Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.

கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.

வானுயர்ந்த எல்.ஐ.சி.

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் பட்டினம் சேர்ந்துவிட்டான் என்று சொல்ல ஓர் எளிய யுக்தியைப் பயன்படுத்துவார்கள்.

பக்கம் பக்கமாக வசனம் எழுத வேண்டாம். சுருள் சுருளாகப் படம் எடுக்க வேண்டாம்.

மதராஸில் வானுயர்ந்த எல்.ஐ.சி. கட்டடத்தின் தோற்றத்தை ஒருமுறை காட்டினால் போதுமானது. கதாநாயகன் பத்திரமாகச் சென்று மதராஸ்வாசியாகி விட்டான் என்று எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவிற்கு LIC என்பது சென்னை நகரத்தைக் குறிக்கும் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் மிக உயரமான கட்டடமாக இருந்த எல்.ஐ.சி., கல்லாலும் மண்ணாலும் உருவாக்கப்பட்ட கட்டடம் என்பதைவிட ஓர் இலட்சியவாதியின் கனவு என்பதே உண்மை. புதிதாக இந்தியா பெற்ற விடுதலையின் பிரதிபலிப்பு கூட.

எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார், தென்னகத்தின் மிகப்பெரிய வணிக குடும்பம் ஒன்றின் வாரிசு. ஆனால் தனது குடும்பத்தின் குலத் தொழிலான காசுக்கடை வேண்டாமென்று உதறியவர், தன் சமூகத்தார் கொடிகட்டிப் பறந்த வழக்கமான வணிக இடங்களான பர்மா மற்றும் மலாயாவையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, இந்தியாவில் தன் சொந்த நிறுவனங்களில் முன்னேறினார்.

40 வயதுக்குள் சிதம்பரம் ஒரு காப்பீட்டு நிறுவனம், ஒரு ரேயான் தொழிற்சாலை (தென்னிந்தியாவின் மிகப் பெரிய தொழில் முயற்சி) மற்றும் ‘தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’யை ஆரம்பித்து விட்டார். இந்த முயற்சிக்கெல்லாம் மகுடம் சூட்டுவதுபோல மதராஸின் பழமையான மவுண்ட் ரோடு எனப்படும் அண்ணாசாலையில் இந்தியாவின் மிக உயரமான கட்டடத்தைக் கட்டி அவரது தொழில்களுக்குத் தலைமையகம் அமைக்கத் திட்டமிட்டார்.

அந்தக் காலகட்டத்தில், நியூயார்க்கில் கட்டப்பட்ட ஐக்கிய நாடுகளின் கட்டடம் உலகின் மிகவும் பிரபலமான கட்டடம் ஆகும். சிதம்பரமும் இதேபோன்ற கட்டடத்தை மவுண்ட் ரோட்டில் உருவாக்க விரும்பினார். அதற்கு ‘யுனைடெட் இந்தியா பில்டிங்’என்ற பெயரையும் தேர்வு செய்திருந்தார்.

இந்தியாவிலேயே 18 மாடி கொண்ட மிக உயரமான கட்டடம் என்ற அவரது கனவைக் கேட்டபோது ஆங்கிலேய கட்டட வல்லுனர்கள் பிரவுன் மற்றும் மௌலின் ஆகியோர் ( தில்லியில் அப்போது தான் ஏ.ஐ.ஐ.எம்.எஸ். AIIMS கட்டடத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.) வியந்து தயங்கியிருக்கலாம்.

கட்டடத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் இடம் காலனித்துவக் கட்டடங்களால் சூழப்பட்டிருந்தது. அவை ஒவ்வொன்றும் ஒரு புத்தகத்தை நிரப்பப் போதுமான வரலாற்றைக் கொண்டிருந்தன. அவற்றுக்கெல்லாம் சவாலாக, தான் கட்டப்போகும் கட்டடம் அமைய வேண்டும் என்று சிதம்பரம் நினைத்தார். அதைச் செய்து முடிக்க அவருக்கு நிதியும் இருந்தது, ஆற்றலும் இருந்தது. ஆனால் விதியோ நேரத்தை மட்டும் கொடுக்கவில்லை.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! இந்தக் கட்டடம் மனிதர்கள் போலவே தனக்கென ஒரு மனதைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. தொடக்கத்தில் அதற்கென முன்மொழியப்பட்டப் பெயர், அதன் வரைத் திட்டம், சொந்தக்காரர், கட்டடக் கலைஞர் என்று கட்டடம் முடிவடையும்போது ஏதும் தொடரவில்லை.

1953இல் கட்டுமானம் தொடங்கப்பட்டவுடன் பிரச்னைகள் தொடங்கியது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட கட்டடக் கலைஞர்கள் வெளிநடப்பு செய்தனர். இறுதியில் மதராஸ் கட்டடக் கலைஞர் சித்தலே கட்டுமானத்தை வடிவமைத்து முடித்தார்.

துரதிர்ஷ்டவசமாக, கட்டடம் கட்டுமானத்தில் இருந்தபோது, தொலைதூர சிங்கப்பூருக்கு, சிட்னியில் இருந்து வந்த BOAC காமெட் விமானம் தரையிறங்கும் போது தீ பிடித்தது. விபத்தில் பயணிகள் அனைவரும் உயிருடன் எரிக்கப்பட்டனர். பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணப்பட முடியாமல் பொதுவான சவக்குழியில் புதைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிதம்பரம் செட்டியார். இந்தத் துயரமான தருணத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்திய காப்பீட்டு வணிகங்கள் 1956 இல் தேசியமயமாக்கப்பட்டன. எனவே கட்டடம் கட்டும் பொறுப்பை மத்திய அரசாங்கம் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது. அதன் உயரம் 18 தளங்களிலிருந்து 13 தளங்கள் மற்றும் 2 அடித்தளமாகக் குறைக்கப்பட்டது.

15 தளங்களைக் கொண்டுள்ள கட்டடம் அமைக்க கூவம் ஆற்றுக்கு மிக அருகே இருந்த இடம் துரதிர்ஷ்டம் என்று கருதிய கட்டட வல்லுநர்கள் பெரும் செலவில் தரையிலிருந்து 35 அடி ஆழம் வரை அடித்தளங்கள் அமைத்தனர். ஆனால் இந்தக் கட்டடத்திற்கு அருகில் கூவம் ஆறு அமைந்தது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று பிற்காலத்தில்தான் தெரிந்தது!

177 அடி கட்டுமானத்தில் சுமார் 1,000 டன் எஃகு மற்றும் 3,000 டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. 26,000 சதுர அடி (அரை கால்பந்து மைதானத்தின் அளவு) கண்ணாடி. உபயோகிக்கப்பட்டது.

1959 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, அதே ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று அப்போதைய மத்திய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயால் கட்டடம் திறக்கப்பட்டது. அதன் பெயர் ‘ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டடம்’ என்று சூட்டப்பெற்றது.

கட்டிமுடிக்கப்பட்ட கட்டடம் கண்ணாடி முகப்புடன் கூடிய வானுயர்ந்த கட்டடமாகக் காணவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அழகான கட்டுமானம் என்றாலும் அந்தக் கட்டடம் புகழ் பெற்றது அதன் உயரத்துக்குத்தான். கட்டடம் முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை இந்தியாவின் மிக உயரமான கட்டடமாக இந்த LIC கட்டடமே பிரசித்தி பெற்றிருந்தது. பின்னர் 2 ஆண்டுகளில் பம்பாயில் எழுந்த உஷா கிரண் கட்டடத்தால் அந்தச் சாதனை விஞ்சப்பட்டது. ஆனால் சென்னையின் அதி உயரமான கட்டடமாக மேலும் 35 ஆண்டுகளாக அதன் சாதனை தொடர்ந்தது.

அடித்தளங்களில் ஒன்றில் இந்தியாவின் ஆரம்பக்காலத் தனியார் கணினிகளில் ஒன்றை (அப்போது ஐபிஎம் இயந்திரம் என்று அழைக்கப்பட்டது) பொருத்தினார்கள். இங்கு வேலை செய்த 1500 ஊழியர்கள் மேலும் கீழுமாக லிஃப்ட் சாதனத்தில் பறந்தார்கள்.

ஜூலை 11, 1975 அன்று, LIC கட்டடத்தில் ஒரு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. பல தீயணைப்பு வண்டிகள் போராடியும் தீ அடங்கிய பாடில்லை.

அந்த ஆண்டு மதராஸில் பெரும் வறட்சி வேறு நிலவியது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் கட்டடம் எரிந்தாலும் பரவாயில்லை என்று வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் நகரத்தின் அன்றைய சூழல் இருந்தது.

பின்னர் யாரோ ஒரு புத்திமானின் யோசனையில் தண்ணீர் லாரிகள் கொண்டு வந்து அருகில் இருந்த கூவம் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு தீயணைக்கப்பட்டது.

இப்பொழுது சொல்லுங்கள்! கூவம் நதி LIC கட்டடத்துக்கு அதிர்ஷ்டம்தானே!

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *