Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #23 – கீழ்ப்பாக்கம் நீர் வினியோகக் கட்டடம்

கட்டடம் சொல்லும் கதை #23 – கீழ்ப்பாக்கம் நீர் வினியோகக் கட்டடம்

Kilpauk Water Works

ஒரு நாகரிகத்தின் உயிர்வாழ்விற்கான மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நிலையான நீர் வழங்கல் ஆகும்.

போர் மற்றும் நோய் காரணமாக மெட்ராஸ் நகர மக்கள் அதை விட்டுச் சில சந்தர்ப்பங்களில் வெளியேறியிருக்கின்றனர். ஆனால் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவர்கள் ஒருபோதும் புலம் பெயர்ந்ததில்லை. இயற்கையான நன்னீர் ஆதாரங்கள் முற்றிலும் இல்லாத மெட்ராஸ் நகரத்தில் அது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் பாரம்பரியமாக நிரந்தரத் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். பிரான்சிஸ் டே தனது கோட்டைக்குத் தேர்ந்தெடுத்த இடம் மிகக் குறைவான குடிநீர் ஆதாரங்களைக் கொண்டிருந்தது. முக்கியமாக அதையொட்டி வற்றாத ஆறுகள் ஏதும் இல்லை.

அப்போதும் கூட, பிரிட்டிஷாரின் முதலில் திட்டமிட்ட நகரத்தின் ஜனத் தொகையை நிர்வகிக்கக் கிடைத்த கொஞ்சம் தண்ணீர் போதுமானதாக இருந்தது. (கோட்டை மற்றும் பிளாக்டவுனில் வசிப்பவர்கள் கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றனர்.)

ஆனால் நகரம் பூதாகரமாக வளர்ந்தது. அதன் வளர்ச்சியின் வேகம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நகரைத் திட்டமிடுபவர்கள் மற்றும் நிர்வாகிகள் தடுமாறினர். நகரத்தின் செழுமையால் தூண்டப்பட்ட கணிசமான இடம்பெயர்வுகள் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக வைத்திருந்தது.

நகரைத் திட்டமிடுபவர்கள் குடிநீருக்கான புதிய ஆதாரங்களை மேலும் தேடத் தொடங்கினர். இதற்காக கோட்டையிலிருந்து இன்னும் தொலைவிலும் அவற்றைத் தேடத் தயங்கவில்லை.

ஆனால் மெட்ராஸ் நிலப்பரப்பின் சரிவு இயற்கையாகவே வடமேற்கிலிருந்து தென்கிழக்காக இருந்தது. மின்சாரப் பம்புகள் இல்லாத நிலையில், அவர்கள் நீரின் இயற்கையான ஓட்டத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதனால்தான் வடக்கே உள்ள கொசஸ்தலையாறு மெட்ராஸின் தாகம் தீர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்றும் இந்த நதி சென்னை மக்களுக்குப் பெரிய அளவில் துணை நிற்கிறது.

சிப்பாய் கலகம் வட இந்தியாவில் அப்போதுதான் முடிவுக்கு வந்த நேரம். அதில் பெரும் பாதிப்படையாத மெட்ராஸ் தன் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருந்தது. 1860களின் பிற்பகுதியில், மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் கார்ப்ஸின் ஜேம்ஸ் ஃப்ரேசர் அரசாங்கத்திடம் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதையேற்று முதல் அணை மெட்ராஸில் திட்டமிடப்பட்டது. கொசஸ்தலையாற்றின் குறுக்கே தாமரைப்பாக்கத்தில் அணை கட்டப்பட்டு அதன் தண்ணீர் புழல் ஏரிக்குத் திருப்பி விடப்பட்டது. புழலிலிருந்து 7½ அடி ஆழம், 6 அடி அகலம், 6½ மைல்கள் நீளம் எனப் பரிமாணங்கள் கொண்ட திறந்த வாய்க்கால் வழியாக நகரத்திற்குள் நீரைக் கொண்டு வந்தார்கள்.

அந்த நீருக்கு மெட்ராஸில் அவர்கள் முதலில் முன்மொழிந்த சேமிப்பு இடம் ஸ்பர்டாங்க் என்று அழைக்கப்படும் ஏரி. ஸ்பர்டேங்க் இப்போது இல்லை. அதை மூடி பங்களாக்கள் கட்டியாயிற்று.

உயரமான இடத்திலிருந்து நீரை வினியோகிப்பது சுலபம் என்பதாலும் கீழ்ப்பாக்கத்தில் அடிநில உயரம் அதிகமாக இருந்த காரணத்தாலும், திட்டம் கீழ்ப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

மெட்ராஸ் நகராட்சிக்கு நீர் வழங்கும் கிடங்கு கீழ்ப்பாக்கத்தில் முறைப்படி 1872 இல் தொடங்கப்பட்டது.

1907 இல், கீழ்ப்பாக்கத்தில் நீரேற்று நிலையத்திற்காக ஒரு புதிய கட்டடம் திட்டமிடப்பட்டது. மெட்ராஸ் கவர்னர் ஜான் சின்க்ளேர் சிவப்பு நிற இந்தோ சாராசெனிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

1914 ஆம் ஆண்டு, மெட்ராஸ் கார்ப்பரேஷன் மூலம் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட நீர் விநியோக முறை தொடங்கப்பட்டது.

திட்ட செலவு 14 லட்சம். எனவே வீட்டு வாடகைக்கு 4 சதவிகிதம் தண்ணீர் வரி விதிக்கப்பட்டது. ஆனாலும் அரசு குடிநீர் விநியோகத்திற்கு மானியம் அளித்து வருகிறது.

கீழ்ப்பாக்கம் நீர் நிலையத்தில் பெரிய தொட்டிகள் கட்டுதல் முதல் வேலை. 18 மீட்டர் உயர்த்தப்பட்ட தொட்டி இந்தியாவில் மிகப் பெரிய தொட்டியாக வெகு நாள் சாதனை கொண்டிருந்தது. மெட்ராஸின் பெரிய பரப்பளவு இந்த 18 மீட்டர் உயரத்துக்கு அடியில் தான் இருந்தது.

எஃகினால் செய்யப்பட்ட 56 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தொட்டியானது நிலையான நீர் விநியோகத்தைப் பராமரிக்க உதவியது.

தொட்டியில் நீரை ஏற்ற கரியால் இயங்கிய உயர் சக்தி நீராவி இயந்திரத்தை நிறுவினார்கள்

அரை நூற்றாண்டுக்குப் பின் எல்ஐசி கட்டடம் கட்டும் வரை மெட்ராஸில் மிக உயரமான அமைப்பாக இருந்தது 177 அடி உயரமான ஒரு புகைபோக்கி . நிலக்கரி பயன்படுத்தும் நீராவி இயந்திரங்களில் இருந்து வரும் புகையை மக்களுக்கு இடர்ப்பாடில்லாமல் வெளியேற்ற இந்தப் புகைபோக்கி பயன்படுத்தப்பட்டது.

பிற்காலத்தில் பல கட்டமைப்புகள் வந்துள்ளன, ஆனால் அவை அனைத்தும் பாரம்பரியச் சிவப்புக் கட்டடத்தை ஒத்திருக்க, கவனமாகத் திட்டமிடப்பட்டது.

இவ்வளவு முன்னேற்றங்களுக்கெல்லாம் சில பொறியாளர்கள் தான் காரணம். 1903 இல், ஒரு இந்திய பாரசீக வம்சாவழிப் பொறியாளர் ஹோர்முஸ்ஜி நவ்ரோஜி, 1903 ஆம் ஆண்டில், தண்ணீர் பணிகளைத் திட்டமிட்டு மறுவடிவமைப்பு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். தட்டையான நிலப்பரப்பு கொண்ட மெட்ராஸ் நகரத்திற்குக் குழாய் நீர் விநியோகத்தின் விரிவான வலையமைப்பைத் திட்டமிடுவது கடினமாக இருந்தது. எனினும் அதை சாதித்தார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த ஜேம்ஸ் மேட்லி மெட்ராஸில் நீர் விநியோகத்தை மேம்படுத்திய பெருமைக்குரியவர். மேட்லி ஒரு விமானம் பறக்கும் ஆர்வலர். அவர் மூன்று நீர்த்தேக்கங்களின் மீதும் தினமும் பறந்து வானத்தில் இருந்து ஆய்வு செய்தார்

1907இல் பெரிய மாற்றங்களைத் தொடங்குவதற்கு முன், மேட்லி நகரத்தின் நீர்த் தேவைகளை ஆய்வு செய்தார். முந்தைய 25 ஆண்டுகளில் மழை அளவு. ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ஒரு நாள் தண்ணீர் தேவை என்ன என்றெல்லாம் அவர் மதிப்பீடு செய்தார்.

மேட்லியின் கூற்றுப்படி, 1961 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட 6.6 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு நாளைக்கு தலைக்கு 25 கேலன்கள் என்ற அளவில் அப்போது செய்த வேலைகள் போதுமானதாகக் கருதப்பட்டது. ஆனால் 1936ம் ஆண்டிலேயே அவை போதவில்லை. பற்றாக்குறையானது. அப்படி ஓர் அசுர வளர்ச்சி மெட்ராஸ் ஜனத்தொகையில்.

ஜான் ஆல்பிரட் ஜோன்ஸ் நிர்வாகப் பொறியாளர் பதவியில் இருந்தபோது, நீரின் தரத்தை மேம்படுத்தி மாசுபாட்டைக் குறைத்த பல முன்னேற்றங்களைச் செய்தார்.

மெட்ராஸ் அதன் நீர் பொறியாளர்களின் பெயர்களைச் சாலைகளுக்குச் சூட்டியுள்ளது. மேட்லி மற்றும் நவ்ரோஜிக்கு சாலைகளும் புழலில் உள்ள முக்கிய நீர் உட்கொள்ளும் கோபுரத்திற்கு ஜோன்ஸ் பெயரும் சூட்டப்பட்டது.

புதிய கீழ்ப்பாக்கம் நீர்நிலை திறக்கப்பட்டபின், அதற்குமுன் 10 ஆண்டு கால சராசரி மக்கள் மரணங்களை ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 4000 குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

காலரா போன்ற நீரினால் பரவும் தொற்று நோய்கள் குறைந்ததே அதற்குக் காரணம். இந்தப் பொறியாளர்கள் செய்த மேம்பாடுகள் நீண்ட காலம் நீடித்தன. பல பழைய அசல் குழாய்கள் மற்றும் கட்டமைப்புகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

தண்ணீர்த் தொட்டிகள் மாற்றப்படுவதற்கு முன்பு 100 ஆண்டுகள் சென்னைக்குச் சேவை செய்தன. 2000 ஆம் ஆண்டு வரை நுண்ணிய மணல், கூழாங்கற்கள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. தேவை அதிகரித்ததால், இந்த முறையானது ரசாயனங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தால் மாற்றப்பட்டது.

இன்று, மெட்ராஸ் வாசிகளுக்குப் பல இடங்களில் இருந்து தண்ணீர் வருகிறது. கிருஷ்ணா நதியிலிருந்தும், வீராணம் ஏரியிலிருந்தும், கடலிலிருந்தும் கூட. ஆனால் மெட்ராஸ் குடிமக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் போதுமான தண்ணீர் வழங்குவதற்கான முதல் படி கீழ்ப்பாக்கத்தில் தான் தொடங்கியது.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts