Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

1967ஆம் வருடம். அமெரிக்காவின் முக்கியப் பிரச்சினை பொது உரிமை அல்ல. வியட்நாம். லிண்டன் ஜான்சன் வியட்நாமில் அமெரிக்காவின் பங்கை அதிகரித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்கச் சட்டப்படி, வெளிநாடுகளில் நடக்கும் போருக்கு அமெரிக்கக் காங்கிரஸ் (பிரதிநிதித்துவச் சபை) ஒப்புதல் அளிக்க வேண்டும். போருக்கு வீரர்களை அனுப்பும்போதும், வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்போதும் அமெரிக்கக் காங்கிரஸ் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால் லிண்டன் ஜான்சன், வியட்நாம் போருக்கு அனுப்பப்படும் வீரர்கள் எண்ணிக்கையை எந்த ஒப்புதலும் இன்றி அதிகரித்துக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்ததுபோலத் தெற்கு வியட்நாம் அரசிற்கு மக்கள் ஆதரவும் இல்லை. அதை ஒப்புக்கொள்ளவும் அமெரிக்காவிற்கு விருப்பமில்லை. எனவே போர் நீண்டு கொண்டிருந்தது.

1967இல் வியட்நாம் போர் முதன்மைப் பேசுபொருளாக ஆகிக்கொண்டிருந்தது. எப்போது முடிவிற்கு வரும் என்று தெரியாமல் வீரர்களைத் தொடர்ந்து அனுப்புவதை அமெரிக்க மக்கள் ரசிக்கவில்லை. அதனுடன் கட்டாய ராணுவப்பணிக்கு இளம் அமெரிக்கர்கள் எடுக்கப்பட்டு, வியட்நாமிற்கு அனுப்பப்படுவது அமெரிக்கக் கல்லூரி மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் கம்யூனிஸ்ட் பூதத்தை எல்லா இடங்களிலும் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்க அரசிற்கு வியட்நாமில் இருந்து வெளியே வர விருப்பமில்லாமல் இருந்தது.

0

1967ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மார்ட்டின் லூதர் கிங் வியட்நாம் போருக்குத் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

நியூ யார்க் நகரின் ரிவேர்சைடு தேவாலயத்தில் அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன், பத்திரிகையாளர்களுக்கு முன், தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

‘இந்தப் பிரமாண்டமான தேவாலயத்திற்கு இன்றிரவு நான் வந்திருப்பதன் காரணம் என்னுடைய மனசாட்சிக்கு வேறு வழி தெரியவில்லை… ஒரு கட்டத்தில் அமைதியாக இருப்பது துரோகம் இழைப்பதாகிவிடும்… எனவே நாம் பேசத்தான் வேண்டும். இந்த இடத்திற்கு நான் வந்திருப்பது என்னுடைய பிரியமான தேசத்தை நோக்கி என்னுடைய வேண்டுகோளை வைப்பதற்குத்தான். இந்தப் பேச்சு ஹனோய்யை நோக்கியோ, சீனாவை நோக்கியோ, ரஷ்யாவை நோக்கியோ அல்ல, என்னுடைய சகோதர அமெரிக்கர்களை நோக்கியே இருக்கும்… இரண்டு கண்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்து வரும் இந்தப் போரை நிறுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது…’ என்று ஆரம்பித்த அவர், போரின் வரலாற்றை விவரித்து, கிறிஸ்துவப் போதகராகத் தன்னுடைய கடமையாக இதைக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

கிங்கின் பேச்சு லிண்டன் ஜான்சனிற்கு உவப்பானதாக இல்லை. கிங் ஆதரிக்கவில்லை என்றாலும், எதிர்க்கமாட்டார் என்பதே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. பொது உரிமைப் போராட்டங்களின்போது இருவருக்கும் இடையில் இருந்த சுமுகமான உறவு மெதுவாக முறிந்துகொண்டிருந்தது.

அதே நேரத்தில், பொது உரிமைப் போராட்டங்கள் இப்போது முடிவிற்கு வந்திருந்தன. இன்னமும் சில நகரங்களில் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்தாலும், கறுப்பினத்தவர்கள் வேண்டிய சட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு இருந்தன. அந்தச் சட்டங்களை முன்வைத்த நீதிமன்றப் போராட்டங்களே இனி இருந்தன.

அதை விடவும் முக்கியமாக, நாட்டின் மனநிலை மாறிக்கொண்டிருந்தது. மாணவர்களும் இளைஞர்களும், வடக்கிலும் தெற்கிலும் மாறிக் கொண்டிருந்தார்கள். நிறவெறியும், இனவெறியும் நவீன யுகத்தில் எந்த அர்த்தமும் கொள்ளவில்லை என்ற எண்ணம் வந்திருந்தது. அனைத்தும் மாறி விடவில்லை என்றாலும், பொதுவாக நாட்டின் மனநிலை இத்தகைய பாகுபாடுகளைக் களைந்து முன்னோக்கிச் செல்வதாக இருந்தது.

0

1967ஆம் வருடக் கோடை. சான் பிரான்சிஸ்கோ நகரில் ‘அன்பின் கோடை’ நிகழ்வுகளை அங்கிருந்து ஹிப்பிக் குழுவினர் அறிவித்திருந்தனர். வியட்நாம் போருக்கு எதிரான இளைஞர்களின் கூட்டமாகவே இது இருந்தது. நகரத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், அமைதியை நோக்கிய பல கூட்டங்களும், போருக்கு எதிரான முழக்கங்களும் நிரம்பி இருந்தன.

ஆனால் அந்தக் கோடையில் அமெரிக்காவின் மற்ற நகரங்களின் நிலை வேறாக இருந்தது. நாட்டின் மத்தியப் பகுதியில், அந்த ஜூலை மாத இரவில் சில காவல்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக ஓரிடத்தில் மது போதைப் பொருட்களுடன் கொண்டாட்டம் நிகழ்வதாகத் தெரிந்து, அங்கு இருந்த 82 பேரையும் கைது செய்தனர். அதே இடத்தில் ஏற்கெனவே பலமுறை அவர்கள் கைதுகளை நிகழ்த்தியிருந்தாலும், இந்தமுறை அவை வேறொரு எதிர்வினையைக் கொண்டு வந்தன.

கறுப்பினத்தவர்கள் மிகுந்திருந்த அந்தப் பகுதி மக்கள் ஏற்கெனவே காவல்துறை தங்களை அராஜகமாக நடத்துவதாகவும், தங்கள் பகுதிகளில் அரசாங்க சேவைகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பல வருடங்களாகக் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அத்துடன் அந்த வருடத்திய வேலையில்லாத் திண்டாட்டமும் சேர்ந்துகொள்ள, அன்றிரவு நகரில் கலவரமும் கொள்ளையடித்தலும் ஆரம்பித்தது.

அடுத்த ஐந்து நாட்கள் தொடர்ந்த அந்தக் கலவரத்தைத் தடுக்க அமெரிக்க ராணுவம் வர வேண்டியிருந்தது. 43 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். 1000கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தார்கள். 7500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அந்தக் கோடையின் நான்கு மாதங்களில் அமெரிக்க நகரங்கள் எங்கும் நடைபெற்ற இனக்கலவரங்களில் ஒன்று மட்டுமே இது. ஒரு கணக்கின்படி அந்த வருடம், அமெரிக்காவின் 150 நகரங்களில் கலவரம் நிகழ்ந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் இறந்து போயிருந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். கைது செய்யப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலோர் கறுப்பினத்தவர் என்பது கலவரங்களை மீண்டும் மீண்டும் ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்தது.

கலவரங்களின் காரணத்தை ஆராய ஜான்சனின் அரசு ஒரு குழுவை அமைத்தது. அமெரிக்க இரண்டு சமூகங்களாக இருப்பதாகவும், வெள்ளை, கறுப்பு என இரண்டு சமூகங்களாகப் பிரிந்திருப்பதாகவும், இரண்டிலும் பொருளாதார, அரசியல் அதிகார அளவில் பெரும் வேறுபாடு இருப்பதாகவும் தெரிவித்தது அந்தக் குழு. ஜான்சன் அரசு குழுவின் அறிக்கையை அமைதியாக மறைத்துவிட்டது.

0

1967ஆம் வருடக் கோடைக் காலத்தில் நடைபெற்ற கலவரங்கள், கிங்கின் சிந்தனையைத் தூண்டியிருந்தது. நாடு முழுவதும் நிலவும் வறுமையையும், பொருளாதார நிலையையும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கான புதிய போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் யோசித்துக் கொண்டிருந்தார்.

1968ஆம் வருடம் குடியரசுத்தலைவர் தேர்தலும் நடக்கவிருந்தது. எனவே போராட்டத்தின் மூலம் தேர்தல் வேட்பாளர்களின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவரது திட்டம். அந்தத் தேர்தலில் ராபர்ட் கென்னடி போட்டியிடப் போவதாகவும் வதந்தி பரவியிருந்தது.

மேலும், கறுப்பினத்தவர்களிடையே பொதுவாக அகிம்சை வழிமுறைக்கு எதிராகப் பரவியிருந்த மனநிலையும் அவருக்குக் கவலையைக் கொடுத்திருந்தது. ஆனால் SCLCயில் அடுத்த நிலை தலைவர்கள், இளைஞர்கள் தோன்றியிருந்தார்கள். ஜெஸ்ஸி ஜாக்சன்(Jessie Jackson) அவர்களில் ஒருவர். மதப் போதகரான அவரும் மார்டினின் நம்பிக்கைக்கு உரியவராக மாறியிருந்தார்.

1964ஆம் வருடத் தேர்தலில் ஜான்சன் ‘வறுமையின் மீதான போரை’ தன்னுடைய முக்கியச் செய்தியாக அறிவித்திருந்தார். ஆனால் அவரின் கவனமும், நாட்டின் கவனமும் வியட்நாம் நோக்கித் திரும்பியிருந்தது. வறுமை பற்றிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருந்தன.

மரியோன் ரைட் ஒரு வழக்கறிஞர். மேலும் கிங்கின் நண்பர். தென் மாநிலங்களில் நிலவும் வறுமையை அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர் முயன்று கொண்டிருந்தார். அதற்காக அமெரிக்கச் செனட்டர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது செனட்டராக ராபர்ட் கென்னடி இருந்தார். மரியோனுடன் அவர் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் எதிர்கொண்ட வறுமையும், மக்களும் அவரது மனநிலையை மாற்றியது. அதன் முடிவில் அவர் மரியோனிடம் ‘நாட்டின் கவனம் வியட்நாம் போரை நோக்கி இருக்கிறது. கிங்கிடம் சொல்லி ஏழைகளை வாஷிங்டன் நகருக்கு அழைத்து வந்து, பசியையும், ஏழ்மையையும் நாட்டின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்த யோசனையைக் கேட்ட மார்ட்டின் லூதர் கிங், தனது அடுத்த போராட்டம் என்னவென்ற தெளிவிற்கு வந்துவிட்டார். மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் இருந்து கறுப்பு, வெள்ளை என வறுமையில் இருக்கும் அனைவரையும் சேர்த்துக்கொண்டு, வாஷிங்டன் நகரை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும், அங்குத் தங்களது வறுமைக்குச் சரியான திட்டம் தீட்டப்படும் வரை வாஷிங்டன் நகரை விட்டு வரப்போவதில்லை என்றும் திட்டமிடப்பட்டது.

கிங்கின் உதவியாளர்கள், SCLCயின் மற்ற தலைவர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டம் பற்றிய சந்தேகங்களை எழுப்பினார்கள். என்ன விதமான முடிவை எதிர்பார்த்துப் போராட்டம் செய்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் இருப்பதாக அவர்கள் தங்களது சந்தேகத்தைத் தெரிவித்தார்கள்.

ஆனால் கிங் முடிவெடுத்து விட்டார். இதன் மூலமாக மீண்டும் தங்களது இயக்கத்திற்குப் புத்துயிர் பாய்ச்ச முடியும் என்றும் அவர் நம்பினார்.

0

போராட்டத்திற்கான தயாரிப்புகள் 1967ஆம் வருட இறுதியில் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தன. 1968ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ராபர்ட் கென்னடி அறிவித்தார்.

ஆனால் கிங் எதிர்பார்த்ததுபோலப் போராட்டத் தயாரிப்புகள் எளிதாக இல்லை. கிங்கின் தலைமையில் நடைபெறுவதாக இருந்தாலும், போராட்டத்தில் கலந்துகொள்ளப் போதுமான மக்களைத் திரட்டுவது சிரமமாக இருந்தது. போராட்டத்திற்கான நிதி திரட்டுவதும் முன்போல இல்லாமல் சிரமமாக இருந்தது.

0

1968ஆம் வருடம் டென்னிசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரச் சுகாதாரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தார்கள். பிப்ரவரி 1ஆம் தேதி அன்று இரண்டு சுகாதாரத் தொழிலாளர்கள் குப்பை வண்டி ஒன்றில் நசுங்கி இறந்திருந்தார்கள். பெரும்பாலும் கறுப்பினத்தவர்கள் செய்து வந்த அந்த வேலையில், தங்களுக்குச் சரியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், நகரம் தங்களைச் சரியாக நடத்துவதுமில்லை என்பதும் அவர்களது முக்கியக் குறைகளாக இருந்தன.

மெம்பிஸ் நகரைச் சேர்ந்த போதகர் ஜேம்ஸ் லாசன் போராட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து சங்கம் ஒன்றமைத்து, தங்கள் குறைகளை நகரச் சபையிடம் தெரிவிக்க வேண்டும் என்று வழிநடத்திக் கொண்டிருந்தார். நகரில் இருந்த 700 தொழிலாளர்கள் அப்படியே சங்கம் அமைத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள்.

வாரங்கள் கடந்தன. நகரச் சபை தொழிலாளர்களின் குறைகளைக் கேட்கத் தயாராக இருந்தாலும், நகர மேயர் தனக்கே அந்த அதிகாரம் இருப்பதாகக்கூறி, சங்கத்துடன் பேசுவதற்கு மறுத்து வந்தார். நித்தமும் தொழிலாளர்கள் பேரணி நடத்திக் கொண்டிருந்தார்கள்.

லாசன் தங்களது போராட்டத்திற்கு ஆதரவாகக் கிங் மெம்பிஸ் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். லாசன் கிங்கின் நீண்ட நாளைய ஆதரவாளர் மற்றும் அகிம்சையைப் போராட்ட முறையாக முன்னெடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் என்பதால், கிங் மார்ச் மாத நடுவில் மெம்பிஸ் நகருக்கு வந்து அங்கு 25000 ஆதரவாளர்களிடம் நேரடியாகப் பேசினார். உழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய அவர், தாங்கள் அனைவரும் உழைப்பாளிகளுடன் நிற்பதாக அறிவித்தார்.

கிங்கின் வருகை தேசிய அளவில் கவனத்தைக் கொண்டு வந்தது. நகர மேயருக்கு அழுத்தத்தையும் கொடுத்தது. மார்ச் 28ஆம் தேதி, கிங்கின் தலைமையில் இன்னுமொரு பேரணி நகரச் சபையை நோக்கி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மார்ச் 28ஆம் தேதி, நகரெங்கும் 22000க்கும் அதிகமான கறுப்பின மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவில்லை என்று நகர அதிகாரிகள் தெரிவித்தார்கள். பிரமாண்டமாக நடைபெற்ற அந்தப் பேரணியின் ஆரம்பம் முதலே பல சிக்கல்கள் தோன்றின. அவர்கள் அனைவரும் ‘நானொரு மனிதன்’ என்ற பதாகைகளைத் தாங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பேரணியில் கறுப்புத் தேசியம் பேசும் பல மாணவர்களும் இருந்தார்கள். பாதி வழியில் பேரணி குழப்பத்தில் ஆழ்ந்தது. பேரணியில் இருந்தவர்கள் அருகில் இருந்த கடைகளை அடித்து உடைக்க ஆரம்பித்தார்கள். காவல்துறை பதிலுக்குத் தாக்க ஆரம்பித்தது. ஒருவர் மரணமடைந்த அந்தப் பேரணிதான், கிங் நடத்திய பேரணிகளில் வன்முறையில் முடிந்த முதலாவதாகும்.

அன்று நடந்த வன்முறை கிங்கின் மனதை மிகவும் பாதித்தது. மெம்பிசில் இருந்து கிங் வெளியேறினார். கறுப்புத் தேசியம் பேசுபவர்கள் வன்முறையைக் கையிலெடுப்பது பற்றி அவர் விமர்சனம் செய்தார். மெம்பிஸ் நகருக்குத் திரும்பப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.

ஆனால் பொருளாதார நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். அதற்குத் தன்னுடைய தலைமையின் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். எனவே மீண்டும் அங்கு வர அழைப்பு வந்த போது, அவர் மறுக்கவில்லை. மீண்டும் ஏப்ரல் 3ஆம் தேதி மெம்பிஸ் நகரை வந்தடைந்தார்.

மறுநாள் நிகழவிருந்த பேரணியை நீதிமன்றம் தடை செய்திருந்தது. மழை நிற்காமல் பெய்துகொண்டிருந்த அந்த இரவில் அவரது பெரும் பிரசங்கம் ஒன்றை, கூடியிருந்த சுகாதாரத் தொழிலாளர்களின் மத்தியில் நிகழ்த்தினார். மிகவும் களைப்புடன் இருந்த அவர், உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருந்த போராட்டங்களையும், சக மக்களின் சுதந்திர வேட்கையையும் பற்றிப் பேசுவதுடன் தனது பேச்சை ஆரம்பித்தார்.

விவிலியத்தின் வார்த்தைகளைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அந்தப் பேச்சில் அவர் தன்னுடைய ஜெருசலேம் பயணத்தையும் நினைவு கூர்ந்தார். அது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன் தன்னைக் கொலை செய்ய நடத்தப்பட்ட முயற்சியையும் நினைவு கூர்ந்தார்.

‘இப்போது நான் மெம்பிசில் இருக்கிறேன். எனக்குப் பல கொலை மிரட்டல்கள் இருப்பதாகச் சிலர் தெரிவிக்கிறார்கள். நம்முடைய வெள்ளைச் சகோதரர்களிடம் இருந்து எனக்கு என்ன நடந்து விடும்?

என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இன்னமும் சில சிரமமான நாட்கள் நமக்கிருக்கின்றன. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால், நான் மலை உச்சிக்குச் சென்றிருக்கிறேன்.

நான் கவலைப்படவில்லை.

எல்லோரையும்போல, நானும் நீண்ட வாழ்வை வாழவே விரும்புகிறேன். ஆனால் நீண்ட ஆயுளை விரும்ப இன்னமும் நேரம் இருக்கிறது. அதைப் பற்றி இப்போது எனக்குக் கவலையில்லை. கடவுளின் சித்தத்தை நடத்த மட்டுமே விரும்புகிறேன். அவர் என்னை மலை உச்சிக்குச் செல்ல அனுமதித்தார். அங்கே நான் அனைத்தையும் பார்த்தேன். நமக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தைப் பார்த்துவிட்டேன். அங்கே உங்களுடன் வர நான் இருக்க மாட்டேன். ஆனால் இன்றிரவு உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். ஒன்றான மக்களாக நாம், நமக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தைச் சென்றடைவோம்.

எனவே இன்றிரவு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.

எந்த மனிதனைக் கண்டும் எனக்குப் பயமில்லை!

கர்த்தரின் வருகையை என்னுடைய கண்கள் கண்டுவிட்டன!’

0

மறுநாள் ஏப்ரல் 4, 1968. அன்றைய தினம் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து வழக்கு நடந்தது. கிங் அதனால் தன்னுடைய தங்கும் விடுதியில், SCLC தலைவர்களுடன் ஆலோசனையில் இருந்தார். அன்று மாலை நீதிமன்றம் தடையை நீக்கியிருந்தது. மார்ட்டின் லூதர் கிங் அதனால் மகிழ்ச்சியாக இருந்தார்.

அன்று நீதிமன்றத்தில் சாட்சி சொல்லியிருந்த SCLC தலைவரான ஆண்ட்ரு யங், கிங்கைச் சந்தித்து அன்று நடந்தவற்றை விவரித்தார். அனைவரும் உணவருந்த வெளியே செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. மார்ட்டின் தன்னுடைய உடையை மாற்றிவிட்டு, இரண்டாம் மாடியில் இருந்த தனது அறையின் பால்கனிக்குச் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த மற்ற தலைவர்களுடன் தன்னுடைய உடையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வெடிச் சத்தம் கேட்டது. மார்ட்டின் லூதர் கிங் கீழே சரிந்தார். அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்திருந்தது. ரத்தம் ஆறாக வெளிவந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

0

அவரது கொலைக்காக ஜேம்ஸ் ஏர்ல் கிரே என்னும் வெள்ளையன் கைது செய்யப்பட்டு, 99 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் கொலையை ஒப்புக்கொண்ட அவன், சிறிது நாட்களிலேயே அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டான். அதன் பின்னர் மார்ட்டின் லூதர் கிங்கை கொலை செய்ததாகப் பலர் மீதும் வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தன. இறுதி வரை கொலைக்கான காரணமும் தெளிவாக வெளிவரவே இல்லை.

0

மார்டினின் இறுதி சடங்கும், ஊர்வலமும் அவர் பிரசங்கியாக இருந்த எபனேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுஷ்டிப்பதாக லிண்டன் ஜான்சன் அறிவித்தார். ராபர்ட் கென்னடி இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்ட அன்று ராபர்ட் கென்னடி இண்டியானாபோலிஸ் நகரில் இருந்தார். ஜான் கென்னடியின் மரணத்திற்குப் பின்னர் அதைப் பற்றிப் பேசியிராத அவர், அன்று மார்ட்டின் லூதர் கிங்கைப் போலவே தன்னுடைய சகோதரரும் ஒரு வெள்ளையனால் கொல்லப்பட்டதை விவரித்தார்.

வெறுப்பிற்கு நிறபேதம் கிடையாது என்பதே இதன் செய்தி என்பதும், அன்பை மட்டுமே நமது வழியாகக் காணவேண்டும் என்பதே அந்த நேரத்துச் செய்தி என்றும் மிகுந்த அதிர்ச்சியுடன் அவர் பேசினார். ‘இந்த நேரத்தில் அமெரிக்காவில் பிரிவினை தேவையில்லை; வெறுப்பும் தேவையில்லை; வன்முறையோ, குற்றங்களோ தேவை இல்லை. அன்பும், அறிவும், ஒருத்தர் மீது ஒருத்தருக்கான கரிசனமும், இன்னமும் இந்த நாட்டில் கொடுமையை அனுபவிக்கும் வெள்ளை அல்லது கறுப்பினத்தவர்களுக்கு நீதியும் மட்டுமே தேவை’ என்றார்.

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில், அவர் படித்த கல்லூரியின் முதல்வர் உட்படப் பலரும் மார்ட்டினையும் அவரது போராட்டங்கள் நிறைந்த வாழ்வையும் நினைவு கூர்ந்தனர். அன்றைய நிகழ்வின்போது, தன்னுடைய மரணத்திற்குப் பின்னர், உலகம் தன்னை எப்படி நினைவு கூறவேண்டும் என்று கிங் பேசிய பதிவு ஒன்று அனைவருக்கும் போட்டுக் காட்டப்பட்டது.

‘மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்தார் என்பதை அந்த நாளில் யாரேனும் குறிப்பிடவே விரும்புகிறேன்.’

(தொடரும்)

படம்: கொல்லப்படுவதற்கு முந்தைய தினம், விடுதி பால்கனியில். இதே இடத்தில் மறுநாள் சுடப்பட்டார். அருகில் ஜெஸ்ஸி ஜாக்சன்.

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *