ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான புதினம் ‘கல்லிவர் ட்ராவல்ஸ்’. அதில் லில்லிபுட்டுக்குச் செல்லும் முன், ஜார்ஜ் கோட்டைக்கு கல்லிவர் வந்ததாகக் கதையில் சொல்லப்படும்.
மெட்ராஸ் இன்று அதன் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்காக உலகம் முழுவதும் மதிக்கப்படும் நகரமாக உள்ளது. வெற்றியின் படிகளில் ஏற விரும்பும் பல புலம்பெயர்ந்தோருக்கு நகரம் ஒரு காந்தமாகச் செயல்படுகிறது. இவை அனைத்தும் 384 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜவுளிக் கிடங்காகத் தொடங்கியதுதான். பின்னர் அது ஒரு கோட்டையாக வளர்ந்து இறுதியாக உலக வரலாற்றில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கான ஆரம்பப் படிகளை அமைத்தது.
இந்த இடத்தில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. வங்கக் கடலுக்கடியில், மலை போல மணல் மேடு, கப்பல்கள் கரையை நெருங்குவதைத் தடுத்தது. கடுமையான புயல்கள் நகரத்தை அடிக்கடி தாக்கின. ஒரு வணிக நகரமோ, கோட்டையோ இங்கு வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை.
பின் ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்?
டச்சு, போர்த்துக்கீசிய, பிரெஞ்சு மற்றும் டேனிஷ்காரர்கள் ஏற்கெனவே கோரமண்டல் கடற்கரையில் தங்கள் கோட்டைகளை அமைத்துக் கொண்டிருந்தனர். போட்டியில் பிரித்தானியர்கள்தான் கடைசியாக வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து போதுமான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. அதனால் புலிகாட்டுக்கும் சாந்தோமுக்கும் நடுவே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
இடத்தைத் தேர்ந்தெடுத்த பிரான்சிஸ் டே, சாந்தோமில் ஒரு காதலியை வைத்திருந்ததாகவும், அதனால் அவள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள மெட்ராஸைத் தேர்ந்தெடுத்ததாகவும் வதந்திகூட பரவியது. லண்டனில் டே இதைப்பற்றி விசாரிக்கப்பட்டார்.
நகரை நிர்மாணித்த முதல் நாள், நான்கு முக்கிய நபர்கள் அங்கு இருந்தனர். ஆன்ட்ரூ கோகன், பிரான்சிஸ் டே, நாகபட்டன் மற்றும் பெரி திம்மப்பா. பூந்தமல்லி நாயக்கர்களுடன் பேரம் பேசி அந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்தது துபாஷ் திம்மப்பா. உள்ளூர் மக்களுடன் இணைந்து இருக்க முடியாது என்று முடிவெடுத்த ஆங்கிலேயர்களுக்காக, இந்தியர்களுக்குக் கறுப்பு நகரத்தைக் கட்டும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாகபட்டனோ வெடி மருந்து கலப்பவன்.
ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் மசூலிப்பட்டிணத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் மற்றும் கட்டடக் குழுவினர் வந்தனர். கோட்டையைக் கட்ட முதலில் வந்த மூன்று கப்பல்களில் 2 கப்பல்கள் முதல் வாரத்தில் புயலொன்றில் சின்னாபின்னமாகி நீரில் மூழ்கின.
வந்தவர்களெல்லாம் கடற்கரையில் வைக்கோல் குடில்களில் தங்கி குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு சுவர் மட்டும் எழுப்பினர். செங்கற்கள் மற்றும் மண்ணால் இருந்த சுவருக்கு வெளிப்புறமாக செம்பராங்கல்லால் பலப்படுத்தினர்.
செயின்ட் ஜார்ஜ் என்பவர் இன்றைய பாலஸ்தீனமாக இருக்கும் இடத்தைச் சேர்ந்த புனிதர். கிரேக்கராக இருந்திருக்கலாம். அவருடைய வருடாந்திர விழா நாளில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு அவரது பெயரிடப்பட்டது.
ஜவுளி வர்த்தகம் மிகவும் லாபகரமாக இருக்கும்போது ஒரு நாட்டை ஆளும் கடினமான கடமைகளை யார் விரும்புவார்கள்? கிழக்கிந்திய நிறுவனம் ஒரு தொழிற்சாலையை மட்டுமே கட்டியது. பொறாமை கொண்ட போட்டியாளர்கள் செல்வந்த வணிகத்தைக் கைப்பற்ற முயன்றபோதுதான் கோட்டையாக விரிவடைந்தது.
கோட்டை இன்று 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும். சுவர்களுக்குள் அதில் பாதி நிலம். ஆனால் தொடக்க நேரக் கோட்டையானது இன்றைய சட்டமன்றப் பகுதி மற்றும் அதன் பின்னால் உள்ள அணிவகுப்பு மைதானமாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். வரலாற்றில் நான்கு முறை கம்பெனியின் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் வலிமைக்கு இடமளிக்கும் வகையில் கோட்டையின் வடிவம் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் இருந்த சதுரம் இப்போது இல்லை.
கோட்டை வலுவான சுவர்களைக் கொண்டிருந்தது. பீரங்கிகளால் இன்னும் பாதுகாப்பு. 4 மாதங்களாக 6000 பேர் முற்றுகையைத் தாங்கும் அளவுக்குச் சுவர்களின் கீழ் நீர் சேமிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கம்பெனி இவற்றின் பலத்தைச் சோதிக்க முயற்சிக்கவில்லை. கோட்டையின் செல்வத்தைப் பற்றிய கதைகள் உலகம் முழுவதும் பரவின. விரைவில் இயற்கையாகவே இந்தச் செய்தி எதிரிகளின் காதுகளுக்கும் எட்டியது. பலமுறை ஆர்காட்டார் அல்லது கோல்கொண்டா அல்லது சத்ரபதி சிவாஜி போன்ற எதிரிகள் மெட்ராஸை அச்சுறுத்தியபோது, தூதர்களை அனுப்பிப் பரிசுகள் வழங்கப்பட்டு அமைதி வாங்கப்பட்டது. ஒருவேளை போரில் தேர்ச்சி பெறாத வணிகர்கள் அப்படித்தான் மோதலைக் கையாளுவார்கள் போலும்.
ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் மெட்ராஸைக் கைப்பற்றுவதில் உறுதியாக இருந்தனர். அதைக் கைப்பற்றி மூன்றாண்டுகள் ஆட்சியும் நடத்தினர். பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து ஜார்ஜ் கோட்டை மீது குண்டுகளை வீசினர். கோட்டைச் சுவர்களுக்குள் இருந்த கிட்டத்தட்ட அனைத்துக் கட்டடங்களும் கடுமையாகச் சேதமடைந்தன. மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தலைதெறிக்க ஓடினார்கள். இறுதியாகக் கோட்டைக்குள் இருந்த செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் அடைக்கலம் கிடைத்தது. கடவுளின் ஆசீர்வாதத்தால் மட்டுமல்ல, அதன் வலுவான கூரையின் வடிவமைப்பின் காரணமாகவும். சோர்வடைந்த குடியிருப்பாளர்கள் சரணடைந்த பிறகு பிரெஞ்சுக்காரர்கள் கோட்டைக்குள் நுழைந்தபோது, உள்ளே இருந்த ஒரு கட்டடம் மட்டும் சேதமடையாமல் தலை நிமிர்ந்து நின்றது. அதுதான் செயின்ட் மேரிஸ் தேவாலயம். பீரங்கிக் குண்டுகளைத் தாங்கும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்ததால் அப்படி ஒரு வலிமை.
கட்டடக் கலைஞர் ஒருவர் இதை வடிவமைக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இது டிக்சன் என்ற பீரங்கி ஆபரேட்டரால் வடிவமைக்கப்பட்டது. (அந்த நாட்களில் பெரும்பாலான பீரங்கி இயக்குபவர்களும்கூட பொறியாளர்களாகவும் இருந்தனர்.)
கோட்டை மீண்டும் அவர்களின் கைகளுக்கு வந்த பிறகு, கம்பெனியார் இனி அதை என்றும் இழப்பதில்லை என்ற தீர்மானத்துடன், 100,000 சதுர அடி அளவுள்ள வீரர்களுக்கான ஒரு படை வீட்டை (kings barracks) கட்டினார்கள். ஆயுதங்களைச் சேமித்து வைக்க ஓர் ஆயுதக் களஞ்சியமும் (arsenal) கட்டப்பட்டது. புதிய கோட்டைப் பொறியாளர் பேட்ரிக் ரோஸ் என்பவரால் அது வடிவமைக்கப்பட்டது
ஆரம்பக் காலத்தில் கோட்டைக்குள்தான் துணிக் கிடங்குகள் எல்லாம் இருந்தன. கப்பல்களும் கோட்டையின் கடல் வாயில் (sea gate) நேரே நங்கூரமிட்டன. ஆளுனர் இரண்டாம் கிளைவ், வணிகத்துக்குக் கோட்டைக்குள் இனி இடம் இல்லை என்று கண்டிப்பாகச் சொன்னவுடன்தான், கோட்டை முழுவதுமாக ஓர் அதிகார மையமானது. அது இன்று வரை தொடர்கிறது.
மெட்ராஸ் கடற்கரையில் உயரமான பாய்மரக் கம்பம் கொண்ட ஒரு வர்த்தகக் கப்பல் விபத்துக்குள்ளானது. அதன் பாய்மரக் கம்பம் மீட்கப்பட்டு கோட்டையில் சேமிக்கப்பட்டது. அப்போதுதான் இங்கிலாந்து அரசன் ஜேம்ஸ் தனது கொடியைப் பயன்படுத்த கம்பெனிக்கு அனுமதி வழங்கியிருந்தான். பாய்மரக் கம்பம் கோட்டையின் தென்கிழக்கு மூலையில் கொடிக் கம்பமாக மாறியது. இப்போதும் இந்தக் கோட்டையில் கொடியை உயர்த்துவது மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது, ஓவியரும் சிற்பியுமான ஆர்ய பாஷ்யம் (பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரதியின் முகம் அவரது கற்பனைதான்) இந்தக் கொடிமரத்தின் மீது ஏறி, ஓர் இரவு முழுவதும் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டு அதற்காகச் சிறை சென்றார்.
கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஓர் அகழி தொடங்கப்பட்டது. அதுவும் கோட்டையின் வடிவத்திற்கு ஏற்ப மாறியது. ஒரு பருவமழையின் போது ஒரு முதலை (இப்போது மெட்ராஸ் அருங்காட்சியகத்தில் கூவம் முதலையாகக் காட்டப்பட்டுள்ளது) அகழியில் பிடிபட்டது. ஆரம்ப நாட்களில் அகழி வறண்டுதான் இருந்தது. பின்னர் பக்கிங்ஹாம் கால்வாயின் ஒரு பகுதியாக மாறிய வடக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் விடப்பட்டது.
வர்த்தகம் நிகழும் கட்டடமாக இருந்த சந்தைக் கட்டடம் இன்று கோட்டை அருங்காட்சியமாக இருக்கிறது. இதன் மாடியில்தான் தேங்காய் எண்ணெய்யையும் ராட்சசத் திரியையும் கொண்டு விளக்கேற்றிக் கலங்கரையாக உபயோகித்தனர். இன்று அருங்காட்சியகத்தில் சில அரிய சிலைகள், ரவிவர்மாவின் ஓவியங்கள் மற்றும் கோட்டையில் வாழ்ந்த பிரிட்டிஷ் குடும்பங்கள் பயன்படுத்தும் வீட்டுப் பொருள்கள் உள்ளன.
சட்டமன்றம், அமைச்சர்கள், அலுவலகங்கள், ராணுவப் பிரிவுகள் மற்றும் குடியிருப்புகள் கோட்டைக்குள் இன்று செயல்படுகின்றன. அரசு இயந்திரம் செயல்படும் வகையில் பல மாடி கான்கிரீட் கட்டடம் கட்டப்பட்டு நாமக்கல் கவிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர்.
ராணுவம், அரசு, தொல்பொருள் ஆய்வு அமைச்சகம் மற்றும் தேவாலயம் ஆகியவை கோட்டையின் ஒவ்வொரு பகுதிக்கும் சொந்தக்காரர்கள். பல உரிமையாளர்களின் கையில் மாட்டிக்கொண்டதால் இந்த முக்கியமான நினைவுச்சின்னத்தின் பாரம்பரியத்தைப் பராமரிப்பதில் இன்றளவும் சிக்கல் நீடிக்கிறது.
0