இயற்கை எய்திய தலைவர்களுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள்தான் பொதுமக்களுக்கு பரிச்சயமான கட்டடமாக ராஜாஜி மண்டபத்தை மாற்றியது. ஆனால் மற்ற நாட்களில் பொதுமக்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. பழைய அரசுக் கோப்புகள் பெரும்பாலும் இங்குக் கொட்டப்படுகின்றன. இந்தச் செயல் கட்டடத்தின் நீண்ட பாரம்பரியத்தை அவமதிப்பது போன்றது.
கூவம் ஆற்றின் தென் கரையில், மிகவும் பணக்கார போர்த்துகீசிய மடிரியோஸ் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு பெரிய தோட்டம் இருந்தது. இன்றும் சிலர் இந்தக் குடும்பத்தின் பெயரால்தான் இந்த நகரமே பெயரிடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
மைசூர் புலிகள் திப்பு மற்றும் ஹைதர் பற்றிய பயத்தால் ஆங்கிலேய கவர்னர் 30 ஆண்டுகள் கோட்டைக்குள் தங்கிவிட்டார்.
மைசூரின் திப்பு சுல்தானுக்கு எதிரான வெற்றி, கோட்டைச் சுவர்களின் பாதுகாப்பிற்கு வெளியே தனது வீட்டை மாற்ற ஆங்கில ஆளுநருக்குத் தைரியம் அளித்தது.
கோட்டையை விட்டு வெளியேறியபோது, வாடகை கொடுத்து இந்த எஸ்டேட்டில் கவர்னர் முதலில் தங்கினார். பின்னர் அந்த நிலம் வாங்கப்பட்டு, கவர்னர் மாளிகையாக அரசினர் கட்டடம் ( Government House) கட்டப்பட்டது. 1947 வரை (இந்திய கவர்னர்கள் கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு மாறும்வரை), இது மெட்ராஸ் கவர்னரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக இருந்தது.
சில ஆண்டுகள் கழித்து அப்போதைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் அரசு இல்லத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தார். விருந்தினர்கள் தனது அரண்மனைக்குள் வராமலேயே அவர்களை வரவேற்கும் வகையில் ஒரு தனி கட்டடம் கட்ட அவர் விரும்பினார். நான்காவது ஆங்கிலோ – மைசூர் போரில் திப்பு சுல்தானுக்கு எதிராக வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தையும் கட்ட விரும்பினர். இரு விருப்பங்களையும் இணைத்து விருந்தினர் மண்டபம் ( banquet hall) கட்ட முடிவு செய்யப்பட்டது.

கவர்னர் எட்வர்ட் கிளைவ்
க்ளைவ் தனது நண்பர் கோல்டிங்காமிடம் கட்டடத்தை வடிவமைக்கும்படிக் கேட்டுக்கொண்டார். கோல்டிங்காம் கொடுத்த யோசனையோ அபாரமாக இருந்தது.
பாங்குவெட் ஹால் ஒரு தனி கட்டடமாகக் கட்டப்படும் என்றும் . கட்டடம் 120 அடி நீளம், 65 அடி அகலம் மற்றும் 40 அடி உயரம் கொண்டு ஏதென்ஸில் உள்ள பார்த்தீனானின் மாதிரியாக ஒரு கிரேக்கக் கோயிலின் வடிவத்தில் இருக்கும் என்று சொன்னார்.
மெட்ராஸில் உள்ள கிரேக்கக் கோயிலை ஒத்த கட்டடங்களில் இதுவே முதன்மையானது. பின்னாளில் கருப்பர் நகரில் பச்சையப்பன் மண்டபம் மற்றும் நினைவு மண்டபம் (Memorial Hall) கட்டப்பட்டது.
டென்மார்க்கைச் சேர்ந்த ஜான் கோல்டிங்காம் மெட்ராஸ் வானியல் ஆய்வகத்தின் முதல் தலைவராக இருந்தார், கணிதத்தில் பயிற்சி பெற்ற அவர் கட்டடக்கலை, வானியல் மற்றும் பொறியியலையும் வேகமாகக் கற்றுக்கொண்டார். கோல்டிங்காம் மெட்ராஸ் சர்வே பள்ளிக்குத் தலைமை தாங்கியது ஒரு முக்கிய செய்தி. இதுவே காலப்போக்கில் கிண்டி பொறியியல் கல்லூரியாகவும், பின்னர் அண்ணா பல்கலைக்கழகமாகவும் வளர்ந்தது.
நுங்கம்பாக்கத்தில் இருந்துகொண்டு கோல்டிங்காம், கோட்டை பீரங்கிகளின் கர்ஜனை சப்தத்தின் மூலமாக ஒலியின் வேகத்தை அளக்கப் பரிசோதனை செய்தவர். 1802ஆம் ஆண்டில், கோல்டிங்காம் மெட்ராஸ் ஸ்டான்டர்ட் நேரத்தை வகுத்தார். இது GMTக்கு 5 மணி நேரம் 21 நிமிடங்கள் முன்னதாக இருந்தது. கோல்டிங்ஹாமுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு 1906 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய ஸ்டான்டர்ட் நேரத்தின் முன்மாதிரி இதுவே.
1800ஆம் ஆண்டில், அவர் விருந்து மண்டபத்தை வடிவமைத்தார், கட்டடத்தின் விரிவான திட்ட வரைபடங்கள் இன்னும் அருங்காட்சியகத்தில் உள்ளன.
மண்டபத்தின் கட்டுமானத்திற்குச் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவானது. கோல்டிங்காம் மிகவும் புத்திசாலி. கட்டடத்தை வடிவமைக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுத்து, அதைக் கட்டும் செலவில் 15 சதவிகிதம் கமிஷன் கேட்டார். ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், அவர் பெரும் தொகைக்கு (22,500 பகோடாக்களுக்கு) தகுதியானவர் என்பதை உணர்ந்து, பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள வானியல் ஆய்வு மையத்திற்கு அவரைத் திருப்பி அனுப்பினர்.
1802ஆம் ஆண்டில் ஆட்டம் பாட்டம் கொண்ட கோலாகலமான விழாவுடன் மண்டபம் திறக்கப்பட்டு, அன்றிலிருந்து சமூக நிகழ்ச்சிகளுக்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
1855ஆம் ஆண்டிலேயே, விவசாயம் மற்றும் தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் விருந்து மண்டபத்தில் மெட்ராஸ் கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
26,000 பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர்.
முக்கியமாக, கண்காட்சிகளில் மெட்ராஸில் நடந்த முதல் புகைப்படக் கண்காட்சியாக லின்னேயஸ் ட்ரைப்பின் 70 படைப்புகளும் இருந்தது. தென்னிந்திய கோயில்கள் பல இந்த நிகழ்விற்காக முதல் முறையாக புகைப்படம் எடுக்கப்பட்டன.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 1857 முதல் 1879 வரை இந்த மண்டபத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 22 மாதங்கள் மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்றம் இங்குக் கூடியது. இங்குதான் ராஜாஜி, 21 ஏப்ரல் 1938 அன்று மாகாணத்தில் உள்ள 125 மேல்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற அரசாணையை நிறைவேற்றினார். இன்றுவரை மாநிலத்தின் அரசியல் இந்த ஓர் அரசாணையால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை வந்த முக்கியத் தலைவர்கள் இங்கு அரசு விருந்தில் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத் மெட்ராஸுக்கு வந்தபோது, அவருக்கு இங்கே விருந்து அளிக்கப்பட்டது. அவரது தந்தையின் ஆட்சியின் கீழ் பல ஆண்டுகள் சிறையில் இருந்த பல இந்தியத் தலைவர்கள் கடந்த காலத்தை மறந்து அவரை இங்கு வரவேற்றனர். தற்செயலாக அன்று அவரது மகன் ஆண்ட்ரூஸின் பிறந்தநாள் என்பதால் அவர் மெட்ராஸ் போசோட்டோ பேக்கரியில் செய்யப்பட்ட ஒரு கேக்கை வெட்டினார்.
இந்த பாங்குவெட் ஹால் என்று அழைக்கப்பட்ட மண்டபத்தில் கடைசி நிகழ்வு என்றால் அது காந்தியின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக இங்கு வைக்கப்பட்டதுதான். அதன்பின்னர் அது ‘ராஜாஜி மண்டபம்’ எனப் பெயர் மாற்றப்பட்டது.
1948ஆம் ஆண்டு காந்தியின் அஸ்தி, சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு இந்த மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதிலிருந்து இங்கு இறந்த தலைவர்களின் உடல்களை பொதுமக்கள் பார்வைக்காக வைப்பதும், அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாகிவிட்டது. அண்ணாதுரை, பெரியார், காமராஜ், எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் உடல்கள் இறுதியாக இங்குதான் வைக்கப்பட்டிருந்தது. கட்டடத்தின் முகப்பு – வராண்டா மற்றும் பரந்த படிகள் இந்த இறந்த தலைவர்களின் சடலங்களை வைத்து, கூட்ட நெரிசலைச் சமாளிக்க ஏதுவாக இருந்தது.
ஜெயலலிதா அரசு புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்தபோது, அரசினர் தோட்டத்தில் இருந்த பல புராதனக் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த மண்டபம் தப்பியது.
0

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.com