Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை.

கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து பொடி நடையாக மெட்ராஸுக்கு நடக்க வேண்டியிருந்தது.

ஆனால் அதே நிறுவனம் வியக்கத்தக்க வகையில் இந்துக் கோயில்களைக் கட்டிக் கொடுத்தது. கருப்பர் நகரில் உள்ள ஏகாத்தாள் கோயிலுக்கு ஒவ்வொரு திருவிழாவின்போதும் தாலி மற்றும் கூறைப் பட்டுப் புடவை கிடைக்கும். அதுவும் கோட்டை ஆளுனர் அலுவலகத்திலிருந்து.

தற்போது உள்ள சென்னகேசவப் பெருமாள் கோயில், கிழக்கிந்தியக் கம்பெனியின் நிலம் மற்றும் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. கம்பெனியின் ஆதரவுடன் கட்டப்பட்ட மற்றொரு முக்கியமான கோயில் சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள். இவையெல்லாம் நிச்சயமாகக் கடவுள் பக்தியினால் அல்ல. ஆனால் காரணம் இல்லாமலும் இல்லை.

இந்நிறுவனத்தின் ஜவுளி வியாபாரம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்குள் வணிகம் பல மடங்கு அதிகரித்தது.

இன்னும் ஐரோப்பாவில் இருந்து தேவை அதிகரித்துக்கொண்டே இருந்தது. மெட்ராஸ் என்ன உற்பத்தி செய்ய முடியுமோ அதை முழுவதும் வாங்க அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் நிறுவனத்தின் ஆட்கள் எவ்வளவு தூரம் பயணித்துத் துணிகளை வாங்க முடியும்.? நெசவாளர்களின் இருப்பிடத் தூரம் அவர்களின் வணிக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது.

‘நமக்குப் பக்கத்தில் நெசவாளர்களை ஏன் குடியமர்த்தக்கூடாது?’ என்று சில அதிகாரிகள் நினைத்தனர்.

கவர்னர் ஜார்ஜ் மார்டன் பிட் 1734இல் தனி நெசவாளர் கிராமத்தைக் கோட்டைக்கு அருகில் அமைக்க முடிவு செய்தார்.

ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முன்னோர்கள் வாழ்ந்த அவர்கள் வீடுகளை விட்டு இவ்வளவு தூரம் நெசவாளர்கள் வருவார்களா? மேலும் மிக அதிகமான மக்கள் தங்குவதற்குக் கோட்டை அல்லது கருப்பு நகரம் போதுமான இடம் கொண்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுந்தன.

நிறுவனத்தின் கண்கள் துபாஷ் சுங்கு ராம செட்டி வைத்திருந்த (கோட்டையின் தெற்கே கூவம் ஆற்றைக் கடந்த) ஒரு தோட்டத்தின் மீது திரும்பியது. கூவம் கடலுடன் சேரும் முன் கடைசியாக ஒரு முழு வட்டமாகச் சுற்றிப் பின் செல்லும். இந்த வட்டத்துக்கு நடுவில் தீவுபோல ஓர் அமைதியான தோட்டம் அது.

மழைக்காலங்களில் வெள்ளம் அந்த வட்டத்தைக் கடந்து செல்லும் அளவுக்குப் பொறுமையாக இருக்கவில்லை, மேலும் இந்தத் தோட்டத்தை ஒரு நிஜத் தீவாகவும் மாற்றியது. அந்த மழைக்கால இணைப்பு இப்போது ரிச்சி தெரு எலெக்ட்ரானிக்ஸ் சந்தையாக உள்ளது.

துபாஷ் சுங்குராம செட்டியின் தோட்டம் சிந்தாதிரிப்பேட்டை என்ற புதிய நெசவாளர் கிராமத்தை நிர்மாணிப்பதற்காக 1735இல் ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் சுங்குராமனுக்குக் கெட்ட காலம். ஓர் இந்தியர் உயரக்கூடிய பெரும் பதவியான தலைமை வணிகர் பதவியை அப்போது அவர் இழந்திருந்தார். தலைமை வணிகராக இருப்பவரே ஊரில் பாதிக் கோயில்களின் தர்ம கர்த்தாவாக இருப்பார். அவர் சொல்லே கருப்பர் நகரில் சட்டம். நிறுவனத்திடம் இருந்து திருவொற்றியூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 5 கிராமங்களை வாடகைக்கு எடுத்து வைத்திருந்த சுங்கு ராம செட்டி, நகரத்தில் முக்கியமான மனிதர் என்பதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு வீட்டைச் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட சில இந்தியர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆனால் இந்தச் செல்வாக்கு அவரை ஆணவம் கொண்டவராக ஆக்கியது என்றுணர்ந்த கம்பெனி அவரைத் தண்டித்தது. அவரது பதவி பறிபோனதும் இந்தத் தோட்டத்தைப் பிடுங்குவது எளிதானது.

நெசவாளர்கள் சாலைகளில்தான் நெசவு செய்தனர், இதனால் சாலைகள் நேர்கோடுகளாகத் திட்டமிடப்பட்டன. சாலைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு சாலையின் மக்கள்தொகை விவரங்களும் கூடத்தான்.

தற்செயலாக, அப்போதுதான் கம்பெனி மதராஸில் ஒரு தீவிரமான ஜாதிப் பிரச்னையைக் கையாளும் தருணத்தில் இருந்தது. இடங்கை மற்றும் வலங்கை இனக்குழுக்கள் கருப்பர் நகரத்தின் தெருக்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் நகரின் அமைதியும் செழுமையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் பிரச்னையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தனர். ஆனால் சிந்தாதிரிப்பேட்டையில் மீண்டும் அதே பிரச்னைகள் வராமல் கவனமாக இருக்க விரும்பினர்.

நூல் நூற்பவர், நெசவாளர்கள், துவைப்பவர்கள், ஓவியர்கள் மற்றும் ஜவுளித் தொழிலுக்குத் தேவையானவர்களை மட்டுமே அங்குக் குடியேற அனுமதிக்க முடிவு செய்தனர்.

ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர, பிராமணர்கள் மற்றும் நடனப் பெண்கள் மற்றும் கோயிலுக்குத் தேவையான மற்ற உதவியாளர்கள் புதிய கிராமத்தில் குடியேறலாம். ஆச்சரியப்படும் விதமாக வெற்றிலை வியாபாரிகளுக்கும் இடம் தந்து அனுமதிக்கப்பட்டனர்.

அதிலும் பிராமண அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஒரே சாதியினரைத் தவிர, ஒருவருக்கொருவர் அடுத்ததாக வாழ அனுமதிக்கப்படவில்லை. இந்த விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு சாசனம் வழங்கப்பட்டது .

துபாஷ் பேமலா ஆடியப்ப நாராயணா, கிராமத்தில் மக்கள் குடியேற்றத்துக்கு உதவினார். நெசவாளர்களின் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கு முன் ஆற்றோரம் கோயில்களை நிர்மாணித்தால் நெசவாளர்கள் இங்கு வந்து குடியேற ஈர்ப்பாக இருக்கும் என்பதற்காக தன் பெயரையும் கோயில் பெயருடன் இணைத்துத் தீராப் புகழ் பெற முடிவெடுத்தார் துபாஷ் பேமலா ஆடியப்ப நாராயணா. ஆதிபுரீஸ்வரர் மற்றும் அவரது மைத்துனன் ஆதிகேசவன் கோயில்கள் கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. பொதுவான புஷ்கர்ணி மற்றும் தேர் கொண்ட சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களை அடுத்தடுத்தாற்போல் கட்டுவது அக்காலத்தில் ஓர் ஆபத்தான சோதனை. ஆனால் கம்பெனியின் சொல்லுக்கு எதிர்ப்பில்லாத காலம் அது. அவர்கள் இதை ஏற்கெனவே கருப்பர் நகரத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் செய்திருந்தனர். அதனால் தைரியமாகக் கோயில் கட்டும் பணிகள் தொடங்கின.

இரண்டு கோயில்களைத் தவிர, ஆடியப்ப செட்டி அந்தப் பகுதியில் ஒரு மசூதியையும் கட்டினார்.

நிறுவனம் கோயில்களுக்கு நேரடியாக நிதியளிக்காமல், சில சேவைகள் மற்றும் பொருள்களுக்கான வரிகளை வசூலிக்க ஆடியப்பாவை அனுமதித்திருக்கலாம். ஆனால் ஆடியப்பா கோயில் கட்டும் பணியில் முழு வீச்சில் சென்று திவாலானார். நிறுவனத்தால் கோயில் கையகப்படுத்தப்பட்டது.

பேட்டை நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது குடும்பங்களைக் கொண்டதாக வளர்ந்தது. சிந்தாதிரிப்பேட்டை (சின்ன-தாரி பேட்டை), நிலம் முழுவதும் மரங்கள் நிறைந்து நெசவாளர்களுக்கு நிழல் தந்தது. ஆறு மூன்று பக்கங்களிலும் பாய்ந்து சாயமிடுவதற்கும் துணி துவைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட முக்கிய துணி காலிகோ. இந்தத் துணி முதலில் கோழிக்கோடு (காலிகட்) நகரத்திலிருந்து வந்தது. அதனால்தான் அந்தப் பெயர்.

காலிகோ முழுமையாகப் பதப்படுத்தப்படாத பருத்தியில் இருந்து நெய்யப்பட்டது. துணி மிகவும் கரடுமுரடாக இருந்ததால் மிகவும் மலிவானது. நெய்த துணி சாயமிடப்பட்டு பிரகாசமான வண்ணங்களில் அச்சிடப்பட்டவுடன் ஐரோப்பாவில் பிரபலமானது.

பின்னர் கம்பெனி மெல்ல மெல்ல நாட்டை ஆளும் நோக்கில் நகர்ந்தவுடன் துணி ஏற்றுமதியில் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாகச் சிந்தாதிரிப்பேட்டை போன்ற ஜவுளி நகரங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் சில ஜவுளி மரபு இன்னும் தொடர்கிறது. தி நகர், மெட்ராஸின் ஜவுளி மையமாக மாறும் வரை, பெண்கள் தங்கள் தீபாவளி கொள்முதல்களுக்காகச் சிந்தாதிரிப்பேட்டைக்குத்தான் சென்று குவிந்தனர்.

திருப்பதி வெங்கடேசப் பெருமானுக்கான குடைகள் இன்றும் இங்குத் தயாரிக்கப்பட்டு, பிரம்மோத்ஸவத்தின்போது ஒரு பெரிய விழா எடுத்து அனுப்பப்படுகின்றன.

ஆனால் சிந்தாதிரிப்பேட்டை, நகரின் மையத்தில் இருப்பது அதன் மறுவளர்ச்சிக்கு உதவியது. கருப்பர் நகரம் மற்றும் புதிதாக வளரும் மவுண்ட் ரோடுக்கு அருகில் அந்தப் பேட்டை இருந்தது. இந்த அருகாமையாலும், அதிகக் காற்றோட்டமான இடங்களாலும் நெரிசல் மிகுந்த பழைய நகரத்தில் வாழ்ந்த பல குடியேறிகள் ஈர்க்கப்பட்டனர். சிந்தாதிரிப்பேட்டை மெட்ராஸின் முக்கியமான புறநகர்ப் பகுதியாக மாறியது.

வியக்கத்தக்க வகையில் இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் சிந்தாதிரிப்பேட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தண்டவாளத்தின் நன்மை அங்கீகரிக்கப்பட்டது. அதை நிரூபிப்பதற்காக சிந்தாதிரிப்பேட்டை சாலையில் கோயில்களுக்குப் பக்கத்தில் தண்டவாளங்கள் போடப்பட்டு அதன் மீது காளை மாடுகள் அதிகப் பளு கொண்ட வண்டியை இழுத்துச் சென்றது. சிந்தாதிரிப்பேட்டையின் வடகிழக்கு மூலையில் உள்ள சிம்ப்சன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் கார் மற்றும் பேருந்தை உருவாக்கியது. மெட்ராஸில் பறக்கவிடப்பட்ட முதல் ஆசிய விமானத்திற்கான இயந்திரத்தையும் உருவாக்கியது.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

1 thought on “கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *