Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கருப்பர் நகரின் வடக்கு எல்லையில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் ஒரு பொதுப் பூங்கா இருக்கிறது.

மற்ற பூங்காக்களைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கட்டடத்தின் மேல் இருப்பதால் தாவரங்களை ரசிக்க சில படிகள் ஏற வேண்டும். அதனால் இது ‘மாடிப் பூங்கா’ என்று அழைக்கப்படுகிறது. அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று நேரே இங்கு வந்து சோம்பிப் படுத்திருக்கும் பலரும் தோட்டத்தின் சரித்திர முக்கியத்துவத்தை உணரவில்லை. உள்ளூர்வாசிகள் கூடச் சரித்திரம் தெரியாமல் இந்தப் பூங்காவைக் கடந்து செல்கின்றனர்.

வரலாற்றின் ஆரம்பக் காலத்திலிருந்தே, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சுற்றுச்சுவர்தான் முதல்கட்ட ஆயுதம் என்பதை மனிதன் உணர்ந்திருந்தான். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய நிறுவனம் முதலில் கட்டியதும் சுற்றுச் சுவரைத்தான். ஆனால், ஒரு கட்டத்தில் கோட்டையின் செழிப்புக்குப் பூர்வீகக் குடிமக்கள் வாழ்ந்த கருப்பர் நகரமும் மிக முக்கியமானது என்பதைக் கோட்டையில் உள்ள சக்திகள் உணர்ந்தனர். எதிரிகளும்தான்.

ஜார்ஜ் கோட்டை உயர்ந்த சுற்றுச்சுவர்கள், கொத்தளங்கள் மற்றும் பீரங்கிகளால் நன்கு பாதுகாக்கப்பட்டதால், ஹைதர் அலி போன்ற படையெடுப்பாளர்கள் மிக அருகில் செல்வதைத் தவிர்த்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கவனத்தைக் கோட்டையைச் சுற்றிப் பிளாக் டவுனில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் மீது திருப்பி, அவர்களைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். கருப்பர் நகரைச் சுற்றி ஒரு பெயரளவு பாதுகாப்புக்காக ஒரு மண் சுவர் மட்டுமே இருந்தது. நல்லதொரு அரண் அமைக்கப்பட வேண்டும் என்று திட்டம் இருந்தாலும், செலவுக்குப் பயந்து தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தனர் கம்பெனியர்.

முடிவாக சுவர் கட்ட காரணம், மைசூரின் ஹைதர் அலி தான். பிளாக் டவுனைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவரைக் கட்டலாமா வேண்டாமா என்று எல்லோரும் விவாதித்துக் கொண்டிருக்கையில், ஹைதர் அலியின் குதிரைப்படை சாந்தோம் மற்றும் எழும்பூர் அருகில் திடீரெனத் தோன்றியிருப்பதாக உளவாளிகள் தெரிவித்தனர். சுவரற்ற ஊரைப் பாதுகாப்பது கடினமாக இருந்திருக்கும் என்பதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டைத் தூதுவர்கள் ஹைதர் அலியின் முகாமிற்குச் சமரசம் செய்து கொள்ள அனுப்பப்பட்டார்கள்.

வலிமையான நிலையில், அடையாறு ஆற்றுக்கு அப்பால் ஹைதர் அலி காத்திருந்தார். தாழ்ந்து சென்று, கெஞ்சாத குறையாக எதிரியை அணுகியதற்கு மனம் புழுங்கினர் ஆங்கிலேயர். தூதுவர்களை ஹைதர் மூன்று நாட்கள் அலைக்கழித்துக் காத்திருக்க வைத்தார். பின்னர் அவர் மெட்ராஸ் மீது தாக்குதல் நடத்த மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுக்கக் கைமாறிய தொகை வெளியில் தெரியவில்லை. எனினும் இந்த ஒப்பந்தம் ஆங்கிலேயருக்கு மரியாதைக் குறைவானது என்று மட்டும் மர்மமாகச் சென்று வந்த பிரிட்டிஷ் பிரதிநிதி தன் நாளேட்டில் எழுதி வைத்தார். இந்த அவமானத்திற்குப் பிறகு சுவரைக் கட்டுவது ஓர் அவசரத் தேவையாகக் கருதப்பட்டது.

போர் அபாயம் நிறைந்த நகரின் வடக்கிலும் மேற்கிலும் சுவரைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளித்து 1772 இல் அப்பணி நிறைவடைந்தது. சுவர் கட்டும் இடத்துக்கு வெளியே பெருவாரியாக மக்கள் ஏற்கெனவே வாழச் சென்றுவிட்டார்கள். அதனால் சுவரில் ஏழு வாயில்களைப் பொருத்தத் திட்டமிருந்தது. வாயில்களுக்குப் பெயர்கள் கூட இருந்தன. யானை வாசல், படகோட்டி வாசல் என்றும், திருவொற்றியூர் வாசல், எண்ணூர் வாசல் என்றும் அழைக்கப்பட்டன. மருத்துவமனை வாசல், புதிதாக நிறுவப்பட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று வர மக்களை அனுமதித்தது.

சுவரில் மொத்தம் 17 கொத்தளங்கள். இரண்டு கொத்தளங்களுக்கு இடையே உள்ள தூரம் 300 யார்ட். (ஒரு யார்ட் ஒரு மீட்டரை விடச் சற்றுக் குறைவான அளவு). படைவீரர்கள் அணிவகுத்துச் செல்லும் அளவுக்குச் சுவர் அகலமாக இருந்தது. வெடிமருந்துகள் மற்றும் பொருள்களை வழங்குவதற்காக மாட்டு வண்டிகள் முழு நீளத்திற்கும் சுவர் மேல் செல்ல முடியும். கனமான பீரங்கிகளை மேலே ஏற்ற சரிவான கட்டுமானங்கள் ஆங்காங்கே இருந்தன.

பிளாக் டவுன் சுற்றுச்சுவர் மூன்றரை மைல்களுக்குத் திட்டமிடப்பட்டது. ஒதுக்கப்பட்ட பட்ஜெட் அனைத்துப் பக்கங்களிலும் சுவர் கட்டப் போதுமானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை வடிவமைத்த பென்ஃபீல்டின் செலவுகள் எப்பொழுதும் திட்டத்தை மிஞ்சும். (இப்படித்தான் நவாபின் அரண்மனையைக் கட்டுகிறேன் பேர்வழி என்று நவாபையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டான்.)

சுவரில் முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்டபோது பணம் இல்லாமல் போனது. சொந்தப் பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தச் சுவர் பூர்வீக மக்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே இருப்பதால், அதன் செலவை அவர்களே ஏற்க வேண்டும் என்று கம்பெனி நினைத்தது. செலுத்த வேண்டிய தொகையானது சாதியின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. செட்டிகள் அதிகபட்சமாக 2,000 பகோடாக்களை (சுமார் 7000 ரூபாய்) செலுத்த வேண்டியிருந்தது.

கட்டடச் செலவுகளைச் சமாளிக்க கம்பெனி வரி ஒன்றை வசூலிக்கப்போகிறது என்றவுடன் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்த நிகழ்வைப் பற்றி விவாதித்து, மதராஸில் மக்கள் வரிச்சுமையால் துன்புறுத்தப்படுவதாகக் கூறியது. மக்களிடமும் கடுமையான எதிர்ப்பைக் கண்டபின், வரி விதிக்கப்படவில்லை. சுவர் முழுமையடையாமல் இருந்தது. அதை ஒட்டி ஓடிய சாலை, ‘வால் டாக்ஸ் ரோடு’ என்று பெயர் பெற்றது.

சில ஆண்டுகள் கழித்து மைசூர் இராணுவப் படையெடுப்பின் ஆபத்து ஏற்பட்டபோது, கம்பெனி சுவரின் மேல் பீரங்கிகளை ஏற்றியது. ஆனால் சுவரின் சக்திகளைச் சோதிக்கத் தயங்கினர் எதிரிகள். பின் அதுவே பழக்கமானது. அதன்பின் கறுப்பு நகரத்திற்கு அருகில் எதிரிகள் எங்கும் வராததற்கு அந்தச் சுவரே காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அதையெல்லாம் யார் யோசிப்பார்கள்?

சில திட்டங்கள் நீண்ட காலமாக இழுக்கப்படுவதால், அவை முடிவடைவதற்கு முன்பே அவை உபயோகமற்றதாகிவிடும். பிளாக்டவுன் சுவரின் கதியும் அப்படித்தான். காலம் செல்லச் செல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை தைரியமாக அணிவகுத்துச் செல்லும் எதிரி யாரும் சுற்றுவட்டாரத்தில் இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியா மற்றும் கிழக்கு ஆசியாவின் அதிகாரமிக்க எஜமானர்களாக மாறியபோது, சுவர் அதன் முக்கியத்துவத்தை இழந்தது மட்டுமல்லாமல், நகரத்தின் விரிவாக்கத்திற்கு ஒரு தடையாகவும் கருதப்பட்டது. ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டது.

சுவற்றுக்குள் இருந்த இத்தனை கற்களும் எங்கே போனது என்று நாம் ஆச்சரியப்படலாம். பெரும் விலை கொடுத்து வாங்கியபின், மக்களுக்கு கம்பெனி அவற்றை இலவசமாக நிச்சயம் வழங்கியிருக்காது.

அந்த நேரத்தில் கடல் அலை நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்கக் கடல் சுவராக புல்வார்க் அரண் கட்டப்பட்டது. நகரச் சுவரின் நீளம் மற்றும் உயரத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. கற்கள் அங்கு நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். நகருக்கு எதிரியிடமிருந்து ஒரு பாதுகாப்புக்குப் பதிலாக இயற்கையிலிருந்து ஒரு பாதுகாப்பு.

1957 இல், மாநகராட்சி மிஞ்சியிருந்த ஒரு சிறிய பகுதிச் சுவரைப் பூங்காவாக மாற்றியது. அதுதான் மாடிப் பூங்கா.

0

Google Map Link

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

1 thought on “கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *