Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #20 – அண்ணா நகர் டவர்

கட்டடம் சொல்லும் கதை #20 – அண்ணா நகர் டவர்

அண்ணா நகர் டவர்

அண்ணா நகர் இன்று சென்னையில் வாழ்வதற்கு மிகவும் வசதியான குடியிருப்புப் பகுதி. ஆனால், அதைக் குடியிருப்புப் பகுதியாக மக்களிடம் பிரபலப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சி பெரும்பாலானோருக்குத் தெரியாது.

அன்றைய ஊருக்குக் கடைசியில்தான் அண்ணா நகர் அமைக்கப்பட்டது. அங்கு முதலில் சென்று குடியேறியவர்களுக்கு ஆரம்ப இரவுகளில் நரிகள் ஊளையிடும் சத்தம் பயங்கரமாகக் கேட்கும். மழைக்காலங்களில் கூவம் பெருக்கெடுத்து ஓடும்போது ஆற்றங்கரையில் இருந்து பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழையும். இதனால் மக்கள் அங்குச் செல்வதற்கே மிகவும் தயங்கினர். அந்தப் பகுதி தனித்துவிடப்பட்டதுபோல இருந்ததும் மற்றொரு காரணம். உப்பு வாங்குவதற்குக்கூட ஓரிரு மைல்கள் நடக்க வேண்டியிருக்கும். அவசரம், ஆபத்தென்றால் உதவிக்கு வருவதற்குக்கூட அருகாமையில் ஆளிருக்க மாட்டார்கள்.

நகரத்தின் மக்கள் தொகை திடீரென அதிகரித்தபொழுது, மெட்ராஸ் நகரத்தின் விளிம்பு வரை மக்கள் கூட்டம் நிரம்பும் நிலை உண்டானது. அங்கு வசிக்கும் அனைவருக்கும் இடம் பிரச்சனையானபொழுது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ளத் தொடங்கியது. அப்போது நகரத்தின் குறுக்கே சென்ற இரண்டு ஆறுகள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தன. அமிஞ்சிக்கரையில் கூவம் ஆற்றுக்கு அப்பால் மக்கள் நடமாட்டம் இல்லாத பெரிய இடம் ஒன்று இருந்தது. போதிய பாலங்கள் இல்லாமல் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த நடுவக்கரை என்ற அப்பகுதி நிறைய செங்கல் சூளைகளைக் கொண்டிருந்தது.

‘குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டாலும் மக்கள் அங்குச் செல்லவார்களா?’ என்று திட்டமிடுபவர்களின் மனதில் பெரிய கேள்வி ஒன்று இருந்தது. இருப்பினும், நடுவக்கரையில் தன்னிறைவு பெற்ற நகரத்தை உருவாக்கும் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1950களின் பிற்பகுதியில் ‘மேற்கு மெட்ராஸ் வீட்டுத் திட்டம்’ என்ற பெயரில் அதன் வேலை தொடங்கியது. (பின்னர் திமுக வெற்றிக்குப் பிறகு அந்த இடம் அண்ணாநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அகண்ட சாலைகள், பள்ளி கல்லூரிகள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், பெரிய பூங்காக்கள் ஆகியவற்றைக் கொண்ட தன்னிறைவு பெற்ற நகரத்தின் விரிவான திட்டமாக அது இருந்தது. ஆனாலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதிக மானியங்கள், தவணை முறைகளைக் கொண்டே அந்தப் பகுதியின் விற்பனையை அதிகரிக்கவேண்டிய சூழ்நிலை. ஆனால் அந்தப் பகுதி எதிர்காலத்தில் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் விருப்பமான பகுதியாக மாறும் என்று யாருமே அப்போது நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் ஒரு கிரவுண்டு நிலம் கொண்ட வீட்டு மனைகள் ரூ.4500க்கு மானிய விலையில் வழங்கப்பட்டன. இன்றோ அவை கோடிகளில் மதிப்புகளைக் கொண்டுள்ளன. அண்ணாநகரின் வெற்றிக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான காரணங்கள் அப்போது நடத்தப்பட்ட வர்த்தகக் கண்காட்சியும், அதற்காகக் கட்டப்பட்ட ஓர் உயரமான கட்டடமும் தான்.

மெட்ராஸ், பொதுமக்களுக்கான கண்காட்சிகளை நடத்துவதில் ஒரு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டிருந்தது. இருப்பினும் 1968இல் நடத்தப்பட்ட சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கண்காட்சியானது தொழில் சார்ந்து நடத்தப்பட்ட முதல் கண்காட்சியாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியத் தொழில்துறை வளர்ச்சியைக் எடுத்துக்காட்டுவதற்காக, அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி, ஆசியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியாக அமைந்தது.

முதலில் இந்தக் கண்காட்சியை 1967இல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அது மெட்ராஸ் அரசியலின் முக்கிய ஆண்டாக இருந்ததால், புதிய அரசாங்கம் அதன் முன்னுரிமைகளைப் கவனிக்கும் பொருட்டுக் கண்காட்சியை ஒர் ஆண்டுக்கு ஒத்திவைத்தது.

ஜனவரி 21, 1968இல், ‘கூட்டாண்மை மூலம் செழிப்பு’ என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்ட அந்தக் கண்காட்சி, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை வெளிப்படுத்தவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் ஈர்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடக்க விழா மேடை ராசியானதுதான். மேடையில் இருந்த இரண்டு பேர் பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக ஆனார்கள். மேடையில் இருந்த மற்றொருவரின் பெயர் அப்பகுதிக்கே பின்னாட்களில் அண்ணா நகர் என்று பெயர் சூட்டுவதற்குப் பயன்பட்டுள்ளது.

வி.வி.கிரி, நியான் அடையாளத்தை ஒளிரச் செய்ய ஒரு பொத்தானை அழுத்தினார். நாடு முழுவதும் மொழிப் பதற்றம் இருந்தபொழுதும், முதல்வர் அண்ணா மேடையில் இறுக்கமான முகத்தைக் கடைப்பிடித்தார். கண்காட்சியில், இருபத்தி மூன்று பொதுத்துறை நிறுவனங்கள், பதினொரு அமைச்சகங்கள், பல்வேறு மாநிலங்கள் பங்கேற்றன. சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் தொகுதி மட்டுமே பங்கேற்றது. மேற்கு ஜெர்மனியும் தாய்லாந்தும் மட்டுமே அவர்களைத் தவிர கண்காட்சியில் பங்கேற்ற மற்ற நாடுகள். ஸ்டால்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்தன. ஏர்-இந்தியாவுக்கு முகலாயக் குவிமாடம் கொடுக்கப்பட்டிருந்தது. பின்னிக்குப் பிரமிடு போன்ற அமைப்பும், உரத் தொழில் நிறுவனம் இந்துக் கோயில் போன்ற தோற்றத்திலும், பாட்டா மிருகக்காட்சிச் சாலை போன்ற வடிவத்திலும் காணப்பட்டன.

ரயில்வே நிறுவனம் ரயில் இன்ஜின்கள், மாதிரி ரயில் பாதைகளைக் காட்சிப்படுத்தியது. அவர்களின் மினி ரயில் மிகவும் பிரபலமானது. கண்காட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் இரட்டை அடுக்குப் பேருந்துகள் பார்வையாளர்களை அழைத்துச் சென்றன.

அந்தக் கண்காட்சியில் சில சுவாரஸ்யமான காட்சிப் பொருட்களும் இடம்பெற்றன. இந்தக் கண்காட்சியில் முதல் தொலைக்காட்சியைப் மக்கள் பார்த்தனர். பலரும் லிஃப்டில் முதல் முறை ஏறினர். பார்வையாளர்கள் போர் விமானங்களையும் தொடலாம் என்ற நிலை இருந்தது. திருப்பதிக்குப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தலைமுடியால் செய்யப்பட்ட விக்குகளைக் கூட மாநில வர்த்தகக் கழகம் காட்சிப்படுத்தியது. கனரா வங்கி 50 நாடுகளின் நாணயத்தை வைத்திருந்தது. இருப்பினும், ஏராளமான பார்வையாளர்கள் அதுவரை பார்த்திராத ரூ.5,000, ரூ. 10,000 இந்திய ரூபாய் நோட்டுகளைப் பார்க்கவே கூட்டமாகக் கூடினர்.

வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற 135 அடி உயரம் கொண்ட விஸ்வேஸ்வரய்யா கோபுரம் அதிக மக்கள் கவனத்தை ஈர்த்தது. கண்காட்சிக்காகப் பிரத்யேகமாகக் கட்டப்பட்ட இந்தக் கோபுரம் எல்.ஐ.சி கட்டடத்துக்குப் பின் நகரத்தின் இரண்டாவது உயரமான அமைப்பாகும். (இரண்டுக்கும் 6 அடி உயரம்தான் வித்தியாசம்). 10 பைசா கட்டணத்தில் இந்த கோபுரத்தின் மேலே சென்று நகரின் பரந்தக் காட்சியைப் பார்க்க முடியும். வியாபாரம் செய்வதை விட நகரத்தின் உச்சியில் இருந்து வேடிக்கை பார்க்கவே அதிக மக்கள் வருகைப் புரிந்தனர். அதில் ஏறியவர்களுக்கு எதிர்கால அண்ணா நகர், தாய் நகரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது.

கண்காட்சியின் நடுவில் உள்ள காட்சிக் கோபுரத்தை வடிவமைக்கப் பம்பாயைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் யாக்யா மர்சன்ட் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அண்ணா நகர் கோபுரம் அமைக்கப்பட்ட அதே காலத்தில்தான் பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் கல்லறையையும் வடிவமைத்தவர். ஜின்னா 1948இல் இறந்துவிட்டாலும், அரசாங்கமும் அவரது குடும்பத்தினரும் ஒரு கல்லரைக்கான வடிவமைப்பை முடிவு செய்வதற்கு அவ்வளவு காலம் எடுத்துக்கொண்டனர்.

நடிகர் சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்டோர் நடித்த ‘கலாட்டா கல்யாணம்’ போன்ற திரைப்படங்கள் கண்காட்சி மைதானத்தில்தான் படமாக்கப்பட்டன. அந்தத் திரைப்படங்கள் இன்றும் அந்நிகழ்வின் பதிவாக விளங்குகின்றன.

வர்த்தகக் கண்காட்சி முடிந்ததும் சில பெவிலியன்கள் ஏலம் விடப்பட்டன. அந்தப் பெவிலியன்களின் தற்போதைய பயன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அன்றைய தாய்லாந்து பெவிலியன் இன்றைய அண்ணாநகர் லேடிஸ் கிளப்பாகவும், கேரளப் பெவிலியன் இன்றைய அண்ணாநகர் கிளப்பாகவும் மாறிவிட்டன. அங்கே ஐயனார் சிலை உட்பட சில எச்சங்கள் இன்றும் உள்ளன.

வர்த்தகக் கண்காட்சி முதலீட்டைக் கொண்டு வந்ததா,பொருட்களை விற்பனை செய்ததா என்பது விவதத்துக்கு உட்பட்டது. ஆனால் அது நிச்சயமாக அண்ணா நகர் மீது கவனத்தைத் திருப்பியது. கண்காட்சி முடிந்ததும் கோபுரத்தை உடைப்பதற்குத் திட்டம். ஆனால் அதற்கு மனம் வாராமல் அப்படியே விட்டுவிட்டனர். விஸ்வேஸ்வரய்யா கோபுரம் அண்ணா நகரின் சின்னமாக மாறியது. சமீபகாலமாக, பல தற்கொலை முயற்சிகள் அதன் மேல் நடைபெறுவதால் இப்போது நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *