, அலபாமா. மாணவர்கள் அகிம்சா ஒருங்கிணைப்புக் குழு (SNCC – ஸ்னிக்) அங்கிருக்கும் கறுப்பினத்தவர்களைப் பதிவு செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருந்தது. ஆனால் மற்ற இடங்களில் நிகழ்வதுபோல இங்கும் பல வழிகளிலும் வன்முறை உட்பட பல்வேறு தடங்கல்களால் அவர்கள் தொடர்ச்சியாகத் தடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்.

மார்ட்டின் லூதர் கிங்கின் SCLC இயக்கம், தங்களது போராட்டத்தை ஸ்னிக்குடன் இணைந்து செல்மாவில் தொடங்கப்போவதாக அறிவித்தது. ஆனால் ஸ்னிக்குடனான SCLCயின் உறவு மிகவும் மோசமாக இருந்தது. SCLC ஒற்றைத் தலைவரின் கவர்ச்சியை நம்பி இயங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. குழுத்தலைமை மட்டுமே இயக்கங்களை ஒன்றாக வேலை செய்ய வைக்க முடியும் என்றும் வாதிடப்பட்டது. எல்லாவற்றையும்விட இந்த நேரத்தில், ஸ்னிக்கின் உள்ளே அகிம்சா முறையைத் தொடருவது குறித்த முரண்பாடுகள் தோன்றிக்கொண்டிருந்தன.

பல வருடங்களாகத் தொடர்ந்து முன்னெடுத்தும், அகிம்சை முறைகள் சரியான பலனைத் தரவில்லை எனப் பலரும் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் கிங் தன்னுடைய வழியில் இருந்து பின் வாங்கவில்லை. மாறாக, அகிம்சை முறை மட்டுமே சரியானது என்று உறுதியாகப் பேசிக்கொண்டிருந்தார். இந்த வேறுபாடுகள் போராட்டத்தின் நாட்போக்கில் வெளியே தெரிய ஆரம்பித்தன.

ஜனவரி 2, 1965. கிங் தங்களது போராட்டத்தைச் செல்மாவில் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அவர்கள் செல்மாவைத் தேர்ந்தெடுத்ததற்கு நல்ல காரணம் ஒன்று இருந்தது. அந்த நகரின் ஷெரிப் ஜிம் கிளார்க். கிளார்க் பற்றிப் பேசும்போது ‘இயேசு கிறிஸ்துவும், எல்விஸ் ப்ரெஸ்லியும் ஒன்றாக வந்து, ஜிம் கிளார்கிடம் கறுப்பினத்தவர்களுடன் இணக்கமாக நடந்துகொள் என்று சொன்னால், ஜிம் கிளார்க் அவர்கள் இருவரையும் அடித்து, துவைத்துச் சிறையில் தூக்கிப் போட்டுவிடுவார்.’ என்று கூறுவார்கள். எனவே, ஜிம் கிளார்க் தங்களது போராட்டத்திற்குத் தேவையான தேசிய ஆதரவைப் பெற்றுத் தருபவராக இருப்பார் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது.

ஜனவரி மாதம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 18ஆம் தேதி செல்மாவில் இருக்கும் பிரவுன் தேவலயத்தில் இருந்து கறுப்பினத்தவர்கள், மார்ட்டின் லூதர் கிங்கின் தலைமையில் நீதிமன்றம் நோக்கிச் சென்றார்கள். நீதிமன்றத்தில் இருந்த பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே வாக்காளர்கள் பதிவு செய்ய முடியும். நீதிமன்றத்தை அடைந்த அவர்கள், அங்கே வாயிலில் காவல்துறைப் படையுடன் நின்றுகொண்டிருந்த ஜிம் கிளார்க்கை எதிர்க்கொண்டார்கள். அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பதிவு செய்ய வந்த வாக்காளர்களிடம், பதிவாளர் வேலையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. முழு நாளும் அங்கேயே காத்திருந்து விட்டு, அவர்கள் திரும்பினார்கள்.

மறுநாளும் அப்படியே நடந்தது. அன்று ஏற்கெனவே வாக்காளராகப் பதிவு செய்திருந்த அமெலியா போயின்டன், புதிதாகப் பதிவு செய்பவர்களுக்கு உதவக் காத்திருந்தார். அலபாமா சட்டப்படி புதிதாகப் பதிவு செய்ய வருபவரை, ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் ஒருவர் பரிந்துரைக்க வேண்டும். அமெலியா அதற்காகவே அங்கு இருந்தார். நீதிமன்றத்திற்கு வெளியே அனைவரும் வரிசையாக நிற்கவில்லை என்று கிளார்க்கின் காவல்துறை மின்சார லத்திகளால் அனைவரையும் தாக்கி, கைது செய்தது. அமெலியா கழுத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரையும் இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர். NAACPயின் சட்டஉதவிக் குழு அனைவரையும் பிணையில் எடுத்தது.

மறுநாளும் இது தொடர்ந்தது. இப்போது பதிவாளர்கள் சில கறுப்பினத்தவர்களை அலுவலகத்திற்குள் அனுமதித்தார்கள். ஆனால் அனைவரும் நிராகரிக்கப்பட்டார்கள். ஜிம் கிளார்க் தடியடி நடத்தி அனைவரையும் துரத்த முயற்சித்தார். மீண்டும் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

ஜனவரி 25ஆம் தேதி நகரில் இருக்கும் கறுப்பின ஆசிரியர்கள் அனைவரும் – 105 பேர் – நீதிமன்ற வாசலில் காத்திருந்தார்கள். அவர்களில் எவருக்கும் வாக்குரிமை இல்லை. தாங்கள் போரிடுவது தெரிந்தால், வேலை போய்விடும் என்றாலும் அவர்கள் அங்கே வந்திருந்தார்கள். ஜிம் கிளார்க் அவர்களைக் கைது செய்ய முற்பட்டபோது, நகர அதிகாரிகள் தடுத்துவிட்டனர். ஆசிரியர்கள் சிறையில் இருந்தால், பள்ளிகளில் இருக்கும் கறுப்பின மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி விடுவார்கள் என்ற பயமே காரணம்.

பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் மட்டுமே பதிவாளர் அலுவலகம் இயங்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது. மற்ற நாட்களில் வாக்காளர்கள் பதிவு செய்ய முடியாது என்றும் அறிவித்துவிட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி நீதிமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றதற்காகக் கிங்கும் இன்னமும் 260 கறுப்பினத்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். தான் சிறையில் இருக்கும்போதும் போராட்டம் தொடர வேண்டும் என்று கிங் தெரிவிக்கவே, SCLCயின் தலைவர்கள் ஒவ்வொருவராகச் சிறைக்கு வந்துவிட்டார்கள். 2000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பிப்ரவரி 18ஆம் தேதி செல்மாவிற்கு அருகில் இருக்கும் மரியோன் நகரில் SCLC தலைவரான ஜேம்ஸ் ஆரஞ்சு கைது செய்யப்பட்டார். அதற்குக் கண்டனம் தெரிவித்து அன்றைய இரவே கறுப்பினத்தவர்கள் அவரது சிறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த முறை, காவல்துறை முழுவதுமாக அவர்களை எதிர்பார்த்து இருந்தது. விளக்குகளையும், தொலைக்காட்சிக் கேமராக்களையும் உடைத்துவிட்டு, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னுடைய தாயின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்க முயன்ற ஜிம்மி லீ ஜாக்சன் என்னும் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சிறையில் இருந்து வெளியே வந்திருந்த மார்ட்டின் லூதர் கிங், நான்கு நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பேசினார். ‘நியாயமற்ற துன்பத்தில் இருந்தே மீட்சி கிடைக்கிறது என்பதை ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் நிரூபிக்க வேண்டும். எந்தக் கசப்புணர்வும் இல்லாமல், பழிவாங்கும் எண்ணங்களை நாம் வைத்திருக்கக் கூடாது. நமது வெள்ளையினச் சகோதரர்கள் மீதான நம்பிக்கையை நாம் இழந்து விடக்கூடாது’ என்று அனைவரையும் சற்று அமைதிப்படுத்த முயன்றார்.

ஆனால் ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அனைவரையும் கொதிநிலைக்குக் கொண்டுவந்திருந்தது. போதகரான ஜேம்ஸ் பெவல் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர். மக்கள் கொதிநிலைக்கு வந்துவிடும்படியான சம்பவம் ஒன்று நடந்துவிடும்போது, அவர்களது விரக்தியைச் சரியான பாதையில் திருப்பாவிட்டால், மக்கள் வன்முறையை நோக்கித் திரும்பி விடுவார்கள் என்றார். எனவே, கிங் செல்மாவில் இருந்து அலபாமா மாநிலத் தலைநகரான மான்ட்கமரி வரை மார்ச் 7ஆம் தேதி நடைப்பயணமாகச் செல்ல வேண்டும் என்று அறிவித்தார்.

0

SNCC இயக்கம் இதை ரசிக்கவில்லை. கிங் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவே இத்தகைய பயணத்தை அறிவித்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியது. எனவே இந்த நடைப்பயணத்தில் SNCC பங்கு பெறாது என்றும் அறிவித்து விட்டது. ஆனால் SNCC இயக்கத்தில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் விரும்பினால் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவித்தது. SCLCக்கும், SNCCக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

ஆனால் SNCCயின் தலைவராக அப்போது இருந்த ஜான் லெவிஸ் SNCCஇன் நிலைப்பாட்டுடன் வேறுபட்டார். மக்களின் மனநிலை வேறாக இருக்கிறது என்றும், சரியான காரணங்கள் இல்லாது மக்களின் நடைப்பயணத்தைப் புறக்கணிப்பது இயக்கத்தை மக்களிடம் இருந்து வேறுபடுத்தும் என்றும் சொல்லிவிட்டு, தனிப்பட்ட முறையில் தான் பங்கேற்கப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

0

ஜே. எட்கர் ஹூவர் அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.பி.ஐயின் தேசியத் தலைவர். அந்தப் பதவியில் இருந்து பல வருடங்கள் அமெரிக்க அரசியலை ஆட்டி வைத்தவர். அவரைப் பதவியில் இருந்து விலக்க அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களும் அஞ்சுவார்கள் என்று நம்பப்பட்டது. காரணம், அமெரிக்க அரசியலில் இருந்த அனைவரது ரகசியங்களும் அவருக்குத் தெரிந்திருந்தது என்று கூறப்பட்டது.

கறுப்பினத்தவர்களின் போராட்டமும் அவருக்கு உகந்ததாக இல்லை. அமெரிக்கா உண்மையான, கற்பனையான கம்யூனிஸ்டுகளைக் கண்டு பயந்துகொண்டிருந்த காலம் அது. அமெரிக்கா முழுவதும் கம்யூனிஸ்டு என்ற வார்த்தையே கெட்ட வார்த்தையாக இருந்தது. ஹூவருக்கு அமெரிக்க அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்களாகவே இருந்தார்கள். அதிலும் மார்ட்டின் லூதர் கிங், அவரது கண்களில் முதன்மையான கம்யூனிஸ்டாக இருந்தார்.

எனவே, கிங்கின் அலுவலகம் வரை ஹூவரின் உளவாளிகள் இருந்தார்கள். அவரது அலுவலகத் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது. அதன் மூலமாகச் சேகரித்த தகவல்களைக் கொண்டு அவரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்பது ஒரு நோக்கம். ஆனால் இதில் ஹூவர் மட்டுமே தனியாக இல்லை. கென்னடி காலத்தில், ராபர்ட் கென்னடியின் ஒப்புதலோடு ஆரம்பித்த இந்த ஒட்டுக் கேட்பது, கிங் இறக்கும் வரை தொடர்ந்தது. ஜான்சனும் தனக்குத் தேவை இருக்கும்போது, கிங்கின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஹூவர் உபயோகமாக இருந்தார்.

போராட்டக்காரர்களைப் பின்வாங்கச் சொல்லும் காவல்துறை. ஜான் லெவிஸ் முன்னே நிற்கிறார் (வெள்ளை கோட் அணிந்திருப்பவர்) 1965 Spider Martin

செல்மாவில் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்த நேரத்தில், ஜான்சன் கிங்கின் வீட்டில் இருக்கும் தொலைபேசியையும் ஒட்டுக் கேட்க உத்தரவிட்டார். அதன் மூலமாகக் கிங்கின் குடும்பத்திற்குள் எதாவது பிரச்னை வரவழைத்து அவரின் கவனத்தைத் திசை திருப்ப நினைத்தார்.

அதே நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கும் துறவி அல்ல. அவருக்குப் பல நகரங்களில் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவரது மனைவியும் அதை அறிந்தே இருந்தார். மார்டினின் நண்பரான போதகர் ரால்ப் அபெர்நதி இது குறித்து, ‘திருமணத்திற்கு வெளியே உறவு கொள்வதை விவிலியம் தடை செய்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அந்த ஒரு சபலத்தைச் சமாளிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது.’ என்கிறார்.

ஹூவர் இந்தச் சபலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். பத்திரிகைகளுக்கு இந்தச் செய்திகளைக் கசிய விடுவதன் மூலமாக கிங் குறித்த வதந்திகளைப் பரப்பவும் செய்து கொண்டிருந்தார்கள்.

செல்மாவில் நடைப்பயணத்தைத் துவங்க இருப்பதை அறிந்து, அட்லாண்டா நகரில் இருக்கும் அவரது மனைவிக்கு FBI ஒரு தொலைப்பேசி பதிவை அனுப்பி வைத்தது. எனவே தன் மனைவியைச் சமாதானப்படுத்த மார்ச் மாத ஆரம்பத்தில் கிங் அட்லாண்டா நகருக்கு வந்து சேர்ந்தார். அதனால் அவரால் மார்ச் 7ஆம் தேதி ஆரம்பிக்கவிருந்த நடைப்பயணத்தின் முதல் நாள் கலந்துகொள்ள முடியாது என்றும், மறுநாளில் இருந்து தான் கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

0

மார்ச் 7ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, செல்மாவில் இருந்து நடைபயணம், ஜான் லெவிஸ் மற்றும் மற்ற SCLC தலைவர்கள் தலைமையில் தொடங்கியது. அன்றைய பயணத்தில் 600க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் அவர்கள் நகருக்குள் எங்கும் காவல்துறையைப் பார்க்கவில்லை. எனவே அவர்கள் மான்ட்கமரி நகரை நோக்கிச் செல்லும் சாலையில் செல்ல ஆரம்பித்தார்கள்.

நகரை விட்டு வெளியே செல்லும் பாதையில் அலபாமா நதியைக் கடந்து செல்ல வேண்டும். அதைக் கடப்பதற்கு எட்மண்ட் பெட்டஸ் பாலம் இருந்தது. நடந்து வந்தவர்கள் அந்தப் பாலத்தை வந்தடைந்தார்கள். பாலத்தின் மறுபுறம் ஷெரிப் ஜிம் கிளார்க், அலபாமா துணை ராணுவப்படை துருப்புகளுடன் நின்றுகொண்டிருந்தார். ஜிம் கிளார்க்கும் இன்னும் சில காவலர்களும் குதிரைகளில் இருந்தார்கள்.

துணை ராணுவப்படையின் மேஜர், நடந்து வந்துகொண்டிருந்தவர்கள் திரும்பிப்போக 2 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். முதலாவதாக நடந்துகொண்டிருந்த ஜான் லெவிஸ் அசையாமல் இருந்தார். இரண்டு நிமிடங்கள் முடிந்தன. முழு வீச்சில் தாக்குதல் தொடங்கியது.

ஜான் லெவிசின் தலை உடைந்தது. குதிரைகள் திரும்பி ஓடிக் கொண்டிருந்தவர்களை நோக்கிப் பாய்ந்தன. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. குறைந்தது நடந்தவர்கள் அனைவரையும் தாக்கி, அடுத்த போராட்டத்திற்கான வேகத்தை முழுவதுமாகக் குறைக்க வேண்டும் என்பதே ஜிம் கிளார்க்கின் எண்ணமாக இருந்தது.

அன்றைய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். ஆனால் காவலர்களின் மீது எந்தப் பதில் தாக்குதலும் நடத்தப்படவில்லை. பாலத்தின் மறுபுறத்தில் இருந்த தொலைக்காட்சி கேமராக்களும், நிருபர்களும் நடந்த அனைத்தையும் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அன்றைய நாளில் நேரடி ஒளிபரப்பு இல்லை. ஆனால் அன்றைய நிகழ்வுகள் மதியமே பல விதங்களில் நாடெங்கிலும் இருந்த தொலைக்காட்சி நிலையங்களுக்குச் சென்றுகொண்டிருந்தது.

அன்று மதியமே கிங்கிற்குச் செய்தி சென்று சேர்ந்தது. இந்த முறை அவர் SCLCயின் முழு முயற்சியையும் போராட்டத்தைத் தொடர்வதை நோக்கித் திருப்பினார். நாடெங்கிலும் இருந்த வெள்ளையர்களுக்கும் மதக் குருமார்களுக்கும் செல்மாவிற்கு வரும்படியாக அழைப்பு விடுத்தார். மீண்டும் தாங்கள் மான்ட்கமரி நகரை நோக்கி நடக்கப்போவதாகவும், அதில் தங்களுடன் நடக்க அனைவரும் வரும்படியாக அழைத்தார். தந்திகளும், தொலைபேசி அழைப்புகளும் நாடெங்கும் சென்றன.

அன்று மாலை நாடெங்கிலும் தொலைக்காட்சி செய்திகள் முழுவதும் செல்மாவில் நடைபெற்ற வன்முறையே முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. மறுநாள் காலை நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் வன்முறை பற்றிய செய்திகள், படங்களோடு, ஜான் லெவிசின் கருத்தையும் பெரிதாக வெளியிட்டது.

‘குடியரசுத்தலைவர் ஜான்சன் வியட்னாமிற்குப் படைகளை அனுப்புகிறார். காங்கோவிற்குப் படைகளை அனுப்புகிறார். ஆப்பிரிக்காவிற்கும் படைகளை அனுப்புகிறார். ஆனால் செல்மா, அலபாமாவிற்கு அவரால் அனுப்ப முடியவில்லை. அடுத்த முறை எங்கள் பயணம் மான்ட்கமரியோடு நிற்கப் போவதில்லை. அப்படியே வாஷிங்டன் நகருக்குச் செல்லப்போகிறோம்.’

கிங்கின் அழைப்பை ஏற்றும், தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் ஆக்கிரமித்திருந்த வன்முறையைக் கண்டும் நாடு முழுவதும் இருந்து வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் செல்மாவை நோக்கி வர ஆரம்பித்தார்கள். இப்போது SNCC – ஸ்னிக்கும் வன்முறையை வெற்றிபெற விடக்கூடாது என்று செல்மாவில் இருந்து மான்ட்கமரி நகருக்குச் செல்லும் பேரணியில் கலந்துகொள்ள முடிவு செய்தது.

மறுநாள் மார்ச் 8ஆம் தேதி, நாடெங்கிலும் இருக்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பாகப் போராட்டங்கள் நடைபெற்றன. அலபாமாவில் தலையிட்டு வன்முறையை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. வாஷிங்டன் நகரில் இருக்கும் நீதித்துறை அலுவலகங்களில் 200க்கும் மேற்பட்ட ஸ்னிக் போராட்டக்காரர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

மார்ச் 9ஆம் தேதி, தன்னுடைய தலைமையில் மீண்டும் பேரணி நடைபெறும் என்று கிங் அறிவித்துவிட்டார். 1000க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் செல்மாவிற்கு வந்துவிட்டனர். பெரும்பாலானவர்கள் பல்வேறு மதக் குருமார்களாகவும், போதகர்களாகவுமே இருந்தனர். யூத ரப்பைகள், கத்தோலிகக் கன்னியாஸ்திரிகள், மதக் குருமார்கள், குவேக்கர்கள் என நாடெங்கும் இருக்கும் பல மதப் பிரமுகர்களும் கிங்குடன் நடப்பதற்கு வந்திருந்தனர்.

மார்ச் 9ஆம் தேதி பேரணி ஆரம்பிப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன் அலபாமா மாநில நீதிமன்றம் செல்மாவில் இருந்து மான்ட்கமரி வரையிலான எந்தப் பேரணியையும் தடை செய்தது.

மார்ட்டின் லூதர் கிங் மிகுந்த தயக்கத்துடனே அன்றைய பேரணியை ஆரம்பித்தார். 3000க்கும் மேற்பட்டோர் அன்று அவருடன் இருந்தார்கள். மெதுவாக நகர்ந்த அவர்கள் எட்மண்ட் பெட்டஸ் பாலத்தை வந்தடைந்தார்கள். இப்போதும் மறுமுனையில் அலபாமா காவல்துறையும், துணை ராணுவப்படையும் இருந்தார்கள், இந்த முறை அவர்கள் போராட்டக்காரர்களுக்கு வழிவிட்டு நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் நீதிமன்றத் தடை இருக்கும்போது அவர்கள் சட்டப்படி என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற நிலை இருந்தது. பாலத்தில் பாதித் தூரம் வந்த கிங், அங்கேயே மண்டியிட்டுப் பிரார்த்தனையை ஆரம்பித்தார். பிரார்த்தனை முடிந்தவுடன், சிறிது நேரம் யோசித்த அவர் திரும்பி செல்மாவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

மொத்தக் கூட்டமும் மிகுந்த அதிர்ச்சியுடன் அவரைப் பின்தொடர்ந்தது. யாருக்கும் எதனால் கிங் இப்போது பின்வாங்குகிறார் என்று புரியவில்லை. இருந்தாலும், அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் பிரவுன் தேவாலயத்தை வந்தடைந்தார்கள். கூட்டத்தில் ஒருவரும் கிங்கின் முடிவைக் கேள்வி கேட்கவில்லை.

கிங் அன்றைய பேரணியைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கவே இல்லை. ஆனால் இங்கே கிங் என்ன மாதிரியான போராட்டத்தை, எதற்காக முன்னெடுத்துக் கொண்டிருந்தார் என்று விளக்க வேண்டியிருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங் ஒரு கிறிஸ்துவ மதபோதகர். அவரது போராட்டங்கள் முதன்மையாகக் கிறிஸ்துவத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. அதனாலேயே அவர் அகிம்சை முறையைத் தன்னுடைய வழியாகத் தெரிந்தெடுத்தார். இயேசுவின் மலைபிரசங்கமே தன்னுடைய இதயத்திற்கு நேரடியாகச் சென்றது என்று மகாத்மா காந்தியும் தெரிவிக்கிறார்.

இத்தகைய கிறிஸ்துவ விழுமியத்தை, போராட்ட ஆயுதமாக மாற்றியதாலேயே கிங்கின் தலைமை அர்த்தம் பெற்றது. அவரது போராட்ட முறைகளும், வழிகளும், போராட்டத்தின் ஒவ்வொரு நாளையும் அவர் பிரார்த்தனையின் மூலமாகவே நிர்ணயித்தார். கடவுள் தனக்கு எதைச் சரியென்று காட்டுகிறாரோ, அந்த வழியையே தான் தேர்ந்தெடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார். எனவே, பாலத்தில் அவர் செய்த பிரார்த்தனையின் முடிவில் அவர் கடவுள் தன்னை முன்செல்வதில் இருந்து தடுக்கிறார் என்று அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும். அதனாலேயே அவர் திரும்பியிருக்கக் கூடும். இது பகுத்தறிவு கொண்டு யோசிக்கும்போது சற்று வேடிக்கையாகத் தெரியலாம்.

நமது சுதந்திரப் போராட்டத்திலும், சிறு வன்முறை ஏற்பட்டாலும் காந்தியடிகள் தன்னுடைய போராட்டத்தை நிறுத்தியதை நாமும் பார்த்திருக்கிறோம். எனவே அசைக்க முடியாத கொள்கையும், எதைக் கண்டும் அஞ்சாத மனமும் கொண்டிருந்த கிங்கின் கட்டளையை அவரது மக்களே கேள்விக்குட்படுத்தாதபோது, நாமும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனால் எவரும் கேள்விக்குட்படுத்தவில்லை என்பது தவறு. SNCC – ஸ்னிக் மாணவர்கள் இப்போது கொதித்துக்கொண்டிருந்தார்கள். நாடு முழுவதும் தனது கவனத்தைச் செல்மாவில் குவித்துக் கொண்டிருந்தபோது, அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை, கிங் ஒரு சர்வாதிகாரியைப்போல நடந்துகொள்கிறார் என்றும் பொருமிக் கொண்டிருந்தார்கள்.

அன்றிரவு, இரவு உணவை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பாஸ்டன் நகர மதபோதகர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. பாஸ்டன் நகரைச் சேர்ந்த போதகர் ஜான் ரீப் மயக்கம் அடைந்தார். இரண்டு நாட்கள் ஆகியும் மயக்கம் தெளியாமல் மரணமடைந்தார். ரீபின் மரணம் மீண்டும் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது.

குடியரசுத் தலைவர் ஜான்சன் முதலில் ஓர் அரசியல்வாதி. சரியான சூழலில் தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்வதை ராஜதந்திரமாகவே பார்த்தார். அப்போதைய நாட்டின் சூழல் கறுப்பினத்தவர்களுக்கான வாக்குரிமையை உறுதி செய்வதற்கு ஏற்றவாறு இருப்பதால், உடனடியாக ஒரு சட்டவரைவைத் தயாரிக்க உத்தரவிட்டார்.

மார்ச் 15ஆம் தேதி காங்கிரஸ் சபையின் முன் பேசிய அவர், புதிய சட்டத்தை அறிமுகம் செய்து, சபை தனது கடமையைச் சரியாகச் செய்து, சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார். ‘கறுப்பினத்தவர்கள் பிரச்னை என்று ஒன்றும் இல்லை. இது அமெரிக்கர்களின் பிரச்சினை. நாம் இன்று மாலை அமெரிக்கர்களாகவே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறோம். மதவெறி மற்றும் அநீதியின் காரணமாக உடைந்திருக்கும் நமது வாழ்வைக் கடக்க வேண்டியது, கறுப்பினத்தவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவரும்தான். இறுதியில் நாம் வெல்வோம்’ என்று போராட்டக்காரர்களின் வாசகங்களைத் தன்னுடைய பேச்சில் கொண்டு வந்த அவரைக் கிங் உட்பட அனைவரும் ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பேரணிக்கு ஒப்புதல் வாங்க, இயக்கம் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருந்தது. மார்ச் 17ஆம் தேதி, நீதிமன்றம் பேரணிக்கு ஒப்புதலைக் கொடுத்தது.

மார்ச் 21 அன்று பேரணி நடக்கும் என்று கிங் அறிவித்தார். அது குறித்து ஆலோசிக்க அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலசை வெள்ளை மாளிகைக்கு ஜான்சன் அழைத்தார். ஆனால் வாலஸ் தன்னால் போராட்டக்காரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்று கூறிவிட்டார். கோபமடைந்த ஜான்சன், அலபாமா துணை ராணுவப்படையை ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, பேரணிக்கு முழுப் பாதுகாப்பு வழங்கும்படியாக உத்தரவிட்டார்.

3500 பேருடன் மார்ச் 21ஆம் தேதி ஆரம்பித்த பேரணி மார்ச் 25ம் தேதி மான்ட்கமரி நகரை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் வந்தடைந்தது. வழியெங்கும் ராணுவமும், துணை ராணுவப்படையும் காவல் இருந்தார்கள். மான்ட்கமரி நகரை வந்தடைந்தபோது, நடந்துகொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 25000க்கும் மேலாக இருந்தது.

அங்கே அலபாமா சட்டமன்றத்தின் முன்னே கிங் உரையாற்றினார்.

‘எத்தனைக் காலம்?’ என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரியும். ‘செல்மாவிலும், பர்மிங்காமிலும் தெருவில் அடிபட்டு விழுந்துகிடக்கும் நீதியும், தெற்கில் இருக்கும் சமூகங்களும், எப்போது இந்த அவமானத்தின் தூசில் இருந்து எழுந்து நிற்கும்?’… இந்த விரக்தியான நேரத்தில், இன்றைய மதியத்தில் – நீண்ட காலம் இருக்காது – ஏனென்றால் ‘பூமியில் நசுக்கப்பட்ட உண்மை மீண்டும் எழும்.’

எத்தனைக் காலம்? அதிகமில்லை, ஏனென்றால் ‘எந்தப் பொய்யும் எல்லாக் காலமும் வாழ்ந்ததில்லை.’

எத்தனைக் காலம்? அதிகமில்லை, ஏனென்றால் ‘நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.’

எத்தனைக் காலம்? அதிகமில்லை,

தூக்குமேடையில் உண்மையும்,

சிம்மாசனத்தில் பொய்யும் இருந்தாலும்,

அந்தத் தூக்குமேடையே எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.

அதன் பின்னால் இருக்கும் இருளான நிழலில்

கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

எத்தனைக் காலம்? அதிகமில்லை. ஏனென்றால் அற உலகின் வளைவு நீண்டதாக இருக்கலாம், ஆனால் அது நீதியை நோக்கியே வளைகிறது.

எத்தனைக் காலம்? அதிகமில்லை. ஏனென்றால்

கர்த்தருடைய வருகையின் மகிமையை என் கண்கள் கண்டன;

அவர் கோபத்தின் திராட்சைப் பழங்களைச் சேமித்து வைத்திருக்கும் பழங்காலத்தை மிதிக்கிறார்;

அவரது பயங்கரமான வாளின் வீச்சு மின்னலை வெட்டுகிறது;

அவரது உண்மை நம் முன்னே செல்கிறது;

பின்வாங்கவே சொல்லாத தனது எக்காளத்தை அவர் ஊதுகிறார்;

தனது நியாயாசனத்தில் இருந்து மனிதர்களின் மனங்களைச் சோதித்துப் பார்க்கிறார்;

என் ஆத்துமாவே! அவருக்குப் பதில் சொல்ல விரைந்து செல்! என்னிடம் மகிழ்வுடன் இரு!

நமது கடவுள் முன்னே செல்கிறார்.

மகிமை, அல்லேலூயா! மகிமை, அல்லேலூயா!

மகிமை, அல்லேலூயா! மகிமை, அல்லேலூயா!

நமது கடவுள் முன்னே செல்கிறார்.

0

1965ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம், பேரணி நடந்து ஐந்து மாதங்களில், குடியரசுத்தலைவர் ஜான்சன் புதிய வாக்குரிமைச் சட்டத்தில் கையெழுத்திட்டார். பல்லாயிரக்கணக்கான கறுப்பினத்தவர்கள் முதல் முறையாக வாக்களிக்கப் பதிவு செய்துகொண்டனர்.

1966ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில், போராட்டத்தில் கொல்லப்பட்ட ஜிம்மி லீ ஜாக்சனின் தாத்தா, தன்னுடைய 84வது வயதில் வாழ்வில் முதல் முறையாக வாக்களித்தார்.

செல்மா நகரின் உள்ளாட்சித் தேர்தல்களில் ஷெரிப் ஜிம் கிளார்க் தோற்கடிக்கப்பட்டார். அமெரிக்கத் தேர்தல்களின் பல அடிப்படைகள் முழுவதுமாக மாறியது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *