மெட்ராஸ் நீதிமன்ற வளாகம், 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாகும். (நீதிமன்ற வளாகம், அதன் சொந்த அஞ்சல் குறியீட்டு எண் (pin code), கொண்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்).
இந்த நெரிசல் மிகுந்த மெட்ராஸ் நகரின் மையத்தில் நீதிமன்றத்திற்கு இவ்வளவு நிலம் எப்படிக் கிடைத்தது?
பூர்வீகக் குடிமக்கள் வசிக்கும் மெட்ராஸின் முதல் கறுப்பு நகரம் ஜார்ஜ் கோட்டையின் சுவர்களுக்கு அருகில் தொடங்கியது. 1747இல் பிரெஞ்சுக்காரர்கள் தாக்கியபோது, அவர்கள் கோட்டைச் சுவர்களை அடையும் வரை எதிரிகள் வருவதை ஆங்கிலேயர்கள் உணரவில்லை. ஏனென்றால் பிரெஞ்சுக்காரர்கள் கறுப்பின நகரத்தின் வழியாகத் திருட்டுத்தனமாக நகர்ந்தனர். கோட்டையையும் கைப்பற்றினர்.
கடலூரில் அகதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் தங்கள் மதிப்புமிக்க கோட்டையை எவ்வளவு எளிதாக இழந்தோம் என்று யோசித்தனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் கோட்டையின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றபோது, அவர்கள் செய்த முதல் விஷயம் கறுப்பு நகரத்தை அகற்றுவதுதான்.
ஆங்கிலேயர்களின் அனைத்து ஐரோப்பியக் கோட்டைகளும் எஸ்பிளனேட் என்ற, எதிரிகளை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் திறந்தவெளி வளையத்தைக் கொண்டிருந்தன.
மெட்ராஸில் இவ்வமைப்பை ஏற்படுத்தக் கறுப்பர் நகரத்தை அகற்ற வேண்டும். ஆனால் கறுப்பர் நகரின் மையத்தில் அமைந்திருந்த சென்ன கேசவர் கோயிலை இடிப்பது குறித்து வெள்ளையர்களுக்குக் கவலையாக இருந்தது. இதனால் உள்ளூர்வாசிகளின் இதயம் புண்பட்டால் என்ன செய்வது?
ஆனால் துபாஷ் மணலி முத்து கிருஷ்ணா அவர்கள் உள்ளூர் உணர்வுகளைத் திறம்படச் சமாளித்து, இடித்த ஒரு கோயிலுக்குப் பதிலாக 2 கோயில்களைச் சற்றுத் தூரத்தில் கட்டினார். அதன் பின் மெட்ராசில் எஸ்பிளனேட் முறையாக உருவாக்கப்பட்டது.
காலம் ஓடியது. ஆனால் ஒரு கட்டத்தில், அவர்களின் அனைத்து எதிரிகளும் தோற்கடிக்கப்பட்டனர். அல்லது பலவீனமடைந்தனர். ஆங்கிலேயர்கள் நிலத்தின் வல்லரசுகளாக இருந்தபோது அவர்கள் எந்த எதிரிக்கும் அஞ்சவில்லை. ஒரு காலத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக இருந்த எஸ்பிளனேட் இப்போது நகரின் நடுவில் ஒரு பெரிய நில வங்கி. மறுமேம்பாட்டிற்குத் தயாராக இருந்தது.
எஸ்பிளனேட்டின் கிழக்கு மூலையில் ஒரு கடலோர இடம் இருந்தது, அங்குதான் சென்ன கேசவப் பெருமாளின் கோயில் ஒரு காலத்தில் இருந்தது. அவ்விடத்தில் கல்லால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் வானளாவ நின்றது. ஆங்கிலேயர்கள் அதன் அருகில் ஒரு நீதிமன்றத்தைக் கட்ட முடிவு செய்தனர்.
சரி. அதுவரை ஊரில் எப்படி நீதி வழங்கப்பட்டது? சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவது எப்படி நிகழ்ந்தது?
ஆற்காடு நவாபின் கட்டுப்பாட்டில் இன்னும் இருந்த பகுதிகளுக்கு ஆழ்வார்பேட்டையில் சதர் நீதிமன்றம் இருந்தது. இங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆழ்வார்பேட்டை மூலையில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டனர். கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்த மற்றவர்களுக்குத் தற்போது கலெக்டர் அலுவலகம் இருக்கும் கடற்கரைச் சாலையில் சென்னையின் சுப்ரீம் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது.
1857இல் சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரச குடும்பம் கிழக்கிந்திய நிறுவனத்திடம் இருந்து நாட்டை நிர்வகிப்பதைக் கைப்பற்றியது. அதன்பிறகு, விக்டோரியா ராணி, சென்னை அரசு உயர் நீதிமன்றத்தை நிறுவ அனுமதிக்கும் சாசனக் கடிதத்தை வெளியிட்டார்.
அதன் மூலம் ஜூன் 26, 1862 பழைய சுப்ரீம் கோர்ட் மற்றும் சதர் திவானி அதாலத் ஆகியவற்றை இணைத்து சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ஒரு பெரிய இந்திய நிலப்பகுதி மற்றும் அதில் வாழும் மக்களுக்கு நீதிமன்றம் சட்டத்தைப் பாதுகாத்தது. இப்போதுள்ள ஒரிசாவின் ஒரு பகுதி உட்பட 6 மாநிலங்கள் மீது அப்போது நீதிமன்றத்தின் அதிகார வரம்பு இருந்தது.
கல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பழமையான உயர்நீதிமன்றம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆகும். இந்த மூன்று நீதிமன்றங்களும் பிரிட்டிஷ் சட்டத்தால் நிறுவப்பட்டவை. நாட்டின் மற்ற அனைத்து நீதிமன்றங்களும் இந்திய அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த மூன்று நீதிமன்றங்கள் மற்றும் அதுவரை அவர்கள் வழங்கிய தீர்ப்புகளின் செல்லுபடியை அங்கீகரிக்கும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றக் கட்டடம் இந்தோ-சராசெனிக் கட்டடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அக்டோபர் 1888இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1892இல் வல்லுனர் பிராசிங்டன் தயாரித்த வடிவமைப்பில் தொடங்கி, பின்னர் கட்டடக் கலைஞர் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின் உதவியுடன் முடிக்கப்பட்டது.
இர்வின் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். மெட்ராஸ் அரசு அருங்காட்சியகம், மைசூர் அரண்மனை, அம்பா விலாஸ் மற்றும் இந்தியாவின் வைஸ்ராய் தங்கும் சிம்லா வைஸ் ரீகல் லாட்ஜ் போன்ற கட்டடங்களைக் கட்டியிருந்தார். ஆனால் இங்குச் செயல்பட்ட ஓர் ஆங்கிலேய நீதிபதி தனது சுய சரிதையில் கட்டடத்தைப் பார்த்தால் ‘துருக்கிய கழிப்பிடக் கட்டடம்’ போல் இருக்கும் என்று சொல்லியிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் பக்கத்தில், கோட்டையில் இறந்த வெள்ளைக்காரரை ஒரு காலத்தில் புதைத்த இடம் இருந்தது. அதில் ஹென்றி இர்வின் இந்தோ-சார்செனிக் கட்டடமான அரசு சட்டக் கல்லூரியை உருவாக்கினார்.
ஏற்கெனவே தளத்தில் இருந்த 125-அடி உயரமுள்ள தனித்த கலங்கரை விளக்கம் போதுமானதாக கருதப்படாததால், நீதி மன்ற கட்டடத்தின் 142-அடி உயரமுள்ள பிரதானக் கோபுரத்தில் ஒரு டையோப்ட்ரிக் விளக்கு பொருத்தப்பட்டு, கோபுரத்தின் உயரத்தை 175 அடியாக உயர்த்தி புதிய கலங்கரை விளக்கை எரிய விட்டார்கள் .
எஃகு கர்டர்கள் தவிரக் கட்டுமானத்திற்கான அனைத்துப் பொருள்களும் உள்நாட்டில் வாங்கப்பட்டன. பெரும்பாலான அலங்காரப் பொருள்கள் எக்மோர் கலைப் பள்ளியில் பயிற்சி பெற்ற உள்ளூர் கைவினைஞர்களால் செய்யப்பட்டன.
கட்டடங்கள் 1892 ஜூலை 12 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது, அப்போதைய மெட்ராஸ் கவர்னர் வென்லாக், தலைமை நீதிபதி சர் ஆர்தர் காலின்ஸிடம் சாவியை ஒப்படைத்தார்.
ஆரம்ப நீதிபதிகள் ஆங்கிலேயர்கள் மட்டும் தான். திருவாரூர் முத்துசுவாமி ஐயர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். சில காலம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் செயல்பட்டார். மெட்ராஸில் சிலை நிறுவப்பட்ட முதல் இந்தியர் அவர் தான். சென்னை உயர் நீதிமன்றத்துடன் சேப்பாக்கத்தை இணைக்கும் சாலை டி. முத்துசாமி சாலை என்று அழைக்கப்படுகிறது.
முதல் உலகப் போரில் போர்க்கால இருட்டடிப்பு விதிமுறைகளை மீறி நீதிமன்ற வளாகத்தில் இரண்டு கலங்கரை விளக்கங்களும் அணைக்கப்படவில்லை. எனவே நீதிமன்றம் எதிரிகளின் பார்வைக்குத் தெளிவான இலக்காக இருந்தது. 22 செப்டம்பர் 1914 அன்று ஜெர்மானியக் கப்பல் எஸ்.எம்.எஸ் எம்டன் மூலம் சென்னை குண்டுவெடிப்பில் உயர்நீதிமன்றக் கட்டடம் சேதமடைந்தது.
1996ஆம் ஆண்டு சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றமாகத் தொடர்ந்தது.
2004இல் நிறுவப்பட்ட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தமிழ்நாட்டின் பதினான்கு தென் மாவட்டங்களில் உள்ள வழக்குகளைக் கையாளுகிறது,
இங்கு பணியாற்றிய பல வழக்கறிஞர்கள் உயர்ந்த நிலைக்குச் சென்றனர். திவான்களாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களாகவும், அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் ஆனார்கள்.
பழங்காலத்திலிருந்தே நீதிக்கு நாட்டின் மரியாதையைக் காட்டும் வகையில், நீதிமன்றத்திற்குள் உள்ள நிலத்தில் மனுநீதிச் சோழனின் சிலை இன்று உள்ளது.
0