மார்ட்டின் லூதர் கிங்கின் மரணத்தோடு நமது வரலாறு முடிவிற்கு வருகிறது. வரலாற்றாய்வாளர்கள் பொது உரிமைப் போராட்ட இயக்கங்களின் காலத்தின் முடிவாக அவரது மரணத்தைக் கருதுகிறார்கள். அவரது மரணத்திற்குப் பின்னரும் போராட்டமும் இயக்கங்களும் தொடர்ந்தாலும், அவற்றின் வழிமுறையும், போராட்டங்களின் காத்திரமும் வேறாக மாறின. மேலும், அமெரிக்காவும் இந்தக் கட்டத்தில் பொருளாதாரத்திலும் அரசியலிலும், சமூகத்திலும் மாற்றமடைந்திருந்தது.
மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டு இரண்டு மாதங்களில் ராபர்ட் கென்னடியும் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கனவு கலைந்த நாட்களாகவே 1968ஆம் வருடம் கருதப்படுகிறது. அதற்கடுத்த 5 வருடங்களுக்கு அமெரிக்காவின் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வியட்நாம் போரை எதிர்த்த போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
பெண்ணியப் போராட்டங்களும் இதே காலகட்டத்தில் வேகமெடுத்திருந்தன. நாடு முழுவதும் சமூக மாற்றம் வேகமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. இளைஞர்களும் முற்போக்குவாதிகளும் இவற்றை வரவேற்று ஏற்றுக்கொண்டனர். பழமைவாதிகளும், மற்றவர்களும் மாற்றத்தைச் சந்தேகக் கண்களோடு பார்த்தனர். அமெரிக்காவின் சித்தாந்தங்கள் அதை இரண்டு உலகுகளாகப் பிரிக்க ஆரம்பித்திருந்தது.
1968ஆம் வருடத் தேர்தலில் ரிச்சர்ட் நிக்சன் குடியரசுத் தலைவரானார். எப்படி ரூஸ்வெல்ட்டும், கென்னடியும், ஜான்சனும் நிறவெறிக் கட்சியாக இருந்த ஜனநாயகக் கட்சியை இடதுசாரி அரசியலை நோக்கி நகர்த்தியிருந்தார்களோ, அதுபோலவே நிக்சனும், அவருக்குப் பின்வந்த ரீகனும் குடியரசுக்கட்சியைத் தீவிர வலதுசாரி கட்சியாக மாற்றினார்கள்.
நிக்சனின் ஆட்சிக்காலம் மிகுந்த கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. தொடர்ச்சியான போருக்கு எதிரான போராட்டங்கள், 1972இல் வந்த கருக்கலைப்பு உரிமை சம்பந்தமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடங்கி வந்த போராட்டங்கள், எல்லாவற்றையும்விட நிக்சனின் ஊழல் மிகுந்த அமைச்சரவை, தொடர்ச்சியாக வந்த ஊழல் குற்றச்சாட்டுகள், மோசமாகப் போய்க்கொண்டிருந்த வியட்நாம் போர் என அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிற்கு எந்த நல்ல சேதியும் இல்லை.
அதேநேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கப் பொருளாதாரத்தை அதன் வழியிலேயே நிறுத்தியது. 1970களை அமெரிக்கா இன்றும் அச்சத்துடனே பார்க்கிறது.
0
லிண்டன் ஜான்சன், பொது உரிமைகளை அனைத்து நிற, இனத்தவருக்கும் பொதுவானதாக்கத் தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளின் வேகம் 1970களில் குறையவே இல்லை. குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காகப் போராட்டங்கள் நடைபெற்றாலும், அமெரிக்கச் சமூகமும் மாறிக் கொண்டிருந்தது, இந்தச் சட்டங்கள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட உதவியாக இருந்தது.
1967ஆம் வருடம் அமெரிக்க உச்சநீதிமன்றம் கலப்பின மக்களுக்கு எதிராக இருந்த சட்டங்களை ரத்து செய்தது. 1968ஆம் வருடத்தின் பொது உரிமைச் சட்டம், கறுப்பினத்தவருக்கு உறுதிசெய்த அதே உரிமைகளை, அமெரிக்கச் செவ்விந்தியர்களுக்கும் உறுதிசெய்தது. விட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிச் சட்டம் போன்றவை அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன.
ஆனால் 70களின் முக்கியமான முன்னெடுப்பு இனவாரியான ஒதுக்கீடுகளை (Affirmative actions) நிச்சயம் செய்தது ஆகும். இவற்றில் சில மாநில, ஒன்றியச் சட்டங்களாக உள்ளன. சில வழிமுறைகளாகவும், தனியார் நிறுவனங்களுக்குத் தானாகவே முன்வந்து செயல்படுத்தும் வகையிலும் இருக்கிறது. இவை இந்தியாவில் இருக்கும் இடஒதுக்கீட்டை ஒத்தவை என்றாலும், அதில் இருந்து மிகவும் வேறுபட்டவையுமாகும்.
ஒன்றிய வேலைகளில் அல்லது ஒன்றியம் நிதி உதவி செய்யும் வேலைகளில், ஒரு குறிப்பிட்ட இலக்கை கொண்ட இன விகிதம் இருக்க வேண்டும் என்பது ஒன்று. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும், அவற்றை நிர்வகிக்கும் குழுக்களே தங்களது இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளலாம். இவை சட்டமில்லை என்றாலும், பொதுவாகக் கலப்பினக் குழுக்கள், கல்வி கற்கும் இடங்களில் மாணவர்களுக்கு இன்னமும் அதிகமான கற்றலை வழங்குகின்றன என்ற முடிவில் இவை அமுல்படுத்தப்படுகின்றன.
தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் இன/நிறப் பாகுபாட்டை வேலைவாய்ப்புகளில் காட்டுவதில்லை என்ற கொள்கையை வைத்திருக்கின்றன. பெரும்பாலான இந்த ‘ஒதுக்கீடுகள்’ சட்டத்தின்பால் அல்லாமல், தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவனவாகவே இருக்கின்றன. கல்வி நிறுவனங்களில் இருக்கும் இந்தக் கொள்கைகளுக்கு எதிராகப் பல வழக்குகள் அமெரிக்கா எங்கும் தொடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் நீதிமன்றங்கள் இனக்கலப்பையும், ஒதுக்கீட்டையும் உறுதி செய்திருக்கின்றன.
இத்தகைய சட்டங்கள், கொள்கைகள் அனைத்தும், எல்லாச் சிறுபான்மை இனத்தவரையும் உள்ளடக்கியே இருக்கின்றன என்பது, இவற்றின் பயன் கறுப்பினத்தவர்களுக்கு மட்டுமல்லாது, ஏனைய மங்கோலிய, ஆசிய, செவ்விந்திய, ஹிஸ்பானிக் மக்களுக்கும் சென்று சேர்வதை அறியலாம்.
இன்றைய அமெரிக்கா இன்னமும் அனைத்து வித மக்களையும் உள்ளடக்கிய சமூகமாக இருப்பதற்குக் கறுப்பினத்தவர்கள் முன்னெடுத்த போராட்டங்களே காரணம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
0
இன்றைய கறுப்பினத்தவர்கள் 60 வருடங்களுக்கு முன்னிருந்ததைவிட மிகவும் நன்றாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்லவேண்டிய பாதை இன்னமும் அதிகமாக இருக்கிறது. அமெரிக்கா செல்ல வேண்டிய பாதையும் இன்னமும் தூரமாகவே இருக்கிறது.
விடுதலை அடைந்த அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும்போலவே, கறுப்பினத்தவர்களின் முன்னேற்றமும் மிகுந்த சந்தேகத்துடனே அணுகப்பட்டன. பொதுப்புத்தியில் விதைக்கப்பட்டிருந்த பிம்பங்களை மாற்றுவது எளிதல்லவே. இன்றும், சிறுபான்மை இனத்தவர்களை ‘இன ஒதுக்கீட்டில்’ வந்தவர்கள் என்று பேசுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் இவையெல்லாம் சிறிய விஷயங்கள்.
இன்று சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான பாகுபாடுகள் என்பது வெளிப்படையாக நடப்பதல்ல. மறைமுகமாக நிறுவனங்களின் அறைகளிலும், தெருவில் நடந்து செல்லும் கறுப்பினச் சிறுவனை நிறுத்தும் காவல்துறையின் நடவடிக்கையிலும், கல்வியின் தரம் குறைந்து விட்டது என்ற இணையதளத்தின் பல குழுமங்களில் கூவப்படும் குரலிலும் இருக்கிறது.
இன்னமும் சிறுபான்மை இனத்தவருக்கான குடியிருப்புகள் வேறுபட்டதாகவே இருக்கின்றன. அவர்களைக் குற்றவாளிகளைப்போலப் பார்ப்பது என்பது நிற்கவில்லை. அவர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்குப் பல புதிய வழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்றைய அரசியல்வாதிகள் ‘dog whistle’ என்றழைக்கப்படும் சங்கேத வார்த்தைகளால் தங்களது வெள்ளை நிறவெறி ஆதரவாளர்களைத் திரட்டுகின்றனர். பல வழிகளிலும் சிறுபான்மை இனத்தவருக்கு மிரட்டல்கள் விடப்படுகிறது. ஒரு விதத்தில் எதுவும் மாறவில்லை அல்லது எல்லாம் மாறிவிட்டது எனலாம்.
ஆனால் முழுமையாக நிற/இன வெறியை ஒழிக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. எப்போதும் ஒரு சிறுபான்மையினரிடம் இருந்து வெறுப்பை அகற்ற முடியாது என்றே தோன்றுகிறது. அவர்களைச் சிறுபான்மையினராக வைத்திருப்பதே அனைவர்க்கும் நல்லது என்றும் தோன்றுகிறது.
ஆனால் இன்றைய அமெரிக்காவில் இன்றும் இவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவராக ஒபாமா இருந்தபோது, அவரை விமர்சித்து வெளிப்படையாக எழுதப்பட்ட பல வலதுசாரிக் கட்டுரைகளில் அவரைக் குரங்கைப்போலவே சித்தரித்திருப்பார்கள். அமெரிக்க வலதுசாரி வானொலி அரசியல் பேச்சு நிகழ்வுகள் காது கொடுத்துக் கேட்கமுடியாத அளவிற்கு வன்மத்தைக் கக்குவதாக இருக்கும். இவற்றின் வழியாகவே டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற முடிந்தது.
ஆனால் பாடுபட்டுப் பெற்ற உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் காவல்துறை நடவடிக்கைகளை எதிர்த்து நடந்த ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (Black Lives Matter) போராட்டங்கள் ஒரு உதாரணம்.
பெரும்பாலும் வன்முறை இன்றி நடந்த போராட்டங்களின் நடுவே கெனோஷா நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு இன்றும் அங்கு நிலவும் சமநிலையின்மைக்கு ஓர் உதாரணம். கறுப்பினத்தவர் ஒருவரைக் காவல்துறை கொன்றுவிட்டதாக நடந்த போராட்டத்தின் நடுவே, ஒரு வெள்ளை இளைஞன் தானியங்கித் துப்பாக்கிக் கொண்டு இருவரைக் கொன்றுவிட்டான். பொதுவான இடத்தில், பல கேமராக்களுக்கு நடுவே நடந்த கொலைகளுக்கு நீதிமன்றத்தில் எந்தத் தண்டனையும் இன்றி விடுதலையும் பெற்றுவிட்டான். 2020இல் நடைபெற்ற இந்த நிகழ்வை இன்று வரை என்னால் புரிந்து கொள்ளவோ, ஒப்புக்கொள்ளவோ முடியவில்லை.
அகிம்சை முறை எவ்வளவிற்குப் பொருத்தமானதாக இருக்கிறது என்ற கேள்வியையும் கறுப்பினத்தவர்களின் போராட்டம் எழுப்புகிறது. கிங்கின் காலத்திற்குப் பின்னரும் SCLC வன்முறையைக் கையிலெடுக்கவில்லை. ஆனால் மற்ற இயக்கங்கள் வன்முறையை ஒரு வழியாகவே முன்னெடுத்தன. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டங்கள் வன்முறை இன்றி, அமைதியான போராட்டங்களாகவே இருந்தன.
ஆனால் காலம் சென்று கொண்டேதான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் சிறுபான்மையினராக இருப்பவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் தங்களது உரிமைக்கும், பெற்ற உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளவும் போராடிக் கொண்டே இருப்பது நடந்துகொண்டேதான் இருக்கிறது.
இந்த வரலாறு எப்போதும் எனக்கு நமது நாட்டிலும் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த போராட்டங்களை நினைவிற்குக் கொண்டு வரும். ஆனால் இங்கே ஒன்றிணைக்கப்பட்டு, தேசிய அளவில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படவே இல்லை. அதற்குப் பல காரணங்களைப் பட்டியலிடலாம். ஆனாலும் அப்படியான ஒரு முயற்சி இல்லாமல், நமது நாட்டில் ஓரளவிற்கு உரிமைகளை வென்றெடுக்க முடிந்திருப்பதை வெற்றியாகவும் நாம் கருதலாம். ஆனாலும் நாம் இன்னமும் செல்ல வேண்டிய தூரம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. நாம் களைய வேண்டிய வெறுப்பின் அளவும் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
இன்றும் அமெரிக்கத் தென்மாநிலங்கள் வறுமையை எதிர்கொண்டே வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியும், எல்லா விதங்களிலும் மோசமான கட்டமைப்பும் கொண்டவையாகவும் இருக்கின்றன. 400 ஆண்டுகளாகத் தங்களது மக்கள்தொகையில் ஒரு பாதி மக்களைப் படிக்கவிடாமல், சமூகத்திற்கு முழுமையான பங்களிப்பைச் செய்யவிடாமல் செய்ததன் விளைவாகவே இதைக் காண வேண்டியிருக்கிறது. இதை நம் நாட்டிலும் பார்க்க முடியும்.
0
இறுதியாக, ஜோனாதன் பாக்மேன் எடுத்த புகைப்படத்தோடு முடித்துக்கொள்வோம். முழுவதுமாக நல்ல ஆடை உடுத்தி, நிமிர்ந்த நெஞ்சோடு கறுப்பினப் பெண்ணொருத்தி, தங்களது நிலையில் இருந்து தடுமாறிக்கொண்டிருக்கும் மூன்று காவல்துறையினர் முன் நிற்கிறாள். தன்னுடைய போராட்டத்தின் உண்மையை உணர்ந்த ஒருத்தியால் மட்டுமே அத்தனை உறுதியோடு நிற்க முடியும். உண்மையின் ஆன்மபலம் என்று காந்தியடிகள் சொன்னதைப் புகைப்படமாக எடுக்கச் சொன்னால் இப்படித்தான் இருக்கும்போல.
0
உணர்வுப்பூர்வமாகப் பல விதங்களில் இந்தப் புத்தகம் என்னிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டது என்றே கூற வேண்டும். கிங்கின் சொற்பொழிவுகள் பலவற்றையும் கேட்பதும், போராட்டங்களின் வன்முறையைத் தொடர்ந்து பார்ப்பதுமே எளிதாக இல்லை. பல நேரங்களில் எழுதுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் சமநிலைக்கு வரவே நேரம் எடுத்தது.
சில புத்தகங்கள் என்னிடம் இருந்தாலும், பல புத்தகங்களை நூலகங்களிலும், டிஜிட்டல் வடிவிலும் படிக்க வேண்டியிருந்தது. பல்வேறு ஆவணப்படங்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் என் மகனின் பல்கலைக்கழக நூலகத்தின் வாயிலாகவே பார்க்கவும், படிக்கவும் முடிந்தது. அதற்கு என் மகன் சிபிக்கும், அவர்களது பல்கலைக்கழகத்தின் ஹரோல்ட் லீ நூலகத்திற்கும் நன்றியைப் பதிவு செய்வது அவசியமாக இருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போது என்னுடன் குறிப்பெடுக்க உதவி செய்த என் மனைவி ஜெயஸ்ரீக்கும், மகள் வானதிக்கும் நன்றியைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. எல்லா நேரங்களிலும் என்னை ஊக்கப்படுத்திய என் ஆசிரியர் மருதன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.
பலவிதங்களில் என்னுடைய உழைப்பை அதிகமாக எடுத்துக் கொண்ட புத்தகம் இது. இதற்காகப் பல்வேறு ஆவணப்படங்களைப் பார்த்தேன். பல இடங்களிலும், புத்தகங்களிலும் இதற்கான தரவுகளைச் சேகரித்தேன். அவற்றை எல்லாம் பின்னிணைப்பாகவும் கொடுத்திருக்கிறேன். முடிந்தவரை விரிவாகச் சொல்லவே முயன்றிருக்கிறேன். தவறுகள் ஏதேனும் இருப்பின் அவை முழுவதுமாக என்னையே சேரும்.
(முற்றும்)