சைனா பஜாரின் கிளைச் சாலையான ஆர்மேனியத் தெரு, பிளாக் டவுனில் பாரம்பரிய நிதி மையமாக இருந்தது. ஐரோப்பாவில் துருக்கியர்களால் தங்கள் நாடு அழிக்கப்பட்ட பின்னர் ஆர்மேனிய புலம் பெயர்ந்தோர் இங்கு வாழ்ந்தனர். பின்னர், செயின்ட் மேரிஸ் ஹால் மற்றும் பின்னி தலைமையகம் போன்ற சமூக, மத மற்றும் வணிக நிறுவனங்கள் இந்தச் சாலையில் வந்தன. மேலும் வடக்கே அது யூதர்களும் பின்னர் நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பெரும் பணம் சம்பாதித்த பவளக்காரத் தெரு வரை நீட்டிக்கப்பட்டது (திமுக என்ற கட்சியை ஆரம்பிக்கும் யோசனையும் இந்தச் சாலையில்தான் வந்தது).
ஆனால் இந்தச் சாலையின் அரசியல் முக்கியத்துவம் அதிகத் தாக்கத்துடன் மிகவும் முன்னதாகவே தொடங்கியது. மெட்ராஸ் நகரின் அரசியல் சிந்தனை மற்றும் கலாச்சார விரிவாக்கத்தில் இவ்வளவு பெரிய பங்கை ஆற்றிய பிறகு, ஒரு கட்டடம் இன்று மிகவும் பாழடைந்து கிடக்கிறது என்றால் அது உண்மையிலேயே கோகலே ஹால்தான்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்மேனியத் தெருவில் தேசியவாதியான அன்னி பெசன்ட் தன் சொந்தச் செலவில் கட்டிய அரங்கம் கோகலே ஹால். கட்டி முடிப்பதற்கும் பெருந்தலைவர் கோகலே மரணம் அடைவதற்கும் சரியாக இருக்கவே, அவர் பெயர் சூட்டப்பெற்றது.
அன்னி பெசன்ட் அயர்லாந்தில் இருந்து வந்து அடையாறில் தியோசாபிகல் சொசைட்டியை நடத்த வந்தார். அன்னி பல சர்ச்சைகளில் சிக்கிவிடவே பலரது வெறுப்பையும் சம்பாதித்தார். பாரதியார் அவரை ‘தங்க வால் கொண்ட நரி’ என்று இகழ்ந்தார். பெர்னார்ட் ஷா அவரைப் பொது வாழ்வில் திறமையான நடிகை என்று அழைத்தார்.
ஆனால் பாபநாசம் சிவன் அவளை ‘தேவி வசந்தே’ என்று அழைத்து ஒரு பிரார்த்தனைப் பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.
நவீன மெட்ராஸ் மற்றும் இந்தியாவை வடிவமைத்ததில் அன்னி பெசன்ட்டின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கது. அவர் 1907இல் அடையாறில் உள்ள தியோசோபிகல் சொசைட்டிக்குத் தலைவரானார். அன்றிலிருந்து மெட்ராஸ் அவரது இல்லமாக மாறியது. காசியில் ஓர் இந்துக் கல்லூரியைத் தொடங்கியது, இந்திய சாரணர் இயக்கத்திற்குத் தலைமை தாங்கியது, பெண்கள் மேம்பாட்டுப் பிரச்னைகளில் பங்கேற்பது அவரது சமூகப் பங்களிப்பாகும்.
ஆனால் திலக்குடன் சேர்ந்து தொடங்கிய ஹோம் ரூல் லீக், இந்திய சுதந்திர இயக்கத்தின் அடித்தளமாக இருந்தது. அன்னி பெசன்ட் அமைத்த வலுவான அடித்தளம் 30 ஆண்டுகளில் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. பல இந்திய சுதந்திரப் போராளிகளுக்கு முன்பாகப் பிரிட்டிஷ் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக கைது செய்யப்பட்டவர் அன்னி பெசன்ட்.
1914ஆம் ஆண்டில், அன்னி பெசன்ட் இளைஞர்கள் இந்திய சங்கத்தை (YMIA) நிறுவினார். இது இளைஞர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தி இந்திய நாட்டின் மரபுகளைப் புரிந்துகொள்ளும் திறனைப் பெறுவதற்கான ஓர் அரசியல் பயிற்சிக்கூடமாகத் திகழ்ந்தது. மாணவர்களுக்காக, அன்னி பெசன்ட், கோகலே ஹாலுக்குள் ஒரு தங்கும் விடுதி, நூலகம், கேன்டீன், மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைத்தார். இளைஞர்களுக்குப் பொதுப் பேச்சுக்களில் பயிற்சி அளிப்பதற்கான ஒரு பெரிய அரங்கத்தைக் கட்டி, அங்கு ‘மாதிரி நாடாளுமன்றங்களை’ ஏற்பாடு செய்தார்.
கோகலே ஹாலில் அரங்கை மறைக்கும் தூண்கள் இல்லாமல் பெரிய இடம் இருந்தது. குவிமாடத்துடன் கூடிய உயரமான கூரை, கடல் காற்று வீசும் ஜன்னல்கள், பேச்சுக் குரல்கள் எதிரொலிக்காத சுவர்கள் என்று மண்டபத்தில் பல நன்மைகள்.
அன்னியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவுகளுக்கு இது ஓர் ஏற்ற மேடையாக விளங்கியது. ‘எழுந்திரு இந்தியா’ என்ற அவரது தொடர் பேச்சு இந்தியர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. மேலும் பிரிட்டிஷாரை எரிச்சலடையச் செய்ததால், அவர் மீது கைது சம்மன் அனுப்பப்பட்டபோது, அவர் இங்கு விரைந்து வந்து, போலீசார் தம்மைத் தேடி வருவதற்கு முன், ஒரு பெரிய கூட்டத்தினரிடம் இன்னுமொரு பேச்சை நடத்தினார்.
இந்த மண்டபம் சென்னை சுதந்திர இயக்கத்தின் மையமாக மாறியது. பெசன்ட் மட்டுமல்ல, நேரு, காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் இங்குப் பேசினார்கள். அந்தச் சமயங்களில் மண்டபத்திற்குள் நுழைய முயற்சிக்கும் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் சாலைகள் தடைப்படும். வெள்ளையர் அரசாங்கம் எரிச்சலடைந்தாலும், இந்தப் பேச்சுக்களை நிறுத்த முடியவில்லை. அவர்கள் செய்த ஒரே விஷயம், அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் கூட்டத்தைக் கூட்டியதற்காக அபராதம் விதிப்பதுதான். ஆனால் உயர்மட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். 2 ரூபாய் சிறிய அபராதத்திற்குக் கூட அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள்.
அன்னி பெசன்ட், சென்னையின் சமூக வாழ்வில் இந்த கோகலே மண்டபம் அடைந்திருக்கும் நிலை குறித்து திருப்தி அடைந்தார். அவர் பெருமையுடன், ‘1914 க்குப் பிறகு நமது அரசியலில் புதிய சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப, மதராஸில் கோகலே மண்டபம் இல்லை என்றால், எங்கே இப்படி ஒரு தளம் கிடைத்திருக்கும்?’ என்று சொல்லுவார்.
வரலாற்றில் தனக்கான இடத்தைப் பெறக்கூடிய எந்த ஓர் இயக்கமும் சென்னையின் கோகலே மண்டபத்தில்தான் தொடங்கியது.
தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த வாடியா புகழ்பெற்ற பின்னி வேலை நிறுத்தத்தைத் தொடங்க இந்த இடத்தைப் பயன்படுத்தினார். இந்த இடத்தில் பெரியார் சுயமரியாதையின் அவசியம் குறித்துப் பேசியிருக்கிறார். மொழி அரசியலிலும் மண்டபம் முக்கியப் பங்கு வகித்தது. ஹிந்துஸ்தானி மொழியைக் கற்றுக்கொடுப்பதில் தீவிர ஈடுபாடு கொண்ட காந்தி, இந்தி கற்கும் இயக்கத்தை இங்குத் தொடங்கினார். முதல் இந்தி வகுப்பின் ஆசிரியர் அவர் மகன் தேவதாஸ் காந்தி.
மண்டபத்தை நிதி ரீதியாகத் திடமானதாக மாற்ற, இசை நிகழ்ச்சிகளுக்காகக் கட்டடம் வாடகைக்கு விடப்பட்டது. சங்கீத சபாக்கள் ஆரம்பிக்கப்பட்டதே இதை நம்பித்தான். மியூசிக் அகாடமி மற்றும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஆகியவை ஹாலில் நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தன. பெசன்ட்டின் நினைவாக கலாக்ஷேத்ரா ஆண்டுதோறும் இங்கு நடன நிகழ்ச்சியை நடத்தியது.
கர்நாடக இசை அரங்கில் தெலுங்கை மையப்படுத்தியதை எதிர்த்துப் போராடிய தமிழிசைச் சங்கமும் இம்மண்டபத்தை மனதில் வைத்து உருவானது. தமிழிசையின் இரண்டாவது மாநாடு கோகலே மண்டபத்திலேயே நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்குப் பிடித்த கலைஞர்களைத் தங்களுக்குப் புரிந்த மொழியில் கேட்பதற்காகத் தெருவெங்கும் திரண்டிருந்ததைக் கண்டபின் தமிழிசைக்குப் பெரும் எதிர்காலம் இருக்கிறது என்று பலருக்குத் தோன்றியது.
இதுபோன்ற முரண்பாடான கருத்துகள் அடிக்கடி இங்கு நிலவுவதால், கோகலே ஹால் பெசன்டின் சிந்தனைப் பயிற்சிக் கூடம் என்ற கனவை நிறைவேற்றியது.
கோகலே ஹால் விரைவிலேயே பாரபட்சம் இல்லாத இடமாக மாறியது. இருப்பினும், பெசன்ட் விட்டுச் சென்ற ஓர் ஒவ்வாமை இருந்தது. அன்னி பெசன்ட் பாரம்பரியத் தமிழ் இசைக்கலைஞர்களான இசை வேளாளர்களைத் தனது மண்டபத்தில் பாடவோ ஆடவோ விடக்கூடாது என்று வலியுறுத்துவார். அவர்களின் கலையின் காரணமாக அவர்கள் சமூகமே சீரழிந்து வருவதாக அவர் நினைத்திருக்கலாம். இளம் வயது எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு, சபா மூலம் முதல் பாடல் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்தாலும், இங்கு பாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதன் மூலம் சமூக ஏணியில் உயர்ந்த பிற சமூகங்கள், இந்தப் பாடல் மற்றும் நடனக் கலைகளை இசை வேளாளர்கள் சமூகத்திலிருந்து கையகப்படுத்தின என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அதற்கு அன்னி பெசன்டின் இந்த யோசனை முதல் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அன்னி பெசன்ட் 1933இல் காலமானார். நுழைவாயில் மண்டபத்தில் ஒரு சிலையுடன் அவர் நினைவுகூரப்பட்டார். அவருக்குப் பிறகு, பல பெரிய ஆளுமைகள், சங்கத்தை வழிநடத்தினர்.
ஆனால் ஜார்ஜ் டவுன் வேகமாக நெரிசல் நிறைந்த வணிக மையமாக மாறியபோது பெரும்பாலான ரசிகர்கள் தெற்கு மெட்ராஸுக்குக் குடிபெயர்ந்தனர். கோகலே ஹால் பராமரிப்பின்றி இடியத் தொடங்கியது. அதைச் சீரமைக்காமல் முழுதாக இடிக்கும் ஒரு தவறான முயற்சி உயர் நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் கட்டடம் பாழடைந்த தோற்றத்துடன் உயிர்வாழ்கிறது. அதன் எதிர்காலம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டின் முடிவைப் பொறுத்தது.
0
ரொம்ப நன்றி சார்