Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #24 – மெட்ராஸ் கலங்கரை விளக்கு

கட்டடம் சொல்லும் கதை #24 – மெட்ராஸ் கலங்கரை விளக்கு

மெட்ராஸ் கலங்கரை விளக்கு

உலகின் ஏழு புராதன அதிசயங்களில் ஒன்று எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம். அந்த அளவுக்குக் கலங்கரை விளக்கம் ஒரு முக்கியமான கடல் வர்த்தகம் சார் அமைப்பாக இருந்தது. பழங்காலத்திலிருந்தே கலங்கரை விளக்கங்கள் ஆபத்தான ஆழமற்ற கடலையும் அபாயகரமான பாறைகளையும் குறித்து கப்பல் மாலுமிகளை எச்சரிக்க உதவியதால் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருந்தன. இதனால் வர்த்தகம் விரிவடைந்தது. நாடுகளுக்கிடையேயான தொடர்பு அதிகரித்தது. அதன் காரணமாக மனிதச் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில் பல நன்மைகள் இருந்தன.

மெட்ராஸ் கரடுமுரடான கடற்கரையைக் கொண்டிருந்தது. 1639இல் கோட்டையைக் கட்டுவதற்கான தொடக்கக் காலங்களில் மெட்ராஸ் வந்த மூன்று கப்பல்களில் இரண்டு கப்பல்கள், முதல் சில நாட்களில் ஒரு சூறாவளியில் தரை தட்டி மூழ்கின. இரவுக்குப் பிறகு சென்னையை நெருங்கும் கப்பல்கள் கோவளம் பாறைகளின் அபாயத்தை எதிர்கொண்டன. வடக்கில், புலிக்காட்டில் ஆழமற்ற கடலின் மணல் திட்டுகள் கப்பல் தரை தட்டும் அபாயத்தைத் தந்தது. ஆரம்ப நாட்களில் மீனவப் பெண்கள் கடற்பகுதியில் மாலுமிகளை வழிநடத்துவதற்காகக் கடற்கரையில் நெருப்பு மூட்டினர் என்ற செவி வழிச் செய்தியும் உள்ளது.

மெட்ராஸ் போலக் கடல் வணிகத்தை நம்பியிருந்த ஒரு நகரத்திற்குக் கலங்கரை விளக்கு மிக முக்கியமான தேவையாக இருந்தது. ஜவுளியில் நிலையான வர்த்தகம் வேண்டுமானால், கலங்கரை விளக்கம் தேவை என்பதைக் கிழக்கிந்திய நிறுவனம் உணர்ந்தது.

ஒரு கலங்கரை விளக்கத்தின் முக்கியத் தேவை கட்டடத்தின் உயரம். அன்றைய நிலையில் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மிக உயரமான கட்டடம் செயின்ட் மேரி தேவாலயம். தினசரி இரவு விளக்கை ஏற்றுவதற்காக அதன் கோபுரத்தைப் பயன்படுத்துவதற்குக் கம்பெனி, தேவாலயத்திடம் அனுமதி கோரியது. தேவாலயம் மறுத்ததால், பரிமாற்றக் கட்டடத்தின் மொட்டை மாடி தேர்வு செய்யப்பட்டது. (இந்தக் கட்டடம் தற்போதைய கோட்டை அருங்காட்சியகமாகும். அதில் இப்போது இரண்டு ரவிவர்மா ஓவியங்கள் இருக்கின்றன.)

1796இல் வணிகர்கள் அதன் கீழ்த் தளங்களில் காலையில் வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். கப்பல்களுக்கு வழிகாட்டும் விளக்கு ஒவ்வொரு இரவும் அதன் மொட்டை மாடியில் எரியும்.

கடல் மட்டத்திலிருந்து 99 அடி உயரம் கொண்ட மரச் சட்டம் கொண்ட கோபுரம். அதில் பொருத்தப்பட்ட 12 விளக்குகளும், அதில் பொருத்தப்பட்ட ராட்சசத் திரிகள் கொண்டு தேங்காய் எண்ணைய்யில் எரிந்த தீபங்கள், கடற்கரையிலிருந்து 17 மைல் தொலைவில் உள்ள வணிகக் கப்பல்களுக்குச் சமிக்ஞை செய்ய உதவியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள் ஒளியைப் பிரதிபலிக்கவும் அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டன.

விளக்கில் பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் கசிந்து, சுடர் சுற்றியிருந்த கண்ணாடியை நிறமாற்றம் செய்தது. குறைந்த தூரம் மட்டுமே வெளிச்சம் தெரிந்தது. 1807ஆம் ஆண்டின் சூறாவளி, கட்டமைப்பைச் சேதப்படுத்தியதால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கலங்கரை விளக்கத்தின் தேவை உணரப்பட்டது. இதன் விளைவாக, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள், ஒரு புதிய கலங்கரை விளக்கத்தை வடிவமைத்துக் கட்டும்படி பொறியாளர் கேப்டன் ஜான் தாமஸ் ஸ்மித்துக்கு உத்தரவிட்டார்கள்.

கிளைவ் பிரபு அனைத்து வணிகங்களையும் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பியிருந்த சமயம் அது. வணிகர்கள் சென்ற கருப்பு நகரத்திற்கு நேரே கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டுக் கொண்டிருந்தன. எனவே புதிய விளக்கும் அதற்கு அருகில் செல்ல வேண்டியிருந்தது.

கோட்டைக்கும் கறுப்பு நகரத்துக்கும் இடையே எஸ்பிளனேட் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய திறந்தவெளி இருந்தது. புதிய கலங்கரை விளக்கம் அதன் கிழக்கு விளிம்பில் கட்டப்பட்டது.

கிரேக்கக் கோயில்களில் தூண்களை வடிவமைப்பதில் டோரிக் பாணி கட்டடக்கலை மிகவும் பிரபலமானது. அந்தப் பாணியில் உள்ளே படிகளைப் பொருத்தி ஒரு தனித்த கோபுரத்தை வடிவமைத்து ஸ்மித் கலங்கரை விளக்கத்தைக் கட்டினார். 125 அடி உயரக் கலங்கரை விளக்கம் (அடிவாரத்தில் 16 அடி அகலம் மற்றும் மேல் முனையில் 11 அடி) பல்லாவரம் மலையில் வெட்டப்பட்டப் பாறையில் இருந்து உருவாக்கப்பட்ட. 210 படிகள் மேலே இட்டுச் சென்றன. மொத்தக் கட்டுமான செலவு ரூ. 60,000. மேலே உள்ள புதிய ஒளி அதிநவீனமானது என்பதால் உற்பத்தி செய்யச் சிறிது நேரம் பிடித்தது. சில காலம் பழைய தேங்காய் எண்ணெய் விளக்கு முந்தைய லைட் ஹவுஸில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டது.

(சிமினி விளக்கைக் கண்டுபிடித்த) குவின்குவெட் வடிவமைத்த ஆர்காண்ட் விளக்குகள் 15. அவற்றை 6 வேலையாட்கள் பராமரித்து வந்தனர். 208 ஆழாக்கு எண்ணெய் உட்பட மாதாந்திர செயல்பாட்டுச் செலவு ரூ. 227 மற்றும் 3 அணாக்கள் ஆனதாம்.

மெட்ராஸின் இரண்டாவது கலங்கரை விளக்கம் (டோரிக் பாணி) – அருகில் பின்னாளில் கட்டப்பட்ட நீதிமன்றம்

புதிய டோரிக் தூண் கலங்கரை விளக்கம் 50 ஆண்டுகள் வேலை செய்தது. விக்டோரியா மகாராணி மெட்ராஸுக்கு ஒரு புதிய உயர் நீதிமன்றத்தை அனுமதித்தபோது, அரசாங்கம் உலகிலேயே மிகப்பெரிய நீதிமன்றம் ஒன்றைக் கட்ட விரும்பியது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் பயனற்றதாகிவிட்ட எஸ்பிளனேடில் அதைக் கட்ட முடிவு செய்தனர். இந்தோ சாராசெனிக் கட்டட பாணி கோர்ட், செயல்பட்டுக்கொண்டிருந்த கலங்கரை விளக்கத்திற்கு அருகில் வந்தது.

கணக்கு சற்றுத் தவறிவிட்டது.

உயரமான நீதிமன்றம் கலங்கரை விளக்கத்தின் பிரகாசத்தைச் சில கோணங்களில் மறைப்பதாகக் கப்பல்களில் இருந்து உடனடியாகப் புகார்கள் வந்தன. இந்த ஒரு தவறு காரணமாக அரசாங்கம் புதிய கலங்கரை விளக்கத்தைக் கட்ட விரும்பவில்லை. உயர் நீதிமன்றத்தின் உயரமான கோபுரத்தின் மீது விளக்கு வைக்க முடிவு செய்தது.

இருப்பதில் மிகவும் உயரமான குவிமாடத்தின் மேற்பகுதி திறக்கப்பட்டு புதிய தளம் கட்டப்பட்டது. மெட்ராஸின் மூன்றாவது கலங்கரை விளக்கம் புதிய உயர் நீதிமன்றக் கட்டடத்தின் ஒரு பகுதியாக, கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் (முந்தைய கலங்கரை விளக்கத்தை விட 50 அடி உயரத்தில்) நிறுவப்பட்டது. இது மண்ணெண்ணெய்யை எரித்து அதிகப் பிரகாசம் கொண்ட ஒளியை உருவாக்கியது. (பிரகாசமானது 18,000 மெழுகுவர்த்திகளுக்குச் சமம்.)

நீதிமன்றத்தின் உயரமான குவிமாடத்தின்மீது நிறுவப்பட்ட மெட்ராஸின் மூன்றாவது கலங்கரை விளக்கம்

முதலாம் உலகப் போரின்போது இந்தக் கலங்கரை விளக்கம் ஒரு ஜெர்மன் போர்க்கப்பலின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. அந்தக் காலகட்டத்தில் போர்க்கால இருட்டடிப்பு இருந்தது. கலங்கரை விளக்கம் சட்டத்தை உதாசீனம் செய்து, வேலை செய்து கொண்டிருந்தது. செப்டம்பர் 22, 1914 அன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவீசித் தாக்கி நகரத்தை அச்சத்தில் ஆழ்த்திய ஜெர்மன் போர்க் கப்பலான எஸ்.எம்.எஸ் எம்டனை மெட்ராஸுக்கு அழைத்து வந்தது, உயர் நீதி மன்றத்தின் மீது எரித்த விளக்குதான் என்று கூறப்படுகிறது.

1966இல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை கடற்கரைச் சாலையில் உள்ள ரயில் பாதையின் கீழ் வந்தபோது அது கலங்கரை விளக்கச் சுரங்கப்பாதை என்றுதான் அழைக்கப்பட்டது.

உலகில் பல கலங்கரைகள் மின்சார விளக்குக்கு மாறிய போதும் மெட்ராஸ் மட்டும் கெரசின் (மண்ணெண்ணெய்) எண்ணைய்யைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

1970களில், கலங்கரை விளக்கத் துறை, புதிய கலங்கரை விளக்கம் கட்ட சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடங்களுக்கு எதிரே ஓர் இடத்தை (அப்போது வந்திருந்த அண்ணா சமாதிக்கு அருகில்) தேடியது. ஆனால், இந்தக் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்தது. அதற்குப் பதிலாக 1976இல் மெரினாவின் தெற்கு முனையில் ஒரு புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 11 மாடிகள் கொண்ட முக்கோணக் கோபுரத்திலிருந்து 187 அடி உயரத்தில் சக்திவாய்ந்த 3000 வாட் இன்காண்டசென்ட் விளக்கு 27 மைல் தள்ளியிருக்கும் கப்பல்களுக்கு விளக்குகள் தெரியும்படிச் செயல்பட்டது.

இது, நாட்டின் மிக உயரமான கலங்கரை விளக்கங்களில் ஒன்றாகும். இந்தியாவின் நகர எல்லைக்குள் உள்ள ஒரே கலங்கரை விளக்கமும் இதுதான்.

1991-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து இதன் உள்ளேசெல்லப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2013இல் இருந்து பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. மெட்ராஸ்வாசிகள் ஒரு முறையாவது இதன் மேல் சென்று கடலையும் நகரையும் ரசிக்க வேண்டும். கண்கொள்ளாக் காட்சி.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *