Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #32 – விக்டோரியா பொது அரங்கு

கட்டடம் சொல்லும் கதை #32 – விக்டோரியா பொது அரங்கு

Victoria Public Hall

கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய் கலகத்தில் சிக்கித் தவித்த காலத்தில், பிரித்தானிய அரச குடும்பம் இந்தியா உட்பட அதன் சொத்துக்களைக் கையகப்படுத்த முடிவு செய்தது. விக்டோரியா, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசி ஆனார். அவர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் ராணியாக இருந்தார், மேலும் 44 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தார். அவரது வயது மற்றும் அரச வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் பேரரசில் அவர் பெயரிடப்பட்ட கட்டடங்களுடன் கொண்டாடப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருந்தன. இன்றோ ஒன்று அல்லது இரண்டு மட்டுமே உள்ளன.

மெரினா கடற்கரை குறுகிய மணல் பரப்பாக இருந்தபோது, பூங்கா நகர் மட்டும்தான் மெட்ராஸின் பொழுதுபோக்கு மையமாக இருந்தது. 117 ஏக்கர் நிலப்பரப்புக்குப் பூங்காவாக இருந்ததால் அந்தப் பகுதிக்கு ‘பார்க் டவுன்’ என்று பெயர் வந்தது.

பூங்கா மிகவும் பெரியதாக இருந்ததால், வளர்ந்து வரும் நகரத்திற்கான புதிய விரிவாக்கத்துக்காக அதை ஆக்கிரமிக்க அரசாங்கத்தை அடிக்கடி தூண்டும். பூங்காவின் நிலத்தை ஆக்கிரமித்த பட்டியலில் விக்டோரியா பொது மண்டபம் முதலிடத்தில் இருந்தது. பின்னர், கார்ப்பரேஷன் ஸ்டேடியம், ரிப்பன் கட்டடம் மற்றும் சென்ட்ரலில் உள்ள புறநகர் ரயில்வே கட்டடம் அனைத்தும் பூங்காவின் எல்லைக்குள்தான் வந்தன.

பெரும்பாலான பழைய ஐரோப்பிய நகரங்களில் ‘டவுன் ஹால்’ என்பது பொதுக்கூடமாக இருந்தது. அங்கெல்லாம் டவுன் ஹால் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் கூடி, நகரத்தை ஆளத் திட்டமிடும் இடங்களாகும். உத்தியோக பூர்வக் கூட்டங்கள் நடக்காதபோது, அந்த இடம் கலாச்சார மற்றும் சமூக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

மெட்ராஸில் டவுன் ஹால் தேவை என்ற கோரிக்கை எழுந்தபோது, ஆங்கிலேயர்களுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால், மெட்ராஸில் அந்த மண்டபத்தால் நிர்வாகப் பயன்பாடு இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். மாகாணம் கோட்டையிலிருந்து ஆளப்பட்டது. பிளாக்டவுனில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் வாடகைக் கட்டடத்தில் இருந்து நகராட்சியை ஆட்சி செய்தார்கள். மதராஸில் உள்ள டவுன்ஹால், சமூக நடவடிக்கைகளுக்காகக் குடிமக்கள் கூடும் இடமாக மட்டுமே இருக்கும் என்பதால், டவுன்ஹாலைக் கட்டும் பொறுப்பும் மக்களிடம் இருப்பதாக அரசு கருதியது.

மக்கள் பூங்காவின் 3.5 ஏக்கர் பகுதியை ஆண்டுக்கு 28 ரூபாய் என ஒரு புதிய அறக்கட்டளைக்கு ஒரு நூற்றாண்டுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது ஆனால் பதிலுக்கு விக்டோரியா மகாராணியின் முடிசூட்டு விழாவின் பொன்விழா நினைவின் ஒரு பகுதியாக டவுன்ஹால் திட்டத்தைப் பட்டியலிட அரசாங்கம் விரும்புகிறது என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறியப்பட்டது.

கட்டடத்தைக் கட்டியவர்கள் அனைவரும் ஜீவனத்துக்குப் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைச் சார்ந்தவர்களான ஜமீன்தார்கள் மற்றும் மன்னர்கள். முக்கியமாக அந்தக் கால கட்டத்தில், சுதந்திரப் போராட்டத்தை அப்போது யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதனால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.

புதிய கட்டடத்திற்கு விஜயநகரம் மகாராஜா பூசபதி ஆனந்த கஜபதி ராஜு அடிக்கல் நாட்டினார். திருவிதாங்கூர், மைசூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , எட்டயபுரத்தைச் சேர்ந்த அரசர்களும் நிதியுதவி செய்தனர். இத்தகைய நன்கொடையாளர்களின் உதவி இருந்தும் வசூல் போதுமானதாக இல்லை. இதன் ஆதரவாக ஒரு லாட்டரியை நடத்த வேண்டியிருந்தது.

ஒரிசா பிரிவில் பெங்கால் பொதுப்பணித்துறையின் நிர்வாகப் பொறியாளராக இருந்த கட்டடக் கலைஞர் ராபர்ட் சீஷோமை கவர்னர் நேப்பியர் மெட்ராஸுக்கு அழைத்து வந்திருந்தார். பிரெசிடென்சி கல்லூரியைக் கட்ட வந்தவர், அப்படியே இங்குத் தங்கிவிட்டார். மெட்ராஸின் கட்டடக்கலை தோற்றத்தை மாற்றுவதற்கு அவர் பெரும் பங்களித்தார்

சீசோம் மெட்ராஸில் பல சிவப்பு நிற இந்தோ-சராசெனிக் கட்டடங்களை வடிவமைத்தார். முகப்பு மற்றும் உட்புறங்களில் இந்து மற்றும் முகலாயக் கட்டடக்கலைப் பாணிகளின் கலவையை இணைத்து, அவரது பாணி மிகவும் பிரபலமானது, பிற்காலத்தில் இந்தியா ஒரு புதிய தலைநகரை விரும்பியபோது, புதிய டெல்லி இந்தோ சராசெனிக் பாணியை ஏற்றுக்கொண்டது சீசோமுக்குப் பெருமைதான்.

விக்டோரியா மண்டபம் சுமார் ஐந்து வருடங்கள் கட்டப்பட்டது. இந்த மண்டபம், இந்தோ-சராசெனிக் அமைப்பாகத் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் சீசோம் இந்தியாவிற்குச் சொந்தமான பல்வேறு கட்டட பாணிகளைப் பயன்படுத்த முயற்சித்த காலமும் அது. அவர் ஓர் அருங்காட்சியகம் கட்டுவதற்காக மலபாரில் நீண்ட நாள் தங்கினார். அங்கு அவர் பார்த்தது அவரது படைப்பாற்றலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. திருவனந்தபுரத்தில் பார்த்த மங்களூர் ஓடுகளின் எடையின்மைத் தன்மையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மண்டபத்துக்கு உயரமான கூரையை உருவாக்கி, இன்னும் அதிகப் பார்வையாளர்களை அமர வைக்கப் பாதி உயரத்தில் பால்கனி ஒன்றையும் கட்டடத்துக்குள் புகுத்தினார்

தரைத்தளத்தில் உள்ள பெரிய மண்டபம் 600 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டது, அதே சமயம் மர பால்கனியில் 200க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளது.

கறுப்பர் நகரக் குடிமக்கள் பொழுதுபோக்கிற்கு இடமில்லாமல் கஷ்டப்படுவதைக் கண்டு கவர்னர் ட்ரெவில்யன் மக்கள் பூங்காவை உருவாக்கியிருந்தார். அவரது நினைவாகக் கட்டடத்தின் முன்புறத்தில் நீர் ஊற்று (fountain) நிறுவப்பட்டது.

அக்காலகட்டத்தில் மிகப் பெரிய கட்டட வல்லுநரான நம்பெருமாள் செட்டியிடம் இந்தத் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. சூளைமேட்டில் இருந்து கூவம் வழியாகச் செங்கல் கொண்டு செல்லப்பட்டது. எருதுகளால் இயக்கப்படும் அரைக்கும் கற்களால் சுண்ணாம்புச் சாந்து தளத்திலேயே அரைக்கப்பட்டது.

விக்டோரியா பொது அரங்கம் திறந்த பின் மெட்ராஸின் கலாச்சார, சமூக மற்றும் அரசியல் வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இங்குதான் நிகழ்ந்தது.

Victoria Public Hall
Victoria Hall – Raphael Tuck & Sons, London, c. 1908 – Postcards from the Raj series

அமெரிக்காவில் சிகாகோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றிவிட்டுத் திரும்பியிருந்த விவேகானந்தர் இங்கு விக்டோரியா பப்ளிக் ஹாலில் பேசவந்தபோது அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. விவேகானந்தரின் வழியை, அவரைப் பார்க்க வந்திருந்த பெரும் கூட்டம் தடுத்ததால் காளை மாட்டு வண்டியின் மேல் நின்று அவர் வெளியே கூடியிருந்தவர்களிடம் பேசினார். அவர் தனது பேச்சைக் குருக்ஷேத்திரத்தில் தேரில் நின்ற கிருஷ்ணரின் போதனைக்கு நகைச்சுவையாக ஒப்பிட்டார்.

இந்த அரங்கத்தில் ‘அழியாத ஆன்மிகம்’ (Cult of the Eternal)’ என்ற தலைப்பில் பாரதி பேசியபோது பார்வையாளர்கள் ஒரு ரூபாய் டிக்கெட்டை வாங்கிக் கலந்து கொண்டனர்.

மெட்ராஸில் அரசியலுக்கும் சினிமாவுக்கும் ஆச்சரியமான தொடர்பு உண்டு. இரண்டுக்கும் இங்கேயே தோற்றம் இருந்தது.

1896 டிசம்பரில் சென்னை முழுவதும் சூறாவளி வீசியபோது முதல் சினிமா திரையிடல் இங்குதான் நடைபெற்றது. மெட்ராஸ் ஃபோட்டோகிராஃபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி ஸ்டீவன்சன், கிட்டத்தட்ட காலியான மண்டபத்திற்குப் பத்து குறும்படங்களை இயக்கினார். காலியாயிருந்த அரங்கத்தைக் கண்டு அவர் மனம் தளர்ந்தாலும் இது ஒரு கலாச்சாரப் புரட்சியைத் தூண்டியது.

நவம்பர் 20, 1916இல், 30 முக்கிய பிராமணரல்லாத தலைவர்கள் ஒன்றிணைந்து தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு (SILF) என்றும் அழைக்கப்படும் நீதிக்கட்சியை உருவாக்கினர், இது மாநிலத்தில் திராவிட அரசியலின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

பல நூற்றாண்டுகளாக அவமரியாதைக்கு ஆளாகியிருந்த நாடக உலகத்திற்கு, இந்த மண்டபம் ஒரு மரியாதையைப் பெறுவதற்கு நிறைய உதவி செய்துள்ளது என்று சொல்லலாம். தமிழ் நாடகத்தின் முன்னோடியான பம்மல் சம்பந்த முதலியார் அவரது நாடகங்களை இந்த அரங்கில் அரங்கேற்றியுள்ளார். சுகுணவிலாஸ் சபாவின் நாடகங்களில் பட்டதாரிகள் மட்டுமே நடிக்க முடியும். ஆச்சரியமாகக் குடும்பப் பார்வையாளர்கள் முதல் முறையாக நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். மெட்ராஸில் கார் பார்க்கிங் இடப் பிரச்னை ஏற்பட்ட முதல் கட்டடம் இதுதான்.சுகுணவிலாஸ் நாடகம் என்றால் மெட்ராஸில் சிறந்த கார்கள் ஹாலுக்கு வெளியே நிறுத்தப்படும்.

சம்பந்த முதலியாரின் முயற்சியால் இந்த மண்டபத்தில், ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் முதன்முறையாக தமிழில் பேசின. ஜ்வலிதா ரமணன் (Romeo and Juliet), வன்னிபுரத்து வணிகன் (Merchant of Venice) மற்றும் அமலாதித்யன் (Hamlet) மேடையில் வலம் வந்தனர்.

மே 7, 1915இல், சம்பந்த முதலியாரின் தெலுங்கு ஹரிச்சந்திரா நாடகத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பார்வையாளராக இருந்தார். காந்தி இன்னும் மகாத்மாவாக இல்லாததால் உள்ளூர் பத்திரிகைகள் எதுவும் இந்த வருகையை வெளியிடவில்லை. காந்தியின் எழுத்திலிருந்து இதைக் காண முடிகிறது.

ஆண்டுக்கு 28 ரூபாய் என்ற 100 ஆண்டு குத்தகை 1985ல் காலாவதியானது. ஆனால் மண்டபத்தை நடத்தும் அறக்கட்டளை அதில் சில பகுதிகளை ஹோட்டல் மற்றும் கடைகளுக்கு மேல் வாடகைக்கு விட்டிருந்தது. 25 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்குக்குப் பிறகு மெட்ராஸ் கார்ப்பரேஷனால் கட்டடம் மீட்கப்பட்டது

அரங்கை அசல் பாணியில் புதுப்பிக்கும் போராட்டம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. யாருடைய பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டதோ அந்த மெட்ராஸ் சாமானியர்களுக்கு விரைவில் கட்டடம் திறக்கப்படும் என்று நம்பிக்கை இருக்கிறது.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *