மெட்ராஸில் உள்ள பழமையான தெருக்களில் ஒன்றுக்கு மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டின் பெயரிடப்பட்டது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ஆனால் உலகில் குறைந்தது 50 நகரங்களில் ஆர்மீனியாவின் பெயரிடப்பட்ட தெரு உள்ளது. ஏனென்றால் ஆர்மீனியாவுக்கு உள்ளே இருக்கும் ஜனத்தொகையைவிட வெளியே இருக்கும் ஆர்மீனியர்கள் 3 மடங்கு அதிகம். இந்த விந்தைக்குச் சரித்திரமே காரணம்.
ஆர்மீனியா மத்திய ஆசியாவில் இதர நாடுகளால் சூழப்பட்ட தேசம். அது ஒரு சபிக்கப்பட்ட நாடு என்று கூடச் சொல்லலாம். அதைச் சுற்றியிருந்ததெல்லாம் சாம்ராஜ்ஜியங்கள். எப்போதெல்லாம் நிலப்பசி எடுக்கிறதோ, அப்போதெல்லாம் ஆர்மீனியாவை நோக்கிப் படையெடுப்பார்கள். பெரும்பாலும் துருக்கி அல்லது ரஷ்யாவால் பிடிக்கப்பட்டது ஆர்மீனியா.
பல நேரங்களில் ஆர்மீனியா என்ற வார்த்தை வரைபடங்களில் இருந்து அழிக்கப்பட்டபோது ஆர்மீனியர்கள் பாதுகாப்பான நிலங்களைத் தேடி நாட்டை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் செழிப்பைப் பரப்பித் தங்கள் புதிய தாயகத்திற்காக உழைத்தனர்.
ஆர்மீனியர்கள் சிறந்த வணிகர்கள். அவர்கள் தங்கள் தாய் நாட்டை இழந்திருந்தாலும், உலகின் பல்வேறு நாடுகளில் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குடியேறியதால் அவர்களது வணிக வளர்ச்சிக்கு உதவியது.
உதாரணமாக, மதராஸின் பிரிட்டிஷ் வணிகர்கள் தங்கள் பொருள்களை ஏற்றி ஒரு கப்பலில் இங்கிலாந்துக்கு அனுப்புவார்கள். இந்தக் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றி ஐரோப்பாவின் இலக்கை அடைய 6 மாதங்கள் ஆகும். ஆனால் கப்பலில் உள்ள பொருள்களின் பட்டியல் ஒன்று ஆர்மீனியத் தொடர்புகள் மூலம் நிலம் வழியாக அனுப்பப்படும். ஆர்மீனியர்களின் நில இணைப்புகள் மூலம் இந்தப் பட்டியல் ஒரு மாதத்திற்கு முன்பே இங்கிலாந்தை அடையும். வரக்கூடிய பொருள்கள் என்னவென்று முன்கூட்டியே தெரிந்ததனால் அனைத்துப் பொருள்களுக்கும் சிறந்த விலை நிர்ணயிக்கபட்டு விற்கப்பட்டது. பெரும்பாலானவைத் தரையிறங்குவதற்கு முன்பே விற்கப்பட்டன.
இது தவிர, ஆர்மீனியர்கள் வணிகம், வங்கி மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றில் ஈடுபட்டனர். போர்த்துகீசியர், டச்சு மற்றும் பிரெஞ்சுக்காரர்களைப் போலல்லாமல், ஆங்கிலேயர்களை அரசியல் ரீதியாக அச்சுறுத்தாமல் பொருளாதாரத்தை மேம்படுத்தியதால் அவர்கள் மெட்ராஸ் வளமைக்குப் பெரிதும் பங்களித்து மிகவும் மதிக்கப்பட்டனர்.
அவர்கள் வணிகத்திலும் ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள் பருத்தி துணியை வர்த்தகம் செய்தபோது, ஆர்மீனியர்கள் சிறந்த பட்டு, விலையுயர்ந்த மிளகு மற்றும் ரத்தினங்களைக் கையாண்டனர்.
16ஆம் நூற்றாண்டில் ஆர்மீனியர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினர். ஆர்மீனியர்கள் ஏற்கெனவே அண்டை நகரமான மெட்ராஸுக்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் செழித்துக்கொண்டிருந்த சாந்தோமின் போர்த்துக்கீசிய காலனியில் குடியேறியிருந்தனர். சாந்தோம் படிப்படியாகச் சுருங்கத் தொடங்கிய சமயத்தில் மெட்ராஸ் அசுர வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டியது.
மெட்ராஸ் ஒரு சர்வதேச வர்த்தக மையமாக வேகமாக மாறியதைக் கண்டு, சில ஆரம்பகால ஆர்மீனியர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் கருப்பர் நகரத்தில் குடியேற முடிவு செய்தனர்.
மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் நகரத்தின் பணக்காரச் சமூகமாக மாறினர். மெட்ராஸின் ஆர்மீனியச் சமூகம் மிகவும் மரியாதையும் பெற்று கணிசமான அளவு அதிகாரத்தையும் கொண்டிருந்தது.
எந்த அளவுக்கென்றால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மூலதனம் தேவைப்படும்போது ஆர்மீனியர்கள் அவர்களுக்குப் பலமுறை நிதியுதவி செய்தனர்.
மெட்ராஸ் நகராட்சியாக உருவானவுடன் புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கும் விதிகள் தளர்த்தப்பட்டன. கிழக்கிந்திய நிறுவனம் நகரத்தின் ஆர்மீனிய வணிகர்களுக்கு ஆங்கிலேயர்களுக்கு இணையான உரிமைகளை வழங்கும் சாசனத்தை வழங்கியது. ஆனால் இதையெல்லாம் விட அவர்களின் பரோபகார மனப்பான்மை அவர்களின் அனைத்து வணிகத் திறன்களையும் தாண்டி மதிக்கப்பட்டது.
முதன்முதலில் ஆர்மீனிய அச்சகம் 1772இல் மெட்ராஸில் அமைக்கப்பட்டு, அங்கு முதல் ஆர்மீனிய செய்தித்தாள் வெளியிடப்பட்டது. கூடுதலாக, அதன் ஆசிரியர் ஷஹாமிர் ஷஹாமிரியன், என்றாவது ஆர்மீனியா விடுதலை பெற்றால் தேவைப்படுமே என்று குடியரசுக் கொள்கையின் உந்துதல் கொண்ட அரசியல் சாஸனத்தை அச்சிட்டார்.
மெட்ராஸில் ஒரு சாலை இன்னமும் அவர்களின் பெயரால் ஆர்மீனியன் தெரு என்றே அழைக்கப்படுகிறது. (தற்போது அரண்மனைக்காரன் தெரு என்று வழங்கப்பட்ட போதிலும் மக்கள் மத்தியில் ஆர்மீனியன் தெரு என்கிற பெயர் மறக்கப்படவில்லை.) பாரீஸ் கார்னரிலிருந்து இரண்டாவது சாலை. அவர்களின் முக்கிய தேவாலயம் இங்கே இருப்பதால் இப்பெயர்.
பழைய கறுப்பர் நகரத்தில் ஆர்மீனியர்களுக்கு மரத்தால் ஆன தேவாலயம் இருந்ததாம். அதை போர்காலத்தில் தட்டியதும் அவர்கள் தற்போதைய இடத்திற்கு நகர்ந்தனர்.
மதராஸில் ஆர்மீனியர்கள் இன்று இல்லாததால், இந்தத் தேவாலயம் கல்கத்தாவில் உள்ள ஆர்மீனிய சர்ச் கமிட்டியால் பராமரிக்கப்படுகிறது. சுமார் 350 ஆர்மீனியர்களின் கல்லறைகள் தேவாலயம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன . அதைத் தவிர அவர்களை அக்காலத்தில் புதைக்கும் பிரத்தியேக இடம் பல்லவன் சாலையில் தீவுத்திடலில் இருக்கிறது.
பிளாக் டவுனில் உள்ள ஆர்மீனியத் தேவாலயம், மதக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி ஒரு களஞ்சியமாகவும் நூலகமாகவும் இருந்தது. தாய்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு இங்கு தான் பத்திரமாகச் சேமிக்கப்பட்டது.
ஆர்மீனியச் சமூகத்தில் முக்கியமான குடிமகன் பெட்ரஸ் உஸ்கான். அவர் வலிமைமிக்க வெலிஜியன் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாராளத்தில் இந்த நகருக்குப் பல முக்கிய நன்மைகள் கிடைத்தன.
1728, செயின்ட் தாமஸ் மலைக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு அடையாறு ஆற்றின் குறுக்கே பாதுகாப்பான பாதையை வழங்குவதற்காக, உஸ்கான், அடையாறு ஆற்றின் குறுக்கே 30,000 பகோடாக்கள் செலவில் மர்மலாங் (மாம்பலம்) பாலத்தைக் கட்டினார்.
இதைப் பற்றிய ஒரு மிக அழகான கல்வெட்டில், பாலத்தின் ஓரத்தில் மூன்று மொழிகளில் ‘இந்தப் பாலம் கோஜாவால் பொது நலனுக்காகக் கட்டப்பட்டது’ என்று பொறிக்கப்பட்டது (ஆர்மீனியன், பாரசீகம், லத்தீன்).
பாலம் நீண்ட காலத்திற்குப்பின் மாற்றப்பட்டது, ஆனால் பலகை இன்னும் உள்ளது. செயின்ட் தாமஸ் மலையின் படிகளையும் உஸ்கான் கற்களால் கட்டி முடித்தார். பொதுமக்கள் பார்வைக்காக சாந்தோமில் தாமஸ் கல்லறை திறக்கப்பட்ட போது இருந்தவர்களில் உஸ்கான் இருந்தார். ஆனால் அவர் தாய் நாட்டையும் மறக்கவில்லை.
சாந்தோமில் செயின்ட் ரீட்டா என்று அழைக்கப்படும் தேவாலயம் உள்ளது. அதைச் சீர் செய்த போது, அதன் வெளிப்புறச் சுவர்களில் ‘ஆர்மீனியாவின் நினைவாக’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் விட மெட்ராஸுக்கு அவர் செய்த உதவி மிகப் பெரியது. மெட்ராஸைக் கட்டுப்படுத்த விரும்பும் தென்னிந்திய மன்னர்களுடன் கம்பெனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தபோது அவர்கள் உஸ்கானை அனுப்பினார்கள்.
1740இல், மராத்தியர்கள் மெட்ராஸை ஆக்கிரமிக்க யோசனை கொண்டபோது படையெடுப்பாளருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப் பிரிட்டிஷ் தூதராக பெட்ரஸ் உஸ்கான் நியமிக்கப்பட்டார். உஸ்கானின் ராஜதந்திரம் மெட்ராஸ் நகரத்தைச் சாம்பலாக்காமல் காப்பாற்றியிருக்கலாம், அதற்கு வெகுமதியாக, அவர் பிரிட்டிஷ் நிறுவன கவுன்சிலராக நியமிக்கப்பட்டார்.
காலம் செல்லச் செல்ல ஆங்கிலேயர்கள் வணிகத்தில் கவனம் செலுத்தாமல் நாட்டை ஆள்வதில் கவனம் செலுத்தத் தொடங்கினர். மெட்ராஸ் அதன் வணிக முக்கியத்துவத்தை இழந்தது. ஆர்மீனியர்கள் மெதுவாக நகரத்தை விட்டு வெளியேறினர்.
இன்று மதராஸில் ஆர்மீனியர்கள் இல்லை. ஆர்மீனியத் தேவாலயத்திற்கு வருபவர்கள் மிகக் குறைவு.
பிரதான தேவாலய அமைப்பிற்கு அருகில் மணி கோபுரமானது, ஆறு பெரிய மணிகளைக் கொண்டுள்ளது. இவை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9:30 மணிக்கு பராமரிப்பாளரால் ஒலிக்கப்படும். கறுப்பு நகரம் இந்த இரைச்சலுக்கு அதிர்கிறது. ஆர்மீனியர்களின் வரலாறு அந்த ஒரு கணத்தில் உயிர் பெறுகிறது.
0