Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #22 – ஏவிஎம் ஸ்டூடியோ

கட்டடம் சொல்லும் கதை #22 – ஏவிஎம் ஸ்டூடியோ

AVM

ஒரு பெரிய அரண்மனையின் வாயிலுக்கு உரித்தானது போன்ற வாசல் தூண்கள். தூணின் உச்சியில் தொடர்ந்து சுழலும் பந்து போன்ற ஒரு ஏற்பாடு. அதன் மீது மூன்று ஆங்கில எழுத்துக்கள். AVM.

நட்சத்திரங்களாக மாற விரும்பிய பலர், சினிமா உலகில் தங்கள் வெற்றிக் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில், சுழலும் ஏவிஎம் குளோப்பைத் தாங்கிய வாயிலுக்கு வெளியே கால் வலிக்கக் காத்திருந்த காலங்கள் உண்டு.

1947இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தனர். உடனடியாக அவர்களின் இந்திய சொத்துக்கள் எதிரியின் சொத்தாகக் கருதப்பட்டு ஏலம் விடப்பட்டன. வடபழனியில் உள்ள அத்தகைய சொத்துகளில் ஒன்று தோல் பதப்படுத்தும் கிடங்கு. 10 ஏக்கர் காலி இடத்தை ஏலத்தில் எடுத்தவர் ஏ.வி. மெய்யப்பன்.

பத்து ஏக்கரின் விலை அதிகம் தான் – 37,500 ரூபாய். அப்போது கோடம்பாக்கம் காடு போல் இருந்தது. ஆனால் வாஹினி, அப்போது அருகிலேயே ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்திருந்தது. அவர்கள் அருகில் இருப்பது பரஸ்பர உதவியாக இருக்கும் என்று மெய்யப்பன் நினைத்தார்.

தென் தமிழகத்தில் தேவகோட்டையில் இருந்த அவரது சினிமா ஸ்டுடியோ பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டு லாரிகளில் கொண்டு வந்து வடபழனியில் உள்ள இந்தத் தளத்தில் மீண்டும் இணைக்கப்பட்டது.

மிக விரைவில் இந்த ஸ்டுடியோ சினிமாவை மிகவும் நேசித்த மெட்ராஸில் நன்கு அறியப்பட்ட இடமாக மாறியது.

அந்தக் கட்டடத்தின் கதை, ஒரு கடும் உழைப்பாளியின் கதை.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மெட்ராஸ் மீது குண்டுகளை வீசுவார்கள் என்ற அச்சம் குடிமக்களிடையே பரவலாக இருந்தது. அதனால் நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சொந்த ஊரை பார்க்கக் கிளம்பியது. நகரமே காலியானது.

மேலே பறந்த ஜப்பானிய விமானங்கள் ஓர் இருட்டடிப்பைத் தூண்டின. தினமும் மாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏராளமான மின்சாரத்தைப் பயன்படுத்திய சினிமாத் தொழிலில் ஈடுபடுவதற்கு அது சரியான நேரம் அல்ல. பல சினிமா நிறுவனங்கள் கதவுகளை இழுத்து மூடின.

ஆனால் நீண்ட போராட்டத்திற்கும் தொடர் தோல்விகளுக்கும் பிறகு பிரகதி பிக்சர்ஸ் அதிபர் மெய்யப்பன் அப்போதுதான் வெற்றியை ருசித்திருந்தார். சிறிது காலம் கூடச் சினிமாவை விட்டு விலக அவர் ஆர்வம் காட்டவில்லை.

மெய்யப்ப செட்டியார் ‘சபாபதி’ மற்றும் ‘என் மனைவி’ ஆகிய 2 நகைச்சுவைப் படங்களையும், புராணத் திரைப்படமான ‘ஸ்ரீவள்ளி’யையும் ஒரு பேய் பங்களாவை வாடகைக்கு எடுத்து பெரும் வெற்றி பெற்ற சமயம் அது.

அந்த மந்தைவெளி அரண்மனையில் விஜயநகரத்தின் கடைசி ஜமீன் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு அங்கு தங்குவதற்கு அவரது குடும்பத்தினர் கூடப் பயந்தனர். ஆனால் ஏ.வி.எம் செட்டியார் துணிச்சலுடன் தனது பட நிறுவனத்தை அங்கு மாற்றி, பிரகதி ஸ்டுடியோ என்று பெயரிட்டுப் படப்பிடிப்பு நடத்தித் தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

ஆனால், பேய்க்கு அஞ்சாதவர், போர்க்கால மின்வெட்டைப் பார்த்து வெறுப்படைந்தார். மின்சாரம் இல்லாததால் மெட்ராஸில் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. பங்குதாரர்களுக்குள் மனவேற்றுமை ஏற்பட்டு பிரகதி ஸ்டுடியோவை நல்ல விலைக்கு விற்றுவிட்டு பாகம் பிரித்துக் கொண்டார்கள். அடுத்து மெய்யப்பன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் இனி யாருடனும் கூட்டுச் சேராமல் தனியே தொழில் செய்வது என்று தீர்மானித்தார்.

மெட்ராஸில் மின்வெட்டு காரணமாக இங்கு இப்போது ஸ்டுடியோ ஆரம்பிக்க முடியாது. அப்போது மீனாட்சி பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 1924ஆம் ஆண்டிலேயே சிறிய செட்டிநாட்டு நகரமான தேவகோட்டைக்கு மின்சாரம் வழங்கத் தொடங்கியிருந்தது.

மெட்ராஸுக்கு அடுத்தபடியாக மின்மயமாக்கப்பட்ட இரண்டாவது நகரம் அது. அந்த மாகாணத்தில் தேவகோட்டை. மீனாட்சி பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைத் தேடிக்கொண்டிருந்தது.

ஸ்டுடியோவிற்கு ஒரு பிரத்யேக ட்ரான்ஸ்பார்மர் மற்றும் 50 கிலோவாட் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் மீனாட்சி கார்ப்பரேஷன் ஏவிஎம்மை தேவகோட்டைக்கு அழைத்தபோது அவர் ஒப்புக்கொண்டார்.

தேவகோட்டைக்கு அடுத்ததாக 5 மைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம் இருந்தது.

மெட்ராஸிலிருந்து கொழும்பு வரை டிக்கெட் எடுக்கக்கூடிய ஒரே ரயில் என்று புகழ்பெற்ற ராமேஸ்வரம் மெயில் தேவகோட்டை வழியாகச் செல்வதில்லை. இது தேவகோட்டை ரஸ்தா என்ற ஸ்டேஷனில் நிற்கும். அந்த ஸ்டேஷனை ஒட்டிய நிலம் தேவகோட்டை ஜமீன்தாருக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் நவாப் ராஜமாணிக்கத்தின் ஒரு நாடக அரங்கு காலியாகக் கிடந்தது. இந்த நிலத்தை மெய்யப்பன், அரங்குக்கு 2,000 ரூபாயும், காலி இடத்துக்கு 1,000 ரூபாயும் வாடகையாகக் கொடுக்க ஒப்புக்கொண்டு அதை எடுத்துக்கொண்டார். அங்கு அறைகள், கழிப்பறைகள், மெஸ்கள் மற்றும் ஒத்திகை அறைகள் ஆகியவற்றிற்காக 40 ஓலைக் கொட்டகைகளை அவர் கட்டினார்.

அப்போது மெய்யப்பனும் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். இதற்கு முன் அவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிரகதி பேனரின் கீழ் வந்தவை. தொழிலில் பங்காளிகளுடன் சண்டையிடுவது அதுவரை அவரது படைப்பு ஆற்றலைப் பெரும்பகுதி கெடுத்து விட்டது. எனவே தேவகோட்டை சாலையில் கூட்டாளிகள் இல்லாமல் தனியாக ஏவிஎம் பேனரை அறிவித்தார். அங்குக் கிடைத்த அடிப்படை வசதிகள் கொண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. தினசரி படம் பிடிக்கப்பட்ட திரைப்படச் சுருள்களை சென்னைக்கு மாலை ரயிலில் டெவலப் செய்ய அனுப்பியபடி இரண்டு வெற்றிப் படங்களை உருவாக்கினார். ‘வேதாள உலகம்’ மற்றும் ‘நாம் இருவர்’.

போர் முடிந்து மற்ற நிறுவனங்கள் மெட்ராஸில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்தன. ஸ்டுடியோவை முழுவதுமாகப் பிரித்து லாரியில் மெட்ராஸ் கொண்டு வந்து மீண்டும் வடபழனியில் இணைத்தார்கள். பிற்காலத்தில் பல கட்டடங்கள் அதைச் சுற்றி வந்தாலும், மேலும் நவீனமாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருத்தமாக இருந்தபோதிலும், இந்தப் பழைய ஸ்டுடியோவில் மட்டுமே பூஜையுடன் ஒவ்வொரு புதிய படத்தையும் தொடங்கியது.

அதற்கு முன் கோடம்பாக்கத்தில் சில ஸ்டுடியோக்கள் இருந்தன ஆனால் ஏவிஎம் மற்றும் வாஹினி அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லை. ஒரு வகையில் இதுதான் கோலிவுட்டின் உண்மையான ஜனனம்.

திரைப்படம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஸ்டுடியோவுக்குள் பல குடிசைகளை நிறுவினார். ஒரு குடிசையில், ஓர் எழுத்தாளர் ஒரு தூக்கமில்லாத இரவில் அமர்ந்து 300 பக்கங்கள் கொண்ட தலைசிறந்த திரைக்கதையை முடித்தார். கதையின் பெயரும் ‘ஓர் இரவு’தான். எழுதியவர் அண்ணாதுரை.

ஏவிஎம் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சிவாஜி கணேசன், ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வைஜெயந்திமாலா, கமல்ஹாசன் மற்றும் பலர்.

விசாலமான ஸ்டுடியோவிற்குள் மெய்யப்பன் வீடும் இருந்தது. அதன்மூலம் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தார். ஆனால் ஒருமுறை தொழிலாளர் வேலைநிறுத்தம் மற்றும் லாக்-அவுட்டின்போது அவர் குடும்பத்தாருடன் உள்ளே சிக்கினார். உடனே அவர் தனது வீட்டை மயிலாப்பூருக்கு மாற்றினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது ஏவிஎம்.

மூவி முகல் (Movie Mogul) என்ற அடைமொழி ஹாலிவுட்டில் பிரபலம். அப்படிப் போற்றி அழைக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் பலப் பல ஜாம்பவான்கள் இருப்பார்கள்; ஜெமினி வாசன், மாடர்ன் ஸ்டுடியோ சுந்தரம் போல… இந்தியாவில் அவர்களுடன் சேர்ந்து மெய்யப்பனும் போற்றப்பட்டார்.

தற்போது ஏவிஎம் படப்பிடிப்பில் உபயோகித்த போஸ்டர்கள், உடைகள் மற்றும் பிற திரைப்பட விஷயங்களை காப்பகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது அந்நிறுவனம். மெய்யப்பனின் மகன்கள் சரவணன், குகன் மேற்பார்வையில் அவர்கள் இப்போது ஸ்டூடியோவுக்குள் தங்களின் 75 ஆண்டுகளைக் காட்சிப்படுத்தும் திரைப்பட பாரம்பரியத்தின் அற்புதமான அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளனர்.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *