Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி

கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி

ராணி மேரி கல்லூரி

ஜமீன்தார்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும் ‘நியூவிங்டன் பிரின்ஸ் பள்ளி’ தேனாம்பேட்டையில் இருந்தது. அதில் துணை முதல்வராக இருந்தவர் கிளமென்ட் டி லா ஹே. ஆங்கிலேயர்களின் விருப்பமான விளையாட்டான கிரிக்கெட்டை கிளெமென்ட் நன்றாக விளையாடக்கூடியவர் என்பதால், மெட்ராஸில் உள்ள வெள்ளையர் சமுதாயத்தில் அவர் மிகவும் பிரபலமாக இருந்தார். மெட்ராஸ் கவர்னர் பென்ட்லேண்ட் கூட அவருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். கிளமென்ட் தனது அழகான மனைவியுடன் மெட்ராஸின் பிரிட்டிஷ் சமூக நிகழ்வுகளில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார்.

ஐரோப்பாவிலிருந்து கிளமென்ட்டை பார்க்க வந்த அவரது சகோதரி டோரதி, மெட்ராஸின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் அவருடன் சென்று வந்தபோது சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியொன்றில் மாகாண கவர்னருடன் அறிமுகம் கிடைத்தது.

டோரதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கி ஆசிரியைக்கான பயிற்சியும் பெற்றவர். அதை அறிந்த கவர்னர், மெட்ராஸில் பெண்களுக்கெனப் பிரத்தியேகமான கல்லூரியைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பெண்கள் கல்வியை ஊக்குவித்த வரலாற்றைக் கொண்டிருந்த மெட்ராஸ், பிரிட்டிஷ் இந்தியாவில் முற்போக்கான மாகாணங்களில் ஒன்று. 1875 ஆம் ஆண்டிலேயே பெண்கள் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் தங்கள் பெண்களை இருபாலர் கல்லூரிகளுக்கு அனுப்பப் பெரும்பாலான பெற்றோர்கள் தயங்கினர். அதனால் பெண்களுக்கான பிரத்தியேகக் கல்லூரிகள் தான் தீர்வு என்று அரசு எண்ணிய சமயம் அது. (திருநெல்வேலியில் மட்டும் ஒரே ஒரு மகளிர் கல்லூரி செயல்பட்டு வந்தது.)

ஆசிரியராகப் பயிற்சி பெற்ற டோரதி வகுப்பறையில் பாடம் கற்பிப்பதில் ஓர் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. எனவே, கவர்னரின் வற்புறுத்தலின் பேரில், பொதுக்கல்வி இயக்குனர், தனக்குப் புதிய பெண்களின் முதல்வர் பதவியை வழங்கியபோது, டோரதி தயக்கம் காட்டினார்.

கவர்னர் பென்ட்லேண்ட் மற்றும் சகோதரர் கிளெமென்ட் ஆகியோர் அவளிடம் முறையிட்டபின், ஒரு கல்வியாண்டுக்கு மட்டும் முயற்சி செய்ய டோரதி தயக்கத்துடன் ஒப்புக்கொண்டாள்.

ஆனால் ஆரம்பத்தில் தயங்கிய டோரதி, இருபது ஆண்டுகளுக்குப் பெண் கல்வியை மெட்ராஸில் வளர்க்க தங்கிவிட்டார். ஆனால் மெட்ராஸில் கல்வி கற்பிக்க வந்த டோரதியின் சகோதரன் கிளமென்ட், ஒரு கசப்பான சம்பவத்தில், தன் அழகான மனைவி சம்பந்தப்பட்ட அவதூறில் ஒரு மாணவனால் சுடப்பட்டார் என்பது ஒரு முரண்பாடான விஷயம்.

இப்படித்தான் 1914-ல் மெட்ராஸில் முதல் மகளிர் கல்லூரி, (மாகாணத்தில் இரண்டாவது) தொடங்கப்பட்டது. கல்லூரிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம், வங்கக் கடலைப் பார்த்த கண் கவர் இடமாக இருந்தது. 1800களின் முற்பகுதியில், மெட்ராஸ் ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பிரான்சிஸ் கேப்பர் மெரினாவில் ஒரு வீட்டுக்குக் குடிபுகுந்தார். அப்போது வங்கக் கடலை எதிர்கொள்ளும் வீட்டில் வாழ அதிர்ஷ்டம் கொண்ட இன்னும் ஒருவர் நவாப் மட்டுமே. மற்றவையெல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தமான இடங்கள்தான். 1859ஆம் ஆண்டிலேயே, மெட்ராஸ் பிரசிடென்சியின் கையேடுகளில் இந்த இடத்தில் ஒரு சைவ ஹோட்டல் இருந்ததென்ற குறிப்பு இருக்கிறது. பல கைகள் மாறி அவ்விடமே கல்லூரியின் மையமாக மாறியது.

ஆரம்பத்தில் ‘மெட்ராஸ் மகளிர் கல்லூரி’ என்று அழைக்கப்பட்ட கல்லூரிக்கு, 1917 ஆம் ஆண்டு பேரரசின் ராணி, மேரி தனது பெயரை வைக்க அனுமதி வழங்கினாள். கல்லூரிக் கட்டடத்தில் ராணியின் அழகான பளிங்கு சிலை இன்றும் உள்ளது. 1905 ஆம் ஆண்டு இளவரசியாக மேரி மெட்ராஸுக்கு வந்தபோது கருப்பர் நகரத்திற்கு அவரது கணவர் ஜார்ஜின் பெயர் சூட்டப்பட்டது. மெட்ராஸில், காலனித்துவ ஆட்சியில் அரச குடும்பம் சார்ந்த பெயரிடப்பட்டு இன்றும் மீதமுள்ள அடையாளங்கள் இவை இரண்டு மட்டுமே.

டோரதி ஒரு வகுப்பறை மற்றும் 37 மாணவிகளுடன் கல்லூரியைத் தொடங்கினார். போகப் போகப் பெண்களுக்காக மட்டுமே நடக்கும் கல்லூரிக்கு மகள்களை அனுப்பப் பெற்றோர்கள் தயாராக இருந்ததால், கல்லூரி மெட்ராஸ் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் பராமரிப்பின்றிக் கல்லூரிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில் இருந்தன. மாணவிகள் தங்கும் விடுதிகள் இடிந்து விழும் நிலையில் இருந்தன. கல்லூரியில் அறிவியல் ஆய்வகங்கள் உட்பட போதுமான வசதிகள் இல்லை. டோரதி, கல்லூரியின் அறிவியல் மாணவிகளை பிரசிடென்சி கல்லூரிக்கு அதிகாலை (அந்த மாணவர்கள் கல்லூரிக்கு வரும் முன்) அழைத்துச் செல்லக் குதிரை ஜட்காக்களை ஏற்பாடு செய்தார்.

டோரதியின் முயற்சியால் விரைவில் நிதியுதவி வந்தது. கல்லூரி வளாகத்தைப் பெரிதாக்க, தெற்கில் இரண்டு சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டன. பென்ட்லேண்ட் ஹவுஸ், ஸ்டோன் ஹவுஸ் மற்றும் ஜெய்ப்பூர் ஹவுஸ் என்ற விடுதிகள் கட்டப்பட்டன.

20 ஆண்டுகளுக்குப் பிறகு டோரதி இந்தியாவை விட்டு வெளியேறியபோது ராணி மேரி கல்லூரி ஒரு அற்புதமான நிறுவனமாக வளர்ந்திருந்தது. இன்றும் சென்னையில் முக்கியமான கல்வி நிறுவனமாக உள்ளது.

கடற்கரையில் இருந்ததால், மாணவர்கள் வரலாற்றைக் காணும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது. கல்லூரி ஆரம்பித்த ஆண்டு, நவராத்திரியின் போது, ஜெர்மானியக் கப்பலான எம்டன் சுடும் சத்தம் அருகிலேயே கேட்டதுடன், வெடிகுண்டுகள் தீப்பிழம்புகளாய் தரையிறங்கும் காட்சியும் தெரிந்தது. மாணவிகளை விடுதிகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு டோரதி உத்தரவிட்டார். ஆனால் மறுநாள் காலை, துணிச்சலானவர்களில் சிலர், தங்கள் கண்களால் சேதத்தைப் பார்க்கத் துறைமுகத்திற்குத் தங்கள் சைக்கிளில் சென்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியக் குண்டுவீச்சு அச்சுறுத்தல் இருந்தது. எனவே கல்லூரியின் டென்னிஸ் மைதானங்களைத் தோண்டி பெண்கள் பாதுகாப்புப் பதுங்கு குழிகளை அமைத்தனர். போர்க்காலக் கட்டுப்பாடுகளைச் சமாளிக்கும் விதமாகத் தங்கும் விடுதிகளைத் தன்னிறைவு அடையச் செய்ய, பெண்கள் காய்கறிகளுக்கானத் தோட்டம் அமைத்தனர். கல்லூரியின் சுவர்களை ஜப்பானிய விமானங்களின் பார்வையிலிருந்து மறைக்க, சாம்பல் வண்ணம் பூசப்பட்டது.

பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குக் குயின் மேரிஸில், விடுதியில் தங்கும் வசதிகள் வழங்கப்பட்டன. இதனால்தான் விடுதலை வேட்கையும், அரசியல் உணர்வும் உள் நுழைந்தன என்று நிர்வாகிகள் நினைத்தார்களாம். சுதந்திர சத்தியாக்கிரகத்தின் போது, மாணவிகள் கல்லூரிக்கு முன் இருந்த புல்வெளியில் போராட்டம் நடத்தியது வெள்ளைக்கார ஆசிரியர்களுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நடக்கும்போது நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குயின் மேரி மாணவிகள் அதிக எண்ணிக்கையில் போராடக் கல்லூரியை விட்டு வெளியே வந்தனர். அவர்களில் இருவர், சகுந்தலா மற்றும் மாயா. வேலூர் சிறையில்கூட சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 1943ஆம் ஆண்டு கல்லூரியில் நடைபெற்ற அனைத்துக் கொண்டாட்டங்களையும் மாணவர்கள் ரத்து செய்தனர்.

ராணி மேரி பல்வேறு துறைகளில் மெட்ராஸ் சமூகத்திற்குப் பெரும் ஆதாயத்தை வழங்கியிருக்கிறது. நாட்டின் பல இடங்களிலிருந்து திறமையான மாணவர்களை ஈர்த்துள்ளது.

இந்தக் கல்லூரி அருகாமையில் இருந்ததால்தான் அடுத்தக் கட்டடத்தில் விதவைகளுக்கான இல்லமொன்று சகோதரி சுப்புலட்சுமியால் தொடங்கப்பட்டது. பல விதவைகள் இங்குப் பட்டப்படிப்பு முடித்து சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

பிற்காலத்தில் கல்லூரியை இடித்து சட்ட மன்றத்தையும் தலைமைச் செயலகத்தையும் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இங்கு மாற்ற விரும்பினார். ஆனால் தடையாக இருந்தது கடற்கரையிலிருந்த கண்ணகி சிலை. கண்ணகி கல்லூரியின் திசையில் விரல் நீட்டியிருந்தாள். கண்ணகி இதற்கு முன்பு கோபமாகச் சுட்டிக் காட்டிய மதுரை நகரம் எரிந்து சாம்பலானது என்பது ஜோசியர்களால் ஜெயாவுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. கோபமான கண்ணகியின் சிலையை இரவோடு இரவாக அகற்றினார் ஜெயா.

ஆனால் மாணவிகளின் கிளர்ச்சி தலைமைச் செயலகத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கல்லூரி கல்லூரியாகவே தொடர்கிறது.

0

பகிர:
nv-author-image

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

4 thoughts on “கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி”

 1. பொ.சங்கர்

  தங்களின் கட்டிடம் சொல்லும் செய்தி பகுதியை வாசித்து மகிழ்ந்தேன். மிக நுணுக்கமான வரலாற்றுச் செய்திகளை மிக அழகாக கோர்வையுடன் தங்கள் எடுத்துச் செல்லும் பாங்கு வியக்கத்தக்கது. சென்னையின் வரலாறு சொல்லும் கட்டிடங்களின் வரலாற்றை அறிய ஆவலுடன் உள்ளோம்.

 2. Thanks for the great article! But it gives us a great pain to know the distorted history on the reasons of putting hold on the “Secretariat”.
  Please recheck and understand the source on available court judgements and the then Principal including the Alumni.
  Once again thanks for a very nice article!
  Best Wishes,
  Santhana Krishnan.

 3. Excellent article and lot of trivia about Queen Mary’s College. As an alumni of the college, I am delighted to know the important instances during the early days of the the college inauguration. Thank you Venkatesh for summarizing the details of QMC !!

 4. As an alumni of Queen Marys college, I feel intrigued to learn the history of the college which I was unaware of , till now.
  Thank you Venkatesh, for shedding the light over the finer details from the college history.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *