நுங்கம்பாக்கத்தில் உள்ள காலேஜ் ரோட்டுக்கு, அங்கு இயங்கி வரும் புகழ்பெற்ற பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் பெயர்தான் சூட்டப்பட்டது என்று பலரும் இன்று நம்புகிறார்கள்.
இல்லவே இல்லை!
மெட்ராஸை பெருமைப்படுத்தும் பல நிறுவனங்கள் கல்லூரிச் சாலையில் உள்ளன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இங்குள்ள வானிலை ஆய்வு மையம் நகரின் மழை மற்றும் வெப்பநிலையைப் பதிவு செய்தது. மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி நூலகத்தில் மெட்ராஸை விட (400 ஆண்டுகள்) பழமையான லத்தீன் மொழி புத்தகங்கள் உள்ளன.
நகரத்தில் உள்ள வேறு எந்தக் கல்லூரிக்கும் முன்பாக இந்தச் சாலையில் ஒரு பழைய கல்லூரி செயல்பட்டது. இன்று உள்ள கல்வி இயக்குநர் வளாகத்தில் இருந்த கிழக்கிந்திய நிறுவனக் கல்லூரியின் நினைவாகத்தான் சாலை பெயரிடப்பட்டது. இப்பகுதியின் வளர்ச்சிக்கு மையமாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி கல்லூரி 1812 மற்றும் 1854 ஆண்டுகளுக்கு இடையில் இங்குச் செயல்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் மீது தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதில் ஈடுபட்டபோது, அது பல இந்திய ராஜ்யங்களைக் கைப்பற்றியது. அதனால் அதிகாரிகளைப் பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கு பழக்கப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. ஒரு கலெக்டராக அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தாயகத்தை விடப் பெரிய நிலத்தை ஆளுவார்கள் என்பதால் அந்தப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. அதிகாரிகள் உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொண்டால், அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாறுவார்கள் என்று கம்பெனி நம்பியது.
கிழக்கிந்திய கம்பெனியின் கல்லூரி உண்மையில் ஒரு தனித்துவமான கல்வி நிறுவனம். அதன் பாடத்திட்டம், மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லாம் மற்றக் கல்லூரிகளில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தன. அது மட்டுமா? கல்லூரியின் வரலாற்றுத் தாக்கம் இன்று வரை உணரப்படுகிறது.
ஐரோப்பியப் பேராசிரியர்கள் இந்திய மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது போலல்லாமல், இந்தக் கல்லூரி தலைகீழாக இருந்தது. அதன் மாணவர்கள் நாட்டை ஆளப் பயிற்சி பெற்ற முக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள். அவர்களின் ஆசிரியர்கள் தமிழ் பண்டிதர்கள், உருது கற்பிக்கும் மௌல்விகள், சமஸ்கிருத வல்லுநர்கள் மற்றும் பிற மொழி ஆசிரியர்கள்.
இந்த அதிசயக் கல்லூரி ஒரு வெள்ளைக்காரனின் கனவு. பிரிட்டிஷ் மேலாதிக்கம் நாடு முழுவதும் பரவியபோது, பிரான்சிஸ் வைட் எல்லிஸ் கப்பலில் வந்து மெட்ராஸில் இறங்கினார். நிறுவனத்தில் சாதாரணக் குமாஸ்தாவாகச் சேர்ந்த அவர், மெட்ராஸ் கலெக்டராக உயர 12 வருடங்கள் மட்டுமே ஆனது.
எல்லிஸ் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மொழிகளால் பெரிதும் கவரப்பட்டார். எல்லிஸ் இந்திய பாணி ஆடைகளை அணிய விரும்பியதால், அது அவரது நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவர் தமிழில் கவிதைகள் எழுதுவார். அதற்காக ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்’ என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டார். எல்லிஸ் தனது அரசரான மூன்றாம் ஜார்ஜுக்கு, சோழர் பாணியில் மெய்க்கீர்த்தி எழுதியது சிறப்பு. எல்லிஸ் தமிழில் மட்டுமல்ல எட்டு மொழிகளில் வல்லுனர்.
எல்லிஸ்தான் மெட்ராஸில் ஒரு கல்லூரி தேவை என்று முன்மொழிந்தார். கல்லூரிக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், கட்டடங்களைத் திட்டமிடுவதிலும், கல்லூரிக்கு ஆசிரியர்களை நியமிப்பதிலும் முக்கியப் பங்காற்றினார். எல்லிஸ் பிராமணர் அல்லாத சாதிகளிலிருந்து ஆசிரியர்களை நியமித்தார். கல்லூரியில் தமிழ் மத நூல்களில் நன்கு தேர்ச்சி பெற்ற பண்டாரம் மற்றும் வெள்ளாளச் சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருந்தார்கள்.
கல்லூரியின் தலைமை ஆசிரியர் ஓர் இந்தியர். அவருக்குப் பல கடமைகள் இருந்தன. கற்பித்தல் மற்றும் பல மொழிகளில் புத்தகங்களை அச்சிடுதல் உட்பட. ஆம். கல்லூரிக்குச் சொந்தமாக ஒரு அச்சகம் இருந்தது. இந்தியாவின் முதல் பன்மொழி அகராதிகள் இங்குதான் அச்சிடப்பட்டன.
மாணவர்கள் இரண்டு வருடங்கள் படித்தபின் ஓர் இறுதித் தேர்வு எழுதினார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்பட்டு, பதவி உயர்வும் வழங்கப்பட்டது. தனது அரண்மனையிலிருந்து, கூவம் ஆற்றில் படகில் வந்த ஆளுநர் சான்றிதழை வழங்குவார். இன்றும் கல்லூரியின் பின்புறத்தில் ஆற்றையொட்டி ‘நதி வாயில்’ என்ற கதவு உள்ளது.
எல்லிஸ் திருவள்ளுவர் மீது அளவற்ற பற்று கொண்டிருந்தார். ஜடாமுடி கொண்ட ஆதி காலத் துறவி எப்படி இருந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து, நாணயங்களில் காட்சிப்படுத்தி அச்சிட்டார். திருக்குறளை முதன்முறையாக மொழிபெயர்த்து அச்சிட எல்லிஸ் முயற்சித்தது மட்டுமல்லாமல், கலெக்டராக இருந்தபோது, திருக்குறள் பாடல்களைக் கல்லில் பொறித்து, நகர் முழுவதும் அவர் தோண்டிய 27 கிணறுகளின் சுவர்களில் நிறுவினார்.
கல்லூரிக்கு, பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, அறிவுப் பரிமாற்றம் செய்வதே முக்கிய நோக்கமாய் இருந்தது. ஆனால் கல்லூரியில் ஒரே அறையில் பல்வேறு இந்திய மொழிகளின் ஆசிரியர்களை அமர்த்தியதால், எல்லிஸுக்குக் கல்லூரி ஒரு மொழியியல் ஆய்வகம் போல் வேலை செய்து, ஆசிய மொழியியல் நெறிமுறைகளில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
ஆம். எல்லிஸின் மிகப் பெரிய சாதனை திராவிட மொழிக் குடும்பத்தைக் கண்டுபிடித்ததுதான். தென்னக மொழிகளில் சமஸ்கிருதத்திலிருந்து ஏராளமான கடன் வார்த்தைகள் இருந்தாலும், அம்மொழிகள் வடமொழியிலிருந்து தோன்றியவை அல்ல என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பு பிற்காலத்தில் கால்ட்வெல் போன்றோரால் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
எல்லிஸ் 40 வயதை எட்டியபோது, ராம்நாட்டில் ஒரு சுற்றுப்பயணத்தில் இருந்தபோது வயிற்றில் நோய் ஏற்பட்டு இறந்தார். 1852 ஆம் ஆண்டு கல்லூரியும் மூடப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கிந்திய நிறுவனமே செயலிழந்த பின், விக்டோரியா ராணி நாட்டை தன் வசம் எடுத்து கொண்டாள். கல்லூரி வளாகம் பொதுக்கல்வி இயக்குநரகத்தால் கையகப்படுத்தப்பட்டது.
இதனாலெல்லாம் மக்கள் கல்லூரியை மறந்துவிட்டாலும், எல்லிஸின் திராவிட மொழிக் கண்டுபிடிப்பு இன்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்ல.
சென்னை நகரம் அறிவாற்றல் அடிப்படையிலான வணிகங்களால், அதன் அறிவுச் சுற்றுச்சூழல் கொடுக்கும் கல்வி வாய்ப்புகளால், அது படிப்பறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தால் உலகெங்கும் பிரபலமானது.
இவை அனைத்தும் நிச்சயமாக இந்தக் கிழக்கிந்திய கம்பெனியின் கல்லூரியில்தான் தொடங்கியிருக்க வேண்டும்.
0