Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #21 – பிரசிடென்சி கல்லூரி

கட்டடம் சொல்லும் கதை #21 – பிரசிடென்சி கல்லூரி

பிரசிடென்சி கல்லூரி

மெட்ராஸில் உள்ள ஒரு கல்லூரியுடன் நோபல் பரிசு பெற்ற இருவர் தொடர்பு கொண்டுள்ளனர். ஒருவர் மாணவராகவும் ஒருவர் ஆசிரியராகவும்! இந்தியாவில் பாரத ரத்னா பெற்ற முதல் மூன்று பேர் இந்தக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள்.

ஆனால் அவர்களுக்கு எல்லாம் அங்குச் சிலை இல்லை. கல்லூரி மைதானத்தில் உள்ள ஒரே சிலை, அங்குக் கல்வி கற்பித்த தமிழ் பேராசிரியருக்கு மட்டுமே. அது தான் உ.வே.சுவாமிநாத ஐயர் சிலை.

தென்னிந்தியாவின் மிகப் பழமையான கல்லூரி என்றால் அது பிரசிடென்சி கல்லூரிதான். இதன் வயது 183. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட இரண்டு பிரசிடென்சி கல்லூரிகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று கொல்கத்தாவில் உள்ளது.

1838-ல் புதிய கவர்னர் ஜான் எல்பின்ஸ்டோன் மெட்ராஸ் வந்தார். இந்திய அரசாங்கம் ‘இந்தியாவின் பூர்வீக மக்களிடையே ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியலை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று பகிரங்கமாக அவர் கூறியதை ஏற்றுக்கொண்டது. கவர்னரிடம், அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜார்ஜ் நார்டன் மற்றும் சில முக்கியப் பிரமுகர்கள், உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தக் கோரி 70,000 ‘உள்ளூர் மக்கள்’ கையெழுத்திட்ட மனுவை அளித்தனர். அவர்களின் மனுவின் ஒரு பகுதியாக, ‘நாட்டின் செழுமைக்கான உண்மையான அடித்தளத்தை மக்களின் அறிவுசார் முன்னேற்றத்தில் காண்கிறோம்’. என்று இருந்தது

ஒரு மாதத்திற்குப் பிறகு, எல்பின்ஸ்டோன் இரண்டு துறைகளுடன் ஒரு ‘பல்கலைக்கழகத்தை’ முன்மொழிந்து சாதகமாகப் பதிலளித்தார். ஓர் உயர்நிலைப் பள்ளி ஆங்கில இலக்கியம், பிராந்திய மொழி, தத்துவம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் கல்வியை வழங்கும்.

இது ,மாணவர்களை இந்தப் பாடங்களின் உயர் நிலைகளில் அறிவுறுத்தலை வழங்கும் இரண்டாம் துறையான கல்லூரிக்குத் தயார்ப்படுத்தும். இதைச் செயல்படுத்த நார்டன் தலைமையில் ஒரு பல்கலைக்கழக வாரியம் ஜனவரி 1840இல் நியமிக்கப்பட்டது.

1840இல், இது மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரி தொடக்கப் பள்ளியாக நிறுவப்பட்டது. ஆனால் அது தொடங்கும்போது கடற்கரை எதிர்கொள்ளும் கட்டடத்தில் இல்லை. முதலில் எழும்பூரில் ஒரு வாடகை கட்டடமான டி’மான்டே ஹவுஸில் திறக்கப்பட்டது (இங்குத் தற்போது தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உள்ளது). எல்பின்ஸ்டோன், பள்ளியைத் திறந்து வைத்து, பள்ளியின் முதல் 67 மாணவர்களை உள்ளடக்கிய கூட்டத்தில், ‘புதிய பள்ளியைத் திறப்பதற்கான விழா மட்டும் அல்ல இது. ஒரு புதிய சகாப்தத்தின் விடியலுக்கு நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்’என்றார்.

அதை விட உண்மையான வார்த்தைகள் இருந்திருக்க முடியாது. தமிழகம் இன்று உலக அரங்கில் பிரகாசிக்கிறது என்பது, அதன் கல்வி முறையால் தூண்டப்பட்ட அறிவினால்தான். அது அன்றுதான் தொடங்கியது.

பள்ளி பின்பு கறுப்பர் நகரில் பிராட்வேக்கு மாற்றப்பட்டது. பின்னர் அது ஓர் உயர்நிலைப் பள்ளியாகவும், பின்னர் ஒரு பட்டதாரி கல்லூரியாகவும் உயர்ந்தது.

1864 ஆம் ஆண்டு மதராஸ் அரசாங்கம் தென் மாகாணத்தில் முதல் கல்லூரிக்கான கட்டடங்களை வடிவமைப்பதற்கான போட்டியைச் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தியது. மதராஸ் நகரில் பொதுவெளி கட்டடக்கலையை மேம்படுத்தத் தனது நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைப்புகளைத் தேடுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியது.

பதினேழு கட்டடக்கலை வல்லுனர்கள் இதற்காகப் போட்டிப் படங்களை அனுப்பினர். பரிசுத் தொகை மூவாயிரம் ரூபாய். அதில் ஒருவரான ராபர்ட் சிஷோல்ம் ஒரு கட்டடக் கலைஞராகக் கல்கத்தாவில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்தக் கல்லூரியை வடிவமைக்கும் போட்டியில் அவர் வெற்றி பெற்று மூவாயிரம் ரூபாய் பரிசை பெற்றார். மேலும் அரசு ஊழியராக இருந்ததால், 1865ல் சென்னைக்கு மாற்றப்பட்டார். ஒரே ஒரு கட்டடத்தை மட்டுமே மேற்பார்வையிட வந்தாலும், சென்னையின் பொது கட்டட அமைப்பை முற்றிலுமாக மாற்றும் வரை அவர் இங்கு நீண்ட காலம் தங்கினார்.

பிரசிடென்சி கல்லூரி கட்டடங்கள் மெட்ராஸ் மாகாணத்தில் இந்தோ-சராசெனிக் கட்டடக்கலைக்கு முன்னோடியாக இருந்தது மட்டுமல்லாமல், விரைவில் இந்தியா முழுவதும் பரவியது. புதிய தலைநகர் டெல்லியின் கட்டடங்கள் பெரும்பாலும் இந்தக் கட்டடக்கலை பாணியில் தான் இருந்தன.

பிரசிடென்சி கல்லூரி கட்டடத்தின் வேலை 1867இல் தொடங்கியபோது கல்லூரிக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் பின்புறத்தில் நவாப் காலத்து மூன்று கல்லறைகள் இருந்தன. அவற்றை அகற்றாமல் கட்டடம் வடிவமைக்கப்பட்டது. அவை இன்றும் ஆண்டு விழாக்களுடன் நன்கு பராமரிக்கப்படுகின்றன.

கல்லூரியின் கட்டுமானம் முழுவதும் பாரம்பரிய இந்திய கட்டட நுட்பங்களைப் பயன்படுத்தியே முடிக்கப்பட்டது. உள்ளூர் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்திய முதல் காலனித்துவக் கட்டடம் இது. செயின்ட் தாமஸ் மவுண்டில் கிடைக்கும் கிரானைட் பாறைகளைக் கட்டடக் கலைஞர் தேர்வு செய்தார். நன்கு சுடப்பட்ட சிவப்பு செங்கற்கள் சூளைமேட்டில் இருந்து வாங்கப்பட்டு, கூவம் நதி வழியாக படகில் அனுப்பப்பட்டது. கட்டடத்தின் சுவர் பூச்சுக்குக் கட்டட நிலத்தில் சுண்ணாம்பை மாடுகளைக் கொண்டு அரைத்தனர். தூண் வேலைகளை எழும்பூர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் செய்தது.

வகுப்பறைகள் ஏராளமான சூரிய ஒளி, மெரினாவில் இருந்து கடல் காற்று மற்றும் அனைத்து வகுப்பறைகளில் இருந்து கடல் மற்றும் வானத்தின் காட்சி ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன . 1890 ஆம் ஆண்டு கல்லூரியின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில், இன்று பார்வையாளர்களுக்குக் கல்லூரியின் மிகவும் புலப்படும் குவிமாடம், பின்னர் சேர்க்கப்பட்டது.

பின்புறத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் அதன் பாய்மரப் படகுகளுடன் இயற்கையின் அழகைக் கூட்டியது.

இவை அனைத்தும் பிரசிடென்சி கல்லூரியை, படிப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக ஆக்கியது. மேலும் சிறந்த பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.

1870இல், இது அப்போதைய எடின்பர்க் பிரபுவால் திறக்கப்பட்டது. கல்லூரி 1870-71இல் மெரினாவில் அதன் புதிய கட்டடங்களுக்கு மாற்றப்பட்டது. 1857இல் மெட்ராஸ் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, பிரசிடென்சி கல்லூரி அதனுடன் இணைக்கப்பட்டது. அதன் மாணவர்கள் மெட்ராஸ் பல்கலைக் கழகப் பட்டங்களைப் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா விடுதி (கிண்டிக்கு செல்லும் முன்) பொறியியல் கல்லூரியின் விடுதியாக இருந்தது. பின்னர் காலியாக இருந்த விடுதி பிரசிடென்சி கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவிகள் ராணி மேரி கல்லூரி விடுதியில் தங்கினர்.

நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நான்கு திசைகளை எதிர்கொள்ளும் நான்கு டயல்கள் கொண்ட கடிகாரம் மத்தியக் குவிமாடம் மீது கட்டப்பட்டது. . கோட்டையில் இருந்து சுடப்பட்ட பீரங்கியை நம்பியிருந்த மக்கள் தங்கள் நேரத்தை அறிய இப்போது பிரசிடென்சி கல்லூரி கோபுரங்களில் பார்க்க முடிந்தது

மெரினா கிரிக்கெட் மைதானம் பிரசிடென்சி கல்லூரியின் விளையாட்டு மைதானமாகக் கருதப்படும் ஒரு பெரிய திறந்தவெளி. பல முறை அதன் மீது பெரிய கட்டடங்களைக் கட்ட அமைப்பாளர்கள் ஆசைப்பட்டனர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஐரோப்பிய-இந்திய கிரிக்கெட் போட்டியின் புரவலராக இருந்த ஆளுநரிடம் ஆர்வமுள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மனு அளித்தனர். நிலம் காப்பாற்றப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல அரசியல் கட்சிகள் ஆங்கிலேயர்களின் பக்கம் நின்றபோது, காங்கிரஸ்காரர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டபோது, அந்த முக்கியமான இயக்கம் இங்கு தோல்வியடையும் என்று தோன்றியது. பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தி சென்னையின் மானத்தைக் காப்பாற்றினர்.

கவர்னர் ஜெனரல் ராஜாஜி உட்பட அரசியல்வாதிகள், பல நீதிபதிகள், விஞ்ஞானிகள் (சிவி. ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர் உட்பட) மற்றும் படைப்பாற்றல் துறையினர் இங்கு படித்தனர்.

தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத ஐயர் 1903 முதல் 1919 வரை இங்குக் கற்பித்தவர்.

கடந்த 2015-ம் ஆண்டு கடற்கரைச் சாலையை அழகுபடுத்தும் பணிக்காகப் பாரம்பரியமிக்க கல்லூரியின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டது. தற்போது கட்டடத்தின் பல பகுதிகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவசரமாகச் சீரமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

0

பகிர:
nv-author-image

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *