Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #39 – கருஞ்சிறுத்தையின் உறுமல்

கறுப்பு அமெரிக்கா #39 – கருஞ்சிறுத்தையின் உறுமல்

கறுப்பு அமெரிக்கா

லிண்டன் ஜான்சன் அவருடைய பல அரசியல் தந்திரங்களுக்கு நடுவே, கறுப்பினத்தவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொடுத்தார் என்பதே வரலாற்று உண்மை. ஆபிரகாம் லிங்கனிற்கு அடுத்து, கறுப்பினத்தவருக்கு அதிகமாக உதவிய சட்டங்களை இயற்றியும், அவற்றை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தவரும் அவர்தான் என்பதை மறுக்க முடியாது. அவருக்கே உரித்தான அடக்கத்துடன் தன்னை லிங்கனைவிடவும் பெரிய லிங்கன் என்று தனிப்பட்ட உரையாடலில் தெரிவித்திருப்பதையும் மறுக்க முடியாது.

அதேநேரத்தில், பொது உரிமைப் போராட்டங்களைத் தாண்டி, அமெரிக்காவை மிகவும் அதிகமாக வியட்நாமில் ஈடுபட வைத்தவர் என்பதைக் கொண்டே அவர் எப்போதும் மதிப்பிடப்படுகிறார். அவரது ‘வறுமையின் மீதான போர்’ என்ற திட்டம் அமெரிக்காவில் வறுமையை ஒழிப்பதற்கு முழுமூச்சாக அரசாங்க எந்திரத்தைத் திருப்பியது. ஆனாலும் அதன் முடிவுகள் எவருக்கும் திருப்தியானதாக இல்லை.

வறுமையின் மீதான போருக்கு மார்ட்டின் லூதர் கிங்கின் ஆதரவை ஜான்சன் கேட்டிருந்தார். அமெரிக்கப் பொது உரிமைப் போர் இயக்கங்கள் தங்களது ஆதரவை வழங்குவதற்கு மிகவும் தயக்கத்துடன் இருந்தன. அவரது வேண்டுகோள் தங்களது இயக்கங்களின் நோக்கத்தில் இருந்து வெளியே செல்வதைப்போல இருப்பதாகக் கருதினார்கள். சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அடிமட்டத்தில் இன்னமும் பல வேலைகள் தங்களுக்கு இருப்பதாகவும், அதற்காக உழைக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல், கறுப்பினத்தவர்களின் தலைவராக மார்ட்டின் லூதர் கிங்கை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, இயக்கங்களிடையே முன்னிருந்த ஒற்றுமையும் இப்போதில்லை. இவையெல்லாம் அடுத்த போராட்டத்தில் வெட்டவெளிச்சமாகின.

0

1966ஆம் வருடம் அமெரிக்காவின் தேர்தல் வருடம். பல இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும், மாநில அளவிலான தேர்தல்களும் நடைபெற்றன. கறுப்பினத்தவர்கள் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கு இருந்த தடைகள் எல்லாம் நீங்கியிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் தென் மாநிலங்களில் கறுப்பினத்தவர்களின் வாக்குகள் கட்டாயம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அனைவரும் நினைத்தனர். அதற்கு இன்னமும் அதிகமாகக் கறுப்பினத்தவர்களை வாக்களிக்கப் பதிவு செய்ய வைக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.

மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் இன்னமும் கறுப்பினத்தவர்கள் வாக்களிக்கப் பதிவு செய்வதில் சுணக்கம் இருந்ததால், அதை மாற்ற வேண்டும் என்று ஜேம்ஸ் மெரிடித் முடிவு செய்தார். மெரிடித் மிஸ்ஸிஸிப்பிப் பல்கலைக்கழகத்தின் முதல் கறுப்பின மாணவர். இந்த முறையும் தனியாகவே தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார்.

அவரது திட்டம், மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் வடஎல்லையில் இருக்கும் மெம்பிஸ் நகரில் தொடங்கி, மாநிலத் தலைநகரான ஜாக்சன் வரை நடைப்பயணம் மேற்கொள்வது. அதனூடே வழியில் இருக்கும் கறுப்பினத்தவர்களை வாக்களிக்கப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான்.

அப்படியே ஜூன் 5ஆம் தேதி, ஜேம்ஸ் மெரிடித் தனியாளாக நடக்க ஆரம்பித்தார். ஆனால் நடக்க ஆரம்பித்த இரண்டாவது நாளே, அவர் சாலையில் சுடப்பட்டார். அங்கிருந்து மெம்பிஸ் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மெரிடித் சுடப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், பொது உரிமைப் போராட்ட இயக்கங்கள் – SLCC, SNCC, CORE, மிஸ்ஸிஸிப்பிச் சுதந்திர ஜனநாயகக் கட்சி – முதலானோர் மீண்டும் ஒருமுறை இணைந்து, அடுத்த நடவடிக்கையைப் பேசினார்கள். மெரிடித் விழுந்த இடத்தில் இருந்து பயணத்தைத் தாங்கள் அனைவரும் தொடர வேண்டும் என்றும், வழியில் இருப்பவர்களை வாக்களிக்கப் பதிவு செய்யத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முன்பே விவரித்ததுபோல, SNCC – ஸ்னிக்கிற்கும், மார்ட்டின் லூதர் கிங்கின் SCLCக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாகவே இருந்தது. SNCC தலைவராக இருந்த ஜான் லெவிஸ், மிகவும் மிதவாதியாக இருக்கிறார் என்ற காரணத்தினால் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டோக்லி கார்மைக்கேல் (Stokley Carmichael) அந்த இடத்தில் இருந்தார். ஆரம்பத்தில் அகிம்சா முறையில் நம்பிக்கை கொண்டிருந்த கார்மைக்கேல், காலப்போக்கில் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். மால்கம் எக்ஸின் பேச்சினால் கவரப்பட்ட அவர், கறுப்பினத்தவர்கள் அரசியலிலும் பொருளாதாரத்திலும் தற்சார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், இனியும் வெள்ளையர்களிடம் எதையும் கேட்டுப் பயனில்லை என்றும், தாங்களாக எடுத்துக் கொள்வதே வழி என்றும் நம்ப ஆரம்பித்திருந்தார்.

மார்ட்டின் லூதர் கிங்கும், ஸ்டோக்லி கார்மைக்கேலும் இன்னமும் பலரும் நடக்க ஆரம்பித்தார்கள். வழியெங்கும் இருக்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் இருக்கும் கறுப்பினத்தவர்கள் வாக்களிக்கப் பதிவு செய்ய உதவிகள் செய்துகொண்டே பயணம் தொடர்ந்தது. பெரும்பாலும் எந்த வன்முறையும் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் கிரீன்வுட் நகரை அடைந்தபோது, அவர்கள் அனுமதி பெறாமல் நடைப்பயணம் செய்கிறார்கள் என்ற காரணம் காட்டி அவர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல் நடத்தியது.

தாக்குதலுக்குப் பின்னான கூட்டத்தில், தாங்கள் அகிம்சை முறையை எதிர்ப்பதாக ஸ்டோக்லி கார்மைக்கேல் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். மார்ட்டின் லூதர் கிங் அவருக்கு அருகிலேயே அனைவரும் அமைதி காப்பதை வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையில் இருந்த பிளவு அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தது. அன்றைய கூட்டத்தின் முழக்கம் SCLCயின் முழக்கமான ‘இப்போதே சுதந்திரம்!’ (Freedom now) என்பதைவிட ‘கறுப்பினத்தவர் அதிகாரம்!’ (Black power) என்பதாக இருந்தது.

அன்று ஸ்டோக்லி கார்மைக்கேலின் பேச்சு, கறுப்பினத்தவர்கள் தங்களது விதியைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதுவே கறுப்பினத் தேசியத்தின் மறுபிறப்பாக இருந்தது.

அன்றைய நிகழ்வைத்தவிர வேறெந்த வன்முறையும் இல்லாமல், கூட்டம் மிஸ்ஸிஸிப்பித் தலைநகரான ஜாக்சனை வந்தடைந்தது. பயணத்தின் இறுதிப் பகுதியில் மெரிடித்தும் வந்து சேர்ந்தார். 250 மைல்கள் நடந்திருந்த அவர்கள் வழியில் ஆயிரக்கணக்கான கறுப்பினத்தவர்களை முதல் முறையாக வாக்களிக்கப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் இந்த நடைப்பயணத்தின் முக்கியத்துவம், அதுவரை ஒன்றாக இருந்த இயக்கங்களின் பிரிவாகும். இந்த நடைப்பயணமே பொது உரிமைப் போராட்டங்களின் இறுதியானது. இதற்குப் பின்னான போராட்டங்கள் அனைத்தும் தனித்தனியே நிகழ்ந்தன. ஒருவிதத்தில் இது தவிர்க்க முடியாததாகும். வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட இயக்கங்கள், ஓர் இலக்கை நோக்கியே ஒன்றாக இணைந்திருந்தன. அந்த இலக்கை அடைந்தவுடன் அவர்களுக்கு இடையில் இருந்த வேறுபாடுகள் வெளியே தெரிந்து பிரிவு நேர்வது தவிர்க்க இயலாமல்போனது.

0

1966இல் மார்ட்டின் லூதர் கிங்கின் கவனம் வடமாநிலங்களை நோக்கி இருந்தது. அங்கிருந்த பெரு நகரங்களில் நிலவி வந்த பாகுபாடுகளை வெளியில் கொண்டு வந்து, தேசிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தார்.

அமெரிக்கப் பெருநகரங்களில் வெள்ளையர்களும், கறுப்பினத்தவர்களும் தனித்தனி பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இது சாதாரணமாகத் தோன்றினாலும், அப்படியாகத் தனியே அவர்களைப் பிரித்து வைப்பது வெளிப்படையான விதிகளோ, சட்டங்களோ இல்லாமல் இருந்தாலும் அனைவரும் சத்தமில்லாமல் ஒப்புக்கொண்ட ஒன்றாகவே இருந்தது.

உதாரணமாக, அங்கு மார்ட்டின் லூதர் கிங் ஒரு முறை பேசும்போது இந்த நிகழ்வைத் தெரிவித்தார். அங்கிருக்கும் ஒரு வீடுகளை வாங்கி, விற்கும் தரகரிடம் ஒரு கறுப்பரை SCLC இயக்கம் அனுப்பி வைக்கிறது. அவர் தனக்கு வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு பகுதியில் இருக்க வீடு வேண்டும் என்று தெரிவிக்கிறார். அவர்களும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அங்கு எதுவும் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

அதே இடத்திற்குச் சிறிது நேரத்திற்குப் பின்னர் SCLCயின் வெள்ளையினத் தன்னார்வலர்களில் ஒருவர் சென்று அதே இடத்தில் தனக்கு வீடு வேண்டுமென்று கேட்கிறார். அவருக்கு இருக்கிறது என்று பதில் வருகிறது. இது அங்கு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பல நிறுவனங்களிலும் நடக்கிறது. இந்த மாதிரியான சமூக ஒப்புதலோடு, வெளிப்படைத்தன்மையில்லாமல் நடக்கும் பாகுபாட்டை ஒழிக்கவேண்டும் என்பதுதான் ‘சிகாகோ இயக்கத்தின்’ நோக்கம்.

இதற்காக, தனது குடும்பத்துடன், கறுப்பினத்தவர்கள் வாழும் ஒரு பகுதியில் கிங் குடியேறுகிறார். தான் வசிக்கும் இடத்தை ‘சேரி’ என்று வர்ணிக்கிறார்.

‘ஒரு விதத்தில் நாங்கள் இதை ‘சேரி’ என்றே குறிப்பிடுகிறோம்… இங்கு ஒரு குழந்தையை எலிகள் தாக்கியிருக்கின்றன…சிசரோவில் (வெள்ளையர்கள் பகுதி) ஒரு கறுப்பு இளைஞன் வேலை தேடிச் சென்றபோது, வெள்ளைக் கும்பலால் கொல்லப்பட்டிருக்கிறான்…. இந்தத் தரமற்ற வீடுகளுக்கு என்னுடைய பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், அழகான, நவீன வீடுகளில் வசிக்கும் வெள்ளையர்களைவிட அதிகமான வாடகை கொடுக்கிறார்கள்…’

அடிப்படையில் கிங் ஒரு கிறிஸ்துவ மதபோதகர். ஏழைகளுக்கு மத்தியில் வசிப்பதையும், அவர்களுக்கு வேலை செய்வதையும் தன்னுடைய கடமையாகக் கருதிய பல்வேறு கிறிஸ்துவப் போதகர்களின் வழியிலேயே அவரும் அங்கே வசிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அவர் நினைத்ததுபோல அங்கே எதுவும் எளிமையாக இல்லை. சிகாகோ நகரத் தந்தையான ரிச்சர்ட் டேலி, ஜனநாயகக் கட்சியின் முக்கியமான நபர். கிங் எந்தக் குற்றம் சாட்டினாலும், அது உடனடியாக நிவர்த்திச் செய்யப்பட்டது. அவர் போராட்டத்தைத் தொடங்க எந்தக் காரணமும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

கறுப்பினத்தவரை ஏழைகளாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டே வீடுகளுக்கு அதிக வாடகையும், அவர்கள் வேலைகளுக்குக் குறைவான ஊதியமும் கொடுக்கப்படுகிறது என்பது அவரது வாதம். நகரச் சேவைகளும் – சுகாதாரம், தண்ணீர், மின்சாரம்- என எதுவும் கறுப்பினத்தவர்கள் பகுதியில் சரியாக வருவதில்லை. எனவே நகரில் இருக்கும் வெள்ளைப் பகுதிகளுக்கு மட்டும் சேவை செய்யும் நில/வீட்டு நிறுவனங்களின் முன் போராட்டத்தை அறிவித்தார்.

பாபி சீல் மற்றும் ஹுயி நியூட்டன்
பாபி சீல் மற்றும் ஹுயி நியூட்டன்

சிகாகோவின் கேஜ் பார்க் என்ற வெள்ளையர்கள் மட்டுமே நிறைந்த பகுதியில் போராட்டம் தொடங்கியது. ஜூலை 29, 1966ஆம் வருடம் ஆரம்பித்த போராட்டத்தில், கறுப்பினத்தவர்களும், அவர்களுக்கு ஆதரவான வெள்ளையர்களும் அமைதியாக அந்தப் பகுதியின் வழியே நடந்து சென்று, அங்கிருக்கும் நில/வீட்டு நிறுவனங்களின் அருகே குழுமுவது என்பது திட்டம்.

ஆனால் அவர்கள் அந்தப் பகுதியை அடைந்தபோது, அங்கே பெரும் வெள்ளை கும்பல் கூடியிருந்தது. காரில் இருந்து கிங் இறங்கியவுடன் அவர் மீது ஒரு செங்கல் வீசப்பட்டது. அடிபட்டு அவர் கீழே விழுந்தார். போராட்டக்காரர்கள் எந்த வன்முறையும் இல்லாமல், தங்களது பேரணியை நடத்தினார்கள். ஆனால் வேறொரு இடத்தில் நடைபெற்ற பேரணியில் இரண்டு பக்கங்களும் கற்களை வீசிக் கொண்டதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

நகர அதிகாரிகள் போராட்டத்தை நிறுத்த முயன்றார்கள். ஆனாலும் ஒரு வாரத்திற்கும் மேலாக, நகரின் பல ‘வெள்ளையர்கள் மட்டும்’ பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறை பொதுவாக இல்லை என்றாலும், சில இடங்களில் இரண்டு பக்கங்களும் வன்முறையில் ஈடுபட்டன. அடுத்துத் தாங்கள் சிசரோ என்னும் வெள்ளையர் பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக, SCLC தலைவரான ஜெஸ்ஸி ஜாக்சன் அறிவித்தார்.

ஆனால் தொடர்ந்து நிகழும் வன்முறைக்கு நடுவில், போராட்டத்தைத் தொடர்வது குறித்த உற்சாகம் இயக்கத்திற்குள் குறைந்து விட்டது. கிங்கும் தான் அலபாமாவிலும், மிஸ்ஸிஸிப்பியிலும்கூட இந்த அளவிற்கு வெள்ளை நிறவெறியைப் பார்த்ததில்லை என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். எனவே தற்காலிகமாகப் போராட்டம் அடுத்த நடவடிக்கையை எதிர்நோக்கி நிறுத்தி வைக்கப்பட்டது.

சிகாகோ நகரத் தந்தை ரிச்சர்ட் டேலி, பேச்சுவார்த்தைக்கு இயக்கத் தலைவர்களை அழைத்தார். நகர நிறுவனங்களில் கறுப்பினத்தவர்களுக்கு வேலையில் சமஉரிமை, வீடுகள் ஒதுக்குவதில் இருக்கும் பாகுபாடுகளைக் களைவது, வீட்டு/நில உரிமை நிறுவனங்களில் இருக்கும் பாகுபாடுகளைக் களைவது எனப் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 17 முதல் ஒரு வாரம் தொடர்ந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பத்துக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவற்றை அமுல்படுத்த வேண்டிய வழிகளை விவரித்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. போராட்டம் முடிவிற்கு வந்தது. ஆனால் போராட்டம் தோல்வியடையும் நிலையில், கிங் அங்கிருந்து வெளியேறும் வழியை அந்த ஒப்பந்தம் கொடுத்தது என்றும், கோரிக்கைகளை நகரம் எப்படியும் நிறைவேற்றப் போவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்படியே நடக்கவும் செய்தது. சிகாகோ வீட்டு வசதி வாரியத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, சில வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரே, நகர நிறுவனங்கள் சிறிது, சிறிதாகத் தனித்தனியே வீடுகளும், பகுதிகளும் நிர்மாணிப்பதை நிறுத்த ஆரம்பித்தன.

0

அதே ஆண்டின் இறுதியில் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரில், ஓக்லாண்ட் பகுதியில் பாபி சீல் மற்றும் ஹுயி நியூட்டன் என இருவர் ‘அமெரிக்கக் கருஞ்சிறுத்தைகள் கட்சி’யை ஆரம்பித்தார்கள். கறுப்பினத்தவருக்கு எதிராகச் சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலவிய காவல்துறையின் அராஜகத்தை எதிர்த்தே இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

காவல்துறையினால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த கறுப்பினத்தவர்கள் எண்ணிக்கை நகரில் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு முறை ஒருவர் கொல்லப்படும்போதும், கறுப்பினத்தவர்கள் பகுதியில் கலவரமோ, சாலையிலே போராட்டமோ நடைபெறும். ஆனால் இதற்கு எந்தத் தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே ஹுயி நியூட்டன், கறுப்பின இளைஞர்களுக்குச் சமூக அக்கறையை ஏற்படுத்தி, அவர்களை அமெரிக்கச் சட்டங்களையும் தெரிந்தவர்களாக ஆக்குவதன் மூலம் மட்டுமல்ல, அவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுப்பதன் மூலமே இதை நிறுத்த முடியும் என்பதே அவரது சித்தாந்தம். கருஞ்சிறுத்தைகள் ஒரு கையில் சட்டப்புத்தகமும், மறு கையில் தானியங்கித் துப்பாக்கியும் ஏந்தினார்கள்.

ரோந்து செய்யும் காவல்துறையினரைப் பின்தொடர்ந்து அவர்கள் நிறுத்தும் கறுப்பினத்தவர்களுக்குச் சட்ட உதவியும், காவல்துறையின் நடவடிக்கையைக் கண்காணிப்பதும் அவர்களது வேலையாக இருந்தது. அது மட்டுமல்லாமல், அவர்கள் சமூகத்தில் பல சேவைகளை முன்னெடுத்தார்கள். கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்த இடங்களில் குழந்தைகளுக்கு இலவசமாகக் காலை உணவு வழங்கினார்கள். இலவச மருத்துவ முகாம்கள், சிறையில் இருக்கும் கறுப்பினத்தவருக்கு உதவி, அவசர உதவி என்று பல விதங்களில் அவர்கள் சமூகச் சேவைகளைச் செய்து, அதன் மூலமாகத் தங்களது உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.

அமெரிக்க அரசு அவர்களைத் தேசிய ஒற்றுமைக்கு எதிரானவர்களாகக் கருதி அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது. ஆனாலும், நீதிமன்றத்திலும் சாலைகளிலும் அவற்றை எதிர்த்து கருஞ்சிறுத்தைகள் போராடினார்கள். தலைவர்களுக்குச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. தங்களுக்கு வன்முறை அந்நியமில்லை என்று அவர்கள் எல்லா விதங்களிலும் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில், அவர்கள் ஸ்னிக்கின் ஸ்டோக்லி கார்மைக்கேலுடன் கைகோர்த்துக் கொண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

0

1966ஆம் வருடம் உள்ளாட்சித் தேர்தலில் அலபாமாவில் ஒரு பரிசோதனையை நடத்த ஸ்டோக்லி கார்மைக்கேலும், SNCC – ஸ்னிக்கும் முடிவு செய்திருந்தன. அங்கிருந்த லௌண்ட்ஸ் கவுண்டி (மாவட்டம்)யில் 80 சதவிகிதக் கறுப்பினத்தவர்கள் இருந்தார்கள். ஆனால் அதுவரை அங்கே எந்த அரசாங்க பதவியிலும் கறுப்பினத்தவர்கள் இல்லை. அதை இந்த முறை மாற்றுவது என்று முடிவு செய்தார்கள்.

அந்தக் கவுண்டியில் ஒரு கட்சி மட்டுமே இருந்தது. அதுவும் வெள்ளையர்கள் கையில் இருந்த ஜனநாயகக் கட்சி. எனவே தாங்கள் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. லௌண்ட்ஸ் கவுண்டி சுதந்திரக் கட்சி உருவானது.

ஆனால் இவை எல்லாம் எளிதான விஷயங்கள். இப்போது அங்கிருக்கும் கறுப்பினத்தவர்களை வாக்களிக்கப் பதிவு செய்ய வைக்க வேண்டும். அனைவரும் முதல் முறை வாக்காளர்கள் என்பதால் அவர்களுக்குத் தேர்தல் வழிமுறைகளைக் கற்றுத் தரவேண்டும். முக்கியமாக, காலகாலமாக அவர்களுக்கு வெள்ளையர்களிடம் இருக்கும் பயத்தை மாற்றி, அவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வரவேண்டும். இவற்றிற்கு ஸ்னிக் தன்னுடைய தன்னார்வலர்கள் பலரை அங்கே அனுப்பியது.

அவர்கள் கறுப்பினத்தவர்களைப் பதிவு செய்ய வைப்பதில் ஆரம்பித்தார்கள். ஆனால் இது எளிதாக இல்லை. பதிவு செய்யும் கறுப்பினத்தவர்களின் வெள்ளை முதலாளிகள், வேலையில் இருந்து நீக்கினார்கள். பலரும் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வேலை செய்பவர்கள் என்பதால், தங்களது வேலையை மட்டுமல்லாது, தங்கியிருந்த வீடுகளையும் சேர்த்து இழந்தார்கள். இவர்களைத் தங்க வைக்கத் தற்காலிக முகாம்களைக் கறுப்பினத்தவரின் நிலத்தில் அமைக்க வேண்டி இருந்தது. அங்கங்கே கு க்ளக்ஸ் கிளானின் வன்முறையையும் சமாளிக்க வேண்டி இருந்தது.

ஆனால் ஸ்னிக்கின் வழிமுறை இப்போது அகிம்சை இல்லை. அவர்கள் தங்களைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்கத் தயாராக இருந்தார்கள். அதனாலோ அல்லது மாநிலம் எங்கும் இருந்த ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் காரணமாகவோ பெரிதாக எந்த வன்முறையும் நிகழவில்லை.

மே மாதம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நடந்த உட்கட்சித் தேர்தலில், மாவட்டத்தின் அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்தல் நடந்த தேவாலயத்தின் வெளியே ஸ்னிக் தன்னார்வலர்கள் துப்பாக்கிகளுடன் காவலிருந்தனர்.

நவம்பர் மாதப் பொதுத்தேர்தலுக்குப் பிரசாரம் ஆரம்பித்தது. முதலில் இருந்து வெள்ளையர்களின் வன்முறை அதிகமாக இருந்தது. வெள்ளையர்களின் கடைகளில், நிலங்களில் வேலை செய்பவர்கள் எவரும், வெறுமனே வாக்களிக்கப் பதிவு செய்ததற்காகத் தங்களது வேலையை இழக்கும் நிலை இருந்தது.

பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சின்னம் கழுதையாகும். குடியரசுக் கட்சியின் சின்னம் யானையாகும். அதுபோலவே தங்களுக்கு ஒரு தனித்துவமான சின்னம் வேண்டுமென்று கருஞ்சிறுத்தையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

‘தனக்கு ஆபத்து எனும்போது கருஞ்சிறுத்தை பின்னே சென்றுகொண்டிருக்கும். ஆனால் இதற்கு மேல் பின் செல்லமுடியாது என்ற நிலை வரும்போது, அது உயிருக்குத் துணிந்து சண்டையிடும். நாங்களும் அதுபோலவே பின்னே தள்ளப்பட்டிருந்தோம் என்று நினைத்தோம். ஆனால் இப்போது கறுப்பினத்தவர்கள் வெளியே வந்து, தங்களது அதிகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று தங்களது சின்னத்தின் காரணத்தைத் தெரிவித்தார்கள்.

நவம்பர் மாதத் தேர்தல் நடந்தது. கருஞ்சிறுத்தைக் கட்சி சிறிய வித்தியாசத்தில் அனைத்துப் பதவிகளின் தேர்தலிலும் தோற்றது. கறுப்பினத்தவர்கள் சிலரும் வெள்ளையர்களுக்குப் பயத்தினாலோ, பழக்கத்தினாலோ தங்களது வாக்குகளைச் செலுத்தியதே காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கறுப்பினத்தவரின் வாக்குகளின் சக்தி அனைவராலும் உணரப்பட்டது. 1970இல் நடைபெற்ற அடுத்த தேர்தலில், கருஞ்சிறுத்தைக் கட்சியுடன் ஒன்றிணைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் சார்பாக லௌண்ட்ஸ் கவுண்டியின் முதல் கறுப்பின ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் 1966ஆம் வருடத் தேர்தல் எல்லா இடங்களிலும் கறுப்பினத்தவர்களுக்குத் தோல்வியைத் தரவில்லை. ஓஹியோ மாநில கிளீவ்லாண்ட் நகரத்தின் முதல் கறுப்பின மேயராகக் கார்ல் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அந்த நகரில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது மாறிக் கொண்டிருக்கும் நாட்டின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

(தொடரும்)

படம்: ஜேம்ஸ் மெரிடித்தின் ‘மெம்பிஸ் – ஜாக்சன்’ நடைப்பயணம்

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *