Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #8 – ஐஸ் ஹவுஸ்

கட்டடம் சொல்லும் கதை #8 – ஐஸ் ஹவுஸ்

ஐஸ் ஹவுஸ்

மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.

ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும். இருப்பினும் அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.

அந்த சுவாரசியமான கதை கொண்ட இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக இருந்தது.

அதுவரை பனிக்கட்டியைப் பார்த்திராத மெட்ராஸ் மக்களுக்கு ஆச்சரியம். 1800களில் மெட்ராஸில் ஒரு சிலரே ஒரு பனிக்கட்டியைப் பார்த்திருக்கிறார்கள். (ஆலங்கட்டி மழையின் போது வெளியில் இருக்கும் அதிர்ஷ்டம் அல்லது இமயமலைக்கு விஜயம் செய்திருந்தால்). தமிழர் சொற்களஞ்சியத்தில் அதற்காக ஒரு வார்த்தைகூட இல்லை. காற்றில் உலவும் மூடுபனியை யாராவது திடப்படுத்தினால், அது இப்படித்தான் இருக்கும் என யூகித்து, பனிக்கட்டி என்று அவசரமாக அதை அழைத்தனர்.

இன்று நாம் உணவு, மருத்துவம் மற்றும் நூறுவிதப் பயன்பாடுகளில் ஐஸ்கட்டியை உபயோகிக்கிறோம். இன்றைய வெப்பமான காலநிலையில்கூட மெட்ராஸில் பனிக்கட்டி என்பது ஒரு பொருட்டல்ல. நகரில் மட்டுமல்லாமல் பட்டி தொட்டியெங்கும் கிடைக்கிறது.

ஆனால் அன்று சூடான மெட்ராஸில் இயற்கையான ஐஸ் கிடைக்காது. அதைத் தயாரிக்க எந்த இயந்திரமும் இல்லை. அதை உருகாமல் சேமிக்கும் முறைகளும் தெரியாது. அப்படி ஓர் இடத்தில் ஐஸ் விற்கப்பட்டால் பெரிய லாபம் கிடைக்கும் என்று நினைத்து இந்த மாபெரும் வணிக நிறுவனத்தைத் திட்டமிட்டவர் பள்ளிப்படிப்பைக் கூடப் பாதியில் நிறுத்தியவர். ஆம். தனி ஒரு மனிதனின் உறுதியின் காரணமாக இந்த வர்த்தகம் சாத்தியமானது. அதுவரை அறிந்திராத இத்தகைய உறைபனியான இன்பத்தை மெட்ராஸில் அறிமுகப்படுத்தியவர், அமெரிக்கர். ஃபிரடெரிக் டியூடர்.

கியூபா, சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்ற தீவு. அது அமெரிக்கர்களுக்கு விருப்பமான விடுமுறை இடமாகவும் இருந்தது. ஒருமுறை கோடையில் டியூடர் அங்குச் சென்றார். ஹோட்டலில் குளிரூட்டப்படாத பானங்களை வாங்கியபோது அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. கூடவே ஒரு யோசனையும்தான். ‘இயற்கையாக குளிர்ந்த இடங்களில் மட்டுமே காணப்பட்ட பனிக்கட்டிகளை எடுத்து வந்து கியூபாவில் ஏன் விற்கக்கூடாது?’

காகிதத்தில் கணக்கிடும் போது முதலில் அது மிகவும் லாபகரமானதாகக் காணப்பட்டது. குளிர்காலத்தில் அமெரிக்க ஏரிகளின் மேற்பரப்பில் பனிக்கட்டி இலவசமாகக் கிடைத்தது. அதைச் செலவின்றி வெட்டி எடுக்க நீக்ரோ அடிமைகள் ஏராளமாக இருந்தனர். பல கப்பல்கள் பாஸ்டனில் இருந்து தங்கள் பொருள்களை இறக்கிவிட்டுக் காலியாகத்தான் திரும்பிக்கொண்டிருந்தன. மிக முக்கியமாக, பனி உருகாமல் இருக்க மரத்தூள் அருகில் உள்ள மரம் வெட்டும் தொழிற்சாலைகளின் கழிவுப் பொருளாக அதிக அளவில் கிடைத்தது.

ஆனால் பல மலிவான உள்ளீடுகள் இருந்தபோதிலும் அந்த வணிகம் மிகவும் கடினமாகத்தான் இருந்தது. டியூடர் பெரும் கடனில் சிக்கினார். முட்டாள்தனமான கனவைக் கொண்ட ஒரு பைத்தியக்காரன் என்றே நகரம் கைகொட்டிச் சிரித்தது.

ஆனால் சில நாட்களில் கியூபாவுக்குச் சில கப்பல்களில் ஐஸ்கட்டியை வெற்றிகரமாகச் சென்று விற்றபின் அவருக்கு அசாத்தியத் தைரியம் வந்தது. ட்யூடர் உலக வரைபடத்தில் பனிக்கட்டி தேவைப்படக்கூடிய அனைத்து வெப்பமான இடங்களின் பட்டியலை உருவாக்கினார்.

அந்தப் பட்டியலில் ஆசியா முதலிடத்தில் இருந்தது. மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் கொழும்பு போன்ற பல நகரங்களில் கடல் முகப்பு நிலத்தைக் கையகப்படுத்தினார் டியூடர். சூரியனின் வெப்பம் உள்ளே நுழைவதை நிறுத்தும் வட்ட வடிவக் கட்டடங்களைக் கட்டினார். எல்லாம் இரட்டைச் சுவர் கொண்ட கட்டடங்கள்.

1880ல் ‘Nicholas & Company’ எடுத்த புகைப்படம்

டியூடர் தனது பனிக்கட்டிகளை விற்ற மிக வெப்பமான இடம் மெட்ராஸாகத்தான் இருக்கும். மெட்ராஸில் ‘ஐஸ் ஹவுஸ்’ என்று, ஒரு கடலோர வட்ட வடிவக் கட்டடம் அரை நூற்றாண்டுக் காலமாக அமெரிக்க கொடியைப் பெருமையுடன் பறக்கவிட்டது.

நான்கு மாதங்களுக்கு முன்பு உறைந்த அமெரிக்க ஏரிகளில் இருந்து 150 டன் பனிக்கட்டி, இரண்டு பெருங்கடல்களையும் பூமத்திய ரேகையையும் இரண்டு முறை கடந்து, சரக்குகளில் மூன்றில் ஒரு பகுதியை இழந்த பிறகு, மெட்ராஸ் வந்தடைந்தது.

கப்பல் ஐஸ் ஹவுஸ் எதிரே நிற்கும். படகுகள் பனிக்கட்டிகளைக் கரைக்கு மாற்றியபின் ஐஸ் ஹவுஸின் அடித்தளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வார்கள்.

இதுவரை பனிக்கட்டிகளைப் பார்த்திராத மெட்ராஸ்வாசிகள், ராட்சத பனிக்கட்டிகள் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டபோது பார்த்து வியப்படைந்தனர். ‘அமெரிக்காவில் மரங்களில் ஐஸ் வளர்கிறதா?’ என்று வியந்தனர்.

மெட்ராஸில் இருந்த ஐரோப்பியர்களுக்கு ஐஸ் என்பது தாயகத்தை நினைவூட்டிய வரவேற்கத்தக்கப் பரிசாக இருந்தது. அதனால் டியூடர் மெட்ராஸில் சுங்கச்சாவடியில் சுலபமாக முன்னுரிமை கேட்டுப் பெற்றார்.

கப்பல் பரிசோதிக்கும் வரிசையில் நிற்கும்போது, ஐஸ் உருகிவிடும் என்பதால் சுங்க வரி எதுவும் இல்லை. சுங்கச்சாவடி சம்பிரதாயங்கள் ஏதும் இல்லை. மற்றும் டியூடரின் கப்பல்கள் மட்டும் இரவில் பனிக்கட்டிகளை இறக்க அனுமதிக்கப்பட்டன.

ஒரு கப்பல் பயணத்தில் டியூடர் $3,300 லாபம் அடைந்தார். இது 1830 களில் மிகப்பெரிய தொகையாக இருந்தது. அது டியூடரை மிகவும் பணக்காரராக்கியது மட்டுமல்லாமல். ஃபிரடெரிக் டியூடர் ‘ஐஸ் கிங்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆனால் ஒரு சிறிய தொழில்நுட்ப மாற்றம் – குளிரூட்டல் செயல்முறை – இந்தக் கடல் கடந்த வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை அவரது வணிகம் நீடித்தது. பின்னர் ‘ஐஸ் கிங்’ திவாலானார்.

பின் ஐஸ் ஹவுஸ் கட்டடம் பலமுறை விற்கப்பட்டது. கடலின் அற்புதமான காட்சிகளைக் கொண்டிருந்தாலும், வட்டமான வீட்டில் வாழ்வதற்கு மக்கள் சிரமப்பட்டனர். சுவாமி விவேகானந்தருக்கு இரண்டாவது மெட்ராஸ் பயணத்தின் போது இந்த ஐஸ் ஹவுஸ்தான் தங்கும் இடம். அவர் தினமும் கடற்கரையில் நடந்து சென்று மீனவர்களுடன் உரையாடி நட்புடன் மல்யுத்தம் செய்வாராம். அவர் இங்கு மறக்க முடியாத சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

பின் சகோதரி சுப்புலட்சுமி இங்கே பிராமண விதவை விடுதியைத் தொடங்கினார். ஒரு சாதியின் விதவைகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பொதுமக்களின் ஆட்சேபணைகள் இருந்தாலும், விதவையின் இல்லம் ஒரு புரட்சிகர பொது நல நிறுவனம்தான்.

கட்டடம் (மற்றும் அந்தப் பகுதியும்), பல முறை பெயர் மாற்றப்பட்டாலும், இன்னும் ‘ஐஸ் ஹவுஸ்’ என்றுதான் நினைவுகூரப்படுகிறது.

இந்த அசாதாரண வணிகம் இலக்கியத்தில் நினைவில் இருக்கும். அமெரிக்க ஏரிகளில் ஐஸ் அறுவடையை நேரில் பார்த்த கவிஞர் ஹென்றி தோரோ, 1854 ஆம் ஆண்டு ஒரு கவிதையில்,

‘மெட்ராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தாவில் வசிப்பவர்கள்
என் கிணற்றில் தண்ணீர் குடிக்கிறார்கள்’

என்று பெருமையாகக் கவிநயத்துடன் கூறினார்.

0

பகிர:
nv-author-image

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

1 thought on “கட்டடம் சொல்லும் கதை #8 – ஐஸ் ஹவுஸ்”

  1. ஜெயமோகனின் “வெள்ளையானை” நாவல் இந்த ஐஸ் ஹவுஸ் பின்புலத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது . அதன் பிறகு விக்கி சென்று பார்த்தால் கட்டிடம் பிறந்த கதை தெரிந்தது. நன்றி

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *