Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை

கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை

அதிகாரப் போராட்டங்கள் அரிதாகவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் மெட்ராஸ் கார்ப்பரேஷன் உருவானது அந்த அரிய நிகழ்வுகளில் ஒன்று.

மதராஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருக்கும்போது அதன் தலைவர் (அவ்வப்போது பிரெஸிடென்ட், அவ்வப்போது ஆளுநர்) சக்கரவர்த்தி போல் செயல்படுவது சகஜம். மனித அடிமைகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்த அமெரிக்க வம்சாவழியினர் எலிஹு யேல் மதராஸை எதேச்சதிகாரமாக ஆண்டுகொண்டிருந்த காலமது. (பிற்காலத்தில் அமெரிக்க யேல் பல்கலைக்கழகம் அவரின் நினைவில் பெயரிடப்பட்டது.)

யேலின் சக்திகளைக் கட்டுப்படுத்த மதராஸில் ஒரு மாற்றுச் சக்தி மையத்தை உருவாக்க 1687 ஆண்டில் கார்ப்பரேஷனை உருவாக்கியது கம்பெனியாரின் லண்டன் அலுவலகம். இருப்பினும் வெளிப்படையாக சொன்ன காரணம், ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் நகரத்திற்கு ஒரு முறையான உள்ளாட்சி அமைப்பு தேவை என்பதுதான். அதுவரை ஓர் அதிகாரி, ஒரு கணக்குப்பிள்ளை மற்றும் பெத்தநாயக்கர் (காவல்துறை) ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டது மதராஸ்.

கோட்டைக்குள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, கார்ப்பரேஷன் அலுவலகம் பிளாக் டவுனில் உள்ள எரபாலு தெருவில் வாடகைக் கட்டடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது. நகரம் வளர வளர அதைக் கண்காணிக்கும் நகராட்சியின் மகிமைக்கு ஏற்ப அரசாங்கம் மெட்ராஸ் கார்ப்பரேஷனுக்கு அதன் சொந்த அலுவலகத்தைக் கொடுக்க முடிவு செய்தது.

அதற்கான பெரிய இடம் ஒன்றுக்கு தேடுதல் தொடங்கியது. ஆனால் அவ்வளவு பெரிய இடம் கோட்டைக்குள்ளோ டவுனுக்குள்ளோ இல்லை.

சென்னையின் மிகப் பெரிய பொழுதுபோக்கு இடமான பீப்பில்ஸ் பார்க் பூங்காவின் ஒரு பகுதியைக் கையகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. கட்டடத்துக்கு வேலை ஆரம்பித்து, ‘ரிப்பன் கட்டடம்’ என்று பெயர் சூட்டப்பெற்றது. ரிப்பன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாகப் பணியாற்றி 25 வருடங்கள் கழித்தே இந்தப் பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, யார் இந்த ரிப்பன்? சரியாகச் சொல்லப் போனால் ரிப்பன் என்பது இங்கிலாந்தில் ஓர் ஊர். அதன் ஜமீன்தார் போன்ற ஒரு பட்டமான ‘மார்க்வெஸ்’ அந்தஸ்து அவருக்கு. அந்த நேரத்தில் உலகின் மிகச் சக்திவாய்ந்த கட்டடங்களில் ஒன்றில் ரிப்பன் பிறந்தார். ஆம். 10 டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் வீட்டில் (அவரது தந்தை பிரதமராகப் பணியாற்றியபோது) பிறந்தார். ஜார்ஜ் ஃபிரடெரிக் சாமுவேல் ராபின்சன் என்ற பெயர் சூட்டப்பெற்றார்.

ஆனால் அவரால் தன் தந்தையின் பாதையைப் பின்பற்ற முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் அடிமைப்பட்ட மக்களிடம் அவர் கொண்டிருந்த மென்மையான அணுகுமுறை ஆங்கிலேயர்களின் காலனித்துவ லட்சியங்களுடன் பொருந்தவில்லை என்பதே காரணம்.

ரிப்பன் பிரபு

ரிப்பன் பிரபு

ரிப்பன் இந்திய வைஸ்ராயாக (மன்னருக்குப் பதிலானவர் என்று பொருள்) இருந்தபோது இந்திய வம்சாவளி மக்களுக்கு ஆதரவாக பல முக்கியச் சட்டங்களை நிறைவேற்றினார். ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று மக்கள் சொல்வதுண்டு. இன்றும் உரிமை என்று நினைத்து, பலர் அனுபவித்து வரும் சலுகைகள் அவர் ஆரம்பித்து வைத்ததுதான். அவரது தொழிற்சாலைச் சட்டம் தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் ஒரு விடுமுறை மற்றும் வேலைநாளில் ஒரு மணி நேர ஓய்வும் கொடுத்தது. ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் வேலை செய்யத் தடை விதித்தது.

அவரது இல்பர்ட் மசோதாவில், நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஐரோப்பியர்களை இந்திய நீதிபதிகள் விசாரிக்கலாம் என்ற ஷரத்தைக் கொண்டு வந்ததும், ஆங்கிலேயர் பலருக்கு அதிர்ச்சி. பதவிக்காலம் முடியும் முன் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார் ரிப்பன். உண்மையைச் சொல்லப் போனால் ரிப்பனின் பதவிக்காலத்திற்குப் பிறகுதான் இந்தியாவில் விடுதலை கேட்கும் சுய ஆட்சி இயக்கங்களின் குரல்கள் பெருகின.

டிசம்பர் 11, 1909 இல் இந்தியாவின் வைஸ்ராய் பிரபு மிண்டோவால் ரிப்பன் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஏற்கெனவே மவுண்ட் ரோட்டில் நிறுவப்பட்டிருந்த ரிப்பன் சிலை கார்ப்பரேஷன் புல்வெளிக்கு மாற்றப்பட்டது. கட்டடத்துடன் சமச்சீராக இல்லாததால், இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்பது பார்த்தவுடன் புரியும். நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டி சிலையே மையத்தில் உள்ளது.

ரிப்பன் மாளிகை, கட்டடக் கலைஞர் ஹாரிஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அப்போது மதராஸில் பிரபலம் என்றால் அது இந்தியக் கட்டட அம்சங்களை உள்ளடக்கிய இந்தோ சார்செனிக் (Indo saracenic) கட்டடப் பாணிதான். முகலாய மற்றும் ராஜபுட்டானிய கட்டடம் போலிருக்கும் இந்தச் சிவப்புக் கட்டடங்களை மதராஸ் முழுவதும் காணலாம்.

ஆனால் ரிப்பன் கட்டடம் கிளாசிக்கல் பாணியில் கட்டப்பட்டு ஐரோப்பியக் கட்டடம் போலிருக்கும். கட்டடம் முடிந்த பின் ஹாரிஸ் அதன் மேல் எட்டு அடி உயரமுள்ள கடிகாரக் கோபுரத்தைப் பொருத்தினார். மணிக்கு ஒரு முறை அதன் ஓசை லண்டனில் உள்ள பிக் பென் ஒலியைப் போல ஒலித்தது. ஒருவேளை நாட்டிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் வெள்ளையர்களுக்கு அவர்களின் வீட்டை நினைவூட்ட வைக்கப்பட்டதோ?

பெங்களூரைச் சேர்ந்த லோகநாத முதலியார் இந்தக் கட்டடத்தைக் கட்டினார். வேலை மிகவும் சவாலாய் அமைந்தது. காரணம், கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் நடுவில் இருந்த சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட வேண்டியிருந்தது. முழு மண்ணையும் மாற்றுவது கேள்விக்குறியாக இருந்தது. அதனால் ஆங்காங்கே சுட்ட மண் வளையங்களைத் தரையில் இறக்கி, அதில் சுண்ணாம்பையும் செங்கற்களையும் நிரப்பினார்கள்.

சூளைமேட்டிலிருந்து கூவம் வழியாகப் படகுகளில் செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டன. கட்டடத்துக்கு இயற்கையான வெளிச்சத்தை வழங்க, இரண்டு முற்றங்கள் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு தளமும் மெட்ராஸ் டெரஸ் கூரையுடன் இருந்தது. ரோமானியப் பாணியில் தூண்கள் மற்றும் வளைவுகள் செங்கல் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்திக் கட்டப்பட்டன. கட்டடம் வெள்ளை வர்ணம் பூசப்பெற்றது.

ரிப்பன் மாளிகை

ரிப்பன் மாளிகை

மாநகராக மதராஸ் மாறியது இந்தக் கட்டடத்திலிருந்துதான். முக்கிய அரசியல்வாதிகள் மேயர் பதவியை வகித்துள்ளனர், இது அவர்களுக்குப் பெரிய பதவிகளுக்குப் படிக்கட்டாக அமைந்தது.

அவர்களில் சிலர் தங்களுடைய ஒரு வருடப் பதவிக் காலத்தில் நகருக்கு நீடித்த மாற்றங்களைச் செய்தனர். 1940களில் சத்தியமூர்த்தி பூண்டி நீர்த்தேக்கத்தை உருவாக்கி மதராஸுக்கு நிரந்தரமாக நீர் ஆதாரத்தைக் கொடுத்தார்.

அதே நேரத்தில் வெங்கல் சக்கரைச் செட்டி 1942 ஆம் ஆண்டு ஜப்பானியக் குண்டுவெடிப்புப் பயத்தின் மத்தியில் சென்னை மிருகக்காட்சிச் சாலையில் உள்ள அனைத்து ஆபத்தான விலங்குகளையும் சுட்டுக் கொல்லக் கட்டளையிடும் ஆணையையும் இங்குதான் கையொப்பமிட்டார்.

இன்று வளாகத்தில் ஒரு புதிய ஐந்தடுக்கு இணைப்பு ரிப்பன் கட்டடத்தில் இருந்து சுமைகளை எடுத்துவிட்டது. எனினும் சென்னை மெட்ரோ ரயில் பணியால், ரிப்பன் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. ரிப்பன் கட்டடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு பெரிய சீரமைப்பு முயற்சி செய்து அதன் அசல் மகிமைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள்.

0

பகிர:
nv-author-image

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *