நுங்கம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிகிறது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலக்கை அடையும் ஆர்வத்தில் பொறுமையின்றித் தங்கள் ஹார்ன்களை ஒலிக்கின்றன.
அருகில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோயிலை யாரும் கண்டுகொள்வதில்லை. முன்னொரு காலத்தில் ஏரி நிரம்பி வழியும் வெள்ளத்திலிருந்து அருகிலுள்ள குடியிருப்புகளைக் காப்பாற்றியதற்காக இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று அந்த மாரியம்மன்கூட தனக்குப் பெயரைக் கொடுத்த ஏரியைத் தீவிரமாகத் தேடத்தான் வேண்டும்.
ஆம். மெட்ராஸுக்கு மேற்கே ஒரு பெரிய ஏரி இருந்தது. சில இடங்களில் 5 மைல் நீளமும் 2 மைல் அகலமும் கொண்டது. ‘லாங்க் டாங்க்’ என்று பெயர்.
ஏரியை ஒட்டியிருந்த நுங்கம்பாக்கம் என்பது சென்னையின் மிகவும் பழமையான கிராமம். மெட்ராஸைப் பற்றி எழுதப்பட்ட சமஸ்கிருதப் படைப்பான சர்வதேசவிலாசாம் இதை ‘நுங்காபுரி’ என்று அழைக்கிறது.
திப்பு சுல்தான் போன்ற எதிரிகள் அடக்கப்பட்ட பின்னர்தான், கோட்டையை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது என்று ஆங்கிலேயர்கள் கருதினர். மெல்ல மெல்ல வெளியில் வந்து தேனாம்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் பெரிய பெரிய தோட்ட வீடுகளைக் கட்டிக்கொண்டு குடியேறத் தொடங்கினர். அந்தச் சமயத்தில்தான் நுங்கம்பாக்கம் ஏரியில் இருந்து வீசும் குளிர்ந்த காற்று காரணமாக இப்பகுதியிலும் தோட்ட வீடுகளை ஆங்கிலேயர்கள் பலரும் கட்டினர்.
1921ல் நகர நெரிசல் தாங்காமல் இந்த லாங்க் டாங்க் ஏரியை மூடிவிட்டு தியாகராய நகரத்தில் ஒரு குடியிருப்பைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. தியாகராய நகரே முதலில் தோன்றியது. அதற்குப் பின், அகண்ட லாங்க் டாங்க் ஏரியின் ஒவ்வொரு பகுதியாக மூடிக்கொண்டே வந்து கடைசியில் மிஞ்சியிருந்தது நுங்கம்பாக்கம் ஏரி தான். கடைசியாக இந்த ஏரியையும் மூடுவதென்று முடிவெடுத்தனர். வீடுகள், மைதானம் (இன்று டென்னிஸ் வளாகம்) பள்ளிகள் (பத்மா சேஷாத்ரி) எல்லாம் வந்தன. ஏரியின் முக்கியப் பகுதிகள் நகராக உருவாகி, சில சிறிய பகுதிகள் கடைசியில் நிலம் சூழ்ந்த குளங்களாகவே இருந்தன. பொது சுகாதாரத்தை அச்சுறுத்தும்வகையில் அசுத்த நீர் தேங்கி நிற்கும் குளம் போலக் காட்சியளித்தது. எருமைகள் குளித்து, கொசு உற்பத்தியாகி, இந்தக் குளம் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது
அந்த அசுத்தக் குளத்திலும் எதையாவது கட்டிவிடுவது என்று தமிழக அரசினர் முடிவெடுத்தனர். ஆச்சரியம் என்னவென்றால் நீர்நிலைகளைப் பாதுகாப்பது பற்றிப் பேசிய தமிழ் முனிவர் திருவள்ளுவருக்கு அங்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டப்படவேண்டும் என்று இறுதியாக முடிவெடுக்கப்பட்டது.
சங்க காலக் கவிஞரான திருவள்ளுவர், மயிலாப்பூர் கிராமத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மதுரை போன்ற இதர இடங்களும் இந்தப் பெருமைக்குப் போட்டியிடுகின்றன.
ஆனால் வள்ளுவரின் சரித்திரம் மக்கள் மனதில் பதிந்திருப்பது மெட்ராஸின் ஓர் ஆங்கிலேய கலெக்டரால்தான். எல்லிஸ், திருக்குறளின் ஒரு பகுதியை மொழிபெயர்த்து முதல் முறையாக அச்சிட்டார். வள்ளுவர் ஜடாமுடியுடன்தான் இருந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்து, புலவரின் தங்க நாணயத்தையும் வெளியிட்டார். அந்தப் படம்தான் மேம்படுத்தப்பட்டு இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. எல்லிஸ் மெட்ராஸில் 17 கிணறுகளைத் தோண்டி ஒவ்வொரு கிணற்றுக் கல்லின் அருகிலும் ஒரு குறளையும் பொறித்தார்.
வள்ளுவருக்கு ஒரு கோட்டம் எனும் யோசனை 1970களில் தமிழக முதல்வரான மு. கருணாநிதிக்கு வந்தது. ஒவ்வொரு குறளுக்கும் விரிவான விளக்கத்தைப் பிற்காலத்தில் எழுதிய கருணாநிதி முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது வள்ளுவருக்கு நினைவுச்சின்னம் அமைக்கத் திட்டமிட்டார்.
இது தென்னிந்தியப் பாரம்பரியக் கட்டடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது, வைத்தியநாத கணபதி ஸ்தபதி ஒரு கோயில் கட்டடக் கலைஞர். அவர் மகாபலிபுரத்தில் உள்ள கட்டடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரியின் தலைவராக இருந்தார்.
அதன் சுற்றியுள்ள கான்கிரீட் மற்றும் கண்ணாடிக் கட்டடங்கள் போலல்லாமல், பழைய தமிழ் பாணியில் கல் கட்டடமாகக் கோட்டம் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு வகையில் அது பொருத்தமாக இருந்தது. பழைய தமிழர்களின் பாதையே இக்கட்டடத்தால் கெளரவிக்கப்பட்ட மனிதரால் தீர்மானிக்கப்பட்டது.
கணபதி ஸ்தபதியின் இன்னுமொரு நன்கு அறியப்பட்ட கட்டடம், துணைக் கண்டத்தின் தெற்கு முனையான கன்னியாகுமரியில் உள்ள ஒரு தீவில், 133 அடி திருவள்ளுவர் சிலை. அந்தத் திட்டமும் இதே காலக்கட்டத்தில் கருணாநிதியால் சிந்திக்கப்பட்டதுதான் ஆச்சரியம். ஆனால் அது 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (2000 ஆம் ஆண்டின் முதல் நாளில்) திறக்கப்பட்டது.
வள்ளுவர் கோட்டம் திருவாரூரில் உள்ள புகழ்பெற்ற கோயிலின் ஆழித்தேரின் பிரதி. திருவாரூர் அருகேயுள்ள கிராமத்தில் தான் கருணாநிதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு முக்கிய மாட வீதிகளைச் சுற்றிச் சென்ற ‘ஆழித்தேர்’ நிகழ்வு பழங்காலத் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் தேவாரப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சோழர்களின் விருப்பமான கோயிலாக இருந்த திருவாரூர் கோயிலின் தேரான ஆழித்தேர் மிகப் பெரியது. சில சமயங்களில் அதன் எடையைத் தாங்க 10 சக்கரங்களைக் கொண்டிருந்தது. 30 அடி உயரமுள்ள தேர் மூங்கில் கம்புகள் மற்றும் வண்ணமயமான துணியால் அலங்காரம் முடிந்ததும் 96 அடியாக உயரும். உச்சிக்கலசம் மட்டும் 6 அடியாக இருக்கும். இவை அனைத்துக்கும் எடை 300 டன் ஆக இருக்கும். லட்சோப லட்சம் பேர் கலந்து கொள்ளும் இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து இழுத்தால்தான் தேர் அசையும். ஓர் அடி விட்டம் கொண்ட 500 மீட்டர் நீளமுள்ள தென்னை நார்க் கயிறுகளால் தேர் இழுக்கப்பட்டது.
வள்ளுவர் கோட்டம் கட்டுவதென்பது லேசுப்பட்ட வேலை அல்ல. திருவண்ணாமலையில் இருந்து 2,700 டன் எடை கொண்ட சுமார் 3000 கிரானைட் கற்கள் பட்டமலைக் குப்பம் கல் குவாரியிலிருந்து கொண்டு வரப்பட்டது. கற்களுள் மிகப்பெரியது 40 டன் எடை கொண்டது. முதலமைச்சரின் விருப்பமான திட்டமாக இருந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, நெரிசலான நகரப் பகுதியில் ராட்சத லாரிகள் கற்களைக் கொண்டு வந்து சேர்த்தது. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஒவ்வொரு கல்லும் ஒரு கலைப்பொருளாக உருமாறியது.
கல் தேரின் நான்கு பெரிய அளவிலான சக்கரங்கள் 11 அடி விட்டம் மற்றும் 2 அடி தடிமன் கொண்டவை. தேரில் வள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
குறள் மணிமண்டபத்தில், குறளின் அனைத்து 133 அத்தியாயங்களிலிருந்தும் 1,330 குறள்கள் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. 3,500 உட்காரக்கூடிய ஒரு சபையும் இங்கு உள்ளது. கட்டப்பட்டபோது நாட்டில் மிகப் பெரிய அரங்கம் இது.
கட்டடத்தில் 2500 பேர் வேலை செய்தனர். இரவு பகலாக வேலை நடந்தது. திரை மறைவில் நிகழ்ந்தது கடிகாரத்துடன் ஓர் அதிவேக ஓட்டப்பந்தயம், அதன் காரணம் கருணாநிதியைத் தவிர வேறு யாருக்கும் அதிகம் தெரியாது.
இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது திமுக அவருக்கு ஆதரவாக வாக்களித்துப் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற உதவியது. உண்மையில் கருணாநிதியின் ஆதரவால்தான் இந்திரா, கட்சியில் மூத்தவர்களின் தாக்குதலில் இருந்து தப்பினார்.
இந்திரா எமர்ஜென்சியைப் பிரகடனப்படுத்தியபோது, மாநிலங்களில் இருந்த பெரும்பாலான எதிர்க்கட்சி ஆட்சிகளைப் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால், அவர் திமுகவைத் தொடர அனுமதித்தாலும், அவரது பொறுமையும் குறைந்து கொண்டே வந்தது. அவர் அறிவித்த எமர்ஜென்சியை எதிர்ப்பவர்களை கருணாநிதி ஆதரித்தார். இந்திராவின் காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடி ஒளிந்த தலைவர்கள் தமிழகத்தில் புகலிடம் பெற்றனர். ‘எப்படியும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்’ என்று கடற்கரையில் பிரம்மாண்டக் கூட்டம் நடத்தி 2 லட்சம் பேரை சபதம் எடுக்க வைத்தார் கருணாநிதி. எனவே திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். எமர்ஜென்சியை எதிர்த்து கருணாநிதியின் துணிச்சலான நடவடிக் கைக்கு இந்திரா பழிவாங்குவதற்குச் சில நாட்கள் மட்டும்தான் ஆகும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவுக்கு இன்னும் 7 நாட்களே இருந்தன. முதல்வர் பெயரிட்டு அழைப்புகள் அச்சிடப்பட்டன. விநியோகமும் செய்யப்பட்டிருக்கலாம்.
அந்த நிலையில் இந்திரா காந்தியால் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் திறப்பு விழா ரத்து செய்யப்படவில்லை. அதன் திறப்பு விழாவிற்கு நாட்டின் குடியரசுத் தலைவர் வந்தார். ஆனால் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட ஆண்டிலும் அடுத்த சில ஆண்டுகளுக்கும் திருவாரூர் திருவிழா நடைபெறவில்லை. தேர் ஓடவில்லை.
வெகு நாட்களுக்குப் பிறகு கருணாநிதி தேர்தலில் வெற்றி பெற்றபோது வள்ளுவர் கோட்டத்தில்தான் தனது முதல்வர் பதவியேற்பு விழாவை நடத்திக்கொண்டார்.
வள்ளுவர் கோட்டம் சென்னையில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பதுடன், சில சுவாரஸ்யமான கண்காட்சி மற்றும் நிகழ்வுகளையும் அங்கு நடத்துகிறது. கோட்டத்தின் நுழைவாயில் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு விருப்பமான பகுதியாக இருக்கிறது.
0