மெட்ராஸ் முரண்பாடுகள் நிறைந்த நகரம்தான் என்பதில் சந்தேகமில்லை.
தியாகராய நகரின் மையப்பகுதியில், நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாகத் தோற்றுவித்த நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்கள் சாலைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன.
அதே தியாகராய நகரின் மையத்தில் இந்தியைப் பரப்பும் ஓர் அமைப்பு பெருமையுடன் பெரிய வளாகத்தில் 80 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதைச் சுற்றியுள்ள சாலை அதன் பெயரில் திகழ்கிறது.
‘நீ பேசுவதை உன் நாட்டு மக்கள் புரிந்து கொள்வதற்காகவாவது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவிட மாட்டாயா?’ என்று தென்னக மக்களிடம் காந்தி அடிகள் அடிக்கடி கேட்பார். சுதந்திர இந்தியாவுக்கு ஆசைப்பட்ட அளவுக்கு காந்திக்கு வேறொரு விருப்பம் இருந்தது என்றால் அது முழு நாட்டிற்கும் பொதுவான மொழிதான். ஓர் இந்திய மொழியைத் தேசிய மொழியாக்கி, அதன் மூலம் மக்களை ஒருங்கிணைத்து தேசியத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று காந்தி நினைத்தார். காந்தியின் உந்துதலால் ‘இந்தி பிரச்சாரம்’ என்பது சுதந்திர இயக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்பட்டது.
தட்சிண பாரத இந்தி பிரச்சார சபையே இந்தத் தேடலுக்கு காந்தியின் பதில். ஆரம்பத்தில் ‘இந்தி சாகித்ய சம்மேளனம்’ என்று அழைக்கப்பட்டு, 1927இல், மறுபெயரிடப்பட்டு, ஒரு சுதந்திர அமைப்பாக உருவானது தட்சிண பாரத இந்தி பிரச்சார சபை. மகாத்மா காந்தி தனது இறுதி மூச்சு வரை அதன் தலைவராக இருந்தார். அவர் வகித்த மிகச் சில பதவிகளில் இது ஒன்று.
ஹிந்துஸ்தானியை பரப்ப வேண்டும் என்ற காந்தியின் பெரும் விருப்பத்தை அவரது மகன் தேவதாஸ் காந்தியை இந்தி பிரச்சாரகராகப் பயிற்றுவித்ததன் மூலம் அறிய முடிகிறது. ஜார்ஜ் டவுன் கோகலே ஹாலில், தேவதாஸ், மதராஸின் முதல் இந்தி வகுப்பை இந்தி பிரச்சார சபையின் முதல் கூட்டத்தில் கற்பித்தார். அன்னி பெசன்ட் மற்றும் காந்தி ஆகியோர் பார்வையாளர்களின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
காந்தியை இந்தி வெறியர் என்று அழைக்க முடியாது. மக்களிடையே தொடர்பு சிறப்பாக இருந்தால் சுதந்திர இயக்கத்தை விரைவுபடுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.
காந்தி அடிகள் ஒரு பன்மொழி வல்லுனர். அவர் பல இந்திய மொழிகளைப் பேச முயன்றார் என்றும் சரித்திரம் சொல்லும். அவர் நிச்சயமாக மொழியியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய ஆங்கிலம் பழுதற்றதாக இருந்தது. அவருடைய எழுத்து மற்றும் பேச்சுத் திறமையிலிருந்து அவர் ஆங்கிலத்தில் சிந்திக்கிறார் என்றுகூடப் பல நேரங்களில் தெளிவாகத் தெரிந்தது.
1920 வரை, சபையின் அலுவலகம் மதராஸில் உள்ள ஜார்ஜ் டவுனில் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாப்பூருக்கும், அதன்பின் திருவல்லிக்கேணியிலும் மாற்றப்பட்டு 1936 வரை செயல்பட்டது. காலப்போக்கில், இந்தி கற்பித்தல் வேகம் எடுத்தபோது, பிரச்சாரகர்களுக்கு அதிகத் தேவை ஏற்பட்டது. சபாவால் 1922ல் ஈரோட்டில் ஹிந்தி பிரசாரக் வித்யாலயா தொடங்கப்பட்டது. இது பண்டிட் மோதிலால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது மற்றும் பெரியாருக்குச் சொந்தமான ஒரு கட்டடத்தில் அவரது ஆதரவுடன் செயல்பட்டது. பின்னாட்களில் அவர் ஹிந்தியின் கடுமையான எதிர்ப்பாளராக மாறினார். அது வேறு கதை.
முதல் பட்டப் படிப்புத் தேர்வு ‘ராஷ்ட்ரபாஷா விஷரத்’ நடத்தப்பட்டது மற்றும் சபாவின் முதல் பட்டமளிப்பு விழாவும் 1931இல் நடைபெற்றது.
தியாகராயா நகர் ஒரு காலத்தில் ஐந்தரை மைல் நீளமும் ஒன்றரை மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய ஏரியாக இருந்தது. மெட்ராஸ் போட்கிளப் அதன் வருடாந்திரப் படகுப் போட்டிகளை அந்த ஏரியில்தான் நடத்தியது. முதல் உலகப் போருக்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாத மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக நகரத்தின் நிர்வாகிகள் ஏரியைக் குடியிருப்புப் பகுதியாக மாற்றுவதற்கு விருப்பம் கொண்டனர். தியாகராயா நகர் தோன்றியது.
சபா, சென்னையின் தியாகராய நகருக்கு 7 ஏக்கர் நிலப்பரப்பில் மாற்றப்பட்டது. கட்டடத்திற்கான அடித்தளம் ஜனாப் அப்துல் ஹமீத் கான் அவர்களால் வைக்கப்பட்டது. கட்டடம் அக்டோபர் 7, 1936 அன்று இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவால் திறக்கப்பட்டது.
சபாவின் முதன்மைச் செயல்பாடு தென் மாநிலங்களில் ஹிந்தியைப் பரப்புவதாகும். 1922 முதல் மாணவர்களின் இந்தி திறமையை மதிப்பிடுவதற்குத் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு உரையில் ஒரு முக்கியமான நபர் உரையை நிகழ்த்தினர். முன்ஷி பிரேம்சந்த், சரோஜினி நாயுடு, பட்டாபி சீதாராமையா, ஆச்சார்யா வினோபா பாவே, டாக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் பங்கேற்றுப் பல ஆண்டுகளாகப் பட்டமளிப்புகளை நடத்தினர்.
1937 ஆம் ஆண்டு பதவியேற்ற சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தலைமையிலான இந்திய தேசியக் காங்கிரஸ் அரசாங்கம் மாகாணப் பள்ளிகளில் இந்தி கற்பித்தலை அறிமுகப்படுத்தியது. ‘ஹிந்தி உங்கள் தட்டில் இருக்கும் சட்டினி போல. வேண்டும் என்றால் தொட்டுக்கொள்ளுங்கள்’ என்றார் ராஜாஜி. அவ்வளவுதான். இந்தித் திணிப்பை எதிர்த்து மாகாணம் முழுவதும் கலவரமாக வெடித்தது
இந்தித் திணிப்பை பெரியார் ஈ.வி. ராமசாமி மற்றும் எதிர்க்கட்சியான நீதிக்கட்சி (பின்னர் திராவிடர் கழகம்) உடனடியாக எதிர்த்தனர். மூன்று வருடங்கள் நீடித்த இந்தப் போராட்டம், உண்ணாவிரதம், மாநாடுகள், அணிவகுப்பு, மறியல் எனப் பன்முகத்தன்மை கொண்டது. அன்றிலிருந்து மாநில அரசியலில் ஹிந்தி ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது. ஆனால் சபையின் செயல்பாடு பாதிக்கப்படவில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு 1946இல் சபா ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடம் முன்பு, தனது கடைசி சென்னை விஜயத்தின்போது விழாவிற்கு காந்திஜி தலைமை தாங்கினார். தியாகராய நகரில் 10 நாட்கள் தங்கினார். விழாவில், தென்னாட்டில் இருந்து சுமார் 10,000 ஹிந்தி பிரச்சாரகர்கள் மற்றும் இந்தி ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார சபை, இந்துஸ்தானி நகர் எனப் பெயர் மாற்றப்பட்டது. அரங்கம் பல அலங்கார வாயில்களைக் கொண்டிருந்தது. சம்பிரதாயமாக காந்தி அனைத்து வாயில்களையும் ஆய்வு செய்ய விரும்பியபோது அவர் தணிகாசலம் சாலையில் நடந்து சென்றார். மற்ற வாயில்கள் வெகு தொலைவில் இருப்பதைத் திடீரென்று உணர்ந்த அவர், தனது கையை அசைத்து மயிலாப்பூருக்குச் செல்லும் ஒரு கார்ப்பரேஷன் பேருந்தை நிறுத்தி அதில் ஏறினார். அவரை அடுத்த வாயிலில் இறக்கிவிடுமாறு டிரைவரைக் கேட்டுக் கொண்டார்.
இந்த மெட்ராஸ் விஜயத்தின்போதுதான் காந்தி மொழிபெயர்ப்பாளர்களை அனுமதிக்க மறுத்தார். ‘எனது ஆங்கிலத்தை ஆங்கிலேயர்களுக்காக ஒதுக்குகிறேன்’ என்றார்.
காந்திஜி பத்து நாட்கள் தங்கியிருந்த சபா வளாகத்தில் உள்ள வீட்டை, இந்தியாவில் உள்ள நாற்பது காந்தி பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த இல்லத்தில் நிரந்தர காந்தி அருங்காட்சியகம் அமைக்க சபா திட்டமிட்டுள்ளது.
சபா தென்னிந்தியாவில் ஹிந்தி கற்பிக்கும் மிகப்பெரிய நிறுவனம் ஆதலால், சபா ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், சிறப்புச் சட்டத்தை இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்’ என்ற அந்தஸ்தை வழங்கியது. இச்சட்டம் மற்ற பல்கலைக்கழகங்களைப் போன்று இந்தியில் பட்டங்களை வழங்க சபாவுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. தொடக்கத்தில் மாணவர்களைக் கவர்ந்திழுப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட இந்தச் சபா, இன்று நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்குச் சுமார் 10 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.
0