‘சூழ்ச்சி நிறைந்த இந்தியன். இவன்தான் இருண்ட திட்டங்களுக்குத் தலைசிறந்த ஆலோசகர். புத்திக்கூர்மையில் ஓர் ஆசிய மாக்கியவெல்லி. அவனது முகத்தில் முதிர்ச்சிக்குத் தோன்றுவதைவிட அதிகமான சுருக்கங்கள் உள்ளன. இது மனசாட்சியின்றி, தனிப்பட்ட அனுகூலத்தை அடைவதற்குப் பல சூழ்ச்சிகளைச் செய்ததற்காக அவனுக்குக் கிடைத்த பரிசு!’
ஒரு துபாஷை இவ்வாறு விவரிக்கும் நபர் தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர் வால்டர் ஸ்காட் .
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்டபோது ஏராளமான கப்பல்கள் மெட்ராஸ் துறைமுகத்தில் இருந்து தொலைதூரச் சந்தைகளுக்கு ஜவுளிச் சரக்குகளுடன் சென்றன. அக்காலத்தில் ஆசிய துணிப்பொருள்களுக்குப் பெறக்கூடிய லாபம் மிகப்பெரியது.
இந்தப் பரிவர்த்தனையில் பலர் பணக்காரர்களாக ஆனார்கள். நெசவாளர், வர்த்தகர் மற்றும் கப்பல் உரிமையாளர்கள். ஆனாலும் இந்த வணிகப் பரிவர்த்தனையில் நம்பமுடியாத அளவுக்குச் செல்வத்தைக் குவிக்கும் வாய்ப்பை இடைத்தரகர்கள் கொண்டிருந்தனர்.
ஒரு துபாஷ் (தோ பாஷ்). இரண்டு மொழிகளைப் பேசுவதில் தேர்ச்சி பெற்றவர். வெள்ளைக்காரனுக்கும் இந்தியனுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டதால். குபேரனைக் கைக்குள் அடக்கி வைத்தது போலொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு.
பல துபாஷ்கள் மலையெனப் பணம் குவித்தாலும். இன்று அவர்களுள் பச்சையப்பரைப் போல யாரும் மக்கள் நினைவில் இல்லை. சைனா பஜார் சாலையில் உள்ள ஒரு கிரேக்கப் பாணிக் கட்டடத்தின் காரணமாகப் பச்சையப்பா தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம்பிடித்தார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் பெயரிடப்பட்ட இந்தக் கட்டடம் அவரால் கட்டப்படவில்லை. இந்தக் கட்டடத்தையோ அல்லது கல்வியை ஒருவகையான பரோபகாரமாகவோ என்றும் அவர் நினைக்கவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பெயரில் கட்டப்பட்டது.
அதேசமயம், அரசர்களின் ஆதரவின்றி இடிந்து விழும் நிலையில் இருந்த சிதம்பரம் கோயில் கிழக்குக் கோபுரத்தை சீரமைக்கும் பணியில் பச்சையப்பன் ஈடுபட்டார். ஆனால் அவர் கட்டிய சிதம்பரத்தின் பாழடைந்த கிழக்கு கோபுரத்திற்கு அவர் பெயரிடப்படவில்லை.
சைனா பஜார் சாலையில் பிராட்வே சந்திப்புக்கு அருகில் ஒரு கிரேக்க பாணி கட்டடம் உள்ளது. கறுப்பர் நகரில் பெரிய அளவில் கட்டப்பட்ட இந்தியக் கட்டடங்களில் இதுவே முதலாவதாக இருக்க வேண்டும். இன்றும் கூட அதன் வித்தியாசமான கட்டடக்கலைப் பாணியின் காரணமாகக் கறுப்பு நகரத்தில் உள்ள அதன் அண்டையக் கட்டடங்களில் இருந்து மண்டபம் தனித்து நிற்கிறது.
இங்கு செயல்படும் ஆங்கில வழிப் பள்ளி, இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் பள்ளியாகவும், அரசு அல்லது கிறிஸ்தவப் பாதிரியார்கள் ஆதரவு இல்லாத முதல் பள்ளியாகவும் இருக்க வேண்டும். அதனால் தானோ என்னவோ இந்து அல்லாத மாணவர்கள் நீண்ட காலமாக அனுமதிக்கப்படவில்லை. இங்கு தோற்றுவிக்கப்பட்டப் பள்ளியின் விதையிலிருந்துதான் பிற்காலத்தில் புகழ்பெற்ற பச்சையப்பா கல்லூரி உதயமானது.
1770 வாக்கில், பெரியபாளையத்தில் இருந்து பச்சையப்பன் என்னும் ஓர் இளம் அனாதைச் சிறுவன், பிரிட்டிஷ் மெட்ராஸ் நகரத்திற்குக் குடிபெயர்கிறான்.. நகரம் அப்போதுதான் அதை முற்றுகையிட்ட பிரெஞ்சுக்காரர்களைத் துரத்தி அடித்து விட்டு மீண்டும் ஒரு மாபெரும் வர்த்தகப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது
வணிகராக இருந்த ஒரு வழிகாட்டியின் கீழ், பச்சையப்பன் அவர்களையெல்லாம் வழிநடத்தும் ஆங்கிலேயரின் வர்த்தகச் செயல்முறைகளைக் கற்றுக்கொண்டான்.. ஆயிரக்கணக்கான அவனது நாட்டு மக்கள் தங்கள் காலனித்துவ எஜமானர்களை அணுகும் முறைகளைப் பற்றி முற்றிலும் அறியாதவர்களாக இருந்த காலத்தில், பச்சையப்பா ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றைக் கற்று 16 வயதில் அங்கீகரிக்கப்பட்ட துபாஷ் ஆனான்.
தொடக்கத்தில் அவர் பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் இந்திய நெசவாளர் அல்லது வர்த்தகர் இடையே மொழிபெயர்க்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் விரைவில் அவர் தனது வேலையில் மிகவும் திறமையானவராக மாறியதால், அவரது சேவைகள் அரசாங்கத்தாலும், தஞ்சை மன்னராலும் கூட நாடப்பட்டன. அவரது வீட்டில் குவிந்திருந்த செல்வத்தை மீண்டும் வியாபாரத்தில் ஈடுபடுத்த வேண்டியதாயிற்று.
அதனால் அவர் பலருக்கும் அதிக வட்டிக்குப் பணம் கடனாகக் கொடுத்தார். ஒரு காலத்தில் பச்சையப்ப முதலியார் தஞ்சாவூர் செர்போஜிக்கு ஒரு லட்சம் பகோடாக்களைக் கடனாகக் கூடக் கொடுத்தார். (அதில் அவரது துபாஷ் கமிஷன் 15 சதவிதமும், வட்டியான 24 சதவிகிதத்தையும் முதலில் கழித்துக் கொண்டு தான் கொடுத்தார்.)
விரைவில் குபேரனின் கருவூலத்தின் திறவுகோல் அவரிடம் இருப்பதாகத் தோன்றும் அளவுக்கு பச்சையப்பன் மகா செல்வந்தரானார். ராமானுஜ கவிராயர் (இவர் ஜார்ஜ் உக்லோ போப்பின் குரு) பச்சையப்ப முதலியார் மீது ஒரு ‘பஞ்சரத்னமாலை’ பாடினார்.
இரண்டு மனைவிகள் இருந்தபோதிலும், பச்சையப்பா வாரிசுகளை விட்டுச் செல்லவில்லை. ஆனால் அவர் இறப்பதற்கு முன், அவர் தனது அபரிமிதமான சொத்துக்களுக்கான உயிலை எழுதினார். (ஓர் இந்தியரின் முதல் உயிலாக இது இருக்கலாம்.) முதலியார் தனது செல்வத்தைக் கோயில் அறப்பணிகளுக்கும் புனரமைப்புக்கும் பயன்படுத்த விரும்பினார். ஆனால் பச்சையப்பாவின் கருணைக் குணம் அவரது சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் நபர்களிடம் இல்லை
மேலும் அது முதல் உயில் என்பதால், அதன் புதுமையைப் பயன்படுத்திக் கொண்ட அடுத்தடுத்த வாரிசுகள் அதைத் தங்கள் விருப்பப்படிப் பயன்படுத்தினர். அவரது மனைவிகள் சொத்துக்களுக்காகச் சண்டையிட்டனர், மேலும் பலர் அடுத்தடுத்தத் தலைமுறைகளிலும் சொந்தம் கொண்டாடி ஏறக்குறைய ஓர் அரை நூற்றாண்டு காலமாக அவரது சொத்துக்கள் நீதி மன்றத்தில் சிக்கித் தவித்தன.
பச்சையப்பாவின் சொத்துக்களை முறைகேடாக அபகரிப்பதற்கான சட்டப் போராட்டங்கள் பற்றிக் கேள்விப்பட்ட சென்னை மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் நார்டன், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், அரசுப் பத்திரங்கள் மற்றும் நகைகளுக்கு நிரந்தரப் பாதுகாப்பை உருவாக்க விரும்பினார்.
பச்சையப்பாவின் சாசனத்தில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்ததைக் கருதி நார்டன் விண்ணப்பத்தின் பேரில், 1841ஆம் ஆண்டில் மதராஸ் உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையை அனுமதித்தது, மத வழிபாடுகளை நிறைவேற்றிய பிறகு மிச்சம் இருக்கும் உபரிப் பணத்தைக் கல்வி கற்பிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது
பிழைப்பு தேடி ஓர் ஏழை அனாதையாக சென்னைக்கு வந்த பச்சையப்பா இந்த ஆதரவான நகரத்தில் பெரும் செல்வத்தைக் குவித்திருந்தார். அந்த அதீதச் செல்வம் அப்போது நாட்டின் பணக்கார அறக்கட்டளையாக மாற்றப்பட்டது.
பச்சையப்பா கல்வி நிறுவனங்கள் முதலில் பிராட்வேயில் தொடங்கப்பட்டன. பின் அவர்கள் எஸ்பிளனேட் சாலையில் அவர்களுக்கெனக் கட்டப்பட்ட பெரிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர். நார்டன் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியபோது, விக்டோரியா மகாராணியைப் பற்றி தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதக் கவிதைகள் வாசிக்கப்பட்டன.
கிரேக்க கட்டடக் கலையில் தீசஸ் ஏதெனியன் கோயிலை மாதிரியாகக் கொண்ட கட்டடம் கேப்டன் லுட்லோவால் வடிவமைக்கப்பட்டது.
நூற்றாண்டின் தொடக்கத்தில், மாணவர்களின் எண்ணிக்கையும், பிராட்வேயில் திரண்டிருந்த கூட்டமும், அறங்காவலர்களைக் கல்லூரிக்கு மற்றொரு வசதியான இடத்தைத் தேடச் செய்தது.
1933இல், 50,000 ரூபாய்க்கு பொது மக்களிடம் லாட்டரி நடத்தி, கூடுதல் அரசு மானியத்துடன், பச்சையப்பா கல்லூரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 43 ஏக்கர் நிலத்திற்கு மாற்றப்பட்டது.
காந்தி 16 முறை மதராஸுக்கு வந்துள்ளார். இங்கே அவருடைய பிற்காலப் பேச்சுகள் ஆயிரக்கணக்கானவர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் குதிக்கத் தூண்டியது. ஆனால் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞராக அவர் பச்சையப்பன் அரங்கில் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் அவல நிலை குறித்து முதல் முதலாகப் பேசியது மிகவும் வித்தியாசமானது. ஐரோப்பிய பாணி கோட் மற்றும் சூட் அணிந்து 90 நிமிடங்கள் நீடித்த உரையை வாசித்தார். கூட்டம் சலிப்பாக இருந்தாலும் பொறுமையாக இருந்தது. இந்த நகரத்தில் அவரது எதிர்கால வரவேற்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று காந்தி கூட நினைக்கவில்லை
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் (கணித மேதை சீனிவாச ராமானுஜனைப் போல) சிகரத்திற்கு உயர்ந்துள்ளனர்.
1960களின் பிற்பகுதியில், பக்கத்து மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் (பிரம்மானந்த ரெட்டி மற்றும் அண்ணாதுரை) இருவருமே இங்கு பச்சையப்பன் கல்லூரியில் படித்துள்ளனர் என்பது இந்த அமைப்பின் அரசியல் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
0