Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #5 – ராஜா அண்ணாமலை மன்றம்

கட்டடம் சொல்லும் கதை #5 – ராஜா அண்ணாமலை மன்றம்

ராஜா அண்ணாமலை மன்றம்

1940களில் மதராஸில் தமிழ் தேசியம் மீண்டும் எழுந்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியத் தென்னக இசை போன்ற கலைகள் இந்தச் சர்ச்சையின் முதல் சுற்றில் ஈடுபட்டன.

1931களில் பேசத் தொடங்கிய தமிழ் சினிமா, இசையை மையமாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சினிமாவிலும் இருந்த 50 பாடல்கள், இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லாத கிராமபோன் ஒலிப்பதிவுகளால் மாகாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவின.

கேட்கும் இசையைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றவுடன் இசை ரசிகர்களிடமிருந்து முணுமுணுப்புகள் எழுந்தன. ‘சினிமாவில் அதைச் செய்ய முடியுமானால், எல்லா இசைக்கும் ஆணிவேராகக் கருதப்பட்ட பாரம்பரிய இசை ஏன் நமக்குப் புரியும் மொழியில் இருக்கக்கூடாது?’ என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

காரணம். கர்நாடக இசை பெரும்பாலும் தெலுங்கில்தான் பாடப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகள் இயற்றிய பாடல்களை மட்டும் பாடியபோது, சபா மேடைகளில் தமிழுக்கு மிகக் குறைவான இடமே இருந்தது. கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் எழுந்தபோது, அது ஏளனத்துடன் நிராகரிக்கப்பட்டது. மியூசிக் அகாடமியின் கருத்துப்படி தமிழ், இசைக்குத் தகுதியான மொழி இல்லை என்பது தான்.

மியூசிக் அகாடமி, ஒரு கச்சேரியை எப்படி நடத்த வேண்டும் மற்றும் அதன் உள்ளடக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கிக் கொள்ளவே தமிழுக்குக் குரல் கொடுத்த பல இசைக்கலைஞர்கள் (M.S. சுப்புலக்ஷ்மி முதல் கொண்டு) அகாடமியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் தமிழிசையை முன்னுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சித்தவர்கள் மலைத்தே போய்விட்டார்கள். பலம் வாய்ந்த மியூசிக் அகாடமியை சமூக ரீதியாக எதிர்க்க வேண்டியிருந்தது. தமிழில் புதிய பாடல்கள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. (தமிழ் கவிதைகள் கைவசம் இசையமைக்கப் போதுமானதாக இல்லை என்பது உண்மை).

ஆனால், ராஜாஜி ஆதரவுக் குரல் கொடுத்தார். தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசிகர் என்று சினிமா கலைஞர்களும் சுப்புலக்ஷ்மி போன்ற கர்னாடக இசைக் கலைஞர்களும் தமிழிசைக் கச்சேரிகள் நடத்தினர். பாபனாசம் சிவன் போன்றவர்கள் புதிய தமிழ் பாடல்களை எழுதித் தள்ளினார்கள். கல்கி, பத்திரிக்கையில் ஆதரவு தெரிவித்தார். ஆனாலும் போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒரு தலைவர் தேவைப்பட்டார்.

அண்ணாமலை செட்டியார், செட்டிநாட்டில் உள்ள கானாடுகாத்தானில் வணிகர் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் அவரது செல்வாக்கின் காரணமாக அவர் ஆங்கிலேயரிடமிருந்து ‘ராஜா’ என்ற பட்டத்தைப் பெற்று அரசனைப் போல் வாழ்ந்தார். அவரை எல்லோரும் பரவலாக அழைப்பது ராஜா சார் என்றுதான்.

அண்ணாமலையைப் போல் செல்வந்தர்கள் நகரத்தில் சிலர் இருந்தாலும், சமூகத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை. அரசியலில் அதீதச் செல்வாக்குக் கொண்டிருந்தார். உதாரணத்திற்கு, அண்ணாமலை தன் மகனை மதராஸ் நகர மேயராக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். (அவரது மூன்று மகன்களும் இந்த உயர்ந்த பதவியைப் பின்னர் வகித்தனர்.) தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தனது மகனுக்குத் தேர்தல் விதிமுறையை விட ஒரு வயது குறைவாக இருப்பதை யாரோ சுட்டிக்காட்ட, ஆளுநரிடம் பேசி தேர்தலையே ஓராண்டு தள்ளிவைத்தார்.

அண்ணாமலை தனது பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை நடத்தினார். முக்கியமாக அதில் இருந்த இசைக் கல்லூரியில் பல சிறந்த இசைக்கலைஞர்கள் பணியாற்றினர். கர்னாடக இசைத் துரையில் சர்ச்சை ஏற்பட்ட சமயத்தில் தற்செயலாகக் கலைகளின் புரவலராக உருவெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தார்.

தமிழிசை சங்கம் உருவாகக் காரணமும் மியூசிக் அகாடமி தான். வயலினில் மேலும் 3 நரம்புகளைச் சேர்த்த ஒரு வயலின் கலைஞரைக் கண்டிக்க மியூசிக் அகாடமி ஓர் ஒழுங்குமுறைக் குழுவைக் கூட்டி அவரை அதன் வாசலிலிருந்து தடுக்கிறது. அவர் சென்று தனது சொந்தச் சபாவைத் தொடங்கினார். அந்த ‘இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி’யைத் திறந்து வைக்க, நகரின் முக்கியப் பிரமுகர் ராஜா அண்ணாமலை செட்டியாரை வருமாறு அழைக்கிறார். ராஜாவுக்கு அப்போதுதான் தானே சொந்தச் சபாவை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

ராஜா ஆரம்பித்த சபாவுக்கு ராஜாஜி ‘தமிழ் இசை சங்கம்’ என்று பெயரிட்டார். சங்கமோ முதல் நாளிலிருந்தே மியூசிக் அகாடமியின் முக்கிய போட்டியாகத் தன்னை முன்னிறுத்தியது. எட்டு ஆண்டுகளாக ஆர்மேனியன் தெருவில் உள்ள செயின்ட் மேரி ஹாலில் நிகழ்ச்சிகளை நடத்தியது. அதுவும் அகாடமி நிகழ்ச்சிகள் நடக்கும் அதே நாட்களில். தமிழில் இசை புத்துணர்ச்சி பெற்றது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் , எதிரிகள் படையெடுக்கிறார்களா என்பதை முன்கூட்டியே பார்ப்பதற்காக ஆங்கிலேயர்கள் தங்கள் கோட்டையைச் சுற்றி ஒரு பெரிய திறந்தவெளியைப் பராமரித்தனர். அவ்விடம் ‘எஸ்பிளனேட்’ என்று அழைக்கப்பட்டது.

ஆனால் போர் முறைகள் மாறியது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர்களின் அதிகாரம் வானளாவியது. அதனால் அந்த இடம் நீதிமன்றம் மற்றும் சட்டக் கல்லூரி போன்ற பிற பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.

எஸ்பிளனேடில் காலியாகக் கிடந்த 23 கிரவுண்ட் நிலம் தமிழிசைச் சங்கத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது. சித்தாலே என்ற கட்டடக்கலைஞர், (விரைவில் எல்ஐசி கட்டடத்தைக் கட்டி புகழ் பெற்றவர்), இரண்டு மாடிக் கட்டடத்தை வடிவமைத்தார்.

இது செட்டிநாட்டுக் கட்டடக்கலை மற்றும் பிரெஞ்சு நாட்டு ஆர்ட் டெகோ முறை ஆகியவற்றின் கலவையாக இருந்தது.

வளைந்த படிக்கட்டுகள், பர்மா தேக்குமர வேலைப்பாடுகள் மற்றும் மொசைக் தளங்களைக் கொண்டு சிறப்பாக உருவெடுத்தது. ஆனால் வேலை முடிவதற்குள் ராஜா இறந்துவிட்டார்.

இக்கட்டடத்திற்கு ‘தமிழ் இசை சங்கம்’ என்று பெயர் சூட்டப்படும் என மக்கள் கருதினர். ஆனால் பலரும் மறைந்த ராஜாவை நினைவுகூர ஆசைப்பட்டதால், ‘ராஜா அண்ணாமலை மன்றம்’ எனப் பெயர் கொண்டது.

ராஜாவின் பிரம்மாண்டச் சிலை 1964ம் ஆண்டில் சங்கத்துக்கு முன் நிறுவப்பட்டது.

எஸ்பிளனேட் சாலையில் சங்கத்துக்கு எதிரே இருந்த திருவிதாங்கூர் ராஜாவின் (சேரர்களின் வம்சாவளியைச் சேர்ந்த ஓர் உண்மையான ராஜா) சிலையை விட இது மிகப் பெரியதாக இருப்பதை உறுதி செய்தனர்.

ஐம்பதுகளின் பெரும்பாலான சபா நிகழ்ச்சிகள் வாடகை இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓலைக் கூரையின் கீழ் நடத்தப்பட்டபோது, திடமான கட்டடத்தில் விழாவை நடத்திய முதல் பெரிய சபை இதுவாகும். தொடக்க விழாவில், மியூசிக் அகாடமியை ஒருபோதும் விரும்பாத ராஜாஜி, போட்டி சபா அரங்கங்கள் தனக்கு கிஷ்கிந்தாவை (குரங்கு நிலம்) நினைவூட்டுவதாகக் கேலி செய்தார்.

கலைக் கூடம் இசை ஆர்வலர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் இருந்தது. மெட்ராஸில் முதன்முறையாக, நவீன ஒலி அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் அனைத்துச் சுவர்களும் எதிரொலியைத் தடுக்கும் ‘அகவ்ஸ்டிக்’ முறைகள் பின்பற்றப்பட்டன.

800 இருக்கைகள், மெதுவாக வளைந்த வரிசைகளில், படிகள் போன்ற தரையில் அமைத்து, மேடையின் பார்வையை யாரும் தவறவிடாமல் பார்த்துக் கொண்டனர். மன்றமோ 48 அடி x 35 அடி பரப்பளவு கொண்ட மேடையுடன் நாடகக் குழுக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் காலம் மாறியது. ராஜா அண்ணாமலை மன்றம் மெட்ராஸ் – ஜார்ஜ் டவுனில் கர்நாடக இசையின் மையத்தில் கட்டப்பட்டது. ஏறக்குறைய அனைத்து இசைக்கலைஞர்களும் ஆரம்பத்தில் அங்கு வாழ்ந்தனர். இருப்பினும், காலப்போக்கில், நகரத்தின் தெற்கு நோக்கி இசையை விரும்பும் ரசிகர்களின் இடம்பெயர்வு நிச்சயமாக, மன்றத்தின் மகிமை நிழலாடியது. ஆனால் இன்றும் செயல்பட்டு வருகிறது.

தாய் மொழியில் இசையைக் கேட்க விரும்புவோரின் ஆசையை நிறைவேற்றிய முதல் மைல் கல் இது என்ற பெருமையைக் கொண்ட கட்டடம்.

 

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *