Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #3 – பாரிஸ் கார்னர்

கட்டடம் சொல்லும் கதை #3 – பாரிஸ் கார்னர்

பாரிஸ் கார்னர்

அங்கு வசிக்கும் மனிதர்களின் தோல் நிறத்தை வைத்துத் தானாக வந்தது அந்த ஊருக்கு ஒரு பெயர் – கருப்பர் நகரம்.

அலெக்சாண்டரை விட அதிக நிலத்தை ஆளப்போகும் ஒரு பிரிட்டிஷ் இளவரசரின் வருகையையொட்டி ஆங்கிலேய அரசாங்கம் அதற்குக் கொடுத்த மாற்றுப்பெயர் – ஜார்ஜ் டவுன்.

ஒரு நகரத்தின் முக்கியப் பகுதியாக, ஏன், ஒரு காலத்தில் அந்த நகராகவே திகழ்ந்த பகுதிக்கு இப்படி இரண்டு பெயர்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அந்த நகரின் மக்கள் அந்தப் பெயர்களையெல்லாம் மறந்து அவ்விடத்தை அழைப்பதென்னவோ அங்கு இருக்கும் ஆயிரம் கட்டடங்களில் ஒன்றை வைத்துத்தான்.

இதில் நகைச்சுவை என்னவென்றால் முதலில் அந்தக் கட்டடத்துக்கும் அந்தப் பெயர் சூட்டப்படவில்லை.

பாரிஸ் கார்னர் என்றால் சென்னையில் தெரியாதவர் இல்லை. கறுப்பின நகரத்தின் தென்கிழக்கு மூலையில் இருக்கிறது டேர் ஹவுஸ். 250 ஆண்டு காலமாக கொடிகட்டிப் பறக்கும் பாரி நிறுவனத்தின் தலைமைச் செயலகம். இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் பாரிஸ் கார்னர்.

அதன் பெயருக்கு ஒரு முரண்பாடாகக் கறுப்பர் நகரத்தில் வெள்ளைக்காரர்களும் வாழ்ந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தைத் தவிர அனைத்துப் பெரிய ஐரோப்பிய நிறுவனங்களும் கறுப்பர் நகரத்தில்தான் இருந்தன. நகரத்தையே தன் உடமை போல நடத்தி வந்த கிழக்கிந்திய நிறுவனத்திற்கு நேரடிப் போட்டியாக இல்லாமல், கவனமாகச் செயல்பட்ட சில வணிகர்கள் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டபின், அவர்கள் நகரின் மிக ஐஸ்வரியம் கொண்ட மனிதர்களாக மாறிப்போனார்கள்.

அவர்களுள் முக்கியமானவர் தாமஸ் பாரி. இங்கிலாந்துக்கு அருகிலுள்ள வேல்ஸைச் சேர்ந்தவர். இண்டீஸில் (அப்போது ஆசியாவின் பெயர்) வர்த்தகம் மேற்கொள்ளும் மக்கள் அபரிமித செல்வம் சம்பாதிக்கும் கதைகளைக் கேள்விப்பட்டு அவர், ஆசியாவிற்குப் போர் வீரர்களைக் கொண்டு செல்லும் கப்பல் ஒன்றில் ஏறினார். ஏழையான பாரி டிக்கெட் வாங்க வசதி இல்லாமல் பயணச்சீட்டை ஈடுகட்ட மாலுமியாகப் பணிபுரிந்தார். 105 நாட்கள் பயணத்தில் சென்ற பிறகு, கப்பல் மதராஸில் நங்கூரமிட்டபோது அவர் காணாமல் போனார். ஏனெனில், அவரது பெயர் அதன் பதிவேட்டில் கப்பலிலிருந்து தப்பியோடியவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கையில் காசில்லாமல் இறங்கிய பாரிக்கு மதராஸின் பெரும் செல்வந்தராக மாறுவதற்குப் பிடித்த காலம் பத்து ஆண்டுகள்தான்.

ஆனால் 21 வயதான பாரி மதராஸில் வெற்றி பெறுவதற்கு முன்பு ஒரு கடினமான காலத்தை அனுபவித்தார். லாட்டரிச் சீட்டுகள் விற்றார். செய்தித்தாள்களை அச்சிட்டார். பல வணிகங்களில் தனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்தார். பாரி செய்த பல்வேறு தொழில்கள், காலனித்துவ மதராஸில் உழைக்க விருப்பமுள்ள ஒருவருக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை எடுத்துக் காட்டுகிறது.

1890ல் பாரிஸ் கார்னர்
1890ல் பாரிஸ் கார்னர்

கிழக்கிந்திய கம்பெனியினர், வணிகர்களுக்குத் தொழில் செய்ய உரிமம் வழங்கியிருந்தாலும், அவர்கள் ஒருபோதும் தனக்குப் போட்டியாளர்களாக மாறாமல் பார்த்துக்கொண்டனர். தாமஸ் பலமுறை நிறுவனத்தின் அதிருப்தியில் சிக்கிக் கொண்டார். ஒரு முறை சிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதும் நடந்தது.

சாந்தோமில், பாரி இந்தியாவின் முதல் நவீனத் தொழிற்சாலையைத் தொடங்கி, அதில் தோல் பதனிட்டு பூட்ஸ் தயாரித்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தார். பாரி சாந்தோமில் கடலைப் பார்க்கும்படிக் கோட்டைபோல வீட்டைக் கட்டிக்கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தார். ஆனால் உலக இன்பங்களில் மூழ்கி, கடையை மூடிவிட்டு சிலகாலம் ஆற்காடு நவாப்பின் பணியாளராகவும் அவர் மாற வேண்டியதாயிற்று.

பின்னர் நவாபின் குடும்பத்திலிருந்து கருப்பர் நகரில் தென் கிழக்கு மூலையில் ஒரு நிலத்தை வாங்கிக்கொண்டார் பாரி. கீழ்த் தளங்களில் பொருள் சேமிக்கும் குடோன்கள் மற்றும் உயர் தளங்களில் கடலைப் பார்க்கும் அலுவலகங்களைக் கட்டிக்கொண்டார். மதராஸில் அப்போது அகலமான கடற்கரை இல்லை என்பதால் கடல் சீற்றமாக இருக்கும்போது அவர் வீட்டு வாசலை நெருங்குமாம்.

கவர்னர் கிளைவ் அனைத்து வணிகங்களையும் கோட்டையிலிருந்து வெளியேற்றியபோது, வர்த்தகக் கப்பல்கள் கோட்டைக்கு எதிரே வராமல் பிளாக் டவுனுக்கு எதிரே நங்கூரமிடத் தொடங்கின. அதனால் மதராஸ் வந்தவுடன் கப்பல்கள் பாரியின் கட்டடத்தையே முதலில் பார்க்க நேர்ந்தது.

பாரி 1824ஆம் அண்டு கடலூர் அருகே காலராவுக்குப் பலியானபின், பரங்கிப்பேட்டை தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின் தொடர்ச்சியான உரிமையாளர்கள் பாரி நிறுவனத்தை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு சென்ற பிறகு, பழைய பாரி கட்டடத்தை அகற்ற நிர்வாகம் முடிவு செய்தது.

1940களில் முற்றிலும் வேறு விதமாக மாறிக்கொண்டிருந்தது கட்டுமானத் தொழில். கான்கிரீட்டின் வருகை உலகம் முழுவதும் கட்டடப் பாணியை மாற்றியது. (இன்று உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் கான்கிரீட்தான்.)

கட்டடங்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவத்தையும் உயரத்தையும் கான்கிரீட் கொண்டு கொடுக்க முடியும் எனக் கட்டடக் கலைஞர்கள் புரிந்து கொண்டார்கள். கட்டடத்தின் அமைப்பில் இது பெரும் மாற்றங்களைச் சாத்தியமாக்கியது. வளைந்த கட்டடங்கள், நீட்டிக்கப்பட்ட பால்கனிகள் போன்றவை கட்டடங்களுக்கு அழகு சேர்த்தன.

கான்ரீட் வந்தவுடன் உருவான கட்டடப் பாணி ஆர்ட் டெகோ. அதைக் கொண்டு புதிய பாரி கட்டடம் வடிவமைக்கப்பட்டது. 12 லட்சம் செலவில் கல்கத்தாவைச் சேர்ந்த பல்லார்டி, தாம்சன் மற்றும் மேத்யூஸ் ஆகியோரால் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டது.

ஆனால் விதியின் வினோதத்தால், பாரியின் தலைமையகம் மற்றொரு மனிதனின் பெயர் கொண்டிருக்கிறது. புதிய கட்டடத்துக்குப் பாரியின் பெயரைச் சூட்ட முடிவு செய்தபோது, ஒரு விசித்திர பிரச்னை எழுந்தது. ஒரு வர்த்தகத்தின் பெயரில் இயங்கும் கட்டடத்தில் தாங்கள் குடியிருந்தால், அது அந்த வர்த்தகத்துக்கு இலவசமாக விளம்பரம் செய்வது போலாகும் என்று அந்தக் கட்டடத்தில் வாடகைக்கு இருந்த அமெரிக்கத் துணைத் தூதரகம் ஆட்சேபம் தெரிவித்தது.

கட்டடத்தைக் காலி செய்வோம் என்று மிரட்டிய அமெரிக்கர்களை இழக்க விரும்பாமல், தாமஸ் பாரியின் கூட்டாளிகளில் ஒருவரின் பெயர் கட்டடத்துக்குச் சூட்டப்பட்டது. பாரி தலைமையகம் இன்று ‘டேர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படுகிறது. தாமஸ் பாரி தொடங்கிய நிறுவனம் இன்னும் இங்கு செழித்து வருகிறது. இந்தியாவில் செயல்படும் இரண்டாவது பழமையான நிறுவனம் இது. இருப்பினும் இன்று அது தயாரிக்கும் பெரும்பாலான பொருள்களைப் பாரி திரும்பி வந்தால் அடையாளம் காண முடியாது. காலம் அவ்வளவு மாறி போச்சு. நுகர்வோர் சுவைகளும் கூடத்தான்.

0

Google Map link

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

2 thoughts on “கட்டடம் சொல்லும் கதை #3 – பாரிஸ் கார்னர்”

  1. Just loved reading about the parry’s corner area’s history.
    Sir
    I am an ardent admirer of your many different research subjects of the city

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *