காந்திக்கு மெட்ராஸுடன் பெரிய தொடர்பு இருந்தது. அவரது பெயரிடப்பட்ட முதல் பொது இடம் எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் சாலை தான். ஆச்சரியப்படும் விதமாகச் சுதந்திரத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன் இது ஆங்கிலேயர்களால் பெயரிடப்பட்டது .
காந்தி 16 முறை சென்னை வந்துள்ளார். ஆனால் அவரது விஜயங்கள் நடந்த 50 ஆண்டுகளில் தான் என்ன ஒரு பரிணாம வளர்ச்சி. நகரத்திலும் சரி. காந்தியிலும் சரி.
மெட்ராஸ் நகரில் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு குரல்களில் காந்தி பேசினார். முதல் முறையாக அவர் கோட் சூட்டில் வந்தது, தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் கஷ்டங்களைப் பற்றிப் பேசத்தான். பச்சையப்பன் அரங்கில் சலிப்படைந்த பார்வையாளர்களுக்கிடையே ஒன்றரை மணி நேரம் ஓர் உரையை எழுதிவைத்து வாசித்தாராம். மகாத்மாவாகப் போற்றப்படுவதற்கு முன்பு, அவர் பார்க் டவுனில் ஒருமுறை ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் போல ஒரு குடிமகன் உலகில் எங்கும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது’ என்று கூறினார்.
பின்புதான் ‘வெள்ளையனே வெளியேறு’, ‘சத்தியாகிரகம்’, ‘செய்; அல்ல செத்து மடி’, எல்லாம்.
தன் பங்குக்கு மெட்ராஸும் அவருக்குச் சிறந்த யோசனைகளை வழங்கியது. அவரது ஒத்துழையாமை இயக்க யோசனையே மெட்ராஸ் கதீட்ரல் சாலையில் தங்கியிருந்த போது அரைத் தூக்கத்தில் கனவு போல வந்ததுதான்.
காந்தியின் மேல் மெட்ராஸ் மக்களுக்கு அபார பிரேமை. அதன் குடிமக்கள் அவரது இந்தி பேச்சுகளில் வார்த்தைகள் புரியாமல்கூட மயங்கிய நிலையில் மணிக்கணக்காக அமர்ந்திருந்தனர்.
1948இல் காந்தி சுடப்பட்டபோது நகரம் திகைத்தது. மெட்ராஸை, ‘காந்தி பட்டினம்’ என்று பெயர் மாற்றக்கூட மாநகராட்சி சபையில் பரிந்துரை செய்யப்பட்டது
இறுதிச் சடங்கின்போது, மெரினா கடற்கரையில் துக்கத்தில், ஆயிரக்கணக்கானோர் தங்கள் தலையை மொட்டையடித்துக் கடலில் குளித்தனர்.
படுகொலைக்குப் பின் நாட்டில் மகாத்மாவின் நினைவாகப் பல நினைவுச் சின்னங்கள் வரத் தொடங்கின. கல்கத்தாவில் ஹபீப் ரஹ்மான் வடிவமைத்த ‘காந்தி காட்’ மற்றும் நாகர்கோவிலில் என்.எஸ். கிருஷ்ணன் கட்டிய ‘காந்தி ஸ்தூபி’ முதலில் வந்தவை. மெட்ராஸில் காந்தியைப் போற்றியவர்கள் மதராஸில் ஒரு மணிமண்டபம் இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
எழுத்தாளர் கல்கி, காந்தியின் மீது அதீத பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார். காந்தியின் ஒத்துழையாமை அழைப்பின் பேரில் இறுதித் தேர்வுக்குச் சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை விட்டு வெளியேறியவர் கல்கி.
கல்கியின் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘ஆச்சா தேஷ் சேவக்’ என்று கூறியதுதான் காந்தி அவருடன் பேசிய ஒரே வார்த்தை. காந்தியின் சுயசரிதையை ‘திரு விக’வின் பத்திரிக்கைக்கு மொழிபெயர்த்தவரும் கல்கியே.
பத்திரிக்கை ஆசிரியராகவோ எழுத்தாளராகவோ மட்டும் மேசைக்குப் பின்னால் அமர்ந்திருப்பதில் கல்கி திருப்தியடையவில்லை. பல நல்ல காரியங்களுக்காக நிதி திரட்டுவதிலும் வல்லவராக இருந்தார்.
தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதிக்கு அவரது பிறந்த ஊரான எட்டயபுரத்தில் மணி மண்டபத்தைக் கட்டுவதில் அவர் மும்முரமாக வேலை செய்தவர்.
காந்திக்கு நினைவுச் சின்னம் கட்டவேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்க கல்கி முடிவு செய்தார். மகாத்மாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு வருடத்திற்கும் ஓர் அடி என்ற கணக்கில், 79 அடி உயரத் தூண் ஒன்று கல்கியால் கற்பனை செய்யப்பட்டது. அவர் தனது பத்திரிக்கை ஓவியர் மணியத்தை வைத்து படம் வரைந்து தனது கல்கி பத்திரிகையின் அட்டையிலும் போட்டுவிட்டார். கல்கியின் யோசனைக்கு அமோக வரவேற்பு.
நினைவுத் தூணுக்கு கல்கி மனதில் வைத்திருந்த இடம் பல்கலைக் கழகத்தின் எதிரே கடற்கரையில். அங்குதான் இப்போது தமிழகத்தின் 4 முதல்வர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்..
கல்கியின் நண்பர் சதாசிவம் நினைவுச் சின்ன முயற்சியைத் தீவிரமாக விளம்பரப்படுத்தத் தொடங்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸின் முதல் இரு முதல்வர்களான ஓமந்தூர் ரெட்டியார் மற்றும் குமாரசாமி ராஜா ஆகியோர் இதை ஆதரித்தனர்.
எம்.எஸ். சுப்புலட்சுமி கச்சேரிகளில் பாடி நிதி திரட்டினார். இதற்காக நாடகங்களும் நடத்தப்பட்டன. பாரதி நினைவுச் சின்னத்துக்காகக் கணக்கிடப்பட்ட நிதியை விட அதிகமாகவும் விரைவாகவும் நிதியும் குவியத் தொடங்கியது. 79 அடி தூண் ஒரு கனவிலிருந்து நனவாகும் காலமும் வந்தது.
இரண்டாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்ற தனது வழிகாட்டியான ராஜாஜியை அணுகினார் கல்கி. அப்போது அவர் கையில் ஒன்றரை லட்சம் இருந்தது.
ராஜாஜி யோசனையை வரவேற்றார். ஆனாலும் கட்டப்படுவது தூணாக இல்லாமல், அந்த அமைப்பு மக்களுக்குத் தினசரி பயன்படவும் வேண்டும் என்று நினைத்தார். அதைத் தியான மண்டபமாகக் கட்ட பரிந்துரைத்தார். கல்கி அதிர்ச்சியடைந்தாலும் அதற்குப் பின்னால் இருந்த காந்தியச் சிந்தனையை உணர்ந்து, மறுப்பின்றி ஏற்றுக்கொண்டார்.
பிரார்த்தனைக் கூட்டங்களுக்குத் தகுந்த ஒரு வட்ட மண்டபத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. நுழைவாயிலில் ஒரு பாரம்பரியத் தென்னிந்தியக் கோயில் கோபுரத்தையும் சேர்த்தார்கள். கருங்கல்லால் கட்ட பொறுப்பேற்றவர் வைத்யனாதா ஸ்தபதி.
இந்தத் திட்டத்திற்குப் பின்னால் அரசியல் பலம் கூடி வந்ததால், காரியங்கள் வேகமாக நடக்கத் தொடங்கின. கவர்னர் ஸ்ரீபிரகாசா மண்டபம் கட்டுவதற்காக ராஜ்பவன் வனப்பகுதியில் இருந்து 10 ஏக்கர் நிலத்தை வழங்கினார். கல்கியும் அவரது உதவியாளர் பகீரதனும் 10 ஏக்கரைத் தேர்வு செய்ய முள் காடுகளுக்குள் பல நாட்கள் திரிந்தனர். கிண்டி பொறியியல் கல்லூரிக்கு நேர் எதிரே தேர்வு செய்தனர்.
ராஜ் பவனையொட்டி ஒரு காலத்தில் இரண்டு சதுர மைல் இருந்த காடு வெள்ளையர் வேட்டையாடப் பயன்பட்டது. 1670இல் தான் ஒரு வீடு கட்டப்பெற்று மெட்ராஸ் ஆளுனர் ஓய்வெடுக்கும் மாளிகையாக மாற்றம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பின் ஆளுனர் மாளிகையாக உருவெடுத்தது.
மணியம் மீண்டும் ஒரு முறை கட்டடத்தை வரைந்தார். கல்கி அதைத் தனது பத்திரிகையின் அட்டைப்பக்கத்தில் வெளியிட்டார். எனினும் கல்கி துரதிர்ஷ்டவசமாக 1954இல் காலமானார். காந்தி மண்டபம் மற்றும் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் ஆகியவை அவர் முடிக்காமல் விட்டுச்சென்ற முக்கியமான வேலைகள்.
மணிமண்டபம் கட்டி முடித்த போது 4 லட்சம் செலவானது. நுழைவுப் பலகையில் கல்கியின் பெயர் மறக்காமல் குறிப்பிடப்பட்டிருந்தது.
மண்டபத்தின் முன் அண்ணலின் மார்பளவு சிலையொன்று சிற்பி தனபாலால் செய்யப்பட்டது ஒரு சுவையான கதை.
சிற்பி தனபால் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் அவர் மகாத்மாவின் சிலையைச் செதுக்க விரும்பினார்.
காந்தியைக் கண்டிராத தனபால் எப்படி இந்தச் சிலையைச் செதுக்குவது என்று தவித்தாராம்
பின் விடியற்காலையில் மெரினா கடற்கரையில் காந்தியின் படத்தை மார்போடு அணைத்துக்கொண்டு பல மைல்களுக்கு நடந்து செல்வார். படத்தை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவாராம். சிலை முடிந்தபின் தேவ்தாஸ் காந்தியிடம் பயத்துடன் காண்பித்தார். தேவ்தாஸ் கண்ணீர் வடித்து, ‘என் தந்தையைப் பார்த்தது போலிருந்தது’ என்றார்.
முதல் சிலையின் வெண்கலப் பிரதியை ராஜாஜியின் வேண்டுகோளின் பேரில் மண்டபத்தின் முன்புறத்தில் வைப்பதற்காக அவசரமாகச் செய்யப்பட்டது.
அகிம்சையை வலியுறுத்தக் கட்டடம் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டது. உள்ளே பெரியதொரு ராட்டினம் , ஒத்துழையாமையைக் குறிக்க வைக்கப்பட்டது.
27 ஜனவரி 1956 அன்று ராஜரத்தினம் நாதஸ்வரம் வாசிக்க, சுப்புலக்ஷ்மி ரகுபதி ராகவ பஜனை செய்ய, மதராஸ் முதல்வர் ராஜகோபாலாச்சாரியால் காந்தி நினைவகம் திறக்கப்பட்டது. அதுவே பின் நாளில் மக்களால் காந்தி மண்டபம் என அழைக்கப்பட்டு பெயரானது.
கிண்டி வனப்பகுதியில் கட்டப்பட்ட முதல் கட்டடம் மகாத்மா காந்தியின் நினைவகம்தான். ஆனால் மடையைத் திறந்துவிட்டது போல வரிசையாக ஐ.ஐ.டி, புற்று நோய் மருத்துவமனை, என நகருக்குள் இருந்த ஒரே காடு கொஞ்ச காலத்திலேயே கரைந்து பாதியானது.
காந்தி மண்டப வளாகத்துக்குள் ரெட்டமலை சீனிவாசன் மற்றும் முன்னாள் முதல்வர்கள் சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், எம்.பக்தவத்சலம் ஆகியோருக்கு நான்கு நினைவகங்கள் உள்ளன.
0